ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

French government threatens to crush strikes as Euro 2016 football cup starts

யூரோ 2016 கால்பந்து கோப்பைத் தொடர் தொடங்குவதை ஒட்டி வேலைநிறுத்தங்களை நசுக்குவதற்கு பிரெஞ்சு அரசாங்கம் மிரட்டுகிறது

By Alex Lantier
  11 June 2016

பாரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் நடைபெற்ற நேற்றைய யூரோ 2016 கால்பந்து கோப்பைத் தொடருக்கான திறப்புவிழா முன்னேற்பாடுகளை ஒட்டி, ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டும் பிரதமர் மானுவல் வால்ஸும், பரந்துபட்ட மக்களின் வெறுப்பை சம்பாதித்திருப்பதும் பிற்போக்குத்தனமானதுமான சோசலிஸ்ட் கட்சியின் (PS) தொழிலாளர் சட்டத்திற்கு எதிராக இப்போது நடைபெற்று வருகின்ற வேலைநிறுத்தங்களை நசுக்குவதற்கு முன்கண்டிராத வகையிலான அச்சுறுத்தல்களை மேற்கொண்டனர்.

Stade de France க்கு சேவை வழங்குகின்ற RER B மற்றும் D (விரைவு பிராந்திய வலைப்பின்னல்) பாதைகளில் தொடர்வண்டிகளை இயக்கக் கூடிய ஓட்டுநர்களில் சிலர் நேற்று வேலைநிறுத்தத்தில் பங்குபற்றியிருந்தனர். இந்தப் பாதைகளில் ஆரம்பத்தில் ஏறக்குறைய பாதி எண்ணிக்கையிலான தொடர்வண்டிகளே ஓடியதால் உதைபந்தாட்ட பிரியர்கள் ஸ்டேடியத்திற்குச் செல்வதும், அத்துடன் மற்ற பயணிகளது பயணங்களும் தாமதப்பட்டன. ஆயினும், சரியான நேரத்தில் தொடர் வண்டி சேவை இயல்பு நிலைக்குத் திரும்பி உதைபந்தாட்ட பிரியர்களை உரிய நேரத்தில் பிரான்ஸ்-ரோமானியா இடையிலான ஆட்டம் தொடங்கப்படுவதற்கு முன்பாய் கொண்டு சென்றதாக ஆரம்ப கட்ட ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.

உதைபந்தாட்ட பிரியர்கள் இடையூறின்றி Stade de France க்கு செல்வதை உறுதி செய்வதற்காக வேலைநிறுத்தத்தில் இருக்கும் தொடர்வண்டி ஓட்டுநர்களை சட்டரீதியாக கட்டாயமாக வேலைக்கு வரச் செய்கின்ற - பெரும் சட்ட அபராதங்களின் அச்சுறுத்தலின் கீழ் ஒரு அரசாங்க உத்தரவு மூலமாக அவர்கள் வேலை செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்படுவார்கள் - சாத்தியத்தைக் குறித்து ஹாலண்ட் மற்றும் வால்ஸ் இருவருமே மறைமுகமாய் குறிப்பிட்டனர்.

“எந்த சாத்தியத்தினையும் ஒதுக்கி வைப்பதில்லை என்பதே எனது கொள்கையாய் இருக்கிறது” என்றார் வால்ஸ். “80,000 பார்வையாளர்கள் மிகச் சிறந்த பாதுகாப்புடன் பத்திரமாய் ஸ்டேடியத்திற்குச் செல்ல முடிகின்ற வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்.”

”இந்த கணம் வரை” வேலைநிறுத்தம் செய்பவர்கள் மீது கட்டாய வேலை உத்தரவினைத் திணிக்க தான் திட்டமிடவில்லை என்று அறிவித்த ஹாலண்ட், அதேநேரத்தில் PS அரசாங்கம் அதனைச் செய்வதற்கு தயாரிப்புடன் இருந்தது என்பதையும் தெளிவாக்கினார். “அரசு தனது கடமையை நிறைவேற்ற அழைக்கப்படும் போது, மக்களை வரவேற்பதற்கும் அவர்களது போக்குவரத்துக்கும் அவசியமான அத்தனை நடவடிக்கைகளையும் அது எடுக்கும், அப்போது தான் ஆட்டங்கள் சாத்தியமான மிகச்சிறந்த பாதுகாப்புடன் நடைபெற முடியும்” என்றார் அவர்.

