ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Hurtling toward the precipice of war, Modi cements Indo-US alliance

போர் அபாயத்தை நோக்கிய அதிவேக பாய்ச்சலாக, மோடி இந்தோ-அமெரிக்க கூட்டணியை பலப்படுத்துகிறார்

By Keith Jones
  10 June 2016

இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடியின் இவ்வார இரண்டு நாள் வாஷிங்டன் விஜயம், சீனாவிற்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இராணுவ-மூலோபாய தாக்குதலின் ஒரு முன்னிலை நாடாக இந்தியாவை மாற்றுவதில் ஒரு திருப்புமுனையை குறித்து நிற்கிறது.

வாஷிங்டனின் வார்த்தைகளில் "ஆசிய முன்னிலை" அல்லது "மறுசமன்படுத்தல்" என்று கூறப்படும் இந்நடவடிக்கை, ஏற்கனவே இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அதன் பாரியளவு கடற்படை மற்றும் விமானப்படை பலத்தை அமெரிக்கா மீள்நிலைநிறுத்தம் செய்திருப்பதைக் கண்டுள்ளது, அதன் பாரம்பரிய பிராந்திய கூட்டாளிகளுடனான இராணுவ உறவுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன, சீனா மீது ஒரு பாரிய வான்வழி மற்றும் கடல்வழி குண்டுவீச்சுக்கான விரிவான திட்டங்கள் (வான்வழி/கடல்வழி போர்), பல்வேறு தென்கிழக்கு ஆசிய நாடுகள் தென் சீனக் கடலில் சீனாவிற்கு எதிராக அவற்றின் கடல்எல்லை உரிமைகோரல்களுக்கு அழுத்தமளிக்க தூண்டுதல், மற்றும் தென் சீனக் கடல் தீவுக்குன்றுகள் மீது சீனாவின் இறையாண்மையைச் சவால்விடுக்க ஆயுதமேந்திய "விமானங்களைப் பறக்கவிடுவது" மற்றும் "கடற்போக்குவரத்து சுதந்திர" நடவடிக்கை மேற்கொள்வது போன்றவற்றையும் கண்டுள்ளது.

மோடி மற்றும் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் செவ்வாயன்று அவர்களால் வெளியிடப்பட்ட கூட்டறிக்கை, இந்திய பெருங்கடல் மற்றும் ஆசிய பசிபிக் பிராந்தியங்கள் எங்கிலும் மற்றும் எல்லா "வழியிலும்… தரைவழி, கடல்வழி, வான்வழி, விண்வெளி மற்றும் இணையவழியிலும்" இந்தோ-பசிபிக் இராணுவ கூட்டுறவை அதிகரிக்கும் திட்டங்களை அறிவித்தது.

இந்தியாவின் துறைமுகங்கள் மற்றும் இராணுவ தளங்களை அமெரிக்க இராணுவம் எரிபொருள் நிரப்புவதற்கும், பழுது பார்ப்பதற்கும் மற்றும் நிறுத்திக் கொள்வதற்கும் வழமையாக அணுக இந்தியா அனுமதிக்க உள்ளது. வாஷிங்டன், அதன் பங்கிற்கு, இந்தியாவை ஒரு "பிரதான பாதுகாப்புத்துறை பங்காளியாக" அங்கீகரித்துள்ளது, அதாவது பென்டகனின் நெருக்கமான கூட்டாளிகளுக்கு மட்டுமே கிடைத்து வந்த அதிநவீன அமெரிக்க ஆயுதங்களை இனி இந்தியா வாங்கிக் கொள்ளலாம் என்பதே இதன் அர்த்தமாகும்.

அணுசக்தி வினியோகஸ்தர் குழுவின் (NSG) அங்கத்துவத்திற்கான ஒரு முக்கிய நிபந்தனையான அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை இந்தியா பூர்த்தி செய்திராத போதினும், அக்குழுவில் (NSG) இந்தியாவை துரிதமாக இணைப்பதற்கு அழுத்தமளிக்கவும் ஒபாமா நிர்வாகம் சூளுரைத்தது. அணுசக்தி வினியோகஸ்தர் குழுவில் சேர்வதால் இந்தியாவினால் படைத்துறைசாரா அதிநவீன அணுசக்தி தொழில்நுட்பங்களை அதிகமாக அணுக முடியும், மேலும் ஆயுதங்கள் அபிவிருத்திக்கான அதன் உள்நாட்டு அணுசக்தி திட்டங்களில் அது ஒருமுகப்படுவதற்கும் அனுமதிக்கும்.

