ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Merkel calls for German rearmament ahead of NATO summit

நேட்டோ உச்சிமாநாடு கூடவிருக்கும் நிலையில் ஜேர்மன் மறுஆயுதபாணியாவதற்கு மேர்க்கெல் அழைப்பு விடுக்கிறார்

By Johannes Stern
9 July 2016

இந்த வார இறுதியில் வார்சோவில் நேட்டோ உச்சிமாநாடு நடைபெறவிருப்பதை ஒட்டி, சான்சலர் அங்கேலா மேர்கெல் (கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம்) நாடாளுமன்றத்திற்கு அளித்த ஒரு அரசாங்க அறிக்கையில் ஜேர்மனி மறுஆயுதபணியாகலை முடுக்கி விடக் கோரினார். அடுத்த ஆண்டில் சுமார் இரண்டு பில்லியன் யூரோக்கள் வரை இராணுவ நிதி ஒதுக்கீடை விரிவுபடுத்துவது, அத்துடன் 2018க்குப் பின்னர் “கூடுதலாய் 2.5 பில்லியன் யூரோக்களுக்கும் அதிகமான” தொகையை ஒதுக்குவது ஆகியவை தவிர, ஜேர்மன் முப்படைகளும் (Bundeswehr) நேட்டோவுக்கு இணையாக ஈராக், சிரியா, லிபியா, மத்திய தரைக்கடல் மற்றும் ஆப்கானிஸ்தானில் செயலூக்கத்துடன் ஈடுபாடு காட்டும் என்று மேர்கெல் அறிவித்தார்.

வார்சோவில் அறிவிப்பதற்கு நேட்டோ திட்டமிட்டுக் கொண்டிருக்கின்ற ரஷ்யாவுக்கு எதிரான போர்த் தயாரிப்புகளுக்கான நியாயப்படுத்தல் சான்சலரின் உரையின் மையத்தானத்தில் இடம்பிடித்திருந்தது. வேல்ஸில் 2014 இல் நடந்த சென்ற உச்சிமாநாட்டில் நேட்டோ ஏற்கனவே ஏற்றுக் கொண்டிருந்த “ஆயத்த நடவடிக்கை திட்டம்” என்று அழைக்கப்படுகின்ற ஒன்றை ஆரம்பத்தில் இருந்தே மேர்க்கெல் புகழ்ந்து தள்ளினார். குறிப்பாக மேர்க்கெல், “கூட்டணிப் பிராந்தியமெங்கிலும் நிலைநிறுத்தப்படத்தக்க ஒன்பது நேட்டோ அதிவேக தலையீட்டுப் படைகள், அதிஉயர் ஆயத்த கூட்டுச் செயல் படை என்பதான ஒன்று மற்றும் நமது கிழக்கத்திய நேட்டோ கூட்டாளிகளின் படை ஒருங்கிணைப்பு அலகுகளைக் கட்டியெழுப்புவது” ஆகியவற்றை புகழ்ந்தார்.

“இந்த நடவடிக்கைகளுக்கு ஜேர்மனி “கணிசமான ஒரு பங்களிப்பை செய்துகொண்டிருக்கிறது” என்றார். வார்சோவில் “வேல்ஸில் ஒப்புக்கொள்ளப்பட்ட கூட்டணியின் தகவமைவு நடவடிக்கைகள் நீட்டிக்கப்பட இருக்கின்றன”. அடிப்படையாக, “நேட்டோ பால்டிக் அரசுகளிலும் போலந்திலும் தனது பிரசன்னத்தை அதிகரிக்க வழி செய்துதருவது” இதில் இடம்பெற்றிருக்கும். “துருப்புகளை விரைவாக நகர்த்தும் திறன் பெற்றிருப்பது மட்டுமே” போதுமானதல்ல என்பதால் இந்த “மேம்பட்ட முன்னோக்கிய பிரசன்னம்” என்று அழைக்கப்படுவது முக்கியமாகிறது. மாறாக “அங்கு ஏற்கனவே போதுமான உள்ளூர் பிரசன்னம்” இருந்தாக வேண்டும்.

இத்திட்டங்கள் “ஒரு பலபரிமாண பல இணைப்புக்கொண்ட பிரசன்னத்தை” எதிர்நோக்குவதாக மேர்கெல் கூறினார். “பால்டிக் நாடுகள் ஒவ்வொன்றுக்கும் அத்துடன் போலந்திற்கும்...அங்கு நேட்டோ பிரசன்னம் தொடர்வதை உறுதிசெய்வதில் ஒரு கூட்டணி நாடு முன்னிலை வகிக்கும்”. அநேகமாக லித்துவேனியா தான் ஜேர்மனிக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் அந்தக் கூட்டாளி நாடாக இருக்கலாம்.

