ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

French government backs neo-fascist protest against opposition to labor law

தொழிலாளர் சட்ட எதிர்ப்புக்கு எதிரான நவபாசிச ஆர்ப்பாட்டத்தை பிரெஞ்சு அரசாங்கம் ஆதரிக்கிறது

By Alex Lantier
19 May 2016

புதனன்று, நவபாசிச தேசிய முன்னணி (FN), உடன் நெருக்கம் கொண்ட Alliance போலிஸ் சங்கம் (syndicat de police Alliance), சோசலிஸ்ட் கட்சியின் பிற்போக்குத்தனமான தொழிலாளர் சட்டத்தை விமர்சனம் செய்கின்ற #NuitDebout இயக்கம் முன்னதாக பிரான்ஸ் எங்கிலும் ஆக்கிரமித்திருந்த சதுக்கங்களில், ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது.

முன்னணி FN தலைவர்கள் பலரும் இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டனர். “போலிஸ்-விரோத வெறுப்பை” எதிர்ப்பதான சாக்கில், இந்த ஆர்ப்பாட்டங்கள், தொழிலாளர் சட்டத்திற்கான - சென்ற வாரத்தில் இந்த சட்டத்தை வாக்களிப்பு இல்லாமல் தேசிய நாடாளுமன்றத்தில் PS முன் தள்ளியிருந்த போதும் கூட மக்களின் பெரும்பான்மையானோர் இப்போதும் அச்சட்டத்தை எதிர்த்து வருகின்றனர் - எதிர்ப்பை அச்சுறுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தன. தொழிலாளர் சட்டமானது தொழிலாளர்களின் ஊதியங்களையும், தேட்டங்களையும் மற்றும் வேலை நிலைமைகளையும் அழித்தொழிப்பதற்கு அடித்தளமிட்டுக் கொண்டிருக்கிறது.

முன்கண்டிராத இந்த அதி-வலதுசாரிகளின் ஆர்ப்பாட்டமானது ஐரோப்பாவில் ஜனநாயகத்தின் சிதைவு துரிதம் பெற்றுச் செல்வதற்கு நிரூபணமாக இருக்கிறது. இது நிச்சயமாக FN ஆதரவு ஆர்ப்பாட்டமாக இருந்த போதிலும், இதற்கு PS அரசாங்கத்தின் அமைப்புரீதியான மற்றும் அரசியல்ரீதியான ஆதரவு இருந்தது மட்டுமல்ல, CGT உட்பட #NuitDebout இயக்கத்திற்கு நெருக்கமான இடது முன்னணி மற்றும் தொழிற்சங்கங்களின் பங்கேற்பும் இருந்தது. ஐரோப்பாவெங்கிலும் சிக்கன நடவடிக்கைகளுக்கும், குறிப்பாக தங்களது நீண்டகாலக் கூட்டாளியான PSக்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பு அதிகரித்துச் செல்வதில் மிரட்சி கண்டுள்ள இந்த சக்திகள், தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் எதிராய் தங்களை அதிவலதுகளின் பின்னால் நிறுத்திக் கொண்டிருக்கின்றன.

பாரிஸில் குடியரசு சதுக்கத்தில் பகலில் திட்டமிடப்பட்டிருந்த Alliance ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக, பணியில் இருந்த துணைஇராணுவப் போலிஸ், #NuitDebout இயக்கத்திற்காக சதுக்கத்தில் இடம்பிடித்து வைத்திருந்த அமைப்புகள் அதை கைவிட்ட பின்னர், சதுக்கத்திற்கு வரும் தெருக்களில் தடைகளை அமைத்தது. சுரங்கப்பாதை வழியாக சதுக்கத்துக்கு வரும் வழியையும் பாரிஸ் prefecture தடுத்து விட்டது. போலிசார், அவர்களின் நண்பர்கள், ஒரு சில செய்தியாளர்கள் மற்றும் (பிரதானமாக ஆனாலும் பிரத்யேகமானதாக அல்ல) FN இல் இருந்தான அரசியல்வாதிகள் இவர்களைத் தவிர்த்த அனைவருக்கும் இந்த சதுக்கத்திற்கான அணுகலை போலிஸ் காவலர்கள் முடக்கி விட்டனர்.

