ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Oppose Indian government’s witch-hunt of JNU students

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீதான இந்திய அரசாங்கத்தின் வேட்டையாடலை எதிர்ப்போம்

By the International Youth and Students for Social Equality (Sri Lanka)
7 April 2016

சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் (ஐ.வை.எஸ்.எஸ்.இ) அமைப்பானது இந்தியாவின் இந்து மேலாதிக்கவாத பாரதீய ஜனதா கட்சி (பா.ஜ.க.) அரசாங்கம் டில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யு.) மாணவர்கள் "தேச விரோத" கோஷங்களை எழுப்பியதாக கூறிக்கொண்டு அவர்களுக்கு எதிராக முன்னெடுக்கும் வேட்டையாடலை எதிர்க்குமாறு இந்தியவிலும் ஆசியா முழுவதும் மற்றும் உலகம் பூராவும் உள்ள இளைஞர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றது.

ஜே.என்.யு.வில் மேற்கொள்ளப்படும் அரச ஒடுக்குமுறை, மாற்றுக் கருத்துக்களை குற்றவியலானதாக ஆக்குவதை இலக்காகக் கொண்டுள்ளது. இது, அரசாங்கத்தின் முதலீட்டாளர்-சார்பு "சீர்திருத்தங்களை" மற்றும் சீனாவிற்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர் தயாரிப்புகளுடன் அது அணி சேர்ந்திருப்பதற்கும் எதிரான தொழிலாளர்கள், கிராமப்புற ஏழைகள் மற்றும் மாணவர்களதும் விரோதத்தை ஒடுக்குவதற்காக அரச வன்முறை மற்றும் வகுப்புவாத எதிர்ச்செயல்களையும் பயன்படுத்திக்கொண்டு அது மேற்கொள்ளும் தயாரிப்பின் ஒரு பாகமாகும்.

ஜே.என்.யு. மாணவர் தலைவர் கண்ணையா குமாரும் மற்றும் உமர் காலித், அனிர்பன் பட்டாச்சார்யா ஆகிய ஏனைய இரு மாணவர்களும் தேசத் துரோகிகளாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர் –அவர்களுக்கு ஆயுட்கால சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்பதே இதன் அர்த்தம். அப்சல் குரு சட்டபூர்வமாக படுகொலை செய்யப்பட்டு மூன்றாவது ஆண்டைக் குறிக்கும் பெப்பிரவரி 9 அன்று நடந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அவர்களது பங்கு சம்பந்தமாகவே இம்மூவர் மீதும் இத்தகைய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. காஷ்மீரி முஸ்லிம்மான குரு, இந்திய பாராளுமன்றத்தின் மீது 2001 டிசம்பரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய அதிகாரிகளால் பொறுப்பாளியாக்கப்பட்டிருந்தார்.

அரசாங்கத்தின் கட்டளையின் பேரில், ஜே.என்.யு. நிர்வாகமும் குமார், காலித் மற்றும் பட்டாச்சார்யா உடன் மேலும் 18 மாணவர்கள் மீது கடுமையான ஒழுக்கத் தண்டனைகளை விதிக்க இலக்கு வைத்துள்ளது. இதில் அவர்கள் பல்கலைக்கழகத்தை வெளியேற்றப்படுவதற்கான சாத்தியமும் அடங்கும்.

