ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Death toll in Istanbul airport attack rises to 41

இஸ்தான்புல் விமான தாக்குதலில் மரண எண்ணிக்கை 41 ஆக உயர்கிறது

By Alex Lantier
  30 June 2016

இஸ்தான்புல் இன் அடாடுர்க் (Ataturk) விமான நிலையத்தில் திங்களன்று இரவு ISIS (ஈராக் மற்றும் சிரியாவிற்கான இஸ்லாமிய அரசு) நடத்திய கொடூர தாக்குதலில் மரண எண்ணிக்கை நேற்று 41 ஆக உயர்ந்தது, 239 பேர் காயமடைந்தனர். இஸ்தான்புல் அதிகாரிகளது தகவல்படி, காயமடைந்த 130 பேர் நேற்று வரை இன்னமும் மருத்துவமனையில் இருந்தனர்.

துருக்கிய பிரதம மந்திரி Binali Yıldırım குறிப்பிடுகையில், குறைந்தபட்சம் கனரக ஆயுதமேந்திய மூன்று துப்பாக்கிதாரிகள் சர்வதேச விமான முனையத்தின் நுழைவாயிலில் கூட்டத்தை நோக்கி சுட்டதாகவும், அங்குமிங்குமாக தப்பியோடிய பயணிகளுக்கு இடையே பொலிஸூடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்ட பின்னர் அவர்கள் வைத்திருந்த வெடிகுண்டுகளை வீசியதாகவும் தெரிவித்தார். அந்த சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் விமான முனையத்திற்குக் கடுமையான பாதிப்பு ஏற்படுத்தியது. அத்தாக்குதலில் உயிர்பிழைத்தவர்கள் அக்குண்டுவெடிப்புகளில் இருந்து அவர்கள் தப்பி வந்த விதம் மற்றும் விமான நிலைய அறைகளுக்குள் அவர்களுக்குரியவர்களுடன் ஒளிய முயன்ற பயங்கரமான கதைகளைக் கூறினர்.

ஐந்து சவூதியர்கள், இரண்டு ஈராக்கியர்கள், ஒரு துனிசியர், ஒரு ஜோர்டானியர், ஒரு உக்ரேனியர் மற்றும் மத்திய ஆசியாவைச் சேர்ந்த இருவர் என இறந்தவர்களில் பதிமூன்று பேர் வெளிநாட்டவர் ஆவர். பலியான மத்திய ஆசியாவைச் சேர்ந்தவரில் ஒருவரை "கிழக்கு துர்கிஷ்தானைச் சேர்ந்தவர்" என்று CNN Türk அடையாளப்படுத்தியது, இது மேற்கு சீனாவின் ஜின்ஜியாங் தன்னாட்சி பிரதேசத்தைக் குறித்த ஒரு வெளிப்படையான குறிப்பாகும்.

விமான நிலையத்திலும் மற்றும் நாடெங்கிலும் தேசிய கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்கவிட்டு துருக்கி ஒரு நாள் இரங்கலை அறிவித்தது. இத்தாக்குதல் முஸ்லீம்களது புனித மாதமான ரமலான் முடிவுறுவதைக் குறிக்கும் ஈத் பண்டகைக்கு சற்று முன்னதாக நடந்துள்ளது.

ஏற்கனவே சுற்றுலா பயணிகளின் வருவாய் இல் 30 சதவீத வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கிய பொருளாதாரத்தில் இத்தாக்குதல் இன்னும் பாதிப்பை ஏற்படுத்தும். “ஈத் வரவிருக்கின்ற நிலையில், வியாபாரங்கள் இப்போது தான் மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்திருந்தது,” என்று கடைகள் மற்றும் விடுதிகளைச் சுட்டிக்காட்டி ஒரு சுற்றுலா நிறுவனத்தின் முன்னால் அமர்ந்தவாறு இஸ்தான்புல் குடிவாசி ஒருவர் கார்டியனுக்குத் தெரிவித்தார். “ஆனால் இப்போது எங்கள் கதை முடிந்துவிட்டது. இவை எல்லாவற்றையும் மூட வேண்டியிருக்கும். இன்று காலை எங்களது ஈத் ஏற்பாடுகள் 30 சதவீதம் குறைந்தது. மக்கள் அவர்களது விடுமுறைகளை இரத்து செய்ய தொடங்கி விட்டார்கள்,” என்றார்.

இத்தாக்குதல் நடவடிக்கைக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை என்றாலும், திங்களன்று இரவு Yıldırım கூறுகையில் "ஆதாரங்கள் டயஷ் ஐ (ISIS க்கான அரேபிய பெயர்) சுட்டிக் காட்டுகின்றன,” என்றார். இந்த அடாடுர்க் விமான நிலைய தாக்குதல், சிரிய-துருக்கிய எல்லைக்கு அருகில் உள்ள கில்லிஸ் நகரில் துருக்கிய படைகள் மீது ISIS கடந்த பல மாதங்களாக நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து நடந்திருப்பதாக செய்திகள் தெரிவித்தன.

