ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Belgian public sector goes on strike in run-up to French rail walkout

பிரான்சு இரயில்வே தொழிலாளர் போராட்டத்திற்கு முன்பாக பெல்ஜிய பொதுத்துறை வேலைநிறுத்தத்திற்கு செல்கிறது

By Ross Mitchell and Alex Lantier
1 June 2016

பிரான்சின் இரயில்வே தொழிலாளர்கள் நேற்று மாலை காலவரையற்ற வேலைநிறுத்த நடவடிக்கையை தொடங்கிய நிலையில், பெல்ஜியத்தில் பொதுத்துறை தொழிலாளர்கள் செவ்வாயன்று 24 மணி நேர தேசிய அளவிலான வேலைநிறுத்தம் ஒன்றை ஒழுங்கமைத்திருந்தனர். 2008 நிதி நெருக்கடி முதலாக ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியமும் தொழிலாளர்கள் மீது திணித்து வந்திருக்கக் கூடிய பிற்போக்குத்தனமான சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளுக்கு எதிராக ஐரோப்பாவில் தேசிய எல்லைகளைக் கடந்து தொழிலாளர்கள் அணிதிரண்டு வருகின்றனர்.

சோசலிஸ்ட் கட்சியின் பிற்போக்குத்தனமான தொழிலாளர் சட்டத்திற்கு எதிராக பிரெஞ்சு தொழிலாளர்கள் அணிதிரண்டு வரும் நிலையில், பெல்ஜியத்தில் பிரதமர் சார்லஸ் மிஷேலின் வலதுசாரி அரசாங்கமானது நல உதவிகளிலான வெட்டுக்களையும் மற்றும் பொதுச் சேவை மற்றும் கல்வியிலான நிதிநிலை ஒதுக்கீடுகளில் வெட்டுகளையும் திணிக்கவும் அத்துடன் ஓய்வூதிய வயதை உயர்த்துவதற்கும் திட்டமிட்டு வருகிறது. வேலைப் பாதுகாப்பு மிக குறைவாக இருக்கக் கூடிய குறுகியகால, பகுதி நேர, ஒப்பந்த வேலைகளில் தொழிலாளர்களைப் பணியமர்த்துவதை முதலாளிகளுக்கு எளிதாக்குவதே பெல்ஜிய அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கிறது. அதன் உத்தேச சட்டங்கள் 45 மணிநேர வேலை வாரத்தை அறிமுகம் செய்கின்றன, கூடுதல் ஊதியமின்றி மேலதிக வேலையை (overtime) திணிக்கின்றன.

பொதுச் சேவைகளுக்கான பொதுக் கூட்டமைப்பு (CGSP) உள்ளிட பல்வேறு தொழிற்சங்கங்கள் பெல்ஜிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. தொடர்வண்டி ஓட்டுநர்களின் வேலைநிறுத்தம் ஆறாவது நாளை எட்டியிருக்கும் அதேசமயத்தில் இந்த வேலைநிறுத்தமும் நிகழ்கிறது. பெல்ஜிய இரயில் ஓட்டுநர்கள் மேலதிக வேலை ஊதியத்திலான வெட்டுகளை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

சுகாதாரத் துறை, பொதுப் போக்குவரத்துத் துறை, அஞ்சல் துறை, தீயணைப்புத் துறை, கல்வி மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்த நடவடிக்கையில் இறங்கியுள்ளதை அடுத்து ஒட்டுமொத்த பெல்ஜிய பொதுத் துறையும் மிகப்பெரும் அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. Francophone பகுதிகளில் அரசு நிறுவனமான பெல்ஜிய தேசிய இரயில்வே நிறுவனத்தின் (SNCB) நடவடிக்கைகள் முடக்கப்பட்டிருந்தன, Flanders இல் 50 சதவீத தொடர்வண்டிகள் மட்டுமே தங்களது வழக்கமான இயக்கப் பாதையில் இயங்கிக் கொண்டிருந்தன. பாரிஸ் மற்றும் ஜேர்மன் நகரங்களுக்கான சில சேவைகள் தாமதப்பட்டன அல்லது இரத்து செய்யப்பட்டன.

புரூசேல்ஸிலும் மற்றும் பிரெஞ்சு பேசும் Wallonia பகுதியிலும் பிரதான இரயில் மற்றும் பேருந்து சேவைகள் முடக்கப்பட்டிருந்தன. தலைநகர் புரூசேல்ஸில், மெட்ரோ பாதைகள், டிராம்கள் மற்றும் பேருந்துகள் வாரத்தில் இரண்டாம் முறையாக பாதிப்புக்கு உள்ளாகியிருந்தன, குப்பைகள் சேகரிக்கப்படவில்லை.

மற்ற நகரங்கள் மற்றும் பெருநகரங்களிலும், மெட்ரோ மற்றும் டிராம் போக்குவரத்து தடைப்பட்டது. ஒன்றரை நூற்றாண்டுக்கும் அதிகமான காலமாய் தொழிலாள வர்க்கப் போராட்டத்தின் ஒரு நெடிய வரலாற்றைக் கொண்டிருந்து வருகின்ற ஒரு நகரமான Charleroi இல், தொடர்வண்டிகள், பேருந்துகள் அல்லது டிராம்களை இயங்க அனுமதிக்க மறுப்பதற்கு தொழிலாளர்கள் வாக்களித்தனர்.

