ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

French Socialist Party uses special powers to impose unpopular labour law reform

மக்கள்விரோத தொழிலாளர் சட்ட சீர்திருத்தத்தைத் திணிக்க பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சி சிறப்பு அதிகாரங்களைப் பிரயோகிக்கிறது

By Alex Lantier
11 May 2016

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மரியம் எல் கொம்ரியின் தொழிலாளர் சட்ட சீர்திருத்தத்தை தேசிய நாடாளுமன்றத்தில் ஒரு வாக்கெடுப்பு இல்லாமலேயே நிறைவேற்ற முயற்சிப்பதென சோசலிஸ்ட் கட்சி (PS) பிரதம மந்திரி மானுவெல் வால்ஸின் நேற்றைய முடிவு, பிரெஞ்சு ஜனநாயகத்தின் ஓர் ஆழ்ந்த நெருக்கடியைக் குறிக்கிறது.

மக்கள்தொகையில் முக்கால் பகுதியினரால் எதிர்க்கப்படும் அச்சட்டத்திற்கு எதிராக மில்லியன் கணக்கான தொழிலாளர்களும் இளைஞர்களும் இரண்டு மாதங்களாக போராடி வருகின்றனர். இரண்டாவது முறையாக சோசலிஸ்ட் கட்சி, நாடாளுமன்றத்தில் ஒரு வாக்கெடுப்பு இல்லாமலேயே அதன் சமூக ஆணையைத் திணிக்க முயன்று வருகிறது. அரசியலமைப்பின் ஷரத்து 49-3 என்ற இதே இயங்குமுறை தான், பொருளாதார தாராளமயமாக்கல் மீதான மாக்ரோன் சட்டத்தை திணிக்க கடந்த ஆண்டு பயன்படுத்தப்பட்டது.

அடுத்த 48 மணி நேரத்திற்குள் சட்டமன்றத்தால் அரசாங்கத்தைக் கவிழ்க்க முடியாதென்றால், சட்டமன்றத்தில் ஒரு சட்டத்தை நிறைவேற்றுவதற்கு இந்த ஷரத்து அரசாங்கத்தை அனுமதிக்கிறது. சோசலிஸ்ட் கட்சி மற்றும் சகல ஐரோப்பிய ஒன்றிய நாடுகளது ஆளும் வர்க்கங்களது சமூக செலவு குறைப்பு மற்றும் கடுமையான சுரண்டலுக்கான ஈவிரக்கமற்ற உந்துதல், நாடாளுமன்ற ஜனநாயக பாரம்பரிய இயங்குமுறைகளுக்கு இனியும் பொருந்தாது என்பதற்கு இது வால்ஸ் வழங்கும் ஓர் ஒப்புதலாகும்.

பிரதிநிதிகளின் உரத்த கூச்சல்களுக்கு இடையே, வால்ஸ் சோசலிஸ்ட் கட்சியின் "கிளர்ச்சி" பிரதிநிதிகளை விமர்சித்தார். இவர்கள் எல் கொம்ரி சட்டத்திற்கு வாக்களிக்க மறுத்தனர், 2014 இலையுதிர் காலத்தில் இரண்டாவது வால்ஸ் அரசாங்கம் நிறுவப்பட்ட பின்னர் இருந்து, அதை இவர்கள் விமர்சித்து வந்துள்ளனர். “அரசாங்கத்தின் நாடாளுமன்ற பெரும்பான்மையில் உள்ள சிலர், ஒரு சமரசத்திற்கு வர மறுக்கிறார்கள். இத்தகைய அனைத்து எதிர்ப்புகளும் ஒருங்கிணைந்து வருவது அச்சட்டத்தை முடக்கக்கூடும். … நாடு முன்னேற வேண்டும் என்பதற்காக, அரசாங்கத்தின் பொறுப்பை ஏற்க எனக்கு அமைச்சரவை அதிகாரம் அளிக்க வேண்டும்,” என்று கோபத்துடன் வால்ஸ் தெரிவித்தார்.