இந்தியா உத்தியோகபூர்வமாக அமெரிக்காவின் "ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத கூட்டாளியாக" உள்ளது என்பதுடன் அது இரண்டாம் உலக போருக்குப் பின்னர் அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் உலகளாவிய மேலாதிக்கத்தைக் உறுதிப்படுத்த உருவாக்கிய கூட்டணி முறைக்கு வெளியே தொடர்ந்து இருந்து வருகிறது. ஆனால் இந்த வித்தியாசம் இப்போது பாசாங்கு என்பதை தவிர வேறொன்றுமில்லை.

அமெரிக்கா உடனான அது வளர்த்து வரும் இராணுவ உறவுகளுடன் சேர்ந்து, இந்தியா, இரண்டாண்டு கால மோடி தலைமையிலான பிஜேபி அரசாங்கத்தின் கீழ், ஆசிய பசிபிக்கில் வாஷிங்டனின் முக்கிய கூட்டாளிகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இராணுவ பயிற்சிகள் உள்ளடங்கலாக இருதரப்பு மற்றும் முத்தரப்பு மூலோபாய உறவுகளை தீவிரமாக அதிகரித்துள்ளது.

ஜனவரி 2015 இல் ஒபாமா மற்றும் மோடி வெளியிட்ட "ஆசிய பசிபிக்கிற்கான அமெரிக்க-இந்திய கூட்டு தொலைநோக்கு அறிக்கை" என்பதில், கிழக்கு ஆசியாவில் வாஷிங்டனின் சீன-விரோத "மறுசமன்படுத்தல்" மற்றும் பரஸ்பரம் வலுப்படுத்துவதற்காக என்று கூறப்பட்ட இந்தியாவின் "கிழக்கு நோக்கிய நடவடிக்கை" (Act East) ஆகியவற்றில் அமெரிக்காவுடன் இந்தியா நடைமுறையளவில் ஒரு பங்காண்மையை அறிவித்தது. அப்போதிருந்து, புது டெல்லி முன்பினும் அதிக வெடிபார்ந்துள்ள தென் சீனக் கடல் குறித்து விசுவாசத்துடன் அமெரிக்காவின் தொனியையே மீண்டும் மீண்டும் ஒலித்துள்ளது, அத்துடன் தென் சீனக் கடலில் மூலோபாய நலனை ஆக்ரோஷமாக வலியுறுத்துகிறது. மே மாத மத்தியில், கிழக்கத்திய பசிபிக் இன் இரண்டரை மாத கால சுற்றுபயணத்தின் முதல் படியாக நான்கு இந்திய போர்க்கப்பல்கள் தென் சீனக் கடலுக்குள் சென்றன. இப்பயணத்தின் போது, ஜப்பான் வசமிருக்கும் ஆனால் சீன உரிமைகோரும் தீவுதிட்டுக்களுக்கு (தியாயு அல்லது சென்காயு) அருகே அமெரிக்க மற்றும் ஜப்பானிய கடற்படைகளுடன் ஒரு கூட்டு ஒத்திகையும் உள்ளடங்கும்.

அமெரிக்காவில் இந்தோ-அமெரிக்க கூட்டணிக்கு இருதரப்பு ஆதரவை வலியுறுத்துவதற்காக, மோடி, அமெரிக்க காங்கிரஸின் ஒரு கூட்ட அமர்வில் புதனன்று உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தார், இரண்டாண்டுகளுக்கு முன்னர் வரையில் 2002 முஸ்லீம்-விரோத குஜராத் படுகொலையில் அவர் வகித்த பாத்திரத்திற்காக அமெரிக்கா இவருக்குத் தடைவிதித்திருந்தது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தளபதியாக சேவையாற்ற இந்திய முதலாளித்துவ வர்க்கம் தயாராக இருப்பதை பகிரங்கமாக அறிவிக்க அவரது 45 நிமிட உரையை அவர் பயன்படுத்திக் கொண்டார். ஆச்சரியத்திற்கிடமின்றி, அவர் மீண்டும் மீண்டும் எழுந்து நின்று கைத்தட்டல்களுடன் உற்சாகப்படுத்தப்பட்டார்.

