ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Despite mounting opposition, French unions signal concessions on labor law

எதிர்ப்பு பெருகிச் செல்வதைப் பொருட்படுத்தாமல், தொழிலாளர் சட்டத்தில் விட்டுக்கொடுப்புகளுக்கு பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் சமிக்கை செய்கின்றன

By Alex Lantier
  20 June 2016

சோசலிஸ்ட் கட்சியின் பிற்போக்குத்தனமான தொழிலாளர் சட்டத்திற்கு தொழிலாள வர்க்கத்தில் போர்க்குணமிக்க எதிர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதை பொருட்படுத்தாமல், சோசலிஸ்ட் கட்சியின் வளைந்துகொடுக்காத நிலைப்பாட்டிற்கான பதிலிறுப்பில், சரணடையவிருப்பதையும் அச்சட்டத்தின் முக்கியமான அம்சங்களை ஏற்றுக் கொள்ளவிருப்பதையும் பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் சமிக்கை செய்து கொண்டிருக்கின்றன.

முக்கியமான பிரெஞ்சு நகரங்களில் ஸ்ராலினிச CGT தொழிற்சங்கம் அழைப்பு விடுக்கின்ற ஆர்ப்பாட்டங்களைத் தடைசெய்யவிருப்பதாக சென்ற வாரத்தில் பிரான்சின் பிரதமரான மானுவல் வால்ஸ் அச்சுறுத்தியிருந்தார். இந்த முன்கண்டிராத நடவடிக்கையானது, பாரிஸில் நவம்பர் 13 பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னர் திணிக்கப்பட்ட அவசரகாலநிலையானது எல்லாவற்றுக்கும் முதலில் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கை திட்டநிரலுக்கு தொழிலாள வர்க்கத்தில் தோன்றியிருந்த எதிர்ப்பை ஒடுக்குவதற்கே நோக்கம் கொண்டிருந்தது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டியது.

Journal du Dimanche பத்திரிகைக்கு நேற்று அளித்த ஒரு திமிரான பேட்டியில் வால்ஸ் இந்த அச்சுறுத்தலை மீண்டும் கூறியிருந்தார், அதனை இன்னும் பெரிதாக்கியிருந்தார். அதில் தொழிலாளர் சட்டத்திற்கு எதிராகப் போராடும் தொழிலாளர்களையும் தொழிற்சங்க நிர்வாகிகளையும் கலகக்காரர்கள் என்று அவர் தூற்றினார். “நிலைமையைக் கணக்கில் கொண்டால், நடைபெறுகின்ற வன்முறையை, [சென்ற வாரத்தில் மனியோன்வில் (Magnanville) இல் கொல்லப்பட்ட] போலிஸ் தம்பதிக்கு எதிராக நடந்த படுபயங்கரமான தாக்குதலை அத்துடன் யூரோ கால்பந்து கோப்பையையும் கூட மனதில் கொண்டால், ஒழுங்கமைப்பவர்கள் தாமாகவே இந்த ஆர்ப்பாட்டங்களை இரத்து செய்தாக வேண்டும்” என்றார் வால்ஸ். “அதுவே பொதுவாய் ஏற்படக் கூடிய உணர்வாக இருக்கும்.”

“இந்த முட்டுச் சந்தில் இருந்து வெளியில் வரவேண்டும்” என்று CGTக்கு அழைப்புவிடுத்த

அவர் அதனுடன் சேர்த்துக் கூறினார்: “இது உண்மை. தொழிற்சங்க நிர்வாகிகளும் கலகக்காரர்களுடன் சேர்ந்து செயல்படக் கூடும். அது ஏற்கமுடியாததாகும். ஆர்ப்பாட்ட ஒழுங்கமைப்பாளர்கள் வன்முறையை தெளிவாக எதிர்க்கின்ற வகையில் பொறுப்பாக செயல்பட விரும்புவதில்லை. இந்த ஆர்ப்பாட்டங்கள் பாதுகாப்புப் படைகளுக்கும் பொதுச் சொத்துக்கும் அச்சுறுத்தலாக இருப்பதை இனியும் நாங்கள் கண்டால், அதன்பின் அரசாங்கம் அதன் கடமையை செய்தே தீரும்.”

