ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Economic nationalism and the growing danger of war

பொருளாதார தேசியவாதமும், அதிகரித்துவரும் போர் அபாயமும்

By Nick Beams
4 June 2016

ஒவ்வொரு மதிப்பீடுகளிலும், உலக பொருளாதார மற்றும் அரசியல் நிலைமை அதிகரித்தளவில் 1930களுக்கு ஒத்து வருகின்றன. சமூக சீரழிவு, பொருளாதார மோதல்கள் மற்றும் அதிகரித்த புவிசார் அரசியல் பதட்டங்களின் ஒரு தசாப்தமாக இருந்த அது, 1939 இல் போர் வெடிப்புக்கு இட்டுச் சென்றது.

உலகளாவிய பொருளாதாரம் கூடுதலாக "நீடித்த மந்தநிலைமைக்குள்" (stagnation) நகர்ந்து வருகிறது, இந்த வார்த்தை முதன்முதலில் தொடர்ந்து உலகளாவிய தேவை உற்பத்திக்கு குறைவாக வீழ்ச்சியடைந்திருந்த, மந்தமான சந்தைகள் மற்றும் "அதீத உற்பத்திக்கு" இட்டுச் சென்ற ஒரு நிலைமையைக் குணாம்சப்படுத்திய பெரு மந்தநிலையைக் குறிப்பற்காக பயன்படுத்தப்பட்டது.

உலகளாவிய நிதியியல் நெருக்கடி வெடித்து அண்மித்து எட்டு ஆண்டுகளுக்குப் பின்னரும், இன்னமும் யூரோ மண்டல பொருளாதாரம் பணச்சுருக்கத்திற்குள் சிக்கியுள்ள நிலையில், இந்தாண்டு தான் 2007 இல் எட்டிய உற்பத்தி மட்டங்களுக்குத் திரும்பியது. அமெரிக்கா, போருக்குப் பிந்தைய காலகட்டத்தின் மிக மிக மெதுவான "மீட்சியை" கண்டு வருகிறது, அதேவேளையில் மூன்று தசாப்தங்களுக்கும் அதிகமான காலகட்டத்தில் முதல்முறையாக உற்பத்தித்திறன் சரிவை அடையத் தொடங்கி உள்ளது.

உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளதாரமான ஜப்பான், வளர்ச்சிக் குறைவு மற்றும் பணச்சுருக்கத்தில் சிக்கியுள்ளது, அதேவேளையில் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமான சீனா குறிப்பிடத்தக்க கீழ்நோக்கிய வளர்ச்சிக்குறைவை (slowdown) அனுபவித்து வருவதுடன் சேர்ந்து, பரந்த வேலை இழப்புகள் மற்றும் அதன் ஒன்றுதிரண்டுள்ள கடன் மட்டங்கள் மீதான அதிகரித்த கவலைகளும் அங்கே நிலவுகின்றன.

பிரதான சக்திகள் ஒவ்வொன்றும் உலகளாவிய மந்தநிலையின் தாக்கங்களை அதன் போட்டியாளர்கள் மீது சுமத்த முயல்வதால், பொருளாதார தேசியவாதத்தின் வளர்ச்சியும் மற்றும் அதிகரித்து வரும் வணிக போர் பதட்டங்களும், 1930களின் நிலைமைகளுக்கு ஒத்திருப்பவைகளிலேயே மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அக்காலக்கட்டத்தின் தொடக்கத்தில் போட்டிநாடுகளை விலையாக கொடுத்து தான் செழிக்கும் கொள்கைகள் (beggar-thy-neighbour policies) பேரழிவுகரமான விளைவுகளை உருவாக்கின. ஏனெனில் 1929 மற்றும் 1932 க்கு இடையே சர்வதேச வர்த்தகம் 50 சதவீதத்திற்கும் அதிகமாக சுருங்கின, அதன் பின்னர் செலாவணி மற்றும் வர்த்தக அணியாக உலகம் பிளவுற்று அது இரண்டாம் உலக போருக்கு இட்டுச் சென்றது.