அமெரிக்கா இந்தியாவின் "இன்றியமையா பங்காளி" என்று கூறிய மோடி, “ஒரு பலமான இந்திய-அமெரிக்க பங்காண்மை" அமெரிக்க மூலோபாய நலன்களை "ஆசியாவிலிருந்து ஆபிரிக்கா வரையில் மற்றும் இந்திய பெருங்கடலில் இருந்து பசிபிக் வரையில்" “நங்கூரமிடும்" என்றார்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் சமூக புரட்சியை எதைக் கொண்டு எதிர்த்ததோ அதே ஆயுத பலத்தைக் கொண்டு அதன் மேலாதிக்கத்தைப் பேணி வருகின்ற, அமெரிக்க இராணுவம், "மனிதயினச் சேவைக்காக" வழங்கிய "தியாகங்களை" அவர் புகழ்ந்துரைத்தார். மற்றும் "சர்வதேச விதிமுறைகள் மற்றும் சட்டதிட்டங்களை" ஏற்காதவர்களுக்கு எதிரான (கூறப்பட்ட எண்ணற்ற சீன விரோத கருத்துக்களில் இதுவும் ஒன்று) சமாதானம் மற்றும் ஜனநாயகத்தின் பாதுகாவலராக வாஷிங்டனை சித்தரித்தார்.

“20ஆம் நூற்றாண்டின் சிந்தனை உந்துதலுடன் அமைந்த சர்வதேச அமைப்புகளில் ஏற்பட்ட" மாற்றங்களுக்கு ஏற்ப இந்தியாவின் சொந்த வல்லரசு அபிலாஷைகளை மாற்றிக் கொள்வதற்கான ஒரு மனுவை மோடி அடிபணிந்து சமர்பித்தார்.

ஊழல்மிக்க இந்திய முதலாளித்துவ வர்க்கம் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு இடையிலான கூட்டணி, ஆசியா மற்றும் உலகெங்கிலுமான நாடுகளுக்கு இடையிலான உறவுகளில் வெடிப்பார்ந்த தாக்கங்களுடன், உலக புவிசார் அரசியலில் கடல் அளவிலான மாற்றங்களைப் பிரதிநிதித்துவம் செய்கிறது.

சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான வாஷிங்டனின் பனிப்போர் சூழ்ச்சிகளுக்கு ஏற்ப இந்தியா அதன் வெளியுறவு கொள்கையை அடிபணிய செய்ய வேண்டுமென அமெரிக்கா கோரியதை அப்போதைய புதிய சுதந்திர இந்தியா நிராகரித்ததால், அமெரிக்கா 1990 வரையில் புது டெல்லியை ஒரு எதிரியாக கையாண்டு வந்தது. தசாப்தங்களாக அது, இந்தியாவின் பரம விரோதியான பாகிஸ்தானை அதன் பிராந்திய பங்காளியாக கட்டமைத்ததுடன், இந்தியா உடனான அதன் இராணுவ-மூலோபாய விரோதத்தைப் பின்தொடர பாகிஸ்தானை ஊக்கப்படுத்தியது.

இப்போது அமெரிக்கா இந்தியாவை ஆதரிக்கும் அதன் திட்டங்களை உயர்த்திக் காட்டுகிறது. இந்தோ-அமெரிக்க கூட்டணி 21 ஆம் நூற்றாண்டில் வாஷிங்டனின் "தீர்மானகரமான பங்காண்மையாக" ஆகும் சாத்தியக்கூறைக் கொண்டுள்ளது என்று ஒபாமா வாதிடுகிறார்.

இந்தியா மிகவும் வறுமையான நாடாகும். நூறு மில்லியன் கணக்கான இந்தியர்கள் முழு வறுமையில் வாழ்கிறார்கள் மற்றும் மக்களில் முக்கால் பகுதியினர் நாளொன்றுக்கு 2 டாலருக்கு குறைவான வருவாயில் வாழ்க்கை வாழ விடப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அடுத்தடுத்து வந்த அமெரிக்க நிர்வாகங்கள் அதை ஒரு பிரதான மூலோபாய பரிசாக ஏற்க முனைந்துள்ளன.