வேலைநிறுத்தங்களை பலவந்தமாக நசுக்குவதற்கு அரசு தலையீடு செய்யக் கூடிய ஒரு மிரட்டலை ஒரு அனுமான சாத்தியத்தைப் போன்று சித்தரிக்க ஹாலண்ட் முனைந்தாலும் கூட, உண்மையில் வேலைநிறுத்தக்காரர்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவதற்கு - முன்னதாக மார்சைய் அருகே உள்ள Fos இல் இருக்கும் எண்ணெய் ஆலை முற்றுகைப் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடந்திருக்கிறது - பாதுகாப்புப் படைகளை PS ஏற்கனவே குவித்துக் கொண்டிருக்கிறது.

நேற்று, பாரிஸின் புறநகர்ப் பகுதியான Ivry-sur-Seine இல் இரண்டு குப்பைகளை எடுக்கும் டிரக்குகளை முற்றுகையிட்ட போராட்டத்தை நசுக்குவதில் போலிஸ் தலையிட்டதன் பின்னர், PS இன் பாரிஸ் மேயரான ஆனி டால்கோ, நகரில் மீண்டும் குப்பைகளை எடுக்கும் பணி சீராய் நடைபெறுவதாக பெருமையடித்துக் கொண்டார். “ஏற்கனவே [வியாழன்] மாலை, சுமார் 50 டிரக்குகள் அதிகமாய் இறங்கி தேங்கியிருந்த குப்பைகளை அகற்றத் தொடங்கியிருந்த” நிலையில் “வெள்ளிக்கிழமை காலையில், பாரிஸில் மேலும் முப்பது டிரக்குகள் களத்தில் இறங்கியுள்ளன” என்றார் அவர்.

PS அரசாங்கத்திடம் இருந்து அதிகரித்துச் செல்லும் ஒடுக்குமுறைக்கும் மிரட்டல்களுக்கும் முகம் கொடுக்கின்ற நிலையில், தொழிற்சங்க அதிகாரத்துவங்களாலும் தனிமைப்படுத்தப்படுகின்ற மற்றும் பகிரங்கமாக விமர்சிக்கப்படுகின்ற நிலைக்கு வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் முகம்கொடுக்கின்றனர். தொடர்வண்டித் தொழிலாளர்களில் சுமார் 10 முதல் 30 சதவீதம் வரையிலான சிறுபான்மை எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் தொடர்ந்தும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், தொழிற்சங்கங்கள், வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், PSக்கு விரோதமான தொழிலாளர்களின் பரந்த அடுக்குகள் போராட்டத்திற்குள் நுழைந்து விடாமல் தடுப்பதற்கும், அத்துடன் PS அரசாங்கத்தை பதவியிறக்குவதற்கு தொழிலாள வர்க்கத்தின் ஒரு அரசியல் போராட்டம் எழுவதை முடக்குவதற்கும் முயற்சி செய்கின்றன.

இந்த வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர PS உடன் பேச்சுவார்த்தைகளை செய்து, இச்சட்டத்தில் சின்னச்சின்ன திருத்தங்களைப் பெறுகின்றதான முன்னோக்கினை, பல்வேறு அளவிலான வெளிப்பாடுகளாக, அவை ஊக்குவித்து வருகின்றன.

தொடர்வண்டித் துறையில் மிகப்பெரும் தொழிற்சங்கமாக இருக்கக் கூடிய ஸ்ராலினிச CGT இன் பொதுச் செயலரான பிலிப் மார்ட்டினேஸின் வெளிப்படையான தாக்குதலுக்கு வேலைநிறுத்தம் செய்கின்ற தொடர்வண்டி ஓட்டும் தொழிலாளர்கள் இலக்காயினர். “உதைபந்தாட்ட பிரியர்களை போட்டிகளுக்குச் செல்லவிடாமல் தடுப்பது CGTக்கு சிறப்பானதொரு பிம்பத்தைக் கொடுக்குமா என்பது எனக்குத் தெரியவில்லை” என்ற மார்ட்டினேஸ், “ஸ்டேடியங்களிலும் உதைபந்தாட்ட பிரியர் வட்டாரங்களிலும் யூரோ கோப்பை ஒரு உண்மையான மக்கள் திருவிழாவாக நடந்தேற வேண்டும் என்பதையே” CGT விரும்புகிறது என்று மேலும் சேர்த்துக் கொண்டார்.

