ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

தோட்டத் தொழிலாளர்கள், குத்தகை விவசாயிகள் முறைமையை கட்டியிழுக்க வேண்டும் என கம்பனிகளின் தலைவர் கூறுகின்றார்

W.A. Sunil
16 May 2016

இலங்கை பெருந்தோட்ட கம்பனிகளின் தலைவர் ரொஷான் இராஜதுரை, தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவதை முழுமயாக நிராகரித்து, டெய்லி மிரர் பத்திரிகைக்கு நீண்ட பேட்டியை வழங்கியிருந்தார். கடந்த கூட்டு ஒப்பந்தம் முடிவுற்று ஒரு வருடம் பூர்த்தியாகின்ற மார்ச் 31 அன்று மிரர் பத்திரிகைக்கு அவர் வழங்கிய கருத்துக்களில், தொழிலாளர்கள் மீது பாரிய சுரண்டலை திணிப்பதற்கு கம்பனிகள் தீட்டியுள்ள திட்டங்களை எக்காரணம் கொண்டும் மாற்றப் போவதில்லை என மிகத் தெளிவாக கூறியுள்ளார்.

இராஜதுரை கூறியதாவது: “உற்பத்தி பண்டங்களின் விலை உலக ரீதியாக வீழ்ச்சியுறுவதுடன் எமது பிரதான ஏற்றுமதி சந்தைகள் பெரும்பாலானவற்றில் நிலவும் ஸ்திரமின்மை உட்பட எமது நிர்வாகத்துக்கு வெளியிலான காரணிகளின் விளைவாக, தேயிலை மற்றும் இறப்பர் விலை வீழ்ச்சியுற்றுள்ளது.” சம்பள உயர்வு ஒருபுறம் இருக்க, இப்போதைய வறிய மட்டத்திலான 620 ரூபா நாள் சம்பளத்தை கொடுப்பது கூட “நிதி” அடிப்படையில் செய்ய முடியாதுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

தொழிலாளர்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்காது தேயிலைத் தொழிற் துறையை நாடத்திச் செல்ல முடியாது என அவர் உறுதியாக கூறியுள்ளார்: “குறிப்பாக, ஏனைய தேயிலை உற்பத்தி நாடுகளுடன் ஒப்பிடும்போது உற்பத்தி திறன் மிகக் குறைந்த நிலையில் இருப்பது உட்பட, நீண்டகாலப் பிரச்சினைகளே இலங்கை பெருந்தோட்டத் தொழிற்துறையில் புரையோடிப் போயுள்ளது.” அதனால் தொழிலாளர்கள் தமது உற்பத்தித் திறனை அதிகரிக்க வேண்டும் என அவர் கூறுகின்றார்.

தேயிலை தொழிற்துறையிலான நெருக்கடிக்கு தொழிலாளர்கள் எந்த வகையிலும் பொறுப்பல்ல. எனினும் இராஜதுரை உட்பட பெருந்தோட்ட உரிமையாளர்களோ, இலாபத்துக்காக ஏங்கும் கம்பனிகளை நடத்திச் செல்வதாக இருந்தால், தமது நெருக்கடியை தொழிலாளர்கள் சுமக்க வேண்டும் எனக் கூறுகின்றனர்.

இலங்கையின் தேயிலைத் தொழிற்துறை முகம் கொடுத்திருக்கும் நெருக்கடியைப் பற்றி 2015ம் ஆண்டு இலங்கை மத்திய வங்கி அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது: “ஏற்றுமதி வருமானத்தின் நூற்றுக்கு 13 ஆக இருக்கும் இலங்கையின் இரண்டாவது பெரிய வர்த்தகப் பண்டமான தேயிலையின் ஏற்றுமதி வருமானம், கடந்த 5 ஆண்டுகளுக்குள் மிக குறைந்த புள்ளிகளை பதிவுசெய்து, 1,340 மில்லியன் அமரிக்க டாலர் வரை நூற்றுக்கு 17.7 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கையின் பிரதான இறக்குமதியாளர்களான ரஷ்யாவிலும் சில மத்திய கிழக்கு நாடுகளிலும் இலங்கை தேயிலையின் தேவை பாரிய அளவில் குறைத்துள்ளதுடன், புவியரசியல் நிலமைகளின் அபிவிருத்திகள், இறக்குமதி செய்யும் நாடுகளின் நாணய வீழ்ச்சி மற்றும் எண்ணெய் போன்றவற்றின் ஊடாக பெற்றுக் கொண்ட இலாபம் குறைந்தமையும் இதற்கு காரணமாகும்.”