மக்கள்தொகையில் இந்தியா சீனாவிற்கு அடுத்து இரண்டாம் இடத்தில் உள்ளது. அது அணுஆயுதங்கள் மற்றும் விமானமேந்திய கப்பல்களைக் கொண்ட ஒரு மிகப்பெரிய இராணுவத்தை விரிவாக்கி வருகிறது (50 பில்லியனுக்கு அதிகமாக இந்திய இராணுவ வரவு-செலவு திட்டக்கணக்கு, பிரான்ஸ் அல்லது ரஷ்யாவுடன் ஒப்பிடத்தக்கதாகும்). அது புவியியல்ரீதியில் உலகின் மிக முக்கிய வர்த்தக கடல்வழியான மற்றும் சீனப் பொருளாதாரத்திற்கு முக்கிய ஜீவநாடியாக உள்ள இந்திய பெருங்கடலில் மேலாதிக்கம் செய்கிறது.

அமெரிக்காவுடன் அணிசேர்வதன் மூலமாக, இந்தியா சீனாவை மூலோபாயரீதியில் சுற்றி வளைத்து இறுக்கி வருவதுடன், ஒரு போர் சம்பவத்தில் அல்லது போர் நெருக்கடியின் போது இந்திய பெருங்கடலை பெய்ஜிங் அணுக முடியாதவாறு செய்வதன் மூலமாக சீனப் பொருளாதாரத்தை அழிப்பதற்கான அமெரிக்க அச்சுறுத்தலை பலப்பபடுத்துகிறது. இந்திய முதலாளித்துவ வர்க்கம் இவ்விதத்தில் அமெரிக்க மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ள சீனாவை நிர்பந்திக்கும் வாஷிங்டனின் ஈவிரக்கமற்ற உந்துதலில் அதற்கு ஒத்துழைத்து ஊக்கப்படுத்துகிறது. இந்த உந்துதலின் தர்க்கம், பென்டகனின் சொந்த திட்டங்களிலேயே தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளவாறு, அணுஆயுத சக்திகளுக்கு இடையிலான முற்றுமுதலான போராகும். அமெரிக்காவின் ஏகாதிபத்திய அத்துமீறல் ஏற்கனவே தென் சீனக் கடல் பதட்டங்களைக் கொதிப்பான புள்ளிக்கு உயர்த்தி உள்ளது.

அமெரிக்க ஆதரவில் மிதந்து கொண்டிருக்கும் இந்தியா ஆக்ரோஷமாக தெற்காசியாவின் மேலாதிக்க சக்தியாக அதன் உரிமைகோரலை வலியுறுத்தி வருகிறது, அதன் சிறிய போட்டியாளர்கள் அதன் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ளுமாறு அது கோரி வருவதுடன், சீனப் பொருளாதார செல்வாக்கின் வளர்ச்சிக்கு எதிராக அழுத்தமளித்து வருகிறது. சமீபத்தில் புது டெல்லி, மாலத்தீவை அது "இந்திய முதலிட வெளியுறவு கொள்கையைப்" பின்தொடர வேண்டுமென அறிவித்து மிரட்டியது, இது குறைந்தளவே வெற்றி பெற்ற நிலையில், காத்மாண்டு மீது இந்தியா நிறைய செல்வாக்கை கொண்டிருக்கும் வகையில் நேபாளம் அதன் புதிய அரசியலமைப்பில் மாற்றங்களைச் செய்ய நிர்பந்திக்கும் ஒரு முயற்சியில் அது ஐந்து மாதங்களாக, நில எல்லையால் சூழப்பட்ட நேபாளத்தின் மீது ஒரு பொருளாதார தடை விதித்தது.

