ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Behind the designation of Russia and China as “imperiapst”: A case study in theoretical charlatanry

ரஷ்யா மற்றும் சீனாவை "ஏகாதிபத்தியமாக" காட்டப்படுவதன் பின்னணி: தத்துவார்த்த போலித்தனத்தை குறித்த ஓர் ஆய்வு

By Johannes Stern
14 April 2016

பெப்ரவரி 18 இல் பிரசுரிக்கப்பட்ட "சோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும்" என்ற அறிக்கையில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI), ரஷ்யா மற்றும் சீனாவை போலி-இடது அமைப்புகள் ஏன் ஏகாதிபத்திய சக்திகளாக வரையறுக்க விரைகின்றன என்பதில் கணிசமாக கவனம் செலுத்தி இருந்தது. [1]

ரஷ்யாவும் சீனாவும், அதிகாரத்துவரீதியாக சீரழிந்த மற்றும் உருக்குலைந்த தொழிலாளர்’ அரசுகளாக இருந்ததில் இருந்து, வெறும் 25 ஆண்டுகால இடைவெளியில், ஏகாதிபத்திய சக்திகளாக ஆனதைக் காட்டுகின்ற வரலாற்று நிகழ்போக்கை விளக்குவதற்கு மேலோட்டமாக கூட எந்த முயற்சியும் இல்லாமல், அந்த அமைப்புகளின் இந்த வரையறையானது அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது.

பெய்ஜிங் மற்றும் மாஸ்கோவில் இருக்கும் ஆட்சிகளுக்கு வெறுமனே அரசியல் எதிர்ப்பைக் காட்டுவதுதான் விடயம் என்றால், அதற்கு “ஏகாதிபத்தியம்” என்ற இகழ்ச்சி வார்த்தையை பிரயோகிக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. உலக சோசலிசப் புரட்சியின் ஓர் இன்றியமையா பாகமாக, ரஷ்யாவிலும் சீனாவிலும் உள்ள முதலாளித்துவ அரசுகளைத் தொழிலாள வர்க்கம் தூக்கியெறிவதற்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அழைப்பு விடுக்கிறது. …

சீனாவையும் ரஷ்யாவையும் விவரிக்க “ஏகாதிபத்திய” அடைமொழியை சேர்ப்பது, என்ன அரசியல் நோக்கத்திற்கு சேவை செய்கிறது? என்று கேட்கப்பட்டாக வேண்டும். நடைமுறை அரசியல் அர்த்தத்தில், அது திட்டவட்டமான செயல்பாடுகளுக்கு சேவை செய்கிறது.

முதலாவதாய், அது அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய ஏகாதிபத்தியத்தினது உலகளாவிய எதிர்ப்புரட்சிகர மத்திய பாத்திரத்தைத் தீர்மானகரமாக குறைத்துக் காட்டுவதுடன், அவ்விதத்தில் சுருக்குகிறது. இது, ரஷ்யா ஆதரிக்கும் சிரியாவின் அசாத் ஆட்சிக்கு எதிராக நடத்தப்படுவதைப் போன்ற அமெரிக்காவினது ஆட்சி-மாற்ற நடவடிக்கைகளுடன் போலி-இடதுகள் செயலூக்கத்துடன் ஒத்துழைத்து வேலை செய்வதற்கு அனுகூலமாக உள்ளது. இரண்டாவதும், இன்னும் கூடுதல் முக்கியமானதும் என்னவென்றால், சீனா மற்றும் ரஷ்யாவை ஏகாதிபத்தியமாக காட்டுவது. இது அவ்விதத்தில், இனரீதியான, தேசியரீதியான, மொழிரீதியான மற்றும் மதரீதியான சிறுபான்மையினரை ஒடுக்குகின்ற காலனித்துவ சக்திகளாக அவற்றை மறைமுகமாக கூறுவதும், தற்போதுள்ள நாடுகளின் எல்லைகளுக்குள்ளாக ஏகாதிபத்திய ஆதரவிலான “தேசிய விடுதலை” எழுச்சிகளுக்கும் மற்றும் “வண்ணப் புரட்சிகளுக்கும்" போலி-இடதுகளின் ஆதரவை உறுதிப்படுத்துகிறது.

இந்த மதிப்பீடு, ஐந்தாம் அகிலத்தின் கூட்டமைப்பில் (League for the Fifth International - pFI) இருந்து உடைந்து வந்த ஒரு அமைப்பான சர்வதேச புரட்சி கம்யூனிஸ்ட் குழுவினது (Revolutionary Communist International Tendency - RCIT) அரசியலால் உறுதிப்படுத்தப்படுகிறது. 1970களில் சர்வதேச சோசலிச குழுவின் (International Sociapst Tendency – IST) உடைவிலிருந்து உருவான RCIT மற்றும் pFI இரண்டுமே, ட்ரொட்ஸ்கிச-விரோதத்திற்கு ஒரு நீண்ட வரலாறை கொண்டவையாகும். வலதுசாரி முதலாளித்துவ சக்திகளுக்கு அவற்றின் நடைமுறைரீதியிலான ஆதரவை மறைக்கும் தீவிர வாய்சவடால் தான், அவற்றின் குட்டி-முதலாளித்துவ பிரதிநிதிகளிது குணாம்சமாகும்.

RCIT மற்றும் அதன் பிரிவுகள் இந்த வகையிலான அரசியலை ஒரு உச்சமட்டத்திற்கு எடுத்துச் செல்கின்றன. அதன் சர்வதேச செயலாளரும் முன்னணி தத்துவார்த்தவாதியுமான மிக்கெல் ப்ரோப்ஸ்டிங் (Michael Pröbsting) எழுதப்பட்ட ஆவணங்கள் மார்க்ஸ், லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியை மேற்கோள் காட்டியிருந்த போதினும், தீவிரவாத வாய்சவடால்களால் நிரம்பி இருந்தன. அவை ஏகாதிபத்திய சக்திகளது வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சகங்கள் மற்றும் சிந்தனை குழாம்களில் எழுதப்படும் மூலோபாய ஆவணங்களுக்கு ஒத்திருக்கின்றன.

