ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Pentagon openly challenges US-Russia ceasefire deal in Syria

சிரியாவிலான அமெரிக்க-ரஷ்ய போர்நிறுத்தத்தை பென்டகன் பகிரங்கமாய் சவால் செய்கிறது

By Bill Van Auken
15 September 2016

சிரியாவிலான போர்நிறுத்தத்தை மேலும் 48 மணி நேரங்களுக்கு நீடிக்க அமெரிக்காவும் ரஷ்யாவும் புதன்கிழமையன்று உடன்பட்ட நிலையில், இந்த உடன்பாட்டிற்கு இணங்கி நடக்க அமெரிக்க இராணுவத் தலைமை தயாரிப்புடன் இருக்கிறதா என்பது குறித்து உயர் சிவில் பணி அதிகாரிகளும் மற்றும் சீருடை அணிந்த பென்டகன் அதிகாரிகளும் தீவிரமான கேள்விகளை எழுப்பியிருக்கின்றனர்.

இந்தப் பிளவுகளின் கீழமைந்திருப்பது வெறுமனே சிரியாவில் அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களைப் பின்பற்றுவதற்கான மாறுபட்ட தந்திரோபாய பரிந்துரைகள் மட்டுமன்று, அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் அதிகரித்துச் செல்லும் இராணுவப் பதட்டங்களைச் சூழ்ந்த அதனினும் கூடுதலான பயங்கரமான பிரச்சினைகள் கீழமைந்திருக்கின்றன.

திங்கட்கிழமை நடைமுறைக்கு வந்த இந்த போர்நிறுத்த உடன்பாடானது, சென்ற வாரத்தின் இறுதியில் ஜெனிவாவில் நடைபெற்ற நீண்ட நெடிய பேச்சுவார்த்தைகளின் போது அமெரிக்க வெளியுறவுச் செயலரான ஜோன் கெர்ரிக்கும் ரஷ்ய வெளியுறவு அமைச்சரான சேர்ஜி லாவ்ரோவுக்கும் இடையில் உடன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டதாகும். இது ஏழு நாள் சண்டை நிறுத்தத்திற்கும், அதன் பின் வன்முறை குறையும் பட்சத்தில் அதனை ஒவ்வொரு 48 மணி நேரமாய் நீட்டித்துச் செல்வதற்கும் கேட்டுக்கொண்டது.

அதன்பின், அமெரிக்க மற்றும் ரஷ்ய இராணுவப் படைகள் சிரியாவில் தமது நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கத் தொடங்கும், ஒரு “கூட்டு நடைமுறைப்படுத்தல் மையம்” அமைக்கப்பட்டு, இஸ்லாமிய அரசு (ISIS) மற்றும் அல்-நுஸ்ரா முன்னணி (அல் கெய்தாவின் சிரிய இணைப்பு, இது தனது பெயரை சமீபத்தில் ஜபாத் ஃபதா அல்-ஷாம், அல்லது சிரியாவில் வெற்றிக்கான முன்னணி என்று மாற்றிக் கொண்டது) இரண்டிற்கும் எதிரான தாக்குதல்களுக்கான இலக்குத் தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படும்.

இந்த உடன்பாடானது, ஒபாமா நிர்வாகத்திற்குள்ளாக சிரியாவிலான ஆட்சி மாற்றத்திற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பினாமிப் போர் தொடர்பாக கூர்மையான பதட்டங்களை மீண்டும் உசுப்பி விட்டுள்ளது. முன்பு சிரியாவின் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் அதிகாரத்தை துறக்க வேண்டும் என்ற ஜனாதிபதி பராக் ஒபாமாவின் கோரிக்கையை பலவந்தமாய் நடைமுறைப்படுத்துவதற்காக அவர் இன்னும் அதிகமான இராணுவ வலிமையைப் பயன்படுத்தத் தவறியமை தொடர்பாக, குறிப்பாக, 2013 செப்டம்பரில், அசாத் அரசாங்கம் குடிமக்களுக்கு எதிராக இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாகக் கூறிய இட்டுக் கட்டிய குற்றச்சாட்டின் கீழ் டமாஸ்கஸ் மீது “அதிர்ச்சியில் உறையவைக்கும்” தாக்குதலை நடத்தும் தனது மிரட்டலில் இருந்து அமெரிக்கா பின் வாங்கியதன் பின்னர், இந்தப் பிளவுகள் மேற்பரப்புக்கு வந்திருந்தன. அதற்குப் பதிலாக, சிரியாவின் இரசாயன ஆயுதங்களை அகற்றுவதற்கு ரஷ்யாவின் மத்தியஸ்தத்திலான ஒரு உடன்பாட்டை அமெரிக்கா ஏற்றிருந்தது.