ஜே.என்.யு. மாணவர்கள் மீதான தாக்குதல், பா.ஜ.க. அரசாங்கத்தின் அதி உயர் மட்டங்களில் இருந்தே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பா.ஜ.க.க்கு நெருக்கமான இளைஞர்களின் அமைப்பான அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ABVP), பாசிச ஆர்.எஸ்.எஸ். ஆகியவற்றிடம் இருந்து "புகார்கள்" வந்த பின்னர், ஜே.என்.யு.வில் சோதனை நடத்தவும் குமாரைக் கைது செய்யவும் டில்லி பொலிசுக்கு அறிவுறுத்தினார். இந்திய பல்கலைக்கழகங்களுக்கு நேரடியாக பொறுப்பு வகிக்கும் அமைச்சரான மனித வள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி, "தேச விரோத" சக்திகளுக்கு எதிராக பல்கலைக் கழக நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிய அதே வேளை, ஜே.என்.யு.வில் கம்யூனிஸ்டுகளும் ஜிஹாதிகளும் செயற்படுகின்றனர் என்ற பா.ஜ.க. துணைத் தலைவர் பல்பிர் புஞ்ச் என்பவரால் திருத்தப்பட்ட ஒரு பிரசுரத்தை முன்னிலைப்படுத்தினார்.

கடந்த ஆண்டு, உத்தரப் பிரதேச முஸ்லிம்கள் மீதான வகுப்புவாத வன்முறையை தூண்டுவதில் பா.ஜ.க.யின் பங்கை அம்பலப்படுத்தும் ஒரு விவரணப் படத்தை இளநிலை மாணவர் ரோஹித் வெமுலா திரையிட்ட பின்னர், அவரது மாணவர் நிலையை அபகரிக்குமாறு ஹைதராபாத் பல்கலைக்கழகத்துக்கு இரானி அழுத்தம் கொடுத்தார். அரசாங்க ஆதரவிலான பழிவாங்கல் படலம் அவரை ஆதரவற்ற நிலைக்குத் தள்ளியதோடு ஜனவரியில் வெமுலா தன் உயிரையே மாய்த்துக்கொள்ள நேரடியாக வழிவகுத்தது.

ஜே.என்.யு. சம்பவங்களை மேற்கோளிட்ட இரானி, இப்போது "தேசப்பற்றை” கற்பிக்க இராணுவ "பயிற்றுனர்களை" கட்டாயமாக வேலைக்கு அமர்த்திக்கொள்ளுமாறு இந்தியாவின் தேசிய பல்கலைக்கழகங்களுக்கு அழைப்பு விடுக்கின்றார்.

ஜே.என்.யு. மாணவர்கள் மீதான அரசாங்கத்தின் வழக்கானது, ஒரு வெளிப்படையான, அரசியல் நோக்கிலான ஜோடிப்பாகும். பெப்பிரவரி 9 ஜே.என்.யு. ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் "பாக்கிஸ்தான் சார்பு" கோஷங்களை எழுப்புவதை பொதுவில் காட்டிவரும், பெருநிறுவன செய்தி ஊடகங்களால் பரந்தளவில் பரப்பிவிடப்படும் வீடியோ காட்சிகள் திரிபுபடுத்த உள் நுழைக்கப்பட்டவை என்பதை காட்டுகின்றன.

மேலும் அடிப்படையில், "தேச விரோத" பேச்சுக்கு அரசு தடை விதிப்பது என்பது, மிக அடிப்படையான ஜனநாயக உரிமைகளை மீறுவதாகும். அதை உறுதியாக எதிர்க்க வேண்டும்.

அது யுத்த விருப்புமிக்க, இந்து வகுப்புவாதத்துடன் பிண்ணிப் பிணைந்த இந்திய தேசியவாதத்தை பா.ஜ.க. முன்னிலைப்படுத்துவதுடன் கை கோர்த்துக்கொள்கின்றது. ஆட்சிக்கு வந்து 23 மாதங்களில், பிரதமர் நரேந்திர மோடியும் அவரது பா.ஜ.க. அரசாங்கமும் நாட்டின், கல்வி, கலாச்சார மற்றும் அறிவியல் நிறுவனங்களுக்கு பொறுப்பாக இந்துத்துவ கருத்தியலாளர்களை நியமிப்பதற்கு திட்டமிட்டு தலையீடு செய்த அதேவேளை, முஸ்லிம்கள் மற்றும் ஏனைய சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளுக்கு மன்னிப்பளித்துள்ளது அல்லது மூடிமறைத்துள்ளது.