இந்தக் கருத்துகளின் மூலமாக, வேலைநிறுத்தம் செய்வதற்கும் ஆர்ப்பாட்டம் செய்வதற்கும் இருக்கின்ற அரசியல்சட்டரீதியாக பாதுகாக்கப்பட்ட உரிமைகளின் விடயத்தில் மட்டுமல்லாது, PS இன் தொழிலாளர் சட்டத்திற்கு கடுமையான குரோதம் கொண்டதாய் இருக்கின்ற பரந்த மக்கள் திரளின் கருத்துகளின் விடயத்திலும் தான் கொண்டிருக்கக் கூடிய அலட்சிய மனோபாவத்தை வால்ஸ் விளங்கப்படுத்தினார். தேசிய நாடாளுமன்றத்தில் ஒரு முறைப்படியான வாக்கெடுப்பு இல்லாமல் அவசரகாலநிலை நடவடிக்கையை பயன்படுத்தி PS இச்சட்டத்தைத் திணித்தற்குப் பின்னரும், மக்களில் 60 சதவீதம் முதல் 64 சதவீதம் வரையானோர் இந்த சட்டத்தை PS திரும்பப் பெற வேண்டும் என்றே விரும்புகின்றனர்.

ஆனால், PSக்கான எதிர்ப்பு பெருகுகின்ற நிலையிலும், செவ்வாயன்று நடந்த தேசிய அளவிலான ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்பு விரிவு கண்டிருப்பதற்கும் பின்னர்தான், PS அரசாங்கத்திற்கு பரந்த விட்டுக்கொடுப்புகளை CGT வழங்க முன்வந்திருக்கிறது. இதுவே, நாடாளுமன்ற அவைகளில் இந்தச் சட்டம் முன்னேறிச் செல்வதை மேற்பார்வை செய்கின்ற பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கின்ற PS இன் தொழிலாளர் அமைச்சர் மரியம் எல் கொம்ரிக்கும் CGT பொதுச் செயலரான பிலிப் மார்ட்டினேசுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை நடந்த பேச்சுவார்த்தைகளின் சாரமாகும்.

தொழிற்துறை ரீதியான ஒப்பந்தங்கள் மற்றும் தேசிய தொழிலாளர் சட்டத்தில் உள்ள அம்சங்கள் ஆகியவற்றை மீறி தனித்தனி நிறுவனங்களிலான மட்டத்தில் தொழிற்சங்கங்களும் முதலாளிகளும் உடன்பாடு செய்து கொள்ள அனுமதிக்கின்ற, புதிய சட்டத்தின் ஒரு முக்கியமான அம்சமாக இருக்கின்ற ஒரு ஷரத்தை முன்னதாக CGT விமர்சனம் செய்திருந்தது. தொழிலாளர் சட்டங்களை நெரித்துப் போட்டுவிட்டு முதலாளிகளின் இலாபத் தேவைகளுக்கு தக்கபடி வேலைவேகத்தை கூட்டுவதையும் ஊதியங்கள் மற்றும் நல உதவிகள் வெட்டுவதையும் மேற்பார்வை செய்கின்ற வணிக-ஆதரவு தொழிலாளர் ஒப்பந்ததாரர்களாக தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் பாத்திரத்தை இந்த ஷரத்து உத்தியோகபூர்வமானதாக்கி விடும்.

வெள்ளியன்று எல் கொம்ரியுடனான பேச்சுவார்த்தைகளின் பின்னர் பேசிய மார்ட்டினேஸ் அவர்கள், அடிப்படையில் இருதரப்பும் முன்நகர முடியாத ஒரு நிலையை எட்டியிருந்ததாகக் கூறினார். “CGTக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் முக்கியமான விடயங்களில் உடன்பாடில்லாத புள்ளிகள் இருக்கின்றன” என்ற அவர் “இந்த உடன்பாடின்மைகள் இன்று ஊர்ஜிதப்படுத்தப்பட்டன” என்றார்.

