ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

US and Germany livid over failure of Turkish coup

துருக்கிய சதி தோல்வி மீது அமெரிக்காவும் ஜேர்மனியும் பெரும் சீற்றம்

By Peter Schwarz
19 July 2016

துருக்கியில் தோல்வியடைந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு அமெரிக்க மற்றும் ஜேர்மன் அரசாங்கங்களின் எதிர்வினைகளை மதிப்பிட்டால், அவர்கள் கிளர்ச்சியாளர்களை அரசியல்ரீதியில் ஆதரித்தார்கள் என்பதிலும் அவர்களது வெற்றியை எதிர்பார்த்திருந்தார்கள் என்பதிலும் அங்கே எந்த சந்தேகமும் இருக்க முடியாது.

பேர்லினைப் போலவே அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு சுருக்கமாக கண்டனம் தெரிவிப்பதற்கு முன்னதாக வாஷிங்டனும் நிறைய நேரம் எடுத்துக் கொண்டதுடன், கிளர்ச்சியாளர்கள் தோல்வியடைந்துவிட்டார்கள் என்பது தெளிவானபோது மட்டுந்தான் அவர்கள் ஐயத்திற்கிடமற்ற விதத்தில் பேசினார்கள்.

அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி நடந்த அன்றிரவு முதலில் பேசியவர் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி ஆவார், இவர் மாஸ்கோ இல் இருந்து உள்ளூர் நேரம் இரவு 11 மணிக்கு ஓர் அறிக்கை வெளியிட்டார். அப்போது, அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி வெற்றி பெறும் என்பதாக தெரிந்த நிலையில், கெர்ரி தீர்க்கமாக பேசுவதைத் தவிர்க்க சிரமமெடுத்துக் கொண்டார்.

அவர் "துருக்கிக்குள் தொடர்ந்து ஸ்திரத்தன்மைக்காக" பொதுவான வார்த்தைகளில் அழைப்புவிடுத்தார். துருக்கிய ஜனாதிபதி ரெசிப் தயிர் எர்டோகன் அரைமணி நேரம் கழித்து FaceTime வழியாக அதை எதிர்க்குமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்து, நிலைமை தலைகீழாக திரும்ப தொடங்கிய பின்னர்தான், கெர்ரியும் ஜனாதிபதி பராக் ஒபாமாவும் "துருக்கியில் ஜனநாயகரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு" ஆதரவை அறிவித்தனர்.

ஜேர்மன் அரசாங்கமோ இன்னும் அதிக நேரம் காத்திருந்தது. சனியன்று அதிகாலை, ஜேர்மன் நேரப்படி காலை 1 மணிக்கு தான், அரசாங்க செய்தி தொடர்பாளர் ஸ்ரெபன் சைய்பேர்ட் (Steffen Seibert) ட்வீட்டர் வழியாக ஜனநாயக ஒழுங்கை மதிக்குமாறும் மற்றும் மனித உயிர்களைப் பாதுகாக்குமாறும் அழைப்பு விடுத்து ஒரு சுருக்கமான சேதியை அனுப்பினார். பின்னர் சனிக்கிழமை காலை, வெளியுறவுத்துறை அமைச்சர் பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர் தலையிட்டு, “துருக்கியில் படைகளைக் கொண்டு ஜனநாயக ஒழுங்கை மாற்றுவதற்கான எந்தவொரு முயற்சியையும்" கண்டித்தார். நண்பகலில் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் பத்திரிகைகளுக்கான அவரின் ஒரு சுருக்கமான அறிக்கையில் அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சியைக் கண்டித்தார்.

இராணுவ கூட்டணியின் கட்டளை பிரிவுகளிலும் மற்றும் நாளாந்த போர் நடவடிக்கைகளிலும் அமெரிக்க மற்றும் ஜேர்மன் இராணுவ படைகள் இரண்டுமே ஒத்துழைத்து வரும் நிலையில், நேட்டோவில் உள்ள இரண்டாவது மிகப்பெரிய இராணுவத்தின் பதவியில் இருப்பவர்களுக்குள் ஓர் ஆயுதமேந்திய கிளர்ச்சி என்பது கடுமையான கண்டனம், கருத்துரை மற்றும் விவாதத்தைத் தொடங்கி விட்டிருக்கும் என்று ஒருவர் எதிர்பார்க்கலாம். ஆனால் அவ்விதமான எதுவும் நடக்கவில்லை.

