ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Tensions erupt at Brussels summit on British exit from EU

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது மீது புரூசெல்ஸ் உச்சி மாநாட்டில் பதட்டங்கள் வெடிக்கின்றன

By Johannes Stern and Alex Lantier
  29 June 2016

வெளியேறவிருக்கும் பிரிட்டிஷ் பிரதம மந்திரி கலந்து கொள்ளவிருக்கும் கடைசி ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில், ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் செவ்வாயன்று டேவிட் கேமரூனுக்கு எதிராக ஒரு கடுமையான போக்கை எடுத்தனர். இக்கூட்டம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டிஷ் வெளியேறுவது மீதான கடந்த வார வெகுஜன வாக்கெடுப்பிற்கு விடையிறுப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த உச்சி மாநாட்டுக்கு முன்னதாக, ஐரோப்பிய மற்றும் பிரிட்டிஷ் அதிகாரிகள் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் கடுமையான வாக்குவாதங்களில் ஈடுபட்டனர், இது ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதென்ற வாக்குகளுக்காக ஐக்கிய இராச்சியத்தைத் (UK) தண்டிப்பதென்ற பிரதான ஐரோப்பிய ஒன்றிய சக்திகளின் நோக்கத்தை அடிக்கோடிடுகிறது.

ஐரோப்பிய ஒன்றிய லிஸ்பன் உடன்படிக்கையின் 50வது ஷரத்தைப் பயன்படுத்துவது, பிரிட்டன் வெளியேறுவதற்கான வரையறைகள் மீது பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வது ஆகியவற்றை அவருக்கு அடுத்து வருபவரிடம் விட்டுவிடும் வகையில், கேமரூன் அக்டோபரில் நடக்க உள்ள ஆளும் பழமைவாத கட்சியின் ஆண்டு மாநாட்டுக்குப் பின்னர் பதவியிலிருந்து இறங்குவதாக அறிவித்துள்ளார். ஷரத்து 50 ஐ பயன்படுத்தினால், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் ஒரு நாடு ஐரோப்பிய ஒன்றியத்துடனான சகல உடன்படிக்கைகள் மற்றும் ஏனைய ஒப்பந்தங்கள் செல்லாது போவதற்கு முன்னதாக அவற்றின் மீது மீள்பேரம் செய்வதற்கு இரண்டு ஆண்டுகள் வழங்கப்படும்.

ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் தலைவர் டோனால்ட் டஸ்க் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கமிஷன் தலைவர் ஜோன் குளோட் ஜூங்கர் உள்பட பலர் கலந்து கொண்ட ஓர் இரவு உணவு கூட்டத்தில், பிரிட்டன் வெளியேறும் நெருக்கடி மீது கேமரூனுக்கும் மற்றும் உயர்மட்ட ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுக்கும் இடையே எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. உடன்படிக்கையின்படி இப்போதும் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடாக இருக்கின்ற போதும் கூட, இரண்டாம் நாள் பேச்சுவார்த்தைகளில் இருந்து பிரிட்டனை ஐரோப்பிய ஒன்றியம் தவிர்த்திருந்தது, கேமரூன் வெறுங்கையோடு நாட்டிற்குத் திரும்பினார்.

கேமரூன் ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டுக்கு வந்ததும், ஐரோப்பிய அதிகாரிகளிடம் பிரிட்டனின் அடுத்த பிரதம மந்திரி உடன் "சாத்தியமான அளவிற்கு ஆக்கப்பூர்வமாக" இருக்குமாறு கேட்டுக் கொண்டார். “இந்த நாடுகள் நமது அண்டைநாடுகள், நமது நண்பர்கள், நமது கூட்டாளிகள், நமது பங்காளிகள், வர்த்தகம், கூட்டுறவு மற்றும் பாதுகாப்பு என்று வரும் போது நாம் இவர்களுடன் சாத்தியமான அளவிற்கு நெருங்கிய உறவைக் கொண்டிருப்போம் என்பதில் நான் மிகவும் நம்பிக்கை கொண்டுள்ளேன், ஏனென்றால் அது நமக்கும் நல்லது, அவர்களுக்கும் நல்லது,” என்று கேமரூன் தெரிவித்தார். “இன்றைய விவாதங்கள் இந்த உத்வேகத்தின் அடிப்படையில் இருக்குமென நான் நினைக்கிறேன்,” என்றார்.