“ஒரு மிகப்பெரும் ஏகாதிபத்திய சக்தியாக ரஷ்யா" என்ற ப்ரோப்ஸ்டிங் எழுதிய ஒரு சிறுவெளியீடு, உக்ரேனில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் முடுக்கிவிட்ட வலதுசாரி ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு ஒருசில வாரங்களுக்குப் பின்னர் ஜேர்மனியில் வெளியிடப்பட்டது. அந்த ஆவணத்தின் ஆரம்ப வரிகளில், ப்ரோப்ஸ்டிங் ரஷ்யா மற்றும் சீனாவை ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பாளர்களாகவும், அவ்விதத்தில் அவற்றிற்கு எதிரான சண்டை சர்வதேச அரசியலின் மைய பிரச்சினையாகி இருப்பதாகவும் அறிவிக்கிறார்.

அவர் எழுதுகிறார்:

உக்ரேனிய அரசியல் நெருக்கடியும் மற்றும் சிரியா உள்நாட்டு போரும் சமீபத்தில் மீண்டுமொருமுறை ரஷ்யாவின் முக்கியத்துவத்தை ஒரு ஏகாதிபத்திய சக்தியாக காட்டியுள்ளது. உண்மையில் மிகப்பெரும் ஏகாதிபத்திய சக்திகளாக ரஷ்யா மற்றும் சீனாவின் எழுச்சி சமீபத்திய தசாப்தத்தில் மிக முக்கிய உலக அரசியல் அபிவிருத்திகளில் ஒன்றாகும். இது கணிசமானளவிற்கு ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போட்டித்தன்மையை அதிகரித்துள்ளதுடன், அதுமுதற்கொண்டு பல்வேறு பிராந்திய மோதல்கள் மற்றும் உள்நாட்டு போர்களை தீவிரப்படுத்துவதற்கான பின்னணியை உருவாக்குகிறது. நாம் முக்கியமாக 2008 ஜோர்ஜிய போர், சீனா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே கிழக்கு சீனக் கடல் மோதல், சிரியாவில் உள்நாட்டு போர் மற்றும் இப்போது உக்ரேனிய சம்பவங்களைச் சுட்டிக்காட்டுகிறோம். [2]

ப்ரோப்ஸ்டிங் கருத்துப்படி, அவ்விதத்தில் சமீபத்திய ஆண்டுகளின் ஆக்ரோஷத்திற்கும் மற்றும் வல்லரசுகளுக்கு இடையே அதிகரித்துவரும் போர் அபாயத்திற்கும் பின்னால் உந்துசக்தியாக இருப்பது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியம் இல்லை, மாறாக பிரதான பொறுப்பு "ஏகாதிபத்திய காலனி சக்திகளான" ரஷ்யா மற்றும் சீனா மீது விழுகிறது. ப்ரோப்ஸ்டிங் பின்வருமாறு அறிவிக்கிறார்:

ரஷ்யா (மற்றும் சீனாவின்) ஏகாதிபத்திய தன்மையை புறக்கணிப்பது முக்கிய தவறாகும், இது தவிர்க்கவியலாமல் பிரதான உலக அரசியல் சம்பவங்களை மதிப்பிடுவதில் குழப்பங்களுக்கு இட்டுச் செல்வதுடன், வர்க்க போராட்டத்தின் தடுப்பரண்களை தவறான தரப்பிற்கு கூட இட்டுச்செல்லுமென நாங்கள் நினைக்கிறோம்.[3]

நாம் காண்பதைப் போல, ப்ரோப்ஸ்டிங் முன்னெடுக்கும் நிலைப்பாடுகள் அவரை தான் "தடுப்பரண்களின் தவறான தரப்பில்" இயங்கும் சக்திகளுடனான கூட்டணிகளை வெளிப்படையாக நியாயப்படுத்துவதற்கு இட்டுச் செல்கிறது.

“பேரரசின் மீள்கட்டமைப்பு: ரஷ்ய ஏகாதிபத்திய பிடியை விரிவாக்க புட்டினின் முயற்சி" என்று தலைப்பிட்ட அந்த ஆவணத்தின் மூன்றாம் பகுதியில், ப்ரோப்ஸ்டிங் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

ரஷ்யா உள்நாட்டிலும் சரி அதன் நாட்டிற்கு வெளியிலும் சரி ஏனைய நாடுகளை ஒடுக்குகிறது மற்றும் சுரண்டுகிறது. ரஷ்ய மக்களில் அண்மித்து ஐந்தில் ஒரு பங்கினர், 19.1% பேர், இனரீதியில் மற்றும் தேசியரீதியில் சிறுபான்மையினர். மிகவும் முக்கியமானவர்களில் இருப்பவர்கள், டடாரியர்கள் (Tatars) (3.9%), உக்ரேனியர்கள் (1.2%), பஷ்கிர்யர்கள் (1.1%), சுவாஷியர்கள் (1.1%), செச்செனியர்கள் (1%), ஆர்மினியர்கள் (0.9%) மற்றும் சிறிய எண்ணிக்கையில் இருக்கும் ஏனையவர்கள். மொத்தத்தில் கூறுவதானால், அங்கே ரஷ்யாவில் 185 க்கும் அதிகமான இனக் குழுக்கள் உள்ளன.[4]

ரஷ்யாவிலிருந்து தேசிய மற்றும் இன பிரிவினை வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த RCIT ஆயுதமேந்திய போராட்டத்தை அங்கீகரிக்கிறது. ப்ரோப்ஸ்டிங் அறிவிக்கிறார்:

செச்செனிய போர்களில் மற்றும் அதுபோன்ற எல்லா மோதல்களிலும் RCIT இன் நிலைப்பாடு என்னவென்றால், ஒடுக்கப்படும் தேசியங்களது தேசிய சுய-நிர்ணய உரிமையை நிபந்தனையின்றி பாதுகாப்பதாகும். ஒரு தேசியக் குழு அல்லது இனக்குழு பிரிந்து அதன் சொந்த அரசை உருவாக்க விரும்பினால், சோசலிசவாதிகள் இந்த விருப்பத்தை ஆதரிக்க வேண்டும் மற்றும் ஒடுக்கும் அரசின் அனைத்துவித ஒடுக்குமுறைக்கு எதிராகவும் அவர்களைப் பாதுகாக்க வேண்டும்.[5]

இந்த வேலைத்திட்டத்திற்கு பலம் கூட்ட, ப்ரோப்ஸ்டிங் இன் ஆவணம் "ரஷ்யாவின் இன மற்றும் தேசிய சிறுபான்மையினரின்,” “ரஷ்யாவின் சுயாட்சி பகுதிகளின்,” மற்றும் "ரஷ்யாவின் இயற்கை ஆதாரவளங்களின்" வரைபடத்தை உள்ளடக்குகிறது. பிந்தையதைக் குறித்து அவர் எழுதுகையில்:

பின்வரும் புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டுவதைப் போல, ரஷ்யாவின் மூலப்பொருட்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு மிகவும் முக்கியமானவை என்றாலும், எந்த விதத்திலும் அவை மட்டுமே முக்கியமானவை அல்ல என்பதுடன், அவை ஒரு கணிசமானளவிற்கு தேசிய சிறுபான்மையினர் வாழும் பிராந்தியங்களில் அமைந்துள்ளன.[6]

ரஷ்யாவின் மற்றும் அத்துடன் சீனாவின் மதிப்பார்ந்த இயற்கை ஆதாரவளங்களைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள பகுதிகளை, மிக இலகுவாக விழுங்கக்கூடிய சிறுதுண்டுகளாக, அந்நாடுகளைச் துண்டாடும் முன்னோக்கு, நீண்ட காலமாகவே முன்னணி ஏகாதிபத்திய புவிசார்-மூலோபாதிகளால் விவாதிக்கப்பட்டு வந்துள்ளது.

Foreign Affairs இதழின் சமீபத்திய பதிப்பில் ஒரு சான்றைக் காணலாம், அதில் ஈராக் படையெடுப்புக்குப் பின்னால் இருந்த முன்னணி அமெரிக்க மூலோபாயவாதிகள் மற்றும் திட்டமிடுபவர்களில் ஒருவரான ரோபர்ட் டி. கப்லன், “யுரேஷியாவில் அராஜகவாதம் வருகிறது" என்று தலைப்பிட்ட ஒரு கட்டுரையில், ரஷ்யா மற்றும் சீனாவின் பொருளாதார நெருக்கடி ஆழமடையும் உள்நாட்டு பதட்டங்களை தூண்டிவிடும். அதன் விளைவாக பல்வேறு இன, மத மற்றும் மொழிவாரி சிறுபான்மையினரிடம் இருந்து தேசிய சுயாட்சிக்கான கோரிக்கைகள் தீவிரமடையும் என்று அனுமானிக்கிறார். [7]

கப்லன் கருத்துப்படி, ரஷ்யா "கொந்தளிப்புக்குள்" மூழ்கும் மற்றும் "அதற்குப் பின்னர் துண்டாடப்படலாம்.” அவர் "அதிகளவில் முஸ்லீம் உள்ள வடக்கு காகசஸ், அத்துடன் ரஷ்யாவின் சைபீரிய பகுதிகள் மற்றும் தொலைதூர கிழக்கு மாவட்டங்கள், மத்திய பகுதிலிருந்து தூரத்தில் இருப்பவை மற்றும் இரத்தம்சிந்தும் அரசியலால் சுமையேறி இருப்பவை" ஆகியவற்றைக் குறிப்பிடுகிறார், இவை "கிரெம்ளினுக்கு உள்ளேயே கூட ஏற்படும் ஸ்திரமற்ற தன்மையால் மாஸ்கோவுடனான அவற்றின் உறவுகளை இழக்கத் தொடங்கலாம்" என்கிறார்.

கப்லன் சீனாவைச் சுட்டிக்காட்டி, "இந்த பரந்த நாட்டில் அதிகரித்துவரும் இனரீதியிலான பதட்டங்களை" எச்சரிக்கிறார். “மங்கோலியர்கள், திபெத்தியர்கள் மற்றும் உகூர்கள், பல்வேறு விதத்தில் மத்திய கட்டுப்பாட்டை எதிர்ப்பவர்கள் அனைவருக்கும், ஹன்-மேலாதிக்கம் உள்ள சீன மாநிலம் ஓரளவிற்கு ஒரு சிறைச்சாலையாகும்,” என்பதையும் அவர் சேர்த்துக் கொள்கிறார். “இன்று, உகூர் போராளிகள் குழுக்கள் மிகவும் உடனடியாக பிரிவினைவாத அச்சுறுத்தலைப் முன்வைக்கின்றனர்" என்றவர் முடிக்கிறார்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் கூட்டாளிகள், ரஷ்யா மற்றும் சீனாவின் பிரிவினைவாத இயக்கங்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்கும் நோக்கில், சிரியாவின் இஸ்லாமிய சக்திகளுடனான கூட்டுறவுடன் பலமாக அழுத்தமளிப்பதற்குத் தீர்மானகரமாக இருப்பதற்கான அறிகுறிகள் உள்ளன. கடந்த டிசம்பரில் London Review of Books இல் வெளியான ஒரு கட்டுரையில், நன்கு-தொடர்புபட்ட அமெரிக்க இதழாளர் செமோர் ஹெர்ஸ், துருக்கி "உகூர்களைச் சிறப்பு போக்குவரத்தினூடாக சிரியாவிற்கு கொண்டு வரும், அதேவேளையில் ரெசெப் தயிப் எர்டோகன் சீனாவில் அவர்களது போராட்டங்களுக்கு சாதகமாக தூண்டிவிடுவார்" என்று வாஷிங்டனில் இருந்து ஒரு அதிகாரி குறிப்பிட்டதை மேற்கோளிட்டார். 800 க்கும் அதிகமான உகூர் போராளிகள் "இரகசிய பதுங்கு வழிகள்" (rat pne) என்றழைக்கப்படும் வழியினூடாக சிரியாவிற்குக் அழைத்து வரப்படுவார்கள் என்பதையும் ஹெர்ஸ் மேற்கோளிட்ட அந்த அமெரிக்க அதிகாரி தெரிவித்திருந்தார்.[8]

