ஏனைய மொழிகளில்

For an active boycott of the Brexit referendum!

Brexit சர்வஜன வாக்கெடுப்பை செயலூக்கத்துடன் புறக்கணிப்போம்!

Statement of the Socialist Equality Party, British section of the International Committee of the Fourth International
29 February 2016

1. ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்ந்து அங்கத்துவம் வகிப்பதா என்பது தொடர்பான ஜூன் 23 சர்வஜன வாக்கெடுப்பு, மிகப்பரந்த சர்வதேச முக்கியத்துவம் கொண்ட பிரச்சினைகளை எழுப்புகிறது. இதன் முடிவுகள் ஐக்கிய இராச்சியத்தில் இருக்கும் தொழிலாளர்களுக்கு மட்டுமல்லாமல், அதன் கரைகளுக்கு அப்பால் தொலைதூரத்தில் இருக்கின்ற தொழிலாளர்களுக்கும் தாக்கங்களைக் கொண்டதாக இருக்கும்.

2. தொழிலாளர்களும் இளைஞர்களும் இந்த சர்வஜன வாக்கெடுப்பை புறக்கணிக்க வேண்டும் என்று சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது. அங்கத்துவம் தொடர வேண்டும் மற்றும் அதிலிருந்து விலக வேண்டும் என்ற இரண்டு பிரச்சாரங்களுமே, பெரும் சிக்கன நடவடிக்கைகளுக்கும், மிருகத்தனமான புலம்பெயர்ந்தோர்-எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கும் மற்றும் தொழிலாளர்களது உரிமைகளின் அழிப்புக்கும் ஆதரவாய் நிற்கின்ற தேசியவாத சக்திகளால் தலைமை கொடுக்கப்படுகின்றன. அவற்றிடையேயான வித்தியாசங்கள், பொருளாதார பெருமந்தம், தீவிரமடைந்து செல்லும் இராணுவவாதம், போர் ஆகிய நிலைமைகளின் கீழ் ஐரோப்பிய மற்றும் சர்வதேச போட்டியாளர்களுக்கு எதிராக பிரிட்டிஷ் முதலாளித்துவத்தின் நலன்களை மிகச்சிறந்த வகையில் எப்படிப் பாதுகாக்கலாம் என்பது பற்றியே உள்ளது.

3. இந்த சக்திகளுக்கு எதிரான பிரிட்டிஷ் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் போராட்டத்தின் அபிவிருத்திக்கான களத்தை இந்தப் புறக்கணிப்பு தயாரிப்பு செய்கிறது. இந்த சர்வஜன வாக்கெடுப்பானது, பிரிட்டிஷ் மற்றும் ஐரோப்பிய முதலாளித்துவத்தின் ஆழமடைந்து செல்கின்ற உயிர்வாழ்க்கை நெருக்கடியில் ஒரேயொரு அத்தியாயம் மட்டுமே என்பதை அம்பலப்படுத்தக் கூடிய கண்டம்-முழுவதிலுமான தொழிலாள வர்க்கத்தின் ஒரு எதிர்த்தாக்குதலின் பகுதியாக இத்தகையதொரு இயக்கம் அபிவிருத்தி செய்யப்பட்டாக வேண்டும்.

4. “தொடர வேண்டுமா” அல்லது “விலக வேண்டுமா” என்று வாக்காளரின் முன் வைக்கப்படுகின்ற கேள்வியானது இந்த இரண்டுமே தொழிலாள வர்க்கத்திற்கு முன்வைக்க கூடிய தாக்கங்கள் குறித்து புரிந்துகொள்ள வேண்டிய ஒவ்வொன்றையும் மறைத்து விடுகின்றது. பிரதமர் டேவிட் கேமரூன் ஐக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சியின் (UKIP) புலம்பெயர்ந்தோர்-விரோத, வெளிநாட்டவர் மீதான அச்சத்தை பயன்படுத்தி உத்தியோகபூர்வ அரசியலை மேலதிகமாய் வலது நோக்கி நகர்த்த முனைந்து கொண்டிருக்கும் அதே வேளையில், அக்கட்சிக்கு ஆதரவான டோரிக்களிடம் மேலதிகமாய் ஆதரவை இழந்து கொண்டிருப்பதைத் தடுத்து நிறுத்தும் பொருட்டு 2013 இல் திட்டமிட்ட ஒரு சூழ்ச்சியின் விளைபொருளாகவே இந்த சர்வஜன வாக்கெடுப்பு முன்நிற்கிறது. மற்ற ஐரோப்பியத் தலைவர்களுடன் கேமரூன் உடன்பட்ட நான்கு கோரிக்கைகளின் அடிப்படையில் அங்கத்துவம் தொடர வேண்டுமா அல்லது விலக வேண்டுமா என்ற ஒரு நிலையை எடுக்க வாக்காளர்கள் கேட்கப்படுகின்றனர்.

5. இத்தகையதொரு வாக்கெடுப்பினால் எந்த ஒரு நல்ல விளைவும் கிட்ட முடியாது. எந்தத் தரப்பு வென்றாலும், தொழிலாள வர்க்கம்தான் விலைகொடுக்கப் போகிறது. இது “குறைந்த தீமை”யைத் தெரிவு செய்வதான பிரச்சினை அல்ல – இரண்டு தெரிவுகளுமே சம அளவில் உளுத்துப்போனவையே. தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு சுயாதீனமான குரல் எதுவும் பதியப்படுகின்ற வாய்ப்பு திட்டமிட்டு அகற்றப்பட்டிருக்கிறது. அங்கத்துவம் தொடர வேண்டும் வாக்குகளின் அர்த்தம் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிற்போக்குத்தனமான ஸ்தாபகங்களை வழிமொழிவது என்பது மட்டுமல்ல. ஐரோப்பிய ஒன்றியத்தில் ஐக்கிய இராச்சியம் தொடர்வதற்கான அடிப்படையாக கேமரூனால் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட ஷரத்துகள், அவரது அரசாங்கத்தின் புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதல்களுக்கும் அத்துடன் ஐக்கிய இராச்சியத்தின் வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்களின் குற்றவியல் நடவடிக்கைகளை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கும் ஒப்புதலளிக்கிறது. ஆயினும், விலகவேண்டும் வாக்குகளானவை, பிரிட்டிஷ் “இறையாண்மை” மற்றும் “சுதந்திரம்” ஆகிய — தொழிலாள வர்க்கத்தின் மீதான தீவிரப்பட்ட சுரண்டலுக்கும் புலம்பெயர்வின் மீது இன்னும் கடுமையான ஒடுக்குமுறைக்கும் இருக்கக்கூடிய அத்தனை தடைகளையும் அகற்றுவதற்கான அடைமொழிவார்த்தைகள் — கோரிக்கைகளுக்கான ஒரு வழிமொழிவாக பற்றிக்கொள்ளப்படும்.

6. பிரிட்டனில் மட்டுமல்லாது, ஐரோப்பா முழுவதிலும் மற்றும் உலகெங்கிலும் இருக்கும் தொழிலாளர்களது நலன்களை பாதுகாக்கும் கொள்கையை வகுப்பதே சோசலிச சமத்துவக் கட்சியின் பொறுப்பாக இருக்கிறது. ஒவ்வொரு வாக்கெடுப்பும் அல்லது கருத்துக்கணிப்பும் அதன் குறிப்பிட்ட உள்ளடக்கத்தில் மதிப்பீடு செய்யப்பட வேண்டும். அப்போதும் கூட, எடுக்கப்படக் கூடிய தந்திரோபாய அணுகுமுறை என்பது எப்போதும் கோட்பாட்டுரீதியான கருத்துக்களாலேயே தீர்மானிக்கப்படுவதாய் இருக்க வேண்டும். புறக்கணிப்புக்கான SEP இன் அழைப்பு மேலோட்டமாக செய்யப்பட்டதல்ல, அராஜகவாதக் குணம்கொண்ட அரசியல் தவிர்ப்புவாதத்துடன் அதற்கு எந்தத் தொடர்பும் கிடையாது. காலவரையறை அற்ற ஒரு கோட்பாடாகவும் அது முன்வைக்கப்படவில்லை. ஜூன் 23க்குப் பின்னர், பிரிட்டனில் மட்டுமல்லாது, ஐரோப்பா முழுமையிலும் தவிர்க்கவியலாது எழவிருக்கின்ற கடுமையான வர்க்க மோதல்களுக்கு தொழிலாளர்களையும் இளைஞர்களையும் தயாரிப்பு செய்ய வேண்டியிருப்பதன் அவசியத்தால் தூண்டப்பட்டிருக்கின்ற ஒரு கொள்கையாகும் இது.

