ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

French government presents labour law to the National Assembly

பிரெஞ்சு அரசாங்கம் தொழிலாளர் சட்டத்தை தேசிய நாடாளுமன்றத்தில் முன்வைக்கிறது

By Alex Lantier
5 May 2016

தொழிலாளர் அமைச்சர் மரியம் எல் கொம்ரியின் தொழிலாளர் சீர்திருத்தத்திற்கு எதிராக மில்லியன் கணக்கான இளைஞர்களும் தொழிலாளர்களும் இரண்டு மாத காலம் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்ததன் பின்னர், செவ்வாயன்று, சோசலிஸ்ட் கட்சி இந்த சட்டம் குறித்து தேசிய நாடாளுமன்றத்தில் ஒரு விவாவத்தைத் தொடக்கியது. வெகுஜன எதிர்ப்பை பொருட்படுத்தாமல் இந்த சட்டத்தை ஏறக்குறைய எந்த மாற்றமும் இல்லாமலேயே திணித்து விட முடியும் என்று சோசலிஸ்ட் கட்சியும் வணிக வட்டாரங்களும் நம்பிக்கை கொண்டிருக்கின்றன.

தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் பாரிஸின் நாடாளுமன்றத்திற்கு அருகிலான வசதியான பகுதிகளில் ஒரு சிறிய ஆர்ப்பாட்டத்திற்கு அணிதிரட்டுகின்ற சந்தர்ப்பமாகவும் இது அமைந்திருந்தது. சோசலிஸ்ட் கட்சி மற்றும் நாடாளுமன்றத்திலான பிரதிநிதிகளுக்கு “அழுத்தமளிப்பதன்” மூலமாக, இந்தச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்படுவதை தடுப்பது, அல்லது குறைந்தபட்சம் அதன் மிகவும் பிற்போக்குத்தனமான ஷரத்துகளை திரும்பப் பெறத் தள்ளுவதேனும் சாத்தியமே என்பதான மதிப்பிழந்த பிரமைகளை ஊக்குவிப்பதற்கு அவை முனைந்தன.

ஸ்ராலினிச பொதுத் தொழிலாளர் கூட்டமைப்பு (CGT) தொழிலாள வர்க்கத்தில் அது இன்னும் இருக்கக் கூடிய பிரிவுகளில் சிக்கன நடவடிக்கைக்கான எதிர்ப்பு எதனையும் தடுப்பதற்காகவே 2012 இல் சோசலிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்தது முதலாக வேலை செய்து வந்திருக்கிறது. ஆர்ப்பாட்டங்களுக்கான பதிலிறுப்பில் அதன் தலைவர் பிலிப் மார்டினேஸ் முன்னெடுத்த வாய்வீச்சுப் பாதையையே அது பின்பற்றியிருக்கிறது.

“நாங்கள் கடைசி வரை செல்வோம்” என்று உரக்கக் குரல் கொடுத்தார் மார்ட்டினேஸ். “போர்க்குணம் முதல் நாளின் அதே அளவுக்கு அப்படியே இருக்கிறது” என்று வலியுறுத்திய அவர் நாம் “இந்த மோசமான சட்டத்தை திரும்பப் பெறச் செய்தாக வேண்டும், அப்போது தான் நிறுவனங்களின் காட்டுச் சட்டமாக அல்லாமல் உண்மையான சமூகப் பேச்சுவார்த்தை இடம்பெற முடியும்” என்றார்.

அவரது சகாவான தொழிலாளர் சக்தி (FO) சங்கத்தின் தலைவரான ஜோன் குளோட் மைய்யி (Jean-Claude Mailly) கூறுகையில், FO இப்போதும் சட்டத்தைத் “திரும்பப் பெறவே அழைப்பு விடுத்துக் கொண்டிருப்பதாக”வும் ஆனால் அவரது கூட்டமைப்பு அதனைப் பாதுகாக்கக் கூடும் என்றும் சுட்டிக் காட்டினார். “அவர்கள் மொத்தத்தையும் மாற்றுவார்களாயின், அப்போது பார்க்கலாம்” என்று அவர் மேலும் சேர்த்துக் கொண்டார்.

