ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

State of emergency declared in Turkey

துருக்கியில் அவசரகால நெருக்கடிநிலை பிரகடனப்படுத்தப்பட்டது

By Jean Shaoul
21 July 2016

துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் புதனன்று மூன்று மாத கால அவசரகால நெருக்கடி நிலையை அறிவித்தார்.

இந்நகர்வுக்கு முன்னதாக தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் ஐந்து மணி நேர கூட்டம் ஒன்றும் எர்டோகனின் அமைச்சரவை கூட்டம் ஒன்றும் நடத்தப்பட்டது. தோல்வியடைந்த ஜூலை 15 ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு பொறுப்பான "நுண்கிருமிகளை" சகல அரசு துறைகளில் இருந்தும் களையெடுக்க சூளுரைத்துள்ள ஜனாதிபதி, “ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, மக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்கு எதிரான அச்சுறுத்தலை போக்குவதற்கான எல்லா நடவடிக்கைகளையும் வேகமாகவும் திறமையாகவும் மேற்கொள்வதே நோக்கம்,” என்று அறிவித்தார்.

அத்தகைய மறுஉத்தரவாதங்கள் இருந்தாலும் கூட, அவசரகால நெருக்கடி நிலையின் கீழ் ஜனாதிபதியும் அவரது அமைச்சர்களும் நாடாளுமன்றத்தைப் புறக்கணித்து சட்டங்களை நடைமுறைப்படுத்தும் அதிகாரங்களைக் கொண்டுள்ளனர். சட்டபூர்வ உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைக் குறைக்கவும் அரசால் முடிவெடுக்க முடியும்.

வலது சாரி நீதி மற்றும் வளர்ச்சி கட்சி (AKP) அரசாங்கம், ஏற்கனவே 100 க்கும் அதிகமான தளபதிகள் மற்றும் அட்மிரல்களையும், துருக்கியின் 356 உயர்மட்ட இராணுவ அதிகாரிகளில் சுமார் மூன்றில் ஒரு கால்வாசி பேரையும் கடந்த வெள்ளிக்கிழமை ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சியுடன் இணைத்து குற்றஞ்சாட்டுப் பதிவு செய்துள்ளது. தேச துரோகம், ஓர் ஆயுதமேந்திய பயங்கரவாத அமைப்பை உருவாக்கியமை மற்றும் அதன் அங்கத்தவர்களாக இருந்தமை, மற்றும் ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு முயன்றமை ஆகியவை அக்குற்றச்சாட்டுக்களில் உள்ளடங்கும்.

அந்த தோல்வியடைந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியுடன் தொடர்புபட்டவர்களாக குற்றஞ்சாட்டப்படும் மற்றும் சந்தேகிக்கப்படும் பாதுகாப்பு படையினர், பொலிஸ், இராணுவ நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள், படைத்துறைசாரா ஊழியர்கள் மற்றும் கல்வித்துறையாளர்கள் உட்பட பெருமளவிலான அரசு பணியாளர்களைத் களையெடுக்கும் நடவடிக்கையை எர்டோகன் அரசாங்கம் நடத்தி வருகிறது. அண்ணளவாக 60,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், பணியிலிருந்து முழுமையாகவோ அல்லது தற்காலிகமாகவோ நீக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளுக்கு செல்வதன் மீது புதனன்று அரசாங்கம் எல்லா கல்வியாளர்களுக்கும் தடை விதித்தது. நூற்றுக் கணக்கான அரசு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள 100 க்கும் அதிகமான நீதித்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து, துருக்கியின் அரசியலமைப்பு நீதிமன்றத்தினது இரண்டு அங்கத்தவர்களும் புதனன்று கைது செய்யப்பட்டனர். கல்வி அமைச்சகம் 626 தனியார் பள்ளிகளை மூடுவதாகவும் அரசு செய்தி நிறுவனம் அறிவித்தது.