ஆயினும், இந்தச் சட்டம் குறித்த CGT இன் மனோபாவம் குறித்த ஒரு முக்கியமான விவாதம் நடைபெற்றிருந்ததாக எல் கொம்ரி கூறினார். அவரும் மார்ட்டினேசும் “கருத்தொருமிப்பை” கண்டிருக்கவில்லை என்று கூறிய எல் கொம்ரி, அதே நேரத்தில், “நிறுவன மட்டத்திலான உடன்பாடுகளுக்கு நாங்கள் கொடுக்க விழைகின்ற பிரதான முக்கியத்துவம் குறித்த விடயத்தில் எங்களுக்குள் ஒரு ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாற்றம் இருந்தது, அது மிகக் கவனத்துடன் வாதிடப்பட்டது” என்றார்.

ஆயினும் CGT நிலைப்பாட்டு ஆவணங்கள் கசிந்தன, புதிய சட்டத்தை திரும்பப் பெறக் கோரும் அழைப்புகளை CGT கைவிடுவதாக பரவலாக பேசப்பட்டது. அதற்குப் பதிலாய், தொழிற்துறை-மட்டத்திலான ஒப்பந்தங்களை அல்லது தேசிய தொழிலாளர் சட்டத்தை மீறி தொழிற்சங்கங்களும் முதலாளிகளும் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கு அனுமதிக்கின்ற புதிய சட்டத்தின் மிகவும் சர்ச்சைக்குரிய பகுதிக்கு உடன்படுவதற்குரிய நிபந்தனைகளை விதிப்பதற்கு அது தொடங்கியிருக்கிறது.

CGT இன் ஆவணம் முன்வைத்தது: “தனித்தனியான தொழிற்துறைகள், சட்ட வரம்புகளுக்குள்ளாக, நிறுவனங்களில் பேச்சுவார்த்தைக்கான சாத்தியமான வரம்பை நிர்ணயிக்கலாம். [ஒன்று] நிறுவன அளவிலான உடன்பாடுகள் தொழிற்துறை மட்டத்திலான ஒப்பந்தங்கள் அமைக்கின்ற வரம்புகளுக்குள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பெருவாரியான தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற தொழிற்சங்கங்களால் அங்கீகரிக்க செய்யப்படலாம். அல்லது, சட்ட வரம்புகளுக்கு உட்பட்டு, நிறுவனங்கள் தொழிற்துறை மட்டத்திலான ஒப்பந்தங்களால் அமைக்கப்பட்ட கட்டமைப்பில் இருந்து விதிவிலக்குகள் பெறுவதற்கு விரும்பலாம். அச்சமயத்தில், அதற்கான ஒரு விண்ணப்பம் தொழிற்துறை-மட்டத்திலான ஒரு ஆணையத்தால் விசாரிக்கப்படலாம், அது அதன் சட்டநியாயத்தையும் பொருத்தத்தையும் ஆராயும்.”

ஜூன் 23 மற்றும் 28 க்கான ஆர்ப்பாட்டங்களுக்கான தனது அழைப்புகளை, குறைந்தபட்சம் இப்போதைக்கேனும், CGT தொடர்ந்து பராமரித்து வருகின்ற அதேநேரத்தில், ஒரு விலைபேசலுக்கு ஏற்பாடு செய்வதற்கு அது நப்பாசையுடன் தந்திரம் செய்து கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் தொழிலாள வர்க்கத்திற்கும், மறுபக்கத்தில் PS அரசாங்கம் மற்றும் அதன்பின்னால் நிற்கக் கூடிய பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய ஆளும் வர்க்கத்திற்கும் இடையிலான மோதல் நிலை முன்னெப்போதினும் மேலும் மேலும் தெளிவடைந்து சென்று கொண்டிருக்கிறது. இது CGT மற்றும், ஜோன்-லூக் மெலன்சோனின் இடது முன்னணி மற்றும் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) போன்ற அதனுடன் நெருக்கமான போலி-இடது அரசியல் அமைப்புகளின் நிலைப்பாடுகளை கீழறுத்திருக்கிறது.

