ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Mobilise the workers against Sri Lanka's Sirisena-Wickremesinghe-Sampanthan regime!

இலங்கையின் சிறிசேன-விக்கிரமசிங்க-சம்பந்தன் ஆட்சிக்கு எதிராய் தொழிலாளர்களை அணிதிரட்டுவோம்!

By V. Gnana
24/09/2016

அமெரிக்க ஆதரவு ஆட்சிமாற்ற நடவடிக்கை ஒன்றில் இலங்கையின் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் “நல்லாட்சி” என்று சொல்லப்பட்ட ஒன்று அமர்த்தப்பட்டு 18 மாதங்களுக்கும் மேல் கடந்து விட்டன. எனினும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும் அதன் தலைவர் சம்பந்தனினதும் ஆதரவை அனுபவித்து வரும் இந்த ஆட்சியின் கீழ், தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், பட்டதாரிகள் மற்றும் மாணவர்கள் முகம்கொடுக்கும் சுமைகள் அதிகரிக்க மட்டுமே செய்துள்ளன.

யாழ்ப்பாணத்தின் இன்றைய ஆர்ப்பாட்டம், சிறிசேன மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான ஆழமான கோபத்தை பிரதிபலிக்கிறது. இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிந்து ஏழு ஆண்டுகளுக்கும் பின்னர், 1 மில்லியன் மக்கள் தொகையினை கொண்ட வட மாகாணத்தில் 1 இலட்சம் படையினர்கள் இன்னும் நிலைகொண்டுள்ளனர். காணாமல் போன ஆயிரக்கணக்கானோரின் நிலை இன்னமும் தெரியாதுள்ளது, போரில் இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கானோர், மனிதர் வாழவொண்ணாத நிலைமைகளில் முகாம்களில் இன்னும் வாழ்ந்து வருகின்றனர். அரசியல் கைதிகள் சிறைகளில் அடைந்து கிடக்கின்றனர், யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த உதவியும் கிட்டாமல் சமூக வலைத் தளங்களினூடாக உதவி வேண்டி எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். போரில் பாதிக்கப்பட்டவர்களின் எந்த அடிப்படைப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டிருக்கவில்லை என்பது மட்டுமல்ல, ஊதியங்கள் மற்றும் சமூக நலதிட்டங்கள் மீது தாக்குதல் நடத்துகின்ற சிக்கன நடவடிக்கைகளும் தீவிரமடைகின்றன.

சிறிசேனவை அமர்த்திய ஆட்சி மாற்ற நடவடிக்கைக்கும், உழைக்கும் மக்களை சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லீம்களாக பிளவுபடுத்தும் தமிழ் தேசியவாத அரசியலுக்கும், இலங்கையின் சோசலிச சமத்துவக் கட்சி காட்டிய எதிர்ப்பு மிகவும் சரியென்பதையே நிகழ்வுகள் நிரூபணம் செய்துள்ளன.

இருந்தபோதிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பினதும், கொழும்பு ஆட்சியினதும் கொள்கைகளை எதிர்க்கின்ற தொழிலாளர்கள், உழைப்பாளிகள், இளைஞர்கள், இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கும் அரசியல் அமைப்புகளுக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், இடையில் அடிப்படையான வித்தியாசங்கள் ஏதும் கிடையாது என்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

உள்நாட்டுப் போரின் காலத்தில் விடுதலைப் புலிகள் பயன்படுத்திய வாய்வீச்சை மீண்டும் பிரதியெடுத்தவிதமாக, வட மாகாண சபை முதலமைச்சரான விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் பேரவை, இந்த பேரணியை வகுப்புவாத அடித்தளத்தில் “எழுக தமிழ்” என்று அழைத்தது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி, யாழ் பல்கலைக்கழக சமூகம், சிவில் சமூகம், தொழிற்சங்கவாதிகள் மற்றும் போரின் சமயத்தில் இலங்கை அல்லது இந்திய இராணுவத்தின் துணை இராணுவப் பினாமிகளாக சேவை செய்த குழுக்களான தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, பிரேமச்சந்திரனின் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, சித்தார்த்தனின் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ஆகியவையும் தமிழ் மக்கள் பேரவையுடன் கரம்கோர்த்திருகின்றனர். தமது பங்கிற்கு தென்னிந்திய தமிழ் தேசியவாதிகளும் தமது நல்வாழ்த்துக்களை அனுப்பியுள்ளனர்.

இந்தப் பேரணிக்கு அழைப்பு விடுகையில், தமிழ் தேசியவாதிகள் மூன்று இலக்குகளை மையமாக கொண்டிருக்கின்றனர்.