அவசியப்பட்டால் புதிய படையணிகள் பயன்படுத்தப்படும் என்பதை மேர்க்கெல் தெளிவாக்கினார். “கலப்பு அச்சுறுத்தல்கள் என்று அழைக்கப்படுகின்ற, அதாவது, உக்ரேனில் ரஷ்யா பின்பற்றியதையொத்த சூழல்களுக்கான பதிலிறுப்பையும்” இந்த அணுகுமுறை விருப்பத்துடன் உள்ளடக்கியிருந்ததாக அவர் வலியுறுத்தினார்.

உக்ரேனில் ரஷ்ய-ஆதரவு ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சிற்கு எதிராக ஒரு ஆட்சிக்கவிழ்ப்பிற்கு ஜேர்மனியும் அமெரிக்காவும் ஆதரவளித்தது முதலாகவே, ஜேர்மன் அரசியல்வாதிகளும் மற்றும் ஊடகப் பிரதிநிதிகளும் கிழக்கில் ஒரு இராணுவ பலவந்தத்தையும் அத்துடன் ரஷ்யாவைச் சுற்றிவளைப்பதையும் நியாயப்படுத்துவதற்காக “ரஷ்ய மூர்க்கத்தனத்தில்” இருந்து பாதுகாப்பதற்கான நேட்டோவின் பொறுப்பு என்ற மந்திரத்தை தொடர்ந்து சிரத்தையாக உச்சாடனம் செய்து வருகின்றனர்.

நேட்டோவில் 29வது உறுப்புநாடாக மொண்டெநெக்ரோ விரைவில் இணையவிருப்பதை மேர்கெல் தனது உரையில் முகமலர வரவேற்றார். மேலும் ஏற்கனவே ரஷ்யாவுடன் ஒரு அறிவிக்கப்படாத இராணுவ மோதலில் இருக்கக் கூடியதும் நேட்டோவில் இணைவதற்கு அறிவிக்கப்பட்ட நோக்கத்தையும் கொண்டிருக்கின்ற ஜோர்ஜியா மற்றும் உக்ரேன் ஆகிய இரண்டு அரசுகளின் பிரதிநிதிகளுடன் சேர்ந்து “நேட்டோ-ஜோர்ஜியா குழு மற்றும் நேட்டோ-உக்ரேன் குழுவின் சந்திப்புகள்” வார்சோவில் நடைபெறவிருக்கின்றன.

போலந்திலும், ரோமானியாவிலும் அமெரிக்கா இப்போது கட்டியெழுப்பிக் கொண்டிருக்கும் புதிய ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்புக்கு மேர்க்கெல் ஆதரவை வெளிப்படுத்தினார். “கூட்டணிப் பகுதியில் மக்களை மேம்பட்ட வகையில் பாதுகாப்பதற்கு...மேலதிகமான முக்கியமான நடவடிக்கை” என்று அவர் இதனை அழைத்தார்.

அபத்தமான வகையில், நேட்டோவின் தற்காப்பு இராணுவப்பெருக்க மூலோபாயத்தை “ஆழமான தற்காப்பு கருத்தாக்கம்” என்று மேர்கெல் வருணித்தார். “தற்காப்பு இராணுவப்பெருக்கமும் பேச்சுவார்த்தையும்” ஒன்றுக்கொன்று எதிரெதிரானவை அல்ல, மாறாக “பிரிக்கமுடியாதவை” ஆகும் என்று அவர் கூறிக் கொண்டார். நேட்டோவுக்குள்ளாக இதில் “உடன்பாடு” நிலவுவதாக அவர் கூறினார். இதுதவிர, “ஐரோப்பாவில் நீடித்த பாதுகாப்பு என்பது, ரஷ்யாவுடன் இணைந்து மட்டுமே சாதிக்கப்பட முடியும், எதிராக செயல்பட்டு அல்ல” என்றார் அவர்.

