ஏனைய மொழிகளில்

தோட்டத் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்கள் மற்றும் அரசாங்கம் சம்பந்தமாக எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றனர்

By M. Thevarajah and S. Ajanthan
7 March 2016

பெருந்தோட்ட கம்பனிகளதும் அரசாங்கத்தினதும் அடக்குமுறைக்கும் தொழிற்சங்கங்களினது காட்டிக்கொடுப்புக்கும் எதிராக தொழில், சம்பளம் மற்றும் நியாயமான சேவை நிலைமைகளை வென்றெடுப்பதற்கான சோசலிச வேலைத்திட்டத்தை பற்றி கலந்துரையாடும் பொருட்டு சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க) சமூக சமத்துவத்துக்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும் (ஐ.வை.எஸ்.எஸ்.இ.), மார்ச் 13 அன்று ஹட்டன் நகரசபை மண்டபத்தில் நடத்தவுள்ள பகிரங்க கூட்டத்துக்கு தொழிலாளரிடையே பரந்த ஆதரவு பெருகி வருகின்றது.

கடந்த வாரம் சோ.ச.க பிரச்சாரக் குழுவினர் நுவரெலியாவில் மஹாஊவ, வலப்பனை, இன்ஜஸ்றீ மற்றும் ஃப்ரொன்ஸி போன்ற தோட்டங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்த எல்லா தோட்டங்களிலும், எமது பிரச்சாரகர்களை குழு குழுவாக சுற்றி வளைத்த தொழிலாளர்கள், சம்பளத்தை உயர்த்தாமல் கடுமையான தொழில் நிலைமைகளை தம்மீது திணிக்க தோட்டக் கம்பனிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் சம்பந்தமாக தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தொழிற்சங்கங்களும் அரசாங்கமும் அந்த வேலைத் திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவதையிட்டு அவர்கள் கடும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளனர்.

அவர்கள் யாவருமே, பொதுவில் அரசங்கத்தினையும் தோட்ட தொழிற்சங்கங்களையும் பின்வருமாறு குற்றம் சாட்டினர். “நாம் இந்த அரசாங்கத்திற்கே வாக்களித்தோம். எனினும் அரசாங்கமும் அதற்கு ஆதரவளிக்கும் தொழிற்சங்கங்களும் எம்மை ஏமாற்றுவது மட்டுமன்றி, எமக்கு எதிராக செயற்படுகின்றன. தேர்தலுக்கு முன் எல்லா தொழிற்சங்கங்கம் நாட் சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகரிப்பதாக கூறின. தேர்தலின் பின் அவர்கள் எம்மை முற்றாக மறந்துவிட்டனர். தற்ப்போது அதைப்பற்றி பேசுவதே இல்லை. சம்பள அதிகரிப்பு ஒப்பந்தம் காலாவதியாகி ஓராண்டு கழிந்துவிட்டது. எமக்கு சம்பள உயர்வு கிடைக்காதது மட்டுமல்ல, முன்னர் எமக்கிருந்த நலன்புரி சேவைகள் வெட்டப்பட்டுள்ளதுடன் வேலைச் சுமையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.”

மஹாஊவ தோட்டத்தில் நடந்த பிரச்சாரத்தின் பின்னர், அத் தோட்டத்தை சேர்ந்த 20க்கும் மேற்ப்பட்ட தொழிலாளர்கள் சோ.ச.க. பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினர். அப்போது சந்திரலேகன் என்ற தொழிலாளி கூறியதாவது: “அக்டோபர் 22ம் திகதியிலிருந்து வருமானத்தை பகிரும் புதிய சம்பள திட்டம் செயற்ப்படுத்தப்பட்டுள்ளது. நாம் இதனை தடுக்க பல்வேறு வகையில் போராடினோம். இதனால் மூன்று மாதம் நான் சிறையில் கிடந்தேன்.”

ஏனைய தொழிலாளர்களும் இத்தகைய பொதுவான கருத்துக்களையே வெளிப்படுத்தினர். “இத் தோட்டத்தில் இலங்கை தொழிலாளர் கங்கிரஸ் (இ.தொ.கா), தேசிய தொழிலாளர் சங்கம் (தே.தொ.ச), மலையக மக்கள் முன்னனி (ம.ம.மு.) ஆகிய தொழிற்சங்கங்களை சேர்ந்த அங்கத்தவர்கள் இருக்கின்றனர். 30,000 ரூபா வரை செலவிட்டு வாகனமொன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு இந்த தொழிற்சங்கத் தலைவர்களை சந்திக்கச் சென்றோம். ஒரு பிரியோசனமும் இல்லை. எந்த தொழிற்சங்கமும் புதிய திட்டத்தை தடுத்து நிறுத்த முன்வரவில்லை. அதற்கு பதிலாக அவர்கள் தோட்ட நிர்வாகத்துடன் கூட்டுச் சேர்ந்து, அதனை செயற்படுத்த வேலை பார்த்தனர். தேசிய தொழிலாளர் சங்க தலைவர் திகாம்பரத்தை அவரது கொழும்பு இல்லத்தில் சென்று சந்தித்தோம். அவர் தேர்தலுன் பின் தோட்ட நிர்வாகிகளை சந்தித்து இது குறித்துப் பேசுவதாக உறுதி வழங்கினார். எனினும் இந்தப்பக்கமே வரவில்லை. தொழிற் சங்கங்களது காட்டிக்கொடுப்பினால் பலம் பெற்ற தோட்ட நிர்வாகமானது தற்போது ஒப்பந்த முறைமையை அமுல்படுத்துகின்றது.”