முழு உலக முதலாளித்துவத்தையும் படர்ந்து செல்லும் நெருக்கடிப் புயலே தேயிலைத் தொழிற்துறையையும் ஆட்டுவிக்கின்றது. கடந்த அரை நூற்றாண்டு காலமாக வளர்ச்சியடைந்து வந்த நெருக்கடி, 2008ல் அமெரிக்க நிதி நிறுவனங்களின் வீழச்சியுடன் ஆரம்பித்து, உலக முதலாளித்துவமே பொறிந்துவிழும் காலகட்டத்தை நோக்கி பயணித்துள்ளது. வீழ்ச்சிப் போக்கு வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளில் தொடங்கி ஒவ்வொரு நாடுகளுக்கும் விரிவடைந்து செல்கின்றது. இந்த நெருக்கடியை, இலங்கை கம்பனிகள் ஒருபுறம் இருக்க, அவை இடைத்தரகர் தொடர்புகளை கொண்டிருக்கும் பூகோள இராட்சத கூட்டுத்தாபனங்களாலும் கட்டுப்படுத்த முடியாதுள்ளது. கட்டுப்படுத்த முடியாத அராஜக நிலைமை, முதலாளித்துவத்தின் அடிப்படை குணாம்சமாகும்.

இலங்கை முதலாளித்துவத்தின் நெருக்கடி, உலக நெருக்கடியின் ஒரு பகுதியாகும். இராஜதுரை உட்பட கம்பனி உரிமையாளர்கள் அரசாங்கத்தின் பின்புலத்தோடு தொழிலாளர்கள் மீது இந்த நெருக்கடியை சுமத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர். அவர்களுக்கு நெருக்கடியை கட்டுப்படுத்த முடியாவிட்டாலும், அதை தொழிலாளர்கள் மீது சுமத்துவதில் எந்தவித தயக்கமும் இல்லை.

கென்யாவில் தேயிலை கொழுந்து பறிக்கும் தொழிலாளி ஒருவர் நாளொன்றுக்கு 60 கிலோவும் வட மற்றும் தென் இந்தியாவில் முறையே 50 மற்றும் 36 கிலோவும் பறிக்கும் போது, இலங்கையில் அது 18 கிலோவாக இருப்பதாக இராஜதுரை குற்றஞ்சாட்டுகின்றார்.

உற்பத்தி திறனை அதிகரித்தல் என்ற போர்வையில் பெருந்தோட்டக் கம்பனிகள் முன்மொழிவது எதை? சுருங்கிவரும் சந்தையில் தங்களுடைய பங்கினைப் காத்துக் கொள்வதற்காக, தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளுக்கிடையில் உலக சந்தையில் வளர்ச்சியடைந்து வரும் கழுத்தை நெரித்துக்கொள்ளும் போரில் வெற்றிபெறுவதற்காக, தொழிலாளர்கள் தமது உற்பத்தி திறனை அதிகரித்து கம்பனிகளுக்கு ஏற்ற சூழலை அமைத்துத் தரவேண்டும் என்பதையே ஆகும்.

கென்யாவிலும் இந்தியாவிலும் தொழிலாளர்களின் உற்பத்தி திறன் எவ்வாறான கொடூரமான நிலமைகளுக்கு மத்தியில் சுரண்டப்படுகின்றது என்பதனை இராஜதுரை விளக்கவில்லை. பெருந்தோட்ட உற்பத்தியாளர்கள், எந்தளவு மிகக் குறைந்த சம்பளத்தை கொடுத்து எந்தளவுக்கு கூடிய வேலையை, எவ்வாறு வாங்குவது என்பதையே பற்றியே சிந்திக்கின்றனர்.

