ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

War and the Democratic National Convention

போரும், ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாடும்

Andre Damon
27 July 2016

ஜனநாயகக் கட்சியின் 2016 தேசிய மாநாடு மிக கவனமாக எழுதப்பட்டு அரங்கேற்றப்படும் விளம்பரப்படுத்தலாக நடந்து வருகிறது, இதில் வோல் ஸ்ட்ரீட் மற்றும் பெண்டகனின் இடுப்பில் ஏறி அமர்ந்துள்ள இந்த வலது சாரி முதலாளித்து கட்சி, ஏதோவிதத்தில் மக்களின் பிரசித்தி பெற்ற பிரதிநிதியாக காட்டிக் கொள்கிறது.

மனிதாபிமான அறிநெறியைக் காட்டிக் கொள்வதும் மற்றும் அனைத்துலக சகோதரத்துவத்திற்கு உணர்வுபூர்வமான அறிவிப்புகளை வழங்குவதற்கும் இடையே, என்ன மாதிரியான வெளியுறவு கொள்கையை கிளிண்டன் நிர்வாகம் பின்பற்றும் என்பதைக் குறித்த எந்தவொரு ஆழ்ந்த விவாதமும் மறைக்கப்பட்ட ஒரு விடயமாக உள்ளது.

பதினைந்து ஆண்டுகளாக “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" நடத்தப்பட்டு வந்துள்ள போதினும், ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா மற்றும் லிபிய ஜனாதிபதி மௌம்மர் கடாபி கொல்லப்பட்டமை அல்லது வெள்ளை மாளிகையின் டிரோன் படுகொலை திட்டங்களைக் குறித்து அம்மாநாட்டின் பிரதான பேச்சாளர்கள் ஒன்றுமே பேசவில்லை. அமெரிக்க வரலாற்றிலேயே, இரண்டு பதவி காலம் முழுவதிலும் போரில் ஈடுபட்டிருந்த முதல் நிர்வாகம் ஒபாமா நிர்வாகமாகும் என்ற உண்மைக்கிடையே இந்த மவுனம் அனைத்தையும் விட மிகவும் அசாதாரணமானதாக உள்ளது.

எவ்வாறிருப்பினும் அணுஆயுத சக்திகளுக்கு இடையிலான உலக போர் அபாயத்தை அதிகரிக்கும் விதத்தில் ரஷ்யா மற்றும் சீனாவுடனான இராணுவ பதட்டங்கள் தீவிரமடைந்து வருவதே, 2016 தேர்தல்களின் பின்புலம் என்பது நிஜமான கொள்கை முடிவெடுப்பாளர்களுக்கு நன்கு தெரியும்.

பெரிதும் ஸ்திரமற்ற வலதுசாரி அரசாங்கங்களான லாட்வியா, லித்துவேனியா அல்லது எஸ்தோனியா ஆட்சிகள் ரஷ்யாவிற்கு எதிராக ஓர் ஆத்திரமூட்டலை தொடங்கினால், ரஷ்யாவுடன் போருக்குள் இறங்க ஒபாமா நிர்வாகம் பொறுப்பேற்றுள்ளது என்ற உண்மையைக் கூறுவதைக் கூட அம்மாநாட்டு பேச்சாளர்களில் யாரும் பொருத்தமாக பார்க்கவில்லை.

அதேபோல சீன-விரோத கூட்டணியை பலப்படுத்துவதற்காக, அமெரிக்க துணை ஜனாதிபதி, பிலிப்பைன்ஸ் இன் காங்கிரஸைக் கலைக்க அச்சுறுத்தி உள்ளவரும் மற்றும் சுமார் 1,700 பேரை படுகொலை செய்ததற்காக சுயபெருமை பீற்றிக் கொள்பவருமான பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டுரேற்ற (Rodrigo Duterte) ஐ இவ்வாரம் சந்திக்கிறார் என்ற உண்மையையும் யாரும் குறிப்பிடவில்லை.