முதலாவது, அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் இருந்தும் இந்திய முதலாளித்துவத்திடம் இருந்தும் ஆதரவுகோரி கூக்குரலிட்டுக் கொண்டிருந்த ஒரு முதலாளித்துவ தேசிய பிரிவினைவாத இயக்கமான விடுதலைப் புலிகளின் சுலோகங்களை சிடுமூஞ்சித்தனமாய் சுரண்டிக் கொள்ளும் தற்போதைய ஒட்டுமொத்த தமிழ் தேசியவாதிகளும், உள்நாட்டுப் போரின் முடிவில் போராளிகள் இராணுவத்தினால் படுகொலை செய்யப்பட்டதில், முன்னிலைப் பாத்திரங்கள் வகித்த அமெரிக்கா, கொழும்பு ஆட்சியுடன் உடன்பாடுகளை எட்டுகின்ற அதே அடிப்படை மூலோபாயத்தையே கொண்டிருக்கின்றனர்.

இரண்டாவது, விடுதலைப் புலிகளின் தேசியவாத சுலோகங்களை ஊக்குவிப்பதன் மூலம், தமிழ் தொழிலாளர்களை சிங்கள, முஸ்லீம் தொழிலாளர்கள் முகம்கொடுக்கின்ற அதே சமூக, பொருளாதார பிரச்சினைகளுக்கே தாமும் முகம்கொடுத்திருக்கிறோம் என்ற அதிகரித்துவரும் விழிப்புணர்வில் இருந்து துண்டிக்க முயல்கின்றனர். இது தொழிலாள வர்க்கத்தை இனவாத, மதவாத ரீதியாக பிளவுபடுத்துவதற்கும், சிறிசேன-விக்கிரமசிங்க-சம்பந்தன் ஆட்சிக்கு, அனைத்து சமூக, மத பின்னணியையும் கொண்ட தொழிலாளர்கள் மத்தியில் அபிவிருத்தி அடைந்து வரும் எதிர்ப்பை தடம்புரளச் செய்வதன் மூலமாக முதலாளித்துவ ஆட்சியை ஸ்திரப்படுத்துவதற்கும் மட்டுமே உதவுகிறது.

மூன்றாவது, இலங்கைக்கு விஜயம் செய்கின்ற அமெரிக்க தூதரக அதிகாரிகள், இராணுவ அதிகாரிகளுடனான தனது சந்திப்புகளை விக்னேஸ்வரன் பெருமிதத்துடன் காட்சிப்படுத்துகின்ற நிலைமைகளின் கீழ், சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் “ஆசியாவை நோக்கிய முன்னிலை”யால் தயாரிப்பு செய்யப்படுகின்ற ஒரு உலகப் போரின் அபாயம் பெருகிச் செல்வதை மறைக்க தமிழ் மக்கள் பேரவை முயற்சி செய்கின்றது. அமெரிக்க அதிகாரிகள் யாழ்ப்பாணத்துக்கு வருகை தருவதை வழக்கமாக்கியிருப்பது தங்களது தாராள மனத்தையும் மனிதாபிமான அக்கறையையும் தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்துவதற்காக அல்ல. போர் ஒன்று உருவாகும் சந்தர்ப்பத்தில், சீனா மீது பொருளாதார முற்றுகையை திணிக்க, ஆசியா, ஐரோப்பா, ஆபிரிக்காவை இணைக்கின்ற பொருளாதாரரீதியாய் இன்றியமையாத இந்திய பெருங்கடலின் வணிகப் பாதைகளின் மீது தமது மேலாதிக்கத்தை பாதுகாத்துக் கொள்வதற்காகவே அவர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர்.

தமிழ் தேசியவாதிகள் அமெரிக்காவின் போர் முனைப்பின் ஆதரவாளர்களாக பரிணாம வளர்ச்சி கண்டிருப்பதானது, பல தசாப்தங்களாக ஒவ்வொரு இனத்தின் தேசியவாத சக்திகளுக்கு எதிராகவும் சோசலிச சமத்துவக் கட்சி போராடி வந்த ட்ரொட்ஸ்கிச அடித்தளத்திலான எதிர்ப்பை சரியென நிரூபணம் செய்கிறது. இனம், மதம் மற்றும் மொழியின் தடையெல்லைகளைக் கடந்து இந்திய துணைக்கண்டத்திற்கான ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்காக சமரசமற்றுப் போராடி வரும் ஒரே கட்சி சோசலிச சமத்துவ கட்சி மட்டுமே. தெற்காசிய சோசலிச அரசுகளின் பாகமாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச அரசுகள் என்ற முன்னோக்கின் அடிப்படையிலேயே சோசலிச சமத்துவக் கட்சி இலங்கையின் உள்நாட்டுப் போரை எதிர்த்திருந்தது.