கென்யாவிலும் வட மற்றும் தென் இந்தியாவிலும் சிறுவர் மற்றும் பெண்கள் உட்பட தொழிலாளர்களின் உழைப்பு மனிதாபிமானமற்ற முறையில் சுரண்டப்படுகின்றது. கென்யாவில் யுனிலிவர், ஜேம்ஸ் ஃபின்லே மற்றும் இந்தியாவில் டாட்டா உட்பட கம்பனிகளால் நிர்வகிக்கப்படும் தோட்டங்களில் இத்தகைய நிலைமைகள் தெரியவருகின்றன.

கென்யாவில் தேயிலை பறிக்கும் ஒரு தொழிலாளியின் நாளாந்த சம்பளம் 3 அமெரிக்க டாலர்களை விட சற்றே அதிகமானது. இலங்கையை போன்று தொழிலாளர்களை வறுமைக்குள் வைத்துக் கொள்ள செயற்படும் அந்த நாட்டின் தொழிற்சங்கங்கள் கூட, தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமை 10 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததை விட மோசமடைந்துள்ளதாக ஏற்றுக் கொள்ளத் தள்ளப்பட்டுள்ளன. இந்திய தொழிலாளர்களுக்கு வடக்கே 2 டாலர் மற்றும் தென் இந்தியாவில் 4 டாலர் அளவிலான அற்ப சம்பளமே வழங்கப்படுகிறது.

குரல் வளையை நெரித்துக் கொள்ளும் போட்டிக்கு மத்தியில் தேயிலை உற்பத்தியை அதிகரித்துக் கொள்வதற்கு கென்ய கம்பனிகள் தொழில்நுட்ப அபிவிருத்தியை பயன்படுத்திக் கொண்டன. இதனால் குறைந்பட்சம் 80 ஆயிரம் பேர் தொழிலை இழந்தனர்.

குறைந்த உற்பத்தி திறனுக்கு 620 ரூபா சம்பளம் கொடுப்பதற்கும் மேலாக, ஏனைய செலவுகள் உட்பட மொத்தமாக 1,100 ரூபாவுக்கும் அதிகமாக தொழிலாளர்களை நடத்திச் செல்வதற்கு செலவாவதாக இராஜதுரை புலம்புகிறார். முழு சம்பளமும் கிடைப்பதாகவே எடுத்துக்கொண்டாலும் மருந்துகள், ஆடை அணிகள், மின்சாரம், பிள்ளைகளின் கல்வி, தேவையான போக்குவரத்துச் செலவுகள் ஆகிய எல்லவற்றையும் 620 ரூபாவில் செய்து கொள்ள முடியும் என தோட்ட உரிமையாளர்கள் கூறுவது, எந்தவித நல் வாழ்கைக்கான உரிமையும் தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடையாது, அவர்கள் தமது இலாபத்தினை பெருக்குவதற்காக மாத்திரமே உயிர்வாழ்கின்றார்கள் என்ற முதாலளித்துவ கண்ணோட்டத்திலேயே ஆகும். இலாபம் வீழ்ச்சியுறும்போது, இந்த நிலமைகளை மேலும் வெட்டுவதற்கே முதலாளிகள் முயற்சிப்பர்.

தொழிலாளர்கள் வாழும் பிரித்தானியர்களால் அமைக்கப்பட்ட லயன் அறைகள், போதிய வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் அற்ற வைத்தியசாலைகள், வசதிகளற்ற பாடசாலைகள் போன்றவைகளே இராஜதுரை குறிப்பிடும் ஏனைய செலவுகளில் உள்ளடங்குகின்றன!

