ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Far-right victory in Austrian presidential elections: A warning

ஆஸ்திரிய ஜனாதிபதி தேர்தல்களில் தீவிர வலதின் வெற்றி: ஓர் எச்சரிக்கை

By Peter Schwarz
  27 April 2016

ஆஸ்திரியாவில் ஞாயிறன்று தீவிர வலது சுதந்திர கட்சியின் (FPÖ) தேர்தல் வெற்றியானது, ஐரோப்பா முழுவதற்குமான ஒரு எச்சரிக்கையாகும். தொழிலாள வர்க்கம் அதன் சொந்த சுயாதீனமான அரசியல் தலையீட்டை மேற்கொள்ளாது, ஐரோப்பாவின் தலைவிதியை ஸ்தாபக கட்சிகளது கரங்களில் விட்டால், வலதுசாரி கட்சிகளது வளர்ச்சி, தேசியவாதம், இனவாதம் மற்றும் போர் என்பது தவிர்க்கவியலாதது என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.

சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நோர்பர்ட் ஹோபர் (Norbert Hofer), ஜனாதிபதி தேர்தல்களின் முதல் சுற்றில் 35 சதவீத வாக்குகளைப் பெற்றார். 45 வயதான இவர், மே 22 இல் நடக்கவுள்ள இரண்டாம் சுற்று தேர்தலில் 72 வயதான பசுமை கட்சி வேட்பாளரான பொருளாதார பேராசிரியர் அலெக்சாண்டர் வொன் டெர் பெல்லெனுக்கு எதிராக போட்டியிடுவார். இவர் 21 சதவீத வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் வெகு பின்னால் இருக்கிறார். ஹோபருக்கு பெரிதும் வெற்றி வாய்ப்புள்ளது. அவ்வாறு நடந்தால், இரண்டாவது ஆஸ்திரிய குடியரசின் 71 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக வியன்னாவில் ஒரு தீவிர வலது கொள்கையாளர் ஜனாதிபதியாக பதவியேற்பார். இஸ்லாமிய விரோத மற்றும் வெளிநாட்டவர் விரோத நிலைப்பாடுகளைக் கொண்டுள்ள ஹோபர், ஜேர்மன் பெஹிடா இயக்கத்தை ஆதரிப்பதுடன், ஐரோப்பிய ஒன்றியத்தை எதிர்க்கிறார்.

1945 இல் இருந்து அந்நாட்டை தனித்தோ அல்லது கூட்டணிகளுடனோ ஆட்சி செய்துள்ள மற்றும் தற்போது அரசாங்கம் அமைக்க முயற்சிக்கின்ற சமூக ஜனநாயகவாதிகள் (SPÖ) மற்றும் பழமைவாத ஆஸ்திரிய மக்கள் கட்சி (ÖVP), ஞாயிறன்று படுதோல்வி அடைந்தன. மக்கள் கட்சிகள் என்றழைக்கப்படும் அவை இரண்டுமே ஒருமித்து ஒரு கால் பங்கு வாக்குகளுக்கும் குறைவாகவே பெற்றன. அவர்களது வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் 11 சதவீத வாக்குகளைப் பெற்றனர். இரண்டு வேட்பாளர்களும் சேர்ந்து ஒரு மில்லியன் வாக்குகளுக்கும் குறைவாகவே பெற முடிந்தது, அதேவேளையில் ஹோவர் தனித்தே 1.5 மில்லியன் வாக்குகளை வென்றார்.

தீவிர வலதின் வளர்ச்சிக்கு, இவ்விரு கட்சிகளும் மற்றும் அத்துடன் அவற்றின் பின்புலத்தை மறைக்க அந்த அணியில் செயல்பட்டு வரும் தொழிற்சங்கங்களும் போலி-இடது குழுக்களுமே முழு பொறுப்பாகின்றன.

