ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Opposition mounts to French labor law in new national day of action

புதிய தேசிய அளவிலான நடவடிக்கை தினத்தில் பிரான்சின் தொழிலாளர் சட்டத்திற்கான எதிர்ப்பு பெருகுகிறது

By Anthony Torres
  15 June 2016

சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தின் தொழிலாளர் சட்டத்திற்கு எதிரான நேற்றைய தேசிய அளவிலான நடவடிக்கை தினத்தில் - சென்ற மாதம் முதலான முதல் தேசிய அளவிலான எதிர்ப்புப் போராட்டம் - ஐரோப்பிய ஒன்றியம் எங்கிலும் ஆளும் வர்க்கத்தால் திணிக்கப்பட்ட சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளுக்கு எதிராய்ப் போராட தொழிலாளர்களிடையே தீர்மானமான உறுதி வளர்ந்து செல்வது வெளிப்பட்டது.

வேலைநிறுத்தங்களை உடைக்கவும் தொழிலாளர்களை விரக்தியடையச் செய்யவும் அரசாங்கம் முயன்றபோதிலும், பல நகரங்களிலும் பேரணிகள் முந்தைய அணிதிரளல்களைக் காட்டிலும் குறிப்பிடத்தக்க அளவில் பெரியதாய் இருந்தன.

பாரிஸிலான ஆர்ப்பாட்டத்திற்கு நாடெங்கிலும் இருந்து தொடர்வண்டிகள் மூலமாகவும் பேருந்து வரிசைகள் மூலமாகவும் பயணித்து தொழிலாளர்கள் வந்துசேர்ந்தனர். 75,000 பேர் பங்குபெற்றதாக போலிஸ் மதிப்பிட்ட அதேநேரத்தில், 1 மில்லியனுக்கும் அதிகமான பேர் பங்கேற்றதாக தொழிற்சங்க ஆதாரங்கள் கூறின.

துலூஸில் 6,000 - 20,000 பேரும் ரென்னில் 4,000 பேரும் பங்குபெற்றதாக ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. பிரான்சின் இரண்டாம் பெரிய நகரமான Lyon இல் 3,800 பேர் முதல் 10,000 பேர் வரை பங்கேற்றதாக குறிப்பிடப்படுகிறது.

பிரான்சின் அவசரகாலநிலையைக் காட்டி PSம் பாதுகாப்புப் படைகளும் ஒழுங்கமைத்த ஒடுக்குமுறையை தொழிலாளர்கள் மீறினர். யூரோ 2016 கால்பந்து கோப்பை போட்டிகளை இடைஞ்சல் செய்யாத வகையில் தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ஊடகங்களும் அரசியல்வாதிகளும் வலியுறுத்தி வருகின்றனர். பாரிஸ் prefecture நிர்வாகம் 130 பேருக்கு ஆர்ப்பாட்டங்களில் பங்குபெற தடைவிதிக்கும் உத்தரவைப் பிறப்பித்தது.

கலகத் தடுப்புப் போலிசார் பாரிஸ் ஆர்ப்பாட்டத்தில் தாக்குதல் நடத்தி பேரணி சென்றவர்களை இரண்டாக உடைத்தனர். அதன் மூலம் அவர்கள் சில நூறு ஆர்ப்பாட்டக்காரர்களை தனிமைப்படுத்தி அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் கலகத் தடுப்பு போலிசுக்கும் இடையில் மோதல்கள் வெடித்தன, பாதுகாப்புப் படைகள் கண்ணீர்ப் புகையையும் தண்ணீர் பீரங்கியையும் பயன்படுத்தினர். பாரிஸில், குறைந்தது ஆறு ஆர்ப்பாட்டக்காரர்களும் சுமார் 20 போலிஸ்காரர்களும் காயமடைந்தனர், 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆர்ப்பாட்டப் பேரணிகளின் வலிமை பெருகிச் செல்வதை விடவும் அதிகமாய், தொழிலாளர்கள் முன்னெடுக்கின்ற கோரிக்கைகளின் வலிமையும் அதன் பரவலும் PS அரசாங்கத்திற்கு எதிராய் தொழிலாள வர்க்கத்தில் பரந்த தீவிரப்படல் உருவாகியிருப்பதற்கு சாட்சியமளிக்கின்றன.