வலது சாரி பிரதிநிதிகளும், அத்துடன் இடது முன்னணி பிரதிநிதிகளும் ஒரு கண்டனத் தீர்மானம் முன்வைத்தனர், ஆனால் இதை நிறைவேற்ற சோசலிஸ்ட் கட்சி மற்றும் அதன் கூட்டாளிகளைச் சேர்ந்த சுமார் 60 பிரதிநிதிகளின் ஆதரவு தேவைப்படும், அதாவது "கிளர்ச்சி" பிரதிநிதிகளின் ஒரு கணிசமான எண்ணிக்கை அதற்காக வாக்களிக்க வேண்டியிருக்கும். “கிளர்ச்சியாளர்களது" (frondeurs) தலைவர் கிறிஸ்டியன் பௌல், அவரது சொந்த கட்சிக்கு எதிரான ஒரு கண்டனத் தீர்மானத்தை ஆதரிப்பாரா மாட்டாரா என்ற கேள்வியைத் தட்டிக் கழித்தார். அவர் கூறுகையில், “எந்தவிதமான அரசியலமைப்பு சாத்தியக்கூறுகளையும் கைவிடுவதை நாங்கள் நிராகரிப்போம். அதுவொரு ஒருமித்த முடிவாக இருக்கும், அனேகமாக அதை நாங்கள் நாளை முடிவு செய்வோம்,” என்றார்.

உண்மையில் அச்சட்டத்திற்கு "கிளர்ச்சியாளர்களது" எதிர்ப்பு, சோசலிஸ்ட் கட்சியின் நெருக்கடியில் மூன்றாந்தர காரணியாக மட்டுமே உள்ளது. அவர்களது ஆட்சேபனைகள் இருந்தாலும், இந்த "கிளர்ச்சியாளர்களின்" தலைவர்கள், பிரான்ஸைச் சிக்கன நடவடிக்கைகளைக் கொண்டு சீர்திருத்த விரும்புவதையே எப்போதும் எடுத்துக்காட்டி இருக்கிறார்கள். பொதுவாக அவர்களது முதுகெலும்பற்றத்தன்மை, 2014 இல் இரண்டாவது வால்ஸ் அரசாங்கத்திற்கு நம்பிக்கை வாக்குகள் வழங்குவதற்கும் மற்றும் மாக்ரோன் சட்டத்தை கட்டாயமாக நிறைவேற்ற அது ஷரத்து 49-3 ஐ பயன்படுத்திய பின்னர் அதற்கு எதிரான ஒரு கண்டனத் தீர்மானத்தில் வாக்களிக்க மறுப்பதற்கும் என இரண்டுக்கும் அவர்களை அனுமதித்துள்ளது. உண்மையில் வால்ஸை அவர்கள் பதவியிலிருந்து அகற்றி, புதிய தேர்தல்களுக்கு இட்டுச் சென்றிருந்தால், இந்த "கிளர்ச்சியாளர்கள்" அவர்களது சொந்த ஆசனங்களையே இழக்கும் அபாயத்திற்கு உள்ளாகி இருப்பார்கள்.

சோசலிஸ்ட் கட்சிக்கு உள்ளே நெருக்கடியை உந்திக் கொண்டிருப்பது, பெருந்திரளான மக்களிடையே ஏற்பட்டு வரும் ஓர் ஆழமான சர்வதேச அரசியல் நிலைநோக்கு மாற்றமாகும், இது ஐரோப்பா மற்றும் உலகெங்கிலும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களது அதிகரித்த அணிதிரள்வை தூண்டி வருகிறது. 2008 க்குப் பிந்தைய முன்னொருபோதும் இல்லாத முதலாளித்துவ நெருக்கடியின் எட்டாண்டுகளுக்குப் பின்னர், உழைக்கும் மக்கள், தசாப்த காலமாக "இடது" என்றும் அல்லது "தீவிர இடது" என்றுமே கூட கூறிக் கொண்டு, ஆனால் அளவுகடந்த தனது தனிச்சலுகைகளைப் பாதுகாக்க தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான எந்த கொள்கைக்கும் தயாராக இருக்கும், ஒரு நிதியியல் பிரபுத்துவத்தின் கருவிகளாகி உள்ள கட்சிகளுக்கு எதிராக திரும்பி வருகிறார்கள்.