சந்தைகளுக்காக தீவிரமடைந்து வரும் போராட்டம், பெரு மந்தநிலையை குணாம்சப்படுத்திய அதே மாதிரியான நடவடிக்கைகளை திரும்ப கொண்டு வருகிறது. அமெரிக்க எஃகுத்துறை விருப்பத்திற்கிணங்க, அமெரிக்க சர்வதேச வர்த்தக ஆணையம் (ITU) அதிகரித்த வணிக கட்டணங்களை திணிக்கும் நோக்கில் 40 சீன நிறுவனங்கள் மீது ஒரு விசாரணையைத் தொடங்க முடிவெடுத்ததில் இதைக் காணலாம்.

பாதுகாப்புவாத நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் ஒரு அமைப்பான Global Trade Alert இன் தலைவர் பேராசிரியர் சைமன் ஈவ்னெட் எச்சரித்துள்ளதைப் போல, அமெரிக்க சர்வதேச வர்த்தக ஆணைய விவகாரம் "எச்சரிக்கை மணியை" எழுப்பியுள்ளதுடன், இது "அணுஆயுத சாத்தியக்கூறை" நோக்கிய ஒரு நகர்வாகும். அவரது வார்த்தைகள் ஒரு உவமை அல்லது வனப்புரை என்பதை விட முக்கியத்துவம் பெறுகின்றன: மாறாக, அவை பொருளாதார தேசியவாதம் மற்றும் முற்றுமுதலான இராணுவ மோதலுக்கு இடையிலான பிரிக்கவியலாத இணைப்பைச் சுட்டிக்காட்டுகின்றன.

பாதுகாப்புவாதத்தின் பழைய வடிவங்கள் மட்டும் புதுப்பிக்கப்படவில்லை, புதிய வகைகளும் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு உலக வர்த்தக அமைப்பின் கீழ் தோஹா சுற்று பல்தரப்பு வர்த்தக பேச்சுவார்த்தைகள் நடைமுறையளவில் வேகவேகமாக முடிக்கப்பட்ட நிலையில், பசிபிக் இடையிலான கூட்டு உடன்படிக்கை (TTP) மற்றும் அட்லாண்டிக் நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு கூட்டு பங்காண்மை (TTIP) ஆகியவற்றின் கீழ் அமெரிக்கா பிரத்தியேக வர்த்தக அணிகளை உருவாக்குவதன் மூலமாக, அதன் சொந்த தேசியவாத நிகழ்ச்சிநிரலைப் பின்தொடர்ந்து வருகிறது.

பசிபிக் இடையிலான கூட்டு உடன்படிக்கை என்று அதன் பெயர் அவ்வாறு இருந்தாலும், அது உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமான சீனாவைத் தவிர்த்து விடுகிறது. வாஷிங்டனின் நோக்கங்கள் ஜனாதிபதி பராக் ஒபாமாவினால் எடுத்துரைக்கப்பட்டன. அவர் அறிவிக்கையில், இருபத்தோராம் நூற்றாண்டின் உலகளாவிய வர்த்தக விதிமுறைகளை, சீனா அல்ல, அமெரிக்கா எழுதுவதை உறுதிப்படுத்துவதே அதன் நோக்கமாகும் என்று அறிவித்தார்.

அதிகரித்துவரும் அமெரிக்க பொருளாதார தேசியவாதத்தின் எழுச்சி பிரவாகம், இப்போதைய நிர்வாகத்திற்கு அப்பாற்பட்டு, இன்றைய நிலையில் குடியரசு கட்சி வேட்பாளராக கருதப்படுகிற டோனால்ட் ட்ரம்ப் இன் "அமெரிக்காவிற்கே முதலிடம்" என்ற மிகக் கடுமையான பிரச்சாரத்திலும் மற்றும் "அமெரிக்காவை மீண்டும் தலையானதாக ஆக்குவோம்" என்ற அவரது சூளுரையிலும் எடுத்துக்காட்டப்படுகிறது.

ட்ரம்ப் இன் பிரச்சாரம், எவ்வாறிருப்பினும், தொழிற்சங்க அதிகாரத்துவம் உட்பட ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்திற்குள் ஆழமாக வேரூன்றி உள்ள போக்குகளின் குறிப்பிடத்தக்க ஒரு வன்முறை மற்றும் குரூரமான வெளிப்பாடாகும். சீன நிறுவனங்களை விசாரிப்பதென்ற ITU இன் தீர்மானத்தை வரவேற்று அமெரிக்க எஃகுத்துறை வெளியிட்ட அறிக்கை ஒன்று, “நமது தொழிற்சங்க சகோதர-சகோதரிகளிடம்" இருந்து அதன் விடயத்திற்கு கிடைத்திருக்கும் ஆதரவைச் சுட்டிக்காட்டியது.