உலக முதலாளித்துவ பொருளாதாரத்தின் அழ்ந்த நெருக்கடிக்கு மத்தியில், இலங்கை தோட்டக் கம்பனிகள் எதிர் கொள்ளும் நெருக்கடியின் சுமையை தொழிலாளர்கள் மீது சுமத்த முயற்சிப்பதையும், இந்த நெருக்கடியின் மத்தியிலேயே தொழிற்சங்கங்களும் அரசாங்கமும் தோட்ட கம்பனிகளது திட்டத்தை அமுல்படுத்த நேரடியாக ஒத்துழைக்கின்றன என்று சோ.ச.க. பிரதிநிதிகள் அவர்களுக்கு விளக்கினர். சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்ட தொழிலாளர்களது உரிமைகளை அபகரிக்கும் வேலைத்திட்டத்தையே அரசாங்கம் அமுல்படுத்துகின்றது என சுட்டிக்காட்டிய அவர்கள், தொழிற்சங்கங்களில் இருந்து வெளியேறிய தொழிலாளர்கள் சுயாதீன நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்பும் சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழில், சம்பளம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை காக்கும் தொழிலாள வர்க்கத்தின் பொதுப் போராட்டத்தை திட்டமிடவேண்டியதன் அவசியத்தை தெளிவுபடுத்தினர்.

கலந்துரையாடலின் முடிவில், சோ.ச.க. முன்னோக்குப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள விருப்பம் தெரிவித்த அவர்கள், கூட்டத்திற்கு சமூகமளிக்கவும் சோ.ச.க. உடன் ஒருங்கினைந்து நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்பவும் உடன்பட்டனர்.

டிக்கோயா போர்டைஸ் தோட்டத்தை சேர்ந்த இரு பிள்ளைகளின் தாய், தற்போது கிடைக்கும் சம்பளம் வாழ்க்கையை நடத்த சிறிதளவும் போதாது எனக் கூறினார். “அரசியல்வாதிகள் எல்லோரும் பொய்யர்கள். பொய் வாக்குறுதி வழங்கி எம்மை ஏமாற்றுபவர்கள். எமது பலத்த எதிர்ப்பினால் இத் தோட்டத்தில் ஒப்பந்த முறையை அமுல்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர். இதனை செயற்படுத்தினால் எமது சேமலாபநிதி, நம்பிக்கை நிதி என்பன எமக்கு இல்லாமல் போகும். தற்போதுள்ள அற்ப சலுகைகள் கூட அபகரிக்கப்படும்,” என அவர் கூறினார்.

அந்த தோட்டத்தில் ஒரு ஓய்வூதியம் பெற்ற தொழிலாளி, சோ.ச.க முன்வைத்த கருத்தை ஆதரித்தார். தொழிற்சங்கங்களது காட்டிக் கொடுப்பினை தோற்கடித்து தொழிலாளரது உரிமையை பேணவேண்டுமாயின் சோ.ச.க. முன்வைக்கும் நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்புவது அத்தியாவசியமாகும் என அவர் தெரிவித்தார்.

அங்கிருந்த மற்றுமோர் தொழிலாளி, தமிழ் முற்போக்கு கூட்டணியினதும் ஜனநாயக தொழிலாளர் காங்கிரசினதும் தலைவருமான மனோ கனேசன், தொழிலாளர்களை மூடராக்கி பேசுவதாகத் தெரிவித்தார். “ஒப்பந்த முறைக்கு ஆதரவளித்து அவர் கடந்தவாரம் பாராளுமன்றதில் பேசினார். கடந்த தேர்தலின் போது இந்த கூட்டணிக்கு நான் வாக்களித்தேன். எமது வாக்குகளை பெற்று பதவியேற்ற பின், எமக்கு எதிராகப் பேசுகிறார்.”

இன்ஜஸ்றீ தோட்ட ஹோர்ன்சி கீழ் பிரிவின் எஸ். ரஜனிகாந்த், தோட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் கிளைத் தலைவராவர். 15 வருடகாலம் இ.தொ.கா உறுப்பினராக இருந்த அவர், அதன் இளைஞர் அணி தலைவராகவும் செயற்பட்டவர். தே.தொ.சங்கத்தில் சேர்ந்தால் அவருக்கு வீடொன்று தருவதாக அமைச்சர் திகாம்பரம் உறுதிவழங்கியதால் அவர் அதில் சேர்ந்தார். ”எனது குடுப்பத்தில் ஜந்து பேர் உள்ளனர். எமக்கு வீடு கிடையாது. கொட்டில் ஒன்றிலேயே குடியிருக்கிறோம். சமைக்க இடமில்லை. திகாம்பரம் எனக்கு வீடு வழங்குவதாக உறுதி கூறியிருந்தார். அவரது தொழிற்சங்கத்தில் சேர்ந்தோன். இன்னும் சிறிது காலம் பொறுத்துப் பார்ப்போம் அவர் வீடு தருகிறார? இல்லையா? என்று,” என அவர் தெரிவித்தார்.