முதலாளித்துவ ஊடகங்களால் தூக்கிப் பிடிக்கப்படும் இராஜதுரையின் தீர்வை, டெய்லி மிரர் நேர்காணலில் பின்வருமாறு விளக்கியுள்ளார். “நாம் பிரேரிப்பது, தேயிலைத் தொழிற்துறையில் செயற்படும் முறைமையே, அதாவது தொழிலாளர்கள் இப்போது தங்கியிருக்கின்ற, அவர்களுடைய (தொழிலாளர்களுடைய) சம்பாதிக்கும் திறமை முடக்கிவைக்கப்பட்டிருக்கின்ற, தொழிலாளர்களின் வரவினை அடிப்படையாக கொண்ட சம்பள முறைமையை முழுமையாக மாற்றியமைப்பதையே ஆகும். தங்களுடைய தொழில் தொடர்பாக, சுயாதிகார சமூக உற்பத்தி வியாபாரத்தின் பங்குதாரர்களாக பெருமைபட்டுக்கொள்ளக்கூடிய உற்பத்தியாளர்களாக அவர்களை மாற்றியமைக்க வேண்டும்.”

தொழிலாளர்களை “வியாபாரிகளாக” மாற்றும் இந்தப் பொய்யை அவர்கள் “இலாபத்தினை பங்கிட்டுக் கொள்ளும்” ஒரு முறைமையாக குறிப்பிடுகின்றார்கள். அதன்படி ஒரு குறிப்பிட்ட தொகை தேயிலைச் செடிகள் தொழிலாளர் குடும்பங்களுக்கு வழங்கப்படும். பசளை, இரசாயனப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் கம்பனிகளால் வழங்கப்படும். தேயிலைக் கொழுந்தை கம்பனிகளின் தொழிற்சாலைகளுக்கே அனுப்ப வேண்டும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் வங்கியாளர்களினதும் கம்பனிக்காரர்களதும் தில்லு முல்லுகளின் பின்னர் காட்டப்படும் ஆதாயத்தில் ஒரு பகுதியே “பெருமைக்குரிய உற்பத்தியாளர்” என்ற வியர்வை சிந்தும் தொழிலாளிக்கு கிடைக்கும். அதில் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதிக்கும் வெட்டப்படும் தொகை உட்பட தொழிலாளிக்கு நாளாந்த வருமானமாக 1000 ரூபாவுக்கும் மேல் சம்பாதிக்க முடியும் என இராஜதுரை குறிப்பிடுகின்றார்.

தொழிலளர்களின் முழுக் குடும்பத்தினையும் தோட்டத்தில் உழைப்பதற்கு ஈடுபடுத்திக் கொள்வதற்கே புதிய முறையில் எதிர்பார்க்கப்படுகிறது. தொழிலாளர்கள் வளர்க்கும் கால்நடைகள் மற்றும் ஏனைய வழிகளிலும் பசளைகளைப் பெற்றுக் கொள்ளவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த முழு முறைமையுமே, தொழிலாளர்களை கலைத்துவிட்டு பழைய குத்தகை விவசாயிகள் முறைமைக்கு சமனான முறைக்கு மாற்றுவதாகும். தொழிலாளர்களின் கீழ்மட்டத்திலான வாழக்கை மற்றும் சமூக நிலமைகளை மேலும் பாதாளத்துக்குள் தள்ளுவதற்கு மட்டுமே இது வழிசமைக்கும். (பார்க்க: இலங்கை பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் பங்கு அறுவடை முறையை அறிமுகப்படுத்துவதை ஆதரிக்கின்றன http://www.wsws.org/tamil/articles/2016/jan/160115_sril_p.shtml)