அமெரிக்காவின் ஆசிய முன்னிலை மற்றும் அதன் இளம் பங்காளியாக இந்தியாவை அது ஊக்குவிப்பதானது தெற்காசிய நாடுகளுக்கு இடையே தொடர்ச்சியாக நாடுகளுக்கிடையிலான மோதல்களை எரியூட்டுவதுடன், அமெரிக்க-சீன மோதல்களுக்குள் அவற்றைச் சிக்க வைக்கின்றது, அத்துடன் ஒவ்வொரு பிராந்திய மோதலிலும் வெடிப்பார்ந்த புதிய பரிமாணத்தைச் சேர்க்கிறது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவிற்கான வெளிப்படையான ஒரு உதாரணமாக இருப்பது பொதுவான எல்லை பற்றிய பிரச்சினை இன்னும் இருப்பதாகும், இந்திய துணைக்கண்டத்தின் வகுப்புவாத பிரிவினையிலிருந்து ஒரு எதிரி நாடாக உருவாக்கப்பட்ட பாகிஸ்தானுக்கு இந்தியாவிற்கும் இடையிலான உறவுகளில் குறிப்பாக மோதல் அதிகரித்துள்ளது. அணுஆயுதமேந்திய இவ்விரு நாடுகளுக்கு இடையே, கடந்த ஏழு தசாப்தங்களில், மூன்று அறிவிக்கப்பட்ட மற்றும் எண்ணற்ற அறிவிக்கப்படாத போர்கள் நடந்துள்ளன.

இந்தோ-அமெரிக்க மூலோபாய பங்காண்மை தெற்காசியாவில் அதிகார சமநிலையை மாற்றியிருப்பதாக இஸ்லாமாபாத் அதிகரித்தளவில் கடுமையான எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது. ஆனால் புது டெல்லி உடன் அதன் சீன-விரோத கூட்டணியைப் பலப்படுத்த பெரும் ஆர்வமுடன் இருக்கும் வாஷிங்டன், இத்தகைய எச்சரிக்கைகளை இறுமாப்புடன் உதறித்தள்ளுகிறது.

பாக்கிஸ்தானின் விடையிறுப்பு இரண்டு மடங்காகி உள்ளது. அது தந்திரோபாய அல்லது போர்க்கள அணுஆயுதங்கள் உள்ளடங்கலாக அதன் அணுஆயுத தளவாடங்களை அதிகரித்துள்ளதுடன், சீனா உடனான அதன் நீண்டகால இராணுவ-பாதுகாப்பு உறவுகளைப் பலப்படுத்த முனைந்துள்ளது.இதே உறவுகளைப் பனிபோர் காலத்தின் கடந்த தசாப்தங்களில் வாஷிங்டனுடன் பெய்ஜிங் கூட்டாக இருந்தபோது, அமெரிக்கா பலமாக ஆதரித்தது.

புது டெல்லி உடனான அதன் உறவுகளை மேம்படுத்தும் அதன் சொந்த முயற்சிகளின் பாகமாக, பெய்ஜிங், இந்தியாவுடன் நல்லிணக்கத்துடன் இருக்க பாகிஸ்தானை நீண்டகாலமாக ஊக்குவிக்க முயன்றுள்ளது, அதன்மூலமாக அமெரிக்காவின் சீன-விரோத கூட்டணியின் மேற்கத்திய தூணாக இந்தியாவை ஆக்கும் அமெரிக்க முயற்சிகளை எதிர்கொள்ளவும் முயன்றது. ஆனால் யுரேஷியாவை இணைக்கும் உள்கட்டமைப்பைக் கட்டமைப்பதில் (புதிய பட்டுச்சாலை) இந்தியாவும் பங்கெடுப்பதற்கு சீனா வழங்கிய வாய்ப்புகளை மோடி அரசாங்கம் நிராகரித்ததுடன், அதற்கு பதிலாக முன்பினும் அதிகமாக தன்னைத்தானே வாஷிங்டனின் மூலோபாய திட்டநிரலுக்குள் ஒருங்கிணைத்துக் கொண்டதால், பெய்ஜிங் கடந்த ஆண்டு சீன பாகிஸ்தான் பொருளாதார தடத்தைக் (CPEC) கட்டமைக்க பாகிஸ்தானில் 46 பில்லியன் டாலர் முதலீட்டை அறிவித்தது. பாகிஸ்தானின் அரேபிய கடலில் உள்ள குவாதார் துறைமுகத்திலிருந்து மேற்கு சீனாவிற்கு இரயில், சாலை மற்றும் குழாய்வழி இணைப்புகளை வழங்கும் இந்த CPEC திட்டம், மலாக்கா ஜலசந்தி மற்றும் ஏனைய இந்திய பெருங்கடல் மற்றும் தென் சீனக் கடலின் திணறடிக்கும் முனைகளைக் கைப்பற்றுவதன் மூலமாக சீனாவை முற்றுகையிடும் அமெரிக்க திட்டங்களை, குறைந்தபட்சம் ஒரு கணிசமான அளவிற்கு, குறுக்கறுக்கின்றது.