ஐரோப்பிய ஒன்றியத்தை எதிர்ப்போம்

7. SEP ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சமரசமற்ற குரோதம் கொண்டதாகும், ஆனால் எங்களது எதிர்ப்பு இடதின்பக்கமிருந்தே தவிர, வலதின்பக்கமிருந்து அல்ல. ஐரோப்பாவின் உண்மையான மற்றும் அவசியமான ஒருமைப்பாட்டை எட்டுவதற்கான ஒரு சாதனமாக ஐரோப்பிய ஒன்றியம் இல்லை. இக்கண்டத்தை நிதிச்சந்தைகளின் கட்டளைகளுக்கு ஆட்படுத்துகின்ற ஒருபொறிமுறையாகவும், போட்டி அரசுகள் தங்களுக்குள் மோதிக்கொண்டு தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக சதிசெய்கின்றதொரு மன்றமாகவும் மட்டுமே அது இருக்கிறது. அதனால்தான் ஐரோப்பிய ஒன்றியமானது, குறிப்பாக 2008 இன் நிதிப்பொறிவுக்குப் பின்னர், தனது முந்தைய சமூக ஜனநாயக மற்றும் தாராளவாத நடிப்புகளை எல்லாம் மூட்டைகட்டிய அதேநேரத்தில், ஆளும் உயரடுக்கு அது உருவாக்கியிருந்த அதே நெருக்கடியை பயன்படுத்தி ஒரு சமூக எதிர்ப்புரட்சியை நடத்துவதற்கு மேற்கொண்ட முயற்சிகளுக்கும் வழிவகை ஏற்படுத்திக்கொடுத்தது. வங்கிகளுக்கும் ஊகவணிகர்களுக்கும் பில்லியன் கணக்கான யூரோக்கள் கையளிக்கப்பட்டிருக்கின்ற நிலையில், உழைக்கும் மக்கள் வேலைகள், ஊதியங்கள் மற்றும் சமூக நிலைமைகளிலான முடிவில்லாத வெட்டுகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கியின் உத்தரவின் பேரில் கிரீசும் மற்ற நாடுகளும் திவாலடையச் செய்யப்பட்டிருக்கின்றன என்பதோடு அந்நாடுகளது உழைக்கும் மக்கள் பரம ஏழைகளாக ஆக்கப்பட்டிருக்கின்றனர்.

8. தேசியவாதம் மற்றும் வெளிநாட்டார் அச்சம் ஆகியவற்றின் மிகநச்சுத்தனமான வடிவங்கள் திட்டமிட்டு தூண்டிவிடப்படுவதுடன் கைகோர்த்து இது நடந்துகொண்டிருக்கிறது. சுவாஸ்திகா மற்றும் இராணுவ சப்பாத்து ஆட்சிகளை கண்டம் “ஒருபோதும் மீண்டும்” காணப்போவதில்லை என்று ஐரோப்பிய அரசாங்கங்கள் பிரகடனம் செய்த பலதசாப்தங்களின் பின்னர், சிக்கன நடவடிக்கைகளால் உருவாக்கப்பட்ட சமூகநெருக்கடிக்கு பலிக்கடாக்களை வழங்குவதற்கும் அதி-வலது மற்றும் பாசிச இயக்கங்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் முஸ்லீம்-விரோத மற்றும் புலம்பெயர்ந்தோர்-விரோத பிரச்சாரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் உத்தரவின்பேரில், எல்லை வேலிகளும் வதைமுகாம்களும் எழுப்பப்படுகின்ற நிலையில், மத்திய கிழக்கிலும் வடக்கு ஆபிரிக்காவிலும் ஏகாதிபத்திய சக்திகளால் உருவாக்கப்பட்ட போர்களுக்கும், துன்புறுத்தல்களுக்கும் மற்றும் துயரத்திற்கும் தப்பியோடி அலையலையாய் திரண்டு வருகின்ற நிர்க்கதியான மனிதகுலம், ஐரோப்பிய கோட்டையின் கதவுகள் அடித்து மூடப்படுவதைக் காண்கிறது.

9. இன்று புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எதிராக ஏவப்படுகின்ற நடவடிக்கைகள் நாளை ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்கும் எதிராக திருப்பப்படும். உயர்ந்து செல்லும் சமூக சமத்துவமின்மைக்கும் பெருகிச் செல்லும் மக்கள் கோபத்திற்குமான பதிலிறுப்பாக, ஆளும் வர்க்கம் எதேச்சாதிகார ஆட்சி வடிவங்களுக்கு தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறது. “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்ற பேரில் அது பாதுகாப்பு எந்திரத்தின் அதிகாரங்களை அதிகரித்துக் கொண்டிருக்கிறது, பாரிய கண்காணிப்பை தீவிரப்படுத்திக் கொண்டிருக்கிறது மற்றும் ஜனநாயக உரிமைகளை அழித்துக் கொண்டிருக்கிறது.

10. ஐரோப்பிய ஒன்றியம் ஒரு முன்னணிப் பாத்திரம் வகித்த உக்ரேனில் நடந்த வலது-சாரி ஆட்சிக்கவிழ்ப்பானது ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-தலைமையிலான ஆத்திரமூட்டல்களின் பகுதியாக கண்டத்தை மறுஇராணுவமயமாக்குவதை நியாயப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவிற்கும் மற்றும் பால்டிக் அரசுகளுக்கும் ஆயிரக்கணக்கில் துருப்புகளை அனுப்புவதற்கு நேட்டோ தயார்நிலையில் இருக்கின்ற நிலையில், கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியிலும் கருங்கடல் பகுதியிலும் இப்போது மிக அடிக்கடி கடல்யுத்த ஒத்திகைகள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்கு சுமார் 25 ஆண்டுகளின் பின், ரஷ்யாவுக்கு எதிரான “கலப்பு யுத்தத்திற்கான” தயாரிப்புகள் என்று நேட்டோ பகிரங்கமாக விவரிக்கின்ற ஒன்றின் பகுதியாக ஐரோப்பாவில் தனது அணு ஆயுத நிலைநிறுத்தத்தை அமெரிக்கா விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறது.

11. அமெரிக்க மூர்க்கத்தனத்தை தமது சொந்த இராணுவவாத அபிலாசைகளைப் பூர்த்திசெய்வதற்கான ஒருவாய்ப்பாக கருதி ஐரோப்பிய அரசாங்கங்கள் அதற்கு முழுஉடந்தையாக இருக்கின்றன. இந்த ஒவ்வொரு அரசாங்கமும் இராணுவச் செலவினத்தை அதிகப்படுத்த முனைகின்ற அதேநேரத்தில் தொழிலாளர்களது வாழ்க்கைத்தரங்கள் மீது மிருகத்தனமாக தாக்குதல் நடத்துகின்றன. ஒரு ஐரோப்பிய மற்றும் உலக இராணுவ சக்தியாக ஜேர்மனியின் பாத்திரத்தை மீட்சி செய்வதற்கான முனைப்பின் பகுதியாக சிரியாவில் இராணுவத்தை ஈடுபடுத்துவதற்கு ஆதரவாக பேர்லின் முடிவுசெய்த அதேநேரத்தில், சிரியாவில் குண்டுவீச பிரிட்டிஷ் நாடாளுமன்றம் முடிவெடுத்தமையும் நடந்தேறியது. மத்திய கிழக்கிலும் வடக்கு ஆபிரிக்காவிலும் தமது ஏகாதிபத்திய நலன்களை வலியுறுத்துவதற்காக அமெரிக்காவும் ஐரோப்பாவும் கரம்கோர்த்து செயல்படுகின்றபோதிலும்கூட, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களுக்கு இடையே, அதேபோல லண்டன், பேர்லின் மற்றும் பாரிஸுக்கு இடையே பதட்டங்கள் பெருகியிருக்கின்றன. இந்தப் பதட்டங்கள் ஒட்டுமொத்த கண்டத்தையும் இராணுவ மோதலுக்குள் அமிழ்த்துவதற்கு அச்சுறுத்துகின்றன.

