ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Paris terror attack suspect Salah Abdeslam arrested in Brussels

பாரீஸ் பயங்கரவாத தாக்குதலில் சந்தேகத்திற்குரிய சலாஹ் அப்தெஸ்லாம் புரூசெல்ஸில் கைது செய்யப்பட்டார்

By Alex Lantier
21 March 2016

ஈராக் மற்றும் சிரியாவிற்கான இஸ்லாமிய அரசு போராளிகள் குழு நடத்திய நவம்பர் 13 பாரீஸ் பயங்கரவாத தாக்குதல்களில் சந்தேகத்திற்குரிய ஒருவரான சலாஹ் அப்தெஸ்லாம் வெள்ளியன்று புரூசெல்ஸில் கைது செய்யப்பட்டார். அந்த தாக்குதல்களுக்கு பின்னர் நான்கு மாதங்களாக ஐரோப்பாவில் மிகவும் தேடப்பட்ட நபராக வர்ணிக்கப்பட்ட, புரூசெல்ஸில் இருந்து சிரியாவிற்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்று கருதப்பட்ட அந்த நபர், அதிர்ச்சியூட்டும் வகையில், புரூசெல்ஸின் பலமான கண்காணிப்பில் உள்ள மொலென்பீக் மாவட்டத்தில் அவரது பெற்றோரது அடுக்குமாடி கட்டிடத்திலிருந்து வெறும் ஒரு சில நூறு மீட்டர் தொலைவில் ஒரு வீட்டின் அடித்தளத்தில் இருந்தார்.

பிரெஞ்சு பொலிஸ் ஆதார நபர்களின் தகவல்படி, நவம்பர் 13 தாக்குதல்களுக்கு திட்டமிடுவதில் உடந்தையாய் இருந்ததற்காக ஏற்கனவே கைது செய்யப்பட்ட சுமார் 11 பேர் "கூட்டத்தை" இலக்கில் வைத்து தேடுவதற்காக, பொலிஸ் அதிகாரிகள், மார்ச் 15 இல், புரூசெல்ஸின் ஃபாரெஸ்ட் மாவட்டத்தின் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை அடைந்திருந்ததனர். இருப்பினும் அவர்கள் துப்பாக்கி தாக்குதலையும் மற்றும் அதற்கு அடுத்து நிகழவிருந்த துப்பாக்கிசூட்டையும் எதிர்கொண்டபோது பொலிஸ்காரர்கள் ஆச்சரியமடைந்தனர், அந்த தாக்குதலில் 35 வயது அல்ஜீரியரான மொஹமத் பெல்கைய்ட் ஒரு பொலிஸ் துப்பாக்கிதாரியால் கொல்லப்பட்டார். அந்த துப்பாக்கி சண்டையின் போது இரண்டு பேர் மொட்டை மாடிக்குச் சென்று, அங்கிருந்து சுட்டதில் நான்கு பொலிஸ்காரர்கள் காயம் அடைந்தனர்.

பெல்கைய்ட் பெல்ஜியத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்தார், அவரது பெயர் மார்ச் 10 இல் ஸ்கை நியூஸ் இல் பிரசுரிக்கப்பட்ட 22,000 ISIS போராளிகளது பட்டியலில் இடம் பெற்றிருந்தது. இருப்பினும், பெல்ஜிய நீதித்துறை மந்திரி கொயன் ஜீன்ஸ் VRT செய்திகளுக்குக் கூறுகையில், இது பெல்ஜிய பயங்கரவாத-எதிர்ப்பு அமைப்பான OCAM (அச்சுறுத்தல்கள் ஆய்வுக்கான ஒருங்கிணைப்பு அமைப்பு) அவரைக் கண்காணித்து வந்தது என்பதை அர்த்தப்படுத்தாது என்றார்.