அவசரகால நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டுள்ளதால் அடக்குமுறை தீவிரப்படுத்தப்படலாம்.

அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சியைச் சுற்றி நடந்த சம்பவங்கள் சம்பந்தமாக தொடர்ந்து வெளிவரும் செய்திகள், ஒரு மிகப்பெரிய நடவடிக்கை குறித்த சித்திரத்தை வழங்குகின்றன. தென்மேற்கில் உள்ள மர்மாரீஸ் ஓய்வுவிடுதியில் விடுமுறையில் இருந்தபோது எர்டோகனே கூட படுகொலை செய்யப்படுவதிலிருந்து மயிரிழையில் தப்பியதாக செய்திகள் குறிப்பிடுகின்றன. ஒரு மூத்த இராணுவ தளபதி அவரது பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பாரென அவர் அங்கிருந்து இஸ்தான்புல்லுக்கு —அன்காராவிற்கு அல்ல— வெளியேறிய சிறிது நேரத்தில், அவர் தங்கியிருந்த விடுதி ஹெலிகாப்டர் துருப்புகளால் தாக்கப்பட்டது. எர்டோகனைக் கொல்ல அனுப்பப்பட்ட துருப்புகள் இரண்டு பொலிஸ் அதிகாரிகளைக் கொன்றதுடன், அதில் ஏனைய ஏழு பேர் காயமடைந்தனர். இஸ்தான்புல் க்கு செல்லும் வழியில், ஜனாதிபதியின் விமானம் கிளர்ச்சியாளர்களது இரண்டு F-16 போர்விமானங்களின் கண்பார்வையில் இருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்னும் அதிக மூத்த முக்கியஸ்தர்கள் சம்பந்தப்பட்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்படுகின்ற நிலையில், சாத்தியமாக கூடிய இரண்டாவது ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சியைக் குறித்து அரசாங்கம் அஞ்சுவதற்கான அறிகுறிகள் அங்கே உள்ளன. புதனன்று அல் ஜசீரா உடனான ஒரு தொலைக்காட்சி நேர்காணலில், எர்டோகன் தெரிவிக்கையில், “இன்னும் அது முடிந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை,” என்றார். அவர் எந்த அரசாங்கத்தையும் பெயர் குறிப்பிட்டு கூறவில்லை என்றாலும், ஜூலை 15 ஆட்சிக்கவிழ்ப்பு சதியில் வெளிநாடுகள் சம்பந்தப்பட்டிருந்தன என்ற அவரின் ஐயப்பாடை அவர் அழுத்தந்திருத்தமாக தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும் குறைந்தபட்சம் ஒரு முக்கிய அரசு அதிகாரி நேரடியாகவே வாஷிங்டன் சம்பந்தப்பட்டிருந்ததாக குற்றஞ்சாட்டினார். அமெரிக்காவில் தங்கியுள்ள, பரவலாக சிஐஏ இன் சொத்தாக இருப்பதாக நம்பப்படும், அவரின் எதிரி பெத்துல்லா கூலன் (Fethullah Gülen) அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு சூத்திரதாரியாக இருந்திருப்பதாக எர்டோகன் குற்றஞ்சாட்டினார். கூலனை நாட்டிடம் திரும்ப ஒப்படைக்க கோரி அமெரிக்க அரசிற்கு உத்தியோகபூர்வமாக ஒரு கோரிக்கை விடுக்க அங்காரா திட்டமிட்டு வருகிறது.

அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியாளர்களை வாஷிங்டனும் பேர்லினும் ஆதரித்ததற்கு அங்கே நிறைய அறிகுறிகள் உள்ளன. அந்த கருச்சிதைக்கப்பட்ட சதிக்குப் பின்னர், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அதிகாரிகளும் மற்றும் பிரதான மேற்கத்திய ஊடக நிறுவனங்களும் ஏறத்தாழ அனைவருமே அவர்களின் ஆக்ரோஷத்தை அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியாளர்களுக்கு எதிராக அல்ல மாறாக எர்டோகனுக்கு எதிராக திருப்பி இருக்கிறார்கள். துருக்கி, நேட்டோ அங்கத்துவ அந்தஸ்தில் இருக்கின்ற போதினும், துருக்கிய இராணுவத்திற்கும் மற்றும் ஏனைய நேட்டோ படைகளுக்கும் இடையே நெருக்கமான உறவுகள் இருக்கின்ற போதினும், அமெரிக்க மற்றும் ஜேர்மன் அரசாங்கங்கள் இரண்டுமே கடந்த வெள்ளியன்று சம்பவங்களின் ஆரம்ப கட்டங்களில் கருத்து கூறவில்லை. ஆட்சிக்கவிழ்ப்பு சதி தோல்வியடைந்தது தெளிவான பின்னர் தான் அவை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை ஆதரித்து அறிக்கைகள் வெளியிட்டன.

அமெரிக்கா அணுஆயுதங்களை வைத்துள்ள இடமும், சிரியா மற்றும் ஈராக் மீது குண்டு தாக்குதல்களை ஏவும் இடமான இன்செர்லிக் விமானப்படை தளமே, ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கையின் மையமாக இருந்ததாக தெரிகிறது.

அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு முந்தைய வாரங்களில் எர்டோகனுக்கும், அமெரிக்க மற்றும் நேட்டோவின் அவரது பெயரளவிற்கான கூட்டாளிகளுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்திருந்தன, அதேவேளையில் துருக்கிய ஜனாதிபதி, ரஷ்யாவுடன் சமரச முயற்சிக்கு முனைந்திருந்தார்.

சிரியா மற்றும் ஈராக்கில் சண்டையிடுவதற்கு அமெரிக்க தலைமையிலான கூட்டணி சார்ந்திருக்கும் சிரியாவின் அல் கொய்தா இணைப்பு கொண்ட அமைப்பான அல்-நுஸ்ரா மற்றும் இஸ்லாமிய அரசு போன்ற இஸ்லாமிய குழுக்களை எர்டோகன் ஆதரிப்பதற்காக ஒபாமா நிர்வாகமும் ஐரோப்பிய தலைவர்களும் அவருடன் மோதி இருந்தனர். எர்டோகன் உத்தியோகபூர்வமற்ற விதத்தில் சிரிய குர்தியர்களுக்கு எதிரான பாதுகாப்பு அரணாக இந்த சக்திகளை ஊக்குவிக்கிறார்.

அதன் அடக்குமுறையைக் கைவிடவில்லையானால் அதன் நேட்டோ அங்கத்துவத்தை இழக்க வேண்டியிருக்கும் என்று அந்த தோல்வியடைந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்குப் பின்னர் வாஷிங்டன் துருக்கியை எச்சரித்தது. ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதி குறித்து அமெரிக்காவிற்கு தெரிந்திருந்ததா என்று வினவிய போது, சிஐஏ இயக்குனர் ஜோன் பிரென்னன் கூறுகையில், ஜனாதிபதி எர்டோகனுக்கு கணிசமான அளவிற்கு உள்நாட்டு எதிர்ப்பு இருந்ததை அவர் அறிந்திருந்ததாக மட்டும் கூறி தட்டிக்கழித்தார்.

உலகளாவிய 2008 நிதியியல் நெருக்கடி, மத்திய கிழக்கில் அமெரிக்க தலைமையில் வருடக் கணக்கான போர்கள், வாஷிங்டனுடன் எர்டோகனை மோதலுக்கு கொண்டு வந்த அமெரிக்க கொள்கைகளில் நிலையான மாற்றங்கள், தென்கிழக்கு துருக்கியில் குர்திஷ்தான் தொழிலாளர் கட்சிக்கு (PKK) எதிராக அங்காராவின் போர் ஆகியவற்றைத் தொடர்ந்து துருக்கியை அலக்கழித்துக் கொண்டிருக்கும் அரசியல், பொருளாதார மற்றும் சமூக பதட்டங்களை, இந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்குப் பிந்தைய களையெடுப்பின் வேகமும் அளவுமே எடுத்துக்காட்டுகின்றன.