அங்கத்துவம் தொடரவேண்டும் பிரச்சாரம்

12. அங்கத்துவம் தொடர வேண்டும் பிரச்சாரத்திற்கு எவ்வித ஆதரவும் வழங்கப்படக்கூடாது. ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவத்தை சர்வதேசரீதியாக போட்டிபோடுவதற்கான —கண்டம் முழுவதிலும் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களுக்கு எதிரான ஒரு தொடர்ச்சியான தாக்குதலின் ஊடாகத்தான் என்பதில் குறைச்சலில்லை— தங்களது திறனுக்கு ஒரு அத்தியாவசியமாக கருதுகின்ற பிரிட்டனின் பெருநிறுவன உயரடுக்கின் பெரும்பகுதியின் ஆதரவை இந்தத் தெரிவு கொண்டுள்ளது. பிரிட்டன் வெளியேறினால் ஐரோப்பிய ஒன்றியம் கட்டவிழ்வதற்கான வினையூக்கியாக அது செயலாற்றி நேட்டோ கூட்டணியையும் இராணுவவாதம் மற்றும் போர் என்ற அதன் திட்டநிரலையும் சங்கடத்திற்குள்ளாக்கக் கூடும் என்று அஞ்சுகின்ற அமெரிக்கா மற்றும் முக்கிய ஐரோப்பிய சக்திகளும் இந்தத் தெரிவை ஆதரிக்கின்றன. இராணுவப் படைகளின் முன்னாள் தலைவர்கள் பன்னிரண்டு பேர் அங்கத்துவம் தொடர வேண்டும் பிரச்சாரத்திற்கு ஆதரவாய் கையெழுத்திட்ட ஒரு கடிதத்தில் “ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டனின் பாத்திரமானது நேட்டோவின் பாகமாக நாம் அனுபவித்து வருகின்ற பாதுகாப்பினை வலுப்படுத்துகிறது” என்பது வலியுறுத்தப்பட்டுள்ளதுடன் ரஷ்யாவின் “மூர்க்கத்தன”த்தை எதிர்கொள்வதற்கான அவசியமும் அதில் மேற்கோளிடப்பட்டுள்ளது.

13. டோரி கட்சி ஒரு உட்கட்சி போராட்டத்தின் நிலையில் இருக்கையில், தொழிற் கட்சியும் தொழிற்சங்க காங்கிரசும் (TUC) ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவத்தைப் பாதுகாப்பதற்காய் அணிதிரண்டிருக்கின்றன. ஆளும் வர்க்கத்தால் தங்களுக்கு உத்தரவிடப்படாத எந்த ஒரு நிலைப்பாட்டையும் எடுப்பதற்கு இயல்பாகவே திராணியேதும் இந்த அமைப்புகளிடம் இல்லை என்பதையே இது ஊர்ஜிதப்படுத்துகிறது. ஜெரிமி கோர்பின் தொழிற் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலமாக இந்த உண்மையில் அணுவளவேனும் மாற்றமேதும் ஏற்பட்டு விடவில்லை. அங்கத்துவத்திலிருந்து விலக வேண்டும் பிரச்சாரத்தின் நச்சுத்தனமான பேரினவாதத்தை வெறுப்பவர்களுக்கு சற்று ஏற்புடையதாக இருக்கும்படி செய்கின்ற ஒரு முயற்சியில் ஒரு தொழில்முறை பொய்யராகவும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான வக்காலத்துவாதியாகவும் கோர்பின் முன்நிற்கிறார்.

14. ஐரோப்பிய ஒன்றியம் செல்வம் மற்றும் வேலைகளது ஒரு ஆதாரவளம் என்றும் ஒரு “சமூக ஐரோப்பாவாக” அது சீர்திருத்தப்பட முடியும் என்றும் கோர்பின் கூறுகிறார். கிரீசிலும், அயர்லாந்திலும், ஸ்பெயினிலும் மற்றும் போர்ச்சுக்கலிலும் ஐரோப்பிய ஒன்றியம் இழைத்திருக்கும் சமூகக் குற்றங்களை இது ஓசையெழுப்பாமல் கடந்து செல்வது மட்டுமல்ல, கேமரூன் அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான எந்தப் போராட்டத்திற்கான பொறுப்பையும் புரூசேல்ஸ் பக்கம் விட்டுவிடலாம் என்பதான பிரமையை ஊக்குவிப்பதன் மூலம் தொழிற் கட்சியும் TUCம் சிக்கன நடவடிக்கை எதிர்ப்புப் போராட்டத்தை நடத்துவதற்கு மறுப்பதை மறைப்பதையும் இது நோக்கமாகக் கொண்டிருக்கிறது. அதேநேரத்தில், புலம்பெயர்வோர்-விரோத திட்டத்தை எதிரொலிக்கும் கோர்பின், ஐரோப்பிய ஒன்றியத்துடனான கேமரூனது உடன்படிக்கை மீதான தனது விமர்சனத்திற்கு, ”பிரிட்டனுக்குள்ளான புலம்பெயர்வைத் தடுப்பதற்கு எதுவும் செய்யவில்லை” என்பதான புகாரை மையமாகக் கொள்கிறார். ஊதியங்கள் வீழ்ச்சி காண்பதற்கான காரணமாக, முதலாளிகள் மற்றும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை அல்லாமல், மாறாக இந்த உள்வரவின் மீதே கோர்பின் குற்றம்கூறுகிறார்.

15. கிரீஸில் சிரிசா, ஸ்பெயினில் பொடேமோஸ் (Podemos) மற்றும் ஜேர்மனியில் இடது கட்சி (Die Linke) ஆகியவற்றை ஐரோப்பாவை “ஜனநாயகமயமாக்குவதற்கான” போராட்டத்தில் கூட்டாளிகள் என்று கூறித் தாங்கிப் பிடிக்கின்ற இடது ஐக்கியம் (Left Unity) மற்றும் ஸ்காட்டிஷ் சோசலிஸ்ட் கட்சி போன்ற போலி-இடது குழுக்களும் கோர்பினின் ஐரோப்பிய ஒன்றிய ஆதரவு வாய்வீச்சை எதிரொலிக்கின்றன. இந்த அரசியல் மோசடிக்கான தலைமையை ஐரோப்பாவுக்கான “மாற்று திட்டம் (Plan B)” வைத்திருக்கின்ற யானிஸ் வாரூஃபாக்கிஸ் (Yanis Varoufakis) வசம் ஒப்படைத்திருப்பதே இந்த மோசடியான வார்த்தை விளையாட்டுகள் மீதான மிகப்பெரும் குற்றப்பத்திரிகையாக இருக்கிறது. கிரீஸின் முன்னாள் நிதி அமைச்சரான இந்த வாரூஃபாக்கிஸ், சிரிசா தலைவரான அலெக்சிஸ் சிப்ராஸ் உடன் இணைந்து, ஐரோப்பிய-ஒன்றியம் உத்தரவிட்ட சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான கிரேக்கத் தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்ததற்கான அரசியல் பொறுப்பை பகிர்ந்து கொள்பவராவார். ஐரோப்பிய ஒன்றியத்தை தங்களது தனிநபர் வளத்திற்கான கறவை மாடாகக் கருதிவந்திருக்க கூடியவர்களும், அத்துடன் பொருளாதார நெருக்கடியை தங்களது சொந்த தொழில்வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்வதற்கும் அரசாங்க மற்றும் அரசுஎந்திரத்தில் இலாபகரமான பதவிகளை பெறுவதற்குமான ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டிருந்திருக்கக் கூடியவர்களுமான ஊழலடைந்த மற்றும் சலுகைபெற்ற உயர்-நடுத்தரவர்க்க அடுக்குகளின் ஒரு அச்சுவார்ப்பான பிரதிநிதியாகவே அவர் இருக்கிறார். இந்தத் தட்டினர் அத்தகைய பதவிகளை தாங்கள் பெறமுடிந்த இடங்களில் எல்லாமே, மற்ற எந்த முதலாளித்துவ அதிகாரிகள் மற்றும் கட்சிகளையும் போன்ற அதேவேகத்துடன் தொழிலாள வர்க்கத்தின் மீது தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.