வரலாற்றுரீதியில் இக்கொள்கையின் பிற்போக்குத்தனமான உள்நோக்கங்கள் முக்கியமாக சீனா விடயத்தில் நன்கு எடுத்துக்காட்டப்படுகின்றன. 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சீனாவில் அபிவிருத்தியான தேசிய இயக்கம், ஏகாதிபத்திய சக்திகளின் சூறையாடுவதற்காக "கதவைத் திறந்து விடும்" (Open Door) வேலைத்திட்ட அபிலாஷைகளுடன், ஆதரவளிக்கப்பட்ட நிலப்பிரபுத்துவ பிரிவினைகளை கடந்து வருவதற்காக பல்வேறு மொழிரீதியிலான இனரீதியிலான குழுக்களை ஐக்கியப்படுத்த புறநிலைரீதியான வரலாற்று முற்போக்குக் கடமையை எதிர்கொண்டிருந்தது. இருந்தாலும் அது முதலாளித்துவ வர்க்க தலைமையின் கீழ் தீர்க்கப்படமுடியாது. ரஷ்யா மற்றும் சீனாவை துண்டாட தேசியவாத மற்றும் இனவாதத்தை மையமாக கொண்ட இயக்கங்களை ப்ரோப்ஸ்டிங் மற்றும் RCIT ஊக்குவிப்பதால், ப்ரோப்ஸ்டிங் பொய்யாக வலியுறுத்துகின்ற, லெனின் மற்றும் மார்க்சிச இயக்கத்தின் சர்வதேச சோசலிச பாரம்பரியத்தில் அவர்கள் நிற்கவில்லை, மாறாக ஏகாதிபத்திய பாரம்பரியத்தில் நிற்கின்றனர்.

ஒரு நூற்றாண்டுக்கும் அதிகமான காலத்திற்கு முன்னர்—அதாவது உலகளாவிய முதலாளித்துவ அபிவிருத்தி ஒப்பிடக்கூட முடியாத குறைந்த மட்டத்தில் இருந்த போது எழுதிய “தேசிய பிரச்சினை” மீதான லெனினின் எழுத்துக்களை, குட்டி-முதலாளித்துவ போலி-இடது பிற்போக்குவாதிகள் ஏகாதிபத்திய ஆதரவிலான பிரிவினைவாத இயக்கங்களுக்கான அவற்றின் ஆதரவை நியாயப்படுத்துவற்காக அவ்வபோது கையிலெடுத்து கொள்கின்றனர். தேசிய பிரச்சினை குறித்த லெனினின் அணுகுமுறை எப்போதுமே "விமர்சனபூர்வமாக" இருந்தது என்பதை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்கள் கைவிடுகிறார்கள். 1913 இல் எழுதுகையில், அப்போது ஆபிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவின் மிகப் பெரும் பாகங்கள் பிரபுத்துவம் மற்றும் ஏகாதிபத்திய-காலனித்துவ மேலாதிக்க எச்சசொச்சங்களுக்கு எதிரான ஜனநாயக போராட்டத்தின் ஆரம்ப கட்டங்களில் மட்டுமே இருந்த நிலையில், லெனின் தேசிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தின் நியாயபூர்வமான தன்மையை ஏற்றுக் கொண்டிருந்தார். ஆனாலும் அவர் சுய-நிர்ணயத்திற்கு ஆதரவளிப்பதற்கு கடுமையான நிபந்தனைகளை வைத்தார். சுய-நிர்ணய கோரிக்கையை அங்கீகரிக்கும் பணியானது பெரிதும் எதிர்மறையானது. ஆனால் பாட்டாளி வர்க்கம் தேசியவாதத்தை ஆதரிப்பதில் இந்த மட்டத்திற்குதான் செல்ல முடியும், அதைக் கடந்தால் அது தேசியவாதத்தை பலப்படுத்துவதற்கான முதலாளித்துவ வர்க்க வேட்கைக்கு "நேர்மறையான" நடவடிக்கையாக ஆகத் தொடங்கும்... ஆகவே முதலாளித்துவ தேசியவாதத்திற்கு உதவுவதில் இத்தகைய கடுமையான வரம்பை மற்றும் தீர்க்கமான வரலாற்று வரம்புகளைக் கடந்து செல்வதென்பது பாட்டாளி வர்க்கத்தைக் காட்டிக்கொடுப்பதை மற்றும் முதலாளித்துவத்துடன் அணி சேர்வதை அர்த்தப்படுத்துகிறது. இங்கே ஒரு எல்லைக்கோடு உண்டு. அது பெரும்பாலும் மிகவும் மெல்லியதாய் இருக்கும், மேலும் பண்டிதர்களும் மற்றும் உக்ரேனிய தேசியவாத-சோசலிஸ்டுகளும் முழுமையாக அதைக் கவனிப்பதில்லை.[9]

1913 இல் கூட, லெனின் தேசிய பிரிவினைவாத பதாகையின் கீழ் எண்ணற்ற சிறிய சிறிய அரசுகளை உருவாக்குவதை ஆதரிக்கவில்லை. அவர் "வர்க்க நனவுபூர்வமான பாட்டாளி வர்க்கம் எப்போதுமே மிகப் பெரிய அரசுக்காக நிலைநிற்கும்" என்று வாதிட்டு, மத்தியமயமாக்கலின் பொருளாதார முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். [10] இது முதலாளித்துவ பூகோளமயமாக்கலின் மிக மிக குறைந்த அபிவிருத்தி மட்டத்தில், அக்டோபர் புரட்சிக்கு முன்னதாக, தேசிய மற்றும் இன பிரிவினை ஊக்குவிப்பானது தொழிலாள வர்க்கத்தின் வர்க்க நனவுபூர்வமாக பிரிவுகளது சோசலிச மற்றும் சர்வதேச அபிலாஷைகளுக்கு எதிராக முதலாளித்துவ-ஏகாதிபத்திய போரின் மிக முக்கிய ஆயுதமாக மாறுவதற்கு முன்னதாக, 103 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டது.

