ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The return of “secular stagnation”

"நீடித்த மந்தநிலைமையின்" மீள்வரவு

By Nick Beams
  17 June 2016

உலகளாவிய நிதியியல் நெருக்கடியைத் தொடர்ந்து 2009 இல் அமெரிக்க தேக்கநிலை (recession) முடிந்ததாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதற்கு பின்னர், அமெரிக்க பொருளாதாரம் அதன் பழைய வளர்ச்சி பாதைக்கு ஒத்த ஏதேனும் ஒன்றுக்கு திரும்ப முடியாமல் போனதற்கு பல்வேறு "எதிர்காற்றுகளே" (headwinds) காரணம் என்பதே, அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வின் சம்பிரதாயமான அறிவிப்பாக உள்ளது.

இதன் அடித்தளத்திலிருக்கும் அனுமானம் என்னவென்றால், 2008-2009 நிதியியல் நெருக்கடியானது முதலாளித்துவ பொருளாதாரத்தில் எந்தவித அடிப்படையான நிலைமுறிவையும் பிரதிநிதித்துவம் செய்யவில்லை, மாறாக வணிக சுழற்சியில் வெறுமனே கீழ்நோக்கிய மிகவும் கடுமையான திருப்பம் ஒன்றே. இதிலிருந்து எப்போதோ ஒரு கட்டத்தில் பொருளாதார விரிவாக்கத்தின் ஒரு "வழமையான" வடிவத்திற்கு திரும்பிவிடும் என்பதாகும்.

ஆனால் வட்டியை உயர்த்துவதில்லை என்ற பெடரல் சுதந்திர சந்தை குழுவின் முடிவைத் தொடர்ந்து, புதனன்று பெடரல் தலைமை பெண்மணி ஜெனெட் யெலென் இன் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு, ஒரு வெளிப்படையான மாற்றத்தைக் கண்டது. தயாரிக்கப்பட்ட அவரது கருத்துக்கள், தற்போதுள்ள "எதிர்காற்று" காலப்போக்கில் சரியாகிவிடும் என்ற உத்தியோகப்பூர்வ எழுத்துக்களில் பெரிதும் சிக்கியிருந்த போதினும், செய்தியாளர்களுடனான யெலெனின் கேள்வி பதில் அமர்வின் போது அதற்கு மாறாக ஒரு வித்தியாசமான மதிப்பீடு வெளிப்பட்டது.

மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியைக் குறித்த அதன் உத்தேச கணிப்புகள் அடையப்படவில்லை என்ற போதும் கூட, பெடரலின் ஆய்வறிக்கையில் வட்டிவிகிதங்கள் கீழ்நோக்கி கூர்மையாக மறுதிருத்தம் செய்யப்பட்டிருந்தது என்ற உண்மையைப் பார்த்து, “மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் [வட்டி] விகிதங்களுக்கும் இடையிலான தொடர்ப்பின் மீது குழுவின் கண்ணோட்டம் முற்றிலும் மாறுமா" என்று யெலெனிடம் கேட்கப்பட்டது.

அங்கே மாற்றம் இருக்கும் அல்லது குறைந்தபட்சம் உத்தியோகபூர்வ அறிவிப்புகளின் திரைக்குப் பின்னால் ஓர் அடிப்படை மாற்றம் செய்யும் நோக்கம் அதிகரித்து வருகிறது என்பதை அவரது பதில் சுட்டிக்காட்டியது.

அவர் குறிப்பிட்டார், “நடுநிலையான விகிதம்" (neutral rate) என்றழைக்கப்படுவது —அதாவது கிட்டத்தட்ட முழு வேலைவாய்ப்புக்கு பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தி வைப்பதற்கு தேவையான வட்டிவிகிதம்— "வரலாற்று நடைமுறைகளால் பெரிதும் அழுத்தத்திற்கு உட்பட்டுள்ளன" என்றும், “பல மதிப்பீடுகள் அதை நிஜமான வரையறைகளில் அல்லது பணவீக்கத்திற்கு ஏற்ப திருத்தம்செய்யப்பட்ட வரையறைகளில் அண்மித்து பூஜ்ஜியத்தில் நிறுத்தக்கூடும்" என்றும் தெரிவித்தார்.