தொழிலாளர் சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் எழுப்பப்படுகின்ற கோரிக்கைகள் இந்த ஒரு பிற்போக்கான சட்டத்தை திரும்பப்பெறுவதற்கும் தாண்டி வெகுதூரம் செல்கின்றன. சிக்கன நடவடிக்கைகள், அவசரநிலை, மற்றும் வெளிநாடுகளிலான ஏகாதிபத்திய தலையீடுகள் என PS இன் அத்தனை கொள்கைகளுக்கும் தொழிலாளர்களது குரோதம் நாளுக்கு நாள் பெருகிச் சென்று கொண்டிருக்கிறது.

ஆர்ப்பாட்டங்களை மட்டுப்படுத்துவதற்கு முனைந்து வருகின்ற ஸ்ராலினிச CGT இன் முன்னோக்கிற்கும் தொழிலாளர்களது எதிர்ப்புக்கும் இடையிலான பிளவு வளர்ந்து செல்கிறது. தொழிலாளர்களது கோரிக்கைகளை பூர்த்தி செய்யக் கூடியவை என்று கூறி இந்தச் சட்டத்தில் PS உடன் ஒரு உடன்பாட்டை பேசி முடிக்க CGT பொதுச் செயலரான பிலிப் மார்ட்டினேஸ் முயற்சி செய்து கொண்டிருக்கிறார். தொழிலாளர் சட்டத்தில் எந்த முக்கியமான திருத்தத்தையும் சகிக்க முடியாது என PS இன் தலைமை வலியுறுத்துகின்ற நிலையில், அந்தச் சட்டத்தைத் திரும்பப் பெறுவதற்குக் குறைந்த எந்த ஒன்றையும் தாங்கள் ஏற்கப் போவதில்லை என தொழிலாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

பாரிஸ் மற்றும் மார்சையில் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் WSWS செய்தியாளர்கள் பேசினர். பாரிசில், Ville-Evrard இன் மனநல மருத்துவமனைத் தொழிலாளியான Solène கூறினார்: “மக்களின் கருத்துகளுக்கு காது கொடுக்காத, தங்களைத் தவிர்த்த வேறெவருக்கும் காது கொடுக்காத இந்த அத்தனை அமைச்சர்களுக்கும் எதிராய், தொழிலாளர் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக நான் இங்கே வந்திருக்கிறேன். போதுமான அளவு பார்த்தாகி விட்டது, இனி முடியாது என்ற அளவுக்குப் போய்க் கொண்டிருக்கிறது.

“ஏற்கனவே நிறைய மேலதிகநேர வேலை செய்கிறோம், போதுமான ஓய்வு கிடைப்பதில்லை, இப்போது இன்னும் அதிகமாய் மேலதிகநேர வேலை கொடுக்க அவர்கள் விரும்புகிறார்கள். களைத்து கீழே விழும் வரைக்கும் வேலை பார்ப்பதற்கு எங்களுக்கு விருப்பமில்லை. வெறும் வேலை மட்டுமே வாழ்க்கையில்லை, குடும்பமும் இருக்கிறது தானே. போதும்போதும் என்றாகி விட்டது. இன்று [தொழிலாளர் அமைச்சர் மரியம்] எல் கொம்ரியின் சட்டத்திற்கு முடியாது என்று சொல்வதற்காக நான் வீதிக்கு வந்திருக்கிறேன். அவர் இந்த நாற்றமெடுத்த சட்டத்தை திரும்பப் பெற்றாக வேண்டும், அவ்வளவு தான்.”