அத்தாக்குதலை "கடுமையாக கண்டித்தும், ISIS ஐ குற்றஞ்சாட்டியும் துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். “பயங்கரவாத தாக்குதல்கள் நம்பிக்கையையோ அறிநெறிகளையோ மதிப்பதில்லை என்பதையே ரமலான் புனித மாதத்தில் நடந்துள்ள இத்தாக்குதல் எடுத்துக்காட்டுகிறது,” என்றார். “பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக உலக நாடுகளும், குறிப்பாக மேற்கத்திய நாடுகளது நாடாளுமன்றம், ஊடகம் மற்றும் அரசுத்துறை சாரா அமைப்புகள் ஒரு தீர்க்கமான நிலைப்பாடு எடுக்க வேண்டுமென நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று அந்த அறிக்கை தொடர்ந்து குறிப்பிட்டது.

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராளர்களாக முன்னணியில் உள்ள குடியரசு கட்சியின் டோனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜனநாயக கட்சியின் ஹிலாரி கிளிண்டன் ஆகியோரிடம் இருந்தும் போர் நாடும் அறிக்கைகளை அத்தாக்குதல் கொண்டு வந்தது. பயங்கரவாதத்திற்கு எதிராக வாஷிங்டன் "மிகவும் ஆக்ரோஷமாக, வன்மையாக சண்டையிட" வேண்டுமென ட்ரம்ப் அடாவடித்தனமாக அழைப்புவிடுத்ததுடன், சித்திரவதை பிரயோகிப்பையும் அரவணைத்தார்: “அவர்கள் இரவு விருந்தை உட்கொண்டவாறே அல்லது பேச்சுவார்த்தை மேசையில் அமர்ந்து கொண்டே, எங்கள் தலைகளை வெட்டினாலும் அமெரிக்கர்கள் நீரில் மூச்சுதிணறடிக்கும் சித்திரவதைகளைச் செய்யக்கூடாது என்று பேசிக் கொண்டிருப்பதை உங்களால் கற்பனை செய்ய முடியுமா? … உங்களுக்குத் தெரியுமா, நெருப்பைக் கொண்டு தான் நெருப்புடன் சண்டையிட வேண்டும்,” என்றார்.

கிளிண்டன் கூறுகையில், “இந்த வெறுப்பார்ந்த வன்முறை நடவடிக்கைக்கு எதிராக துருக்கிய மக்களுடன் அமெரிக்கர்கள் ஐக்கியப்பட்டு நிற்கிறார்கள். இன்றைய இஸ்தான்புல் தாக்குதல் உலகெங்கிலும் உள்ள பயங்கரவாத சக்திகளை மற்றும் தீவிர ஜிஹாதிஸ்டு சக்திகளைத் தோற்கடுக்கும் எங்களின் தீர்மானத்தைப் பலப்படுத்துகிறது,” என்று அறிவித்தார்.

உண்மையில் சிரியாவில் நேட்டோவினது ஐந்தாண்டு கால பிற்போக்குத்தனமான போரில் பினாமி படைகளாக இருந்த ISIS போன்ற அல் கொய்தா தொடர்புபட்ட போராளிகள் குழுக்களை ஆதரிப்பதென, அமெரிக்கா மற்றும் துருக்கிய அரசாங்கங்கள் உள்ளடங்களாக சகல நேட்டோ அதிகாரங்களும் தீர்மானித்த தீர்மானத்தின் அனுமானித்தக்க துயரகரமான விளைவே இந்த இஸ்தான்புல் படுகொலை சம்பவமாகும்.

இத்தாக்குதலில் துருக்கிய அரசின் பிரிவுகளும் மற்றும் துருக்கியின் நேட்டோ கூட்டாளிகளும் சாத்தியமான பாத்திரம் வகித்திருந்தது குறித்தே கூட முக்கிய கேள்விகள் எழுகின்றன. துருக்கிய ஊடக செய்திகளின்படி, அதிகாரிகள் அத்தாக்குதல் குறித்த செய்திகள் மீது பொது விவாதமில்லா ஓர் உத்தரவாணையை (gag order) விதித்திருந்தனர்.