சில நூறு போலிசார் சதுக்கத்தை ஆக்கிரமித்த நிலையில், காவல் இருந்த துணை-இராணுவ படையினர் Alliance ஆர்ப்பாட்டத்திற்கு எதிர்ப்பைக் காட்ட சதுக்கத்திற்குள் செல்ல விரும்பிய இளைஞர்களை சீண்டி ஆத்திரமூட்டினர். அவசரகால நிலையின் ஷரத்துகளை முன்வைத்து, prefectureம் போலிஸ் வன்முறைக்கு எதிராக அழைப்பு விடுக்கப்பட்ட ஒரு எதிர்-ஆர்ப்பாட்டத்தை தடை செய்தது. இது “பொது ஒழுங்கிற்கு ஆபத்தான இடையூறுகளை அளிக்கக் கூடிய ஒரு தீவிரமான அபாயத்தை” முன்நிறுத்தியதாய் அது கூறியது.

திங்களன்று, ஒரு பாசிச-விரோத அமைப்பின் 18 உறுப்பினர்களை இந்த வாரத்தில் நடைபெறவிருந்த தொழிலாளர் சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் பங்குபெறுவதில் இருந்து தடை செய்கின்ற ஒரு உத்தரவையும் prefecture பிறப்பித்திருந்தது. அவர்கள் போலிசைத் தாக்கியதாக prefecture கூறவில்லை, இன்னும் சொன்னால் அவர்கள் கைது செய்யப்படவும் கூட இல்லை, ஆனாலும் அவசரகாலநிலையின் கீழான சிறப்பு அதிகாரங்களைக் கொண்டு அவர்கள் ஆர்ப்பாட்டங்களில் “தொடர்வதற்கு” தடை செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து டஜன் கணக்கானோர் PS இனால் முன்கூட்டி “தடுப்பு” நடவடிக்கை கைதுகளுக்கு இலக்கானமை பின்தொடர்ந்தது.

FN தலைவரான மரின் லு பென்னின் உறவினரும் FN இன் சட்டமன்ற உறுப்பினருமான மரியோன் மரிசால்-லு பென், மற்றும் FN ஐச் சேர்ந்த ஒரு முன்னணி வழக்கறிஞரான ஜில்பேர் கொலார் ஆகியோர் Alliance ஆர்ப்பாட்டத்தில் பங்குபெற்றனர். “பொதுதொடர்பு வேலை செய்யப் போவதில்லை” என்று கூறி பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் கூற அவர்கள் மறுத்தனர். ஆயினும், இந்த ஆர்ப்பாட்டத்தை ஆதரித்தான ஒரு செய்தியை மரின் லு பென் வழங்கினார் என்பதுடன் போலிசுக்கு கூடுதலான அவசர அதிகாரங்களையும் அவர் கோரினார்.

”தேசிய முன்னணி போலிஸை ஆதரிக்கிறது” என்று தலைப்பிடப்பட்ட அந்த செய்தி அறிவிக்கிறது: “அநேக தவறு செய்பவர்கள் அனுபவித்து வருகின்ற தண்டிப்பின்மையை முடிவுக்குக் கொண்டுவருகின்ற வகையில் சற்றும் சகிப்புத்தன்மை அற்ற வழிமுறைகளை செயல்முறைப்படுத்துதல், நமது பாதுகாப்புப் படைகளின் பணியாளர்கள் மற்றும் கருவிகளை வலுப்படுத்துதல், போலிஸின் தற்காப்புக்கான முன்னனுமானிப்பை உருவாக்குதல் —இதுவே நமது போலிஸை ஆதரிப்பதற்கும் அதன்மூலம் குடியரசின் அதிகாரத்தை மீட்சி செய்வதற்கும் தேசிய முன்னணி கொண்டுள்ள திட்டமாகும்.”

LR (Les Républicains) கட்சியைச் சேர்ந்த எரிக் சியோட்டி மற்றும் ஜியோஃப்ரேய் டிடியேர், தேசியப் பொருளாதார அரசியல்வாதியான நிக்கோலோ டுபோன்-எனியோன், மற்றும் ஜோன்-லுக் மெலன்சோனால் ஸ்தாபிக்கப்பட்ட இடது கட்சியைச் சேர்ந்த ஒரு பிராந்திய கவுன்சிலரான எரிக் கோக்குரல் என வலது-சாரி LR அல்லது இடது முன்னணியைச் சேர்ந்த தலைவர்கள் அல்லது அவற்றின் கூட்டணிக் கட்சிகளது தலைவர்களும் நவ-பாசிஸ்டுகளுடன் சேர்ந்து குடியரசு சதுக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Lyon, Nice, Strasbourg, Mulhouse, Lille, Calais, Rennes, Montpellier மற்றும் Caen உள்ளிட பிரான்ஸ் எங்கிலும் டஜன்கணக்கான பிற நகரங்களிலும் Alliance ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

பாதுகாப்பு படையினரை புகழ்ந்து தள்ளுவதன் மூலம் PS அரசாங்கம் எதிர்வினையாற்றியது. “இந்த சிரமமான சூழலில் பாதுகாப்புப் படையினர் அனைவருக்கும் ஆதரவான ஒரு தெளிவான செய்தியை” வழங்குவதற்காக ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் நேற்று ஒரு மந்திரிசபை கூட்டத்தை தொடக்கினார்.

