ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The Venezuelan working class at a crossroads

வெனிசூலா தொழிலாள வர்க்கம் முட்டுச்சந்தில்

Neil Hardt
  16 June 2016

அதிகரித்துவரும் தன்னியல்பான தொழிலாள வர்க்க ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல்கள், உணவு விற்பனையகங்களுக்குள் உட்புகுதல் மற்றும் பேருந்து ஓட்டுனர்களின் தேசியளவிலான ஒரு வேலைநிறுத்தம் ஆகியவை வெனிசூலாவில் பிரமாண்டமான சமூக புரட்சியின் எழுச்சிக்கு உறுதியளிக்கின்றது.

2016 இன் முதல் ஐந்து மாதங்கள், உணவுப்பொருள் பற்றாக்குறை மற்றும் அடிப்படை சமூக சேவைகள் கிடைக்காததற்காக நாளாந்தம் சராசரியாக 19 போராட்டங்களையேனும் கண்டுள்ளன. ஜனாதிபதி நிகோலஸ் மாதுரோவின் சாவிஸ்டா அரசாங்கம் பலாத்காரமாக ஆர்ப்பாட்டங்களை உடைக்க பொலிஸ் மற்றும் தேசிய பாதுகாப்பு படைகளுக்கு உத்தரவிட்டதால், கடந்த வார ஆர்ப்பாட்டங்களின் போது மூன்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர். மற்றொரு ஆர்ப்பாட்டக்காரர் செவ்வாயன்று கொல்லப்பட்டார், “எங்களுக்கு உணவு வேண்டும்" என்று உரக்க கத்திக் கொண்டிருந்த மக்கள் கூட்டத்தை நோக்கி ஆயுதப்படைகள் கண்மூடித்தனமாக சுடுவதை எடுத்துக்காட்டும் காணொளிகள் இணையத்தில் பரவலாக பரப்பப்பட்டு வருகின்றன.

இந்த நிலைமைகள் அதிகரித்தளவில் இரத்தந்தோய்ந்த 1989 கராகாஸோ [caracazo-போராட்ட அலைக்குக் கொடுக்கப்பட்ட பெயர்] வெடித்த போதிருந்ததற்கு ஒத்திருக்கின்றன, அப்போது கார்லோஸ் ஆண்ட்ரெஸ் பெரெஸ் அரசாங்கம் சர்வதேச நாணய நிதிய பொதியைத் திணித்ததற்காக சீற்றத்துடன் எழுச்சி கொண்ட பாரியளவிலான தொழிலாளர்களும் கிராமப்புற ஏழைகளும் கராகஸ் (Caracas) மற்றும் ஏனைய பிரதான நகரங்கள் மீது தாக்குதலில் இறங்கினர். இப்போது போலவே அப்போதும் எண்ணெய் விலைகள் வீழ்ச்சி அடைந்திருந்தன, பூமியில் சமூகரீதியில் மிகவும் துருவமுனைப்பட்ட நாடுகளில் ஒன்றான வெனிசூலாவில் ஊடுருவி பரவிய ஆழ்ந்த வர்க்க பதட்டங்கள் அதிகரிப்பதை அடக்குவதற்கான அந்த முதலாளித்துவ அரசாங்கத்தின் தகைமையை அது குறைத்திருந்தது.

அடிப்படையில் caracazo தான் சாவிஸ்டா இயக்கத்தை எழுச்சி அடையச் செய்தது. வீதிகளில் இறங்கி இருந்த ஆயிரக்கணக்கான வெனிசூலா மக்களைச் சுட்டுக்கொல்ல ஆயுதப் படைகளை அரசாங்கம் பிரயோகித்ததால் ஆத்திரத்திற்கு உள்ளான இளநிலை இராணுவ அதிகாரிகளின் ஒரு அதிருப்தி கன்னையாக அது உருவானது.