1999 இல் அப்போதைய ÖVP சான்சிலர் Wolfgang Schüssel, கணிசமான சர்வதேச போராட்டத்திற்கு இடையே, அவரது அரசாங்கத்திற்குள் அந்நேரத்தில் Jörg Haider ஐ அதன் தலைவராக அமர்த்தி, சுதந்திர கட்சியின் வளர்ச்சிக்கு வழிவகுத்தார். அப்போது FPÖ க்கு உள்ளேயே ஒரு பிளவு இருந்ததுடன், அது தொடர்ச்சியான நெருக்கடி, ஊழல் மோசடிகள் மற்றும் விவகாரங்களால் அதிர்ந்து போய், கூடுதலாக வலதிற்கு நகர்ந்தது. இதற்கிடையிலும் அக்கட்சியால் தொடர்ச்சியான தேர்தல் வெற்றிகளைப் பெற முடிந்திருந்தது. இவற்றின் இறுதிவிளைவாக ஞாயிறன்று மத்திய அரசு அளவில் அதன் சிறந்த தேர்தல் வெற்றியை ஈட்டியுள்ளது.

முதலாவதாக இதற்கான காரணம், வியன்னா அரசாங்கம் நடத்திய சமூக தாக்குதல்களாகும். இரண்டரை ஆண்டுகளுக்கு முந்தைய நாடாளுமன்ற தேர்தல்களுக்கு பின்னர், SPÖ சான்சிலர் வெர்னெர் ப்யேமேன் தலைமையிலான பிரமாண்ட கூட்டணி, தொழிலாளர்களை விலையாக கொடுத்து ஒரு கடுமையான சிக்கனத் திட்டத்தை பின்பற்றியது. அது ஓய்வூ பெறும் வயதை உயர்த்தியதுடன், அரசுத்துறை வேலைகளைக் குறைத்து, சம்பள உயர்வுகளை கட்டுப்படுத்தியது. வேலைவாய்ப்பற்றவர்களின் எண்ணிக்கை ஐந்தாண்டுகளுக்குள் 300,000 இல் இருந்து 475,000 வரை அதிகரித்துள்ளது. பத்தில் ஒருவருக்கும் அதிகமானவர்கள் இப்போது வேலையின்றி உள்ளனர்.

அரசாங்கம் தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் நெருக்கமாக கூடி வேலை செய்ததுடன், அதற்காக ஒரு ஊழல் நிறைந்த உறவுமுறைகளைத் திடமாக அது உருவாக்கி உள்ளது. இத்தகைய வெட்டுக்களை எந்த கட்சியும் எதிர்க்கவில்லை என்பதால், அதன் மீதான கோபம் மற்றும் விரக்தியை FPÖ ஆல் தனக்குப் பின்னால் திருப்பிக் கொள்ள முடிகிறது.

சுதந்திரக் கட்சி (FPÖ) அகதிகளுக்கு எதிராக கடுமையாக இருக்கின்ற போதினும், இது அகதிகளுக்கு-விரோதமான வாக்குகள் கிடையாதென தேர்தல் பகுப்பாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். Sora தேர்தல் கருத்துக் கணிப்புகளின்படி 68 சதவீத அதிருப்தி விகிதங்களைக் கொண்ட SPÖ/ÖVP அரசாங்கங்கள் மீதான ஆத்திரமே மிக மிக தீர்மானகரமாக இருந்தது.

“சமீபத்திய ஆண்டுகளின் அபிவிருத்திகளை பத்தில் ஒருவர் மட்டுந்தான் ஆக்கபூர்வமாக ஏற்கிறார், பொதுவாக 80 சதவீதத்தினரால் அரசியல் விரக்தி உணரப்படுகிறது,” என்று Deutsche Welle இன் கட்டுரை ஒன்று விவரிக்கிறது. “அதற்கும் அதிகமாக, ஆண்டுகணக்கில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வந்துள்ளதால், வேலை பாதுகாப்பு குறித்த அச்சங்கள் அதிகரித்து வருகின்றன. பலர் ஒரு பொருளாதார வீழ்ச்சியைக் குறித்து அஞ்சுகின்றனர்,” என்றது குறிப்பிட்டது.