பிரதமரும் முன்னாள் உள்துறை அமைச்சருமான மானுவல் வால்ஸ், பாதுகாப்புப் படைகளுடனான எந்த மோதலும் பிரெஞ்சு தேசத்தின் மீதான ஒரு போர் அறிவிப்பாகும் என்று மறைமுகமாகக் கூறுகிறதான ஒரு அறிக்கையை ட்விட்டரில் வெளியிட்டார். ”போலிசும் இராணுவமும் நமது குடிமக்களையும் ஸ்தாபனங்களையும் அன்றாடம் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றன. அவற்றின் மீது தாக்குதல் நடத்துவதென்பது நம் அனைவரின் மீதும் தாக்குதல் நடத்துவதாகும்.”

CGT தலைவரான பிலிப் மார்டினேஸின் ஆதரவும் கூட நவ-பாசிச ஆர்ப்பாட்டத்திற்குக் கிட்டியது. போலிஸ் படைகளுக்கு எதிரான வன்முறையை அவர் கண்டனம் செய்கிறாரா, ”போலிஸ்-விரோத வன்மத்திற்கு” எதிரான ஆர்ப்பாட்டங்களில் CGT கலந்து கொள்ளுமா என்று கேட்கப்பட்டதற்கு, அவர் உடன்பாட்டுடன் கூடிய பதிலை அளித்தார்.

”மிகச் சிறு எண்ணிக்கையில் இருந்தாலும் கூட நம்பமுடியாத அளவுக்கான சேதத்தை உருவாக்குபவர்களாக இருக்கின்ற, சட்டத்தை மதிக்காதவர்களாக சொல்லப்படுபவர்களிடம் இருந்தானவை உள்பட... அத்தனை வன்முறைகளையும் நாங்கள் கண்டனம் செய்கிறோம்” என்றார் அவர். “அதனால் தான் CGT போலிஸ் சங்கங்களும் புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவிருக்கின்றன” என்று அவர் மேலும் சேர்த்துக் கொண்டார்.

Alliance ஆர்ப்பாட்டங்களுக்கு PS, CGT மற்றும் இடது முன்னணி ஆகியவற்றின் எதிர்விளைவுகள் பிரான்சிலும் சர்வதேச அளவிலும் தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்குமான ஒரு தீவிர எச்சரிக்கையாகும். PS இன் சுற்றுவட்டத்தில் இயங்குகின்ற போலி இடது குழுக்கள் அத்தனைக்கும் WSWS காட்டுகின்ற தொடர்ச்சியான எதிர்ப்பினை இது சரியென நிரூபணம் செய்கிறது.

உலகப் பொருளாதார நெருக்கடி மற்றும் ஆழமான சிக்கன நடவடிக்கைகளின் இந்த எட்டு வருடங்கள், ஐரோப்பிய சமூகத்தை சீர்குலைத்து தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களது பரந்த அடுக்குகளை வறுமைக்குள் தள்ளியிருப்பது மட்டுமல்ல, இருக்கின்ற அரசியல் கட்சிகளையும் அது பலவீனப்படுத்தியுள்ளது. ஐரோப்பாவெங்கிலும், சமூக ஜனநாயகக் கட்சிகளும் அவர்களது அரசியல் மற்றும் தொழிற்சங்கக் கூட்டாளிகளும் பரந்த வெகுஜனங்களிடையே மதிப்பிழந்தும் வெறுக்கப்படுவதாகவும் இருக்கின்றன. பெரு வணிகங்களால் கோரப்படுகின்ற சமூக வெட்டுகள் குறித்த கருத்தொற்றுமை என்ற பிரமையை வழங்குவதற்காக வணிகக் குழுமங்களும் தொழிற்சங்கங்களும் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஒழுங்கமைத்திருந்த “சமூக கலந்துரையாடல்” (dialogue social) பொறிமுறைகள் உருக்குலைந்து வருகின்றன.