இத்தகைய போக்குகள் அமெரிக்காவிற்குள் மட்டுந்தான் இருக்கின்றன என்று நினைப்பது மிகப்பெரிய தவறாக போய்விடும். பொருளாதார தேசியவாதத்திற்கு திரும்புவதென்பது ஒவ்வொரு பிரதான முதலாளித்துவ சக்தியின் அரசியல் ஸ்தாபகத்திற்குள்ளும் முன்பினும் அதிகமாக கணாக்கூடியதாக உள்ளது.

பிரிட்டனில், Brexit எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இங்கிலாந்து இருப்பதா அல்லது வெளியேறுவதா என்பதைத் தீர்மானிக்கும் ஜூன் 23 வெகுஜன வாக்கெடுப்புக்கான உத்தியோகபூர்வ பிரச்சாரத்தில் இருதரப்பும், அந்நாட்டின் தேசிய நலன்களுக்கு சிறந்தது எது என்ற அடிப்படையில் தான் அவர்களது நிலைப்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன.

ஐரோப்பிய கண்டத்தில், ஜேர்மன் அரசியல் ஸ்தாபகம் ஒட்டுமொத்த ஐரோப்பா மீதும் முன்பினும் அதிக சிக்கன நடவடிக்கைகளைத் திணிக்க கோருகிறது மற்றும் எந்தவிதமான ஊக்கப்பொதி நடவடிக்கைகளையும் விடாப்பிடியாக எதிர்க்கிறது. அத்தகைய நடவடிக்கைகள் ஜேர்மன் வங்கிகள் மற்றும் நிதியியல் நலன்களின் சர்வதேச போட்டியாளர்களிடம் இருந்து, குறிப்பாக அமெரிக்க நிதியியல் அமைப்புகளிடமிருந்து வரும் அதிகரித்த போட்டியின் முன்னால் அவற்றின் நிலையை பலவீனப்படுத்துமென அது அஞ்சுகிறது. அதேநேரத்தில் அது ஐரோப்பாவிற்குள் ஜேர்மனி தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது, மாறாக உலகளாவிய அரங்கில் இராணுவ வழிவகைகளுக்கும் குறைவின்றி அதுவொரு அதிகரித்த பாத்திரம் வகிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

அதேபோல ஷின்ஜோ அபே இன் ஜப்பானிய அரசாங்கம் சுருங்கிவரும் உலக சந்தையில் அதன் ஏற்றுமதிகளை ஊக்குவிப்பதற்காக யென்னின் மதிப்பை உயர்த்துவதற்கு முயன்று வருகிறது. அதேவேளையில் உலக விவகாரங்களில் ஓர் அதிகரித்த இராணுவ பாத்திரம் வகிப்பதற்காக, அது போருக்குப் பிந்தைய அமைதிவாத அரசியலைப்பு என்றழைக்கப்படுவதை ஏறத்தாழ முழுமையாக சிதைத்திருக்கிறது.

முதலாளித்துவ உற்பத்தி முறையிலேயே வேரூன்றிய, முதலாம் உலக போர் வெடிப்பதற்கு இட்டுச் சென்ற, புறநிலை முரண்பாடுகளைக் குறித்து புரட்சியாளரும் மார்க்சிச தத்துவவியலாளருமான லியோன் ட்ரொட்ஸ்கியின் தொலைநோக்கு பார்வை கொண்ட பகுப்பாய்வின் விடயமாக, இந்த பொருளாதார தேசியவாதம் மற்றும் இராணுவ மோதல் அதிகரிப்புக்கு இடையேயுள்ள பிரிக்கமுடியாத தொடர்பு விவரிக்கப்பட்டது.

1913 இல் ஐரோப்பிய பொருளாதாரத்தின் கீழ்நோக்கிய சரிவைச் சுட்டிக்காட்டி, அவர் குறிப்பிடுகையில், முதலாளித்துவ சொத்துடமை மற்றும் முதலாளித்துவ இலாபமுறை வடிவங்களைக் கொண்டு உற்பத்தி சக்திகள் அவ்வடிவங்களால் நிர்ணயித்த வரம்புகளை தாமாகவே கடந்துவிட்டன என்பதைச் சுட்டிக்காட்டினார்.

