ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Tamil Nationalists hail US “Operation Pacific Angel” in Sri Lanka

இலங்கையில் அமெரிக்காவின் “ஆபரேஷன் பசிபிக் ஏஞ்சல்” நடவடிக்கையை தமிழ் தேசியவாதிகள் பாராட்டுகின்றனர்

By K.Nesan
1 September 2016

ஆகஸ்ட் மூன்றாம் வாரத்தில், சீனாவுக்கு எதிரான போர் தயாரிப்பை நோக்கமாய் கொண்ட “ஆசியாவை நோக்கிய முன்னிலை”க்கு தலைமையில் இருக்கின்ற அமெரிக்காவின் முக்கிய இராணுவத் தலைமைகளில் ஒன்றான USPACOM (அமெரிக்க பசிபிக் தலைமை) படைகள் யாழ்ப்பாணத்தில் “ஆபரேஷன் பசிபிக் ஏஞ்சல்” நடவடிக்கைகளை மேற்கொண்டன. பங்களாதேஷ், நேபாளம் மற்றும் மாலைதீவில் இருந்ந்து வந்திருந்த அமெரிக்கப் படையினர்களின் தலைமையிலான எழுபது இராணுவ நிபுணர்கள் மருத்துவ உதவி மற்றும் பள்ளிகள் திருத்தம் செய்யும் ஒத்திகையில் இலங்கை வான் படையுடன் இணைந்து கொண்டனர்.

இந்த நடவடிக்கைக்கு முன்பாக, ஜூலை மாதத்தில், USS நியூ ஓர்லியன்ஸ் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. USPACOM இன் கீழ் செயல்படுகின்ற இந்த கப்பலானது மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் ஒரு ஏழு-மாத கால செயல்தந்திர நடவடிக்கையில் நிலைநிறுத்தப்பட்டிருந்தது. கொழும்பில் தங்கியிருந்த சமயத்தில், அமெரிக்க மரைன் வீரர்கள் இலங்கை கடற்படையுடன் இணைந்து “இயற்கைப் பேரிடர்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுதல்” குறித்த பயிலரங்குகளையும், கருத்தரங்குகளையும் நடத்தினர். USS நியூ ஓர்லியன்ஸ் இந்த ஆண்டில் கொழும்புக்கு வருகை தரும் இரண்டாவது கப்பலாகும். மார்ச் மாதத்தில் அமெரிக்க ஏழாவது கப்பல்வரிசையின் அடையாளச்சின்னக் கப்பலான USS புளூரிட்ஜ் கொழும்பு வந்திருந்தது.

மருத்துவ உதவி மற்றும் மீள்கட்டுமானம் என்ற சாக்கின் கீழ், “ஆபரேஷன் பசிபிக் ஏஞ்சல்” நடவடிக்கையானது, தமிழ் தேசியவாத விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கை உள்நாட்டு யுத்தத்தின் முடிவின் சமயத்தில் வடக்கில் அப்பாவி மக்களைப் படுகொலை செய்ததும் அப்பாவி மக்களின் நிலங்களைப் பறிமுதல் செய்ததுமான இலங்கை இராணுவமும் அமெரிக்காவும் நடத்திய முதல் கூட்டு நடவடிக்கையாகும். உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்த ஏழு ஆண்டுகளுக்கு பின்னரும் பத்தாயிரக்கணக்கான இராணுவத்தினர் இன்னமும் நிலைகொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இந்த நடவடிக்கையை தொடங்கி வைத்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதரான அதுல் கேஷப் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான சம்பந்தனையும், வட மாகாண சபையின் தலைவரான சி.விக்னேஸ்வரனையும் இந்த நிகழ்வுக்கு அழைத்திருந்தார். கேஷப் தனது உரையில், “எனது தனித்துவமான மற்றும் கற்றறிந்த நண்பர், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், திரு. சம்பந்தன், இங்கே வருகை தந்திருப்பதில் நான் மிகவும் பெருமிதமும் நன்றியுணர்வும் கொள்கிறேன்” என்றார்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் தமிழ் மக்களின் நலன்களை ஊக்குவித்துக் கொண்டிருப்பதான பிரமைகளைப் பரப்புவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த நடவடிக்கையைப் பயன்படுத்தியது.

