ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Amid deepening slump, geopolitical and class tensions mount

ஆழமடைந்துவரும் மந்தநிலைமைக்கு இடையே, புவிசார் அரசியல் மற்றும் வர்க்க பதட்டங்கள் தீவிரமடைகின்றன

By Nick Beams
9 April 2016

உலக வர்த்தக ஸ்தாபனம் (WTO) இவ்வார ஆரம்பத்தில் குறிப்பிடுகையில், 1980 களுக்குப் பிந்தைய மிகக் குறைந்த விகிதத்தில் உலக வர்த்தகம் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக 2016 ஆம் வருடமும் 3 சதவீதத்திற்குக் குறைந்த வீழ்ச்சியைக் காணும் என்று குறிப்பிட்டது. இது, உலக பொருளாதாரம் “மீட்சியை" எட்டுவதற்குப் பதிலாக, மோசமடைந்து வரும் மந்தநிலைமையின் பிடியில் இருப்பதற்கு மற்றொரு அறிகுறியாகும்.

உலக வர்த்தக அளவு 2015 ஐ போலவே இந்தாண்டும் 2.8 சதவீதம் மட்டுமே அதிகரிக்குமென உலக வர்த்தக ஸ்தாபனம் தெரிவித்தது. முக்கியமாக சமீபத்திய ஆண்டுகளில் வர்த்தகத்தில் ஏற்பட்ட பின்னோக்கிய தாக்கத்தை அது அனுமானிக்கவில்லை.

இந்த சமீபத்திய முன்கணிப்பானது, கடந்த ஆறு ஆண்டுகளில் நிகழ்ந்துள்ள ஒரு தெளிவான வடிவத்திற்குப் பொருந்திய விதத்தில் உள்ளது. 2008 உலகளாவிய நிதியியல் நெருக்கடியை அடுத்து, 2009 இல் உலக வர்த்தகம் சரிந்தது, ஒரு தருணத்தில் அது 1930 களின் தொடக்கத்தில் ஏற்பட்டதை விட வேகமான விகிதத்தில் வீழ்ச்சி அடைந்தது. 2010-2011 இல் ஒரு கூர்மையான வீழ்ச்சி இருந்தது, ஆனால் அப்போதும் உலக வர்த்தக உயர்வு விகிதம், தொடர்ந்து உலக பொருளாதார வளர்ச்சியின் மிகக் குறைந்த மட்டங்களை விட குறைவாகவே இருந்துள்ளது. “வர்த்தக வளர்ச்சி அதிகரிப்பு இருந்தாலும் அத்தகைய ஒரு நீண்ட, தடையில்லாத குறைந்த வளர்ச்சி என்பது முன்னொருபோதும் இல்லாதது,” என்று உலக வர்த்தக ஸ்தாபன பொருளாதார நிபுணர்களே எழுதினார்கள்.

தற்போதைய நிலைமை 2008 க்கு இட்டுச் சென்ற ஆண்டுகளுக்கு முற்றிலும் நேரெதிராக நிற்கிறது, அப்போது வர்த்தகம் உலக பொருளாதார வளர்ச்சி விகிதத்தை விட சுமார் இரண்டு மடங்கு அதிகமாக ஒரு வேகமான விரிவாக்கத்தைக் கொண்டிருந்தது.

சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கியின் அடுத்த வார வசந்தகால கூட்டத்திற்கு முன்னதாக உலக வர்த்தக ஸ்தாபனத்தின் இவ்வறிக்கை வெளியிடப்பட்டது. அக்கூட்டத்தில் சர்வதேச நாணய நிதியம், சமீபத்திய ஆண்டுகளின் அதன் போக்கையே பின்தொடருமென்றும் மற்றும் அதன் உலக பொருளாதார வளர்ச்சி முன்கணிப்பைக் கீழிறக்கி திருத்தம் செய்யுமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வார ஆரம்பத்தில் பிரான்ங்பர்ட்டில் வழங்கிய உரை ஒன்றில் சர்வதேச நாணய நிதிய இயக்குனர் கிறிஸ்டீன் லகார்ட், “மீட்சி தொடர்ந்தாலும்", அது "மிகவும் மெதுவாக, மிகவும் பலவீனமாக இருக்கிறது, மேலும் இதுவே நீடித்திருக்கக்கூடிய அபாயங்கள் அதிகரித்து வருகின்றன,” என்று கூறி, அக்கூட்டத்திற்கான தொனியை அமைத்துக் கொடுத்தார்.

