ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The El Khomri law in France and the Schröder-Blair Paper

பிரான்சில் எல் கொம்ரி சட்டமும், ஷ்ரோடர்-பிளேயர் ஆவணமும்

By Peter Schwarz
28 May 2016

பிரான்சில் எல் கொம்ரி தொழிலாளர் சீர்திருத்த சட்டத்திற்கு எதிரான வேலைநிறுத்தங்கள் மற்றும் பாரிய ஆர்ப்பாட்டங்கள், ஐரோப்பா எங்கிலுமான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடம் ஆதரவை பெற்று வருகிறது.

சமூக செலவினங்கள் மற்றும் தொழிலாளர்களின் கூலிகளில் செய்யப்பட்ட வெட்டுக்கள் உட்பட “கட்டமைப்பு சீர்திருத்தங்கள்" (structural reforms) என்றழைக்கப்படுவது, தசாப்தங்களாக, தவிர்க்க முடியாததாக சித்தரிக்கப்பட்டு வந்தன. பிரான்சுவா ஹோலாண்ட் மற்றும் மானுவெல் வால்ஸ் இன் பிரெஞ்சு அரசாங்கம், தலைமுறைகளாக தொழிலாளர்கள் போராடி வென்றெடுத்த உரிமைகள் மற்றும் தேட்டங்களை படைகளை பிரயோகித்து அழித்துவிடலாமென கருதியது. அது தவறான கணிப்பாகிப்போனது. வெறுப்புக்குள்ளான அந்த சட்டத்தை, அது உத்தரவாணைகள் கொண்டு திணித்தபோது, அது தொழிலாளர்களை பயமுறுத்தி விடவில்லை, மாறாக அவர்களது கோபத்தைத்தான் தூண்டிவிட்டது. அப்போதிருந்து, வேலைநிறுத்தங்களும் போராட்டங்களும் பரவி ஒட்டுமொத்த நாட்டையும் ஸ்தம்பிக்கச் செய்துள்ளன.

பிரான்ஸ் நிலைமை, சர்வதேச வர்க்க போராட்டத்தில் ஒரு பிரதான அபிவிருத்தியைக் குறிக்கிறது. ஏனைய பல ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் மற்றும் உலகின் பெரும் பாகங்களிலும் அதேபோன்ற மனோநிலை மேலோங்கி வருகிறது. உலகெங்கிலும் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்கள் அதிகரிப்பதுடன் சேர்ந்து, இது வர்க்க போராட்டத்தின் மீளெழுச்சியில் வெளிப்படுத்தப்படுகின்றது.

ஏனைய போராட்டங்களை போலவே பிரான்சில் உள்ள இயக்கம் தனிமைப்படுத்தப்பட்டு மற்றும் குரல்வளை நசுக்கப்பட்டு, பின்னர் அதன் விளைவாக ஏற்படும் ஏமாற்றத்திலிருந்து தீவிர வலது தேசிய முன்னணி இலாபமடையக் கூடிய அபாயம் இருக்கிறது. இந்த ஆபத்தை அகற்ற, இந்த நிலைமையின் மூலவேர்களை ஆராய்வதும் மற்றும் தற்போதைய தாக்குதல்களுக்கு யார் பொறுப்பாளி என்பதை தீர்மானிப்பதும் அவசியமாகும்.

தங்களைத்தாங்களே "இடது" என்றும், "சோசலிஸ்ட்" என்றும் கூறும் ஓர் அரசாங்கத்திற்கு எதிராக பிரெஞ்சு தொழிலாளர்கள் சண்டையிட்டு வருகிறார்கள். இது தற்செயலானதோ, அல்லது தவறான புரிதலோ அல்ல. கடந்த 15 ஆண்டுகளாக, அனைத்தினும் முதன்மையாக, தொழிற்சங்கங்கள், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் அவர்களை தொடர்ந்து வந்த எண்ணற்ற போலி-இடது குழுக்களால் ஆதரிக்கப்பட்ட சமூக ஜனநாயகவாதிகள் தான், தொழிலாளர்களுக்கு எதிரான கட்டமைப்பு சீர்திருத்தங்களை முன்னெடுத்தவர்கள் ஆவர்.

இந்த உள்ளடக்கத்தில், இரண்டு சமூக ஜனநாயக அரசாங்க தலைவர்களான பிரிட்டிஷ் பிரதம மந்திரி டோனி பிளேயர் மற்றும் ஜேர்மன் சான்சிலர் ஹெகார்ட் ஷ்ரோடர் இருவரும் கூட்டாக 1999 இல் பிரசுரித்த ஓர் ஆவணத்தைத் திரும்பிப் பார்ப்பது மதிப்புடையதாக இருக்கும். அதற்குப் பின்னரில் இருந்து ஜேர்மனி, இங்கிலாந்து, தெற்கு மற்றும் கிழக்கு ஐரோப்பா, கிரீஸ் மற்றும் இப்போது பிரான்ஸ் என இதுவரையில் நடந்துள்ள ஏறத்தாழ சகல சமூக தாக்குதல்களும் அதில் விவரிக்கப்பட்டிருந்தன.