சென்ற ஆண்டில் அமெரிக்க ஆதரவு ஆட்சிமாற்ற நடவடிக்கை ஒன்றில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அகற்றப்பட்டு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அமர்த்தப்பட்ட நடவடிக்கையை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான சம்பந்தன் பாராட்டினார்: “ஐநாவுடனும் சர்வதேச சமூகத்துடனும் மோதல் போக்கைக் கடைப்பிடித்ததால், மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி, அதிகாரத்தில் தொடர முடியாமல் போனது. இப்போதைய அரசாங்கம் அதனை நினைவில் வைத்திருக்க வேண்டும். ஐ.நா தீர்மானத்தை ஏற்றால் மட்டுமே நாங்கள் அரசாங்கத்தை ஆதரிப்போம்.”

உண்மையில் சம்பந்தனின் எச்சரிக்கை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு பங்காளியாக இருக்கும் அரசாங்கத்தை நோக்கி செலுத்தப்பட்டதாக இல்லை மாறாக சீனாவுடன் மிக நெருக்கமான நோக்குநிலை கொண்டிருக்கின்ற ராஜபக்‌ஷவை நோக்கி கூறப்பட்டதாகவே இருக்கிறது என்பதுடன், அது அரசாங்கத்திற்கு எதிரான வெகுஜன அதிருப்தியை திசைதிருப்புவதற்கு இனவாத சிங்கள வகுப்புவாத அரசியலைத் தூண்டிவிடுவதாய் இருக்கிறது.

இலங்கையின் ஆளும் உயரடுக்கில் இருக்கும் ஏதேனும் ஒரு சக்தி அமெரிக்க நலன்களுக்கான ஒரு தடையாக எழுமானால், அப்போது உள்நாட்டுப் போரின் முடிவில் நடத்தப்பட்ட போர்க்குற்றங்களிலான அவர்களது பாத்திரத்தை சுட்டிக் காட்டி, அவர்கள் மீது ஒரு அரசியல் தாக்குதல் நடத்தப்படுவதை TNA ஆதரிக்கும் என்ற ஒரு வெளிப்படையான செய்தியையே சம்பந்தன் அனுப்பியிருந்தார். எப்படியிருந்தாலும், அந்தப் பாரிய படுகொலைகளில் ஆழமான சம்பந்தம் கொண்ட உயர் அதிகாரிகளை அதிகாரத்தில் கொண்டிருக்கின்ற சிறிசேன அரசாங்கத்தை ஆதரித்துக் கொண்டிருக்கும் நிலையில், சம்பந்தனின் இந்த நிலைப்பாடு அப்பட்டமான கபடத்தனமானதாகும்.

“மறுவாழ்வு” அளிக்கப்பட்ட முன்னாள் LTTE போராளிகள், இராணுவக் காவலில் தங்களுக்கு அளிக்கப்பட்ட “மறுவாழ்வு” நடவடிக்கைகளின் போது இலங்கை அரசால் தங்களுக்கு நஞ்சு கொடுக்கப்பட்டதாக கூறிய தீவிரமான குற்றச்சாட்டுகள் குறித்து, சம்பந்தன், தனது உரையின்போது கருத்தேதும் தெரிவிக்கவில்லை. அந்த சமயத்தில், எய்ட்ஸ் தடுப்பு மருந்து போடுவது போன்ற போலியான சாக்குகளின் அடிப்படையில் வேறு ஏதோ பொருட்கள் அவர்களது உடலுக்குள் செலுத்தப்பட்டிருந்தன. அவர்களில் குறைந்தது 103 பேர் இறந்திருக்கின்றனர், பலரும் உடல்நலம் குன்றியிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகள் நம்பத்தகுந்தவையாகவே இருக்கின்றன. 2009 இல் போரின் இறுதிக் கட்டத்தின் போது தப்பியோடிய ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களையும், தமிழீழ விடுதலைப் புலிகள் போராளிகளையும் இலங்கை அரசாங்கமும் இராணுவமும் மிருகத்தனமாக படுகொலை செய்தன; “மறுவாழ்வு” முகாம்களில் கைதிகளுக்கு நஞ்சு கொடுப்பதில் அவர்களுக்கு எந்த மனக்கிலேசமும் இருக்கப் போவதில்லை.