இரண்டாவது காரணம், சமூக ஜனநாயகவாதிகளும் மக்கள் கட்சியும் பெரிதும் FPÖ இன் வெளிநாட்டவர் விரோத அரசியலை ஏற்றுக் கொண்டதனாலும் மற்றும் அதை அரசு கொள்கையின் அடித்தளமாக ஆக்கியதன் மூலமும் FPÖ க்கு வழிவகுத்து கொடுத்துள்ளன. அவை ஹங்கேரி மற்றும் இத்தாலி உடனான எல்லைகளை மூடி, அதிகபட்ச அகதிகள்-ஏற்பு வரம்புகளை அறிமுகப்படுத்தின. அத்துடன் அக்கட்சிகள் ஹங்கேரி மற்றும் பால்கன்களில் உள்ள வலதுசாரி அரசாங்கங்களுடன் சேர்ந்து தஞ்சம் கோருவோருக்கான உரிமை உதறிவிட்டன. பர்கன்லாந்து எனும் ஆஸ்திரிய மாநிலத்தின், சமூக ஜனநாயகவாதிகள் FPÖ உடனே சேர்ந்து ஒரு கூட்டணி அரசாங்கம் அமைத்தனர்.

இத்தகைய நிலைமைகளின் கீழ், 2007 இல் ஆஸ்திரிய தொழிற்சங்கங்களுக்கு தலைமை கொடுத்தவரும் மற்றும் 2008 க்குப் பின்னர் தொழிலாளர் மற்றும் சமூக விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் தலைமையில் இருந்தவருமான SPÖ வேட்பாளர் Rudolf Hundstorfer க்கு, தொழிலாளர்களில் வெறும் 5 சதவீதத்தினர் மட்டுமே வாக்களித்ததாக Sora கருத்துக்கணிப்பு குறிப்பிடுகிறது.

FPÖ பலமடைவதற்கான பழியைத் தொழிலாளர்கள் மீது சுமத்துகிறவர்களுக்கும் மற்றும் ஊழல் அரசாங்க கட்சிகள், பசுமை கட்சி மற்றும் தொழிற்சங்கங்களுடன் சேர்ந்து FPÖ க்கு எதிராக ஒரு "ஜனநாயகவாதிகளின் கூட்டணிக்கு" அழைப்பு விடுபவர்களுக்கும் அங்கே பஞ்சமில்லை. கம்யூனிஸ்ட் கட்சியானது வொன் டெர் பெல்லனுக்கு வாக்களிக்குமாறு அழைப்புவிடுக்கிறது, அதேவேளையில் சர்வதேச தொழிலாளர் குழுவின் (Committee for a Workers’ International -CWI) ஆஸ்திரிய பிரிவு, Sozialistische Linkspartei ஹோபருக்கு எதிராக ஒன்றுசேர்ந்து பிரச்சாரம் செய்ய "SPÖ மற்றும் தொழிற்சங்கங்களின் இடது சாரிக்கு" அழைப்பு விடுக்கிறது.

யதார்த்தத்தில் நிச்சயமாக இது FPÖ இன் வளர்ச்சியை இன்னும் மேற்கொண்டு அதிகரிக்கவே வழி வகுக்கிறது.

தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தால் மட்டுமே தீவிர வலதின் உயர்வைத் தடுக்க முடியும். அத்தகையவொரு இயக்கமானது, சகல முதலாளித்துவ கட்சிகள் மற்றும் அரசாங்கத்தினது சமூக செலவு குறைப்பு, வெளிநாட்டவர் விரோத கொள்கைகள், அரச ஒடுக்குமுறையைக் கட்டமைக்கும் கொள்கைகளுக்கும் மற்றும் இராணுவவாத கொள்கைகளுக்கும் எதிரான ஒரு சளைக்காத போராட்டத்தை நடத்தும். அத்தகையவொரு இயக்கம் வலதுசாரி வாய்சவுடால்களின் அடித்தளத்தை அகற்றி, FPÖ க்குத் தற்போது வாக்களிக்கும் வறிய மத்தியத் தட்டு வர்க்கத்தின் பிரிவுகளை அதன் தரப்பில் வென்றெடுக்கும்.