வல்லரசுகளுக்கு இடையிலான மோதல் அதிகரித்து வருவதைக் குறித்து வெளியுறவு கொள்கை இதழ்கள், இராணுவ சிந்தனை குழாம்கள் மற்றும் உயர்மட்ட இராணுவ அதிகாரிகளிடம் இருந்து சமீபத்தில் எச்சரிக்கைகள் வந்துள்ள நிலையில், அடிப்படையான வெளியுறவுக் கொள்கை பிரச்சினைகள் குறித்து எந்த விவாதமும் இல்லாமல் இருப்பது அனைத்தினும் மேலாக அதிர்ச்சியூட்டுகிறது.

பசிபிக்கில் அமெரிக்க படைகளுக்கான முன்னாள் தளபதி டென்னிஸ் பிளேயர் இம்மாதம் காங்கிரஸ் விவாதக்குழுவிடம் கூறுகையில், தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸ் உரிமைகோரும் பல பாறைக்குன்றுகள் மீது சீனாவும் அதன் உரிமைகோரல்களை வலியுறுத்த முனைந்தால், நடப்பு கொள்கைக்கு முரண்பட்ட விதத்தில், அமெரிக்கா "இராணுவ படையைப் பிரயோகிக்க விரும்பக்" கூடும் என்றார். உலகின் எதிர் பக்கம் இருக்கும் ஓர் அமெரிக்க கூட்டாளியால் ஐயப்பாட்டுடன் கோரப்படும் எல்லை உரிமைக்கோரல்கள் மீதெழும் அத்தகையவொரு மோதல், நூறு மில்லியன் கணக்கான அல்லது பில்லியன் கணக்கானவர்கள் உயிரிழக்கும் ஓர் அணுஆயுத தாக்குதலில் போய் முடியும் பெரும் சாத்தியக்கூறைக் கொண்டுள்ளது.

அவர்களது அறிக்கைகள் என்ன எடுத்துக்காட்டுகின்றன என்ற அனுமானங்கள் கூட இல்லாமல், சீன அரசு-கட்டுப்பாட்டில் உள்ள குளோபல் டைம்ஸ் இல் சீன அதிகாரிகள் அறிவிக்கையில், “பிரச்சினைகளைப் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்க முடியுமென சீனா நம்பினாலும், எந்தவொரு இராணுவ மோதலுக்கும் அது தயாராக இருக்க வேண்டும்,” என்கின்றனர்.

சமீபத்திய Foreign Affairs இதழில், John J. Mearsheimer மற்றும் Stephen M. Walt குறிப்பிடுகின்றனர், “அமெரிக்க இரத்தத்தைச் செலவிடுவதற்கு மதிப்புடைய பிராந்தியங்களும் மற்றும் பாதுகாப்பதற்குரிய புதையலைக் கொண்ட பிராந்தியங்களும் மேற்கத்திய செல்வாக்கு எல்லைக்கு வெளியே உள்ளன.” அந்த எழுத்தாளர்கள் தொடர்ந்து குறிப்பிடுகையில், “ஐரோப்பா மற்றும் வடகிழக்கு ஆசியாவில் பிரதான கவலையே, மேற்கு மண்டலத்தில் பெரிதும் அமெரிக்கா மேலாதிக்கம் செலுத்துவதைப் போல, அவற்றின் பிரதேசத்தில் மேலாதிக்கம் செலுத்தும் ஒரு பிராந்திய மேலாதிக்க சக்தி உருவாகிவிடுமோ என்பது தான்" என்றனர்.

