ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lankan plantation unions conspire with government and employers

இலங்கை பெருந்தோட்டத் தொழிற்சங்கங்கள் அரசாங்கத்துடனும் முதலாளிமாருடனும் சேர்ந்து சதி

By Shree Haran
  10 June 2016

ஜூன் 2 அன்று, பெருந்தோட்டத் துறையை தளமாகக் கொண்ட தொழிற்சங்க கூட்டமைப்பான தமிழ் முற்போக்கு கூட்டணி (த.மு.கூ.), தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு புதிய சம்பள உடன்பாட்டை அறிவித்தது.

இந்த உடன்பாடு தொழிலாளர்களின் முதுகுக்குப் பின்னால் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவை உப குழுவுடனான கலந்துரையாடலை அடுத்து இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளதோடு முதுகெலும்பை முறிக்கும் வேலைச் சுமையை மேலும் திணிப்பதற்காக பெருந்தோட்டக் கம்பனிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தைகளுக்கு விக்கிரமசிங்க தலைமை வகிப்பார்.

மனோ கனேசன் தலைமையிலனா ஜனநயாக மக்கள் முன்னணி (ஜ.ம.மு.), பி. திகாம்பரத்தின் தொழிலாளர் தேசிய சங்கம் (தொ.தே.ச.) மற்றும் வி. ராதாகிருஷ்ணன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணியும் (ம.ம.மு) தமிழ் முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. இவர்கள் அனைவரும் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் அமைச்சர்களாவர்.

புதிய உடன்பாட்டின் கீழ், புதிய கூட்டு ஒப்பந்தம் இந்த மாத இறுதிக்குள் கலந்துரையாடப்படும் வரை, ஏப்ரல் முதல் 100 ரூபா (டாலர் 0.69 சதம்) நாள் சம்பள உயர்வை வழங்குவதற்காக, அரச திறைசேரியின் உத்தரவாதத்துடனான வங்கிக் கடன் கம்பனிகளுக்கு வழங்கப்படும்.

செலவுகளை வெட்டிக் குறைத்து உற்பத்தி திறனை அதிகரிப்பதற்காக, நாள் சம்பள முறையை ஒழித்து ஒரு புதிய "வருவாய் பகிர்வு முறைமையை" மாற்றீடு செய்ய தோட்டக் கம்பனிகள் விரும்புகின்றன.

தோட்டத் தொழிற்சங்கங்களுக்கும் கம்பனிகளுக்கும் இடையேயான முந்தைய கூட்டு ஒப்பந்தம் 2015 மார்ச்சில் காலவதியானது. இன்னமும் பெரிய தோட்ட தொழிற்சங்கமாக உள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.), தற்போதைய 620 ரூபா நாள் சம்பளத்தை 1,000 ரூபா வரை உயர்த்தக் கோரியது. தமிழ் முற்போக்கு கூட்டணி உட்பட ஏனைய தொழிற்சங்கங்களும் இந்த கோரிக்கையை ஆதரித்தன.

கடந்த ஜூலையில் "மெதுவாக வேலை செய்யும்" தொழிற்சங்கப் பிரச்சாரத்துக்கு அழைப்பு விடுத்த இ.தொ.கா., ஆகஸ்ட் பொதுத் தேர்தலை காரணம் காட்டி அதை உடனடியாக முடித்துக்கொண்டது. எவ்வாறெனினும், இ.தொ.கா.வின் உண்மையான கவலை, தோட்டக் கம்பனிகள் பிடிவாதமாக எந்தவொரு சம்பள அதிகரிப்பையும் கொடுக்க மறுத்த நிலையில், தோட்டத் தொழிலாளர்களின் தொழிற்சங்க நடவடிக்கை ஒரு பெரும் போராட்டத்தை துரிதப்படுத்திவிடக் கூடும் என்பதே.

பின்னர் 1,000 ரூபா நாள் சம்பளக் கோரிக்கையை கைவிட்ட தொழிற்சங்கங்கள், வரவு-செலவு திட்டத்தில் தனியார் துறையினருக்கு அறிவிக்கப்பட்ட 2,500 ரூபா மாதாந்த சம்பள உயர்வு பெருந்தோட்டத்துக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தன. வேறு வார்த்தைகளில் சொன்னால், மாதம் 25 நாட்கள் வேலை செய்யும் தொழிலாளி நாளொன்றுக்கு 100 ரூபா அதிகரிப்பையே பெறுவார்.

இந்த கோரிக்கைக்கு அழுத்தம் கொடுப்பதன் பேரில் தமிழ் முற்போக்கு கூட்டணி மே 25 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தது. எனினும், இந்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டதோடு, அதற்குப் பதிலாக, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர்கள் மே 26 அன்று மத்திய கொழும்பில் பாதிப்பற்ற ஒரு "சத்தியாகிரகத்தை" நடத்தினர்.

அடுத்த நாள், பெருந்தோட்ட உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ரொஷான் இராஜதுரை, தேயிலை மற்றும் இறப்பர் தொழிற்துறையில் நட்டங்களை காரணங்காட்டி நாளொன்றுக்கு 100 ரூபா ஊதிய அதிகரிப்பை நிராகரித்தார். தோட்டக் கம்பனிகள், உலகப் பொருளாதார பின்னடைவு மற்றும் மத்திய கிழக்கில் போர் விரிவாக்கத்தினால் தேயிலை ஏற்றுமதியில் ஏற்பட்ட சரிவை சுட்டிக்காட்டின.

விக்கிரமசிங்கவின் அமைச்சரவை உப குழுவுடன் கலந்துரையாடலைத் தொடங்குவதன் மூலம் இதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி அமைச்சர்கள் பதிலிறுத்தனர். இந்த தற்காலிக 100 ரூபா நாள் சம்பள அதிகரிப்பின் நோக்கம், தொழிலாளர்கள் மத்தியிலான எதிர்ப்பை தணிப்பதே ஆகும்.