கம்பனிகள் தொழிலாளர்கள் மீது தாக்குதல்களை தொடுக்கும் போது, அரசாங்கத்தினதும் தொழிற்சங்கங்களினதும் உதவியுடனேயே செயற்படுகின்றன. “குறிப்பாக பெருந்தோட்டத் துறையில், சம்பள ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் போது, தேவையற்ற அரசியல் அழுத்தங்களை தவிர்த்து, தனியார் துறைக்கு செயற்திறத்துடன் நிர்வாகத்தினைக் கொண்டு செல்ல இடமளியுங்கள்” என இராஜதுரை அரசாங்கத்துக்கு கூறுகின்றார். தொழிலாளர்களின் சம்பள உயர்வுப் போராட்டம் எழும்பும் என்ற பீதியில், சம்பள உயர்வு வழங்குதல் பற்றி கட்டுக்கதைகளை கூறிவரும் அரசாங்கம், இராஜதுரையின் இந்த தீர்வுக்கு எந்தவிதத்திலும் எதிரானது அல்ல.

தொழிற்சங்கங்களின் பக்கம் திரும்பும் இராஜதுரை, “தொழிற்துறையின் நீண்டகால இருப்பு பற்றிய பிரச்சினை அதிகளவில் தொழிற்சங்கங்களின் கைகளிலேயே உள்ளது,” என குறிப்பிடுகின்றார்.

தோட்டத் தொழிற்சங்கங்களுக்கு இடையில், ஆறுமுகம் தொண்டமானின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) அரசாங்கத்தினுள் நுளைந்து கொள்ள சந்தர்ப்பம் பாத்துக்கொண்டிருக்கின்றது. ப. திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கம் (NUW), மனோகணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணி (ஜ.ம.மு.) மற்றும் மலையக மக்கள் முன்னணியும் (ம.ம.மு.) அரசாங்கத்தின் பங்குதாரர்களாகும். மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பீ.) தோட்டத் தொழிற்சங்கம் ஒன்றினை இயக்குகின்றது. இந்த தொழிற்சங்கள் சம்பள உயர்வு தொடர்பாக போலிக் கோசங்களை எழுப்பிய போதிலும், இராஜதுரையின் இந்தப் பிரேரணைக்கு ஆதரவளிக்கின்றன. தொழிலாளர்களுக்கு காணி பெற்றுக்கொடுத்தல் என்ற பெயரில் அவை அதற்கு முலாம் பூசுகின்றன. என்ன பெயரில் அழைக்கப்பட்டாலும் இது மிகவும் மோசமான பிற்போக்கு நடவடிக்கையாகும்.

தொழிற்சங்கங்களின் துரோக நடவடிக்கைகளிலயே தோட்டக் கம்பனிகள் இலாபத்தினை சுரண்டிக் கொண்டதும் சுரண்டிக்கொண்டிருப்பதும் தங்கியிருக்கின்றது. சம்பளம் மற்றும் சேவை நிலமைகள் வெட்டப்படுவதற்கு எதிராக, தொழிலாளர்கள் மத்தியில் கடந்த வருடங்களில் வெடித்தப் போராட்டங்களை குழப்புவதற்கும் அவற்றை ஒடுக்குவதற்கும் தொழிற்சங்கங்கள் பொலிசுக்கும் தோட்ட கம்பனிகளுக்கும் தொடரச்சியாக உதவி வந்துள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த திகாம்பரம், இந்த அரசாங்கத்திலும் அமைச்சராக உள்ளார். மனோகணேசனும் நடப்பு அரசாங்கத்தில் அமைச்சராவார். முதலாளித்துவ அரசாங்கத்தின் வரப் பிரசாதங்களை அனுபவிக்கும், தோட்ட உரிமையாளர்களும் வியாபாரிகளுமான இவர்கள், முதலாளித்துவ அரசியல்வாதிகளாகவும் உள்ளனர். அவர்கள் பிரதிநிதித்துவம் செய்வது தோட்டத் தொழிலாளர்களின் நலன்களை அல்ல. முதலாளித்துவத்துவ அரசாங்கத்தினதும் பெரும் வர்த்தகர்களதும் மற்றும் மூலதனத்தினதும் நலன்களையே பிரதிநிதித்தவம் செய்கின்றார்கள்.