உலக வர்த்தக வளர்ச்சி குறைந்துள்ளதுடன் நிதியியல் ஸ்திரப்பாட்டு அபாயங்கள் அதிகரித்துள்ளன, அத்துடன் சமீபத்திய சந்தை ஏற்றஇறக்கம் "கொள்கை முடிவுகளின் மீது குறைந்த நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது" என்றவர் குறிப்பிட்டார்—இது மத்திய வங்கிகளின் பணத்தைப் புழக்கத்தில் விடும் நடவடிக்கைகளும், அத்துடன் சேர்ந்து எதிர்மறை வட்டி விகிதங்களும், நிலைமையை முன்னேற்றவில்லை மாறாக மோசமடைய செய்து வருகின்றன என்பதற்குரிய ஒரு குறிப்பாகும். “இத்தகைய இயக்கவியல் தன்னைத்தானே மீண்டும் பலப்படுத்திக் கொள்ளக்கூடியவை,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

கடந்த ஆறு மாதங்களில் இன்னும் அதிகமாக பலவீனமடைந்துள்ள உலக நிலைமை, “சீனாவின் ஒப்பீட்டளவிலான வளர்ச்சிக் குறைவு, பண்டங்களது விலை வீழ்ச்சி, மற்றும் பல நாடுகளில் நிதியியல் கெடுபிடி அதிகரிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஆகியவற்றால் மோசமடைந்துள்ளது,” என்றவர் தெரிவித்தார். என்ன மீட்சி கிடைத்துள்ளதோ அதுவும் பெரிதும் எழுச்சி பெற்று வரும் சந்தைகளால் உந்தப்பட்டதாகும், அபிவிருத்தி அடைந்த நாடுகள் "'வளர்ச்சிக்காக பிரம்பை' உயர்த்துமென" எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் "அவ்வாறு நடக்கவில்லை,” என்பதை லகார்ட் ஒப்புக் கொண்டார். ரஷ்யா மற்றும் பிரேசிலில் கீழிறக்கங்கள் எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகமாக இருந்தன, அதேவேளையில் "பல ஆபிரிக்க மற்றும் குறைந்த-வருவாய் நாடுகளும் பலவீனமான வாய்ப்புகளையே முகங்கொடுக்கின்றன.”

ஆபிரிக்கா முகங்கொடுக்கும் மோசமான சூழல், ஒரு ஆலோசனை நிறுவனமான கேபிட்டல் எகானமிக்ஸ் இன் அறிக்கை ஒன்றால் உயர்த்திக் காட்டப்பட்டது. துணை-சஹாரா பிராந்திய வளர்ச்சி, 17 ஆண்டுகளில் அதன் மிகக் குறைந்த விகிதமாக இந்த வருடம் வெறும் 2.9 சதவீதமாக வீழ்ச்சி அடையுமென அது அனுமானித்தது. அந்த அறிக்கையைத் தயாரித்த பொருளாதார நிபுணர் ஜோன் அஸ்போர்ன் கூறுகையில் "ஆறுதலற்ற இந்த முன்கணிப்பின்" அபாயங்கள் "ஏறத்தாழ முற்றிலும் எதிர்மறையாக" இருக்கின்றன என்பதுடன், குறைந்தளவிலான வளர்ச்சியைக் கூட “முழுமையான நெருக்கடிகள் தவிர்க்கப்பட்டால்" மட்டுந்தான் எதிர்பார்க்கலாம் என்றார். “மொத்தத்தில், பெரிதும் தம்பட்டம் அடிக்கப்பட்ட [ஆபிரிக்காவின்] 'வளர்ச்சி' நின்று போயிருப்பதாக தெரிகிறது,” என்றவர் தீர்மானித்திருந்தார்.