ஆனால் அதற்கு முரண்பட்ட விதத்தில், அதற்கு முந்தைய நாள் ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் தொடங்கி முன்னணி ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து துரிதமாக மற்றும் தண்டிக்கும் வகையில் பிரிட்டனை வெளியேற்றுவதற்கு அழுத்தமளிக்கும் பல தொடர்ச்சியான அறிக்கைகளை வெளியிட்டிருந்தனர்.

ஜேர்மன் நாடாளுமன்றத்தில் (Bundestag) வழங்கிய ஓர் உத்தியோகபூர்வ உரையில், மேர்க்கெல் நேருக்கு நேர் பிரிட்டனுக்கு எதிரான ஒரு கடுமையான நிலைப்பாட்டை எடுத்தார். பிரிட்டன் "இன்னமும்" ஷரத்து 50 ஐ "பதிவு செய்யாமல் இருப்பதைக்" குறித்து ஜேர்மன் அதிகாரிகள் "நனவுபூர்வமாக" இருக்கிறார்கள் என்று தெரிவித்த அவர், ஆனால் "ஷரத்து 50 நடைமுறைகள் தொடங்கப்படாத வரையில் அங்கே எந்த பேச்சுவார்த்தைகளோ அல்லது ஆரம்பக்கட்ட விவாதங்களோ இருக்காது என்பதில்" பிரிட்டனும் "நனவுபூர்வமாக" இருக்க வேண்டும் என்றவர் தொடர்ந்து கூறினார்.

அவரது கருத்துக்களுள் உள்ளமைந்திருந்த அச்சுறுத்தல்களைப் பெரிதும் மூடிமறைக்காமல், சான்சிலர் தொடர்ந்து கூறுகையில், “நமது பிரிட்டன் நண்பர்கள் பிரிட்டனில் அவர்கள் எடுத்துள்ள முடிவுகளுக்கு தங்களைத் தயாரிப்பு செய்து வருகின்ற நிலையில், அவர்களைச் சுற்றியிருப்பவர்களை முட்டாளாக்க வேண்டாமென்று மட்டுந்தான் என்னால் அறிவுறுத்த முடியும்,” என்றார். “நேட்டோவில் நெருங்கிய கூட்டாளிகளில்" ஒன்றாக பிரிட்டன் இருந்தாலும் கூட, ஜேர்மனியும் ஐரோப்பிய ஒன்றியமும் "அவற்றின் சொந்த நலன்களின் அடிப்படையில் தான்" பிரிட்டனுடன் பேரம்பேசும் என்று மேர்க்கெல் வலியுறுத்தினார். பேர்லினின் "கொள்கை நோக்குநிலை ஜேர்மன் பிரஜைகளது, ஜேர்மன் வர்த்தகங்களது நலன்களுக்கு ஏற்ப" இருக்கும் என்றவர் தெரிவித்தார்.