ஸ்ராலினிசத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்குப் பின்னர் CGT சோசலிசப் புரட்சியை வெளிப்படையாக மறுத்து வந்ததன் பகுதியாக, அது முதலாளிகளுடன் “சமூக உரையாடலை” நிகழ்த்தி அவர்களுக்கும் அரசாங்கத்திற்கும் ஏற்புடைய “ஆலோசனைகளை” காண்பதாக பகிரங்கமாக நீண்டகாலமாய் கூறி வந்திருக்கிறது. ஆனாலும், வால்ஸும் PSம் CGTயுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவது அது சரணாகதி அடைவதற்கான நிபந்தனைகளை மட்டுமே என்பது இப்போது தெட்டத்தெளிவாகி இருக்கிறது. உள்ளபடியே, CGT இப்போது ஒரு விலைபேசலை சிறந்த வடிவமைப்பு செய்வதற்கே முனைந்து கொண்டிருக்கிறது.

மறுபக்கத்தில், தொழிலாள வர்க்கமானது, PSக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒட்டுமொத்த சிக்கன நடவடிக்கைத் திட்டநிரலுக்கும் எதிராய் ஐரோப்பாவெங்கும் தொழிலாளர்களிடையே இருக்கின்ற பரந்த எதிர்ப்பினை சோசலிசத்திற்கான ஒரு அரசியல் போராட்டத்தில் அணிதிரட்டுகின்ற புரட்சிகரக் கட்சி என்ற ஒரு மாறுபட்ட தலைமையே தனக்குத் தேவையாக இருக்கிறது என்பதையும், அதற்கு புறநிலையாக தான் தயாராக இருப்பதையும் தனது போராட்டங்களின் ஊடாக சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கிறது. ஏறக்குறைய ஒரு தசாப்த காலம் நீண்டிருக்கக் கூடிய அதிகரித்துச் செல்லும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் அதிருப்திகளுக்குப் பின்னர், ஐரோப்பாவெங்கிலும் பாரிய அரசியல் வேலைநிறுத்தங்களும் மற்றும் புரட்சிகரப் போராட்டங்களும் வெடிப்பதற்கான நிலைமைகள் கனிந்திருக்கின்றன.

அத்தகையதொரு முன்னோக்கினை எதிர்ப்பதில் CGTம், ஸ்ராலினிச ஆதிக்க இடது முன்னணியும் மற்றும் NPAவும் ஒன்றுபட்டு நிற்கின்றன. அவை PS இன் நீண்ட காலக் கூட்டாளிகளாக இருந்து வருபவை; 2012 தேர்தலில் பிரான்சுவா ஹாலண்ட் ஜனாதிபதியாவதற்கு வாக்களிக்க அழைப்பு விடுப்பதை ஆதரித்தவை; அத்துடன் இந்த வசந்த காலத்தில் தொழிலாளர் சட்டத்திற்கு எதிரான இளைஞர் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தெழுகின்ற வரையில், நான்கு ஆண்டுகளாய் ஹாலண்டின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எந்த அர்த்தமுள்ள எதிர்ப்பையும் ஒழுங்கமைக்காதவை. PS மீது அவை விமர்சனங்கள் செய்தாலும் கூட உள்ளபடியான நிலையைப் பாதுகாப்பதின் பகுதியாகவே அவை இருக்கின்றன என்பதை தொழிலாளர்களின் பரந்த அடுக்குகள் உணர்ந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த சட்டத்தின் விடயத்தில் ஆளும் வர்க்கத்தில் பிளவுகள் இருப்பதை இந்த அமைப்புகள் நன்கு அறியும். அப்பிளவுகளைச் சுரண்டி அரசாங்கத்திடம் இருந்து சிறு விட்டுக்கொடுப்புகளைப் பெற்று அவற்றை ஒரு வெற்றியாக தொழிலாளர்களிடம் காண்பித்து விட முயல்வதற்கு அவை நம்பிக்கை கொண்டிருக்கின்றன. இன்னும் சொன்னால், நிறுவன-மட்டத்திலான ஒப்பந்தங்களின் விடயத்தில் எல் கொம்ரி சட்டத்திற்கு CGT வைக்கும் ஆலோசனைகள் மார்ட்டின் ஆப்ரியின் ஆட்சேபனைகளையே எதிரொலிக்கின்றன. PS இன் ஒரு முக்கிய பிரமுகரான இவர் ஜேர்மன் பசுமைக் கட்சி நாடாளுமன்றவாதியான Daniel Cohn-Bendit உடன் இணைந்து ஹாலண்டை கடுமையாக விமர்சனம் செய்கின்ற ஒரு தலையங்கத்தை எழுதியிருந்தார். தொழிலாளர் சட்டத்தின் மீதான தாக்குதல் இந்த தலையங்கத்தின் ஒரு பகுதியாக இருந்தது.