வரலாற்று அறியாமை மற்றும் தத்துவார்த்த போலித்தனத்தை ஒன்றுகலந்து, ப்ரோப்ஸ்டிங், தேசிய சுய-நிர்ணய சுலோகத்தை பிரயோகித்து தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்காக, தேசிய மற்றும் இனப் பிரிவினை இயக்கங்கள் அனைத்தையும், அதுவும் அவற்றிற்கு ஏகாதிபத்தியம் நிதியுதவி வழங்கி கட்டமைத்து வந்தாலும், அவற்றை "நிபந்தனையின்றி" ஆதரிக்கிறார். “ஆயுதமேந்திய வடிவம் உட்பட—சுதந்திர போராட்டத்தை நிபந்தனையின்றி ஆதரிக்க!" RCIT வெளிப்படையாக அழைப்புவிடுக்கிறது. இது "சான்றாக ஒரு சோசலிச தமிழீழம், ஓர் ஐக்கிய அயர்லாந்து, ஓர் ஐக்கிய காஷ்மீர், ஒரு சுதந்திர குர்திஷ்தான், செசென்யா, திபெத், இன்னும் ஏனையவற்றிற்கும்" பொருந்தும். RCIT இந்த பிரிவினைவாத வேலைத்திட்டத்தை "சீனாவில் உகூர், துருக்கி, ஈராக், ஈரான் மற்றும் சிரியாவில் குர்திஷ்யர்கள், ரஷ்யாவில் செசெனியர்கள் மற்றும் ஏனைய காகசஸ் மக்களுக்கும்" விரிவுபடுத்துகிறது.”[11]

ப்ரோப்ஸ்டிங் மற்றும் RCIT உம் கடந்த பல தசாப்தங்களின் வரலாற்று அனுபவங்கள் மற்றும் அரசியல் படிப்பினைகளை பெறுவதற்குக் கூட முயலாமல், பிரச்சினைகளை பெரிதும் திசைதிருப்புவதில் வேறுபட்ட கேள்விகளை ஒன்றாக கலக்கின்றனர். இத்தகைய சிக்கலான நிகழ்வுபோக்குகளை ஒரு விரிவான ஆய்வுக்கு உட்படுத்துவது இக்கட்டுரையின் பணியல்ல, ஆனால் RCIT அரசியலின் பிற்போக்குத்தனமான குணாம்சத்தை இரண்டு எடுத்துக்காட்டுகளை கூறி, குறைந்தபட்சம் சுட்டிக்காட்டுவது அவசியமாகும்.

இலங்கையில் முப்பதுக்கும் அதிகமான ஆண்டுகளாக நடந்துவந்த உள்நாட்டு போரானது, தமிழ் பிரிவினைவாதம் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு முட்டுச்சந்து என்பதையும், இலங்கை முழுவதிலும் சோசலிசத்திற்கான ஒரு போராட்டத்தில் சிங்கள மற்றும் முஸ்லீம் தொழிலாளர்களுடன் அணிசேர்ந்து மட்டுந்தான் ஒரு "சோசலிச தமிழீழம்" அடையப்பட முடியும் என்பதையும் எடுத்துகாட்டியுள்ளது. இது காஷ்மீருக்கும் பொருந்தும். ஒரு சோசலிச முன்னோக்கு இல்லாமல் மற்றும் 1947 இல் மதரீதியில் இந்தியாவில் திணிக்கப்பட்ட பிரிவினைக்கு எதிராக ஒட்டுமொத்த இந்திய துணைக்கண்டத்தின் பெருந்திரளான மக்களது ஒரு இணைந்த போராட்டம் இல்லாமல், ஒரு "சுதந்திர காஷ்மீருக்கான" கோரிக்கை என்பது ஆழமாக பிற்போக்குத்தனமானதாகும்.

ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் சோவியத் ஒன்றிய கலைப்புக்கு பின்னர், ஏகாதிபத்திய சக்திகள் திரும்ப திரும்ப மோதல்களை ஊக்குவித்துள்ளதுடன், அவற்றின் சொந்த புவிசார் மூலோபாய மற்றும் பொருளாதார நலன்களைப் பின்தொடர்வதற்காக தேசிய மற்றும் இன சிறுபான்மையினரை ஒருவருக்கு எதிராக ஒருவரை தூண்டிவிடுகின்றன. இதற்கான ஒரு இரத்தந்தோய்ந்த எடுத்துக்காட்டு தான், நூறாயிரக் கணக்கானவர்கள் பாதிக்கப்பட்ட மற்றும் மில்லியன் கணக்கானவர்களை அகதிகளாக்கிய, 1990 களின் வன்முறையான யூகோஸ்லாவியா பிரிவினை. சேர்பியர்கள், முஸ்லீம்கள் மற்றும் குரோஷியர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்வதற்கு அவர்களைத் தூண்டிவிட்டதில், பின்னர் இராணுவரீதியில் தலையீடு செய்ததில் ஜேர்மனி மற்றும் அமெரிக்கா முன்னணி பாத்திரம் வகித்தன. முதலாளித்துவ தேசியவாதம் எனும் நஞ்சைப் பரப்புவதில் பல போலி-இடது அமைப்புகள் ஏகாதிபத்திய சக்திகளுடன் மிக நெருக்கமாக கூடி இயங்கின. RCIT அது "1992-95 இல் பொஸ்னியர்களின் போராட்டத்தை" மற்றும் "1999 இல் கொசோவோ அல்பேனியர்களை" ஆதரித்ததை இன்று வரையில் தொடர்ந்து பெருமையடித்துக் கொள்கிறது. ஏகாதிபத்திய சக்திகளது தற்போதைய போர் கொள்கைகளின் உள்ளடக்கத்தில், RCIT உம் அதன் கரங்களில் இரத்தத்தைக் கொண்டுள்ளது மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) அதன் அறிக்கையில் விளங்கப்படுத்தியதைப் போல துல்லியமாக அதே பாத்திரம் வகித்துள்ளது.