உண்மையில் தொழிலாளர் சட்டத்தை நாடாளுமன்றத்தில் முன்வைக்கிற PS இன் முடிவானது - ஆர்ப்பாட்டங்களை ஒட்டி அது தொடர்ந்து இதனைத் தள்ளிப்போட்டு வந்திருந்தது - இந்த இயக்கத்திற்கு ஒரு பின்னடைவையே குறிக்கிறது. எல் கொம்ரி சட்டத்தை தொழிலாளர்களின் நலன்களின் பேரில் மாற்றுகிற எண்ணமேதும் PSக்கு இல்லை. மாறாய் அது, மக்களில் 70 சதவீதம் பேர் நிராகரித்த ஒரு சட்டத்தை ஒரு சமூக வெடிப்பை உடனடியாகத் தூண்டாத வகையில் திணிக்கவும், அதே நேரத்தில் அரசியல் பழியில் இருந்து முடிந்த அளவுக்கு தப்பிக்கவும் முனைந்து கொண்டிருக்கிறது.

PS இன் தொழிற்சங்க மற்றும் அரசியல் கூட்டாளிகளது அரசியல் சதி வேலையால் இதனைச் செய்வதற்கான நிலைமைகள் உருவாக்கப்பட்டு விட்டிருப்பதாக PSம் வணிகக் குழுமங்களும் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கின்றன. பல மாதங்களாய், இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் பிரான்சின் மக்களால் மிகவும் வெறுக்கப்படுகின்ற ஜனாதிபதியாக ஆகியிருப்பவருக்கு எதிரான தொழிலாளர்களின் ஒரு பரந்த அணிதிரள்வை தொழிற்சங்கங்கள் தடுத்து நிறுத்தியிருக்கின்றன, இளம் ஆர்ப்பாட்டக்காரர்களை போலிஸ் அடிப்பதற்கும் அனுமதித்திருக்கின்றன. #NuitDebout (#நம் காலடியில் இரவு) இயக்கத்தில் பொதுச் சதுக்கங்களை ஆக்கிரமித்த சமயத்தில் விவாதிக்கப்பட்ட “உள்ளடங்கிய நிகழ்முறைகள்” பிரான்சில் ஒரு வர்க்கப் போராட்டம் வெடிக்காமலேயே சமூக வாழ்க்கையின் பாதையை மாற்றி விடும் என்பதாயும் அவை கூறிக் கொள்கின்றன.

இந்த சட்டத்திற்கு பிரம்மாண்டமான சமூக எதிர்ப்பு இருக்கிறது என்ற உண்மை PS இன் கருத்துஅறியும் பகுதிக்கு நன்கு தெரியும். இருந்தாலும், தொழிற்சங்கங்களாலும் தொழிலாளர் போராட்டம் மற்றும் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி போன்ற PS இன் போலி-இடது கூட்டாளிகளாலும் ஊக்குவிக்கப்படுகின்ற பிரமைகளும், அத்துடன் சேர்ந்து ஒடுக்குமுறையின் முரட்டுத்தனமும் பரந்த மக்களை அரசியல்ரீதியாக திகைப்பில் முடக்கி விடும், வேறு வழியில்லாமல் தொழிலாளர்கள் அச்சட்டத்தை ஏற்கும் வண்ணமான நிலைமைகளை உருவாக்கும் என்பதாய் அவர்கள் நம்புகின்றனர்.

2012 இல், சமூக நல உதவிகளைப் பெறுவதற்கு ஒரு PS அரசாங்கத்தை “நெருக்குவது” எளிதாய் இருக்கும் என்பதான பிரமைகளை விதைத்து ஹாலண்டுக்கு வாக்களிக்க அழைத்த NPA மற்றும் இடது-முன்னணியின் ஜோன்-லுக் மெலன்சோன் போன்ற அத்தனை சக்திகளையும் இது மறுதலிக்கிறது. உண்மையில், ஹாலண்ட் அவருக்கு முன்னிருந்த வலது சாரி ஜனாதிபதியான நிக்கோலோ சார்க்கோசியை விடவும் கூடுதல் ஆக்ரோசமாய் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார். இறுதியில் இந்த ஆண்டில் சமூக கோபம் மிகுந்து செல்லத் தொடங்கிய போது, மாணவர் சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கமைக்க நிர்ப்பந்தம் பெற்றதாய் உணர்ந்த போது, ஹாலண்ட் கலகத் தடுப்பு போலிசை அனுப்பி எதிர்வினையாற்றினார்.