உண்மையில், நேட்டோ ஸ்தாபகத்தின் பிரிவுகள் ரஷ்யாவுக்கு எதிரான ஒரு மூர்க்கமான போரின் சாத்தியத்தைக் குறித்து ஏற்கனவே விவாதித்துக் கொண்டுதான் இருக்கின்றன. உதாரணமாக, அமெரிக்க இராணுவ மூலோபாயவாதியான ஹார்லன் உல்மான், “ரஷ்யாவுக்கு எதிரான ஒரு போருக்கு அமெரிக்கா திட்டமிடுகிறதா?” என்ற தலைப்பில் UPI செய்தி நிறுவனத்திற்கு எழுதிய ஒரு சமீபத்திய கட்டுரையில், பிரிட்டனில் நடந்த ஒரு இராணுவக் கருத்தரங்கில் அமெரிக்காவின் தளபதி ஒருவர் “தற்காப்புக்காக இராணுவத்தைப் பெருக்குவதும் அவசியமானால் ரஷ்யாவைப் போரில் தோற்கடிப்பதும்” அமெரிக்க இராணுவத்தின் உயர்மட்ட முன்னுரிமையாக இருந்தது என்று கூறியிருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

Die Zeit இன் சமீபத்திய பதிப்பில், நேட்டோவின் உள்ளக ஆவணங்களின் அடிப்படையிலான ஒரு கட்டுரையில், மத்தியாஸ் நாஸ், இராணுவக் கூட்டணியானது “தற்காப்பு அணுஆயுதப் பெருக்கத்திற்கு” திரும்பிக் கொண்டிருப்பதாகவும் அது “பால்டிக் அரசுகளில் ரஷ்யாவுக்கு எதிரான ஒரு அணுஆயுத வெடிதிரியை அமைக்க” விரும்புவதாகவும் எழுதுகிறார். ”வார்சோ முடிவுகள் ரஷ்யாவில் வன்முறையான எதிர்வினைகளை — அணுஆயுத சக்திபடைத்த Iskander ஏவுகணைகளை Kaliningrad பகுதியில் நிறுத்துவதில் தொடங்கி மத்திய-தூர அணு சக்திகள் ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவது வரையிலும் — தூண்டும்” என்பது ஏற்கனவே தெளிவாக இருக்கிறது.

நேட்டோவின் போர்க் கொள்கைகளுக்குப் பின்னால் மேர்க்கெல் முழுமையாக ஆதரித்து நிற்கின்றார் என்கிற அதேவேளையில், பெருங்கூட்டணிக்கு இடையிலான வேறுபாடுகளும் நாடாளுமன்ற விவாதத்தில் காணக்கிடைக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேல், சமூக ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகள் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் மூர்க்க நடவடிக்கைகள் கிழக்கு ஐரோப்பாவிலும் மற்றும் உலகின் மற்ற பிராந்தியங்களிலும் ஜேர்மனியின் புவிமூலோபாய மற்றும் பொருளாதார நலன்களுக்கான ஒரு அச்சுறுத்தலாக இருப்பதாகவே பெருமளவில் கருதுகின்றனர்.

“100,000 படைவீரர்கள் வரையான பெருமளவு ரஷ்ய இராணுவ உத்திகள்” குறித்து “தெளிவான பதில்கள்” வேண்டும் என்று SPD இன் நாடாளுமன்றத் தலைவரான தோமஸ் ஓப்பர்மான் கோரினார். அதேசமயத்தில் “மீண்டும் பனிப்போரின் பொறிமுறைக்குள் விழுந்து விடுவதற்கு” எதிராகவும் அவர் எச்சரித்தார். “இந்த நாசகரமான சுற்றில் நாம் மீண்டும் விழுந்து விடாமல் இருப்பதை” உறுதி செய்வதற்குத் தேவையான அனைத்தையும் செய்ய வேண்டும் என்று அவர் அறிவித்தார். ஆயுதப் போட்டி என்பது “ரஷ்யாவுக்கும் ஐரோப்பாவுக்கும், தேவைகளில் கடைசியாகத் தான் இருக்க முடியும்” என்றார் அவர்.