அங்கத்துவத்திலிருந்து விலகவேண்டும் பிரச்சாரம்

16. இவற்றில் எதுவுமே அங்கத்துவத்திலிருந்து விலகவேண்டும் பிரச்சாரத்திற்கு ஒரு முற்போக்கான குணாம்சத்தைக் கொடுத்துவிடாது, அல்லது அதற்கு மிக விமர்சன ரீதியாக ஆதரவை அளிப்பதையும் கூட நியாயப்படுத்திவிடாது. பிரிட்டிஷ் நாடாளுமன்றமும் அதன் கட்சிகளும், நிதிமூலதனத்தின் அவாக்களை திணிப்பதில் ஐரோப்பிய ஒன்றியத்தைப்போல மோசமான அமைப்புகள் அல்ல என்பதான இப்பிரச்சாரக்கூற்று ஒரு வெளிப்படையான மோசடியாகும். இந்தப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கக்கூடிய ஒவ்வொரு முன்னணி டோரி கட்சியினருமே, ஜனநாயக உரிமைகளின் மீது அடிப்படைத் தாக்குதல்களை நடத்தி வந்திருக்கின்ற, இரத்தம் தோய்ந்த போர்களை நடத்தி வந்திருக்கின்ற மற்றும் மில்லியன் கணக்கான மக்களை வறுமைக்குள் தள்ளியிருக்கின்ற அடுத்தடுத்த அரசாங்கங்களில் பங்குபற்றி வந்திருக்கின்றனர். “வெஸ்ட்மினிஸ்டர் உயரடுக்கு”க்கு எதிர்ப்புகாட்டுவது போன்ற ஒரு ஜனரஞ்சக சித்திரத்தைக் காட்டுகின்ற ஐக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சியானது, ஸ்டூவர்ட் வீலர் மற்றும் ஆரோன் பேங்க்ஸ் போன்ற பல-மில்லியன்களுக்கு அதிபதிகளாக விளங்கும் நிதிஊகவணிகர்களாலும், மற்றும் முன்னாள் ஆபாச பிரசுர வெளியீட்டாளரும், இப்போது எக்ஸ்பிரஸ் செய்தித்தாள்களின் உரிமையாளருமான ரிச்சார்ட் டெஸ்மொண்ட் மூலமுமே பெரும் நிதியாதாரம் அளிக்கப்பட்டு வருகிறது. ஜனநாயகம் குறித்த அவர்களது ஆழ்ந்த அக்கறையைப் பொறுத்தவரை, மனிதஉரிமைகளுக்கான ஐரோப்பிய உடன்படிக்கையை இல்லாதொழிக்கவேண்டும் என்பதே அங்கத்துவத்திலிருந்து விலகவேண்டும் பிரச்சாரத்தின் மையமான கோரிக்கைகளில் ஒன்று என கட்சி தெரிவிக்கிறது.

17. இலண்டன் மாநகரம் ஒரு உலக நிதியமையமாகத் திகழ்வதால், அதனைக் கொண்டு பழைய சாம்ராஜ்யங்களின் காலத்திற்கு மீண்டும் பிரவேசிக்கும் சாத்தியத்தின் பார்வையில் இருந்தே, அங்கத்துவத்திலிருந்து விலக வேண்டும் பிரச்சாரத்தின் பொருளாதாரத் திட்டநிரல் உருக்கொடுக்கப்படுகிறது. ”உலகத்தை நோக்கி திரும்புவதற்காக” ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகுவது குறித்து UKIPம் மற்றவர்களும் பேசும்போது, அவர்கள் உண்மையில் வருடாந்திர குறைந்தபட்ச ஊதியமாக 600 பவுண்டுகள் முதல் 1000 பவுண்டுகளுக்கு சற்று அதிகமான அளவு வரை தான் இருக்கும் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் சீனா போன்ற நாடுகள் வழங்கக் கூடிய முதலீட்டு வாய்ப்புகளை மேம்பட்ட வகையில் சுரண்டுவதற்கு பிரிட்டிஷ் மூலதனம் கொண்டுள்ள உரிமையையே வலியுறுத்துகின்றார்கள். இந்த விடயத்தில், “தேசிய நலன்” என்னும் பலிபீடத்தில் பிரிட்டிஷ் தொழிலாளர்கள் தங்களது ஊதியங்களையும் வேலை நிலைமைகளையும் தியாகம் செய்யவேண்டும் என்று அவர்கள் கோருவார்கள்.

18. அங்கத்துவத்திலிருந்து விலக வேண்டும் பிரச்சாரத்தால் அளிக்கப்படுகின்ற பொருளாதார வெற்றி குறித்த நப்பாசை இலட்சியமானது, பிரிட்டன் வெளியேறுவது குறித்த யதார்த்த நிலைக்கு வெகுதொலைவில் இருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதானது பொருளாதாரத்தின் மீதும் வேலைகளின் மீதும் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்த மதிப்பீடுகள் பெரும் அளவில் மாறுபடுகின்றன. ஆயினும் மிக மோசமடையக் கூடிய ஒரு நிலை குறித்த மதிப்பீடானது – ஐரோப்பாவுடன் வர்த்தகத்தை மூடுவதை அடிப்படையாகக் கொண்டது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9 சதவீதம் வரை இழப்பை மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2008 பொறிவு நிலைக்கு நிகரான ஒன்றாகும். குறிப்பாக உலகளாவ மந்தநிலை அபிவிருத்தி காண்கின்ற நிலைமைகளின் கீழ், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதானது, ஒட்டுமொத்த கண்டத்தையும் அத்துடன் ஐக்கிய இராச்சியத்தையும் விரிசலடையச் செய்து, தேசிய மற்றும் பிரிவினைவாத பதட்டங்களைக் கட்டவிழ்த்து விடுவதோடு சுயபாதுகாப்புவாதத்தையும் வர்த்தக போர் நடவடிக்கைகளையும் ஊக்குவிக்கும். கேமரூனின் முன்முயற்சியைப் பிடித்துக் கொண்டு, பிரான்சில் தேசிய முன்னணியானது ஏற்கனவே “பிரான்ஸ் வெளியேறலுக்கு (Franxit)” வலியுறுத்திக் கொண்டிருக்கிறது, ஹங்கேரியில் இருக்கின்ற அதி-வலது Fidesz அரசாங்கமானது புலம்பெயர்ந்த மக்களுக்கு விரோதமான ஒதுக்கீடுகள் குறித்த ஒரு சர்வஜன வாக்கெடுப்புக்கு அழைப்புவிடுத்திருக்கிறது.

