ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lanka: thousands protest against death of plantation youth in police jail

இலங்கை: பொலிஸ் சிறையில் இருந்த தோட்டப்புற இளைஞனின் மரணத்தை எதிர்த்து ஆயிரக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டம்

M. Aravinthan
30 September 2016
நடராஜா. ரவிச்சந்திரன்

செப்டம்பர் 18 அன்று, மத்திய பெருந்தோட்ட மாவட்டத்தின் புசல்லாவையில், 2000க்கும் மேற்பட்ட மக்கள், பொலிஸ் காவலில் இருந்த இளைஞர் கொல்லப்பட்டதற்கு எதிராக பொலிஸ் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். தோட்ட தொழிலாளர்களும் குடும்பப் பெண்களும் மற்றும் தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லீம் சமூகங்களைச் சேர்ந்த கடை உரிமையாளர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள், நுவரேலியா மாவட்டத்தின் புசல்லாவையில் ரோத்ஸ்சில்ட் தோட்டத்தை சேர்ந்த நடராஜா ரவிச்சந்திரன் கொல்லப்பட்டமைக்கு பொலிசார் மீது குற்றம் சாட்டினர். அவர் நீதிமன்ற பிடியாணையின் கீழ் முந்தைய நாள் மாலை 4.30 மணிக்கு கைது செய்யப்பட்டு பொலிஸ் செல்லில் பூட்டி வைக்கப்பட்டார். அவர் 30 வயதான தோட்டத் தொழிலாளி ஆவார்.

போலீசாரின் படி, சுமார் 7 மணிக்கு அவர் அணிந்திருந்த டீசேர்ட்டை பயன்படுத்தி போலீஸ் செல்லுக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். எனினும், அவரது உறவினர்களும் ரோத்ஸ்சில்ட் தோட்ட தொழிலாளர்கள் உட்பட அந்தப் பகுதி மக்களும் போலீசாரின் கதையை ஏற்க மறுக்கின்றனர்.

சட்ட வைத்திய அதிகாரி (ஜே.எம்.ஓ.) அறிக்கையின்படி, மரணத்திற்கான காரணம் தற்கொலை என "சோதித்தறியப்பட்டு" உள்ளது. எனினும், சட்ட வைத்திய அதிகாரி, இறந்தவர் கழுத்தில் சிராய்ப்புகள் இருந்தன என்று குறிப்பிட்டுள்ளார். நீதவான் மரணம் சம்பந்தமாக ஒரு திறந்த தீர்ப்பை கொடுத்து, இறந்தவரின் உடல் பாகங்களை மேலதிக பரிசோதனைக்காக அரச ஆய்வாளருக்கு அனுப்ப உத்தரவிட்டார். ஒரு டீசேர்ட்டைப் பயன்படுத்தி தானே எப்படி ஒருவரால் தூக்கிட்டிக்கொள்ள முடியும் என்ற சந்தேகத்தை எழுப்பிய நீதவான், இளைஞர் பூட்டி வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து விசாரணை நடத்த வேண்டிய தேவையை வலியுறுத்தினார்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் (NUW) தலைவரும் கிராம உட்கட்டமைப்பு மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சருமான, ப. திகாம்பரம், எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களை அமைதியாக்கி கலைந்து செல்ல வைப்பதற்காக உடனடியாக புசல்லாவைக்கு வந்தார். பொலிஸ் மா அதிபருடன் பேசிய அவர், “ஏதாவது செய்யுங்கள். குறைந்த பட்சம் பொறுப்பதிகாரியையாவது இடம்மாற்றுங்கள். அப்போது நான் அதை அவர்களிடம் [ஆர்ப்பாட்டக்காரர்களிடம்] சொல்லி அவர்களை திருப்பி அனுப்ப முடியும்”, என்று கேட்டுக்கொள்வதை ஊடக காணொலிகள் காட்டுகின்றன.

அரசாங்கமும் திகாம்பரம் உட்பட தோட்ட தொழிற்சங்க தலைவர்களும், தொழிலாளர்கள் போலீசாரால் அடிக்கடி அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகும் ஏனைய தோட்டங்களுக்கும் எதிர்ப்பு பரவிவிடுமோ என்று கவலையுடன் இருந்தனர்.

தோட்டக் கம்பனிகள் ஊதிய உயர்வை நிராகரிப்பது மற்றும் தமது வாழ்க்கை நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அரசாங்கத்தின் தாக்குதல்களையிட்டு தொழிலாளர்கள் மத்தியில் சீற்றம் கொந்தளித்துக்கொண்டிருக்கின்றது.