அமெரிக்காவில், மில்லியன் கணக்கான இளம் வாக்காளர்கள், சோசலிசவாதி என்று கூறிக் கொண்ட ஒரு வேட்பாளரான பேர்ணி சாண்டர்ஸிற்கு வாக்களித்தன் மூலமாக, ஒபாமா மற்றும் ஜனநாயக கட்சி மீதான அவர்களது ஆழ்ந்த ஏமாற்றத்தை எடுத்துக்காட்டினார்கள். இவ்வார தொடக்கத்தில், கிரேக்க தொழிலாளர்கள், ஐரோப்பிய ஒன்றியத்தால் கோரப்பட்ட கொள்கையைத் திணிப்பதற்காக அதன் தேர்தல் வாக்குறுதிகளை விட்டொழித்த சிரிசா (“தீவிர இடது கூட்டணி") அரசாங்கத்திற்கு எதிரான ஒரு வேலைநிறுத்த அழைப்புக்குப் பின்னால் பாரியளவில் அணிதிரண்டனர்.

பிரான்சில், ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்டின் சமூக செலவினக் குறைப்பு, போர் மற்றும் அவசரகால நெருக்கடி நிலை கொள்கை, சோசலிஸ்ட் கட்சி மீதும், இடது முன்னணி மற்றும் புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி போன்ற சோசலிஸ்ட் கட்சியின் சுற்றுவட்டத்தில் உள்ள குட்டி-முதலாளித்துவ குழுக்கள் மீதும் ஆழ்ந்த மற்றும் அதிகரித்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இத்தகைய அமைப்புகள் இப்போதைய சமூக அமைப்புமுறைக்கு எந்த மாற்றீட்டையும் வழங்காது என்பதை கோபமடைந்துள்ள பத்து மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் அறிந்துள்ளனர். அனைத்திற்கும் மேலாக நான்காண்டுகளாக, இத்தகைய அமைப்புகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் ஹோலாண்டுக்கு எதிராக எதிர்ப்பை அணிதிரட்டவில்லை என்பதுடன், 2012 ஜனாதிபதி தேர்தல்களில் அவர்கள் அவரை ஏற்றுக் கொண்டிருந்தனர்.

கடந்த இரண்டு மாதங்களாக, 1968 ஐ போன்ற ஏதோவொன்று நடைமுறையில் இருந்தது; பிரான்ஸ் ஒரு புரட்சிகர வெடிப்பின் விளிம்பில் இருந்தது. ஆனால் தூண்டுபொறி இல்லாமல் போனது: அதாவது சோசலிஸ்ட் கட்சிக்கு எதிரான ஒரு புரட்சிகர போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட உத்தியோகபூர்வ-அரசியலமைப்பு கட்சி எதுவும் போராடவில்லை. இளைஞர்களிடையே தலையீடு செய்ய பல்வேறு நகர சதுக்கங்களில் #NuitDebout இயக்க ஆக்கிரமிப்புகளை ஒழுங்கமைத்த குட்டி முதலாளித்துவ குழுக்களும் மற்றும் தொழிற்சங்கங்களும், தொழிலாள வர்க்க அணிதிரள்வைத் தடுத்தன. சமூக கோபம் அதிகரித்து வருகின்ற நிலையில், அந்த இயக்கத்தைச் சிதறடிக்க மற்றும் இளம் போராட்டக்காரர்களைத் தாக்க பாதுகாப்பு படைகளை அனுமதிப்பதற்காக அவர்களால் ஆனமட்டும் அனைத்தும் செய்தனர்.

#NuitDebout இயக்கத்தின் ஒரு முன்னணி பிரமுகரான பொருளியல்வாதி பெட்ரிக் லோர்டன், எல் கொம்ரி சட்டம் குறித்து அறிவிக்கையில், “அது திருத்தப்பட வேண்டும் அல்லது மறுபடி எழுதப்பட வேண்டும் என்று நாங்கள் கோரவில்லை, உண்மையில் நாங்கள் உரிமைகளைக் கோரவில்லை, நாங்கள் முற்றிலும் எதையும் கோரவில்லை,” என்று கூட அறிவித்தார்.

எல் கொம்ரி சட்டத்தை நாடாளுமன்றத்தில் முன்வைப்பது நீண்டகாலமாக தள்ளிப் போடப்பட்டு வந்த நிலையில், சோசலிஸ்ட் கட்சி, இளைஞர் அணிதிரள்வைப் போதுமானளவிற்குத் தனிமைப்படுத்தும் என்றும் இறுதியில் தீர்மானத்ததுடன், அவற்றை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற சோசலிஸ்ட் கட்சி முயற்சிக்கும் என்றும் மீண்டும் அழுத்தமாக குறிப்பிட்டது.