பெல்கைய்ட் கொல்லப்பட்ட அந்த அடுக்குமாடி குடியிருப்பில் அப்தெஸ்லாம் இன் கைரேகைகள் கண்டறியப்பட்டன, மேலும் அத்தாக்குதல்களின் போது அக்கட்டிடத்திலிருந்து தப்பியோடிய இரண்டு நபர்களது செல்பேசிகளை பொலிஸ் கண்காணிக்கத் தொடங்கியது, அவர்களில் ஒருவர் தான் அப்தெஸ்லாம். பொலிஸ் உடனான அந்த எதிர்தாக்குதலின் போதோ அல்லது அதற்குப் பின்னரோ அப்தெஸ்லாம் அவரது செல்பேசியையோ அல்லது சிம் கார்டையோ உதறிவிடவில்லை, மாறாக அவரது தொலைபேசி மூலமாக பொலிஸ் அவரைக் கண்காணிக்க அனுமதிக்கும் வகையில் அவற்றைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பின்னர் அப்தெஸ்லாம் இன் சகோதரர் ப்ரஹிம் இன் மார்ச் 17 இறுதிச்சடங்கு வந்தது, இவர் பாரீஸில் தற்கொலை குண்டுவெடிப்பு ஒன்றை நடத்தி இறந்திருந்தார். அந்த இறுதிச்சடங்கில் கலந்து கொண்டவர்களில் ஒருவர், அபெத் அபெர்கன், இவர் ஒரு இஸ்லாமியராக பொலிஸ் கண்காணிப்பின் கீழ் இருந்தார் மற்றும் அந்த இறுதிச் சடங்கின் போதே எங்கே ஒளிவதென்று கேட்டு அப்தெஸ்லாம் இடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பைப் பெற்றிருந்தார். அப்தெஸ்லாம் அவரது தாயாரின் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒளியலாம் என்று அபெர்கன் கூறியதாக கூறப்படுகிறது, அங்கே தான் அடுத்த நாள் பொலிஸ் நடத்திய ஒரு வேட்டையில் அப்தெஸ்லாம் காலில் சுடப்பட்டு, பிடிக்கப்பட்டார்.

அவர் பிடிக்கப்பட்டதும், அப்தெஸ்லாம் அவர் பெயரை கூறி சத்தம் போட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன; அவரது கைரேகைகளை ஆராய்ந்த பின்னர் விரைவிலேயே பொலிஸ் அவரது அடையாளத்தை உறுதிப்படுத்தியது.

அப்தெஸ்லாம் இன் வழக்கறிஞர் ஸ்வென் மரி கூறுகையில், அவர் பொலிஸிற்கு ஒத்துழைத்து வருவதாகவும், ஆனால் பிரெஞ்சு அதிகாரிகள் வழங்கிய ஓர் ஐரோப்பிய கைது உத்தரவாணையின் அடிப்படையில் அவரைப் பிரான்சிடம் ஒப்படைக்கும் முயற்சிகளை எதிர்ப்பதாக தெரிவித்தார். “அவரை ஒப்படைக்குமாறு பிரான்ஸ் கோருகிறது. பிரான்சிடம் ஒப்படைப்பதை நாங்கள் எதிர்ப்போம் என்பதை உங்களுக்கு நான் தெரியப்படுத்தி விடுகிறேன்,” என்று மரி தெரிவித்தார்.

பொலிஸ் மற்றும் உளவுத்துறை அமைப்புகளுக்கு தெரியாமல் அப்தெஸ்லாம் எவ்வாறு நவம்பர் 13 தாக்குதல்களை நடத்த தயாரிப்பு செய்தார், அல்லது அத்தாக்குதல்களுக்குப் பின்னர் தப்பியோடி வந்து நான்கு மாதங்களாக புரூசெல்ஸில் பதுங்கி இருக்க முடிந்தது என்பது முற்றிலும் தெளிவின்றி உள்ளது.

உளவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், ஒரு பலமான கண்காணிப்பு கொண்ட நகரில் கூட பாதுகாப்பு படைகளிடம் இருந்து தப்பிக்க அப்தெஸ்லாம் வெளிப்படையாக ISIS இன் இஸ்லாமிய தொடர்புகளுக்குப் பின்புலத்தில் பரந்த உதவிகளைப் பெற்றிருந்ததாக தெரிவித்தனர். பெல்ஜிய வெளியுறவுத்துறை மந்திரி டிடியே ரெய்ன்டர்ஸ் கூறுகையில் அப்தெஸ்லாம் க்கு "நண்பர்கள், மற்றும் குற்றகரமான வலையமைப்புகளில் இருந்தும்" உதவி கிடைத்து வந்தது என்று தெரிவித்தார்.

“நான்கு மாதகாலம் தப்பிப் பிழைத்திருக்க, அவர் பல்வேறு வலையமைப்புகளது ஆதரவை சார்ந்திருந்தார். அவருக்கு குற்றகரமான வட்டாரங்களில் நண்பர்கள் இருக்கிறார்கள், தீவிர இஸ்லாமிய குழுக்களிலும் ஆட்கள் இருந்தார்கள், பின்னர் அவரது குழந்தை பருவத்து மற்றும் அண்டைஅயலாரும் அறிமுகமானவர்களும் உதவிக்கு இருந்தார்கள்,” என்று பிரெஞ்சு எல்லை பாதுகாப்பு இயக்குனரகத்தின் முன்னாள் பயங்கரவாத-எதிர்ப்பு பிரிவு தலைவர் லூயி காப்ரியோலி AFP க்குத் தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும் இறுதி ஆய்வுகளில் இந்த விசாரணைகளில் இருந்து எழும் மத்திய பிரச்சினையே சிரியா மற்றும் ஐரோப்பாவிலும் கூட நேட்டோ சக்திகளது ஏகாதிபத்திய போர்கள் வகித்த பாத்திரமாகும். நவம்பர் 13 தாக்குதல்களுக்கு முந்தைய ஆண்டிலேயே, அப்தெஸ்லாம் ஐரோப்பிய அதிகாரிகளுக்கு நன்கு பரிச்சயமானவராக இருந்தார், அவர்கள் இஸ்லாமிய பயங்கரவாத சக்திகளுடன் அவருக்கு இருந்த தொடர்புகளை ஆவணப்படுத்தி இருந்தனர். ஆவர் ஜனவரி 2015 இல் துருக்கிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார், அவர்கள் அவர் சிரியாவிற்கு பயணிப்பதை தடுத்து பெல்ஜியத்திற்கு திருப்பி அனுப்பி வைத்தனர், அதன் பின்னர் பெல்ஜிய உளவுத்துறை அவரை ஓர் அச்சுறுத்தலாக அடையாளம் கண்டது.

இருந்தபோதினும் துருக்கியால் அனுப்பப்பட்ட பின்னரும் கூட, அப்தெஸ்லாம் ஐரோப்பா எங்கிலும் பயணிக்க அனுமதிக்கப்பட்டார். துருக்கியில் ISIS உடன் தொடர்பில் இருந்த அஹ்மத் தமானி உடன் அவர் பயணித்ததால், ஆகஸ்ட் 4 இல், கிரேக்க அதிகாரிகள் அவரை பாட்ராஸில் விசாரணைக்கு உட்படுத்தினர். அக்டோபரில், மௌனிர் அஹ்மத் அலாஜ் மற்றும் அமைன் சௌக்ரி இன் பெயரில் பொய்யான பெல்ஜிய மற்றும் சிரிய ஆவணங்களை வைத்திருந்த சந்தேகத்திற்குரிய மற்றொருவருடன் அவர் பயணித்ததால், அவர் உல்ம் இல் ஜேர்மனி அதிகாரிகளது விசாரணைக்கு உள்ளானார்.