சிரியாவில், “சிரிய புரட்சியைப் பாதுகாக்கும்" பெயரில் சிஐஏ-ஆதரவிலான ஆட்சி மாற்ற போருக்கு அவை பிரச்சாரம் செய்கின்றன.

“சிரிய புரட்சியின் ஐந்தாம் நினைவாண்டில்" என்ற மார்ச் 8 துண்டறிக்கையில், ஏனைய பல விடயங்களோடு, குறிப்பிடுகையில், “இன்று, ரஷ்ய குண்டுமழை மற்றும் ஆயிரக் கணக்கான ஈரானிய தலைமையிலான துருப்புகளின் உதவியுடன், அசாத் ஆட்சி சுதந்திர அலெப்போவை ஒழித்துக் கட்ட அச்சுறுத்துகிறது,” என்று குறிப்பிட்டது. [12] கடந்த டிசம்பரில் "அனைத்து புரட்சிகர அமைப்புகள் மற்றும் நடவடிக்கையாளர்களுக்கும் ஒரு பகிரங்க கடிதம்" என்பதில், அவர்கள் எழுதுகையில், “சிரியாவில் புரட்சிகர சுதந்திர போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது ஆனால் மிகப்பெரும் அச்சுறுத்தல்களை முகங்கொடுத்துள்ளது. பஷர் அல்-அசாத்தின் மரணகதியிலான சர்வாதிகாரம்—ரஷ்ய ஏகாதிபத்தியத்தின் அத்துடன் ஈரானின் முழு ஆதரவுடன்—அதன் சொந்த மக்களையே அழிக்கும் அதன் போரைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது,” என்று குறிப்பிட்டனர்.[13]

அதே நேரத்தில், ஏகாதிபத்திய சக்திகளால் மத்திய கிழக்கை துண்டாடுவதை மற்றும் மீள்காலனிமயப்படுத்துவதை எதிர்ப்பவர்களை, RCIT, “குறுங்குழுவாத ஏகாதிபத்திய-எதிர்ப்பாக" கண்டிக்கிறது.

ஒரு வேலைத்திட்ட கட்டுரையில் —"சுதந்திர போராட்டங்களும் ஏகாதிபத்திய தலையீடும். மேற்கில் 'ஏகாதிபத்திய-எதிர்ப்பு' குறுங்குழுவாதத்தின் தோல்வி: மார்க்சிச கண்ணோட்டத்திலிருந்து சில பொதுவான பரிந்துரைகள் மற்றும் 2011 இல் லிபியாவில் ஜனநாயக புரட்சியின் எடுத்துக்காட்டு" என்ற பாசாங்குத்தனமான தலைப்பைத் தாங்கியிருந்த ஒரு கட்டுரையில், ப்ரோப்ஸ்டிங் நேட்டோவின் 2011 லிபியா போரைத் தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சியாக மற்றும் ஒரு வெற்றியாக வரவேற்காத அனைவரையும் தாக்குகிறார்.

அவர் எழுதுகிறார்:

மறுபுறம், தொழிலாள வர்க்கத்திற்கும் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் லிபிய புரட்சி பகுதியாக வெற்றியில் முடிந்தது என்று நாம் வாதிடுகிறோம் ஏனென்றால் அது முதலாளித்துவ-பொனபார்ட்டிச கடாபி ஆட்சியைத் தோற்கடித்தது... மாலியில் அசாவத் குடியரசை (Azawad Repubpc) நிறுவிய துரெக் (Tuareg) மக்களின் தேசிய சுதந்திர போராட்டத்தின் வளர்ச்சியானது லிபிய புரட்சியின் மற்றொரு நேர்மறையான விளைவாகும்... மீண்டும், எங்களைப் பொறுத்த வரையில், இந்த லிபிய ஜனநாயக புரட்சியின் ஒரு பகுதி வெற்றி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சாதகமாகி உள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது. [14]

இந்த மதிப்பீடு எந்தளவுக்கு எரிச்சலூட்டுவதாக உள்ளதோ அதேயளவுக்கு அர்த்தமற்றதாகும். கடாபி ஆட்சி லிபிய தொழிலாளர்களின் ஒரு சுதந்திரமான அரசியல் இயக்கத்தால் "தூக்கியெறியப்படவில்லை" மாறாக விமானங்களிலிருந்து நேட்டோ குண்டுகளால் மற்றும் நிலத்தில் மேற்கால் ஆதரிக்கப்பட்ட இஸ்லாமிய பினாமி சக்திகளால் தூக்கியெறியப்பட்டது. இந்த "பகுதி வெற்றியின்" விளைவு தான் அது ஒரு சீரழிந்த சமூகமாக இருப்பது, பத்தாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர், நூறாயிரக் கணக்கானவர்கள் அகதிகளாக ஆக்கப்பட்டனர், ஏகாதிபத்திய சக்திகளது தலையீட்டின் புதுப்பிக்கப்பட்ட அச்சுறுத்தல் அங்கே நிலவுகிறது.