அரச அடக்குமுறையும் வகுப்புவாத பிற்போக்கும்

ஜே.என்.யு. மாணவர்கள் மீதான மோடி அரசாங்கத்தின் வேட்டையாடல், எதேச்சதிகார ஆட்சி வழிமுறைக்கு திரும்புவதனதும் சமூகப் பிற்போக்குத்தனத்தை ஊக்குவிப்பதனதும் பாகமாகும். இவற்றின் பிரதான இலக்கு தொழிலாள வர்க்கமும் கிராமப்புற உழைப்பாளிகளுமாகும்.

உலக முதலாளித்துவ நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய முதலாளித்துவம், சர்வதேச மூலதனத்தை ஈர்க்கும் நோக்கில், சமூகத்துக்கு கேடு விளைவிக்கும் நவ-தாராளவாத சீர்திருத்தங்களை முன்னெடுப்பதன் பேரில், சுய பாணியிலான "இந்து மதவாதி” மோடியையும் அவரது பா.ஜ.க.யையும் ஆட்சிக்கு கொண்டு வந்தது. முந்தைய காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசாங்கத்தின் நடவடிக்கைகளின் தொடச்சியாக, மோடி சமூகச் செலவுகளை வெட்டிச் சரித்து, விலை மானியங்களை வெட்டியதோடு தனியார்மயமாக்கலை துரிதப்படுத்தியுள்ளார். ஆனால், இவை மேலும் செல்வாக்கற்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான பெரும் வணிகர்களின் பேராசையை மட்டுமே கூர்மையாக்கியுள்ளன — வேலை நீக்கங்கள் மற்றும் ஆலை மூடல்கள் மீது கட்டுப்பாடுகளை திணிக்கும் தொழிற் சட்டங்களை வெட்டுவது, தொழிலதிபர்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்களுக்கும் மலிவான விவசாய நிலங்களை எளிதாக அணுக வசதி செய்துகொடுப்பது, மற்றும் ஒரு பிற்போக்கு பொருட்கள் மற்றும் சேவைகள் வரி (Goods and Services Tax - GST) மூலம் உழைக்கும் மக்கள் மீது வரிவிதிப்பின் பெரும் பகுதியை சுமத்துவதும் இதில் அடங்கும்.

இந்த நடவடிக்கைகளை செயல்படுத்த பெரும் வணிகத்துடன் அது சதி செய்கின்ற நிலையில், மோடி அரசாங்கம் மக்களின் முதுகுக்குப் பின்னால் சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் மூலோபாய தாக்குதல் மற்றும் யுத்த தயாரிப்புகளில் இந்தியாவை "முன்னணி" பங்காளியாக மாற்றி வருகின்றது. அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கான பிராந்திய ஆளுனராக செயற்படுவதன் மூலம், இந்திய முதலாளித்துவமானது தன்னுடைய கொள்ளைக்கார வல்லரசாகும் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள முனைகின்றது. அதன் முதல் எதிர்பார்ப்பு தெற்காசியாவில் பிராந்திய ஆதிக்கத்தை தக்கவைத்துக்கொள்வதாகும்.

இந்த தீவிர-பிற்போக்கு நிகழ்ச்சி நிரலை அமைதியாக நடைமுறைப்படுத்த முடியாது. "உயர் வளர்ச்சி" பற்றிய இந்திய ஆளும் உயரடுக்கின் வாய்ச்சவடால் மூலம் யதார்த்தத்தை மறைக்க முடியாது. இந்தியாவில் முன்னெப்போதையும் விட சமூக சமத்துவமின்மை அதிகரித்துள்ளது. கடந்த கால் நூற்றாண்டு கால முதலாளித்துவ விரிவாக்கத்தின் இலாபங்களில் ஒரு சிலர் சுகபோகம் அனுபவிக்கும் அதேவேளை, மிகப் பெரும்பாலானவர்கள் வறுமை, பசி மற்றும் பொருளாதார பாதுகாப்பின்மைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

தனது எதிரிகளை, "தேச விரோதிகள்" என்று முத்திரை குத்துவதன் மூலம், பா.ஜ.க. அரசாங்கம் அதன் அரச ஒடுக்குமுறையை சட்டபூர்வமாக்குவதற்கு முற்படுகிறது. இந்து மத இனவாதத்தை தூண்டுவதன் மூலம், அது பிற்போக்குத்தனத்தை கிளறிவிட்டு தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்த முயற்சிக்கின்றது.

