ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The Munich shooting spree and the Americanization of German society

முனிச் துப்பாக்கிசூட்டு வெறியாட்டமும் ஜேர்மன் சமூகம் அமெரிக்கமயமாதலும்

By Christoph Vandreier and Peter Schwarz
25 July 2016

முனிச் துப்பாக்கிசூட்டு வெறியாட்டம் ஜேர்மனி முழுமையாக ஒரு திகைப்பு மற்றும் அனுதாப அலையைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. அது ஒரு கொடூரச் சம்பவமாக இருந்தது. வெள்ளிக்கிழமை மாலையின் பிற்பகுதியில் 18 வயதான இளைஞர் ஒருவர் துப்பாக்கிச்சூட்டு  வெறியாட்டம் நடத்தியதில் ஒன்பது பேர் இறந்தனர், இதில் பெரும்பாலும் இளைஞர்களாய் இருந்தனர். மேலும் 27 பேர் காயமடைந்தனர், அதில் பத்து பேர் படுகாயமுற்றனர். இச்சம்பவம் ஒரு மாக்டொனால்ட் உணவகத்திலும் ஒரு பிரபல வணிக அரங்கத்திலும் நடந்தேறியது.

இதனையடுத்து ஒரு பாரிய போலிஸ் பதிலிறுப்பு பின்தொடர்ந்தது. கூட்டரசாங்கத்தின் மற்ற மாநிலங்களில் இருந்தான சிறப்புப் படைகள், கூட்டரசாங்க போலிசின் GSG 9 பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு மற்றும் ஆஸ்திரிய கோப்ரா சிறப்புப் படை உள்ளிட பாதுகாப்புப் படைகளின் சுமார் 2,300 அங்கத்தவர்கள் நகருக்குள் கொண்டுவரப்பட்டனர். ஆயுதமேந்திய வாகனங்களும் ஹெலிகாப்டர்களும் கூட அங்கு நிலைநிறுத்தப்பட்டன. முப்படைகளை (Bundeswehr) பயன்படுத்துவதையும், ஒரு இராணுவ போலிஸ் அலகினைத் தயார்நிலையில் வைத்திருப்பதையும் கூட - இவ்வாறு நிறுத்துவது அரசியல்சட்டத்திற்கு எதிரானது என்றபோதும் - பாதுகாப்பு அமைச்சர் ஊர்சுலா வொன் டெர் லையென் பரிசீலித்திருந்தார் என்பது சனிக்கிழமையன்று தெளிவானது.

1.5 மில்லியன் மக்களைக் கொண்ட மூனிச் நகரத்தை பாதுகாப்புப் படைகள் ஏறக்குறைய ஸ்தம்பித்த நிலைக்குக் கொண்டுவந்தன. மத்திய இரயில் நிலையம் முற்றுகைக்குள் கொண்டுவரப்பட்டு, இரயில்கள் மற்றும் சுரங்கப் பாதை போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது, டிராம் ஓட்டுநர்கள் பயணிகளை கீழே இறக்கி பேருந்துநிலையங்களுக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டனர். பாதுகாப்புக் காரணங்களுக்காக மக்கள் வீட்டிற்குத் திரும்பி விடுமாறு போலிஸ் அழைப்பு விடுத்திருந்தும் கூட ஆயிரக்கணக்கானோர் வீட்டிற்குத் திரும்ப வழியின்றி தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டிருந்தது. வீட்டிற்குத் திரும்ப வழியற்று இருந்தவர்களை வீட்டிற்கு கொண்டுபோய் சேர்க்க முனிச்வாசிகள் #opendoor என்ற சமூக ஊடக தளம் மூலமாக ஒரு தன்னியல்பான முன்முயற்சியை எடுத்ததற்குப் பின்னரே அந்நிலைமை தணிந்தது.

பெரும் போலிஸ் நடவடிக்கையால் தூண்டப்பட்ட பீதியின் காரணத்தால், நகரில் பிற துப்பாக்கிசூடு குறித்த செய்திகளும் கூட பரவத் தொடங்கின. அவை அனைத்தும் வதந்திகள் என்பது பின்னர் நிரூபணமானது. மாலை 6 மணி முதல் நள்ளிரவு வரையிலும் போலிஸ் 4,310 அவசரகால அழைப்புகளைப் பதிவு செய்தது, இது பொதுவாக நான்கு நாட்களில் பெறுகின்ற எண்ணிக்கையாகும்.