நாடெங்கிலும் நடைபெறக் கூடிய வேலைநிறுத்த முற்றுகைப் போராட்டங்களை நிறுத்துகின்ற ஒரு முயற்சியாக பிலிப் மார்டினேஸை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவிருப்பதாக, தொழிலாளர் அமைச்சரும், சட்டமன்றத்தில் இச்சட்டத்தை வழங்கியவரும் இச்சட்டத்திற்கு தனது பெயரை வழங்கியிருப்பவருமான, மரியம் எல் கொம்ரி அறிவித்தார். மார்ட்டினேஸ் தனது ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் வால்ஸ் உடன் ”இரகசியமான” கொல்லைப்புற பேச்சுவார்த்தைகளில் தான் ஈடுபட்டிருப்பதை ஊர்ஜிதம் செய்த அதே நேரத்தில், என்ன விவாதிக்கப்படுகிறது என்பதைக் கூற மறுத்து விட்டிருந்ததற்குப் பின்னர் இது நடந்திருக்கிறது.

குட்டி-முதலாளித்துவ புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சிக்கு நெருக்கமான SUD தொழிற்சங்கம் தனது பங்காக, Fos இல் நடந்த ஒடுக்குமுறைக்குப் பின்னர் நடந்ததைப் போல தொழிலாளர்களின் பரந்த அடுக்குகளிடம் இருந்து கட்டுப்படுத்தப்படாத ஒரு எதிர்வினை தோன்றலாம் என்பதான அச்சத்துடன், வேலைநிறுத்தக்காரர்கள் மீது அடக்குமுறையை அவிழ்த்து விட வேண்டாம் என PSக்கு அது எச்சரிக்கை விடுத்தது.

“எந்த ஒரு சந்தர்ப்பத்திலும், அரசாங்கம் வேறுவழியின்றி இப்பாதையில் போவதற்கு முடிவெடுக்குமாயின், பாதுகாப்புப் பணியாற்றும் முகவர்களுக்கு கடும் அழுத்தமளிப்பதற்கான பின்விளைவுகளுக்கான பொறுப்பை அது எடுத்தாக வேண்டியிருக்கும். அத்தகையதொரு வன்முறை தொடர்வண்டித் தொழிலாளர்களிடம் இருந்து எதிர்வினையை உருவாக்கத் தவறப் போவதில்லை” என்று அது எழுதியிருந்தது.

ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியத்தையும் தனக்குப் பின்னால் கொண்டிருக்கின்ற தொழிலாளர் சட்டத்திற்கும் PS அரசாங்கத்திற்கும் எதிராக, தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் மூலமாகவும் அவற்றுடன் இணைந்த போலி-இடது கட்சிகளின் மூலமாகவும் போராடுவதற்கு முனைவது ஒரு முட்டுச்சந்தாக அமையும் என்பதையே மார்ட்டினேஸின் கருத்துகள் சுட்டிக்காட்டுகின்றன. 2012 இல் ஹாலண்ட் தேர்வு செய்யப்படுவதற்கும் PS அரசாங்கத்தை ஆதரிப்பதற்கும் அழைப்பு விடுத்தவையான இந்த அமைப்புகள் இச்சட்டத்திற்கு தொழிலாள வர்க்கத்தில் நிலவக் கூடிய மிகப்பெருவாரியான எதிர்ப்பை அணிதிரட்டுவதற்கு திறமற்றவை என்பது மட்டுமன்று மாறாக அதற்கு வெளிப்படையான குரோதம் காட்டுபவையும் ஆகும்.

தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களையும் வேலை நிலைமைகளையும் பல தசாப்தங்கள் பின்னோக்கி தள்ள முனைகின்ற PS இன் முயற்சிக்கு எதிரான வேலைநிறுத்த நடவடிக்கையை முடித்து வைப்பதற்கான ஒரு சாக்காக யூரோ உதைபந்தாட்ட பரிசு கிண்ணம் சேவை செய்யக் கூடாது. இப்போராட்டம் தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் கரங்களில் இருந்து பறிக்கப்பட்டு, பிரான்சிலும் சர்வதேச அளவிலும் இருக்கும் தொழிலாள வர்க்கத்தின் பரந்த அடுக்குகளை ஒரு அரசியல் போராட்டத்தில் அணிதிரட்டியாக வேண்டும் என்பதற்கான நிர்ப்பந்தமான எச்சரிக்கை மணியாக அது கருதப்பட வேண்டும். ஐரோப்பாவெங்கிலுமான அரசாங்கங்களின் அடியொற்றி பிரெஞ்சு அரசாங்கத்தினால் அவிழ்த்து விடப்படுகின்ற அதிகரித்துச் செல்லும் பாதுகாப்புக் கட்டமைப்புப் பெருக்கத்துடன் தொழிலாளர்களை இது மோதலுக்குள் கொண்டு செல்வது தவிர்க்கவியலாததாகும்.

நேற்று யூரோ 2016 கிண்ணத்திற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள், நவம்பர் 13 பாரிஸ் பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னர் PS ஆல் கட்டவிழ்த்து விடப்பட்ட அவசரகாலநிலையின் நிபந்தனைகளின் படி தொடங்கின. 42,000 போலிசார், 30,000க்கும் அதிகமான துணை இராணுவப் படையினர் மற்றும் படைவீரர்கள், 5,000 தீயணைப்புத் துறையினர் மற்றும் அது தொடர்பான குடிமக்கள் பாதுகாப்பு அதிகாரிகள், 10,000 சிப்பாய்கள், மற்றும் 13,000 தனியார் பாதுகாப்பு காவலர்கள் உட்பட பிரான்ஸ் எங்கிலுமான நகரங்களில் இருந்து கிட்டத்தட்ட 100,000 பேர் குவிக்கப்பட்டிருந்தனர்.

நேற்று, கடைசி நிமிடத்தில் பாரிஸில் கூடுதலாக 3,000 துருப்புகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது, அங்கு CRS கலகத் தடுப்பு போலிஸ் வேன்களது அணிவரிசைகள் நகருக்குள்ளாக வரிசைகட்டி சென்றன. போட்டி நடக்கும் இடங்களைச் சுற்றிலும் மிகப் பரந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் அமைக்கப்படுகின்றன, கார் நிறுத்தங்களுக்கு வரும் கார்கள் சோதனையிடப்படுகின்றன, உதைபந்தாட்ட பிரியர்கள் ஸ்டேடியத்திற்குள் நுழையும் முன்னதாக பல அடுக்கு பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

இந்த பரந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காய் சொல்லி குவிக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் படைகள், வேலைநிறுத்தங்களை நசுக்க மிரட்டுவதற்காய் பயன்படுத்தப்படுவதென்பது அவசரகாலநிலையைத் திணித்த PS இன் முடிவுடன் தொடர்புபட்ட அரசியல் பிரச்சினைகளைச் சுட்டிக் காட்டுகின்றது. அவசரகாலநிலை என்பது பிரதானமாக இஸ்லாமிய வலைப்பின்னல்களால் - இவை சிரியா மற்றும் லிபியாவிலான போர்களில் பிரான்ஸ் உள்ளிட்ட நேட்டோ சக்திகளால் பினாமிகளாகப் பயன்படுத்தப்பட்டவை என்ற வகையில் பெரும்பாலும் அரசால் நன்கறியப்பட்டவையாகவே இருந்தன - நடத்தப்படுகின்ற பயங்கரவாதத்திற்கு எதிரான ஒரு நடவடிக்கையாக இல்லை.

மத்திய கிழக்கின் போர்களது அர்த்தச்சூழலில் இந்த வலைப்பின்னல்கள் பரவுவதற்கும் வளர்வதற்கும் அனுமதிக்கப்பட்டன என்ற அதேநேரத்தில், எல்லாவற்றுக்கும் முதலாய் தொழிலாள வர்க்கத்திலான எதிர்ப்பை நோக்கிச் செலுத்தப்படும் ஒரு பரந்த போலிஸ் அணிதிரட்டலை நியாயப்படுத்துவதற்கே அவசரகாலநிலை சட்டம் சேவை செய்திருக்கிறது.