“ஐரோப்பிய சமூக ஜனநாயகவாதிகளுக்கு முன்னால் உள்ள பாதை" என்று தலைப்பிட்ட அந்த ஆவணத்தில், பிளேயர் மற்றும் ஷ்ரோடர், "உரிமைகளை பெறுவதற்கான சமூக பாதுகாப்பு வலைப்பின்னலை, ஒவ்வொருவரினதும் தனிநபர் பொறுப்புகளுக்கான ஒரு உந்துவிசையாக" மாற்றம்செய்வதற்கு அழைப்புவிடுக்கிறார்கள்.

நாம் அப்போது உலக சோசலிச வலைத் தளத்தில் எழுதுகையில், அந்த ஆவணம் "சமூக சீரழிப்பிற்கான ஒரு பட்டியலாகும். ஐரோப்பாவின் பொருளாதார, நிதியியல் மற்றும் சமூக கொள்கையின் நிரந்தர தொகுப்பாக மாறியுள்ள சமூக காட்டுமிராண்டித்தனம், மிக கவனமானரீதியில் மற்றும் அங்கீகரிக்கத்தக்க வகையில் தொகுக்கப்பட்டுள்ளது. அரசு செலவினங்களில் வெட்டுக்கள்; அரசு சேவைகளில் துல்லியம், போட்டித்தன்மை மற்றும் செயல்திறனின் தகுதிவகைகளை நிர்ணயித்தல், சமூக காப்பீட்டு முறையில் சீரமைப்பு; வணிகங்களை ஊக்குவித்தல்; தொழில் வழங்குனர்கள் மீதான மற்றும் சொத்துக்கள் மீதான வரி குறைப்புகள்; வளைந்து கொடுக்கும் தன்மை … இன்னும் அதிகமாக வளைந்து கொடுக்கும் தன்மை என அந்த எழுத்தாளர்கள் ஒவ்வொரு குறைப்பையும் முன்னெடுக்க கவனம் எடுத்திருக்கிறார்கள்,” என்று குறிப்பிட்டோம்.

“இடதுக்கான ஒரு ஆக்கபூர்வமான தொழிலாளர் சந்தை கொள்கை" என்ற அத்தியாயத்தை உலக சோசலிச வலைத் தளம் தொகுத்தளித்தது, “சகல சமூக மற்றும் அரசியல் வழிவகைகளும் தனிநபர் பொறுப்புகளை ஊக்குவிக்க பயன்படுத்தப்படும். வரி மற்றும் சமூக கட்டண முறை 'மக்களின் நலன்களுக்காக இயங்குகிறது என்பதை உறுதிப்படுத்த' சீரமைக்கப்பட உள்ளது. சம்பளம் குறைந்த 'தகுதி-கால வேலைகளுக்கு' (probationary jobs) அரசு மானியம் வழங்கப்படும் மற்றும் சமூக ஊதியம் பெறும் அனைவரும் அவர்களது திறமைக்கேற்ப அவர்களது வாழ்க்கைக்கு அவர்களே சம்பாதிக்க செய்ய மதிப்பீடு செய்யப்படுவார்கள். சுருக்கமாக கூறுவதானால், குறைந்த கூலி வேலைகளை ஏற்றுக் கொள்ள நிர்பந்திக்க, அவ்விதத்தில், ஒட்டுமொத்தமாக கூலிகளைக் குறைக்க உதவும் வகையில், அந்த ஆவணம் பாரிய அரசு அழுத்தத்தைப் பரிந்துரைக்கிறது.”

சமூக ஜனநாயகவாதிகள் ஏறத்தாழ ஐரோப்பாவின் ஒவ்வொரு இடத்திலும் ஆட்சியிலிருந்த அந்நேரத்தில் தான் ஷ்ரோடர்-பிளேயர் ஆவணம் வெளியானது. சோவியத் ஒன்றிய பொறிவுக்குப் பின்னர், ஆளும் உயரடுக்கு அதன் சுய-செல்வசெழிப்பிற்கு அர்பணித்துக் கொண்ட காலமாக 1990 கள் இருந்தன. அவர்கள் சமூகரீதியில் மனிதநேய அணுகுமுறையை அதிகமாக ஏற்பார்கள் என்ற நம்பிக்கையில், அந்த தசாப்தத்தின் இறுதியில், ஐரோப்பா எங்கிலுமான தொழிலாளர்கள் சமூக ஜனநாயகவாதிகள் தேர்ந்தெடுக்கப்படுவதை ஆதரித்தனர்.