இந்தத் தாக்குதல் எந்த அரசியல் பின்புலமோ அல்லது இஸ்லாமிக் அரசுடனான தொடர்புகளோ இல்லாத ஒரு ஒற்றை குற்றம்புரிபவரால் நடத்தப்பட்ட துப்பாக்கிசூடு என்பது ஒருவழியாக ஞாயிறன்று அறிவிக்கப்பட்டதற்குப் பின்னர் தான், மக்களிடம் “சற்று நிம்மதி தென்படுவதாக” உணர்ந்ததாய் முனிச்சை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் Süddeutsche Zeitung கூறியது. நீஸ் மற்றும் வூர்ஸ்பேர்க் இல் சமீபத்தில் தாக்குதல்கள் நடந்திருந்த நிலையில், பிரான்சில் காண்பதைப் போல, பயங்கரவாதத் தாக்குதல்கள், கடுமையான அரச அதிகாரங்கள், ஜனநாயக உரிமைகள் அழிக்கப்படுதல் மற்றும் அதி-வலது சக்திகளின் வளர்ச்சி ஆகியவை ஒன்றையொன்று மோசமாக்குகின்ற ஒரு நச்சுச் சுழற்சி இங்கும் அபிவிருத்தி காணக் கூடுமோ என்று மக்களில் பலரும் அஞ்சியிருந்தனர் என்பது தெளிவாகியது.

எப்படியிருந்தபோதிலும், ஜேர்மனியில் ஒரு தனிநபர் நடத்திய கொலைவெறித் தாக்குதல் அடிப்படையான சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளை எழுப்புகிறது. ஒரு இளைஞர் நடத்திய இத்தகைய ஒரு கொடூர நடவடிக்கையை, மிகப் பொதுவான சமூக அபிவிருத்திகளுக்கு வெளியிலிருந்தபடி புரிந்து கொள்ள முடியாது. இந்த துயர சம்பவமானது ஒரு புதிய சட்டம்-ஒழுங்கு பிரச்சாரத்தை நியாயப்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதையே போலிசின் பதிலிறுப்பும் அத்துடன் பல ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகளின் எதிர்வினையும் காட்டுகின்றன. 

இந்த வெறியாட்டத்திற்குப் பின்னர் தன் உயிரையும் மாய்த்துக் கொண்ட டேவிட் எஸ். என்ற அந்த 18 வயது தாக்குதல்தாரி ஜேர்மனி மற்றும் ஈரான் ஆகிய இருநாட்டு கடவுச்சீட்டுகளையும் கொண்டிருந்தார் என்பதோடு அவர் ஜேர்மனியில் வளர்ந்தவராவார். இவர் முனிச்சின் சற்று வசதியான புறநகர்ப்பகுதியான Maxvorstadt இல் தனது பெற்றோருடன் வசித்து வந்தார், அங்கு பொது வீட்டு வசதிப் பகுதிகளும் இருந்தன. அவரது அப்பா ஒரு டாக்ஸி ஓட்டுநர். அண்டை வீட்டினர் அவரது குடும்பத்தை “ரொம்ப அடக்கமான” குடும்பமாக வருணித்தனர். டேவிட்டும் அமைதியானவர் என்றும், அவருக்குப் பள்ளியில் சில பிரச்சினைகள் இருந்திருந்தன என்றும், அரசாங்க வழக்கறிஞர் கூறுவதன் படி, அவர் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்றும் கூறப்பட்டது.

ஜேர்மனியில் நடந்திருந்த கூட்டப் படுகொலைகள் இந்த இளைஞருக்கு பெரும் கவர்ச்சியை ஏற்படுத்தியிருந்ததாக உணர்த்தத்தக்க ஆவணங்களை அவரது அறையில் போலிசார் கண்டெடுத்தனர். நோர்வேயில் Anders Breivik என்பவர் 77 பேரை கூட்டமாய் படுகொலை செய்த ஐந்தாவது ஆண்டுதினம் சென்ற வெள்ளிக்கிழமை வந்தது என்ற விடயமானது அதற்கு ஏதேனும் ஒரு தொடர்பு இருக்கக் கூடும் என்று நம்புவதற்கு புலனாய்வாளர்களை இட்டுச் சென்றிருக்கிறது.