பாகிஸ்தான் இராணுவம் குறிப்பிட்டளவிற்கு வாஷிங்டனின் கூட்டாளியாக மற்றும் உடைமையாக உள்ளது. ஆனால் ஆப்கான் கிளர்ச்சியினது பலத்தால் செயல்குலைந்த அமெரிக்கா, CPEC திட்டத்தால் கோபமடைந்து, இந்தியாவைத் தழுவி, பாகிஸ்தான் மீதான அழுத்தத்தை அதிகரித்து வருகிறது.

தாலிபான் அரசியல் தலைவரை ஒரு டிரோன் தாக்குதலில் பாகிஸ்தான் எல்லைக்குள்ளேயே விசாரணையின்றி இராணுவத் தாக்குதலில் கொன்றபோது, கடந்த மாதம், அமெரிக்கா நீண்டகால பாகிஸ்தானிய "சிவப்பு கோட்டை" மீறியது, அத்துடன் அந்நடவடிக்கை தாலிபான் உடனான சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு முயன்ற பாகிஸ்தானின் முயற்சிகளை முறியடித்தது. ஆப்கான் போரின் சுமையை இன்னும் அதிகமாக ஏற்குமாறு அனேகமாக பாகிஸ்தானை அச்சுறுத்தும் நோக்கில், வாஷிங்டன் நீண்டகாலமாக இந்தோ-பாகிஸ்தான் மூலோபாய போட்டியின் ஒரு களமாக இருந்து வந்துள்ள ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் பிரசன்னத்தை ஊக்குவித்து வருகிறது.

பாகிஸ்தான் மீது சுதந்திரமாக செயல்பட வாஷிங்டன் அனுமதிக்காததற்காக இந்திய உயரடுக்கு நீண்டகாலமாக ஆட்சேபணைகளை தெரிவித்து வருவதுடன், கூடுதலாக எந்தளவிற்கு செல்ல அதை வாஷிங்டன் அனுமதிக்கும் என்று அது தொடர்ந்து பரிசோதித்துப் பார்த்து வருகிறது. கடந்த ஆண்டு மாதக்கணக்கிலான எல்லை மோதல்களைக் கண்டது, கடந்த வாரயிறுதியில், இந்தியாவின் பாதுகாப்பு மந்திரி கூறுகையில் பாகிஸ்தான் உடனான சமாதான பேச்சுவார்த்தைகளுக்கான அதிக நிபந்தனைமிக்க மோடியின் அழைப்பிற்கான பதில்கள் வருவது தாமதமடைந்து வருகின்றன என்று தெரிவித்தார்.

இதற்கிடையே அமெரிக்க இராணுவ-பாதுகாப்பு வட்டாரங்களில், சீனாவிற்கு எதிரான இந்தோ-அமெரிக்க கூட்டணியை அவை பலப்படுத்துவதால், சிக்கலாகி உள்ள அமெரிக்க-பாகிஸ்தான் உறவுகளை வரவேற்கலாமென வாதிடப்படுகிறது.

அதன் பொருளாதார வீழ்ச்சியின் தாக்கங்களைச் சீர்செய்யும் மற்றும் அதன் உலகளாவிய மேலாதிக்கத்தைப் பேணும் பெரும்பிரயத்தன முயற்சியில், அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆக்கிரமிப்பு மற்றும் போரைப் பின்தொடர்ந்து வருகிறது, இந்த நிகழ்முறையில் ஒரு பிரதேசம் மாற்றி ஒரு பிரதேசத்தில் நாடுகளுக்கு இடையிலான உறவுகளை அது எரியூட்டிக் கொண்டிருக்கிறது.