“ரஷ்யாவை நோக்கிய படிப்படியான அணுகுமுறை”க்கு ஓப்பர்மான் விண்ணப்பித்தார். “விளாடிமிர் புட்டின் தரப்பில் உண்மையான விட்டுக்கொடுப்புகள்” இருந்தால், தடைகளை அகற்றுவதற்கான வாய்ப்பிருப்பதை - சென்ற வாரத்தில் தான் ஐரோப்பிய ஒன்றியம் அதனை நீட்டித்திருந்தது - ஓப்பர்மான் உறுதிசெய்தார். தன்னளவில் “அவற்றோடு முடிந்து விடுவதல்ல” என்றார் அவர். தவிரவும் வெளியுறவு அமைச்சர் ஃபிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர் “இராணுவ அணிவகுப்புகளையும் இராணுவ உத்திகளையும் மட்டும் கொண்டு நீங்கள் பாதுகாப்பை வென்றுவிட முடியாது” என்று கூறியது ”முற்றிலும் சரியானது” என்றார். “அமைதி என்பது வெறுமனே இராணுவ வலிமையால் மட்டும் அடைந்து விடக் கூடியது அல்ல என்று சுட்டிக்காட்டியதற்காக அவருக்கு நன்றிக்கடன்பட்டுள்ளதாக” தெரிவித்தார்.

ஸ்ரைன்மையர் ஆலோசனையளிப்பது ஒரு “அமைதிக் கொள்கை”யை அல்ல என்பது ஓப்பர்மானுக்கு நன்றாகவே தெரியும். ஒரு அகன்ற வெளியுறவுக் கொள்கைக்கும் உலகெங்கிலும் ஜேர்மனிக்கான இராணுவப் பாத்திரத்திற்கும் அவர் பல வருடங்களாய் வலியுறுத்தி வந்து கொண்டிருக்கிறார். ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் ஜூன் 13 அன்று வெளியுறவு விவகாரங்கள் இதழில் “ஜேர்மனியின் புதிய உலகளாவிய பாத்திரம்” என்ற ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தார். ஜேர்மனியை ஒரு “பெரும் ஐரோப்பிய சக்தி”யாக வருணிக்கும் அக்கட்டுரை அமெரிக்காவிடம் இருந்து ஜேர்மனியை தள்ளி நிறுத்திக் கொண்டதோடு உலக அரசியலில் ஒட்டுமொத்த தலைமைக்கும் அமெரிக்கா உரிமை கோருகின்ற நிலையை சவால்செய்தது.

நாங்கள் அச்சமயம் கருத்திட்டோம், “மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவை மறுபங்கிடுவதற்கான போர்களுடன் ரஷ்யா மற்றும் சீனா மீதான சுற்றிவளைப்பும் சேர்ந்து ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலேயே மோதல்களுக்கு இட்டுச் செல்கிறது என்பதை ஸ்ரைன்மையரின் இந்தத் திடீர் பாய்ச்சல் தெளிவாக்குகிறது. கூட்டாளிகளாய் இருந்தபோதும் அமெரிக்காவும், ஜேர்மனியும் போட்டியான பொருளாதார மற்றும் அரசியல் நலன்களைக் கொண்டவையாகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் சிதறலும் - பிரிட்டன் விலகினால் இது இன்னும் வேகம்பிடிக்கும் - அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்பின் எழுச்சியும் இந்த மோதல்களை இன்னும் உக்கிரமாக்கும்.”

இடது கட்சியின் நாடாளுமன்றத் தலைவரான சாரா வாகன்கினெக்ட், அமெரிக்காவிடம் இருந்து மிக அதிக தூரம் விலகி வந்ததோடு ரஷ்யாவுடன் கூட்டணி வைக்கவும் ஆலோசனையளித்தார். எதிர்க்கட்சித் தலைவராக மேர்க்கெலை தொடர்ந்து அவர் பேசினார்.

ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோவின் போர்த் தயாரிப்புகளை கடுமையாக விமர்சனம் செய்த சாரா வாகன்கினெக்ட், ஜேர்மனி அமெரிக்காவையே சாத்தியமான எதிரியாகக் கருத வேண்டும் என்று வேண்டினார். 2015 நவம்பரில் காலமான முன்னாள் சான்சலர் ஹெல்முட் ஸ்மித் (SPD), “இன்று அதிகமான அபாயம் ரஷ்யாவைக் காட்டிலும் அமெரிக்காவிடம் இருந்தே வருகிறது. அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரும் விடயங்களில் அதிக வித்தியாசம் இருக்கப் போவதில்லை, வெள்ளை மாளிகை ஒரு அரைக் கிறுக்கராலோ அல்லது அமெரிக்க இராணுவ ஆயுத செல்வாக்கு குழுவின் கைப்பாவையாலோ தான் கைப்பற்றப்பட்டிருக்கும்” என்ற கண்ணோட்டத்தைக் கொண்டிருந்ததாக சாரா வாகன்கினெக்ட் அப்போது கூறினார்.