ஆனால் எதிர்மறையானதே நடந்தது. ஷ்ரோடர்-பிளேயர் ஆவணம் ஜேர்மனியில் ஹார்ட்ஸ் சட்டங்களுக்கு, மற்றும் ஸ்பெயின், போர்ச்சுக்கல், இத்தாலி மற்றும் கிரீஸில் சமூக செலவு குறைப்பு போக்கிற்கு ஒரு செயல்திட்டடமாக சேவையாற்றியது. இந்நாடுகள் அனைத்திலும், நடைமுறை விதியைப் போல, சமூக ஜனநாயகவாதிகள் பழமைவாத அரசாங்கங்களை விட அதிக கடுமையான சிக்கனப் போக்கைப் பின்பற்றினார்கள்.

ஹார்ட்ஸ் சட்டங்களை எழுதியவரும், அதிலேயே அவர் பெயரைக் கொண்டுள்ள பீட்டர் ஹார்ட்ஸ், ஜேர்மன் சமூக ஜனநாயக கட்சி அங்கத்தவரும் மற்றும் IG Metall தொழிற்சங்க அங்கத்தவருமான இவர், இரண்டாண்டுகளுக்கு முன்னர் சமூக வெட்டுக்கள் குறித்து பிரெஞ்சு ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்க பாரீஸிற்கு விஜயம் செய்திருந்தார். எல் கொம்ரி சட்டம் இந்த கூட்டுழைப்பின் உடனடி விளைபொருளாகும்.

இதற்கிடையே, உலகெங்கிலும் உள்ள சமூக ஜனநாயகவாதிகள் பாரிய வீழ்ச்சியடைய தொடங்கினர். தொழிலாளர்கள் பிரான்சில் சோசலிஸ்ட் கட்சிக்கு எதிராகவும் மற்றும் கிரீஸில் சிக்கனக் கொள்கைகளை இன்னும் அதிகமாக தீவிரப்படுத்தி உள்ள சிரிசாவிற்கு எதிராகவும் கிளர்ந்தெழுந்து வருகிறார்கள். இந்த கிளர்ச்சிக்கு ஒரு நனவுபூர்வமான அரசியல் மூலோபாயம் அவசியமாகும்.

இது வெறுமனே ஊழல்பீடித்த சமூக ஜனநாயக எந்திரம் மற்றும் அவற்றின் சுற்றுவட்டத்தில் நகரும் தொழிற்சங்கங்கள் மற்றும் போலி இடது குழுக்களின் திவால்நிலைமை கிடையாது, மாறாக இவையெல்லாம் எதனை அடித்தளத்தில் கொண்டிருக்கின்றனவோ அந்த தேசிய வேலைத்திட்டத்தின் திவால்நிலைமையாகும். பூகோளமயப்பட்ட உற்பத்தியானது, சகல தேசிய, சமூக மற்றும் தொழிலாளர் சந்தை கொள்கைகளின் அடித்தளத்தை அழித்துள்ளது. இன்று, சமூக ஜனநாயகவாதிகளும் தொழிற்சங்கங்களும் சர்வதேச போட்டித்தன்மைக்கு எதிராக தங்களின் "சொந்த" பெருநிறுவனங்களை பாதுகாக்க, தொழிலாளர்கள் மீது நிரந்தரமான தாக்குதல்களை திணிப்பதேயே அவர்களின் கடமைப்பாடாக காண்கிறார்கள்.

எல் கொம்ரி சட்டத்தையும், அத்துடன் தொழிலாள வர்க்கத்தின் மீதான ஏனைய ஒவ்வொரு தாக்குதலையும், ஒரு புரட்சிகர, சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அமைந்த தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான, சர்வதேச இயக்கத்தால் மட்டுமே தோற்கடிக்க முடியும். எல் கொம்ரி சட்டத்திற்கு எதிரான கிளர்ச்சி அத்தகையவொரு இயக்கத்தைக் கட்டமைப்பதற்கான தொடக்க புள்ளியாக மாற வேண்டும்.

ஐரோப்பா எங்கிலும் உள்ள தொழிற்சங்கங்களும் மற்றும் சமூக ஜனநாயக கட்சிகளும் ஹோலாண்ட் பின்னால் அணிதிரண்டு, பிரெஞ்சு தொழிலாளர்களின் கிளர்ச்சிக்கு கடுமையாக எதிர்ப்பை காட்டுகின்றனர். ஐரோப்பிய தொழிலாளர்கள் பிரான்சில் அவர்களது சக தொழிலாளர்களுக்கு பின்னால் அணிவகுத்து, அவர்கள் சமூக ஜனநாயகம் மற்றும் தொழிற்சங்கங்களின் செல்வாக்கில் இருந்து விடுவித்துக் கொண்டு, ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளுக்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.