19. பிரிட்டிஷ் தொழிலாளர்கள் ஒரு தேசியவாத வேலைத்திட்டத்தின் அடிப்படையில் நடப்பு பொருளாதார மற்றும் அரசியல் முடக்கநிலையில் இருந்து வெளிவருவதற்கான ஒரு வழியைக் கண்டறிய முடியாது. இன்றைய உலகளாவிய பொருளாதாரத்தில் ஒரு தனிமைப்பட்ட மற்றும் இறையாண்மையான பிரிட்டிஷ் அரசுக்குத் திரும்புவது என்பதான கருத்து, வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய நினைவுச்சின்னம் (Stonehenge தூண்கள்) போன்ற அந்தப்பழைய காலத்திற்குரியவை ஆகும். ட்ரொட்ஸ்கி 1934 இல் “தேசியவாதமும் பொருளாதார வாழ்க்கையும்” குறித்து எழுதிய ஒரு கட்டுரையில், தேசியவாத மற்றும் பாசிசப் பிற்போக்குத்தனத்திற்குள்ளும் மற்றும் போருக்குள்ளும் இறங்குவது இல்லையேல் ஒரு புதிய சோசலிச உலக ஒழுங்கைக் கட்டியெழுப்புவதை நோக்கித் திரும்புவது என மனிதகுலம் முகம்கொடுத்திருந்த அடிப்படையான இரண்டு தெரிவுகளை முன்நிறுத்தினார். “நமது நூற்றாண்டின் அடிப்படைப் போக்காக இருப்பது….தேசத்திற்கும் பொருளாதார வாழ்க்கைக்கும் இடையிலான முரண்பாடுகளின் அதிகரிப்புத்தான்” என்று விளக்கிய அவர் பின்வரும் கேள்வியை முன்வைத்தார்:

ஐரோப்பாவில் வாழுகின்ற மக்களுக்கு கலாச்சார அபிவிருத்திக்கான முழுமையான சுதந்திரத்தை வழங்கும் அதேசமயத்தில் ஐரோப்பாவின் பொருளாதார ஐக்கியத்திற்கு எங்ஙனம் உத்தரவாதம் வழங்கலாம்? ஐக்கியப்பட்ட ஐரோப்பா எங்ஙனம் ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட உலகப் பொருளாதாரத்திற்குள் உட்சேர்க்கப்படலாம்? இந்தக் கேள்விக்கான பதிலை தேசத்தை புனிதப்படுத்துவதால் அடைய முடியாது, மாறாக உற்பத்தி சக்திகளை அவற்றின் மீது தேசிய அரசினால் திணிக்கப்பட்டிருக்கின்ற தளைகளில் இருந்து முழுமையாக விடுதலை செய்வதன் மூலம் மட்டுமே அடைய முடியும். ஆனால், ஐரோப்பாவின் ஆளும் வர்க்கங்களோ, இராணுவ மற்றும் இராஜதந்திர வழிமுறைகளின் திவால்நிலையால் விரக்தியடைந்து, அந்தப் பணியை இதற்கு நேரெதிர்முனையில் இருந்து அணுகுகின்றன. அதாவது பொருளாதாரத்தை காலாவதியாகிப் போன தேசிய அரசுக்கு பலவந்தமாக கீழ்ப்படியச் செய்வதற்கு அவை முயற்சி செய்வது மட்டுமல்லாது ….சீரழிவான பாசிச தேசியவாதமானது, எரிமலை போன்ற வெடிப்புகளையும் உலக அரங்கில் மிகப்பெரும் மோதல்களையும் தயாரிப்பு செய்து, அழிவைத் தவிர வேறெதனையும் தயாரிப்பு செய்யவில்லை. எதிர்வரவுள்ள கொடூர இசையுடன் ஒப்பிட்டால் கடந்த 25 அல்லது 30 ஆண்டுகளில் இதுவிடயத்திலான நமது அனுபவங்கள் வெறும் அமைதியான இசையாகவே தென்படும்.

“இடது” தேசியவாதத்தை நிராகரிப்போம்

20. சோசலிஸ்டுகளின் முதல் அக்கறை வெறுமனே தொழிலாள வர்க்கத்தின் நிகழ்கால நலன்களை பாதுகாப்பது மட்டுமல்ல, மாறாக அதன் எதிர்காலத்தையும் பாதுகாப்பதாகும். இந்த சூழ்நிலையில் “இடது தேசியவாதம்” என்பதாகக் கூறப்படுகின்ற ஒன்றை ஏற்பதன் அடிப்படையில் வர்க்கப் பதாகைகளை கலப்பதென்பது மிகப்பெரும் அரசியல் அபாயமாகும். அத்தகையதொரு கொள்கைக்கான எதிர்ப்பின் அடிப்படையில் தான் 2014 கருத்துவாக்கெடுப்பில் ஸ்காட்டிஷ் பிரிவினைவாதத்திற்கு ஆதரவளிப்பதை SEP நிராகரித்ததோடு, அது இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தில் இருக்கக் கூடிய தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்தை துண்டாடக் கூடிய ஒரு பிற்போக்குத்தனமான நடவடிக்கை என்றும் குணாம்சப்படுத்தியது. இன்று, ஸ்காட்டிஷ் தேசியக் கட்சியானது, ஐரோப்பிய ஒன்றியத்தில் ஸ்காட்லாந்தின் அங்கத்துவத்திற்கு ஆதரவளிக்கின்ற வெளிப்படையான அடிப்படையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறும் பட்சத்தில் இரண்டாவது சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றுக்கு மிரட்டிக் கொண்டிருக்கிறது.

21. போர்-எதிர்ப்பு கட்சியாக கூறிக்கொள்ளும் RESPECT கட்சியின் தலைவரான ஜோர்ஜ் கலோவே, மற்றும் அரச முதலாளித்துவ சோசலிச தொழிலாளர் கட்சி (SWP) மற்றும் Committee for a Workers’ International இன் ஒரு பிரிவான சோசலிஸ்ட் கட்சி போன்ற போலி-இடது அமைப்புகள் ஜூன் 23 சர்வஜன வாக்கெடுப்பில் அரசியல் ரீதியாய் ஒரு குற்றவியல்தனமான பாத்திரத்தை ஆற்றிக் கொண்டிருக்கின்றன. தொழிலாள வர்க்கத்தை ஒரு வலது-சாரி முன்முயற்சியின் பின்னால் அணிவகுக்கச் செய்வதற்காக அவை இடது சொற்றொடர்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. கலோவே, பிரிட்டன் வெளியேறுவதற்கு ஆதரவாக வாதாட UKIP உடன் பொது மேடைகளைப் பகிர்ந்து கொள்கிறார், தேசிய இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான அவசியத்துடன் ஒப்பிட்டால், “இடது” மற்றும் “வலது”க்கு இடையிலான பிளவுகளும் தொழிலாள வர்க்கத்திற்கும் ஆளும் வர்க்கத்திற்கும் இடையிலான பிளவுகளும் ஒன்றுமேயில்லை என அவர் வரையறை செய்கிறார். அணிசேரா நாடுகள், பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளை “சூரியன் உதயமாகின்ற, ஆனால் அஸ்தமனமாகாத…” நாடுகள் என விபரித்து அவற்றுடன் வர்த்தகம் செய்வதற்கு பிரிட்டிஷ் முதலாளித்துவம் கொண்டிருக்கும் உரிமையே “சர்வதேசியவாதம்” என்று அவர் வரையறை செய்கிறார்.

22. பிரிட்டனின் அரச காலத்துக் கடந்தகாலத்தை திட்டமிட்டு இதுபோல் இழுப்பது என்பது, “இடது, வலது, இடது, வலது என 23 ஜூன் அன்றான வெற்றிக்கு பீடுநடை போடுவோம்” (“Left, Right, Left Right, forward march to victory on the 23rd of June.”) என்ற அவரது பேரணி திரட்டுவதற்கான அழைப்புடன் இணக்கமாக இருக்கிறது. ட்விட்டரில் UKIP தலைவரான நைஜல் ஃபாராஜ் குறித்து கலோவே கூறுகையில், “சேர்ச்சில் மற்றும் ஸ்ராலினைப் போல… நாம் ஒரே நோக்கத்திற்காய் கூட்டாளிகளாய் இருக்கிறோம்…” என்று குறிப்பிட்டிருந்தார். இந்த ஒப்புமை ஐரோப்பிய ஒன்றியத்திற்கான தங்கள் எதிர்ப்பிற்கு உயிரூட்டுவதாக இருக்கின்ற மூர்க்கத்தனம் மற்றும் ஜேர்மன்-விரோத மனோநிலைக்கு ஒரு விண்ணப்பம் என்பதை தனது பார்வையாளர்கள் புரிந்து கொள்வார்கள் என்பதை கலோவே மிக முழுமையாய் அறிந்து வைத்திருக்கிறார். அரசியல்ரீதியாக அவர், வலது-சாரி தேசியவாதத்துடன் சந்தர்ப்பவாதக் கூட்டணிகளது நெடிய வரலாற்றைக் கொண்ட ஸ்ராலினிசத்தின் சீரழிந்த மரபின் மீது நின்று கொண்டிருக்கிறார். ஸ்ராலினை அவர் புகழ்வதென்பது 1917 அக்டோபர் புரட்சிக்குக் குழிபறித்தவரும் மில்லியன் கணக்கானோரின் உயிர்களைக் பலிகொண்ட அரசியல் குற்றங்களது கர்த்தாவும், சேர்ச்சிலுக்கு முன்னதாய் ஹிட்லருடன் உடன்படிக்கை செய்து கொண்டிருந்தவருமான ஒரு மனிதருடன் அவர் ஐக்கியப்பட்டு நிற்பதை எடுத்துக்காட்டுகிறது.