ஜனநாயக உரிமைகள் மீதான அரசாங்கத்தின் தாக்குதல்களை, குறிப்பாக அவசரநிலையை, Solène எதிர்த்தார். “அவசரநிலை, என்ன வசதியான சாக்காக இருக்கிறது. அவர்கள் உண்மையாக நாம் போராடுவதைக் கைவிட விரும்புகிறார்கள், ஆனால் என்னவானாலும் சரி, என்ன நடந்தாலும் சரி, நாங்கள் தொடர்ந்து போராடியே தீருவோம்.” தேசிய நாடாளுமன்றத்தில் ஒரு முறையான வாக்களிப்பு இல்லாமல் அரசியல்சட்டத்தின் பிரிவு 49-3 ஐப் பயன்படுத்தி தொழிலாளர் சட்டத்தை பலவந்தமாகத் திணிக்கின்ற PS இன் முடிவுக்கு அவர் கண்டனம் செய்தார்.

பிரெஞ்சுப் புரட்சியைக் குறிப்பிட்டு அவர் கூறினார்: “நாம் 1789க்குத் திரும்பியிருக்கிறோம், அவர்கள் ராஜாக்கள் போல நடக்கலாம் என்று நினைக்கிறார்கள். தொழிலாளர்களை உதாசீனம் செய்ய விரும்புகிறார்கள், அத்தனையையும் நசுக்கி மேலே ரயில்பாதை போட்டு விடலாம் என்று நினைக்கிறார்கள்.... என்ன செய்ய வேண்டும் என்பது இனியும் அவர்களுக்குத் தெரியவில்லை, எதையும் சரியாய் செய்யும் விதமும் அவர்களுக்குத் தெரியவில்லை, அவர்கள் போட்டித்திறனற்றவர்களாக பொறுப்பற்றவர்களாக இருக்கிறார்கள், உங்கள் வாய்களை மூடுங்கள் என்று நம்மிடம் சொல்லுகின்ற விதமாக 49-3 ஐப் பயன்படுத்துகிறார்கள்.”

மார்சையில் 150,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் பங்குபெற்றதாக CGT தெரிவித்த அதேசமயத்தில், வெறும் 5,000 பேர் மட்டுமே கலந்து கொண்டதாய் போலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. துறைமுகங்கள், எண்ணெய் துறை, எண்ணெய் நிறுவனமான Air Liquide மற்றும் அரசுத் துறையைச் சேர்ந்த தொழிலாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குபெற்றனர்.

சிறார் சேவைகளில் நிபுணத்துவம் பெற்ற ஒரு கல்வியாளரான ஜூலியன் WSWS யிடம் பேசுகையில் எல் கொம்ரி சட்டத்தைத் திரும்பப் பெறக் கோருவதாக தெரிவித்தார். “வேலை பாதுகாப்பு அழிக்கப்படுவதை நிராகரிக்கின்ற மக்களின் பேச்சுக்கு அரசாங்கம் செவி கொடுக்காது. நாங்கள் செய்வதையும் நிகழ்வுகளின் திருப்பத்தையும் கணக்கில் எடுக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். நாங்கள் ஒரு முட்டுச் சந்திற்குள் சென்று கொண்டிருக்கிறோம், நாங்கள் எதையும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை. பிரெஞ்சு மக்களில் 70 சதவீதம் பேர் இந்த சட்டத்தை எதிர்க்கிறார்கள் என்ற உண்மைக்கு அவர்கள் காது கொடுத்தே ஆக வேண்டும்.”