கோபமடைந்திருந்த எதிர்ப்பாளர்களை சமாதானப்படுத்துவதற்காக திகாம்பரம் கேட்டுக்கொண்டது போல், அரசாங்கம் பொறுப்பதிகாரியை இடம்மாற்றியதோடு ரவிச்சந்திரனின் மரணம் நேர்ந்தபோது கடமையில் இருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களையும் இடைநீக்கம் செய்துள்ளது. சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சகலா ரத்நாயக்க, சம்பவம் பற்றி ஒரு "விரிவான" விசாரணையை நடத்துவதாக வாக்குறுதி அளித்தார்.

ரவிச்சந்திரன் மூத்த சகோதரர் செல்வராஜா, அவர் கைது செய்யப்படும் போது அவருடன் இருந்ததாக கூறினார். "அவர் ரட்னாயக்க, துசித்த ஆகிய இரண்டு போலீஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். நான் போலீஸ் நிலையம் சென்றபோது அவரை அடிப்பதை நான் பார்த்தேன். நான் அவரை அடிக்க வேண்டாம் என்று அவர்களிடம் கெஞ்சினேன், ஆனால் அவர்கள் விடவில்லை. "தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள்" என்ற வார்த்தைகளே கடைசியாக எனக்கு கேட்டது.”

தாம் இருவரும் குடிபோதையில் இருந்த சிறிய குற்றச்சாட்டுக்காக 2014ல் கைதுசெய்யப்பட்டதாக செல்வராஜா கூறினார். நீதிமன்றத்தில் அவர்கள் முற்படுத்தப்பட்டபோது நீதவான் தண்டனையாக 100 நாள் சமூக பணி செய்யுமாறு உத்தரவிட்டார். "நான் என் கடமையை முடித்துவிட்டேன் ஆனால் ரவிச்சந்திரனால் கைகளில் காயங்கள் இருந்ததனால் அவரது பாகத்தை முடிக்க முடியாமல் போனது. நீதிமன்ற உத்தரவை மீறியதாக போலீஸ் நீதவானிடன் புகார் செய்ததை அடுத்து பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

ஓய்வுபெற்ற தோட்டத் தொழிலாளியான ரவிச்சந்திரனின் தந்தை நடராஜா (57), அவர் கைது செய்யப்பட்ட அன்றே அவரது மனைவியுடன் இரவு 8.15 மணிக்கு போலீஸ் நிலையத்திற்கு சென்றாதாக உலக சோசலிச வலைத் தள நிருபர்களிடம் கூறினார். ரவிச்சந்திரன் அங்கு இருக்கவில்லை. அவர்கள் விசாரித்தபோது, அவர் புசல்லாவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் கூறினார்.

"நாம் மருத்துவமனைக்கு செல்ல முயன்றபோது, பொலிசார் அவர் கண்டி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக கூறினர். நாம் வீட்டிற்கு திரும்பிவிட்டோம். பின்னர் அவர்கள் பொய் சென்கின்றனர் என்பதை தெரிந்துகொண்டோம். எங்கள் மகன் இறந்துவிட்டார், அவரது உடல் புசல்லாவை ஆஸ்பத்திரியில் இருந்தது. அவர் தற்கொலை செய்துகொண்டதாக பொலிசார் கூறினாலும் நாங்கள் நம்பவில்லை. அவர் போலீஸ் தாக்கியதாலேயே இறந்தார்" என தந்தை புலம்பினார்.

தனது மகன் ஆரோக்கியமாகவும் செயலூக்கத்துடனும் மக்களுடன் நட்புடனும் இருந்தார் என்று நடராஜா கூறினார். ஓய்வு பெற்ற நடராஜாவும் அவரது மனைவியும், மகன்மாரின் சம்பாத்தியத்தில் தங்கியிருக்கின்றனர். "போலீசுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க எங்களிடம் பணம் இல்லை. எனினும், இந்த வகையான நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்” என அவர் முறைப்பட்டார். போலீஸ் அடிக்கடி தோட்டப்புற இளைஞர்களுக்கு தொல்லை கொடுப்பதாக நடராஜா கூறினார். போலீஸ், தொழிலாளர்களை அச்சுறுத்துவதற்காகவும் ஒடுக்குவதற்காகவும் தோட்டக் கம்பனிகளுடன் நெருக்கமாக வேலை செய்கின்றது.