ரஷ்யாவை பொறுத்த வரையில், முன்னணி தளபதிகள் சீனாவிற்கு எதிராக முன்மொழியப்பட்டு வரும் வெறித்தனமான கொள்கையை விட இன்னும் அதிகமானவற்றிற்கு அழைப்புவிடுக்கின்றனர். ஐரோப்பாவிற்கான நேட்டோவினது பிரதான கூட்டுப்படையின் முன்னாள் துணை தளபதி (Deputy Supreme Allied Commander) ரிச்சார்ட் ஷெரீப், 2017: ரஷ்யா உடன் போர்: மூத்த இராணுவ கட்டளையிடமிருந்து வரும் ஓர் அவசர எச்சரிக்கை என்று அப்பட்டமாக தலைப்பிட்ட ஒரு நூலில் அடுத்த ஆண்டு ரஷ்யாவுடன் போர் தொடங்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்காப்புக்காக ஆயுதமேந்தல் என்று தலைப்பிட்டு அமெரிக்காவை மையமாக கொண்ட அட்லாண்டிக் கவுன்சில் சிந்தனை குழாம் இவ்வாரம் வெளியிட்ட ஒரு மூலோபாய ஆவணத்தில் ஷெரீப் இப்புள்ளிகளை அபிவிருத்தி செய்திருந்தார். அமெரிக்காவின் பால்டிக் கூட்டாளிகள் மீது "இரவோடு இரவாக" படையெடுக்க தகைமையையும் மற்றும் அனேகமாக உத்தேசத்தையும் ரஷ்யா கொண்டிருக்கிறது என்று அவர் அறிவித்தார். இதற்காக அவர், மாற்ற மடத்தனமான ஹிட்லேரிய வகைப்பட்ட திட்டம் ஒன்றில், இப்போது சர்வாதிகார வலதுசாரி அரசாங்கத்தின் பிடியில் இருக்கும் போலாந்தை ரஷ்யாவிற்கு எதிராக ஓர் இராணுவ தாக்குமுகப்பாக மாற்றுவதற்கு முன்மொழிகிறார். போலாந்து முன்கூட்டியே "ரஷ்ய இலக்குகளைத் தாக்கும் உரிமையைப் பெற்று", அணுஆயுதங்களுக்கான அரங்காக மாற்றப்பட்டு, ரஷ்யாவிற்குள் "ஒரு சாத்தியமான இலக்குகளின் பட்டியலை" வெளியிட வேண்டும் என்கிறார்.

தேர்தலுக்குப் பின்னர் ரஷ்யா உடனான ஒரு போரின் சாத்தியக்கூறு கொள்கை வட்டாரங்களில் பகிரங்கமாக விவாதிக்கப்பட்டு வருகிறது, “ரஷ்யாவும் அமெரிக்காவும்: சென்று சேருமிடம் மோதலா?” என்று தலைப்பிட்டு National Interest அதன் மிக சமீபத்திய கட்டுரையில் குறிப்பிடுகையில், “இரு தரப்பின் உறவுகள் அபாயகரமான மட்டங்களுக்கு மோசமடைந்துள்ளன… மாஸ்கோவ் இறங்கி வர மறுத்தால், வாஷிங்டன் அதன் நலன்களைப் பாதுகாக்க என்னவெல்லாம் அவசியமோ அதை செய்ய வேண்டும்,” என்கிறது.

உண்மையில் நினைவுகூரத்தக்க வரலாறில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக ஆவதற்காக ஹிலாரி கிளிண்டன் தான் இராணுவ தலையீட்டை மிகவும் பகிரங்கமாக வக்காலத்து வாங்கி உள்ளார்.

Alter Egos: Hillary Clinton, Barack Obama and the Twilight Struggle Over American Power இன் ஆசிரியர் மார்க் லாண்ட்லர் இந்த வருட தொடக்கத்தில் கூறியதைப் போல, “இஸ்லாமிக் அரசு மீது குண்டுவீசுவது பற்றிய அவர்களின் எல்லா வெற்றுரைகளைப் பொறுத்த வரையில், டோனால்ட் ஜே. ட்ரம்ப் உம் சரி அல்லது டெக்சாஸ் செனட்டர் டெட் க்ரூஜ் உம் சரி, வெளிநாட்டில் இராணுவத்தை ஈடுபடுத்துவதில் கிளிண்டன் காட்டிய விருப்பத்திற்கு நெருங்கிய அளவில் கூட அவர்களது விருப்பத்தை எங்கேயும் எடுத்துக்காட்டவில்லை.”