மிக சமீபத்தில், வெளியுறவுத் துறையின் சுமார் 50 ஊழியர்கள், ஆட்சி மாற்றத்திற்காக அமெரிக்காவே தூண்டியிருந்த ஐந்து ஆண்டு காலப் போரின் இரத்தம்கொட்டலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு வழிமுறை எனக் கூறி, சிரிய அரசாங்கத்திற்கு எதிராக அமெரிக்கா வான் தாக்குதல்களை நடத்த அழைப்பு விடுத்து, ஜூன் மாதத்தில் ஒரு உள்முக அதிருப்தி குறிப்பை விநியோகித்தனர்.

ஆயினும், இப்போதைய பிளவுகள், செயல்பணியில் இருக்கும் அமெரிக்க இராணுவத் தளபதிகளை நிர்வாகத்தின் கொள்கைக்கு எதிராய் நிறுத்தி, இராணுவத்தை குடிமக்கள் கட்டுப்படுத்துவது என்ற அரசியல்சட்டக் கோட்பாட்டிற்கான ஒரு சவாலை உள்முகமாய் முன்வைப்பதாய், இன்னும் கூடுதல் அபாய சமிக்கைகளை அளிப்பவையாக இருக்கின்றன.

ியூயோர்க் டைம்ஸில் புதனன்று வெளியான ஒரு அறிக்கையின் படி, ரஷ்யாவுடனான உடன்பாட்டை ஏற்க ஆலோசனையளித்து வெளியுறவுச் செயலரான கெர்ரி ஒரு கலந்தாலோசனை அலைபேசி அழைப்பில் (conference call) பேசிக் கொண்டிருந்த சமயத்தில், அமெரிக்க பாதுகாப்புச் செயலரான ஆஷ்டன் கார்ட்டர் முதன்முதலில் இராணுவத்தின் எதிர்ப்பிற்கு குரல்கொடுத்தார். இந்த விவாதம் பல மணி நேரங்கள் சென்றதில் கெர்ரி “மேலும் மேலும் வெறுப்படைந்தார்” என்றும் இறுதியில் ஒபாமா அந்த உடன்பாட்டிற்கு ஒப்புதலளித்தார் என்றும் டைம்ஸ் தெரிவித்தது.

நிர்வாகம் கொள்கையைத் தீர்மானித்து விட்டிருந்த போதிலும் கூட, மூத்த சீருடையணிந்த தளபதிகள், அப்பட்டமான எதிர்ப்பாக இல்லையென்றாலும் தங்களது கவலைகளை வெளிப்படையாக வெளிப்படுத்தினர்.

இராணுவம் உடன்பாட்டின் ஷரத்துகளுக்கு இணங்கி, ஏழு நாள் சண்டைநிறுத்தம் முடிந்த பின்னர், ரஷ்யாவுடன் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுமா என்று ஊடகங்களுடனான ஒரு தொலைபேசி வழி சந்திப்பின் சமயத்தில் லெப்.ஜெனரல். ஜெஃப்ரி ஹாரிஜியனிடம் கேட்டபோது, ஈராக் மற்றும் சிரியாவில் குண்டுவீச்சுப் பிரச்சாரத்தை வழிநடத்தும் அமெரிக்க வான் படைகளின் மைய உத்தரவகத்தின் தளபதியான அவர் பின்வருமாறு பதிலிறுத்தார்: “உடனே அதில் ஆர்வத்துடன் குதித்து பங்குபெறுவோம் என்று கூறுவது முதிர்ச்சியற்றதாக இருக்கும் என்றே நான் நினைக்கிறேன். ஆம் என்றோ இல்லை என்றோ நான் சொல்லவில்லை.” இராணுவத்தின் முடிவானது “அத்திட்டம் எவ்வாறு முடிவடைகிறது என்பதைப் பொறுத்தே அமையும்” என அவர் சுட்டிக்காட்டினார்.