குறிப்பாக அவரது உரையின் ஒரு ஆத்திரமூட்டும் பாகத்தில், இது ஜேர்மன் நாடாளுமன்றத்தில் பங்குபற்றி இருந்த சகல கட்சிகளாலும் கரவொலியுடன் வரவேற்கப்பட்டது, மேர்க்கெல் கூறினார்: “பேரம்பேசல்கள், சுளைகளை மட்டும் ஏற்றுக் கொள்ளும் அடிப்படையில் நகராதவாறு நாம் உறுதிப்படுத்தி வைக்க வேண்டும். ஒரு நாடு ஐரோப்பிய ஒன்றிய குடும்பத்தின் பாகமாக இருக்க விரும்புகிறதா அல்லது இல்லையா என்பதன் மீது கவனிக்கத்தக்க வித்தியாசத்தை அது புரிந்து கொள்ள வேண்டும், புரிந்து கொள்ளும். இக்குடும்பத்தை விட்டு விலக விரும்பும் எவரொருவரும், ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவத்தின் சகல பொறுப்புகளும் நீக்கப்பட வேண்டும், ஆனால் உரிமை மட்டும் இருக்க வேண்டுமென எதிர்பார்க்க கூடாது,” என்றார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு சுதந்திரமான வெளியுறவு மற்றும் இராணுவ கொள்கைக்கு அழுத்தமளிப்பதை நியாயப்படுத்த, மேர்க்கெல், 2000 இல் முறைப்படுத்தப்பட்ட லிஸ்பன் மூலோபாயம் என்றழைக்கப்படுவதை மேற்கோளிட்டுக் காட்டினார், அது ஐரோப்பிய ஒன்றியத்தை பொருளாதாரரீதியிலும் அரசியல்ரீதியிலும் ஓர் உலக சக்தியாக ஸ்தாபிக்க அழைப்புவிடுத்திருந்தது: “உலகம் ஆழ்ந்த குழப்பத்தை முகங்கொடுப்பதை நாம் அனைவரும் காண்கிறோம். ஐரோப்பாவிலும் நாம் நமது மிக அருகில் உள்ள அண்டைநாடுகளுடன் ஒடுக்குமுறை, நெருக்கடிகள், மோதல்கள் மற்றும் போர்களது விளைவுகளை முகங்கொடுக்கிறோம். துரதிருஷ்டவசமாக ஐரோப்பியர்களாகிய நாம் முன்னெடுக்க வேண்டிய வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கை சவால்களும் உள்ளன …" என்றார்.

டச் நிதி மந்திரி ஜெரொன் திஜிஸ்செல்ப்லோம் உம் மேர்க்கெலின் கடுமையான போக்கை எதிரொலித்ததுடன், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதால் அந்நாட்டின் சர்வதேச வர்த்தகத்தை பாதிப்படைய செய்ய ஐரோப்பிய ஒன்றியம் உத்தேசிக்க வேண்டியுள்ளது என்பதை தெளிவுபடுத்தினார். பிரிட்டன் வெளியேறியதும் வசதியான நிபந்தனைகளைக் கொண்டு ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தகம் செய்யலாமென அவர் நினைத்தால், ஃபாராஜ் "அவரது சொந்த உலகில் வாழ்கிறார்" என்றாகும் என்று கூறி, ஐக்கிய இராச்சிய சுதந்திர கட்சி (UKIP) தலைவர் நைஜல் ஃபாராஜ் ஐ அவர் தாக்கினார். “பிரிட்டன் இன்னமும் ஒரு உலகளவில் பரந்த ஒரு சாம்ராஜ்ஜியம் என்றும், அது அனைத்தையும் கட்டளையிட முடியும் என்றும்" ஃபாராஜ் "நினைக்கிறார், அவ்வாறு அது நடக்கப் போவதில்லை,” என்று எரிச்சலூட்டும் விதமாக திஜிஸ்செல்ப்லோம் தெரிவித்தார்.

கேமரூன் மற்றும் ஜூங்கர் இருந்தபோதே இரவு விருந்து கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் தலைவர் டஸ்க் கூறுகையில், அக்குழுவிலிருந்து வெளியேற வாக்களித்ததற்காக பிரிட்டனை ஒரு முன்னுதாரணமாக ஆக்க, ஓர் உலகளாவிய பின்னடைவை தூண்டி விலையாக கொடுத்தாவது, ஐரோப்பிய ஒன்றியம் பிரிட்டனுக்கு ஆழ்ந்த பொருளாதார பாதிப்பை ஏற்படுத்த விரும்புவதை உறுதிப்படுத்தினார். “பிரிட்டன் வெளியேறுவது என்பது உலகெங்கிலும் சாத்தியமான அளவிற்கு எதிர்மறை விளைவுகளுடன், கணிசமான அளவிற்கு ஐக்கிய இராச்சியத்தின் வளர்ச்சிக் குறைவு என்பதைக் குறிக்கும்,” என்பதை அந்த இரவு விருந்தில் கலந்து கொண்ட ஐரோப்பிய அதிகாரிகள் தெளிவுபடுத்தி இருப்பதாக டஸ்க் தெரிவித்தார்.