ஒபாமாவை விட, இராணுவ பலத்தை மிக பகிரங்கமாக அவர் ஆதரிப்பதை கிளிண்டன் வெளியுறவுத்துறை செயலராக இருந்து நிரூபித்துள்ளார். “போர் மற்றும் சமாதானம் குறித்த அடிப்படை பிரச்சினைகளில்" ஒபாமாவினது "உள்ளுணர்வு கட்டுப்பாடுகளுக்கு முரண்பட்ட" விதத்தில் "கிளிண்டனினது மிகவும் செயலூக்கத்துடனான மெய்யியலைக் கொண்டது…" என்று லாண்ட்லர் எழுதுகிறார்.

நியூ யோர்க் டைம்ஸ் மே மாதம் குறிப்பிட்டதைப் போல ஒபாமா “திரு. புஷ்ஷை விட அல்லது வேறெந்த அமெரிக்க ஜனாதிபதியை விட இப்போது நீண்டகாலமாக போரில் இருந்துள்ளார்" என்ற உண்மை, இராணுவ கட்டுப்பாட்டுக்கான ஒரு முன்னுதாரணமாக முன்வைக்கப்படுகிறது என்றால் அது கிளிண்டன் ஒரு போர்வெறியர் என்று சான்றளிக்கவே ஆதாரமாக அமைகிறது.

ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் ஒபாமாவை விட அதிக ஆக்ரோஷமான இராணுவ தலையீட்டுக்கு கிளிண்டன் அழைப்புவிடுத்ததற்கு கூடுதலாக, "சிரியாவின் உள்நாட்டு போரில் கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆயுதங்களைப் பாய்ச்சுவதற்கும் அப்பெண்மணி அழுத்தமளித்தார் (இந்தவொரு யோசனையை ஒபாமா ஆரம்பத்தில் மறுத்திருந்தாலும், பின்னர் அரைமனதாக அதை ஏற்றுக் கொண்டார்.)” “நீங்கள் போரில் இறங்க போவதாக கூறினால், நீங்கள் இறங்கிவிட வேண்டும். அங்கே விருப்பத் தெரிவுகள் கூடாது,” என்று கூறி, சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாத் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தினார் என்று 2013 இல் அமெரிக்க இராணுவ/உளவுத்துறை எந்திரம் அறிவித்ததற்குப் பின்னர், சிரியாவில் விமானம் பறக்க தடைவிதிக்கப்பட்ட ஒரு மண்டலத்தை அமைக்குமாறு கிளிண்டன் ஒபாமாவிடம் தனிப்பட்டரீதியில் கோரி இருந்தார். 

ஆப்கானிஸ்தான் போர் குறித்து ஒபாமாவின் மீது ஆரம்ப மீளாய்வை முன்வைத்த ஒரு முன்னாள் உளவுத்துறை பகுப்பாய்வாளர் ப்ரூஸ் ரைடெல் (Bruce Riedel) லாண்ட்லரிடம் கூறுகையில், “[இராணுவ] பிரச்சினைகளில் அவர்களை விட குறைவான அதிகாரம் கொண்டிருந்த ஆனால் அவர்களை விட அதிகமாக ஆர்வம் கொண்டிருந்த ஒரு வெளியுறவுத்துறை செயலரை அவர்கள் பெற்றிருந்தார்கள் என்பது இராணுவத்திற்கு … ஆச்சரியங்களில் ஒன்றாக இருந்தது…,” என்றார்.

யேல் பேராசிரியர் டேவிட் ப்ரோம்விச் National Interest இல் எழுதுகையில், கிளிண்டனின் கொள்கைகளுக்கும், அவரது "இடது" அனுதாபிகளுக்கும் மற்றும் 2003 ஈராக் படையெடுப்பைத் தொடங்க உதவிய நவபழமைவாதிகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பு அதிகரித்து வருவதைக் காண்பதாக குறிப்பிட்டார்.