பூகோள முதலாளித்துவ பொறிவு நிலைமைகளின் கீழ், உலகெங்கிலும் உள்ள ஆளும் வர்க்கங்கள் இது போன்ற வழிமுறைகளைப் பின்பற்றுகின்றன. எல்லா இடங்களிலும், அரச அடக்குமுறை இயந்திரத்தையும் ஜனநாயக உரிமைகள் மீதான பாரிய தாக்குதல்களையும் விரிவாக்குவதை நியாயப்படுத்துவதற்காக போலி "பயங்கரவாதத்தின் மீதான போர்" பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அதே சமயம், முதலாளித்துவ தட்டுக்களின் அனுசரணையிலான கட்சிகளும் மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் அபே போன்ற அரசியல்வாதிகளும் போருக்கு உந்தும் தேசியவாதத்தை முன்னிலைப்படுத்துவதோடு அமெரிக்க குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் உதாரணப்படுத்துவது போல் அகதிகள், குடியேறுபவர்கள் மற்றும் சிறுபான்மையினரைத் தூற்றவும் செய்கின்றனர்.

ஸ்ராலினிச சி.பி.ஐ., சி.பி.எம். மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மீதான அரசியல் ஒடுக்குமுறையும்

சமூகச் சீரழிவு, ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள், உலக மேலாதிக்கத்தை பேணுவதற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூர்க்கமான இரத்தக்களரி மிக்க நகர்விற்கு இந்திய ஆளும் உயரடுக்கு உடந்தையாக இருக்கின்றமை, இனவாத பிற்போக்குத் தனத்தின் வளர்ச்சி ஆகிய அனைத்தும், இந்திய தொழிலாள வர்க்கமானது முதலாளித்துவத்தின் தோல்விக்கும் ஒட்டுமொத்த முதலாளித்துவ அரசியல் ஸ்தாபனத்திற்கு எதிராகவும் தனது சொந்த சோசலிச தீர்வை அபிவிருத்தி செய்யவேண்டிய அவசரத்தை முன்வைக்கின்றது.

எனினும், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.எம்.), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ.) ஆகிய ஸ்ராலினிச கட்சிகளின் பிரதிபலிப்பு நேர் எதிராக உள்ளது.

அவர்கள் இந்திய அரசியல் ஸ்தாபகத்துடனும் அரசுடனும் தொழிலாள வர்க்கத்தை கட்டிப்போடுவதற்கான தங்கள் முயற்சியை இரட்டிப்பாக்கியுள்ளனர்.

ஜே.என்.யு. மாணவர் ஒன்றியத் தலைவர் கண்ணையா குமார், சி.பி.ஐ. மாணவர் குழுவான அகில இந்திய மாணவர் சம்மேளனத்தின் (ஏ.ஐ.எஸ்.எஃப்.) தலைவர் ஆவார். குமார், சி.பி.ஐ. தலைமையின் அறிவுறுத்தலின் பேரில், நீதிமன்றங்கள் மற்றும் இராணுவம் உட்பட இந்திய அரச நிறுவனங்கள் மீதான தனது நம்பிக்கையை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தியதோடு "ஜனநாயகத்தையும்" "மதச்சார்பின்மையையும்" பாதுகாக்க இந்திய முதலாளித்துவத்தின் பாரம்பரிய கட்சியான காங்கிரஸ் கட்சி உடனான கூட்டணிக்கும் பரிந்துரைக்கின்றார்.