La Dernière Heure மற்றும் Het Latste Nieuws இல் வெளியான சமீபத்திய மற்றொரு செய்தியின்படி, 2014 இல் மொலென்பீக் இல் ஒரு பொலிஸ் உளவாளி, அப்தெஸ்லாம் சகோதரர்கள் "முழுமையாக தீவிரமடைந்திருப்பதாகவும்", சிரியாவில் சண்டையிடுவதற்கு செல்லத் தயாரிப்பு செய்து வருவதாகவும் மற்றும் தாக்குதல்களை நடத்த உள்ளதாகவும் பெல்ஜிய மத்திய பொலிஸ் அதிகாரிகளை எச்சரித்தார். அந்த அறிக்கை விடுமுறையில் இருந்த ஒரு பொலிஸ் உளவாளியிடம் இருந்து அவரது மேலதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது, ஆனால் அவர்கள் அந்த தகவல் போதுமான அளவுக்கு உறுதியாக இல்லை என்று கூறி, அதன் மீது ஒன்றும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இருப்பினும் அப்தெஸ்லாம் ஒளிவுமறைவின்றி நவம்பர் 13 தாக்குதல்களுக்கு தயாரிப்பு செய்து வந்த ஏனைய ISIS பிரமுகர்களுடன் சேர்ந்து வெளிப்படையாக பிரான்ஸ் க்குப் பயணிக்க அனுமதிக்கப்பட்டார். அவர்களில் அப்தெல்ஹமீத் அபௌத் உம் உள்ளடங்கி இருந்தார். ஒரு பெல்ஜியரான இவர் 2013 இல் அந்த போராளிகள் குழுவில் இணைந்த பின்னர் ISIS இன் நன்கறியப்பட்ட பேஸ்புக் செய்தி தொடர்பாளர்களில் ஒருவராக மாறி இருந்தார்.

ஒரு தற்கொலை தாக்குதல் நடத்த அப்தெஸ்லாம் பரிசீலித்து வந்தார், ஆனால் பின்னர் அதை நிராகரித்துவிட்டார் என்று தெரிகின்ற போதினும், அவர் எங்கே இருந்தார், நவம்பர் 13 தாக்குதல்களின் போது அவர் என்ன பாத்திரம் வகித்தார் என்பது குறித்து முன்னுக்குப் பின் முரணான செய்திகள் உள்ளன. பாரீஸ் தாக்குதல்களின் போது அவரும் உடனிருந்தார் என்று அவரது வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் பாரீஸில் இருந்து புரூசெல்ஸ் வரையில் அவரது செல்பேசியை கண்காணித்து வந்து, அப்தெஸ்லாமை வேட்டையாடியதும், ஒட்டுமொத்த புரூசெல்ஸ் நகரமும் அதற்குப்பின்னர் உடனடியாக கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. அவர் பிடிக்கப்பட்ட விபரங்கள் தெளிவுபடுத்துவதைப் போல, அவர் ஒளிந்திருந்ததாலும், பொலிஸால் கண்காணிக்கப்பட்டு வந்த இஸ்லாமிய அனுதாபிகளுடன் அவர் தொலைபேசியில் பேசி வந்தார்—அதாவது அதிகாரிகளிடம் இருந்து மறைந்திருப்பதை போன்ற வழியில் அவர் நடந்து கொள்ளவே இல்லை.