ஜனநாயக பாதுகாப்புக்கான சம்பிரதாயமான அறிக்கைகளைச் சுருக்கமாக வழங்கிய பின்னர், அரசியல்வாதிகள் மற்றும் ஊடக நிறுவனங்களிடமிருந்து வெளியான விமர்சனம் ஏறத்தாழ முழுமையாக அந்த முயற்சிக்கப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பு சதியின் இலக்கில் இருந்த துருக்கிய ஜனாதிபதி எர்டோகனுக்கு எதிராக திரும்பிவிடப்பட்டுள்ளன. அவர்களது முகவர்களின் அரசு மற்றும் இராணுவ எந்திரத்தை எர்டோகன் கழித்தொதுக்கி, அவரது உள்நாட்டு எதிர்ப்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் மற்றும் அவரது வலதுசாரி இஸ்லாமிய ஆதரவாளர்களை பலப்படுத்தவும் அந்த தோல்வியுற்ற ஆட்சிக்கவிழ்ப்பு சதியை அவர் பயன்படுத்தி வருகிறார் என்பதில் அமெரிக்க மற்றும் ஜேர்மன் ஆளும் உயரடுக்குகள் கோபத்துடன் உள்ளன.

அமெரிக்க மற்றும் ஜேர்மன் தரப்பிலிருந்து ஆதரவும் ஊக்கப்படுத்தலும் இல்லாமலேயே துருக்கிய அதிகாரிகள் அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியைத் தொடங்க துணிந்திருக்கலாம் என்பது நினைத்தும் பார்க்க முடியாத ஒன்றாகும். குர்திஷ் பிரச்சினை, சிரிய போர் மற்றும் துருக்கிக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான சமரசம் ஆகியவற்றின் மீது வாஷிங்டன் மற்றும் பேர்லின் இரண்டுக்கும் மற்றும் ஜனாதிபதி எர்டோகனின் அரசாங்கத்திற்கும் இடையிலான பதட்டங்கள் சமீபத்திய வாரங்களில் தீவிரமடைந்துள்ளன.

எவ்வாறிருப்பினும் தெளிவாக கிளர்ச்சியாளர்களும் அவர்களை ஆட்டுவிக்கும் கயிறுகளும் தவறாக கணக்கிட்டிருந்தன. ஆட்சிக்கவிழ்ப்பு சதி திட்டமிட்டவாறு நடக்காததற்கான காரணங்கள் இன்னமும் தெளிவாகவில்லை. அதற்கு தலைமை கொடுத்தவர்கள் அனேகமாக எர்டோகனால் அணித்திரட்ட முடிந்த பொது ஆதரவைக் குறைமதிப்பீடு செய்திருக்கலாம்.

அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி வெற்றி பெற்றிருந்தால், வாஷிங்டனும் பேர்லினும் 2014 உக்ரேன் ஆட்சிக்கவிழ்ப்பு சதியை மற்றும் அதற்கு முந்தைய ஆண்டு எகிப்தில் இரத்தந்தோய்ந்த எதிர்புரட்சியை அவை ஆதரித்ததைப் போலவே இதையும் ஆதரித்திருக்கும். முன்னாள் எகிப்திய ஜனாதிபதி மொஹமத் முர்சி, இவரும் ஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான், இவரை போலவே எர்டோகனும் இப்போது சிறையில் இருந்திருந்தால், அவர்கள் ஒரேயொரு ஜனநாயக மனக்கவலைகளைக் கூட வெளிப்படுத்தி இருக்கமாட்டார்கள். ஜனநாயக பிரச்சினைகள் இப்போது அவர்களின் அரசியல் கணக்கீடுகளுக்கு பொருத்தமாக இருப்பதால் மட்டுந்தான், அதை அவர்கள் எழுப்புகிறார்கள்.