புரூசேல்ஸில் மே 24 அன்று குறைந்தபட்சம் 60,000 பேர் பங்குபெற்ற ஒரு ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர், நேற்று காலை 9 மணி அளவில் வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்வதற்காக கூடினர். புரூசேல்ஸில் 12,000 பேர் பேரணி நடத்தியதாக கிறிஸ்தவ தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்தது. புரூசேல்ஸில் பேரணி சென்ற கூட்டத்தில் இடம்பெற்றிருந்த ஒரு பதாகையில் “உங்கள் சிறப்புச் சலுகைகளுக்காக நாங்கள் இனி தியாகம் செய்யப் போவதில்லை” என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. “எங்கள் உரிமைகளுக்காகப் போராடுகிறோம்” என்ற மற்ற பதாகைகளும் இடம்பெற்றிருந்தன.

தேசமெங்கிலும் மற்ற பேரணிகளும் நடைபெற்றன, Ghent இல் 1,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், Namur இல் 350 பேரும், Wavre இல் 400 பேரும், Mons இல் 1,500 பேரும் ஆர்ப்பாட்டங்களில் பங்குபெற்றிருந்தனர். Wavre தான் பிரதமர் மிஷேலின் வசிப்பிடம் அமைந்துள்ள நகராகும். போராட்டத்தின் போது, அந்த வீடு கடும் பாதுகாப்பு மற்றும் போலிஸ் வலயத்தால் பாதுகாக்கப்பட்டிருந்தது.

சிறை அதிகாரிகளின் ஐந்து வார கால வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக, திங்களன்று, மூன்று Flemish தொழிற்சங்கங்களும் மற்றும் ஒரு Francophone தொழிற்சங்கமும் பெல்ஜியத்தின் நீதி அமைச்சரான கோயன் கீன்ஸ் உடன் ஒரு உடன்பாட்டை எட்டினர். கூடுதல் சிறை அதிகாரிகளைப் பணியமர்த்த திங்களன்று கீன்ஸ் வாக்குறுதியளித்ததை அடுத்து, தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்திலான தங்கள் பங்கேற்பை முடிவுக்குக் கொண்டுவந்தன. இன்னும் இரண்டு தொழிற்சங்கங்கள் இன்னும் உடன்பாட்டை எட்டவில்லை.

இரயில்வே வேலைநிறுத்தத்தின் கால அளவைக் குறித்து கருத்துக் கூறிய Le Soir செய்தித்தாள் கூறியது, “இது சென்ற 1986 இன் பொது வேலைநிறுத்தத்திற்குப் பிறகு கண்டிராத நீள அளவாகும்.”

சர்வதேச அளவில், குறிப்பாக பெல்ஜியம் மற்றும் பிரான்சில், தொழிலாள வர்க்கத்தின் போர்க்குணம் அதிகரித்துச் செல்வதைக் குறித்து ஆளும் உயரடுக்கு பெரும் கவலை கொண்டுள்ளது என்ற அதேநேரத்தில், தொழிலாள வர்க்கத்திற்கு எதிராய் தொழிற்சங்க அதிகாரத்துவம் ஒரு கூட்டாளியாக இருப்பதையும் அது நன்கறிந்து வைத்துள்ளது.

பெல்ஜிய தொழிற்சங்கங்கள் துறைவாரியாக தமது உறுப்பினர்களை வேலைநிறுத்தத்தில் பங்கெடுக்க அழைத்தன. ஒட்டுமொத்த பொதுத் துறையெங்கும் தொழிலாளர்களை அணிதிரட்டுவதற்கான ஒரு அழைப்பை அவை விடுக்கவில்லை. ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் செய்ய அனுமதிக்கப்பட்டனர், ஆனால் பெல்ஜிய ஆசிரியர் சங்கம் தனது உறுப்பினர்களை அணிதிரட்டவில்லை. விமானப் போக்குவரத்து துறையில் இருக்கும் தொழிற்சங்கங்கள் பொது வேலைநிறுத்தத்தில் கலந்துகொள்வதற்கு தமது உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை, ஆயினும் தொழிலாளர்கள் வேலையைப் பாதிக்கா வண்ணம் தனிப்பட்ட வகையில் போராட்டத்தில் இணைந்து கொண்டனர். புரூசேல்ஸ் மற்றும் நாட்டிலுள்ள மற்ற விமானநிலையங்கள் இந்த வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்படவில்லை.