அப்தெஸ்லாம் இன் கைது நடவடிக்கைக்கு இட்டுச் சென்ற தொடர்ச்சியான துல்லிய சம்பவங்கள் என்னவாக இருந்தாலும், இந்த நடவடிக்கை, ஒட்டுமொத்தமாக, எதை அடிக்கோடிடுகிறது என்றால் ஐரோப்பாவில் உள்ள ISIS கையாட்கள் உத்தியோகபூர்வமாக உடந்தையாய் இருந்திருக்கார்கள் என்பதே இந்த தாக்குதல்களுக்கு பின்னால் இருக்கும் முக்கிய காரணியாகும். மத்திய கிழக்கில் இருந்து தப்பியோடி வரும் மில்லியன் கணக்கான அகதிகள் ஒரு மூர்க்கமான ஒடுக்குமுறையை மற்றும் ஐரோப்பாவில் இருந்து பாரியளவில் வெளியேற்றப்படும் அச்சுறுத்தலை முகங்கொடுக்கின்ற நிலையில், ஜனவரி சார்லி ஹெப்டோ தாக்குதல்களுக்கு பின்னர் பிரான்சில் உள்ள முஸ்லீம்கள் தீவிர ஒடுக்குமுறையை முகங்கொடுக்கையில், ஐரோப்பாவில் உள்ள ISIS இன் தலைவர்கள் மற்றும் ஒத்துழைப்பாளர்களுக்கு தொடர்ந்து சலுகைகளை அனுபவித்து வருகிறார்கள்.

இது சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல்-அசாத் ஆட்சியைக் கவிழ்க்க ஒரு போரில் இஸ்லாமிய போராளிகள் குழுக்களை ஆயுதமேந்த செய்வதில், பிரான்ஸ் மற்றும் அனைத்து நேட்டோ சக்திகளும் பின்பற்றிய வெளியுறவு கொள்கையில் வேரூன்றி உள்ளது.

நவம்பர் 13 தாக்குதல்களுக்கு முன்னதாக, அசாத்திற்கு எதிரான போரில் ISIS பலமான சக்தியாகும் என்று குறிப்பிட்டு, சிரியாவில் ISIS மீது பிரான்ஸ் குண்டுவீசாது, ஆனால் ஈராக்கில் மட்டும் குண்டுவீசும் என்ற முடிவை பிரெஞ்சு அதிகாரிகள் நியாயப்படுத்தினர்.

அதேவேளையில் “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்றழைக்கப்பட்டது உள்நாட்டில் பொலிஸ்-அரசு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதை நியாயப்படுத்த எரிச்சலூட்டும் வகையில் பயன்படுத்தப்படுகிறது. எதிர்பார்த்தவாறே, அதிகாரிகள் அப்தெஸ்லாம் இன் கைது நடவடிக்கைக்கு விடையிறுப்பு காட்டி உள்ளனர். பெல்ஜிய பிரதம மந்திரி சார்லஸ் மிஷேல், நவம்பர் 13 க்குப் பின்னர் இருந்து தீவிரப்பட்ட தொடர்ச்சியான தேடல்கள் மற்றும் கட்டுப்பாட்டுக்கள் நிறுத்தப்பட்டதை தொடர பொலிஸிற்குக் கூடுதல் அதிகாரங்களை ஒப்படைப்பதற்கு ஒரு நியாயப்பாடாக, அதை "பயங்கரவாதத்திற்கு எதிரான வெற்றியாக" பாராட்டினார்.

பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் கூறுகையில், “சலாஹ் அப்தெஸ்லாம் அந்த அமைப்பிலும் மற்றும் அத்தகைய தாக்குதல்கள் நடத்துவதிலும் நேரடியாக சம்பந்தப்பட்டிருந்தார். … இந்த கைது நடவடிக்கை ஒரு முக்கிய கட்டம் என்றாலும், இந்த கதையில் இதுவே இறுதி தீர்வு கிடையாது, ஏனென்றால் அங்கே ஏற்கனவே கைது நடவடிக்கைகள் நடத்தப்பட்டுள்ளன. மேலும் அங்கே இன்னும் நிறைய இருக்கும் ஏனென்றால் அந்த வலையமைப்பு பெல்ஜியத்தில், பிரான்சில், மற்றும் ஐரோப்பாவின் ஏனைய நாடுகளிலும் பெரிதும் பரவலாக இருக்கிறது என்பதை நாம் அறிவோம்,” என்றார்.