வழமையான வார்த்தைகளில், "எதிர்காற்று" என்பதும் மற்றும் அவர் குறிப்பிட்ட "நிதியியல் நெருக்கடியின் காலங்கடந்த விளைவுகள்" என்பதும் காலப்போக்கில் "சரியாகிவிடுமென" எதிர்பார்க்கப்படுவதாக யெலென் குறிப்பிட்டார். “ஆனால் நடுநிலையான விகிதங்களை நீண்டகாலத்திற்கு வைத்திருப்பதை தடுக்கும் மிக நீண்டகாலத்திற்கான அல்லது நிரந்தரமான காரணிகளும் இருக்கக்கூடும்,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

அத்தகைய காரணிகளில் பிரதானமானது "மெதுவான உற்பத்தி வளர்ச்சி, இது வெறுமனே ஒரு அமெரிக்க நிகழ்வல்ல, மாறாக ஓர் உலகளாவிய இயல்நிகழ்வு”. அங்கே குறிப்பிடத்தக்க நிச்சயமின்மை இருந்தது, "நீண்டகாலத்திற்கு உற்பத்தி வளர்ச்சி குறைவாக இருக்கலாம்" மேலும் "உலகின் பல பாகங்களில் இந்த நடுநிலை விகிதத்திற்கு அழுத்தமளிக்கக்கூடிய வயோதிபமயடையும் சமூகங்களை" (aging societies) நாம் கொண்டிருக்கிறோம். … “இந்த நடுநிலை விகிதம் இந்தளவிற்கு வெகு குறைவாக இருக்க செய்யும் காரணிகள் விரைவில் மறைந்துவிடாது ஆனால் புதிய வழமையின் பாகமாகி விடும் என்பது தான் புரிதலாக இருக்கும்.”

யெலெனின் கருத்துக்களைத் பின்தொடர்ந்து ஒரு பிரதான அமெரிக்க பொருளாதார சிந்தனைக்கூடமான Conference Board எச்சரிக்கையில், மூன்று தசாப்தங்களுக்கு மேலாக முதல்முறையாக இந்தாண்டு உற்பத்தி வளர்ச்சி எதிர்மறையாக செல்லக்கூடும் என்று எச்சரித்தது.

அப்பெண்மணியின் கருத்துக்களில் யெலென் அந்த வார்த்தையைக் குறிப்பிடாத போதினும், முன்னாள் நிதித்துறை செயலர் லோரன்ஸ் சம்மர்ஸ் மற்றும் ஏனையவர்கள் எதை "நீடித்த மந்தநிலை" (secular stagnation) என்று குறிப்பிட்டார்களார்களோ அதன் உருவாக்கத்தையே சுட்டிக்காட்டுகிறது. இந்த வார்த்தை முதன்முதலில் முதலாளித்துவ பொருளாதாரத்தின் கட்டமைப்பு நிலைமையை வரையறுக்க பயன்படுத்தப்பட்டது. குறிப்பிட்ட அந்நிலைமையில் வட்டிவிகிதங்கள் எந்தளவிற்கு குறைந்து போனாலும் வளர்ச்சி இருக்காது ஏனென்றால் தேவையின் அளவு, குறிப்பாக முதலீடு, சுழற்சிமுறையில் கீழ்நோக்கியதாக இன்றி, மாறாக பொருளாதார விரிவாக்கத்தை உறுதிப்படுத்த நிரந்தரமாக போதுமானளவிற்கு இருக்காது என்றரீதியில், 1938 இல் பொருளாதார நிபுணர் அல்வின் ஹன்சனால் இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டது.

உலகளாவிய பொருளாதாரத்தின் ஒரு திருப்பமாக அப்பெண்மணி எதை தெளிவாக ஒப்புக்கொள்கிறாரோ அதற்கான ஒரு விளக்கமாக யெலெனின் "வயோதிபமடையும் சமூகங்கள்" என்ற குறிப்பு, பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொல்சீர் முதலாளித்துவ பொருளியல் வல்லுனர் டேவிட் ரிகார்டோவின் விளக்கத்தை விட வேறெதையும் நினைவூட்டாது. அவர், இலாப விகித வீழ்ச்சி போக்கை எதிர்கொண்ட போது, அதை நிலத்தின் வளம்குறைந்து வரும் தன்மையோடு மற்றும் வேளாண்துறையில் உற்பத்தி வீழ்ச்சியுடன் ஒப்பிட்டார். முதலாளித்துவ பொருளாதாரத்தின் வரலாற்று நிலைப்புத்தன்மையைக் கேள்விக்கு உட்படுத்திய இந்த அதிர்ச்சிகரமான முன்னோக்கைக் குறித்து, மார்க்ஸ் பலமாக ஆனால் சுருக்கமாக, ரிகார்டோ கரிம வேதியியல் (organic chemistry) அரங்கின் சண்டையில் இறங்கியுள்ளார் என்று குறிப்பிட்டார். அதைபோலவே யெலெனும், நீடித்த பொருளாதார போக்குகளை முகங்கொடுத்ததும், குடிமக்கள் விபர புள்ளிவிபரங்களுக்குள் (demographics) அடைக்கலம் தேடுகிறார்.