இதேமாதிரியான நிகழ்வுகள் மாலியிலும் எவ்வித முற்போக்கானதாக இல்லாது "அழிவுகரமாக" இருந்தது. அதுவொரு பேரழிவாகும். இயற்கை ஆதாரவளங்கள் செழித்த அந்நாடு நெருக்கடியில் வீசப்பட்டு லிபிய போரால் மற்றும் அதன் அண்டைநாட்டின் சீரழிவால் ஸ்திரமின்மைக்கு உள்ளானது. துரெக் போராளிகள் மற்றும் வடக்கில் இஸ்லாமியவாதிகளின் கிளர்ச்சி "சுதந்திரத்திற்கு" இட்டுச் செல்லவில்லை, மாறாக உள்நாட்டுப் போர் போன்ற நிலைமைகளுக்கு, பமாகோவில் (Bamako) ஓர் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு, அதன் முன்னாள் காலனி சக்தியான பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா உட்பட அதன் ஏகாதிபத்திய கூட்டாளிகளது இராணுவத் தலையீட்டிற்கு இட்டுச் சென்றது.

பெரும்பாலான போலி-இடது போக்குகள் RCIT ஐ போல அதேபோன்ற நிலைப்பாடுகளை ஏற்று அவை அரசியல்ரீதியில் பிற்போக்குத்தனமான சக்திகளைத் தழுவியிருப்பதை மறைக்க முயல்கின்ற அதேவேளையில், RCIT ஒரு மூலோபாய நிர்பந்தமாக எதிர்-புரட்சிகர போக்குகளுடனான அதன் கூட்டுறவை நியாயப்படுத்துகிறது.

அதன் "புரட்சிகர கம்யூனிஸ்ட் அறிக்கையில்", RCIT பின்வருமாறு பிரகடனப்படுத்துகிறது:

இத்தகைய ஒரு புதிய தேசிய கட்சி அல்லது ஐந்தாம் அகிலம், தற்போதைய நிலைமைகளின் கீழ் ஒரு முரண்பாடான வர்க்க குணாம்சத்தைக் கொண்டிருக்கலாம், ஏனென்றால் அது புரட்சியாளர்களை மட்டும் உள்ளடக்கி இல்லை, மாறாக சீர்திருத்தவாத மற்றும் மத்தியவாத சக்திகளையும் உள்ளடக்கி உள்ளது என்பதை நிச்சயமாக நாங்கள் அறிவோம். இதுவொரு அகிலமாக இருக்கும், இதன் தலைவர்கள் தொடர்ச்சியான பல வர்க்க போராட்டங்களில் தோல்வியடையலாம் அல்லது தொழிலாளர்களுக்கு எதிரான ஏனைய தடுப்பரண்களின் தரப்பில் கூட நிற்கலாம். [15]

இந்த விசித்திரமான சூத்திரம் RCIT இன் நடைமுறையில் வேரூன்றியுள்ளது. RCIT கிளைகளைக் கொண்டிருந்தாலும் சரி அரசியல்ரீதியில் செயல்பாட்டில் இருந்தாலும் சரி, அது முதலாளித்துவ சக்திகளை ஆதரிக்கிறது மற்றும் உண்மையில் அது "தடுப்பரண்களின் மற்ற தரப்பில்" நிற்கிறது. கடந்த முறை 2013 ஆஸ்திரியா தேசிய தேர்தல்களின் போது, RKO விடுதலை இயக்கம் (RKOB) சோசலிச ஜனநாயகவாதிகளுக்கு (SPÖ) வாக்களிக்க அழைப்புவிடுத்தது. இந்த SPÖ தற்போது வியன்னாவில் மத்தியரசு மட்டத்தில் பழமைவாத ஆஸ்திரிய மக்கள் கட்சி (ÖVP) உடனான ஒரு கூட்டணியிலும், மற்றும் பர்கன்லாந்து மாநிலத்தில் தீவிர வலது, வெளிநாட்டவர் விரோத ஆஸ்திரிய சுதந்திர கட்சி (FPÖ) உடனான ஒரு கூட்டணியிலும் உள்ளது.

ஆபிரிக்கா மற்றும் ஆசியாவில், அவர்களது ஆதரவாளர்கள் அதிதீவிர வலதுசாரி தேசியவாத சக்திகளுடன் கூடி இயங்குகின்றனர். மேற்குறிப்பிட்ட "பகிரங்க கடிதத்தில்", RCIT, “சீர்திருத்தவாதிகள் மற்றும் வெகுஜனவாதிகளின் செல்வாக்கின் கீழ் உள்ளவர்களையும் உள்ளடக்கிய வெகுஜன அமைப்புகள் மற்றும் தொழிலாளர்களின் ஒரு பாரிய ஐக்கிய முன்னணியை" அறிவுறுத்துகிறது.

இந்த வலதுசாரி, முதலாளித்துவ மற்றும் ஏகாதிபத்திய-சார்பு நோக்குநிலை ஏனைய போலி-இடது போக்குகளிடமிருந்து ஆதரவைப் பெற்றுள்ளது. ப்ரோப்ஸ்டிங் பல்வேறு போலி-இடது விவாத நிகழ்வுகளில் சிறப்பு விருந்தினராகி பேசி வருகிறார், சான்றாக நான்காம் அகில மீள்ஸ்தாபிதத்திற்கான ஒருங்கிணைப்பு குழு (CRFI) ஏதென்சில் ஜூலை 2015 இல் ஏற்பாடு செய்திருந்த "மூன்றாவது யூரோ-மத்தியதரைக்கடல் மாநாட்டில்" கலந்து கொண்டிருந்தார். நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவிலிருந்தும் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கான எந்தவொரு சோசலிச முன்னோக்கிலிருந்தும் 1985 இல் உடைந்து சென்ற சவாஸ் மிச்சேல்-மட்சாஸ் தலைமையிலான கிரீஸின் தொழிலாளர்கள் புரட்சிகர கட்சி (EEK) மற்றும் ஆர்ஜென்டினிய தொழிலாளர்கள் கட்சி (PO) ஆகியவை CRFI இன் அங்கத்தவர்களில் உள்ளடங்குவர். [16]