கிளர்ச்சியாளர்கள் மீதான விமர்சனங்களை அரிதாகவே கேட்க முடிகிறது, அதேவேளையில் அட்லாண்டிக் இன் இருபுறமும் உள்ள அரசியல்வாதிகளோ, "பழிவாங்குதல், ஏதேச்சதிகாரமாக நடப்பது மற்றும் அதிகார துஷ்பிரயோகத்திற்கு" எதிராக துருக்கிய ஆட்சியை எச்சரித்து வருவதுடன், “சட்டத்தின் ஆட்சியை மற்றும் ஜனநாயக கோட்பாடுகளை" பின்பற்றுமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர்களது ஒரு கூட்டத்தைத் தொடர்ந்து, கெர்ரி திங்களன்று துருக்கியை மறைமுகமாக எச்சரிக்கையில், அந்த அரசாங்கம் தொடர்ந்து அதன் அரசியல் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக செயல்பட்டால் அது அதன் நேட்டோ அங்கத்துவத்தை இழக்கக்கூடும் என்றார். “நேட்டோ அங்கத்துவம், ஜனநாயக கோட்பாடுகள் மதிக்கப்பட வேண்டுமென எதிர்பார்க்கிறது,” என்றவர் அறிவித்தார்.

போரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வரும் அகதிகளுக்கு கைமாறாக எர்டோகனுடன் ஓர் அருவருப்பான உடன்படிக்கை எட்டுவதில் எந்த சஞ்சலமும் காட்டாத மேர்க்கெல், அதன் அச்சுறுத்தல்கள் மீது துருக்கிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து, மரண தண்டனையை மறுஅறிமுகம் செய்தால், ஐரோப்பிய ஒன்றியத்துடனான இணக்கமான பேச்சுவார்த்தைகள் உடனடியாக முடித்துக் கொள்ளப்படும் என்று அச்சுறுத்தினார்.

ஊடங்கங்கள் அரசாங்க பிரச்சாரத்தை பாய்ச்சுவதுடன், கிளர்ச்சியாளர்களுக்கான அதன் அனுதாபங்களில் எந்த ஒளிவுமறைவும் வைக்காமல், குறிப்பிடத்தக்க எரிச்சலூட்டும் பாத்திரம் வகித்து வருகின்றன.

“துருக்கியில் எதிர்-ஆட்சிக்கவிழ்ப்பு சதி" என்று தலைப்பிட்ட ஒரு ஆசிரிய தலையங்கத்தில் நியூ யோர்க் டைம்ஸ், எர்டோகன் மீதும் ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்குப் பின்னர் அரசியல் எதிர்ப்பாளர்கள் மீதான அவரது அரசாங்கத்தின் ஒடுக்குமுறை மீதும் அதன் சீற்றத்தை மையப்படுத்தி இருந்தது. அந்த சதி தோல்வியடைந்ததன் மீது ஏற்பட்ட அதன் ஆச்சரியம் மற்றும் ஏமாற்றத்தைப் பெரிதும் மூடிமறைக்காமல், அப்பத்திரிகை எழுதியது: “திரு. எர்டோகன் கருத்து சுதந்திரத்திற்கு நட்பானவராக இல்லை, செய்தி ஊடகங்கள் மீது ஈவிரக்கமின்றி கட்டுப்பாட்டை எடுக்கிறார், மனித உரிமைகள் மற்றும் பேச்சு சுதந்திரத்தைத் தடுக்கிறார். அவரது முறையீட்டுக்கு ஆயிரக் கணக்கானவர்கள் விடையிறுத்தபோது, கிளர்ச்சியாளர்கள் பின்வாங்கி, அவர்கள் இன்னமும் ஜனநாயகத்திற்கு மதிப்பு கொடுப்பதை வெளிப்படுத்திய அதேவேளையில், திரு. எர்டோகன் தான் அதன் அர்த்தத்தை அழித்துக் கொண்டிருக்கிறார்.” “ரெசிப் தயிப் எர்டோகன், என்றென்றும் பாதிக்கப்பட்டவர்" என்ற ஓர் ஆசிரிய தலையங்கம் பிரசுரித்த Die Welt, அப்பட்டமாக, “கிளர்ச்சியாளர்கள் தோல்வி அடைந்தார்கள் என்பதற்காக அவர்களை மட்டுமே பழிக்கூறுவது விடயமாகுமா?” என்று கேள்வி எழுப்பியது. "கூடாது" என்று அப்பத்திரிக்கையே அதற்கு பதிலளித்திருந்த போதினும், அது அதை ஜனநாயக அடித்தளத்திலிருந்து செய்யவில்லை, மாறாக "ஒரு ஆட்சிக்கவிழ்ப்பு சதி அடுத்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியைக் கொண்டு வரும்" மற்றும் ஓர் இராணுவ அதிகாரத்தின் வெற்றி மாவீரர்களை உருவாக்குகிறது என்பதற்காக செய்தது.

