ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Democratic convention opens: An agenda of militarism and war

ஜனநாயகக் கட்சி மாநாடு கூடுகிறது: இராணுவவாதம் மற்றும் போருக்கான ஒரு திட்டநிரல்

Barry Grey
25 July 2016

இன்று பிலடெல்பியாவில் தொடங்கிய ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாடு முன்னாள் வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டனை அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகவும், வெர்ஜினிய செனட்டர் டிம் கெய்ன் ஐ (Tim Kaine) அவரது துணை வேட்பாளராகவும் உத்தியோகபூர்வமாக நியமிக்க உள்ளது. ஆயுத சேவைகள் மற்றும் வெளியுறவுத்துறை விவகாரங்கள் கமிட்டியின் ஓர் அங்கத்தவரும், பெருவணிக மற்றும் இராணுவ/உளவுத்துறை ஸ்தாபகத்தின் ஒரு நெருக்கமான கூட்டாளியுமான கெய்ன் நியமிக்கப்படுவதானது, நவம்பரில் கிளிண்டன் ஜனாதிபதியாக தேர்வானால் அவர் தலைமை தாங்க இருக்கும் நிர்வாகத்தினதும் மற்றும் அவரது பிரச்சாரத்தினதும் மையத்தில் உள்ள வலது-சாரி, போர்-ஆதரவு அச்சை எடுத்துக்காட்டுகிறது.

உள்நாட்டு போருக்கு முந்தைய அடிமையாட்சி முறையின் (slavocracy) போதும், மற்றும் இனப்பாகுபாட்டை திணித்த ஜிம் க்ரூவ் சட்டங்களில் இருந்தும் உத்தியோகபூர்வமாக விடுதலை அடைந்ததற்குப் பிந்தைய நூற்றாண்டிலும் ஒரு கட்சியாக அது வகித்த பாத்திரம் உட்பட ஜனநாயகக் கட்சி அமெரிக்காவில் 200 ஆண்டுகால நீண்ட வரலாறைக் கொண்ட ஒரு மிகப் பழமையான முதலாளித்துவ கட்சியாகும். இருபதாம் நூற்றாண்டில், பிராங்க்ளின் டிலானோ ரூஸ்வெல்ட் இன் கீழ் அது தாராளவாத சீர்திருத்த கவசத்தை ஏற்றிருந்தது. ஆனால் முதலாளித்துவத்திற்கு எதிராக சோசலிசத்திற்கான தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கம் எழுச்சி அடைவதைத் தடுப்பதே, லிண்டன் ஜோன்சனின் கீழ் தொடங்கப்பட்ட தலைச்சிறந்த சமூகம் (Great Society) மற்றும் புதிய உடன்படிக்கை (New deal) போன்ற அரசியல் திட்டங்களின் மத்திய நோக்கமாக இருந்தது.

தலைச்சிறந்த சமூகம் உச்சக்கட்டத்தில் இருந்த காலத்திற்குப் பிந்தைய அரை-நூற்றாண்டில், ஜனநாயகக் கட்சி முறையானரீதியில் தாராளவாத சீர்திருத்தவாதத்துடனான அதன் தொடர்பைக் கைவிட்டது. புதிய உடன்படிக்கை மற்றும் தலைச்சிறந்த சமூகம் சம்பந்தப்பட்ட கொள்கைகளுடன் பிணைந்த எஞ்சிய சகல பிணைப்புகளையும் உடைப்பதில் ஹிலாரி கிளிண்டனும் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனும் 1990 களில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தனர். அவர்கள் 1980 கள் மற்றும் 1990 களில் ஜனநாயகக் கட்சி தலைமை குழுவின் முன்னணி அங்கத்தவர்களாக இருந்து, ரீகன் நிர்வாகத்தின் சமூக எதிர்புரட்சி திட்டத்துடன் ஜனநாயகக் கட்சியினரை மறுஅணிசேர்க்க உதவினர்.

குடியரசுக் கட்சியால் டோனால்ட் ட்ரம்ப் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார், இத்தகைய சக்திகளால் கிளிண்டன் பிரச்சாரமோ இப்போது அமெரிக்க சமூகத்தின் இருண்ட சக்திகளுக்கு (dark forces) எதிரான அரசியல் தடுப்பு சுவராக எடுத்துக்காட்டப்படுகிறது.