அதன் மாநாட்டு அறிக்கையில், RCIT ரஷ்ய மற்றும் உக்ரேனிய பிரதிநிதிகளிடமிருந்து வந்த பங்களிப்புகளை விமர்சித்தது ஏனென்றால் அவர்கள் "பெரும்பாலும் ரஷ்ய ஏகாதிபத்தியத்திற்கு அவர்களின் எதிர்ப்பை மிதமாக வெளிப்படுத்தினார்கள்.” அங்கே CRFI இன் "தோழர்களுடனும்" “முக்கிய அரசியல் கருத்துவேறுபாடுகள்" இருந்தன. RCIT எழுதியது:

RCIT ரஷ்யா மற்றும் சீனாவை ஏகாதிபத்திய சக்திகளாக குணாம்சப்படுத்துகிற அதேவேளையில், இந்த தோழர்கள் அதை செய்யவில்லை. அதற்கும் கூடுதலாக RCIT அதன் குட்டி-முதலாளித்துவ இஸ்லாமிய தலைமையுடன் சிரிய புரட்சியை தொடர்ந்து ஆதரிக்கின்ற வேளையில், ரெட்மிட் தோழர்கள் [ரெட்மிட் வலையமைப்பு என்பது CRFI இன் இணையத்தள களமாகும்] அவர்களது ஆதரவை நிறுத்திக் கொண்டு, இப்போது ஒரு தோற்கடிப்புவாத நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். [17]

இத்தகைய கருத்துவேறுபாடுகளுக்கு இடையிலும், RCIT அந்த மாநாட்டை "பயனுள்ளதாக" காண்கிறது.

**

பின்குறிப்புகள்

[1] See http://www.wsws.org/en/articles/2016/02/18/icfi-f18.html/

[2] “மிகப்பெரும் ஏகாதிபத்திய சக்தியாக ரஷ்யா,” புரட்சிகர கம்யூனிசம், No. 21, மார்ச் 2014, p. 3. இந்த ஒட்டுமொத்த அறிக்கையும் பின்வரும் தளத்தில் கிடைக்கும்:

http://www.thecommunists.net/theory/imperiapst-russia/

[3] Ibid

[4] Ibid, p. 16

[5] Ibid

[6] Ibid

[7] https://www.foreignaffairs.com/articles/china/2016-02-15/eurasias-coming-anarchy

[8] http://www.lrb.co.uk/v38/n01/seymour-m-hersh/miptary-to-miptary

[9] “தேசிய பிரச்சினை மீதான முக்கிய குறிப்புகள்,” லெனினின் எழுத்து தொகுப்புகள், தொகுப்பு 20 [மாஸ்கோவ், 1964], pp. 34-35

[10] Ibid, p. 46

[11] “புரட்சி கம்யூனிஸ்ட் அறிக்கை,” சர்வதேச புரட்சி கம்யூனிஸ்ட் குழுவின் (Revolutionary Communist International Tendency - RCIT) வேலைத்திட்டம், pp. 48-49

[12] http://www.thecommunists.net/worldwide/africa-and-middle-east/rcit-als-syria/ [13] http://www.thecommunists.net/rcit/open-letter-revolutionary-unity/ [14] http://www.thecommunists.net/theory/pberation-struggle-and-imperiapsm/ [15] http://www.thecommunists.net/rcit-manifesto/the-leadership-we-have-and-the-leadership-we-need/

[16] ப்ரோப்ஸ்டிங் இன் ஒரு புதிய அரசியல் கூட்டாளி அலெக்ஸ் ஸ்டென்னர் ஆவார், இவர் அண்மித்து 40 ஆண்டுகளுக்கு முன்னர் நான்காம் அகிலத்திலிருந்து விலகியவர், அப்போதிருந்து ஒரு தீவிர டிரொட்ஸ்கிச-எதிர்ப்பாளராக வளர்ந்துள்ளார். கட்டுப்படுத்தவியலா அரசியல் சந்தர்ப்பவாதத்தின் ஒரு கொடிய குறுக்கீட்டாலும் மற்றும் டிரொட்ஸ்கிய இயக்கத்தின் தலைமையில் இருந்த அவரது முன்னாள் தோழர்களை நோய்பீடித்ததைப் போல அகநிலையாக வெறுத்தும், கூட்டாளிகளைத் தேர்ந்தெடுப்பதில் ஸ்டென்னரின் பிரதான அளவுகோல் என்னவென்றால் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவுடனான அவர்களது எதிர்ப்பு என்பதாக இருந்தது. ICFI க்கு எதிரான சாத்தியமான கூட்டாளிகளைத் தேடி அவர் யூரோ-மத்தியத் தரைக்கடல் மாநாட்டில் கலந்து கொண்டார், அங்கே தான் அவர் ப்ரோப்ஸ்டிங் ஐ சந்தித்தார். பிந்தையவர் ரஷ்யா மற்றும் சீனாவை ஏகாதிபத்தியமாக வரையறுப்பதை அங்கீகரித்து, ஸ்டென்னர் அவரது சொந்த வலைத்தளமான permanent-revolution.org இல் ப்ரோப்ஸ்டிங் இன் ஆவணங்களைப் பதிவு செய்து வருகிறார். டேவிட் நோர்த்தின் பிராங்க்பர்ட் பாடசாலை, பின்நவீனத்துவம் மற்றும் போலி-இடதின் அரசியல்: ஒரு மார்க்சிச விமர்சனம் நூலில் ஸ்டென்னரின் அரசியல் வரலாறைக் குறித்த ஒரு விரிவான திறனாய்வு உள்ளது. [இந்நூல், https://mehring.com/frankfurt-school-postmodernism.html தளத்தில் கிடைக்கும்.]

[17] http://www.thecommunists.net/rcit/euro-mediterranean-conference-2015/