Welt am Sonntag பத்திரிகை அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியின் அதிகாரிகளை, “படுமோசமான ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சிகளின் பட்டியலில் முதல் பத்து இடங்களில்" வரிசைப்படுத்தி, அவர்களது பயிற்சியற்றதன்மைக்காக (amateurism) குற்றஞ்சாட்டியது. அடுத்த முயற்சி சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தி அது நிறைவு செய்திருந்தது: “எர்டோகன் அவரின் இஸ்லாமிய ஜனாதிபதி சர்வாதிகாரத்தை இறுக்கமாக நிலைநிறுத்தி உள்ள நிலையில், நேற்று டாங்கிகளின் பாதையை மறித்தவர்களே கெமாலிச ஜனநாயகத்தை (Kemalist democracy) மீள்ஸ்தாபிதம் செய்வதற்காக ஒரு நடைமுறைவாத இராணுவ இடைக்காலத்தை விரும்பும் நிலை ஏற்படும்,” என்று குறிப்பிட்டது.

பழமைவாத பத்திரிகையான Frankfurter Allgemeine Zeitung “ஏன் அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி தோல்வியடைந்தது" என்ற தலைப்பில் கிளர்ச்சியாளர்களின் திட்ட-குழப்பத்தன்மையை (dilettantism) குறைகூறி தீர்த்தது. அடுத்த முறை விடயங்களை எவ்வாறு சிறப்பாக கையாள்வது என்று அது ஆலோசனை வழங்கியது.

“'வெற்றிகரமான' ஆட்சிக்கவிழ்ப்பு சதிகளை நடத்திய ஒரு நீண்ட வரலாறைக் கொண்ட ஓர் இராணுவம் எவ்வாறு அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான இதுபோன்றவொரு குழப்பமான முயற்சியை செய்தது என்பது தான் மிக முக்கிய உடனடியான கேள்வி,” என்று ராய்னெர் ஹேர்மான் எழுதினார்.

“ஆட்சிக்கவிழ்ப்பு சதி தலைவர்கள் வெற்றி பெற விரும்பியிருந்தால், அவர்கள் மிக முக்கிய அரசு துறைகளை உடனடியாக கட்டுப்பாட்டில் எடுத்திருக்க முயன்றிருப்பார்கள். அவர்களது முன்னோடிகளைப் போலவே, அவர்களும் அரசின் படைத்துறைசாரா உயர் அமைப்புகளை நீக்கியிருப்பார்கள்,” என்று தொடர்ந்து அவர் எழுதினார்.

ஹெர்மன் வரிக்குவரி கிளர்ச்சியாளர்களின் நோக்கங்களை ஆதரிக்கிறார். "Binali Yıldırım கீழ் எர்டோகன் மற்றும் அவரது அரசாங்கத்தின் முக்கிய விமர்சகர்கள் ஆதரிப்பார்கள்" என்ற புள்ளிகளை அவர்களது அறிக்கை உள்ளடக்கி இருந்ததாக அவர் எழுதுகிறார். எவ்வாறிருப்பினும் "வரவிருக்கும் மாதங்களுக்கான ஒரு முன்வரைவையோ அல்லது ஒரு வேலைத்திட்டத்தையோ" முன்வைக்க கிளர்ச்சியாளர்கள் தவறியிருந்தார்கள்.