உண்மையில் கிளிண்டனும் ஜனநாயகக் கட்சியும் யாருக்காக பேசுகிறார்கள்? அவரது பிரச்சாரமும் மற்றும் அவர் தலைமை கொடுக்கும் கட்சியும், இராணுவ/உளவுத்துறை ஸ்தாபகத்தின் பிரதான போக்கு மற்றும் பெருநிறுவன அமெரிக்காவின் சக்தி வாய்ந்த பிரிவுகளது ஒரு கூட்டணியையே பிரதிநிதித்துவம் செய்கின்றன. அடுத்த நான்கு நாட்கள் பிலடெல்பியாவின் வெல்ஸ் ஃபார்கோ மையத்தில் மற்றும் அதனைச் சுற்றி எதிரொலிக்க இருக்கும் சகல வெற்று வாய்சவடால்களுக்குப் பின்னால், ஆளும் வர்க்கத்தின் கவலைக்குரிய மைய பிரச்சினைகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தினது உலகளாவிய இராணுவ நிகழ்ச்சிநிரலைத் தீவிரப்படுத்துவதுடன் சம்பந்தப்பட்டிருக்கும்.

இது, கிளிண்டன் பிரச்சாரத்தின் மற்றும் ஜனநாயக கட்சியின் உத்தியோகப்பூர்வமில்லா ஊதுகுழலாக செயல்படும் நியூ யோர்க் டைம்ஸ் இன் ஞாயிற்றுக் கிழமை பிரதான ஆசிரிய தலையங்கத்தில் தெளிவாக வெளிப்பட்டிருந்தது. ட்ரம்ப் இன் வெளியுறவு கொள்கை-சார்பு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாய நலன்களுக்குப் பொருந்திய விதத்தில் இல்லை என்ற அடித்தளத்தில் அத்தலையங்கம் கிளிண்டனை எதிர்க்கும் குடியரசு கட்சி வேட்பாளர் டோனால்டு ட்ரம்ப் விட கிளிண்டனுக்கு ஆதரவாக வாதிடுகிறது.

அடுத்த ஜனாதிபதி "அதிகரித்தளவில் ஒரு ஆக்ரோஷமான ரஷ்யாவையும், பொருளாதார மற்றும் பாதுகாப்பு அழுத்தங்களின் கீழ் உடைந்து கொண்டிருக்கும் ஒரு ஐரோப்பாவையும்" எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற எச்சரிக்கையுடன் அது தொடங்குகிறது. பின்னர் அது நேட்டோவிற்கான அமெரிக்காவின் கடமைப்பாடுகள் மீது ட்ரம்ப் நிலைநிறுத்தும் நிபந்தனைகளைத் தாக்குகிறது, “இந்தவொரு அணுகுமுறை தேசத்தின் சர்வதேச பாத்திரத்தை அச்சுறுத்துவதுடன், மேற்கு-தலைமையிலான உலக ஒழுங்கை அபாயத்திற்கு உட்படுத்தும்,” என்கிறது.

ரஷ்யாவின் மேற்கு எல்லையில் உள்ள சிறிய பால்டிக் நாடுகள் அமெரிக்காவிற்கான "அவற்றின் கடப்பாடுகளை பூர்த்தி" செய்திருக்கும் பட்சத்தில் அவற்றை ரஷ்யாவிடமிருந்து பாதுகாப்பதற்கான போரில் அமெரிக்கா இறங்கும் என்ற விதத்தில் அமெரிக்க கடமைப்பாட்டை ட்ரம்ப் நிர்வாகம் ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டதற்காக குடியரசுக் கட்சி வேட்பாளரை அது கண்டிக்கிறது. “திரு ட்ரம்ப் இன் அணுகுமுறை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினுக்கு சாதகமாக உள்ளது, நேட்டோ உடைந்தால் அது ரஷ்ய செல்வாக்கை விரிவாக்க இன்னும் அதிகமாக அவரை சுதந்திரப்படுத்தும் என்பதால் அதை அவர் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்,” என்று அப்பத்திரிகை எழுதுகிறது.