“சந்தை துண்டாடப்பட்டு விட்டது, போட்டி அதன் உச்சக்கட்ட நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது, இனிமேல் முதலாளித்துவ நாடுகள் எந்திரத்தனமான வழிவகைகளை கொண்டு ஒன்றை மற்றொன்று சந்தையிலிருந்து வெளியேற்ற முனையும்,” என்று ட்ரொட்ஸ்கி எழுதினார். “ஐரோப்பாவில் உற்பத்தி சக்திகளின் முன்னேற்றத்தை நிறுத்தப்போவது போர் அல்ல, மாறாக இந்த போரே முதலாளித்து நிர்வாக நிலைமைகளின் கீழ் ஐரோப்பாவில் உற்பத்தி சக்திகள் மேற்கொண்டு முன்னேறவியலாது போனதில் இருந்து தான் எழுகிறது,” என்றவர் குறிப்பிட்டார்.

இன்றைய பிரச்சினை உற்பத்தி சக்திகள் மேற்கொண்டு முன்னேறவியலாது இருப்பது ஐரோப்பாவிற்குள் மட்டும் கிடையாது, மாறாக தேசிய அரசுகளாலும் உலகசக்திகளின் பிளவுகளாலும் உந்தப்படும் உலகப்பொருளாதார கட்டமைப்பினுள் தனிச்சொத்துடைமை மற்றும் தனியார் இலாப முறையின் கீழ் இது உலகளாவிய பிரச்சினையாக உள்ளது.

“அதீத உற்பத்தி" என்ற நிகழ்வுபோக்கே இத்தகைய முரண்பாடுகளின் வெளிப்பாடு. எஃகு, தொழில் மற்றும் விவசாய உற்பத்தி பொருள்களை, மனிதயினத்தின் தேவையுடன் ஒப்பிட்டு பார்த்தால், அதீத உற்பத்தி என்பதே கிடையாது. இவை அனைத்தும் மந்தமான சந்தைகளை எதிர்கொள்கின்றன. உலக தொழிலாள வர்க்கத்தால் உற்பத்தி செய்யப்படும் அவற்றை எல்லாம், சீனா ஆகட்டும், ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் வேறெங்கு வேண்டுமானாலும் ஆகட்டும், ஒரு அறிவார்ந்த திட்டமிட்ட சோசலிச உலகளாவிய பொருளாதாரத்தில் ஆக்கபூர்வமாக என்பதையும் விட அதிகமாக பயன்படுத்த முடியும்.

ஆனால் தொழிலாள வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்றிக்கொள்வதன் மூலமாக, இந்த முதலாளித்துவ இலாபகர மற்றும் தேசிய-அரசு அமைப்புமுறையை தூக்கியெறிவதன் மூலமாக மட்டுமே அத்தகையவொரு பொருளாதாரத்தை யதார்த்தமாக்க முடியும். இது தான் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வேலைத்திட்டத்தின் அடித்தளம்.

இந்த மூலோபாயம், நிச்சயமாக, அனைத்து போலி-இடதுகள் மற்றும் குறுகிய பார்வை கொண்ட சந்தர்ப்பவாதிகளால் "நடைமுறைக்கு உதவாதது" என்றும் வேறுவிதத்திலும் உதறித்தள்ளப்படுகிறது. ஆனால் வழங்குவதற்கு அவர்களிடம் வேறு என்ன மாற்றீடு இருக்கிறது? மனித நாகரீகத்தின் எதிர்காலத்தையே அச்சுறுத்தும், சாத்தியமான அணுஆயுத விளைவுகளைக் கொண்ட போருக்குள் நுழைவதைத் தவிர அவர்களிடம் வேறொன்றுமில்லை.

உலக சோசலிசத்தைக் நடைமுறைப்படுத்துவதற்கான சடரீதியிலான பலம் அதிகரித்துவரும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் போராட்ட அலையிலிருந்து உருவெடுக்கிறது. தொழிலாள வர்க்கம் தலையாய வரலாற்று பணியை அதன் முன்னால் கொண்டுள்ளது என்ற நனவுபூர்வமான புரிதலை அதற்கு புகட்டுவதன் மூலமாக, இத்தகைய போராட்டங்களில் அவசியமான வழிகாட்டுதல்களை வழங்க, சோசலிச புரட்சியின் உலக கட்சியை, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை கட்டமைப்பதே இன்றியமையா கடமையாகும்.