வடமாகாண சபை கூட்டத்தில், அமெரிக்க இராணுவத்தை ஊக்குவிக்க இந்த விடயத்தை சுரண்டிக் கொள்வதற்கு சி.விக்னேஸ்வரன் முயன்றார். வருகை தருகின்ற அமெரிக்க மருத்துவ அணி “மறுவாழ்வு அளிக்கப்பட்ட” முன்னாள் LTTE போரளிகளை பரிசோதிக்க இருப்பதாக அவர் அறிவித்தார்.

விக்னேஸ்வரனின் செயலர்களில் ஒருவர் “மறுவாழ்வு அளிக்கப்பட்ட” போராளிகளின் ஒரு குழுவை பரிசோதிப்புக்காக கொண்டுவந்த சமயத்தில் ஆபரேஷன் பசிபிக் ஏஞ்சல் நடவடிக்கையின் உண்மையான மனிதாபிமான முகம் வெளிச்சத்திற்கு வந்தது. அந்த மருத்துவர்கள் அவர்களை பரிசோதிக்க மறுத்து விட்டனர். இத்தகைய ஆய்வுகளுக்கு தேவையான உரிய மருத்துவ சாதனவசதிகள் அந்த மருத்துவர்களிடம் இருக்கவில்லை என்று பின்னதாய் அமெரிக்க தூதரகம் அறிவிப்பு வெளியிட்டது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் தேசியவாதிகளும் நாளுக்கு நாள் மக்கள் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டிருக்கின்றனர். அத்துடன் அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கை அரசியலுக்கு அவர்கள் அளிக்கும் அடிமைத்தனமான ஆதரவிற்கு எதிராகவும் பாரிய எதிர்ப்பு அபிவிருத்தியடைந்து சென்று கொண்டிருக்கிறது. ஆகவே தான் அவர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் “மனிதாபிமான” தன்மை குறித்தும் கொழும்பில் இருக்கும் அதன் பொம்மை ஆட்சி மீதும் பிரமைகளைப் பரப்புவதற்கு முன்னாள் விடுதலைப் புலி போராளிகள் மீதான வெகுஜன அக்கறையைச் சுரண்டிக் கொள்ள முனைந்தனர்.

அதிகாரத்திற்கு வந்த 20 மாதங்களுக்கு மேலான காலத்தில், சிறிசேனவும் அவரது UNP தலைமையிலான அரசாங்கமும் தீவின் உழைக்கும் மக்களுக்கு எதிராய் வரிசையான தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். தொழிலாள வர்க்கத்தையும் ஏழைகளையும் நாசம் செய்யக் கூடிய ஒரு வரிசையான பொருளாதார சீர்திருத்தங்களை அவர்கள் முன்மொழிந்தனர். ஏற்கனவே விவசாயிகள், மாணவர்கள் மற்றும் வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகள் சிக்கன நடவடிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். மதிப்புக் கூட்டப்பட்ட வரியின் அதிகரிப்புக்கு எதிராகவும் (VAT) பரவலான ஆர்ப்பாட்டங்கள் இருந்தன. முன்மொழியப்பட்ட மசோதாவை நிறுத்திவைக்க இலங்கையின் உச்சநீதி மன்றம் உத்தரவிட்டிருந்தாலும் கூட, விரைவிலேயே அதனை மீண்டும் அறிமுகம் செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது.