ரஷ்யர்களைக் குறித்து, “அவர்களை நான் நம்புகிறேன் என்று நான் கூறப் போவதில்லை” என்று ஹாரிஜியன் கூறினார்.

சென்ற மார்ச் மாதம் வரை நேட்டோவின் தலைமை கூட்டணித் தளபதியாக இருந்து பதவியில் இருந்திருந்த ஜெனரல் பிலிப் பிரீட்லவ்வும் இந்த நிலையை ஆதரித்தார். “ரஷ்யர்கள் குறித்து எந்த விடயமானாலும் எனக்கு சந்தேகமாகவே இருக்கும்” என்று அவர் டைம்ஸ்க்கு அளித்த ஒரு நேர்காணலில் தெரிவித்தார். “நமது ஆட்கள் இருக்கும் இடத்தில் இதுபோன்ற விடயங்களில் நிறைய கவலைகள் இருக்கின்றன”.

அமெரிக்கா தனது பிராந்தியக் கூட்டாளிகளான சவுதி அரேபியா, துருக்கி மற்றும் கட்டார் ஆகியவற்றுடன் சேர்ந்து, நிதியாதாரமும் ஆயுதங்களும் அளித்து வருகின்றதான இஸ்லாமியப் போராளிகளின் தொகுதியையே ப்ரீட்லவ் “நமது ஆட்கள்” என்று குறிப்பிடுகிறார் என்பது வெளிப்படை. பல சந்தர்ப்பங்களில், அமெரிக்காவின் பினாமிப் படைகள் அவை இணைந்திருக்கக் கூடிய, பிரித்தறிய வழியற்றதாக இருக்கக் கூடிய சிரிய அல்கெய்தா சக்திகளிடம் இருந்து பிரிந்திருக்கும்படி அமெரிக்கா செய்ய வேண்டும் என்பது இந்த சண்டைநிறுத்த உடன்பாட்டின் முக்கிய கட்டுப்படுத்தும் ஷரத்துகளில் ஒன்றாகும்.

”முந்தைய நுஸ்ரா முன்னணி மற்றும் அவற்றுடன் அதனுடன் ஏறக்குறைய ஒன்றுகலந்துவிட்ட பிற குழுக்களிடம் இருந்து ‘மித எதிர்ப்பு’ குழுக்களைப் பிரிப்பது என்ற தனது வாக்குறுதியை அமெரிக்கா நிறைவேற்ற வேண்டும் என்று புதன்கிழமை கெர்ரியுடன் நடந்த தொலைபேசி உரையாடலில் வெளியுறவு அமைச்சரான லாவ்ரோவ் வலியுறுத்தினார்” என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது. இந்த பினாமிப் படைகள் இத்தகைய எந்த பிரிப்புக்குமான தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கின்றன என்பதோடு “கிளர்ச்சியாளர்கள்” என்று சொல்லப்படுவதின் முதுகெலும்பாய் விளங்குகின்ற அல்-கெய்தா குழுக்களுடன் ஒருங்கிணைப்பில்லாமல் அவை தாக்குப்பிடிக்க முடியுமா என்பதும் தெளிவின்றி இருக்கிறது.

இந்த அறிக்கைகளைத் தொடர்ந்து புதன்கிழமையன்று வாஷிங்டனில் உள்ள போர் ஆய்வுகளுக்கான கல்விநிறுவனத்தில் அமெரிக்க மத்திய உத்தரவகத்தின் கமாண்டரான இராணுவ ஜெனரல் ஜோசப் வோடல் வழங்கிய உரை வந்தது. அவரும் சிரிய சண்டைநிறுத்த உடன்பாடு குறித்து இதேபோன்ற அதிருப்திகளை வெளிப்படுத்தினார்.

“முதலில் இது எப்படிப் போகிறது என்பதைப் பார்க்க வேண்டும்...என்ன திசையெடுக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்... இது உண்மையில் சுற்றிச்சுழலுவதாக இருக்கிறதா இல்லையா, எனக்குத் தெரியவில்லை” என்றார் வோடல். அவர் மேலும் கூறினார்: “ரஷ்யர்கள் மீது நம்பிக்கைப் பற்றாக்குறை இருக்கிறது. அவர்கள் ஒன்று சொல்கிறார்கள், பின்னர் அதனைப் பின்பற்ற வேண்டும் என்று அவர்களுக்கு அவசியமிருப்பதில்லை, அவர்களது நோக்கம் என்ன என்பது நமக்குத் தெளிவாகத் தெரியவில்லை.”