தொழிலாள வர்க்கத்தை சர்வதேச அளவில் அரசியல்ரீதியாகவும் மூலோபாயரீதியாகவும் மீள்நோக்குநிலை படுத்துவது சமூக உரிமைகளை பாதுகாப்பதற்கான அத்தியாவசியமான முன்நிபந்தனையாகும். பெரும் ஐரோப்பிய சக்திகளது சிக்கன நடவடிக்கை மற்றும் போர் ஆகிய வேலைத்திட்டத்திற்கு எதிராய் தொழிலாளர்களிடையே பரந்த எதிர்ப்பை அணிதிரட்டுகின்ற வகையில், ஒரு சோசலிச மற்றும் சர்வதேசிய வேலைத்திட்டத்தின் அடிப்படையிலான ஒரு புரட்சிகரப் போராட்டம் இல்லாமல் சமூக நிலைமைகளில் மேம்பாடு காண்பதோ, அல்லது இருக்கின்ற சமூக உரிமைகளைப் பாதுகாப்பதோ சாத்தியமற்றதாகும்.

தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் தலைமையைப் பின்பற்றி, தேசிய நாடாளுமன்றத்தில் PS இன் பல்வேறு கன்னைகளை ஆதரிக்கின்றதான தந்திரங்கள் மூலமாக தொழிலாளர்களும் இளைஞர்களும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று கூறுகின்ற அமைப்புகள் மீது எந்த நம்பிக்கையும் வைக்கப்பட முடியாது.

நேற்று நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டத்தை முன்வைக்கையில் எல் கொம்ரி தனது கருத்துகளின் போது தெளிவாக்கியதைப் போல, இந்த சக்திகள் இச்சட்டத்தை நிறைவேற்றுவதன் மூலமாக நிதிரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் பயனடையும் நம்பிக்கையும் கூட கொண்டிருக்கலாம். வேலை நேரங்களை நீட்டிப்பது மற்றும் இளைஞர் வேலைவாய்ப்பை இன்னும் ஆபத்தானதாக்குவது ஆகியவை தவிர, இந்த சட்டத்தின் முக்கியமான ஷரத்து பிரான்சின் தொழிலாளர் சட்டத்தை மீறி நிறுவன-மட்டத்திலான ஒப்பந்தங்களில் பேச்சுவார்த்தை நடத்த தொழிற்சங்கங்களுக்கு அசாதாரணமான அதிகாரங்களை அளிக்கிறது.

”நமது சமூக ஜனநாயகம் ஒரு மோதல் கலாச்சாரத்தில் வீழ்ச்சி கண்டு வந்த நிலையில், இந்த சீர்திருத்தம் சமூக உரையாடல் என்கிற தத்துவத்தைத் தொடர்கிறது அத்துடன் பெருக்குகிறது” என்று எல் கொம்ரி பெருமை பொங்க தெரிவித்தார். தனது சட்டம் “தொழிற்சங்கங்களுக்கு நமது குடியரசில் இதுவரை அவை கண்டிராத ஒரு பாத்திரத்தை” வழங்குகிறது, நிறுவனங்களுக்கு “சாதுர்யத்திற்கான புதிய வெளியை வழங்குகிறது.... நமக்கு தொழிற்சங்கங்களைப் பிடிக்கும், நமக்கு வணிகங்களையும் பிடிக்கும், ஏனென்றால் நாட்டிற்கு அவை தேவையாய் இருக்கின்றன” என்று அவர் மேலும் சேர்த்துக் கொண்டார்.

Le Parisien தினசரியிடம் பேசிய எல் கொம்ரி PS இந்த சட்டத்தை திரும்பப் பெறாது என்பதையும், மே-மத்தியில் ஒரு வாக்கெடுப்பு நிர்ப்பந்திக்கப்படும் என்பதையும் வலியுறுத்தினார். சென்ற ஆண்டின் கட்டுப்பாட்டுத்தளர்வு சட்ட விவகாரத்தில் போல, சட்டத்தை எதிர்ப்பவர்களை அரசாங்கத்திற்கு எதிரான ஒரு கண்டனத் தீர்மான வாக்குக்காய் தயாரிப்பு செய்ய நிர்ப்பந்திக்கின்ற அரசியல்சட்டம் 49-3 பிரிவைப் பயன்படுத்தி, ஒரு வாக்கெடுப்பு இல்லாமலேயே அதனைத் திணிப்பதும் கூட சாத்தியமே. அவர் கூறினார், “நாடாளுமன்றத்தின் முறை வந்திருக்கிறது, சட்டத்தை செழுமைப்படுத்த அது எங்களை அனுமதிக்கும். வீதிகளிடம் நாம் சரணடைந்து அதனைத் திரும்பப் பெற வேண்டுமா? கூடாது.”