இந்த அணிதிரள்வு ஒரு அடையாளப் போராட்டமல்ல என்பதை அவர் வலியுறுத்தினார். “இன்று மிகப்பெரியதொரு பரீட்சை. சென்றமுறையை விடவும் அதிகமான எண்ணிக்கையில் நாங்கள் இங்கே கூடியிருக்கிறோம் என்றே நினைக்கிறேன், இது சக்திகள் இடையிலான உண்மையான உறவை எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது. விட்டுக் கொடுப்பதற்கு முன்பாக ஆத்மதிருப்திக்காக செய்யப்படுகிற புனிதமான கடைசி நிலைப்பாட்டைப் போன்ற ஆர்ப்பாட்டமல்ல இது.” இந்தப் போராட்டம் இன்னும் கடினமாக ஆகவிருக்கிறது என்றும், இந்த சூழ்நிலை தான் வரவேற்கின்ற ஒன்று அல்ல என்றாலும் தவிர்க்கமுடியாததாக இருப்பதாகவே தான் கருதுவதாய் ஜூலியன் மேலும் சேர்த்துக் கொண்டார்.

Normandy இல் எண்ணெய் சுத்திகரிப்பு வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது குறித்து அவர் பின்வருமாறு கூறினார்: “25 நாட்கள் வேலைநிறுத்தத்திற்குப் பிறகு, நமது தோழர்கள் சாப்பிட்டாக வேண்டும், ஆகவே அவர்கள் வேலைநிறுத்தத்தை நிறுத்தியாக வேண்டியிருக்கிறது. இன்று மிகப் பெரும் அணிதிரள்வு இருந்தது, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் முழுமையாக செயல்படாது. எரிபொருள் துறை போராட்டம் மறைந்து விடவில்லை, பிரான்சின் எரிபொருள் கிடங்குகளில் மூன்று மூலோபாய வேலைநிறுத்த தினங்கள் இருக்கின்றன, ஒரேயொரு எரிபொருள் டிரக்கும் கூட வெளியேறுவதில்லை.”

முறையான கட்சி அல்லது தொழிற்சங்க இணைப்பு இல்லாத பலரும் கூட மேர்செய் ஆர்ப்பாட்டத்தில் பங்குபெற்றனர். ஜூலியா என்கிற மழலைப் பள்ளி உதவியாளர் பேசுகையில் பிரான்சில் நடந்து கொண்டிருக்கும் ஒவ்வொன்றையும் அவர் எதிர்ப்பதாய் விளக்கினார். வேலைநிறுத்தம் படிப்படியாக முடிவுக்கு வந்து கொண்டிருப்பதாய் ஊடகங்கள் கூறி வருவதை அவர் விமர்சனம் செய்தார்: “ஆர்ப்பாட்டக்காரர்கள் இன்னும் இங்கே இருக்கிறார்கள், எல்லோரும் எல்லா சமயங்களிலும் வேலைநிறுத்தத்தில் இருந்து கொண்டே இருக்க முடியாது, ஏனென்றால் உங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்க உங்களுக்கு பணம் தேவையாக இருக்கிறது, ஆனாலும் கூட நாம் இங்கே இருக்கிறோம். இது தொழிலாளர்களிடம் இருக்கிற பிரச்சினை அல்ல, வேலையை தொடர்வதைத் தவிர்த்து வேறெந்த தெரிவும் அவர்களுக்கு இல்லாது இருக்கிறது.”

அவர் மேலும் கூறினார், “யூரோ கோப்பை நடந்து வருகிறது என்றாலும் கூட நாங்கள் விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்பதை சொல்வதற்காகவே நாங்கள் இங்கே வந்திருக்கிறோம். எங்களை மிரட்டுவதற்கு யாரோ சிலர் முயற்சி செய்கிறார்கள் என்பதற்காக நாங்கள் வீதிகளில் இறங்கிப் போராடுவதை விட்டுவிடப் போவதில்லை.”

பிரெஞ்சு தொழிலாளர்கள் கண்டமெங்கிலுமான சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான ஒரு போராட்டத்தில் ஐரோப்பியத் தொழிலாளர்களுடன் தங்களது போராட்டங்களை ஐக்கியப்படுத்தும் அவசியம் குறித்து WSWS செய்தியாளர்கள் கூறியபோது அவர் பதிலளித்தார்: “அதுதான் எங்களது தேவை. அவர்களது சூறையாடல் நடவடிக்கை சர்வதேசிய அளவில் இருக்கிறது.”