ரிகார்டோவுக்கு மாறாக, மார்க்ஸ் விவரிக்கையில், விரிவடைந்த முதலாளித்துவ உற்பத்திக்கு நிஜமான தடையாக இருப்பது ஒரு இயற்கை அல்ல, மாறாக மூலதனமே தான். அதாவது உற்பத்தி சாதனங்கள் மீதான தனிச்சொத்துடைமை மற்றும் இலாப அமைப்புமுறையாகும் என்றார்.

கடந்த கால் நூற்றாண்டின் பின்னோக்கிய பொருளாதார நடைமுறைகள் மற்றும் நிகழ்வுபோக்குகள், மார்க்ஸ் குறிப்பிட்டதை தான் எடுத்துக்காட்டுகின்றன. போருக்குப் பிந்தைய செழிப்பு முடிந்ததும், 1960 களின் இறுதியில் மற்றும் 1970 களின் தொடக்கத்தில் இலாப விகிதங்களில் வீழ்ச்சி இருந்தது. இதன் பின்னர் பூகோள முதலாளித்துவம் தொடர்ச்சியான நெருக்கடிகளை அனுபவித்தது, அனைத்திற்கும் மேலாக "பெரும் தேக்கநிலை" (stagflation) என்று கூறப்பட்ட உயர்ந்த பணவீக்க விகிதங்களுடன் சேர்ந்த வளர்ச்சி குறைவு மற்றும் பின்னடைவின் நீடித்தத்தன்மையால் அது எடுத்துக்காட்டப்பட்டது.

இந்த நெருக்கடி, தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமைக்கு எதிரான தாக்குதல் மூலமாக தற்காலிகமாக கடந்து வரப்பட்டது, 1981 இல் அமெரிக்காவில் ஜனாதிபதி ரீகனால் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களின் பாரிய வேலைநீக்கங்கள் மற்றும் பிரிட்டனில் 1984-85 சுரங்கத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை தாட்சர் அரசாங்கத்தின் பலவந்தமாக அரசு-ஒடுக்குமுறை ஆகியவை முக்கிய திருப்புமுனைகளாக இருந்தன மற்றும் பூகோளமயப்பட்ட உற்பத்தி மூலமாக மலிவு உழைப்பின் புதிய பகுதிகள் சுரண்டப்பட்டன.

ஆனால் இது உருவாக்கிய மட்டுப்பட்ட இலாப விகித உயர்வு, ஒப்பீட்டளவில் போருக்குப் பிந்தைய செழிப்பின் போதிருந்த பொருளாதார ஸ்திரத்தன்மை நிலைமைகளை திரும்ப கொண்டு வரவில்லை. அதற்கு மாறாக, அக்டோபர் 1987 அமெரிக்க பங்குச் சந்தை பொறிவின் போதிருந்து, உலக முதலாளித்துவம் அதிகரித்தளவில் நிதியியல் கொந்தளிப்பால் நிரம்பி இருந்தது.

1990 களின் தொடக்கத்தில் மெக்சிக்கன் நிதியியல் நெருக்கடி, 1997-98 ஆசிய நிதியியல் நெருக்கடி மற்றும் நீண்டகால மூலதன மேலாண்மை, 2000-2001 இல் டாட்.காம் குமிழியின் பொறிவிலிருந்து, அது முன்பினும் அதிக கடுமையான நிதியியல் சூறாவளிகளைத் தணிக்க பெடரல் மற்றும் மத்திய வங்கிகளிடமிருந்து வட்டிகுறைந்த பணம் பாய்ச்சப்படுவதை அதிகளவில் சார்ந்திருந்த அது, குறைந்த பிணையுள்ள அடமானக்கடன் சந்தை குமிழி வெடிப்புடன் தொடங்கிய 2008 நிதியியல் நெருக்கடிக்கு இட்டுச் சென்றது.

கடந்த காலத்தில் செய்ததைப் போலவே இந்த நெருக்கடிக்கும் பெடரல் மற்றும் ஏனைய மத்திய வங்கிகள் வட்டிகுறைந்த பணத்தைப் பாரியளவில் பாய்ச்சி விடையிறுத்தன. ஆனால் நிதியியல் சொத்துக்களை வாங்குவதில் ட்ரில்லியன் கணக்கான டாலர்களை செலவிட்டும், வட்டி விகிதங்களை பூஜ்ஜியம் அளவிற்கு அல்லது அதற்கும் கீழே குறைத்த போதினும், அங்கே நிஜமான பொருளாதாரத்தில் எந்த மீட்சியும் இல்லை. இத்தகைய நடவடிக்கைகளின் ஒரே விளைவு, நிதியியல் ஊக வணிகம் முன்னொருபோதும் இல்லாத உயரங்களுக்கு அதிகரித்தது தான், அதேவேளையில் சமூக சமத்துவமின்மையை முன்பினும் பரவலாக ஆனது மற்றும் உலகின் தொழிலாள வர்க்கத்தின் சம்பளங்கள் மற்றும் சமூக நிலைமைகளை மோசமாகின.