இதேபோன்ற மனோநிலைகள் முந்தைய நாளில் உளவுத்துறைக்கான கீழ்நிலை பாதுகாப்புச் செயலர் மார்செல் லெத்ர் அட்லாண்டிக் கவுன்சிலுக்கு வழங்கிய ஒரு உரையிலும் எதிரொலித்தன. அணு ஆயுத உடன்படிக்கைகள் விடயத்தில் சோவியத் ஒன்றியத்துடன் 1980களில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் சமயத்தில் ரோனால்ட் ரீகன் அடிக்கடி உதிர்த்த ஒரு ரஷ்ய பழமொழியின் ஆங்கில மொழிபெயர்ப்பை அவர் எடுத்துரைத்தார்.

“நம்பிக்கை வைக்காதே ஆனால் சரிபார்த்துக்கொள்” என லெத்ர் அறிவித்தார். “அது இந்த விடயத்திலும் கொஞ்சம் பொருந்தக் கூடியதாகும்.” “நடவடிக்கைகள் நாம் கருதுகின்றவாறு செயல்படுகின்ற” வரையில் “புதிய உடன்பாட்டை ஆதரிப்பதில் உளவுத் துறையும் பாதுகாப்புத் துறையும் வலிமையாக உடன்நிற்கும்” என்று அவர் தெரிவித்தார்.

இராணுவத்தின் எதிர்ப்பின் இந்த முரசுகொட்டலுக்கு பதிலிறுப்பாக, கெர்ரி, புதன்கிழமை தேசிய பொது வானொலிக்கு வழங்கிய ஒரு நேர்காகாணலில் தான் பேச்சுவார்த்தை நடத்திய உடன்பாட்டை மென்மையாக பாதுகாத்துப் பேசினார். இந்த உடன்பாட்டை ஒபாமா ஆதரிக்கிறார் என்றும் அவர் அதனை அமல்படுத்த தயாரிப்புடன் இருக்கிறார் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“நல்லது, அமெரிக்க ஜனாதிபதி தயாராய் இருக்கிறார் என்பதால் ஆகவே இராணுவமும் தயாராகவே இருக்கும் என்றே நான் கருதுகிறேன்” என்றார் அவர். “நமது தரநிர்ணயங்களை விட்டொழிப்பதற்கு யாரும் கேட்கவில்லை, ஆனால் பேச்சுவார்த்தையின் நமது பாகத்தைக் காப்பது நமக்கு முக்கியமானதாகும்.”

அமெரிக்க ஜனாதிபதியால் ஒப்புதலளிக்கப்பட்ட ஒரு உடன்பாட்டிற்கு இணங்கி நடக்க பென்டகன் தயாரிப்பாகவே இருக்கும் என “கருதுகின்ற” அமெரிக்க வெளியுறவுச் செயலர், அதேசமயத்தில் இராணுவத் தலைமை “அவர்களது தரநிர்ணயங்களை விட்டுவிடுவதற்கும்” கேட்கவில்லை. கெர்ரியின் கருத்துகள் அமெரிக்க அரசு எந்திரத்திற்குள் நிலவுகின்ற உண்மையான உறவுகளையும், பரந்த இராணுவ மற்றும் உளவு எந்திரத்தின் மிதமிஞ்சிய செல்வாக்கையும், நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிவில் அதிகாரிகள் மீது ஏறக்குறைய வீட்டோ அதிகாரம் செலுத்தத்தக்க அளவுக்கு அதிகாரம் செலுத்த அது திறம்பெற்றுள்ளதையுமே வெளிப்படுத்துகிறது.