23. தங்களது ஐரோப்பிய-ஒன்றிய-எதிர்ப்புப் பிரச்சாரம், நைஜல் ஃபாராஜ் மற்றும் அவரது குழுவினரிடம் இருந்து சுயாதீனமானது என்று கூறுபவர்கள் ஒரு மோசடியையே தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். The Rail, Maritime and Transport union (RMT), இரயில் வண்டி ஓட்டிகள் சங்கமான ASLEF, ஸ்ராலினிச Morning Star செய்தித்தாள் மற்றும் Trade Unions Against the EU குழு, இவற்றுடன் போலி-இடது SWP, மற்றும் அதன் உடைந்துசென்ற Counterfire மற்றும் SP, இவை அத்தனையுமே, உத்தியோகபூர்வ அங்கத்துவத்திலிருந்து விலக வேண்டும் பிரச்சாரத்திற்கு இணையாய் ஒரு “முற்போக்கான” மற்றும் “சோசலிச” அடிப்படையிலான ஒரு முன்னெடுப்பை செய்வது சாத்தியமே என்று திட்டவட்டமாக வலியுறுத்துகின்றன. ஆயினும், டோரிக்கள் மற்றும் UKIPக்கு இவர்களால் அறிவிக்கப்பட்ட எதிர்ப்பும் மற்றும் சோசலிச வார்த்தையாடல்களை இவர்கள் இழுப்பதும் எவ்வித அர்த்தமுமற்றதாகும்.

24. “டோரிக்களைக் குழப்பி” அதன்மூலம் “கேமரூனை அகற்றுவதற்கு” ஒரு வழிவகை அளிக்கின்றதான ஒரு வாய்ப்பு பிரிட்டனது வெளியேறலில் இருப்பதாகக் கூறி அதில் இவர்கள் கவனம் குவிப்பதே இவர்களது அணுகுமுறையின் தீவிரமற்ற தன்மைக்கு சிகரம் வைத்தது போல் இருக்கிறது. யார் கேமரூனை அகற்றவிருக்கிறார்கள், என்ன நோக்கத்துடன் என்பதெல்லாம் அவர்களது பரிசீலிப்பிலியே இல்லை. அங்கத்துவத்திலிருந்து விலக வேண்டும் பிரச்சாரத்தால் உண்மையில் வலுக்கூட்டப்படுகின்ற சக்திகளுக்கு அவர்கள் முழுக்கவும் அலட்சியம் காட்டுகின்றனர். உண்மையில் அவர்கள், அரசியல் வாழ்க்கையை ஒரு தேசியவாதப் பாதையில் இன்னும் அதிகமாய் நகர்த்துகின்ற நோக்கம்கொண்டதான ஒரு முன்முயற்சிக்கு தொழிலாள வர்க்கத்தை கீழ்ப்படியச் செய்து கொண்டிருக்கின்றனர், அதன்மூலம் அவர்கள் ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐரோப்பாவெங்கிலும் அதி வலதுகளை வலுப்படுத்தி அவர்களுக்கு தெம்பூட்டுகின்ற அதேநேரத்தில் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் தற்காப்புகளை பலவீனப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். பிரிட்டிஷ் தேசியவாதம் என்ற பூதத்தை விடுதலை செய்ய உதவும் அவர்கள், அதன் பின்விளைவுகளுக்கான அரசியல் பொறுப்பாளிகளாவர்.

வரலாற்றின் படிப்பினைகள்

25. தொழிலாள வர்க்கத்தை வலது-சாரி சக்திகளின் பின்னால் நிறுத்துவதன் மரணகரமான பின்விளைவுகளை ஜேர்மன் தொழிலாளர்’ இயக்கத்தின் படிப்பினைகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. 1929 டிசம்பரில் ஜேர்மன் தேசியவாதக் கட்சியின் தூண்டுதலின் பேரில் ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. உத்தியோகபூர்வமாக வேர்சாய் உடன்படிக்கையை கைவிடுவதையும் முதலாம் உலகப் போரில் வெற்றி பெற்ற சக்திகளுக்கு நஷ்ட ஈட்டுத் தொகை செலுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதையும் கொண்ட “ஜேர்மன் மக்கள் அடிமைப்படுத்தப்படுவதற்கு எதிரான சட்டத்தை” அது அறிமுகம் செய்ய முனைந்தது. வேர்சாய் உடன்படிக்கையின் ஷரத்துகளுக்கு பாரிய எதிர்ப்பு இருந்தது என்றபோதும், இந்த சர்வஜன வாக்கெடுப்பு என்பது, இந்த எதிர்ப்பு மனோநிலையை தேசியவாத வலது, குறிப்பாக தனது தேசிய இருப்பை ஸ்தாபிக்க இதனைப் பயன்படுத்திக் கொண்ட ஹிட்லரின் நாஜிக் கட்சி, சுரண்டிக் கொள்ளச் செய்கின்ற ஒரு முயற்சியே என்பதை வர்க்க நனவுள்ள தொழிலாளர்கள் கண்டுகொண்டனர்.

26. ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி (KPD) இந்த சர்வஜன வாக்கெடுப்பை எதிர்த்தது, வாக்குப்பதிவு 15 சதவீதத்துக்கு சற்று குறைவாக இருந்தது. ஆயினும் அதன் பின்னர், ஸ்ராலின் மற்றும் கம்யூனிச அகிலத்தின் கட்டளையின் கீழ், ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி “தேசிய போல்ஷிவிச”த்தை ஏற்றுக் கொண்டு ஜேர்மன் தேசியவாதத்திற்கு முற்றுமுதலாய் தகவமைத்துக் கொள்கின்றதொரு நிகழ்ச்சிப்போக்கை தொடங்கியது.

27. 1931 ஆம் ஆண்டுக்குள்ளாக ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் பின்னடைவு எந்த மட்டத்திற்கு சென்றிருந்ததென்றால், “சிவப்பு சர்வஜன வாக்கெடுப்பு” என்று அது அழைத்த ஒன்றினை ஆதரிக்கும் அளவுக்கு பாசிஸ்டுகளின் நிலைப்பாட்டிற்கு சாதகமாக இருந்தது. நாஜிக்களின் முன்முயற்சியில், இந்த சர்வஜன வாக்கெடுப்பானது ஜேர்மனியின் மிகப்பெரும் மாநிலமான பிரஷ்யாவில் – தலைநகர் பேர்லினும் இதற்குள் இருந்தது – சமூக ஜனநாயகக் கட்சியை அதிகாரத்தில் இருந்து அகற்ற வலியுறுத்தியது. சமூக ஜனநாயகக் கட்சியினர் “சமூக பாசிஸ்டுகள்” என்பதுடன் அவர்கள் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஒரு அடக்குமுறையில் ஈடுபட்டிருந்தனர் என்ற அடிப்படையில், ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி இந்த சர்வஜன வாக்கெடுப்பிற்கு ஆதரவளித்தது. சமூக ஜனநாயகக் கட்சி அகற்றப்படுவது “தேசிய விடுதலை” மற்றும் “மக்கள் புரட்சி”யை நோக்கிய ஒரு அடியெடுப்பாக இருக்கும் என்று KPD தெரிவித்தது.

28. ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி குறித்த ட்ரொட்ஸ்கியின் பின்வரும் சுட்டெரிக்கும் விமர்சனம் இன்று கலோவே மற்றும் போலி-இடதுகள் ஆற்றும் பாத்திரத்தின் மீதான ஒரு உலுக்கும் குற்றப்பத்திரிகையாகவும் நிற்கிறது:

ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் நடத்தையில், எல்லாமே தவறாக இருக்கிறது: சூழ்நிலை குறித்த மதிப்பீடு தவறு, உடனடி நோக்கம் தவறாக முன்வைக்கப்பட்டிருக்கிறது, அதை எட்டுவதற்கான வழிவகைகளும் தவறாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கின்றன.

29. ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி, உண்மையில் பாசிஸ்டுகளுடன் ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்கியிருந்தது, ட்ரொட்ஸ்கி விளக்கினார்:

ஒருவர் தனது கட்சி நிலையை வாக்குச்சீட்டுகளில் பதிவிடக்கூடியதாக இருந்திருக்குமானால் கூட, அது சக்திகளின் ஒரு எண்ணிக்கையை கணக்கெடுக்க அனுமதித்திருக்கும் என்பதால், அந்தக் காரணத்தாலேயே அவர்களை பாசிச சக்திகளிடம் இருந்து பிரித்துக் காட்டுவதாக இருக்க முடியும் என்ற நியாயமாவது (கொடுக்கப்பட்டிருக்கும் விடயத்தில், அரசியல்ரீதியாய் முற்றிலும் நியாயப்படுத்த முடியாதது) குறைந்தபட்சம் சர்வஜன வாக்கெடுப்புக்கு இருந்திருக்கும். ஆனால் ஜேர்மன் ‘ஜனநாயகமோ’ வாக்கெடுப்பில் பங்கேற்பவர்களுக்கு தங்களது கட்சி நிலையைப் பதிவிட உரிமை கொடுப்பதை கவனத்திற்குகூட எடுக்கவில்லை. அத்தனை வாக்காளர்களும் ஒரு குறிப்பிட்ட பிரச்சினையில் ஒரே மற்றும் அதே பதிலை கொடுக்கின்ற ஒற்றைப் பெருந்திரட்டாக உருட்டப்பட்டிருந்தனர்…

பாட்டாளி வர்க்கம் தனது தாக்குதலின் கீழ், பாசிஸ்டுகளை தூக்கியெறிந்து அதிகாரத்தை தனது சொந்தக் கரங்களில் எடுக்கின்றபோது, பாசிஸ்டுகள் கம்யூனிஸ்டுகளுடன் சேர்ந்து வாக்களிக்கிறார்களா இல்லையா என்பது எந்த முக்கியத்துவமும் இல்லாது போய்விடும்… சக்திகளிடையேயான உறவின்படி பார்த்தால், ஹிட்லர்-ஹியூகேன்பேர்க்கின் (ஜேர்மன் தேசியக் கட்சி) ஒரு அரசாங்கம் தான் பிரதியீடு செய்ய முடியும் என்ற நிலையில், ’புரூனிங்-பிறவுண் (மத்திய கட்சி/சமூக ஜனநாயகக் கட்சி) ஒழிக’ என்ற கோஷத்துடன் வீதிகளில் இறங்குவதென்பது முற்றுமுதலான சாகசவாதமாகத் தான் இருக்க முடியும்… ஆகவே, பாசிஸ்டுகள் ஆதரிக்கும் அதே தரப்பிற்கு வாக்களிப்பது என்பதை ஏதோ அருவமான கோட்பாட்டின் கோணத்தில் இருந்து நாங்கள் கருதிப்பார்க்கவில்லை, மாறாக அதிகாரத்திற்கான வர்க்கங்களின் நிதர்சனமான போராட்டத்தின் பார்வையில் இருந்து, இப்போராட்டத்தின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் சக்திகளிடையேயான உறவின் பார்வையில் இருந்து கருதிப்பார்க்கிறோம்.

ஒரு செயலூக்கமான புறக்கணிப்புக்கு ஆதரவாக

30. வர்க்க சக்திகளின் உறவுகள் குறித்த ஒரு ஸ்தூலமான மதிப்பீட்டின் மீதான ட்ரொட்ஸ்கியின் வலியுறுத்தல், ஜூன் 23 சர்வஜன வாக்கெடுப்பை நோக்கிய SEP இன் அணுகுமுறைக்கு அடித்தளமாக உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகும் வாக்களிப்பை வழிமொழிவது முழுக்கவும் சரியானதாக அமையக் கூடிய சில சந்தர்ப்பங்களும் உண்டு. பாரிய வேலைநிறுத்தங்கள் மற்றும், கிரேக்கத்தின் வெகுஜனங்களுடனும் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கட்டளைகளுக்கு பலியான மற்றவர்களுடனும் ஐக்கியம் பேணுவதற்கான கோரிக்கைகள் ஆகியவை உள்ளிட்ட தொழிலாள வர்க்கத்தின் ஒரு இயக்கத்தின் நிலைமைகளின் கீழ், விலகுவதற்கான ஒரு வாக்களிப்பு முதலாளித்துவ-எதிர்ப்பு குணாம்சத்தைப் பெறும்.

31. ஆனால் இன்றைய நிலைமை அதுவல்ல. ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைக்கு எதிரான ஒரு போராட்டத்தை நடத்துவதற்கான ஒரு மாதிரியாக சிரிசாவை போற்றிப் புகழ்ந்த போலி-இடது குழுக்கள் அனைத்தின் அரசியல் பொறுப்பாக உள்ளது. கிரீசில் ஜூலை 5, 2015 இல் கிட்டிய பாரிய சர்வஜன வாக்கெடுப்பு முடிவுகளுக்கு சிரிசா மதிப்பளித்திருந்து, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான ஒரு அரசியல் போராட்டத்தை எடுத்திருக்குமானால், ஐரோப்பாவில் ஒட்டுமொத்த அரசியல் சூழலுமே மாறியிருந்திருக்கும். நிகழ்வுகளை வலது-சாரி அரசியல் சக்திகள் இல்லாமல் தொழிலாள வர்க்கம் நிர்ணயிப்பதாக இருக்கின்ற நிலைமைகளின் கீழ் பிரிட்டன் வெளியேறல் குறித்த வாக்கெடுப்பு நடந்தேறியிருக்கும். ஆனால் அப்படியான ஒரு சமயத்தில் கேமரூனோ அல்லது UKIP யோ வாக்கெடுப்புக்கு நெருக்கியிருக்க மாட்டார்கள் என்றே எதிர்பார்த்திருக்க முடியும்.

32. இன்றைய குறிப்பான நிலைமைகளைக் கொண்டு பார்த்தால், ஒரு செயலூக்கமான புறக்கணிப்பு மட்டுமே தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் ஒரு சுயாதீனமான வர்க்க நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கான ஒரே வழிவகையை வழங்குவதாக இருக்கிறது. எங்களது அழைப்பு, 1905 இல் ரஷ்யாவின் உள்துறை அமைச்சரான அலெக்சாண்டர் புலிகின் வரைவு செய்த பிற்போக்குத்தனமான அரசியல்சட்டத்தின் விடயத்தில், லெனின் முன்வைத்த நிலைப்பாட்டை அடிப்படையாய் கொண்டுள்ளது. சாரிசத்திற்கு எதிரான ஒரு புரட்சிகரப் போராட்டத்தின் பாகமாக நாடாளுமன்றம் அல்லது டூமாவைப் புறக்கணிக்க வலியுறுத்த லெனின் பின்வருமாறு விளக்கினார்:

நாம் புரிந்துகொண்டது தவறில்லையென்றால், இந்த சிந்தனை ஏற்கனவே ரஷ்யாவில் வேலை செய்கின்ற தோழர்களிடையே நன்கு பரவலான ஒன்றாக இருக்கிறது, அவர்கள் அதை ஒரு செயலூக்கமான புறக்கணிப்பு என்ற வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார்கள். செயலற்ற தவிர்ப்புவாதத்தில் இருந்து மாறுபட்ட விதத்தில், ஒரு செயலூக்கமான புறக்கணிப்பானது ஆர்ப்பாட்டங்களை பத்துமடங்காய் அதிகரிப்பதையும், ஒவ்வொரு இடங்களிலும் கூட்டங்களை ஒழுங்கமைப்பதையும், தேர்தல் கூட்டங்களை – அவற்றுக்குள் நாம் பலவந்தமாய் செல்ல வேண்டியிருக்கிறது என்ற நிலை அமைந்தாலும் கூட - அனுகூலமாக்கிக் கொள்வதையும், ஆர்ப்பாட்டங்கள், அரசியல் வேலைநிறுத்தங்கள் நடத்துவதையும், இன்னும் மற்றவற்றையும் குறிப்பதாக இருக்க வேண்டும்.