1992 இல், அப்போதைய ஒரு பாரசூட்படையின் லெப்டினென்ட் கர்னலாக இருந்த மறைந்த ஹூகோ சார்வேஸ், ஒரு தோல்விகண்ட இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்குத் தலைமை தாங்கினார். சகல பிரதான கட்சிகளும் அத்துடன் இருந்த தொழிற்சங்கங்களும் முற்றிலுமாக மதிப்பிழந்திருந்த நிலைமைகளின் கீழ், இந்த எழுச்சி மக்களின் பார்வையை ஈர்த்தது, பின்னர், சில காலம் சிறைசாலையில் இருந்த பின்னர், சார்வேஸ் 1998 இல் ஒரு வெகுஜனவாத மற்றும் இடது-தேசியவாத அடித்தளத்தில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆளும் ஐக்கிய வெனிசூலா சோசலிச கட்சியின் (PSUV) முதலாளித்துவ-சார்பு, முதலாளித்துவ வர்க்க தேசியவாத கொள்கைகள் வெனிசூலா தொழிலாளர்களுக்கு ஒரு சமூக பேரழிவைத் தோற்றுவித்துள்ளது. இலாபத்திற்கான பெருநிறுவனங்கள்—அன்னிய நிறுவனங்களும் சரி, தேசிய நிறுவனங்களும் சரி—செயல்பாடுகளை நிறுத்தி உள்ளன. இது பத்தாயிரக் கணக்கானவர்களைக் கொடிய வறுமைக்குள் தள்ளியுள்ளது. முற்றிலுமாக திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சி இல்லாததால், பொருளாதாரம் முற்றிலுமாக எண்ணெய் ஏற்றுமதிகளைச் சார்ந்து விடப்பட்டு, சர்வதேச முதலாளித்துவ பண்ட சந்தைகளில் நிலவும் விலை ஏற்ற-இறக்கங்களது பாதிப்பை அனுபவிக்கிறது.

தனியார் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு வங்கிகள் பொருளாதாரத்தின் கட்டுப்பாட்டு நிலைகளின் மீது உறுதியான கட்டுப்பாட்டைத் தக்க வைத்துள்ளன, அதேவேளையில் வெனிசூலா அரசாங்கம் வோல் ஸ்ட்ரீட் பங்குபத்திர உரிமையாளர்களுக்கு வட்டி பணத்தை வழங்கும் வகையில் பத்து பில்லியன் கணக்கான டாலர்களைத் தொடர்ந்து பாய்ச்சுவதற்காக, அவசியமான உணவு மற்றும் மருந்து இறக்குமதிகளைத் தொடர்ந்து குறைத்து வருகிறது.

சாவேஸ்/மாதுரோ ஆட்சியின் 17 ஆண்டுகள் முழுவதிலும், உலகெங்கிலுமான போலி-இடது குழுக்கள் ஐக்கிய வெனிசூலா சோசலிச கட்சியை "21 நூற்றாண்டு சோசலிசத்திற்கான" ஒரு முன்மாதிரியாக போற்றி புகழ்ந்தன. யதார்த்தத்தில், சாவிஸ்டாவின் கீழ், நிதியாளர்கள், அரசியல்ரீதியில் தொடர்பு வைத்திருந்த வியாபாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் அத்துடன் உயர்மட்ட அரசு அதிகாரிகளின் ஒரு புதிய ஆளும் வர்க்க அடுக்கு, வெனிசூலா மக்களை விலையாக கொடுத்து தன்னைத்தானே செழிப்பாக்கிக் கொண்டது. இக்காலக்கட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட குறைந்தபட்ச சமூக உதவி திட்டங்கள், மொத்த மக்கள்தொகையில் சுமார் 80 சதவீத மக்கள் வறுமையிலும், 51 சதவீத மக்கள் அதீத வறுமையிலும் வாழ்வதைத் தடுக்க துளியும் இலாயக்கற்றது என்பதை நிரூபித்தன.

வலதுசாரி எதிர் கட்சியான ஜனநாயக ஐக்கிய வட்டமேசை (MUD) இன் முன்னணி அரசியல்வாதிகள், நாடு "சமூக வெடிப்பின்" விளிம்பில் இருப்பதாகவும், “அதிகரித்து வரும் நாளாந்த பதட்டத்தின் விளைவாக சமூகம் வெடித்து விடும்" என்றும் எச்சரிக்கின்றனர். அவர்கள் மாதுரோவை நீக்குவதற்காக மட்டுமல்ல, மாறாக அதிகரித்துவரும் சமூக பதட்டங்களிலிருந்து தப்பிக்க ஓர் வழிவகையை உருவாக்குவதற்காக மீண்டும் ஒரு வெகுஜன வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்க முயன்று வருகிறார்கள்.

தோல்வியடைந்த 2002 ஆட்சிக்கவிழ்ப்பு சதியில் சாவேஸை வாஷிங்டன் தூக்கியெறிய முயன்றது, அப்போதிருந்து வெனிசூலா அரசாங்கத்தை அது "அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு அசாதாரண அச்சுறுத்தல்" என்று முத்திரை குத்தியுள்ளது. வெறுமனே ஒருசில வாரங்களுக்கு முன்னர், அவரது பங்கிற்கு, மாதுரோ அதிகரித்து வரும் மக்கள் அதிருப்தியின் முன்னால் இராணுவத்தை ஒன்றுதிரட்டுவதை நியாயப்படுத்த உடனடியாக அமெரிக்க படையெடுப்பு ஏற்படலாம் என்று கருத்தைத் தூண்டிவிட்டார்.