தோட்டத் தொழிலாளர்கள் இலங்கை தொழிலாள வர்க்கத்தில் மிக வறிய பிரிவினர் ஆவர். அவர்களது தற்போதைய நாள் சம்பளம் 600 ரூபா (சுமார் 4 அமெரிக்க டாலர்). தோட்டக் கம்பனிகள் ஊதிய உயர்வை நிராகரித்து, குத்தகை விவசாய முறைக்கு தொழிலாளர்களைக் கட்டிப்போடும் உற்பத்தித்திறன் சார்ந்த ஊதிய முறையை பிரேரித்துள்ளன.

இளைஞர் வேலையின்மை தோட்டப்புறத்தில் உயர்ந்து காணப்படுவதோடு வீடுகள், சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற அடிப்படை வசதிகள் கூட போதுமானதாக இல்லை. தொழிலாளர்களின் வாழ்க்கை மற்றும் வேலை நிலைமைகள் மீதான தாக்குதல்களிலும் ஜனநாயக உரிமைகளை ஒடுக்குவதிலும் தோட்டத் தொழிற்சங்கங்கள் கம்பனிகளுடனும் அரசாங்கத்துடனும் ஒத்துழைத்து வருகின்றன.

புசல்லாவை சம்பவம் ஒரு விபத்து அல்ல. இலங்கை போலிசின் மிருகத்தனம் அதிகரித்து வருகிறது. பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது வழக்கமானதாக இருந்த சித்திரவதை, பலவந்தமாக காணாமல் ஆக்குதல், போலீஸ் காவலில் இருக்கும் போது கொல்லப்படுதலும் நாடு முழுவதும் தொடர்கின்றன. போலீஸ் அத்தகைய கொலைகளின் பின்னர் சுதந்திரமாக செல்கின்றது. அல்லது முறையான விசாரணைகள் நடைபெறுவதில்லை.

புசல்லாவையில் போல், இலங்கையில் இத்தகைய சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால் கோபமடைந்த மக்கள் பொலிஸ் நிலையங்களை சுற்றிவளைத்து நீதி கோருகின்றனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம், பொலிஸ் மற்றும் இராணுவத்தின் அதிகாரங்களை வலுப்படுத்த, இரண்டு புதிய சட்டங்களை -தேசிய பாதுகாப்பு சட்டம் மற்றும் திட்டமிட்ட குற்றங்கள் தடுப்பு சட்டம்- அறிவித்துள்ளது. அரசாங்கம் நியமித்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் (HRCSL) கூட, அரசியலமைப்பில் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள கைது செய்யப்படும் நபர்களின் உரிமைகளை, பிரேரிக்கப்பட்டுள்ள புதிய சட்டங்கள் மீறுகின்றன என அறிவித்துள்ளது. புதிய சட்டங்களின் படி, கைது செய்யப்படும் நபரிடம் போலீஸ் வாக்குமூலம் பதிவு செய்துகொண்ட பின்னர் மட்டுமே அவர் ஒரு வழக்கறிஞரின் ஆதரவைப் பெற முடியும்.

மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் தீபிகா உடகம, "வாக்குமூலம் பதிவு செய்து முடியும் வரை, கைது செய்யப்பட்டுள்ள அல்லது தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் தனது வழக்கறிஞரை அணுக விடாமல் தடுப்பதானது, சந்தேக நபர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவது, கொடூரமாக மனிதத்தன்மையற்ற முறையில் நடத்தப்படுவது, அதேபோல் முறையின்றி நடந்துகொள்ளும் பொலிசார் சட்டவிரோதமாக கைது செய்தல் மற்றும் தடுத்து வைத்தலில் ஈடுபடக்கூடிய பெரும் ஆபத்தை விளைவாக்கும்,” என்று சுட்டிக் காட்டியுள்ளது.

எனினும், போலீஸ் ஒடுக்குமுறையானது வெறுமனே சில முறைகேடான போலீஸ் அதிகாரிகளின் கொடூரத்தன்மை மற்றும் கொடூர செயலின் விளைவு அல்ல. மாறாக, முதலாளித்துவ அரசாங்கத்திற்கு எதிராக அதிகரித்து வரும் வெகுஜன சீற்றம் மற்றும் அமைதியின்மையை நசுக்க பொலிஸ் அரச வழிமுறையை பயன்படுத்துவதன் ஒரு பாகமாகும்.