“ட்ரம்ப் ஐ தோற்கடிக்க, ஒருபோதும் முற்றிலும் வேறுபட்டிராத இரண்டு வெளியுறவு கொள்கை அணிகளை, அதாவது 2001-2006 இன் புஷ்-ஷென்னி வெளியுறவு கொள்கையைக் கட்டளையிட்டு வந்த நவபழமைவாதிகளையும், ஈராக் போர், லிபியா போர், ஒரு விரிவாக்கப்பட்ட ட்ரோன் படுகொலை திட்டங்கள் மற்றும் ஒபாமா நிர்வாகம் அனுமதித்ததைக் காட்டிலும் சிரியாவில் இராணுவரீதியில் தலையீடு செய்வதை ஆதரித்த தாராளவாத தலையீட்டாளர்கள் என இவ்விரு அணிகளையும் இணைக்கும் ஓர் அசாதாரணமான கூட்டணியை கடந்த சில வாரங்கள் உருவாக்கியுள்ளன.”

அவர் எழுதுகிறார், “சமீபத்திய கட்டுரைகள் மற்றும் துணை-தலையங்கங்களின் ஒரு பிரவாகத்தில், ரஷ்ய அரசாங்கம் ட்ரம்ப் பிரச்சாரத்துடன் அணிதிரண்டுள்ளது என்பதை வலியுறுத்தியும் மற்றும் கிளிண்டனை தொல்லைப்படுத்துவதற்காக ஜனநாயக தேசிய கமிட்டி மின்னஞ்சல்களை திருடி கசிய விட்டதன் மூலமாக ரஷ்யா இத்தேர்தலில் தலையீடு செய்துள்ளது என்று வலியுறுத்தியும் இவர்கள் ஹிலாரி கிளிண்டனின் அடித்தளத்திற்கு தயாரிப்பு செய்து வருகிறார்கள்,” என்றார்.

இப்பிரச்சாரத்திற்கு நியூ யோர்க் டைம்ஸ் தலைமை கொடுக்கிறது, அதன் எப்போதைக்குமான கிளிண்டன் அனுதாபி பௌல் க்ரெக்மன் அறிவிக்கையில் டோனால்ட் ட்ரம்ப் ஒரு "சேர்பிய வேட்பாளர்" என்றும், புட்டினின் ஒரு பினாமி என்றும், இவரை எதிர்க்க கிளிண்டன் தீர்க்கமாக இருப்பதாகவும் அறிவித்தார்.

இந்த கருத்துரு நேற்று இரவு DNC இல் முன்னாள் வெளியுறவுத்துறை செயலர் Madeline Albright இன் சுருக்கமான குறிப்புகளில் வடிவமெடுத்தது. பனிப்போர் முடிவுக்குப் பின்னர் கேட்டிராத முரட்டுத்தனத்துடன் Albright ரஷ்யாவைக் கண்டித்தார். "கம்யூனிஸ்ட்களால் ஒன்றுமறியாத செக்கோஸ்லோவாகியா அபகரிக்கப்பட்டது” என்று அறிவிக்கும் Albright, “இரும்பு திரையிட்ட ஒருவரிடம் இருந்து அதை மீட்டெடுங்கள், ரஷ்யாவிற்கு பச்சைக்கொடி காட்டினால் என்ன நடக்கும் என்பது எனக்கு தெரியும்,” என்கிறார்.

நீண்டகாலமாக தயாரிப்பு செய்து வந்த தீவிரப்படுத்தல்களை தேர்தல்களுக்கு பின்னர் நடைமுறைப்படுத்த அமெரிக்க ஆளும் வர்க்கம் வரலாற்றுரீதியில் காத்துக் கொண்டிருக்கிறது, வரவிருக்கும் ஆண்டு மிகப்பெரும் அபாயங்களை முன்னிறுத்துகிறது. யார் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பதைப் பொறுத்தில்லாமல், அமெரிக்காவிலும் உலகெங்கிலும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான, சோசலிச இயக்கத்தைக் கட்டமைப்பதில் போருக்கு எதிரான போராட்டம் என்பதே மத்திய பிரச்சினையாக உள்ளது.