டேவிட் எஸ். தனது வெறியாட்டத்தைத் தொடக்கிய மாக்டொனால்ட் உணவகத்திற்கு இளைஞர்களை வரச்செய்வதற்காக “Selina Akim” என்ற ஒரு போலியான பெயரில் முகநூல் கணக்கை பயன்படுத்தி வந்திருக்கிறார் என்பதாகக் கிடைத்திருக்கும் தடயங்கள், அவர் இந்த சம்பவத்தை மிகக் கவனமாகத் திட்டமிட்டிருக்கிறார், தயாரிப்பு செய்திருக்கிறார் என்பதைச் சுட்டிக்காட்டுவதாக இருக்கின்றன. அவரது துப்பாக்கிச்சூட்டில் பலியான ஒன்பது பேரில் எட்டு பேர் 14 முதல் 20 வயதானவர்கள் ஆவர்.

இந்த மனிதரின் நோக்கங்கள் என்னவாக இருந்தது என்பது இந்தப் புள்ளியில் அதிகம் அறியமுடியாத ஒன்றாகவே இருக்கிறது. டேவிட் எஸ்.ஸை படமெடுத்த ஒரு உள்ளூர்வாசியுடன் பேசியபோது அவர் கத்தியிருக்கிறார், “உங்களால் தான் ஏழு ஆண்டுகளாய் நான் அலைக்கழிக்கப்பட்டேன். இப்போது உங்கள் அனைவரையும் சுட்டுத் தள்ள ஒரு துப்பாக்கியை நான் வாங்கும்படி ஆகியிருக்கிறது.”

முனிச் வெறியாட்டம் ஜேர்மனியில் முதலாவது சம்பவம் அல்ல: 2002 இல் Erfurt பள்ளியில் ஒரு இளைஞர் 17 பேரைக் கொன்றார். அதற்கு நான்காண்டுகளுக்குப் பின்னர் இதேபோன்றதொரு சம்பவம் Emsdetten இல் நடைபெற்றது. அதே ஆண்டில், பேர்லினில் ஒரு சுரங்கப்பாதை இரயிலில் ஒரு சிறுவன் 30 பேரைக் கத்தியால் குத்தினான். 2009 ஆம் ஆண்டில் ஒரு 17 வயது சிறுவன் Winnenden இல் 15 பேரைக் கொன்றான், அத்துடன் சென்ற வாரத்தில் தான், Würzburg இல் உள்ளூர் இரயிலில் 17 வயது இளைஞரொருவன் பயணிகளை கோடரியால் தாக்கினான். எப்படியிருந்தபோதிலும், இவ்வாறான வன்முறை அடிக்கடி நிகழ்வதானது பிரதானமாக ஒரு அமெரிக்க நிகழ்ச்சிப்போக்காகவே இதுவரை கருதப்பட்டு வந்திருக்கிறது.

”துப்பாக்கி வன்முறை காப்பகம்” என்ற வலைத் தளம் கூறுவதன்படி, இந்த ஜூன் மாதத்தில் மட்டும் அமெரிக்காவில் சுடும் ஆயுதங்களைக் கொண்டு 18 கூட்டப்படுகொலைகள் நடந்துள்ளன. 2014 இல் சுடும் ஆயுதங்கள் மூலம் 8,124 கொலைகள் நடந்திருந்ததாக FBI தெரிவித்தது. அமெரிக்காவில் கார் விபத்துகள் மூலம் இறக்கின்றவர்களின் எண்ணிக்கையின் அதே அளவுக்கு சுடும் ஆயுதங்கள் மூலம் இறப்பவர்களின் எண்ணிக்கையும் இருக்கிறது.

இத்தகைய தொடர்ச்சியான கூட்ட வன்முறை என்பது “சமூகத்திற்குள்ளாக ஆழமாய் நோய்வாய்ப்பட்டிருக்கும் ஒன்றின் வெளிப்பாடாக” மட்டுமே இருக்கவியலும் என்பதை உலக சோசலிச வலைத் தளம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருக்கிறது. ஒரு மாதத்திற்கு முன்பாக, 49 பேர் கொல்லப்பட்ட ஓர்லாண்டோ படுகொலைகளுக்கும், நடைபெற்று வருகின்ற அமெரிக்க-தலைமையிலான போர்கள், சமூக வாழ்க்கை இராணுவமயமாகல், மற்றும் தொழிலாள வர்க்கத்தின் வேலைகள், ஊதியங்கள் மற்றும் வாழ்க்கைநிலைமைகள் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றுக்கும் இடையிலான தொடர்பைக் குறித்து WSWS வலியுறுத்தியது.