அரசாங்கத்தினதும் தொழிற்சங்கங்களினதும் உதவியோடு நடைமுறைக்கு கொண்டுவர எத்தனிக்கும் இந்த திட்டத்தை தொழிலாளர்கள் எதிர்க்க வேண்டும். இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் தங்களைப் போன்று தாக்குதல்களுக்கு உள்ளாகும் கென்யா, இந்தியா, சீனா போன்ற நாடுகளில் உள்ள தமது வர்க்க சகோதரர்களுடன் ஒரு ஐக்கியத்தினைக் கட்டியெழுப்பி, அனைத்துலக சோசலிச வேலைத்திட்டத்துக்காகப் போராட வேண்டும்.

அரசாங்கம் தோட்டங்களை மக்கள்மயப்படுத்துவதால் பிரச்சினையை தீர்க்க முடியாது என இராஜதுரை குறிப்பிட்டுள்ளார். நிச்சயமாக, இலாப வேட்கையில் இருக்கும் கம்பனிக்காரர்களின் கைகளில் தோட்டங்கள் இருப்பதன் ஊடாகவும் தாக்குதல்களை தடுக்க முடியாது. அரசாங்கம் தற்போது பொருளாதார நெருக்கடியின் சுமைகளை தொழிலாளர்கள் மீது சுமத்துவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன கோரிக்கைகளை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றது. தோட்டத் தொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள், அனைத்து தொழிலாளர் ஒடுக்கப்பட்ட மக்களையும் இலக்கு வைத்துள்ள சிக்கன வெட்டுக்களின் ஒரு பகுதியாகும்.

இந்த தாக்குதல்களை, முதலாளித்துவவாதிகளின் இலாபத்துக்காக அன்றி, பரந்துபட்ட தொழிலாளர்களின் மற்றும் வறியவர்களின் தேவையின் அடிப்படையில் உற்பத்தி முறைமையை மாற்றி அமைப்பதற்கு ஊடாகவே தடுக்க முடியும். அப்படியாயின், இலங்கையின் முதலாளித்துவ வர்க்க ஆட்சியை தூக்கியெறிந்து பெருந்தோட்டங்களையும் தொழிற்சாலைகளையும் நிதி நிறுவனங்களையும் ஏனைய சகலவற்றையும் தொழிலாளர் நிர்வாகத்தின் கீழ் மக்கள்மயப்படுத்தும் சோசலிச வேலைத் திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் தொழிலாளர்கள் விவசாயிகள் அரசாங்கம் ஒன்றினை அதிகாரத்துக்கு கொண்டுவர வேண்டும். அதற்கான அரசியல் போராட்டத்தை ஏற்பாடு செய்வது தோட்ட தொழிலாளர்களினதும் ஏனைய தொழிலளார்களினதும் தீர்க்கமான பொறுப்பாகும்.

தொழிற்சங்கங்கள் முதலாளிகளின் தொழிற்துறை பொலிஸ்காரனாக செயற்படுகின்றன. அதற்கு எதிராக ஜனநாயக முறைமையில் தெரிவு செய்யப்பட்ட நடவடிக்கை குழுக்களை அமைத்துக் கொள்வதன் மூலமே தொழிலாளர்கள் தங்களுடைய தேவைகளுக்காக போராட முடியும். தோட்டத் துறையிலும் ஏனைய தொழிற்துறையிலும் நடவடிக்கை குழுக்களை அமைத்துக் கொள்வதற்கு முன்வருமாறும் அவற்றினை சோசலிச வேலைத்திட்டத்திற்காகப் போராடும் கருவிகளாக ஆக்கிக் கொள்ளுமாறும் நாம் தொழிலாளர்களைக் கேட்டுக் கொள்கின்றோம்.

இந்த வேலைத் திட்டத்தையும் முன்னோக்கினையும் வழங்கும் சோசலிச சமத்துவ கட்சியினை (சோ.ச.க.) தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரக் கட்சியாக கட்டியெழுப்ப தோட்டத் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் இணைந்து கொள்ளுமாறு அழைப்புவிடுக்கின்றோம்.