இந்த கொடுக்கல் வாங்கலின் கீழ், பெருந்தோட்ட உரிமையாளர் சங்கம் பிரேரித்துள்ள வருமானப் பகிர்வு முறைமையையும் நிலையான வேலை நேரங்களை அகற்றுவதையும் பற்றிய பேச்சுக்களை கம்பனிகளும் தொழிற்சங்கங்களும் தொடங்கவுள்ளன. தோட்டத் தொழிலாளர்களுக்கு குறிப்பிட்டத் தொகை தேயிலைச் செடிகள் அல்லது செடிகள் அடங்கிய பிரதேசம் ஒதுக்கிக் கொடுக்கப்படும். உரம், மருந்து மற்றும் உபகரணங்களை கம்பனி வழங்கும்.

இந்த புதிய திட்டம், பத்தாயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்களை மேலும் வறுமைக்குள் தள்ளி, தோட்டக் கம்பனிகளின் கட்டளைகளுக்கு தலைவணங்கும் வறிய குத்தகை விவசாயிகளாக தொழிலாளர்களை மாற்றும்.

தோட்டத் தொழிலாளர்களே நாட்டில் மிகவும் மோசமாக சுரண்டப்படும் வறிய தொழிலாளர் தட்டினராவர். இங்கு 22 தோட்ட கம்பனிகளில் கிட்டத்தட்ட 200,000 தொழிலாளர்கள் வேலை செய்வதோடு அவர்கள் போதிய வசதிகள் அற்ற வரிசை (லயன்) வீடுகளிலேயே அவர்கள் வாழ்கின்றனர்.

கடந்த வார அமைச்சரவை உப குழு கூட்டத்தை அடுத்து, அரசுக்குச் சொந்தமான சண்டே ஒப்சர்வர் பத்திரிகைக்கு கருத்துத் தெரிவித்த பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க, தான் “ஒரு புதிய குத்தகை விவசாய மாதிரியை” நடைமுறைப்படுத்துவதற்காக பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளுடனும் தொழிற்சங்கங்களுடனும் கலந்துரையாடல்களை தொடங்கியுள்ளதாக கூறினார். எனவே “பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு காணிகள் மீதான சட்ட உரிமைகளை கொடுக்க முடியும்- நிலம் அவர்களுக்கு சொந்தமாக இருக்கும், அவர்கள் அதிகமாக கொழுந்து பறிப்பர்," என அவர் மேலும் அறிவித்தார்.

முதலாளிமாருக்காக தொழிற்துறை பொலிஸ்காரனாக செயற்படும் தோட்டத் தொழிற்சங்கங்கள், அரசாங்கத்துடனும் தோட்ட உரிமையாளர் சங்கத்துடனும் தாம் நடத்திய பேச்சுவார்த்தையைப் பற்றி அவற்றின் உறுப்பினர்களுக்கு எதையும் கூறவில்லை.

கடந்த காலத்தில் தினசரி கொழுந்து பறிக்கும் அளவை 16 முதல் 18 கிலோவில் இருந்து 20 முதல் 24 கிலோ வரை அதிகரித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தொழிலாளர்கள் பல தனிமைப்பட்ட போராட்டங்களை நடத்தியிருந்த அதே வேளை, தொழிற்சங்க தலைவர்கள் உடனடியாக இந்தப் போராட்டங்களை நிறுத்தியதோடு சில தோட்டங்களில் போர்க்குணம் கொண்ட தொழிலாளர்களை குற்றவாளிகளாக ஆக்குவதற்காக தோட்ட நிர்வாகத்துடனும் பொலிசுடனும் சேர்ந்து சதி செய்தனர்.

கிட்டத்தட்ட அனைத்து தொழிற்சங்கத் தலைவர்களும் வியாபாரிகளாக அல்லது தோட்ட உரிமையாளர்களாக உள்ளனர். பெருந்தோட்டக் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்யவில்லை, மாறாக அவை கம்பனிகளதும் அரசாங்கத்தினதும் நலன்களையே காக்கின்றன.

இ.தொ.கா. முந்தைய ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவை ஆதரித்ததோடு அதன் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் அமைச்சரவை அமைச்சராகவும் இருந்தார். அவர் இப்போது விக்கிரமசிங்க அரசாங்கத்துடன் இணைந்துகொள்வதற்கு எதிர்பார்க்கின்றார்.

தொழிலாளர் தேசிய சங்கத் தலைவர் ப. திகாம்பரமும் மலையக மக்கள் முன்னணியின் வி. ராதாகிருஷ்ணனும் முந்தைய இராஜபக்ஷவின் ஜனநாயக விரோத ஆட்சியை ஆதரரித்தனர். பின்னர், கடந்த ஆண்டு மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி ஆக்குவதற்காக அவருக்குப் பின்னால் அணிதிரண்டனர் –அது உண்மையில், கொழும்பில் ஒரு அமெரிக்க-சார்பு ஆட்சியை நியமிப்பதற்காக வாஷிங்டனின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆட்சி மாற்ற நடவடிக்கையாகும்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்களான கனேசன், திகாம்பரம் மற்றும் ராதாகிருஷ்ணனும் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வெற்றிகொண்டதாக வஞ்சத்தனமாக கூறிக்கொண்டனர். இது ஒரு பொய் ஆகும். பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் அனைத்தும், தொழிலாளர்களின் ஊதியம், வாழ்க்கை நிலைமைகள் மற்றும் சமூக உரிமைகள் மீது ஒரு வரலாற்று தாக்குதலைத் தொடுப்பதற்கு தயாராகிக்கொண்டிருக்கின்றன.