“குறிப்பாக இந்த ஸ்திரமற்ற சமூகக் கூறுகள் தொடர்பான விடயத்தில், அமெரிக்காவின் எல்லைகளுக்குள்ளாக இந்த அன்றாட யதார்த்தத்தின் தாக்கத்தை மிகைப்படுத்திக் கூறுவதெற்கெல்லாம் ஏறக்குறைய சாத்தியமில்லை என்றே கூறலாம்” என்று நாம் எழுதினோம். “ஏகாதிபத்தியப் போர் மற்றும் தொழிலாள வர்க்கத்தை வறுமைக்குள் தள்ளுவது ஆகிய ஒரு திட்டநிரலைப் பின்பற்றுகின்ற பொருட்டு அரசியல் பிற்போக்குத்தனம், தேசிய பேரினவாதம், புலம்பெயர்விரோத இனவாதம் ஆகிய மிகப் பிற்போக்குத்தனமான மனோநிலைகள் திட்டமிட்டு வளர்த்தெடுக்கப்பட்டுள்ளன.” 

இதனையொத்த ஒரு சமூக அபிவிருத்தியே ஜேர்மனியிலும் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. டேவிட் எஸ். பிறந்தபோது, முப்படைகள் (Bundeswehr) யூகோஸ்லாவியாவில் அவற்றின் முதல் வெளிநாட்டு யுத்த நடவடிக்கைக்காய் நிறுத்தப்பட்டுக் கொண்டிருந்தன. அவருக்கு 16 வயது ஆன சமயத்தில், ஜேர்மன் அரசாங்கம் “இராணுவரீதியாய் ஒதுங்கியிருந்தமை முடிவுக்கு வந்ததாய்” அறிவித்தது. இதனிடையே, ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோ நிலைநிறுத்தத்திலும் அத்துடன் ஈராக் மற்றும் சிரியா உள்ளிட மொத்தம் 16 வெளிநாட்டு யுத்த நடவடிக்கைகளிலும் ஜேர்மனியின் முப்படைகள் பங்கேற்றிருந்தன. அதிகரித்த அளவில் இராணுவம் உள்நாட்டுக் கொள்கையின் மீது செல்வாக்கு செலுத்துகிறது.

சென்ற ஆண்டில், மத்திய கிழக்கில் இருந்து வந்த அகதிகள் முனிச் மக்களால் எப்படி ஆரம்பத்தில் வரவேற்கப்பட்டனர் என்பதையும் பின் அரசியல்வாதிகளால் எங்ஙனம் தூற்றப்பட்டனர் என்பதையும் டேவிட் எஸ். நேரடியாக அனுபவித்திருக்கக் கூடும். பிரதானமாக பவேரியாவின் கிறிஸ்தவ சமூக ஒன்றிய மாநில அரசாங்கத்தினால் தலைமை கொடுக்கப்பட்ட “வரவேற்கும் கலாச்சார”த்திற்கு எதிராக நடத்தப்பட்ட இந்த பிரச்சாரமானது, மனஸ்திரமற்ற அலைக்கழிக்கப்பட்டதாக உணர்ந்த ஈரானிய பின்புலம் கொண்ட ஒரு இளைஞரின் மனதில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாமல் விட்டிருக்க முடியாது. ஆயினும், தீவிரப்பட்ட நிலையில் மட்டுமே இந்த அத்தனை சூழல்களுமே கொடூரமான செயல்களுக்கு தூண்டுகோலாகின்றன என்பது உண்மையே. ஆனால் அவை இல்லாமல், அவரது நடவடிக்கைகள் சிந்தித்துப் பார்க்க இயலாதவையாகவே இருந்திருக்கும்.