உண்மையில் காங்கிரசுக்கு இந்து வலதுசாரிகளுடன் மறைமுகமாய் செயற்படுவதில் தசாப்த கால நீண்ட வரலாறு உள்ளதுடன், தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை வன்முறையில் நசுக்கியதைப் பற்றி சொல்லத் தேவையில்லை. அது ஜே.என்.யு. மாணவர்கள் பழிவாங்கப்படுவதை எதிர்ப்பதாக கூறிக்கொண்டாலும் கூட, மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத்தில் ஒரு முஸ்லீம் உறுப்பினர், "அன்னை இந்தியாவுக்கு வெற்றி" என்ற கோஷத்தை கூற மறுத்தமையினால் அவரை இடைநீக்கம் செய்வதற்கு காங்கிரஸ் அழுத்தம் கொடுக்கின்றது.

பா.ஜ.க.வையும் சிலசமயம் அதன் கூட்டாளியான திரிணாமுல் காங்கிரசையும் தோற்கடிப்பது அவசியம் என கூறிக்கொண்டு, சி.பி.எம். தலைமையிலான இடது முன்னணி இப்பொழுது காங்கிரஸ் உடன் கூட்டாக மேற்கு வங்க மாநில தேர்தலில் போட்டியிடுவதுடன் அதனுடன் தேர்தலுக்கு பின்னர் அதனுடன் ஒரு கூட்டணி அரசாங்கத்தை அமைக்கவும் எதிர்பார்க்கின்றது.

கடந்த கால் நூற்றாண்டில், ஸ்ராலினிஸ்டுகள் மத்தியில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த வலதுசாரி அரசாங்கங்களுக்கு ஆதரவளிப்பதை நியாயப்படுத்தினர். அவற்றில் அநேகமானவை காங்கிரஸ் தலைமையிலானதாக இருந்ததோடு அதற்கு அவர்கள் கூறிய காரணம் இந்து மேலாதிக்கவாத பா.ஜ.க. அதிகாரத்திற்கு வருவதைத் தடுப்பதற்கான ஒரே வழி இதுதான் என்பதாகும். நவ-தாராளவாத சீர்திருத்தத்தையும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான மூலோபாய பங்காண்மையையும் மேற்கொண்டு வருகின்ற அரசாங்கங்களுடன் தொழிலாள வர்க்கத்தை கட்டிப்போட்டு, அவர்களை அரசியல் ரீதியில் திக்குமுக்காடச் செய்வதில் ஸ்ராலினிஸ்டுகளின் இடைவிடாத உந்துதலின் விளைவாக, பா.ஜ.க. முதன் முறையாக பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற்றிருக்கின்றது.

ஜே.என்.யு.வில் அடக்குமுறைக்கும் பா.ஜ.க. தனது எதிரிகளை "தேசிய-விரோதிகள்" என முத்திரை குத்துவது தொடர்பாகவும் ஸ்ராலினிஸ்டுகள் காட்டும் பிரதிபலிப்பில், இரண்டாவதும் மிகவும் தொடர்புடையதுமான அங்கம் எதுவெனில், சி.பி.ஐ. மற்றும் சி.பி.எம்., இரண்டும் தாமே உண்மையான "முற்போக்கு" இந்திய தேசிய பாரம்பரியம் என அழைப்பதன் முன்னணி பாதுகாவலர்களாக தங்களை முன்னிலைப்படுத்த முழு மூச்சுடன் பிரச்சாரம் செய்வதாகும்.

உண்மையில், இந்திய முதலாளித்துவத்தின் ஆட்சியை மூடிமறைப்பதற்கும் அதன் சுயநல வர்க்க நோக்கங்களுக்காக வெகுஜனங்களை கட்டி இழுப்பதற்குமான ஒரு வழிமுறையாக, இந்திய தேசியவாதம் ஒரு கருத்தியல் ஆயுதமாக எப்போதும் இருந்து வந்துள்ளது இருந்துகொண்டிருக்கின்றது.

பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் தங்கள் கட்டுப்பாட்டை மீறிவிடும் என பீதியடைந்த, எம்.கே. காந்தி மற்றும் ஜவகர்லால் நேரு தலைமையிலான காங்கிரசின் "முற்போக்கு தேசியவாதிகள்", 20ம் நூற்றாண்டின் முதல் பாதியில் துணைக்கண்டத்தையே உலுக்கிய ஏகாதிபத்திய எதிர்ப்பு எழுச்சியை நசுக்கினர். 1947-48ல், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துடன் ஒரு உடன்படிக்கையை செய்துகொண்ட அவர்கள், அதன் கீழ் காலனித்துவ அரச இயந்திரத்தை தம்வசப்படுத்திக்கொண்டதோடு தெற்காசியாவை முஸ்லீம் பாக்கிஸ்தானாகவும் இந்து இந்தியாவகவும் வகுப்புவாத முறையில் பிளவுபடுத்தினர். இது பிரிவினைவாத படுகொலைகளில் 1 மில்லியனுக்கும் அதிகமான உயிர்களைக் காவுகொண்ட பயங்கரமான இரத்தக்களரியை தூண்டிவிட்டு, 10 மில்லியனுக்கும் மேற்பட்டவர்களை அகதிகளாக்கியதோடு நின்றுவிடவில்லை: அது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அரச உள் மோதல்களுக்கு வழிவகுத்ததோடு இந்தியாவுக்குள் முதலாளித்துவ ஆட்சிக்கு முண்டுகொடுக்கும் இன்றியமையாத தூணாகவும் வகுப்புவாதம் மாற்றப்பட்டது.

லியோன் ட்ரொட்ஸ்கியும் சோசலிச சர்வதேசியவாத வேலைத்திட்டமும்

இந்திய தொழிலாளர்களும் இளைஞர்களும், இந்தியாவிலும் உலகம் முழுவதும் உள்ள ஸ்ராலினிச கட்சிகளின் கேடுவிளைவிக்கும் பங்கை பற்றிய ஒரு மதிப்பீட்டை வரைவதற்கான உயர்ந்த கட்டம் இதுவே ஆகும்.

1920களில் ரஷ்ய தொழிலாள வர்க்கத்திடம் இருந்து அதிகாரத்தை அபகரித்துக் கொண்டு, உலக சோசலிசப் புரட்சி வேலைத் திட்டத்தை கைவிட்டதுடன் "தனி நாட்டில் சோசலிசம்” என்ற பதாகையின் கீழ் உலக ஏகாதிபத்தியத்துடன் இணக்கத்துக்குச் சென்ற, சலுகை பெற்றிருந்த அதிகாரத்துவத்துக்கு ஆதரவளிப்பது தொடக்கம், பொதுவான ஸ்ராலினிச வேர்களில் இருந்தே சி.பி.எம். மற்றும் சி.பி.ஐ.யின் பிற்போக்கு அரசியல் தவிர்க்க முடியாமல் ஊற்றெடுக்கின்றது. இந்த வழியில் இந்தியாவிலும் மற்றும் முதலாளித்துவ அபிவிருத்தி காலங்கடந்த ஏனைய நாடுகளிலும், "இரண்டு கட்ட” புரட்சியை பரிந்துரைத்த ஸ்ராலினிஸ்டுகள், வரலாற்று நிகழ்ச்சி நிரலில் சோசலிசம் கிடையாது என்றும், ஏகாதிபத்தியத்தையும் “நிலப்பிரபுத்துவ பிற்போக்கையும்" எதிர்ப்பதில் தேசிய முதலாளித்துவத்தின் “முற்போக்கான” பகுதிக்கு ஆதரவளிப்பதைத் தவிர தொழிலாள வர்க்கத்தால் வேறு ஒன்றும் செய்ய முடியாது என்றும் கூறிக்கொள்கின்றனர்.