இதுவரையில், துருக்கிய கடற்படையின் விசுவாசமும் நிலைப்பாடும் தெளிவாக தெரியவில்லை. செவ்வாயன்று இலண்டனை மையமாக கொண்ட டைம்ஸ் பத்திரிகை அறிவிக்கையில், துருக்கிய கடற்படையின் கட்டளை பிரிவு அட்மிரல் Veysel Kosele, அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி தொடங்கியதற்குப் பின்னர் இருந்து தொடர்பில் இல்லை, 14 போர்க்கப்பல்கள் மற்றும் 25 சிறப்பு படை துருப்புகள் காணாமல் போயிருப்பதாக நம்பப்படுகிறது. ஜனாதிபதி செய்தி தொடர்பாளர் இப்ராஹிம் காலின் (Ibrahim Kalin) கூறுகையில், “ஒரு சில கிளர்ச்சி சிப்பாய்கள் இன்னமும் தலைமறைவாக" இருந்தாலும், “ஒவ்வொன்றும் கணக்கில் எடுக்கப்படும்" என்றார்.

காணாமல் போயுள்ள கடற்படை ரோந்து கப்பல்கள் ஏகியன் கடலில் கிரேக்க கடல்பகுதியில் காணப்பட்டதாக வந்த செய்திகளை சரிபார்க்க அங்காரா புதனன்று F-16 ரக போர்விமானங்களை அனுப்பியதாக துருக்கிய இராணுவ ஆதாரநபர்கள் தெரிவித்தனர்.

பிரதம மந்திரி பினாலி யெல்டிரிம் இன் (Binali Yildirim) அலுவலகத்திலிருந்தும் மற்றும் நாடாளுமன்றம் மற்றும் பல்வேறு அமைச்சகங்களில் இருந்தும் கைது செய்யப்பட்டவர்களில் அல்லது தற்காலிகமாக நீக்கப்பட்டவர்களில் நூற்றுக் கணக்கானவர்கள் உள்ளடங்குவர். இந்த எண்ணிக்கையில் எர்டோகனின் கையாளான படைத்தளபதி அலி யாஜிசி உம் (Ali Yazici) உள்ளடங்குவார்.

முன்னாள் விமானப் படை தளபதியும் மற்றும் துருக்கிய தலையாய இராணுவக் குழு அங்கத்தவருமான Akın Öztürk, அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியைத் திட்டமிட்டதற்காக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். எர்டோகனின் சொந்த உயர்மட்ட இராணுவ ஆலோசகர், இர்செர்லிக் விமானப்படை தளத்தின் தளபதி, மற்றும் பலம் வாய்ந்த இந்த இரண்டாவது இராணுவத்தினது தளபதி ஆகியோரும் அவரின் குழுவில் உள்ளடங்கி இருந்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது. கைது செய்யப்பட்டிருந்த அதேவேளையில் அவரது முகத்தில் காயங்களுடன் காணப்பட்ட Öztürk, எந்தவிதத்திலும் தாம் சம்பந்தப்படவில்லை என்று மறுத்துள்ளார்.

இந்த பிரமுகர்கள் சம்பந்தப்பட்டிருந்தது உறுதியானால், அந்த முயற்சிக்கப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பு சதியானது ஆளும் அரசியல் ஸ்தாபகத்தின் மையத்தில் இருந்தவர்களாலேயே நடத்தப்பட்டிருந்தது என்று அர்த்தப்படுத்தும்.