இவ்வாறிருக்கையில் செவ்வாயன்று டொமினிக்கன் குடியரசில் உள்ள அமெரிக்க இராஜ்ஜியங்களின் அமைப்பு (Organization of American States in the Dominican Republic) என்பதன் ஒரு கூட்டத்தில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஜோன் கெர்ரி, வெனிசூலாவின் அரசியல் மோதலை மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி, நம்பத்தகுந்த வகையில் சமூக பதட்டங்களை மட்டுப்படுத்தும் என்று அறிவித்தார். அவர் வெனிசூலா வெளியுறவுத்துறை மந்திரி டெல்ஸி றொட்றிகஸ் இனை சந்தித்தப் பின்னர், கெர்ரி கூறுகையில், வாஷிங்டன் "இந்த உறவை மேம்படுத்த" தீர்மானகரமாக இருப்பதாகவும், “பழைய வனப்புரைகளைக் கடந்து செல்லும்" என்றும் தெரிவித்தார்.

அவரது பங்கிற்கு மாதுரோ, தூதர்களுக்கு இடையிலான உடனடி பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பு விடுத்ததுடன், வாஷிங்டன் உடனான புதிய பேச்சுவார்த்தைகளுக்கு உத்வேகத்துடன் குரல் கொடுத்தார். “நான் பெரிதும் ஜனாதிபதி ஒபாமாவைப் போன்றவன் தான்,” அவர் செவ்வாயன்று இரவு தெரிவித்தார். “அவரொரு நல்ல மனிதர் … இவ்வாறு நான் ஏன் கூறக்கூடாது?” என்றார்.

இந்த இரண்டு தரப்புகளையும் எது ஒன்றிணைக்கிறது என்றால், அது வெனிசூலா தொழிலாள வர்க்கத்தை நோக்கிய அவர்களது பரஸ்பர அச்சம் மற்றும் விரோதமாகும். அமெரிக்க ஏகாதிபத்தியம் நீண்டகாலமாக சாவேஸ்-மாதுரோ அரசாங்கத்தை, பதவியிலிருந்து நீக்க வேண்டிய ஒரு உறுத்திக் கொண்டிருக்கும் விடயமாக பார்த்து வந்தது என்றாலும், அதற்காக அடிமட்டத்திலிருந்து ஒரு பாரிய கிளர்ச்சியின் வழிவகைகளைக் கொண்டு எப்படியாவது இந்த நோக்கத்தை எட்டுவதில் அதற்கு ஆர்வமில்லை.

வெனிசூலா தொழிலாளர்களின் துயரங்கள் அப்பிரதேசம் எங்கிலுமான தொழிலாளர்களால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது என்பதை அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்கும் சரி, அத்துடன் இலத்தீன் அமெரிக்க முதலாளித்துவ வர்க்கத்திற்கும் சரி, நன்றாக தெரியும். பிரேசில், சிலி, பொலிவியா, ஈக்குவடோர், ஆர்ஜென்டினாவில், மத்திய அமெரிக்கா மற்றும் மெக்சிகோ எங்கிலும், வேலைநிறுத்தங்களும் போராட்டங்களும் அடிக்கடியும் தீவிரத்தன்மையுடனும் அதிகரித்து வருகின்றன. இலத்தீன் அமெரிக்கா இன்று உலகிலேயே மிகவும் சமத்துவமற்ற பிரதேசமாக உள்ளது, சமூக வெடி உலையாக வெடிக்க காத்துக் கொண்டிருக்கிறது.

அனைத்திற்கும் மேலாக வர்க்க போராட்டத்தின் எழுச்சி இலத்தீன் அமெரிக்காவுடன் மட்டுப்பட்டு கிடையாது. கொம்ரி சட்டத்திற்கு எதிரான பிரெஞ்சு இயக்கம் மற்றும் பெல்ஜியத்தில் வேலைநிறுத்த அலை, அத்துடன் அமெரிக்காவில் தொலைதொடர்பு தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் ஆகியவற்றாலும் மற்றும் தன்னைத்தானே "சோசலிச" ஜனாதிபதி வேட்பாளர் என்று அறிவித்துக் கொண்ட பேர்ணி சாண்டர்ஸூக்கு வாக்களித்த மில்லியன் கணக்கான வாக்காளர்களாலும் எடுத்துக்காட்டப்பட்டு, அதுவொரு உலகளாவிய இயல்நிகழ்வாக உள்ளது.