லாட்வியா, லித்துவேனியா மற்றும் எஸ்தோனியாவின் மிகவும் பலவீனமான மற்றும் வெறிபிடித்த வலதுசாரி ரஷ்ய-விரோத ஆட்சிகள் முறையிட்டாலோ அல்லது சட்டவிரோதமான ரஷ்ய ஆக்கிரமிப்பை அனுமானித்தாலோ கூட அந்த நாடுகளுக்குள் "தரைப்படை துருப்புகளை" அமெரிக்கா அனுப்பும் என்று ஜனாதிபதி ஒபாமா வழங்கிய மூடிமறைப்பற்ற கடமைப்பாட்டைக் கிளிண்டன் நிர்வாகம் மீளப்பலப்படுத்தும் என்பது டைம்ஸ் இன் கலப்படமற்ற சேர்க்கையாக இருந்தது. ஒட்டுமொத்தமாக வெறுமனே 6.6 மில்லியன் மக்களைக் கொண்ட இந்த நாடுகள் முன்னர் சோவியத் ஒன்றியத்தின் பாகமாக இருந்து, பின்னர் சோவியத் ஒன்றிய கலைப்பு மற்றும் கிழக்கு ஐரோப்பா எங்கிலும் முதலாளித்துவத்தின் மீட்சியால் மட்டுமே சுதந்திரமடைந்தன. இவை முந்தைய அரசுடைமை சொத்துக்களைக் களவாடியும் மற்றும் தொழிலாள வர்க்கத்தை வறுமைக்குட்படுத்தியும் தங்களைத்தாங்களே செழிப்பாக்கிக் கொண்ட செல்வந்த தட்டுக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் குற்றகரமான தன்னலக்குழுக்களால் ஆட்சி செலுத்தப்பட்டு வருகின்றன.

எந்தவொரு நேரத்திலும் ரஷ்யாவுடன் ஓர் அணுஆயுத போருக்கு இட்டுச் செல்லக்கூடிய இந்த கடமைப்பாடு எந்தவொரு பொது விவாதமும் இன்றி அமெரிக்க மக்களின் முதுகுக்குப் பின்னால் செய்யப்பட்டது, அமெரிக்கர்களில் பரந்த பெரும்பான்மையினருக்கு இன்றைய நாள் வரையில் இது இருப்பதே கூட தெரியாது. ஆனால் அமெரிக்க இராணுவமும் உளவுத்துறை அமைப்பும் ரஷ்யாவை ஒரு அரை-காலனிய அந்தஸ்திற்கு குறைத்து ஒட்டுமொத்த யுரேஷிய கண்டம் முழுவதிலும் அமெரிக்க மேலாதிக்கத்தை ஸ்தாபிப்பதை அமெரிக்க திட்டநிரலில் மிக முக்கியமானதாக கருதுகின்றன.

அந்த தலையங்கம் தொடர்ந்து குறிப்பிடுகையில்: “ஜப்பான் மற்றும் தென் கொரியாவிலிருந்து படைகளைத் திரும்ப பெறுவது ஆசியாவின் பாதுகாப்பை ஆழமாக பாதிக்கும் என்ற நிலையில், அப்பகுதிகள் உள்ளடங்கலாக வெளிநாடுகளில் துருப்புகளை நிலைநிறுத்துவதன் தேவையையும் திரு. ட்ரம்ப் கேள்விக்குட்படுத்தி உள்ளார். அத்தகையவொரு நகர்வு முக்கியமாக சீன ஆக்கிரமிப்பு அதிகரித்துவரும் இந்நேரத்தில் அமெரிக்க செல்வாக்கைக் குறைக்கிறது,” என்றது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சீனாவை தனிமைப்படுத்த, சுற்றி வளைக்க மற்றும் அவசியமானால் அதை ஒன்றுமில்லாமல் ஆக்க வாஷிங்டனின் இராஜாங்கரீதியிலான மற்றும் இராணுவ நடவடிக்கையை தொடர்வதற்கு ட்ரம்ப் ஐ நம்ப முடியாது என்கிறது.

அதுமட்டுமின்றி, “துருக்கியில் ஓர் ஆவேசமான ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சிக்குப் பின்னர் 60,000 க்கும் அதிகமானவர்களை தற்காலிகமாக வேலையிலிருந்து நீக்கி, கைது செய்து, விசாரணையின் கீழ் வைத்துள்ள ஒரு நேட்டோ கூட்டாளியான துருக்கியின் ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனுக்குச் சட்டத்தின் ஆட்சியை மதிக்குமாறு அவர் அழுத்தம் அளிக்கப் போவதில்லை என்று" ட்ரம்ப் "கூறியுள்ளார்.” அதாவது அமெரிக்க கட்டளைகளுக்கு கீழ்படிய செய்வதற்கான மற்றொரு நடவடிக்கையாக, எர்டோகனின் ஆட்சியை ஸ்திரமின்மைக்கு உட்படுத்தி இறுதியில் பிரதியீடு செய்வதற்கான ஒரு தீவிரப்பட்ட நடவடிக்கையில் அவர் ஒருசில நிமிடங்களில் படுகொலை செய்யப்படவிருந்த நிலையில் நடந்திருந்த அமெரிக்க ஆதரவிலான ஆட்சிக்கவிழ்ப்பு சதியை ட்ரம்ப் பின்தொடராமல் போகலாம் என்கிறது.