எர்டோகன் அவரின் விசுவாசியான பினாலி யெல்டிரிம் ஐ கொண்டு பிரதியீடு செய்திருந்த அவரின் முன்னாள் வெளியுறவு அமைச்சரும் ஒத்துழைப்பாளருமான பிரதம மந்திரி அஹ்மெட் தாவ்டோக் மற்றும் முன்னாள் ஜனாதிபதியும் AKP இன் துணை-ஸ்தாபகருமான அப்துல்லாஹ் குல் (Abdullah Gul) ஆகியோர் உள்ளடங்கலாக எர்டோகன் சமீபத்திய மாதங்களில் அவரின் அரசியல் எதிரிகளை ஓரங்கட்ட முயன்றிருந்தார். குறிப்பாக தாவ்டோக் இன் பலவந்தமான இராஜினாமா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சக்திகள் இருதரப்பையும் எரிச்சல் அடைய செய்திருந்தது.

கூடுதல் அதிகார ஜனாதிபதி பதவியின் போர்வையின் கீழ் ஒரு சர்வாதிகார ஆட்சியை ஸ்தாபிப்பதற்கான அவரின் நீண்டகால முயற்சிகளைச் சட்டபூர்வமாக்கவும் மற்றும் பழைய கணக்குகளைத் தீர்த்துக் கொள்ளவும் எர்டோகன் இந்த கருச்சிதைக்கப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பு சதி வழங்கிய வாய்ப்பைப் பயன்படுத்தி வருகிறார் என்பதில் எந்த ஐயமும் கிடையாது. ஏற்கனவே அரசு அதன் நிர்வாகத்தின் கீழ் எடுத்துள்ள பல தொலைக்காட்சி சேனல்கள் உட்பட குற்றச்சாட்டுகளில் சம்பந்தப்பட்டுள்ளன என்ற அடித்தளத்தில் பல ஊடக நிறுவனங்களின் உரிமைகளை துருக்கிய ஆணையங்கள் இரத்து செய்துள்ளன. ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்குப் பிந்தைய களையெடுப்புக்கு விடையிறுப்பாக 2010 இல் இருந்து ஜூலை 6 வரையிலான 300,000 AKP மின்னஞ்சல்களை விக்கிலீக்ஸ் கசியவிட்டதும், அந்த வலைத் தளத்தை அணுகவியலாதவாறு அவர்கள் அதை முடக்கி உள்ளனர்.

எர்டோகன் இதுவரையில் எதிர்ப்பு கூலனிச (Gülenist) இயக்கத்தின் ஆதரவாளர்கள் மீது தான் அவரின் கவனத்தைக் குவித்துள்ளார். பிரதம மந்திரி யெல்டிரிம் செவ்வாயன்று நாடாளுமன்றத்தில் கூறுகையில் கூலன் ஐ திரும்ப ஒப்படைக்கும் அதன் கோரிக்கைக்கு ஆதரவாக அங்காரா அமெரிக்காவிற்கு நான்கு தஸ்தாவேஜூகளை அனுப்பி இருப்பதாக தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான லெப்டினென்ட் கர்னலான மற்றும் முப்படைகளின் தலைமை தளபதி ஹூலுசி அகார் இன் (Hulusi Akar) ஆதரவாளரான Levent Turkkan, கூலன் இன் அமைப்பில் அங்கத்துவம் வகித்ததை ஒப்புக்கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன, இந்த அமைப்பு கடந்த மே மாதம் பெத்துல்லா பயங்கரவாத அமைப்பாக (FETO) துருக்கிய தேசிய பாதுகாப்பு கவுன்சிலால் உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்டது. அவரும் ஏனையவர்களும் உயர்மட்ட இராணுவ தளபதிகளை உளவுபார்த்ததை ஒப்புக்கொண்ட அவர், “1990 களில் இருந்து இராணுவ படைகளுக்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களில் 60-70 சதவீதத்தினர் கூலன் உடன் தொடர்புடையவர்கள்" என்று தெரிவித்தார்.