சிரியா போரின் ஆரம்ப கட்டங்களில், இஸ்லாமிய போராளிகள் அங்கே ஆட்சியை நிலைகுலைக்கவும் மற்றும் சிரியாவின் நகரங்களில் பயங்கரவாதத்தை விதைக்கவும் முனைந்திருந்த நிலையில், அவர்கள் இஸ்தான்புல் இல் திங்களன்று குண்டுவெடிப்பு நடத்தியதைப் போலவே பாரியளவில் பயங்கரவாத குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து நடத்தினர். அதன் பிறகு, கிழக்கு சிரியாவின் பெரும்பகுதிகளை ISIS கைப்பற்றிய பின்னர், சிரியாவில் குர்திஷ் போராளிகள் குழுக்கள் முன்னேறுவது துருக்கிக்கு உள்ளேயே கூட குர்திஷ் பிரிவினைவாதிகளை ஊக்கப்படுத்தும் என்று அஞ்சிய துருக்கிய அரசின் பிரிவுகள், குர்திஷ் போராளிகள் குழுக்களது சமநிலையை நிலைகுலைக்க ISIS ஐ பயன்படுத்தியது. ISIS க்கான வினியோகங்கள் மற்றும் எண்ணெய் பரிவர்த்தனைகள் சிரிய-துருக்கிய எல்லையைக் கடந்து செல்வது பல முறை செய்திகளில் அறிவிக்கப்பட்டு இருந்தன, புகைப்படங்களுமே கூட வெளியிடப்பட்டன.

சிரிய "கிளர்ச்சியாளர்களை" ஆயுதமேந்த செய்து வந்த சிஐஏ மற்றும் ஏனைய நேட்டோ உளவுத்துறை அமைப்புகளுடனான அவர்களது உறவுகளைப் பயன்படுத்தி, ஐரோப்பா எங்கிலுமான ஜிஹாதிஸ்டு வலையமைப்புகளால் கண்காணிப்பிலிருந்து தப்பிக்க முடிந்திருந்ததுடன், கடந்த ஆண்டு பாரீஸில் நடத்திய இரண்டு படுபயங்கர துப்பாக்கிச்சூடு வெறியாட்டங்கள் உட்பட அவற்றால் நாசகரமான பயங்கரவாத தாக்குதல்களை நடத்த முடிந்திருந்தது. உளவுத்துறை சேவைகளுக்கும் மற்றும் ஜிஹாதிஸ்டு படைகளுக்கும் இடையிலான தொடர்புகள் வகித்த பாத்திரம், குறிப்பாக, புரூசெல்ஸ் இல் நடந்த மார்ச் 22 குண்டுவெடிப்புகளுக்குப் பின்னர் தெளிவாக வெளிப்பட்டது.

துருக்கிய, இஸ்ரேலிய மற்றும் ரஷ்ய உளவுத்துறை அமைப்புகள் ஆகிய சகல அமைப்புகளும் அந்த பயங்கரவாதிகளை இஸ்லாமிய போராளிகளாக அடையாளம் காட்டி, புரூசெல்ஸ் இன் விமான நிலையமும் மற்றும் சுரங்க பாதைகளும் இலக்கில் வைக்கப்பட்டிருப்பதைக் கூறி இருந்ததுடன், புரூசெல்ஸ் அதிகாரிகளுக்கு அத்தாக்குதல்களைக் குறித்து முன்கூட்டிய எச்சரிக்கைகளையும் வழங்கி இருந்தன. இருந்தபோதினும் அத்தாக்குதல்தாரிகள் தடுக்கப்படவும் கிடையாது, அல்லது இலக்கில் வைக்கப்பட்ட இடங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்படவும் கிடையாது. இஸ்லாமிய வலையமைப்பின் அங்கத்தவர்கள் நேட்டோ வெளியுறவு கொள்கையில் ஒரு மத்திய பாத்திரம் வகித்து வந்ததால், அந்த தாக்குதல்தாரிகள் ஒளிவுமறைவின்றி பயணிக்கும் வகையில் வெளிப்படையாகவே நடைமுறைகள் ஏற்படுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இஸ்தான்புல் இன் திங்கட்கிழமை பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து துருக்கிய அதிகாரிகளுக்கு முன்கூட்டிய எச்சரிக்கைகள் கிடைத்திருந்ததாக ஆரம்ப செய்திகள் வரத் தொடங்கியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும். நேற்று Doğan TV இன் அன்காரா பிரதிநிதி Hande Firat அறிவிக்கையில், “உளவுத்துறை பிரிவுகள், 20 நாட்களுக்கு முன்னதாக ஜூன் தொடக்கத்தில் இஸ்தான்புல் குறித்து அரசின் உயர்மட்டத்திற்கும் மற்றும் அதன் சகல துறைகளுக்கும் ஓர் எச்சரிக்கை கடிதம் அனுப்பின,” என்று தெரிவித்தார். ISIS தான் அந்த எச்சரிக்கையின் விடயமாக இருந்தது என்பதுடன், அடாடுர்க் விமான நிலையம் சாத்தியமான இலக்காக இருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டு இருந்ததாகவும் Firat சுட்டிக்காட்டினார்.