பிரிட்டன் விரைவாக ஷரத்து 50 ஐ பிரயோகித்து பேரம்பேசல்களுக்கு வர வேண்டுமென ஐரோப்பிய பாராளுமன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது, இதற்கு முன்னதாக ஃபாராஜ் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கமிஷன் தலைவர் ஜூங்கர் இன் ஆக்ரோஷமான அறிக்கைகள் நிறைந்த ஒரு குழப்பமான நாடாளுமன்ற அமர்வு நடந்தது.

“நாம் ஒரு வித்தியாசமான உறவை எவ்வாறு பேசுவது என்பதில் முதிர்ந்த மற்றும் உணர்வுபூர்வமான மனோபாவத்தைக் கொண்டிருக்க" ஃபாராஜ் அழைப்பு விடுத்தார், ஆனால் பின்னர் அவர் ஐரோப்பிய பாராளுமன்றவாதிகளின் முகத்துக்கு நேராக அவர்களைக் குற்றஞ்சாட்டும் விதத்தில் கூறுகையில், “உங்களில் பெரும்பாலானவர்கள் உங்கள் வாழ்வில் ஒருபோதும் சரியாக வேலை செய்திருக்கவில்லை,” என்றார். மத்திய கிழக்கு அகதிகளை ஐரோப்பாவிற்குள் அனுமதிப்பதற்காக மேர்க்கெலுக்கு எதிராக அவர் புலம்பெயர்ந்தோர்-விரோத வசைபாடலை ஒன்றை தொடங்கியதுடன், யூரோ செலாவணியை "ஒரு தோல்வியாக" குறிப்பிட்டார். “கிரீஸில் மற்றும் மத்திய தரைக்கடலின் ஏனைய இடங்களில் வறுமையைத் திணிக்கும் ஒரு கொள்கையை, நீங்கள் சிறப்பாக செய்துள்ளீர்கள்,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

பிரிட்டன் வெளியேறுவது மீதான வெகுஜன வாக்களிப்பின் வாக்குகளை மதிக்குமாறு அழைப்பிடும் ஒரு கருத்தை வரவேற்ற UKIP நாடாளுமன்றவாதிகள் பக்கம் திரும்பி, ஜூங்கர், அவரது பங்கிற்கு, புரூசெல்ஸை விட்டு வெளியேறுமாறு அவர்களிடம் கூறினார். “இங்கே நீங்கள் கரவொலி எழுப்புவது இதுவே கடைசி முறையாக இருக்கும்… ஒரு விதத்தில் இங்கே நீங்கள் இருப்பதே உண்மையில் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நீங்கள் வெளியேறுவதற்காக முரண்டு பிடித்துக் கொண்டிருந்தீர்கள், பிரிட்டிஷ் மக்களும் வெளியேறுவதற்கு ஆதரவாக வாக்களித்து விட்டார்கள். பின் நீங்கள் ஏன் இங்கே இருக்கிறீர்கள்?” என்று சீறினார்.

பிரிட்டனை நோக்கிய ஐரோப்பிய ஒன்றியத்தின் பழிவாங்கும் விதமான கொள்கையும், பிரிட்டிஷ் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுக்கு இடையே தீவிரமடைந்து வரும் மோதல்களும், குறிப்பாக 2008 நிதியியல் நெருக்கடி மற்றும் அதற்குப் பின்னர் திணிக்கப்பட்ட சிக்கன கொள்கைகளுக்குப் பின்னர் இருந்து, ஐரோப்பிய ஒன்றியம் எங்கிலும் கட்டமைந்து வந்துள்ள ஆழ்ந்த பிளவுகள் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது. இப்போது பிரிட்டன் மற்றும் புரூசெல்ஸ் க்கு இடையே மட்டுமல்ல, ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் பதட்டங்கள் வெடித்து வருகின்றன.