தொழிலாளர் சட்டத்தில் இடம்பெற்றிருக்கக் கூடிய தொழிற்துறை-மட்ட ஒப்பந்தங்களின் மீதான தாக்குதலை வரம்புபடுத்த இத்தலையங்கம் அழைப்பு விடுத்தது. ஒன்றன்பின் ஒன்றாய் நிறுவனங்களில் பாரிய ஊதிய மற்றும் நல உதவி வெட்டுகளைத் திணிப்பதானது தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்கள் ஒரு பாதாளத்தை நோக்கி கட்டுப்பாடற்று பாய்வதைக் கட்டவிழ்த்து விட்டு விடும், அது நிதிரீதியாக வணிகங்களை ஸ்திரம் குலைக்கக் கூடியது என்பதோடு அரசியல்ரீதியாக வெடிப்புமிக்கதும் ஆகும் என்று அது எச்சரித்தது. “தொழிலாளர்கள் எப்போதும் ஊதிய மிரட்டலை எதிர்கொண்டிருப்பார்கள்” என்று எழுதிய அத்தலையங்கம் “இதனால் உருக்குலைந்த போட்டியால் நிறுவனங்கள் பாதிக்கப்படும், அதேசமயத்தில் தொழிற்துறை-மட்டத்திலான ஒப்பந்தங்களோ ஒரேதுறையில் வணிக நிலைமைகளை ஐக்கியப்படுத்தும்” என்றது.

தனித்தனி நிறுவனங்களின் மட்டத்தில் தொழிலாளர்களின் ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகளில் செய்யப்படும் வெட்டுகளின் மீதான கட்டுப்பாட்டை தொழிற்துறை மட்டத்தில் தொழிற்சங்கங்களிடம் கொடுப்பது - வணிகங்களுக்கு விநியோகச் சங்கிலிகள் எங்குமான விலை நிலைமைகள் குறித்த ஓரளவுக்கு தெளிவான சித்திரத்தை இது வழங்கும் - என்ற CGT இன் ஆலோசனை அத்தலையங்கம் எழுப்பிய ஆலோசனையை நிவர்த்தி செய்கிறது.

இத்தகையதொரு ஆலோசனை தொழிலாளர்களின் மீதான மேலதிக சமூக வெட்டுகளுக்கான வாய்ப்பினைத் தவிர்த்து வேறொன்றையும் வழங்கப் போவதில்லை. எவ்வாறிருப்பினும், ஆப்ரி அல்லது CGT இன் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்ளும் நோக்கமும் கூட PS அரசாங்கத்திடம் இல்லை என்பதும், இப்போராட்டத்தை போலி-இடது கட்சிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் கரங்களில் இருந்து அகற்றுவது தான் PS இன் தொழிலாளர் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் தொழிலாளர்களுக்கு முன்னிருக்கக் கூடிய ஒரே வழி என்பதும் மேலும் மேலும் தெளிவாகிக் கொண்டு வருகிறது.