ஆயிரக்கணக்கானவர்கள் தோட்டப் பகுதியில் வீட்டு வசதி இன்றி இருப்பதையும் ஒரு சிலருக்கு வீடு கட்டி கொடுத்தாலும் தோட்டத் தொழிலாளரது வீட்டுப் பிரச்சனைக்கு முழுமையாக தீர்வு கிட்ட, தோட்டங்களை தொழிலாளர் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்கி, அவ்வருமானத்தில் அவர்களுக்கு வீடு மற்றும் சமூக பிரச்சினைக்கான போதுமான பணம் ஒதுக்கினால் மட்டுமே அது சாத்தியம் எனவும் சோ.ச.க. உறுப்பினர்கள் தெளிவுபடுத்தினர்.

கொந்தரத்து வேலைத்திட்டத்தின் குறிக்கோளை விபரித்த போது “அப்படியானால் அது பெரும் ஆபத்தானது” என அவர் கூறியதுடன் “ஆகவே தொழிற்சங்கங்கள் எங்களுக்கு சொல்வது பொய். நீங்கள் கூறுவது உன்மை என்றால் தொழிற்சங்கத்துக்கு சந்தா பணம் கொடுப்பதை நாம் நிறுத்துவோம். நான் உங்கள் கூட்டத்துக்கு வருவேன்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தமது வாழ் நாள் முழுதும் இத் தோட்டத்துக்காகவே உழைத்ததாக ஒய்வு பெற்ற பெண் தொழிலாளிகள் சிலர் கூறினர்: “நாம் மிகக் கஷ்டத்துடன் சீவிக்கிறோம். பிள்ளைகளுக்கு சரியான தொழில் இல்லாததால் அவர்களால் எங்களைப் பராமரிக்க முடியாதுள்ளது. நாங்கள் ஓய்வு பெறும்வரை இ.தொ.கா. அங்கத்தவர்களாக இருந்தோம். அந்த நாட்களில் தோட்டத்தில் ஓர் மருந்தகம் இருந்தது. இப்போது அதுவும் இல்லை. தனியார் ஆஸ்ப்பத்திரிகளுக்கு செல்ல காசில்லாத காரணத்தினால் நோயுடன் வாழ்கிறோ,” என்றனர்.

தான் தோட்டத்தில் வேலைக்கு சேரும்போது நாளாந்தம் 10 கிலோ கொழுந்து பறித்ததாகவும் தற்போது அது 18 கிலோவாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் ஒரு இளம் பெண் தொழிலாளி தெரிவித்தார். “சம்பள உயர்வு வழங்கப்படும் ஒவ்வொரு தடவையும் பறிக்கும் கொழுந்தின் அளவை அதிகரிப்பர். சம்பள உயர்வு என்று அதனை கூற முடியாது. எனது பெற்றோரைப் போல நானும் இ.தொ.கா. உறுப்பினர். சம்பளத்தில் அங்கத்துவ பணம் வெட்டப்பட்டு நேரடியாக அவர்களது கைகளுக்கு சேரும். எமக்கு எந்தவித வசதியுமே கிடையாது. தண்ணீர் கிடையாது. மலசலகூட வசதிகூட இல்லை. நாமே அமைத்துக் கொண்ட ஒன்றுதான் உள்ளது. தொழிற்சங்க தலைவர்களுக்கு நிர்வாகத்துடன் நெருங்கிய தொடர்பு உண்டு. அவர்களுக்கு எல்லாவித வசதிகளுமே உண்டு. தொழிற்சங்கங்களுக்கு அங்கத்துவ பணம் கொடுப்பதை நிறுத்த நாம் தீர்மானித்துள்ளோம்” என அவர் கூறினார்.

இன்னொரு பெண் தொழிலாளி, கடந்த 25 வருட காலமாக தனக்கு ஒரு வீடுமே கிடைக்கவில்லை என கூறினார். ”இந்த கூடாரத்தை நாமே கட்டிக்கொண்டோம். அதில் தான் வாழ்கிறேம். கடந்தகால போராட்டம் பற்றி எமது பெற்றோர் எமக்கு கூறியுள்ளனர். தொழிற்சங்கங்கள் இப்போது தொழிலாளர்களின் உரிமையை பாதுகாக்க ஒன்றையுமே செய்வதில்லை.”

சோ.ச.க. உறுப்பினர்களுடன் பேசிய பல தொழிலாளர்கள், கூட்டத்தில் கலந்து கொள்ளவும் சோ.ச.க. வேலைத் திட்டம் பற்றி மேலும் கலந்துரையாடவும் இணக்கம் தெரிவித்தனர்.