திங்களன்று போலாந்து வெளியுறவு மந்திரி Witold Waszczykowski கூறுகையில், “தவறுகளுக்காக" “ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையை" குற்றஞ்சாட்டியதுடன், “குறைந்தபட்சம் ஐரோப்பிய தலைமையின் ஒரு பகுதி, விளைவுகளை அனுபவிக்க வேண்டும்,” என்றார். பிரிட்டன் வெளியேறுவது மீதான வாக்கெடுப்பை ஒரு "தோல்வியாக" குறிப்பிட்ட அவர், “புதிய அரசியல்வாதிகளும் வல்லுனர்களும்… பிரிட்டன் மற்றும் ஐரோப்பா இரண்டுக்குமான புதிய முன்மொழிவுகள் மீது வேலை செய்ய வேண்டும்,” என்று கோரினார். “ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதான அதிகாரத்தை கமிஷனுக்கு அல்ல, ஐரோப்பிய கவுன்சிலுக்கு" வழங்கும் “ஒரு புதிய ஐரோப்பிய உடன்படிக்கை" உட்பட ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் போலாந்து "தீவிரமான" முன்மொழிவுகளை முன்வைக்கும் என்றவர் அறிவித்தார்.

போலாந்து மற்றும் பால்டிக் நாடுகளில் உள்ள வலதுசாரி மற்றும் இழிவார்ந்த ரஷ்ய-விரோத அரசாங்கங்கள், போலாந்தில் நடக்க உள்ள நேட்டோ உச்சி மாநாட்டிற்கு முன்னதாக ரஷ்யாவிற்கு எதிரான இராணுவ ஆயத்தப்படுத்தலை பிரிட்டன் வெளியேற்றம் பலவீனப்படுத்தும் என்பது மட்டுமின்றி, மாறாக ஒட்டுமொத்தமாக நேட்டோ கூட்டணியையே பலவீனப்படுத்தும் ஓர் அச்சுறுத்தலாக அதை கருதுகின்றன. லித்துவேனிய ஜனாதிபதி தாலியா க்ரேபௌஸ்கைய்ட் புரூசெல்ஸ் க்கு வந்தபோது, அவரிடம் செய்தியாளர்கள், இறுதியில் பிரிட்டன் மனம் மாறி ஐரோப்பிய ஒன்றியத்திலேயே இருக்க முடிவெடுக்கும் சாத்தியக்கூறு உள்ளதா என்று கேட்டபோது, அவர் மேர்க்கெலின் தொனியிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு தொனியை எடுத்து, “வரவேற்கிறோம், திரும்பவும் வரவேற்கிறோம்!” என்றுரைத்தார்.

திங்களன்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி உடனான சந்திப்புக்குப் பின்னர் நேட்டோ பொது செயலாளர் ஜென்ஸ் ஸ்டொல்டென்பேர்க் கூறுகையில், இராணுவ கூட்டணி இலண்டன் உடனான அதன் உறவுகளில் எந்தவொரு மாற்றத்தையும் விரும்பவில்லை என்று தெளிவுபடுத்தினார். “ஐக்கிய இராச்சியம் ஒரு பலமான மற்றும் பொறுப்பான கூட்டாளியாகும், ஐரோப்பிய நேட்டோ கூட்டாளிகளது பாதுகாப்பு செலவுகளில் ஏறத்தாழ ஒரு கால்வாசிக்கு அது பொறுப்பேற்றுள்ளது,” என்று அறிவித்த அவர், தொடர்ந்து கூறுகையில், “ஒட்டுமொத்த ஐரோப்பாவிற்கும் வார்சோ உச்சி மாநாடு மிக முக்கியமானதாக இருக்கும் ஏனென்றால் நாங்கள் தடுப்புமுறை மற்றும் பாதுகாப்பு முறை மீதும், எமது அண்டைநாடுகளுடனான ஸ்திரப்பாட்டை முன்வைப்பதன் மீதும், மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் எவ்வாறு எங்களால் மேற்கொண்டு கூட்டுறவை பலப்படுத்தி விரிவாக்குவது என்பதன் மீதும் முடிவெடுப்போம்,” என்றார்.