கிழக்கு ஆசிய மன்றம் (East Asia Forum) தனது வலைத் தளத்தில் “நம்பகமான” பொருளாதார சீர்திருத்தம் இலங்கைக்கு அவசியம் என்று எழுதுகின்றது, அதாவது வங்கிகள் மற்றும் சர்வதேச பெருநிறுவனங்களின் சார்புநிலையை நேரடியாகக் கேட்கிறது. முதலாவதாய் “இனியும் பெரிய பொதுத் துறை ஊதிய அதிகரிப்புகள் கூடாது, இனியும் விலைக் கட்டுப்பாடுகள் கூடாது, இனியும் அவ்வப்போதைக்கான வரிகள் கூடாது” என்று அது ஆலோசனை வைக்கிறது. இரண்டாவதாய், அரசாங்கம், வரி வருவாய்களை அதிகரிக்கும் விதத்திலான வரிச் சீர்திருத்தங்களையும் முதலீடுகளுக்கான ஒப்புதல்களையும் திட்டப்பணிகளுக்கான உரிமங்களையும் விரைவுபடுத்தும் விதத்தில் மிக எளிமைப்படுத்தப்பட்ட வணிக நெறிமுறைகளையும் கொண்டுவர வேண்டும் என்று தெரிவிக்கிறது.

தீவில், அமெரிக்காவும் சீனாவும் செல்வாக்கிற்காக சண்டையிடுவதால் கொழும்பில் பதட்டங்கள் தீவிரப்பட்டுச் செல்வதன் மத்தியில் தான் ஆபரேஷன் பசிபிக் ஏஞ்சலை TNA பாராட்டுவது வருகிறது. சிறிசேனாவின் ஆட்சி சென்ற ஆண்டில் அதிகாரத்திற்கு வந்த பின்னர், ஆரம்பத்தில் சீனாவுடனான உறவுகளை முறிப்பதற்கு அது முயன்றது - பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை நிறுத்தி வைத்ததோடு, சீன முதலீடுகளைக் குறைத்தது. ஆயினும், ஆகஸ்ட் தொடக்கத்தில் அரசாங்கம், தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சீன கூட்டமைப்புடன் ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

ஏப்ரலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனாவுக்கு விஜயம் செய்ததன் பின்னர் இந்த முடிவு எட்டப்பட்டிருந்தது. அவரது விஜயம் இலங்கைக்கு சீனா வழங்கியிருந்த 8 பில்லியன் டாலர் கடனுதவியின் ஒரு பகுதியை தள்ளுபடி செய்யச் செய்வதை பிரதான நோக்கமாய் கொண்டிருந்தது. இந்தக் கடன் தொகை, சென்ற தசாப்தத்தில் இலங்கையின் 82 பில்லியன் டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 75 சதவீதமாக விஸ்வரூபம் எடுத்திருந்தது.

இலங்கையில் அமெரிக்காவும் சீனாவும் செல்வாக்கிற்காகச் சண்டையிடுவது, குறிப்பாக, சிறிசேன ஆட்சி அமெரிக்காவுடன் நெருக்கமான உறவுகளைப் பராமரிப்பது, முதலாளித்துவ ஊடகங்களில் இது குறித்து கருத்திடப்படுகின்ற அளவுக்கு மிகவும் வெளிப்படையான ஒன்றாய் இருக்கிறது.

“இந்த அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையை ஒரே வரியில் எழுதி விடலாம்- “இந்தியாவும் அமெரிக்காவும் தமது மூலோபாய, பொருளாதார மற்றும் ஏனைய நலன்களுக்காக எந்த ஆலோசனையை முன்வைத்தாலும் ‘ஆமாம்’ சொல்வது, அத்துடன் சீனாவின் பொருளாதார உத்தரவிற்குக் கீழ்ப்படிவது” என்று டெய்லி மிரர் தனது கருத்துக் கட்டுரை ஒன்றில் எழுதியுள்ளது.