பொருளாதார வரலாறு மீண்டும் அதேபோல திரும்பாது தான். ஆனால் முதலாளித்துவ பொருளாதாரத்திற்கு இயக்க விதிகள் உள்ளன. இவை கண்டுகொள்ளக்கூடிய நிகழ்வுகளையும் நிகழ்வுபோக்குகளையும் உருவாக்குவதுடன், அவை பொருளாதாரத்தில் மட்டுமல்ல அரசியலிலும் வெளிப்பாட்டைக் காண்கின்றன.

1914 ஆம் ஆண்டு வரலாற்றில் முதலாம் உலக போர் வெடித்த ஆண்டாக எப்போதைக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அது பொருளாதாரரீதியிலும் முக்கியத்துவமானதாகும். இலாப மற்றும் வளர்ச்சி விகிதங்களில் கீழ்நோக்கிய சரிவைக் கடந்து வருவதற்கான எல்லா முயற்சிகளுக்கு இடையிலும் அவற்றின் வீழ்ச்சியைக் கண்ட அந்த வருடம், 1920கள் மற்றும் 1930 கள் முழுவதும் தொடர்ந்ததுடன், பெரு மந்தநிலைமையில் போய் முடிந்தது.

இத்தகைய அடித்தளத்திலிருந்த நிகழ்வுபோக்குகள் உலக பொருளாதாரத்தில் ஒரு சுருக்கத்தை உண்டாக்கியது, பிரதான முதலாளித்துவ சக்திகள் முதலில் கட்டணங்களை அதிகரித்தும் மற்றும் செலாவணி குழுக்களை உருவாக்கியும் பொருளாதார தேசியவாத அணுகுமுறைகளைப் பிரயோகித்த பின்னர் இராணுவ வழிவகைகளைக் கொண்டு, சுருங்கி வந்த சந்தைகள் மற்றும் இலாபங்களுக்கான ஒரு தீவிரமயப்பட்ட மோதலில் இறங்கியதும், அது தவிர்க்கவியலாதவாறு இரண்டாம் உலக போர் வெடிப்புக்கு இட்டுச் சென்றது.

இத்தகைய நிலைமைகள் திரும்பி வருவதையே இன்றைய உலகம் காட்டுகின்றது: அதாவது உலக பொருளாதாரத்தின் மந்தநிலை, சந்தைகளில் பல பண்டங்கள் மற்றும் தொழில்துறை பொருட்கள் அதீதமாக குவிந்திருப்பது, பொருளாதார வளர்ச்சியின் உந்துசக்தியாக விளங்கும் முதலீடு நிரந்தரமாக குறைந்த மட்டங்களில் இருப்பது என சில எடுத்துக்காட்டுகளைக் குறிப்பிட்டு காட்டலாம்.

இவை தவிர்க்கவியலாதவாறு முந்தைய தசாப்தங்களைப் போலவே அதே திசையில், அதாவது மனித நாகரீகத்தையே அழிக்கக்கூடிய அணுஆயுத விளைவுகளுடன் உலக பொருளாதாரத்தை பங்கீடு மற்றும் மறுபங்கீடு செய்வதற்கான ஒரு உலக போருக்கான திசையில் இட்டுச் செல்கின்றன.

யெலென் போன்ற உலக முதலாளித்துவத்தின் கண்காணிப்பாளர்களுக்கு தலைகளுக்குள் குறைந்தபட்சம் பகுதியாகவாவது முதலாளித்துவத்தின் புறநிலை முரண்பாடுகள் பற்றிய புரிதல் புகுந்துள்ளது என்பது பொருளாதார நெருக்கடியின் முதிர்ந்த நிலைக்கு ஓர் அறிகுறியாகும்.

சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு இந்த நிகழ்வுகள் ஒரு சமிக்கையை அனுப்புகின்றது. அவர்களின் முன்னால் இருக்கும் அவசர பிரச்சினை, பிற்போக்குத்தனமான மற்றும் காலங்கடந்த முதலாளித்துவ தேசிய-அரசு மற்றும் இலாப அமைப்புமுறையைத் தூக்கி வீசி, சோசலிசப் புரட்சிக்கான மற்றும் அதற்கு தலைமை கொடுக்கும் உலக கட்சியாக, நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவைக் கட்டமைப்பதற்கான போராட்டமாகும்.