துருக்கிய எதிர்கட்சி அரசியல்வாதிகள் பகிரங்கமாக அத்தாக்குதல்களில் பாதுகாப்பு சேவைகள் மற்றும் எர்டோகனின் நீதி மற்றும் வளர்ச்சி கட்சி (AKP) வகித்த பாத்திரம் குறித்து கேள்வி எழுப்பினர். மக்கள் ஜனநாயக கட்சியின் (HDP) நாடாளுமன்ற குழுவின் துணை தலைவர் İdris Baluken கூறுகையில், “அடாடுர்க் விமான நிலையம் போன்ற இடத்தில் குண்டு வெடிக்கும் போது, இந்நாட்டின் அரசாங்கம், உள்துறை அமைச்சர், உளவுத்துறை மற்றும் பொலிஸ் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று நாம் ஆச்சரியப்பட வேண்டியிருக்கிறது,” என்றார்.

இத்தாக்குதல்கள் நடந்துள்ள காலக்கட்டம், அவை துருக்கிய மற்றும் நேட்டோ இராணுவ உயர்மட்டங்களுக்கும் மற்றும் அரசியல் தலைமைகளுக்கும் ISIS வழங்கிய ஒரு சேதியா என்ற கேள்விகளையும் எழுப்புகின்றன.

ISIS ஈராக்கிய அரசாங்க படைகளிடம் ஃபல்லூஜாவை இழந்த பின்னர் ஈராக்கில் அது கடுமையான பின்னடைவுகளை முகங்கொடுத்துள்ள நிலையில், நீதி மற்றும் வளர்ச்சி கட்சி ISIS உடன் ஒரு மோதல் போக்கை எடுக்கும் வகையில், அக்கட்சி அதன் வெளியுறவு கொள்கையில் ஒரு பரந்த மாற்றத்தை நடத்த முயற்சிக்கின்ற சமயத்தில் இத்தாக்குதல்கள் நடந்துள்ளன. சமீபத்திய காலம் வரையில், துருக்கி ரஷ்யாவுடன் ஒரு கடுமையான மோதலில் இருந்தது, கடந்த ஆண்டு சிரியா மீது பறந்த ஒரு ரஷ்ய போர் விமானத்தை அது தயவுதாட்சண்யமின்றி சுட்டுவீழ்த்தியது, அப்போது ரஷ்ய படைகள் சிரியாவில் சிரிய அரசாங்கத்துடன் இணைந்து ஜிஹாதிஸ்டு போராளிகள் குழுக்களைத் தாக்கி வந்தனர். ISIS உடன் துருக்கி உடந்தையாய் இருப்பதாக மாஸ்கோவ் உம் குற்றஞ்சாட்டியது.

எவ்வாறிருப்பினும் சமீபத்திய வாரங்களில் துருக்கி ரஷ்யாவுடன் நெருக்கமாக நகர்ந்து வருகிறது என்பதுடன் இஸ்ரேல் உடனான அதன் உறவுகளை ஆழப்படுத்தவும் முயன்று வருகிறது.

அத்தாக்குதலுக்கு ஒரு நாள் முன்னதாக, Yıldırım அறிவிக்கையில், ரஷ்யா உடன் "இயல்பாக்கும் நடைமுறை தொடங்கப்பட்டு இருப்பதாக" அறிவித்தார், ரஷ்ய விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதற்கு மன்னிப்பு கோரி முன்னதாக எர்டோகன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதே நேரத்தில் இஸ்ரேல் மற்றும் எகிப்து இரண்டுடனும் உறவுகளை மேம்படுத்த துருக்கி நடவடிக்கை எடுத்து வருகிறது, AKP உடன் கூட்டு சேர்ந்திருந்த முஸ்லீம் சகோதரத்துவ அரசாங்கத்தைக் கவிழ்த்திய ஒரு பதவிக்கவிழ்ப்பு சதியில் தான் எகிப்தின் இராணுவ சர்வாதிகாரி அப்தெல் பதாஹ் அல்-சிசி அதிகாரத்திற்கு வந்தவராவார்.

நீதி மற்றும் வளர்ச்சி கட்சி (AKP) தங்களுக்கு எதிராக திரும்பினால், தங்களால் மற்றும் தங்களது பிராந்திய கூட்டாளிகளால் இப்போதும் துருக்கிக்கு கணிசமான பாதிப்பை ஏற்படுத்த முடியுமென, ISIS, இந்த சமீபத்திய இரத்தக்களரியான தாக்குதலுடன், துருக்கிய ஆட்சிக்கு ஒரு சமிக்ஞை அனுப்புவதாக தெரிகிறது.