தீவில் இருக்கும் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் கூட்டாளிகள் சிறிசேன, மோடி அல்லது ஒபாமாவோ அல்ல, மாறாக சிங்கள தொழிலாளர்களும் இந்திய துணைக் கண்டம் உட்பட்ட ஒட்டுமொத்த உலகத்தைச் சேர்ந்த தொழிலாள வர்க்கமுமே ஆகும். இந்த சக்திகளை நோக்கித் திரும்புவதும், தமிழ் தேசியவாதிகள் அமெரிக்க ஆதரவு சிறிசேன ஆட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்ற புதிய அரசியலமைப்பு சட்டத்தின் மீது ஏற்படுத்த முயலுகின்ற பிரமைகளை நிராகரிப்பதுமே, முன்னோக்கி செல்லும் ஒரே பாதை ஆகும்.

சிறிசேனவுடனான ஒரு “நீண்ட பயண”த்திற்கான தமது திட்டங்களைக் காட்டி யாழ்ப்பாண பேரணிக்கான அதனது எதிர்ப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பு நியாயப்படுத்தியது. “புதிய அரசியலமைப்புச் சட்டம் தமிழ் மக்களுக்கு ஒரு முழுமையான தீர்வைக் கொண்டுவரும்” என்று கூட்டமைப்பின் இரண்டாமிட தலைவரான எம்.ஏ.சுமந்திரன் வாக்குறுதியளித்தார். “ஏற்கனவே அறுபது வருடங்களாக நாங்கள் எத்தனையோ தடவைகள் ஏமாற்றப்பட்டிருக்கிறோம். இன்னுமொரு தடவை கூடுதலாக நாங்கள் ஏமாற்றப்பட்டாலும் பரவாயில்லை.” என்று சிடுசிடுப்புடன் அவர் சேர்த்துக்கொண்டார்.

யாழ்ப்பாண ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்புவிடுகின்ற அமைப்புகள், இதே அரசியலமைப்பு சட்டம் மற்றும் ஆட்சியின் மீதான பிரமைகளையே ஊக்குவித்துக் கொண்டிருக்கின்றன. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிவித்தார்: “அரசாங்கம் இரண்டு மாதங்களில் அரசியலமைப்பு சட்டத்தை முன்வைக்கவிருக்கிறது. தமிழ் மக்கள் பேரவையின் ஆலோசனைகள் அதில் இடம்பெற்றாக வேண்டும். அம்முறையில் மட்டுமே அத்தனை சமூகப் பிரச்சினைகளும் தீரும். அரசியலமைப்பு சட்டத்தில் நமது நலன்களையும் இடம்பெறச் செய்வதற்கு சிங்கள தேசத்திற்கு நாம் பாரிய அழுத்தத்தைக் கொடுத்தாக வேண்டும்.”

உண்மையில், சமூகப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கோ, ஜனநாயகத்தை கட்டியெழுப்புவதற்கோ அல்லது இன, மத எல்லைகள் கடந்து உழைக்கும் மக்களை ஐக்கியப்படுத்துவதற்கோ முதலாளித்துவ வர்க்கம் இலாயக்கற்றதாக இருக்கிறது என்பதையே இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இந்திய துணைக்கண்டத்தில் ஸ்தாபிக்கப்பட்ட “சுதந்திர அரசுகளின்” சுமார் 70 ஆண்டு கால வரலாறும் எடுத்துக்காட்டியிருக்கிறது. புதிய அரசியலமைப்பு சட்டமானது பரந்த உழைக்கும் மக்களை பொறுத்தவரை ஒரு முட்டுச்சந்தாகவே இருக்கும். வர்க்க மோதலும் பூகோளப் பதட்டங்களும் பெருகிச் செல்வதன் மத்தியில், சிக்கன நடவடிக்கைகளை திணிக்கின்றதும் ஒரு புதிய ஏகாதிபத்திய போருக்குத் தயாரிப்பு செய்கின்றதுமான ஒரு போலிஸ் அரசு ஆட்சிக்கும், மோசமான அடக்குமுறைக்குமே வழிதிறக்கும்.

சர்வதேச தொழிலாள வர்க்கத்தை நோக்கித் திரும்புவதன் இன்றியமையாத பணி, அதன் புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்புவதாகும். உலக சோசலிச வலைத் தளத்தை வாசிப்பதற்கும் ஆதரிப்பதற்கும் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியில் இணைவதற்கும் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் சோசலிச சிந்தனை கொண்ட புத்திஜீவிகளுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்.