தொழிலாளர்களிடையே கோபத்திற்கு முகம் கொடுக்கின்ற நிலையில், PSம் அதன் கூட்டாளிகளும், நாடாளுமன்றப் பிரதிநிதிகள் இந்தச் சட்டத்தை எவ்வாறு “செழுமைப்படுத்தலாம்” என்பதைக் காண்பதாகக் கூறி எத்தனை பிரமைகளை விதைக்க முடியுமோ அத்தனையை விதைக்க முற்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆயினும் இது ஒரு சிக்குபொறியே ஆகும், ஏனென்றால் ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்துகின்ற ஒரு முயற்சியிலேயே சட்டத்தின் வாசகங்களைத் திருத்த தாங்கள் நோக்கம் கொண்டிருப்பதை PS இன் நாடாளுமன்றப் பிரதிநிதிகள் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள், இதன்மூலம் அவர்கள் சிக்கன நடவடிக்கைக்கான தொழிலாளர்களின் எதிர்ப்பை இடறச் செய்ய முயற்சி செய்கிறார்கள்.

எல் கொம்ரி சட்டத்திலான திருத்தங்களை மேற்பார்வை செய்வதற்காக நியமிக்கப்பட்டிருக்கும் பேச்சுவார்த்தையாளரான PS இன் நாடாளுமன்ற பிரதிநிதி Christophe Sirugue, Le Parisien தினசரிக்கு அளித்திருந்த ஒரு நீண்ட நேர்காணலில், இந்த சட்டத்தை உறுதியுடன் பாதுகாத்தார். வேலையிடங்களில் வேலைநிறுத்தங்களையும் சமூக ஆர்ப்பாட்டங்களையும் அநேகமாய் தூண்டக் கூடியதாய் அவர் கருதிய ஷரத்துகள் மீது மட்டும் விமர்சனம் வைத்தார்.

எல் கொம்ரி சட்டம் பாரிய வேலையிழப்புகளுக்கு வழிவகுக்கும் என்று தொழிலாளர்களை எச்சரித்தவர்கள் மீது Sirugue தாக்கினார். “ஆரம்பத்தில் இருந்தே இந்தச் சட்டம் வேலையிழப்புகளுக்கு வழிவகுக்கும் என்பதாய் கூற அனுமதித்தது தவறு, அது மூலத் தவறாகி விட்டது.”

தொழிற்சங்கங்கள் வாக்களித்த ஒப்பந்தங்கள் மீது வேலையிடங்களில் கருத்துவாக்கெடுப்புகளை அனுமதிப்பதற்கு இச்சட்டத்தில் இருக்கும் ஷரத்துகளை அவர் விமர்சித்தார். “நிறுவனங்களுள் நிரந்தரமான மோதல் அபாயத்தை இது உருவாக்கிவிடும்” என்று அவர் அஞ்சினார். ஒருங்கிணைப்பு இல்லாமல் நிறுவன-மட்டத்திலான ஒப்பந்தங்கள் கட்டுப்பாடில்லாமல் பரவிச் செல்வதைக் குறித்தும் அவர் எச்சரித்தார். ஒரு துறையில் ஒவ்வொரு நிறுவனத்திற்குள்ளும் இருக்கக் கூடிய சங்கங்கள் போட்டி போட்டு தொழிலாளர் ஊதியங்களைக் கீழிறக்குவதன் மூலமாக போட்டித்திறனை அதிகரிக்க முனையலாம் என்று அவர் அச்சம் வெளியிட்டார்.

Sirugue இன் வார்த்தைகளில் “சமூக வீசியெறியதலின்” இந்த நிகழ்முறையானது, சமூக மோதலை, குறிப்பாக தொழிலாளர்களின் ஒருபக்கத்திற்கும் வணிகக் குழுமங்கள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் மறுபக்கத்திற்கும் இடையிலான மோதலை, தீவிரப்படுத்தும்.