இந்த மோசமடைந்து வரும் உலக பொருளாதார நிலைமையின் முன்னால், லகார்ட் உள்நோக்கி திரும்புதல், எல்லைகளை மூடல் மற்றும் பாதுகாப்புவாதத்திற்குள் பின்வாங்கும் போக்குகளைப் பற்றிய சர்வதேச நாணய நிதியத்தின் எச்சரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தினார். “வரலாறு நமக்கு எடுத்துக்காட்டி இருப்பதைப் போல —காலகட்டத்திற்கு ஏற்ப மீண்டும் மீண்டும்— இதுவொரு துயரகரமான போக்காகவே இருக்கும்,” என்றவர் தெரிவித்தார். இந்த பதில் தனித்தனியாக செயல்படுவதற்கானதல்ல, மாறாக கூட்டு ஒத்துழைப்புக்கானது.

ஆனால் ஒவ்வொரு போக்கும் வேறு திசையில் நகர்ந்து கொண்டிருக்கின்றன. இந்தாண்டின் ஆரம்பத்தில் ஜி 20 கூட்டத்தில், சர்வதேச நாணய நிதியம் உலக பொருளாதாரத்திற்காக ஓர் ஒருங்கிணைந்த பொருளாதார வளர்ச்சிக்கு விடுத்த அழைப்பு, பிரதான பொருளாதார சக்திகளுக்கு இடையிலான விட்டுக்கொடுப்பற்ற முரண்பாடுகளால், மேசைக்கு வருவதற்கு முன்னரே நிராகரிக்கப்பட்டது.

அதிகரித்த கூட்டுறவுக்கு மாறாக, ஒவ்வொரு முதலாளித்துவ அரசாங்கமும் உலக வர்த்தகம் மற்றும் வளர்ச்சி குறைவை முகங்கொடுத்துள்ள நிலையில், பாதுகாப்புவாத நடவடிக்கைகள் மற்றும் அதன் செலாவணி மதிப்பிறக்கம் மூலமாக அவற்றின் போட்டியாளர்களை விலையாக கொடுத்து அதனதன் நிலைமையை உயர்த்திக் கொள்ள முனைகின்ற வேளையில், புவிசார் அரசியல் நிலைமையானது இரண்டாம் உலக போருக்கு இட்டுச் சென்ற நிலைமைகளை நினைவூட்டும் வகையில் பொருளாதார தேசியவாத வளர்ச்சியால் குணாம்சப்படுகிறது.

ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் பேங்க் ஆஃப் ஜப்பான் இரண்டுமே எதிர்மறை வட்டி விகிதங்கள் மற்றும் பணத்தைப் புழக்கத்தில் விடும் நடவடிக்கைகள் மூலமாக யூரோ மற்றும் யென் இன் மதிப்பைக் கீழிறக்கி வைத்து அவற்றின் சொந்த பொருளாதார நிகழ்ச்சிநிரலை முன்னெடுக்க முனைந்துள்ளன.

ஆனால் அமெரிக்க பெடரல் ரிசர்வ் கூடுதல் வட்டி விகித உயர்வைத் தற்போது தள்ளி வைத்திருக்கும் நிலையில், அமெரிக்க டாலர் மதிப்பு உயராததால், அவற்றின் முயற்சிகள் தடுக்கப்பட்டுள்ளன. இது ஜப்பானில் இருந்து ஒரு ஆத்திரமான விடையிறுப்பைக் கொண்டு வந்தது—"யென் உயர்வால் ஜப்பான் கடுங்கோபத்தில் உள்ளது" என்று பைனான்சியல் டைம்ஸ் ஒரு கட்டுரைக்குத் தலைப்பிட்டது—அத்துடன் அமைச்சரவை தலைமை செயலர் Yoshihide Suga பத்திரிகையாளர் கூட்டத்தில் கூறுகையில், அரசாங்கம் "பதட்ட உணர்வுடன்" அன்னிய செலாவணி சந்தைகளைக் கவனித்து வருகிறது மற்றும் "உரிய விதத்தில் நடவடிக்கைகள் எடுக்கும்" என்றார்.

பிரதான முதலாளித்துவ அரசாங்கங்கள் அனைத்தும், எந்தவித பொருளாதார தீர்வுமின்றி, இந்த நெருக்கடியைத் தீர்க்க லியோன் ட்ரொட்ஸ்கி எதை "இயந்திரத்தனமான வழிவகைகள்" என்று குறிப்பிட்டாரோ அதையே முயற்சிப்பதற்காக, இராணுவச் செலவினங்களை அதிகரித்து போருக்கான அவற்றின் தயாரிப்புகளைச் செய்து வருகின்றன.