பத்திரிகையாளரான Bernard Demonty இன் கருத்துகளை Le Soir மேற்கோளிட்டிருந்தது. பெல்ஜிய வரலாற்றில் “எந்தவொரு தொழிற்சங்க இயக்கமும் எந்த அரசாங்கத்தையும் அதிகாரத்தை விட்டு இறக்க முடிந்திருந்தது கிடையாது” என்று அவர் கூறியிருந்தார். “அரசாங்கம் வீழவேண்டும் என்றால் [Demonty கூறுகிறார்] அதற்கு முடிவு வரையான ஒரு பொது வேலைநிறுத்தம் வேண்டும். அப்படி நடக்க முடியாது, ஏனென்றால் தொழிற்சங்கங்கள் பிளவுபட்டு இருப்பதோடு அந்த தீர்மானத்துடனும் இல்லை.”

பிரான்சில், இரயில்வே தொழிலாளர்களுடன் வேலைநிறுத்தத்தில் இருக்கும் விமான நிறுவனத் தொழிலாளர்களும் விமானிகளும் இணையவிருக்கின்றனர். அதேநேரத்தில், நாட்டின் எட்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களில் ஆறு தொடர்ந்தும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதால் பிரான்சின் பெட்ரோல் நிலையங்களில் 20 சதவீதம் பெட்ரோலின்றி இருக்கின்றன. துப்புரவுத் தொழிலாளர்கள் பாரிஸ் மற்றும் St. Etienne இல் இருக்கும் அலுவலகங்களில் வேலைநிறுத்தங்களையும் முற்றுகைப் போராட்டங்களையும் தொடக்கியுள்ளனர்.

2014 முடிவில் விமானிகளின் வேலைநிறுத்தத்தை விமான நிறுவன விமானிகளது தேசிய சங்கம் (SNPL) விலைபேசியதன் பின்னர் ஒரு கணிசமான ஊதிய வெட்டிற்கு விமானிகள் முகம் கொடுக்கின்ற நிலையில், SNPL இன் விமானிகள் நீண்டகால வேலைநிறுத்தம் ஒன்றிற்கு ஆதரவாக திங்களன்று வாக்களித்தனர்.

இந்த வேலைநிறுத்தத்தின் விரிவெல்லையை சுருக்குவதற்காக பிரெஞ்சு அதிகாரிகள் முயற்சி செய்தனர். போக்குவரத்து அமைச்சரான Alain Vidalies கூறுகையில், “போராட்ட இயக்கம் தீவிரமானதாகவே இருக்கும், என்றாலும் சிலர் எதிர்பார்க்கின்ற மட்டத்திற்கு அது இருக்காது” என்றார். ஆயினும், இரயில்வே வேலைநிறுத்தத்தால் பாரிஸின் வேகப் பாதை பிராந்திய போக்குவரத்து அமைப்பின் அநேகப் பாதைகள் மூடப்படுவதோடு பல நெடுந்தூர அதி-வேக இரயில்களும் நகரங்களுக்கு இடையிலான இரயில்களும் கூட பாதிக்கப்பட்டு நிச்சயமாக ஒரு கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.

பிரான்சின் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் பெரும்பகுதிகள் வேலைநிறுத்தத்திற்கு குரோதமாய் இருக்கின்றன. பிரான்சுவா ஹாலண்ட் விட்டுக்கொடுப்புகளை செய்திருப்பதாக சாக்குச் சொல்லி PS ஆதரவு CFDT (பிரெஞ்சு ஜனநாயக தொழிலாளர் கூட்டமைப்பு) தொழிற்சங்கம் அதன் வேலைநிறுத்த அழைப்பை நேற்று இரத்து செய்தது.

இதனிடையே, பிரான்சின் ஆளும் வட்டாரங்கள் வேலைநிறுத்தம் செய்பவர்களுக்கு எதிரான வெறியையும் பொது மக்கள் கோபத்தையும் விசிறி விடுவதற்கு முனைகின்றன. அதில் மிகவும் நச்சுத்தனமான கருத்துகள் Radiall நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரியும், மிகப்பெரும் முதலாளிகள் கூட்டமைப்பான பிரெஞ்சு நிறுவனங்களின் இயக்கத்தின் (Medef) தலைவருமான Pierre Gattaz யிடம் இருந்து வந்தது. வேலைநிறுத்தம் செய்தவர்களை “பயங்கரவாதிகள்” என அவர் வர்ணித்தார்.

Gattaz கூறினார்: “சட்டத்தின் ஆட்சியை மக்களை மதிக்க வைப்பது என்பதன் அர்த்தம் என்னவென்றால் ரவுடிகளைப் போல, பயங்கரவாதிகளைப் போல நடந்து கொள்ளக் கூடிய சிறுபான்மையினர் ஒட்டுமொத்த நாட்டையும் முடக்கி விடாத வகையில் பார்த்துக் கொள்வதாகும்... [CGT இன் பொதுச் செயலரான பிலிப்] மார்டினேஸின் துண்டறிக்கையை வெளியிட மறுத்ததற்காக செய்தித்தாள்களை விநியோகம் செய்வதையே CGT தடுக்கிறது என்றால், ஒரு ஸ்ராலினிச சர்வாதிகாரத்தில் நாம் இருப்பதைப் போன்ற எண்ணமே எனக்கு ஏற்படுகிறது.”