பல தசாப்தங்களாக இந்த இரு ஸ்ராலினிச கட்சிகளும், மேற்கு வங்கத்திலும் கேரளாவிலும் நீண்ட காலத்திற்கு முதலாளித்துவ அரச இயந்திரத்தை நிர்வகித்தமை உட்பட முதலாளித்துவ ஸ்தாபனத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக செயல்பட்டுள்ளன. 1991ல் கோர்பச்சேவின் கீழான அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டு மற்றும் அரசு தலைமையிலான அபிவிருத்தி நடவடிக்கைகளை இந்திய முதலாளித்துவம் கைவிடுவதுடன், சி.பி.எம். மற்றும் சி.பி.ஐ.யும் மேலும் வலது பக்கம் நகர்ந்தன. அவர்கள் இந்தியாவை உலக முதலாளித்துவத்திற்கான மலிவு-உழைப்பு உற்பத்திக் களமாக ஆக்குவதற்கான ஆளும் வர்க்கத்தின் உந்துதலை முழுமையாக ஆதரித்தனர். எங்கெல்லாம் "இடது" அரசாங்கம் அமைக்கப்பட்டதோ அங்கெல்லாம் அவர்களே முதலீட்டாளர்-சார்பு கொள்கை என்று அழைத்துக்கொண்டதை முன்னெடுத்தனர்.

1917 ரஷ்ய புரட்சியில் லெனினுடன் இணைத் தலைவராக இருந்த லியோன் ட்ரொட்ஸ்கி, ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கு எதிராக விட்டுக்கொடுப்பற்ற போராட்டத்தை முன்னெடுத்து, சோசலிச சர்வதேசியவாத வேலைத்திட்டத்தை நிலை நிறுத்தினார். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிலும் (ICFI) அதன் இணைய அங்கமான உலக சோசலிச வலைத் தளத்திலும் செயலுருப்பெற்றுள்ள இந்த வேலைத் திட்டத்தின் பக்கமே இன்று இந்திய இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களும் திரும்ப வேண்டும்.

தெற்காசிய ஐக்கிய சோசலிச அரசுகளுக்கான போராட்டத்தின் பகுதியாக, இந்தியாவில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கான சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில், கிராமப்புற வறியவர்களுடனான கூட்டுடன் தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியில் சுயாதீனமாக அணிதிரட்டுவதன் மூலம் மட்டுமே, பா.ஜ.க.யின் தொழிலாள வர்க்க-விரோத மற்றும் வகுப்புவாத வேலைத்திட்டத்தை தோற்கடிக்க முடியும்.

சீனவுக்கு எதிரான போர் உந்துதல்களில் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான இந்திய முதலாளித்துவத்தின் கூட்டணியானது சர்வதேச சோசலிசத்தின் அடிப்படையில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டியதன் அவசரத்தை கோடிட்டுக் காட்டுகிறது.

சமகால இந்தியாவில் தொழிலாள வர்க்கம், மாணவர்கள் மற்றும் இளைஞர்களும் எதிர்கொண்டுள்ள பணிகள் இவையே ஆகும்.

ஒவ்வொரு நாட்டிலும் புரட்சிகர மார்க்சிச-ட்ரொட்ஸ்கிச கட்சிகளை கட்டியெழுப்ப போராடிவரும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இளைஞர் அமைப்பே ஐ.வை.எஸ்.எஸ்.இ. ஆகும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), மற்றும் (இலங்கை) ஐ.வை.எஸ்.எஸ்.இ.யும் இந்திய தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர கட்சியை கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தை முன்னெடுக்கத் தயாராக இருக்கும் அனைவருக்கும் தங்கள் மட்டற்ற ஆதரவை வழங்க ஆர்வமாக உள்ளன.

முதல் கட்டமாக, மே 1 ஞாயிற்றுக் கிழமை நடக்கவுள்ள நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் சர்வதேச மே தினக் கூட்டத்தில் இணைந்துகொள்ளுங்கள்.