சிக்கன நடவடிக்கைகள், போர், மற்றும் ஜனநாயக விரோதமான சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கான எதிர்ப்பு, தொழிலாளர்களிடையே பரந்த அளவில் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. எப்படியிருந்த போதிலும், தொழிலாள வர்க்கம் முகம்கொடுக்கின்ற ஒரு பிரதான தடைக்கல் என்னவென்றால், தொழிலாள வர்க்கத்திற்கென பேசுவதற்காக எந்தவொரு கட்சியும் இல்லாத நிலைமைகளின் கீழ், ஒரு புரட்சிகரத் தலைமை இல்லாமல் அது போராட்டத்திற்குள் நுழைந்து கொண்டிருக்கிறது. பல தசாப்தங்களாக “இடது” அரசியல் என்று கூறி கையளிக்கப்பட்டு வந்திருந்த ஒன்றில் மேலாதிக்கம் செலுத்திவந்திருக்கக் கூடிய கட்சிகள் தொழிலாளர்களுக்கு முற்றிலும் குரோதமானவையாக நிரூபணமாகியிருக்கின்றன.

இந்த உள்ளடக்கத்தில், PS இன் அரசியல் வீழ்ச்சியினாலும் சிக்கன நடவடிக்கைகளுக்கான எதிர்ப்பின் கதையை முடிக்க ஹாலண்ட் திறமற்றவறாக இருப்பதாலும், திகைத்துப் போயிருக்கும் முதலாளித்துவ வர்க்கமானது, அது விரும்பக் கூடிய பொருளாதாரக் கொள்கைகளை பலவந்தமாக திணிப்பதற்கு அதனை அனுமதிக்கக் கூடிய முதலாளித்துவ ஜனநாயகத்தின் மாற்று வடிவங்களை கோரிக் கொண்டிருக்கிறது, சிந்தித்துக் கொண்டிருக்கிறது. பாரிஸில் நவம்பர் 13 தாக்குதல்களுக்கு பின்னர் திணிக்கப்பட்ட அவசரகாலநிலையானது, தொழிலாள வர்க்கத்திலான சமூக எதிர்ப்பை நசுக்கும் நோக்கத்துடனான சர்வாதிகாரத்தை நோக்கியதொரு நகர்வுக்கு ஒத்திகை நடவடிக்கையாக நிரூபணமாகியுள்ளது.

பிரான்சில் இருக்கும் தொழிலாளர்கள் போரையும் சிக்கன நடவடிக்கைகளையும் எதிர்ப்பதற்காக மட்டுமன்றி, அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் PS அரசாங்கத்திற்கு எதிராய் ஒரு அரசியல் போராட்டத்தைத் தொடக்கும் அவசியத்திற்கு முகம்கொடுக்கின்றனர். தங்களின் பங்குக்கு முதலாளித்துவ வருணனையாளர்கள், பிரான்சிலேயே உள்நாட்டுப் போர் மற்றும் கிளர்ச்சிஎதிர்ப்பு நடவடிக்கை நிலைமைகளுக்கு அவர்கள் தயாரித்துக் கொண்டிருப்பதாக பகிரங்கமாகவும் ஆத்திரத்தை தூண்டுகின்ற வகையிலும் அறிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

“உள்நாட்டுப் போருக்கு முந்தைய நிலைமை பிரான்சில் எழுந்து கொண்டிருக்கிறது” என்று எழுதுகின்ற Le Figaro வின் தலையங்க ஆசிரியரான Ivan Rioufol இந்த சூழ்நிலைக்கு முதலாளித்துவ எதிர்ப்பின் மீது பழிசுமத்தினார். அதனை இவர் இஸ்லாமியவாதத்துடன் சமப்படுத்தினார். “முதலாளித்துவ மற்றும் தாராளவாத மேற்கத்திய சமூகத்தின் மாதிரிக்கான வன்முறையான எதிர்ப்பு” குறித்து வருந்திய அவர் எழுதுகிறார்: “இந்த நிராகரிப்பு தீவிரப்பட்ட இடதினாலும் அரசியல் இஸ்லாமினாலும் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.. உள்நாட்டுப் போர் என்பது இஸ்லாமியவாத-இடதுசாரிகளின் மற்றும் அவர்களது ஒத்துழைப்பாளர்களின் இதயங்களிலும் மூளைகளிலும் ஏற்கனவே இருக்கிறது. ஒரு குற்றவியல்தனமான போலிஸ் படைக்கு முகம் கொடுக்கையில் தற்காப்பில் செயல்படுவதாக அவர்கள் கூறுகின்றனர்.”

சுதந்திரச் சந்தை வருணனையாளரான நிக்கோலோ பாவரேஸ் ஜேர்மன் பத்திரிகையான Die Welt இல் எழுதினார்: “2017 இல் பிரான்ஸ் சீர்திருத்தத்திற்கும் அல்லது புரட்சிக்கான முயற்சிக்கும் இடையில் தெரிவு செய்யவேண்டியதாயிருக்கும், இது அதி வலதின் திசையில் செல்வதற்காய் அச்சுறுத்துகிறது.”