"ஜனநாயக மற்றும் குடியரசு கட்சி நிர்வாகங்கள் இரண்டின் கீழும் அமெரிக்க வெளியுறவு கொள்கையின் ஒரு மத்திய நெறிமுறையாக இருந்துள்ள …, வெளிநாடுகளில் மனித உரிமைகளை ஊக்குவிப்பதை அவர் செய்யப்" போவதில்லை என்று ட்ரம்ப் அறிவுறுத்தி உள்ளதும் டைம்ஸ் ஐ குறைவின்றி தொந்தரவு படுத்துகிறது. பால்கன்களில் இருந்து, லிபியா, சிரியா மற்றும் ஈராக் வரையில் மில்லியன் கணக்கான மக்களைக் கொன்றுள்ள மற்றும் ஒட்டுமொத்த சமூகங்களை அழித்துள்ள காட்டுமிராண்டித்தனமான போர்களை நடத்துவதற்கு பயன்பட்ட, அனைத்து-நோக்கத்துக்குமான சாக்குபோக்குகளை இது கேள்விக்கு உட்படுத்துகிறது.

டைம்ஸ் கருத்துப்படி, ஒபாமாவின் வெளியுறவுத்துறை செயலர், முடிவில்லா போரை அவரின் கொள்கையாக ஏற்றுள்ளார் என்ற உண்மை தான் இக்கட்டுரையைக் கிளிண்டனுக்கு ஆதரவாக ஆக்குகிறது. உண்மையில் சிரியாவின் "விமானம் பறக்க தடைவிதிக்கப்பட்ட பகுதிக்கு" ஆதரவளிப்பதற்கும் மற்றும் சிரிய ஜனாதிபதி பஷார் அல் அசாத்தைக் கவிழ்ப்பதற்கான வாஷிங்டனின் முனைவில் இஸ்லாமிய பினாமி சக்திகளை இன்னும் கூடுதலாக ஆக்ரோஷமாக ஆயுதமேந்த செய்வதற்கு அழுத்தமளிப்பதற்கும் "அவர் ஏதோவிதத்தில் இன்னும் அதிகமாக இராணுவரீதியில் தலையீடு செய்ய விரும்புகிறார்,” “இதற்கு கணிசமானளவிற்கு இராணுவ ஆதாரவளங்களும் மற்றும் சாத்தியமான விமானத் தாக்குதல்களும் தேவைப்படும்.” டைம்ஸ் எதை தவிர்த்துக் கொள்கிறது என்றால் அத்தகைய ஒரு கொள்கையின் நிஜமான சாத்தியக்கூறு ரஷ்யா உடனான ஒரு இராணுவ மோதலுக்கு இட்டுச் செல்கிறது என்பதை ஆகும்.

லிபிய தலைவர் மௌம்மர் கடாபியைப் பதவியிலிருந்து இறக்கி படுகொலை செய்ய படைகளை பிரயோகிப்பதற்கு முடிவெடுப்பதிலும் கிளிண்டன் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தார் என்பதை அப்பத்திரிகை சர்வ சாதாரணமாக ஆனால் அங்கீகரிக்கும் விதத்தில் குறிப்பிடுகிறது, இந்த முடிவு "அந்நாட்டை குழப்பங்களுக்குள் சிக்க வைத்தது,” என்பதை அது ஒப்புக்கொள்கிறது.

இவ்விதத்தில் இரண்டாம் உலக போருக்குப் பின்னர் நூறாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்ட மற்றும் மிகப்பெரும் அகதிகள் நெருக்கடியை உருவாக்கிய போர் குற்றங்களில் கிளிண்டன் வகித்த பாத்திரம் அவரை ஜனாதிபதி ஆக்குவதற்கு ஆதரவான ஒரு வாதத்தில் முன்வைக்கப்படுகிறது.