ஆஸ்திரியாவில் நடக்கும் இதே போன்ற அபிவிருத்திகள் தான், எண்ணற்ற ஐரோப்பிய நாடுகளிலும் நடக்கின்றன. பிரான்சில், ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் மற்றும் அவரது சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தின் வலதுசாரி கொள்கைகளின் காரணமாக வலதுசாரி தீவிரவாத தேசிய முன்னணியின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. இக்கட்சியை தொழிற்சங்கங்களும் மற்றும் பல்வேறு போலி-இடது குழுக்களும் ஆதரிக்கின்றன. ஜேர்மனியில், SPD மற்றும் இடது கட்சி பின்பற்றும் வலதுசாரி திட்டங்களில் இருந்து ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) ஆதாயமடைந்து வருகிறது. கிரீஸில், சிரிசாவின் காட்டிக்கொடுப்பு பாசிசவாத கோல்டன் டௌன் இன் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

இத்தகைய வலதுசாரி கட்சிகள், FPÖ இன் தேர்தல் வெற்றியைக் குறித்து உற்சாகமடைகின்றன. தேசிய முன்னணி தலைவர் மரீன் லு பென் அதை எல்லா நாடுகளிலும் உள்ள "தேசப்பற்றுமிகு இயக்கங்களுக்கான ஒரு பலமான தூண்டுதல்" என்பதாக வர்ணித்தார். டச் வலதுசாரி வெகுஜனவாதி கீர்ட் வெல்டர்ஸ் "அருமை" என்று ட்வீட்டரில் குறிப்பிட்டார். AfD செயற்குழு அங்கத்தவர் André Poggenburg கூறுகையில், “இதனால், ஆஸ்திரேலியாவில் உள்ள எங்களின் அரசியல் கூட்டாளிகள் இன்னுமொரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளனர்,” என்று குறிப்பிட்டார்.

ஜேர்மனியில் இடது கட்சி, அது பதவியிலிருக்கும் பல மாநிலங்களில் அதுவே சமூக வெட்டுகளுக்குப் பொறுப்பாக உள்ள நிலையில், தொழிற்சங்கங்கள், தேவாலயங்கள் மற்றும் சமூக ஜனநாயக கட்சி, அத்துடன் பசுமை கட்சியினர் மற்றும் பழமைவாத CDU/CSU ஆகியவற்றை ஒருங்கிணைத்து, AfD விரோத கூட்டணி ஒன்றுக்காக அழைப்புவிடுக்கிறது. அத்தகையவொரு கூட்டணி தீவிர வலதிற்கு எதிரான எதிர்ப்பை ஓர் அரசியல் முட்டுச்சந்துக்குள் இட்டுச் செல்லும் வேலையைச் செய்யும்.

சகல முதலாளித்துவ கட்சிகளைப் போலவே, இடது கட்சியும் AfD ஐ விட முதலாளித்துவ அஸ்திவாரங்களையே அச்சுறுத்துகிற தொழிலாள வர்க்கத்தின் ஓர் இயக்கத்தைக் குறித்தே அதிகமாக அஞ்சுகிறது. ஆஸ்திரிய SPÖ ஏற்கனவே FPÖ உடன் இணைந்து இயங்கி கொண்டிருப்பதைப் போல, அவசியமானால், இடது கட்சி AfD உடன் இணைந்து இயங்கும்.

மில்லியன் கணக்கான மக்களின் கோபமும் எதிர்ப்பும் ஒரு புதிய மூலோபாயத்தைக் கோருகிறது. தீவிர வலதுக்கு எதிரான போராட்டம், சமூக வெட்டுக்கள் மற்றும் போர் ஆகியவை முதலாளித்துவ-எதிர்ப்பு மற்றும் சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதைக் கோருகின்றன. ஆளும் வர்க்கத்தை முன்பினும் அதிகமாக வலதுக்கு உந்துகிற இதே பூகோள முதலாளித்துவ நெருக்கடி, இத்தகைய ஒரு இயக்கத்தைக் கட்டமைப்பதற்கான நிலைமைகளையும் உருவாக்கி உள்ளது.

இந்த இலட்சியத்திற்காகவே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) மே 1 அன்று அமெரிக்க கிழக்கத்திய நேரப்படி இரவு 1.00 மணிக்கு அதன் சர்வதேச இணையவழி கூட்டத்தை அர்பணித்துள்ளது. இதன் மையக்கரு போருக்கு எதிரான போராட்டமாகும். இந்த சர்வதேச மே தினக் கூட்டத்தில் பங்கெடுக்க இன்றே பதிவு செய்யுமாறு உலக சோசலிச வலைத் தள வாசகர்கள் அனைவருக்கும் நாம் அழைப்புவிடுக்கிறோம்!