வெனிசூலா தொழிலாள வர்க்கம் ஒரு முட்டுச்சந்தில் உள்ளது. மாதுரோ அரசாங்கம், இராணுவம், வலதுசாரி உத்தியோகப்பூர்வ எதிர்கட்சி, தொழிற்சங்கங்களின் வடிவத்திலும் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்திய தலையீட்டின் வடிவத்திலும், அது கடுமையான எதிரிகளை முகங்கொடுக்கிறது. வெனிசூலா போலி இடதுக்கு சிறந்த உதாரணமாய் விளங்கும், மரீ சோசலிஸ்டா (Marea Socialista) மற்றும் சர்வதேச மார்க்சிஸ்ட் போக்கு (International Marxist Tendency) போன்ற குழுக்கள், வெனிசூலா முதலாளி வர்க்க அரசாங்கத்தின் நெருக்கடிக்கு தொழிலாள வர்க்கத்தைக் குறைகூறுவதுடன், PSUV இன் கேடுகெட்ட பிரமைகளுக்கு முண்டு கொடுக்க முனைந்துள்ளன.

தொழிலாளர்கள் அவர்களது வர்க்க நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்ய தன்னைத்தானே தீவிர வார்த்தைஜால அங்கியில் போர்த்திக் கொண்டிருக்கும் எந்தவொரு முதலாளித்துவ வர்க்கத்தின் பிரிவையும் நம்ப முடியாது என்பதையே பதினேழு ஆண்டுகால PSUV ஆட்சி எடுத்துக்காட்டுகிறது. 1989 இல் கராகாஸோவை மூர்க்கமாக ஒடுக்கியமை, இன்றைய சூழலின் கூர்மையான அபாயங்களைச் சுட்டிக்காட்டுகிறது. இன்று, அப்போது போலவே, மாதுரோ அரசாங்கம் இறுதியில் ஒரு புரட்சிகர எழுச்சியை இரத்தத்தில் மூழ்கடிக்க இராணுவத்தைச் சார்ந்துள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியம், அதன் சகல ஜனநாயக மற்றும் மனித உரிமை பாசாங்குத்தனங்களுடன் சேர்ந்து, தனிச்சொத்துடைமை மற்றும் இலாப நலன்களைத் தூக்கி நிறுத்த என்னவெல்லாம் நடவடிக்கைகள் அவசியமோ அவற்றை ஆதரிக்கும்.

முதலாளித்துவ அமைப்புமுறையால் வழங்க முடியாத உணவு, மருத்துவ வசதி, மற்றும் வாழ்வின் ஏனைய அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்ய, தொழிலாளர்களும் இளைஞர்களும் அவர்களது சுயாதீனமாக அணிதிரள்வை மட்டுமே சார்ந்திருக்க முடியும்.

தனியார் பதுக்கல்கள், கருப்பு சந்தையாளர்கள், மற்றும் ஆளும் கட்சி கட்டுப்பாட்டில் உள்ள உணவு வினியோக குழுக்கள் (CLAP) இவற்றிடம் இருந்து உணவுபொருள் விற்பனையகங்களை கைப்பற்றவும் மற்றும் தேவைப்படுபவர்களுக்கு உணவு வினியோகிக்கவும் தொழிலாளர்களும் இளைஞர்களும் வாழ்விடங்களிலும் தொழிலிடங்களிலும் குழுக்களை உருவாக்க நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு அழைப்பு விடுக்கிறது.

ஆலைகளும் வேலையிடங்களும், தனியார் மற்றும் அரசு உரிமையாளர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டு, உற்பத்தியை மக்களின் அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்வதை நோக்கி திருப்பிவிடும் வகையில், அவை தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். நாடெங்கிலும் முக்கிய தொழில்துறைகளில் வேலையிட நிறுத்தங்களை ஒருங்கிணைக்க வேலைநிறுத்த குழுக்கள் உருவாக்கப்பட வேண்டும்.

தொழிலாளர்கள், ஐக்கிய வெனிசூலா சோசலிச கட்சியின் துணை இராணுவங்களிடமிருந்தும், பொலிஸ் மற்றும் இராணுவத்திடமிருந்தும் தங்களைத்தாங்களே பாதுகாத்துக் கொள்ள தயாரிப்பு செய்து கொள்ள வேண்டும். ஆனால், மிக முக்கியமாக, தொழிலாளர்கள் ஒரு சுயாதீனமான அனைத்துலக சோசலிச வேலைத்திட்டத்தில் தங்களைத்தாங்களே தத்துவார்த்தரீதியில் ஆயுதபாணியாக்கிக் கொள்ள வேண்டும். வெனிசூலாவில் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் ஒரு பிரிவை ஸ்தாபிப்பதற்காக போராட இன்றே எங்களைத் தொடர்பு கொள்ளுமாறு உலக சோசலிச வலைத்தளம் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் ஊக்குவிக்கிறது.