உலக முதலாளித்துவ அமைப்புமுறையில் நடந்து வரும் பொருளாதார முறிவை மற்றும் அதனுடன் சேர்ந்துள்ள போர் முனைவைச் சர்வதேச தொழிலாள வர்க்க தலையீட்டின் மூலமாக மட்டுமே தீர்க்க முடியும், அதற்கான ஆரம்ப அறிகுறிகள் உருவாகி உள்ளன.

சமூக சமத்துவமின்மை மற்றும் வோல் ஸ்ட்ரீட் மீதான அவரது கண்டனங்கள் அடிப்படையில் மற்றும் ஒரு சோசலிஸ்டாக அவர் உரிமைகோரி கொள்வதன் அடிப்படையில், அமெரிக்காவில் பேர்னி சாண்டர்ஸிற்கு அதிகரித்து வரும் ஆதரவு மற்றும் உத்தியோகப்பூர்வ இரண்டு கட்சி அமைப்புமுறைக்கு அதிகரித்துவரும் நெருக்கடி ஆகியவை ஆழ்ந்த உலகளாவிய முக்கியத்துவம் கொண்டவை ஆகும்.

சாண்டர்ஸ் சோசலிசத்தைப் பிரதிநிதித்துவம் செய்யவில்லை, மாறாக அந்த இயக்கத்தை ஜனநாயக கட்சிக்குப் பின்னால் அணிதிரட்ட முனைந்து வருகிறார் என்ற உண்மை இருந்தாலும் கூட, சோசலிசம் என்பது மூடநம்பிக்கையாகவும் மற்றும் கம்யூனிச எதிர்ப்பு என்பது நடைமுறையில் அரசு மதமாக பார்க்கப்படும் ஒரு நாட்டில், உலக அரசியலில் உறங்கிக் கொண்டிருக்கும் ஜாம்பவானான அமெரிக்க தொழிலாள வர்க்கம் நடவடிக்கைக்குள் இறங்கத் தொடங்கிவிட்டது என்பதையே அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் பிரச்சாரம் எடுத்துக்காட்டுகிறது.

இதைப் போலவே, போலியான “பயங்கரவாதத்திற்கு எதிரான போரின்" பாகமாக திணிக்கப்பட்ட ஜனநாயக-விரோத சட்டங்களை முகங்கொடுத்திருந்தாலும், பிரான்சில் ஹோலண்ட் அரசாங்கத்திற்கு எதிரான வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் வெடிப்பானது, “1968 புகைமண்டலத்தைக்" காற்றில் கலந்துள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் உலகெங்கிலும் அவர்கள் முகங்கொடுக்கும் சாத்தியமான அபாயங்களைக் குறித்து ஆளும் வர்க்கங்கள் நனவுபூர்வமாக உள்ளன. உலக வாய்ப்புவளங்களைக் குறித்த அவரது ஐயுறவுடனான மதிப்பீட்டை லகார்ட் வெளியிடுகையில், அப்பெண்மணி சமூக ஸ்திரப்பாடுக்கு உள்ள அபாயங்களை எச்சரித்தார், மேலும் தனிநபர் சொத்து வளர்ச்சி மற்றும் "தொடர்ச்சியாக அதிகரித்துவரும் அதீத சமத்துவமின்மையால்", “சாமானிய ஆண்கள்—மற்றும் பெண்களுக்கு—எதிராக உயரடுக்குகளுக்குச் சாதகமான திட்டங்கள் தீட்டப்படுவதாக மிகுதியாக உணரப்படுவதில்" எந்த ஆச்சரியமும் இல்லை என்று குறிப்பிட்டார்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை உலக கட்சியாக கட்டமைப்பதன் மூலமாக, எழுச்சி அடைந்து வரும் போராட்டங்களை ஒரு புரட்சிகர சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்தை கொண்டு ஆயுதபாணியாக்குவதற்கு இந்த சாத்தியத்திறனை யதார்த்தமாக்க வேண்டும்.