அரசியல்வாதிகளும் ஊடகங்களும் சமூகத்தை இராணுவமயமாக்குவதை துரிதப்படுத்துவதற்கும் அத்துடன் அரசியல்ரீதியாக வலது நோக்கி மேலதிகமாக நகர்வதற்கும் கோரிக்கை வைப்பதன் மூலமாக இதற்கு பதிலிறுப்பு செய்திருக்கின்றன. பாரிய போலிஸ் நடவடிக்கைகளைப் பாராட்டுவதிலும் பாதுகாப்புப் படைகளின் ஒரு மேலதிக விரிவாக்கத்தைக் கோருவதிலும் அவை ஒருவரையொருவர் விஞ்ச முனைகின்றன.

சான்சலர் அங்கேலா மேர்கெல் போலிசைக் குறித்து, “அவர்கள், மிகச் சிறந்த விதத்தில், குடிமக்களின் உதவியாளர்களாகவும் பாதுகாவலர்களாகவும் இருந்திருக்கிறார்கள், இருந்து வருகிறார்கள்” என்று கூறியிருந்தார். போலிஸ் செய்திருந்த விடயம் “பெருமைமிக்கது” என்று சமூக ஜனநாயகக் கட்சித் தலைவரான சிக்மார் காப்ரியல் ட்வீட் செய்திருந்தார்.

அதி-வலது ஜேர்மனிக்கான மாற்று (Alternative for Germany), முனிச் தாக்குதலின் பின்புலம் இன்னும் தெளிவற்றதாக இருக்கின்ற நிலையிலும், முழுமையாக நாட்டின் அகதிகளுக்கான எல்லைகளை உடனடியாய் மூடுவதற்கு அழைப்பு விடுத்தது. Saxony-Anhalt இல் அதன் தலைவரான André Poggenburg, மேர்க்கெல் மற்றும் “இதற்கான பொறுப்பைப் பகிர்ந்து கொள்கின்ற இடது-சாரி முட்டாள்கள்” ஆகியோர் மீது வெறுப்பை கக்கினார்.

கிறிஸ்தவ ஜனநாயக அரசியல்வாதிகள் சிலரும் இதே பல்லவியையே பாடுகின்றனர். CSU கூட்டரசாங்க நாடாளுமன்றப் பிரதிநிதியான Florian Hahn, “பொது இடங்களில் பாதுகாப்பை நிலைநாட்டுவதற்கு” அடுத்த சில நாட்களில் இராணுவம் அவசியமாக இருக்கும்” என்று ட்வீட் செய்தார். Dresden கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றிய (CDU) அரசியல்வாதியான Maximilian Krah பின்வருமாறு எழுதினார்: “நான் முனிச்சில் இருக்கிறேன். இதுவே திருப்புமுனையாக இருந்தாக வேண்டும்: வரவேற்பு கலாச்சாரம் மரணகரமானதாய் இருக்கிறது; இது நம் தேசத்தைக் குறித்ததாகும்!”  

”அடுத்த ஆண்டு வரவிருக்கும் [பொது] தேர்தல் பிரச்சாரத்தின் மிகக் கவலைதரும் ஒரு முன்னோட்டத்தை” இந்தத் தாக்குதலில் Süddeutsche Zeitung கண்டது. அடுத்த சில மாதங்களில் உலகச் சூழல் திடுதிப்பென்று அமைதியடையத் தவறினால், “பாதுகாப்பு” விடயம் தான் தேர்தலின் “பெரும்-கருப்பொருளாய்” இருக்கும். “உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பாதுகாப்பு என்று அழைக்கப்படுகின்ற இரண்டுமே. ஏனென்றால் இரண்டும் இனியும் ஒன்றிலிருந்து இன்னொன்றைப் பிரிக்கக் கூடியதாக இருக்கவில்லை.”

வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ஜேர்மன் தேர்தல் பிரச்சாரமும் கூட “அமெரிக்கமயமாகி” அமெரிக்காவில் போன்றதொரு வடிவங்களை - அங்கே பாசிச நில-மனை சொத்து அதிபர் ஒருவரும், வோல் ஸ்ட்ரீட் மற்றும் பென்டகன் உடன் மிக நெருக்கமான உறவுகள் கொண்ட அரசியல்வாதி இன்னொருவரும் ஜனாதிபதி பதவிக்கு ஒரு அழுக்கான, சேறுவீச்சுச் சண்டையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் - எடுக்கக் கூடும் என்று அந்த செய்தித்தாள் அனுமானிக்கிறது.