33. ஒரு செயலூக்கமான புறக்கணிப்பை ஒரு தனிப்பட்ட ஆர்ப்பாட்டமாக SEP சிந்திக்கவில்லை, மாறாக தொழிலாள வர்க்கத்தின் அரசியல் தெளிவுபெறலுக்கான ஒரு தொடக்கத்திற்கும் தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தினாலும் மற்றும் அதன் போலி-இடது வக்காலத்துவாதிகளாலும் உருவாக்கப்பட்ட நோக்குநிலை பிறழலை எதிர்த்து நிற்பதற்குமான ஒரு வழிவகையாகவே சிந்திக்கிறது. தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஒரு நனவான அரசியல் நோக்குநிலையையும் தலைமையையும் வழங்குவதற்கு நாம் செயலூக்கமான புறக்கணிப்புப் பிரச்சாரத்தை பயன்படுத்துவோம்.

ஐரோப்பிய சோசலிச அரசுகளின் ஒன்றியத்திற்காக

34. செயலூக்கமான புறக்கணிப்புக்கான பிரச்சாரமானது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை இராணுவவாதம் மற்றும் போருக்கான புரட்சிகர எதிர்ப்பின் சர்வதேசிய மையமாக மாற்றுகின்ற ஒரு பணியுடன் நெருக்கமாகப் பிணைந்ததாகும். ஒரு புதிய போர்-எதிர்ப்பு இயக்கம் தனக்கு அடிப்படையாகக் கொள்ள வேண்டிய கீழுள்ள நான்கு அம்சங்களை முன்வைக்கின்ற சோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும் என்ற நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அறிக்கையை வெகுஜனங்களிடம் எடுத்துச் செல்லவும் ஊக்குவிக்கவும் எங்களது ஐரோப்பிய மற்றும் சர்வதேசிய சக-சிந்தனையாளர்களுடன், குறிப்பாக ஜேர்மனியின் சோசலிச சமத்துவக் கட்சியுடன், நாங்கள் நெருக்கமாக செயற்படுவோம்.

35. சர்வஜன வாக்கெடுப்பு பிரச்சாரத்தின் இரண்டு தரப்பினராலும் ஊக்குவிக்கப்படுகின்ற தேசியப் பேரினவாதம் மற்றும் வெளிநாட்டவர் மீதான வெறுப்பு ஆகியவற்றுக்கு எதிராக, தொழிலாள வர்க்கமானது வாழ்க்கைத் தரங்களையும் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாப்பதற்கு ஐரோப்பா முழுமையிலுமான தொழிலாளர்களின் போராட்டங்களை ஐக்கியப்படுத்துவதற்கான தனது சர்வதேசிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். நாடுகடந்த நிறுவனங்களின் ஐரோப்பாவுக்கு எதிராக தொழிலாளர்கள் முன்வைக்கின்ற மாற்றீடு ஐரோப்பிய சோசலிச அரசுகளின் ஒன்றியத்திற்கான போராட்டமாகும்.

36. 1945க்குப் பிந்தைய ஐரோப்பிய ஐக்கியப்படுத்தல் திட்டமானது, இக்கண்டத்தை இருபதாம் நூற்றாண்டில் இரண்டு முறை போருக்குள் அமிழ்த்தியிருந்த அடிப்படை முரண்பாடுகளை —ஐரோப்பிய மற்றும் உலக உற்பத்தியின் ஒருங்கிணைந்த பண்புக்கும் விரோதமான தேசிய அரசுகளாக கண்டம் பிளவுபட்டிருப்பதற்கும் இடையிலானது— தீர்ப்பதற்கு ஆளும் உயரடுக்கினால் மேற்கொள்ளப்பட்டிருந்த ஒரு முயற்சியாக இருந்தது. உலகச் சந்தையில் அமெரிக்காவுக்கு எதிராக திறம்பட்ட வகையில் போட்டியிடுவதற்கு ஐரோப்பாவுக்கு வழிவகை தர அத்தியாவசியமான ஒன்றாக பொருளாதார ஒருங்கிணைப்பு கருதப்பட்டு வந்தது, அதனுடன் கைகோர்த்து அரசியல் ஐக்கியத்தை நோக்கி நகர்வதே இறுதி நோக்கமாகக் கூறப்பட்டது. அதேசமயத்தில் சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான ஒரு தடுப்பரணாகவும், போர்க்குணம் பெற்ற மற்றும் தீவிரமயப்பட்ட ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் மூலமான சோசலிசப் புரட்சியின் அச்சுறுத்தலுக்கு எதிரான ஒரு தடுப்பரணாகவும் முதலாளித்துவ ஐரோப்பாவின் ஒருங்கிணைப்பை அமெரிக்க ஏகாதிபத்தியம் ஊக்குவித்தது. ஆயினும், முதலாளித்துவ கட்டமைப்புக்குள்ளான ஐக்கியம் என்பது, கண்டத்தின் மீதும் அதன் மக்களின் மீதும் மிகச் சக்திவாய்ந்த நாடுகளும் மற்றும் பெருநிறுவனங்களும் மேலாதிக்கம் செய்வது என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை என்பது எப்போதும் புலப்படுவதாக இருந்தது. தேசிய மற்றும் சமூக முரண்பாடுகள் தணிவதற்கு மாறாய், அவை கொடிய வடிவங்களை எடுத்து விட்டிருக்கின்றன.

37. ஐரோப்பிய ஒன்றியம் சுக்குநூறாகிக் கொண்டிருக்கிறது, அதற்கு மீண்டும் உயிரூட்ட முடியாது. சோசலிச அரசுகளின் ஒரு உலகக் கூட்டமைப்பின் ஒரு ஒருங்கிணைந்த பாகமாக ஐரோப்பிய சோசலிச அரசுகளின் ஒன்றியம் உருவாக்கப்படுவதன் மூலமே இக்கண்டத்தின் பரந்த உற்பத்தி சக்திகள் அனைவரது நலன்களுக்குமாய் பயன்படுத்தப்பட முடியும். ஐரோப்பா முழுமையிலும் வர்க்கப் போராட்டத்தின் ஒரு எழவிருக்கும் வெடிப்புக்கான அறிகுறிகள் பெருகிக் கொண்டிருக்கின்றன. சிக்கன நடவடிக்கைகளின் அழிவுகரமான தாக்கத்திற்கும், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கும், இராணுவக் காட்டுமிராண்டித்தனத்திற்கும் மற்றும் காலனித்துவ வகையிலான ஆக்கிரமிப்பு போர்களுக்கும் ஏற்கனவே பாரிய எதிர்ப்பு இருந்து வருகிறது. ஆனால் அந்த எதிர்ப்பு இப்போது எந்த அரசியல் வெளிப்பாட்டையும் காண முடியாதிருக்கிறது. தொழிலாள வர்க்கத்தில் அதிகரித்துச் செல்லக் கூடிய எதிர்ப்புணர்வை ஒன்றுதிரட்டி ஒரு வலிமையான மற்றும் தடுக்கவியலாத புரட்சிகர சக்தியாக ஆக்குவதற்கு அடித்தளமாக இருக்கக் கூடிய ஒரு முன்னோக்கினை சோசலிச சமத்துவக் கட்சியும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் வழங்குகின்றன. எங்களுடன் உடன்பாடுடைய அனைவரும் சோசலிச சமத்துவக் கட்சியில் இணைவதற்கும் தொழிலாள வர்க்கத்தின் புதிய புரட்சிகரத் தலைமையாக அதனைக் கட்டியெழுப்புவதற்கும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.