கெர்ரிக்கும் இராணுவத்திற்கும் இடையில் மோதல் உண்டாகிறது என்றால், அது அமெரிக்க ஏகாதிபத்தியக் கொள்கையை உலகளாவிய அளவில் செயல்படுத்துவதில் முன்னுரிமைகளின் மோதல் தொடர்பானதாக இருக்கிறது. சண்டைநிறுத்தத்திற்கு கெர்ரியும் மற்றவர்களும் அளிக்கும் ஆதரவு, சிரியாவில் கொட்டும் ரத்தம் குறித்த எந்த மனிதாபிமானக் கவலையாலும் செலுத்தப்பட்டதாக இல்லை, மாறாக அவர்கள் ஆதரவளித்த பினாமிப் படைகள் ரஷ்ய ஆதரவு அரசாங்கப் படைகளின் கரங்களில் முழுமையானதொரு தோல்வியின் விளிம்பில் நிற்கின்ற நிலையில் அப்படைகளுக்கு ஏதோ கொஞ்சம் நிவாரணத்தையளிப்பதற்கான ஒரு வழிமுறையாக ரஷ்யாவுடனான ஒத்துழைப்பைப் பயன்படுத்துகின்ற அவர்களது விருப்பத்தாலேயே உந்தப்படுவதாய் இருக்கின்றன. கடந்த ஐந்தாண்டு காலங்களாய் சிரியாவிலான தனது இரத்தம் கொட்டும் தலையீட்டின் மூலமாக அமெரிக்கா முன்னெடுத்த ஆட்சி மாற்ற நடவடிக்கையின் ஏதோவொரு வடிவத்திற்கு நெருங்கி வர மாஸ்கோவிற்கு நெருக்குதலளிப்பதற்கு இராஜதந்திர மிரட்டல்கள் மற்றும் இராணுவ மிரட்டல்களின் ஒரு கலவையை பயன்படுத்த அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

அமெரிக்க இராணுவத் தலைமைக்குள்ளான தீர்மானகரமான அடுக்குகளை பொறுத்தவரை, அவர்கள் ரஷ்யாவுடனான நேரடி இராணுவ மோதலுக்கான தயாரிப்பில்தான் மேலும் மேலும் கவனம் குவித்துக் கொண்டிருக்கின்றனர். ISIS மற்றும் நுஸ்ரா முன்னணிக்கு எதிரான இலக்குத் தகவல்களை பகிர்ந்து கொள்வதில், அவை அமெரிக்க ஆதரவு ஆட்சி-மாற்ற நடவடிக்கையின் பிரதான போராளிக் குழுக்களாக இருப்பதும் தவிர, அது அமெரிக்க இராணுவ வழிமுறைகள் குறித்த உளவுத்துறை விவரங்களை ரஷ்யாவுக்கு வழங்கி அதனை அது தனது சொந்த எல்லைகள் மீதான அல்லது உள்ளான விமானத் தாக்குதல்களுக்கு எதிராய் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கு பயன்படுத்திக் கொள்ளக் கூடும் என்ற ஸ்தூலமான கவலைகள் எழுப்பப்பட்டிருக்கின்றன.

ரஷ்யாவின் மீதான ஒரு மூர்க்கமான சுற்றிவளைப்பில் கிழக்கு ஐரோப்பா மற்றும் முன்னாள் பால்டிக் அரசுகள் தொடங்கி கருங்கடல் வரையிலும் அமெரிக்கா தனது படைகளைக் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கின்ற நிலைமைகளின் கீழ், இது ஒரு மிகப் பெரும் கவலையாக ஆகியிருக்கிறது.

ஜனநாயகக் கட்சி ஊடுருவப்பட்டதில் கிரெம்ளினின் கை இருப்பதாகக் கூறப்படும் விவகாரம் மற்றும் டொனால்ட் ட்ரம்ப்பை புட்டினின் “நகல்” என்பதான குற்றச்சாட்டுகள் ஆகியவற்றில் நியூ யோர்க் டைம்ஸ் முன்னிலை வகிக்க அமெரிக்க பெருநிறுவன ஊடகங்களால் உருவாக்கப்பட்டிருக்கும் ரஷ்ய-விரோத வெறியானது இந்த போர்த் தயாரிப்புகளுடன் முழுமையாகப் பிணைந்ததாகும்.

சிரியாவில் மாஸ்கோவுடனான உடன்பாடு தொடர்பாக இராணுவத்திற்கும் ஒபாமா நிர்வாகத்திற்கும் இடையில் பிளவுகள் எழுந்துள்ளமையானது, இன்னும் மிகக் கூடுதல் இரத்தம் கொட்டும் போர்களின் அபாயமும் அத்துடன் ஒரு அணுஆயுதப் பற்றவைப்பின் அபாயமும் தொடர்ந்து வளர்ந்து செல்கின்றன என்ற ஒரு அவசர எச்சரிக்கையாகும்.