கிளிண்டன் பிரச்சாரத்தின் இதயதானத்தில் இருந்த உலகளாவிய இராணுவவாத வேலைத்திட்டம், இன மற்றும் பாலின அரசியலை மூர்க்கமாக ஊக்குவிப்பதுடன் பிணைக்கப்பட்டுள்ளது. இந்த சித்தாந்த தாக்குதலின் நோக்கம், கறுப்பினத்தவர் ஆகட்டும் வெள்ளையினத்தவர் ஆகட்டும், உயர்மட்ட நடுத்தர வர்க்கத்தின் தனிச்சலுகை கொண்ட பிரிவுகளை உள்ளடக்கி ஏகாதிபத்திய போருக்கான ஆதரவு அடித்தளத்தை விரிவாக்குவதாகும், இந்த பிரிவுகள் அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலும் தொழிலாளர்களை வறுமைக்குட்படுத்தும் பொருளாதார கொள்கையில் இருந்து கிடைக்கும் ஒரு மிகப்பெரிய பங்கைத் தங்களுக்காக சுருட்டிக் கொள்ள விரும்புகின்றன.

இதன் காரணமாய், பொதுவாக ஊடகங்களும், குறிப்பாக நியூ யோர்க் டைம்ஸூம், அடையாள அரசியலை, குறிப்பாக இன அரசியலை சளைக்காமல் ஊக்குவிக்கக்கின்றன. இனம்தான் அமெரிக்க சமூகத்தின் மேலோங்கிய பிரச்சினை என்று அறிவிக்கும் மற்றும் வெள்ளையினத்தவர் கொந்தளித்து கொண்டிருக்கும் ஒரு தேசமாக அமெரிக்காவை சித்தரிக்கும் ஒரு கட்டுரையோ, தலையங்கமோ அல்லது துணை கட்டுரையோ இல்லாமல் டைம்ஸ் ஒரு நாளைக் கூட கடந்து செல்ல அனுமதிப்பதில்லை. எப்போதும் போலவே, இனவாதம் மற்றும் இனவாத அரசியல் தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்தவும் மற்றும் அணிதிரளாமல் தடுக்கவும் ஆளும் வர்க்கத்தின் போர் ஆயுதங்களாகி உள்ளன.

இப்போது சாண்டர்ஸ் அவரின் முழு ஆதரவை கிளிண்டனின் பின்னால் திருப்பியுள்ளார். ஜனநாயக கட்சியில் "அரசியல் புரட்சி" கிடையாது என்று வெட்கமின்றி பொய்யுரைத்து, அவருக்கு ஒதுக்கப்பட்ட ஆளும் உயரடுக்கான செயல்திட்டத்தைப் பூர்த்தி செய்ய அவரால் முடிந்தமட்டும் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார், அதேவேளையில் "சோசலிச" நன்மதிப்புகளைக் கொண்டு அவரை உத்தரவாதப்படுத்திய மற்றும் கிளிண்டன் மீதான பாரிய வெறுப்பை திசைதிருப்புவதற்காக பிலடெல்பியாவில் நடந்த அவரின் பிரச்சார ஒருங்கிணைப்பை ஊக்குவித்த போலி-இடது அயோக்கியர்களின் கூட்டம், இரண்டு கட்சி முறை மீதான வெறுப்பை பசுமை கட்சிக்குப் பின்னால் திசைதிருப்புகின்றன—இக்கட்சியும், தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான, சோசலிச இயக்கம் அபிவிருத்தி அடைவதைத் தடுப்பதற்காக அர்பணிக்கப்பட்ட மற்றுமொரு முதலாளித்துவ கட்சியாகும்.

ஒரு சோசலிச மற்றும் புரட்சிகர வேலைத்திட்டத்தின் அடிப்படையில் போருக்கு எதிரான ஒரு சர்வதேச இயக்கத்தைக் கட்டியெழுப்பி வரும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்காக போராடி வரும் ஒரேயொரு அரசியல் கட்சி சோசலிச சமத்துவக் கட்சியாகும் (SEP) மற்றும் ஒரேயொரு பிரச்சாரம் ஜனாதிபதியாக ஜெர்ரி வொயிட் மற்றும் துணை ஜனாதிபதி நைல்ஸ் நிமுத் இன் சோசலிச சமத்துவக் கட்சி பிரச்சாரமாகும்.