ஜூலை 14 அன்று அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி குறித்து முப்படையின் தலைமை தளபதிக்கு ஓர் ஆலோசகராக சேவையாற்றிய முப்படை தளபதி (Staff Colonel) Orhan Yikilkan, தமக்கு தகவல் அளித்திருந்ததாக Turkkan தெரிவித்தார். ஜூலை 16 சனியன்று அதிகாலை தொடங்க இருக்கும் ஆட்சிக்கவிழ்ப்பு சதியில், ஜனாதிபதி, பிரதம மந்திரி, முப்படைகளின் தலைமை தளபதி மற்றும் தலைமை தளபதிகள் கைது செய்யப்படுவார்கள் என்று அவருக்கு Yikilkan தெரிவித்திருந்தார்.

இந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியில் தமக்கு எந்த சம்பந்தமும் கிடையாது என்று கூலன் தெரிவித்துள்ளார், அவர் ஏதேனும் பாத்திரம் வகித்திருந்தால் எந்த பாகத்தில் பாத்திரம் வகித்தார் என்பது தெளிவாக தெரியவில்லை. எர்டோகன் ஆட்சியை, அல்லது அவர்களின் நோக்கங்கள் மற்றும் இலட்சியங்களைக் கலைக்க இந்த சூழ்ச்சிக்குப் பின்னால் எந்த அரசியல் சக்திகள் இருந்தன என்பதும் தெளிவாக இல்லை. கெமாலிசவாதிகள் (Kemalists), வலது சாரி தேசியவாதிகள் மற்றும் குர்திஷ்-ஆதரவு கட்சி ஆகிய மூன்று எதிர்கட்சிகளும் இந்த முயற்சிக்கப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பு சதியைக் கண்டிப்பதில் AKP உடன் இணைந்துள்ளன.

அரசு நடத்தும் Anadolu செய்தி நிறுவன தகவல்களின்படி, இஸ்தான்புல் இன் ஒரு நீதிமன்றத்தில் நீதிபதி Mehmet Sel இன் அலுவலகத்தின் ஒரு கோப்பு கண்டறியப்பட்டுள்ளது. அது, குர்திஷ் சமாதான நடைமுறை நடந்து வந்த காலமான 2009 மற்றும் 2015 க்கு இடையே ஒரு பயங்கரவாத அமைப்புக்கு உதவியதாக எர்டோகன், முன்னாள் பிரதம மந்திரி Davutoglu, உள்துறை அமைச்சர் Efkan Ala மற்றும் உளவுத்துறை தலைவர் Hakan Fidan ஆகியோர் மீது குற்றஞ்சாட்டுவதற்குப் பயன்படும் ஓர் ஆவணத்தை வெளிப்படையாக கொண்டிருந்தது.

இந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு எதிராக மில்லியன் கணக்கானவர்கள் கடந்த வெள்ளியன்றும் சனியன்றும் வீதிகளுக்கு இழுக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் இது என்ன மாதிரியான மக்கள் ஆதரவை உருவாக்கி இருந்தாலும் அதை தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக அவரின் கரங்களைப் பலப்படுத்துவதற்கு ஏதுவாக எர்டோகன் கட்டாயம் பயன்படுத்துவார். அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி மற்றும் அதற்கு உடனடியான பிந்தைய காலத்தில், அவர் ஆயிரக் கணக்கான இஸ்லாமிய போராளிகள் குழுக்களது அங்கத்தவர்களை, குறிப்பாக AKP க்கு ஆதரவான ஓட்டோமன் சமூகங்களில் இருந்து வந்தவர்களையும், அத்துடன் ஜிஹாதிஸ்ட் மற்றும் மதவாத கோஷங்களைக் கூச்சலிட்டு வந்த AKP எதிர்ப்பாளர்களுக்கு எதிராக திரும்பிய தேசியவாதிகளையும் அணித்திரட்டி இருந்தார்.