ஆனால் இதை சீர்செய்துவிட முடியும். “முயற்சிக்கப்பட்ட அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி தோற்கடிக்கப்பட்டது. ஆனால் பெருநகரங்களுக்கு வெளியே பொதுமக்கள் பாதுகாப்பிற்குப் பொறுப்பாக உள்ள இராணுவம் மற்றும் பொலிஸின் ஏனைய பிரிவுகளிடையே அதிருப்தி நிலவுகிறது,”

அவரின் தனிப்பட்ட சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதற்கான ஒரு சாக்குபோக்கை உருவாக்க அவரே அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியை நடத்தியதாக ஏனைய கட்டுரைகள் எர்டோகனைக் குற்றஞ்சாட்டின. அமெரிக்காவின் Politico எழுதியது: “சில மேற்கத்திய அதிகாரிகளும் மற்றும் பகுப்பாய்வாளர்களும் இந்த முறியடிக்கபட்ட ஆட்சிக்கவிழ்ப்பு சதி எர்டோகனின் 'நாடாளுமன்ற நெருப்பாக' (Reichstag fire) மாறும் என்று அனுமானிக்கின்றனர், அதாவது 1933 இல் நாஜி சர்வாதிகாரத்தை ஆரம்பித்து வைக்கும் விதத்தில், ஹிட்லருக்கு படைத்துறைசாரா சுதந்திரங்களை அழிப்பதற்கு ஒரு நியாயப்பாடாக பயன்பட்ட, ஜேர்மனி நாடாளுமன்றத்தை தீயிட்டு கொளுத்திய சம்பவத்தை குறித்த ஒரு மேற்கோளாகும்.” ஜேர்மன் இடது கட்சிக்கு நெருக்கமாக இருக்கும் Junge Welt உம் அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியை சாத்தியமானளவுக்கு ஒரு "துருக்கிய நாடாளுமன்ற நெருப்பாக" வர்ணித்தது. கருச்சிதைவு செய்யப்பட்ட அந்த சதி "நீண்டகாலம் திட்டமிடப்பட்ட எர்டோகனின் ஆட்சிக்கவிழ்ப்பு சதியில் இன்னுமொரு படி" என்று அது எழுதியது.

கெர்ரி, ஸ்ரைன்மையர் மற்றும் ஏகாதிபத்திய நலன்களின் இரக்கமற்ற ஏனைய பாதுகாவலர்களும் அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்குப் பின்னால் நின்றார்கள். கிளர்ச்சியாளர்களின் மையங்களில் ஒன்றான இன்செர்லிக் விமானப்படைத்தளம் 50 அமெரிக்க அணுகுண்டுகளை சேமித்து வைத்திருந்தது என்ற உண்மையே முக்கிய அமெரிக்க நலன்கள் சம்பந்தப்பட்டிருப்பதை எடுத்துக்காட்டுகிறது.

எர்டோகன் ஏதேச்சதிகார அபிலாஷைகளைக் கொண்ட ஒரு பிற்போக்குத்தனமான அரசியல்வாதியாவார். ஆனால் அவருடனான கணக்கை தீர்க்கும் வேலை துருக்கிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தினுடையதே தவிர, துருக்கிய இராணுவம் மற்றும் ஏகாதிபத்திய சக்திகளின் வேலையில்லை. அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சியின் நோக்கமே அடியிலிருந்து எழக்கூடிய அத்தகையவொரு இயக்கத்தை முன்கூட்டியே தடுப்பதாகும். அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி வெற்றி பெற்றிருந்தால், இராணுவம் முன்னர் ஆட்சிப்பொறுப்பை ஏற்றபோது செய்ததைப் போலவே, பத்தாயிரக் கணக்கான போர்குணமிக்க தொழிலாளர்களைக் கைது செய்து, சித்திரவதைக்கு உட்படுத்தி, அவர்களை படுகொலை செய்திருக்கும், வாஷிங்டனும் பேர்லினும் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்திருக்கும்.