அடிப்படை சமூக உரிமைகள் மீதான தாக்குதல்களைத் தடுக்க ஒரே வழி, சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் மற்றும் அதன் தொழிற்சங்க மற்றும் அரசியல் கூட்டாளிகளுக்கு எதிரான ஒரு போராட்டத்தைத் தொடங்குவதற்கு அணித்திரட்டல்களை புதுப்பிப்பதே ஆகும். இது, பிரான்ஸ் எங்கிலும் சமூக செலவு குறைப்பிற்கு எதிரான பரந்த மக்கள் எதிர்ப்புக்கு முறையிட்டும், பிரான்ஸ் எல்லைகளுக்கு அப்பாலும் அந்த இயக்கத்தை விரிவுபடுத்தி, சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தைப் பதவியிலிருந்து அகற்ற ஒரு புரட்சிகர போராட்டத்தைத் தொடங்கும் முன்னோக்கின் மீது, தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனப்பட்ட வர்க்க போராட்ட அங்கங்களைக் கட்டமைப்பதன் மூலமாக மட்டுமே சாத்தியமாகும்.

தொழிற்சங்கங்கள் பரிந்துரைப்பதைப் போல எல் கொம்ரி சட்டத்தை தடுக்க, சோசலிஸ்ட் கட்சியினாலும் மற்றும் வெளிப்படையாக வலதுசாரி, சிக்கன கொள்கை ஆதரவிலான கட்சிகளினாலும் மேலாதிக்கம் செலுத்தப்படும் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையை வைப்பது, இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஒரு மரணகதியிலான அரசியல் பிழையாக இருக்கும். கடந்த ஆண்டு ஹோலாண்ட் மாக்ரோன் சட்டத்தை நிறைவேற்றுவதை அவர்கள் அனுமதித்ததைப் போலவே, இந்த "கிளர்ச்சியாளர்கள்" சமூக செலவு குறைப்பு கொள்கையை முடிவுக்குக் கொண்டு வர கருதவில்லை, மாறாக சோசலிஸ்ட் கட்சிக்கு உள்ளேயே சமூக செலவினக் குறைப்பு திட்டத்திற்கு எதிர்ப்பு உள்ளது என்ற பிரமையைச் சாத்தியமான காலத்திற்குப் பேணுவதற்கு கருதுகின்றனர். அவர்கள் சோசலிஸ்ட் கட்சியின் சமூக செலவு குறைப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக அணிதிரண்டு வரும் இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு விரோதமாக உள்ளனர்.

அவர்கள் இப்போது அச்சட்டத்திற்கு அவர்களது ஆட்சேபனைகளை முன்னுக்குக் கொண்டு வருகிறார்கள் என்றால், அது சோசலிஸ்ட் கட்சி நீண்ட கால ஓட்டத்தில் முற்றிலும் மதிப்பிழப்பதை தடுப்பதற்காகவும் மற்றும் 2017 ஜனாதிபதி தேர்தல்களில் அதன் தோல்வியைத் தவிர்ப்பதற்காகவும், மற்றும் எல் கொம்ரி சட்டத்தைத் திரும்ப பெற நிர்பந்திக்கும் மற்றும் வால்ஸ் அரசாங்கத்தைப் பதவியிலிருந்து அகற்றும் ஒரு சமூக வெடிப்பைத் தடுப்பதற்காகவும் ஆகும்.

இச்சட்டத்தின் பொறுப்பு அவர்களது கரங்களிலே விடப்பட்டால், ஒன்று கடந்த ஆண்டைப் போலவே வால்ஸின் 49-3 ஷரத்துக்கு "கிளர்ச்சியாளர்கள்" மண்டியிடுவதன் மூலமாகவோ அல்லது பிரெஞ்சு நாடாளுமன்ற கட்சிகள் மற்றும் பல்வேறு ஐரோப்பிய ஒன்றிய ஸ்தாபனங்களுக்கு இடையிலான மிகவும் சிக்கலான பேரம்பேசல்கள் மூலமாகவோ, மக்கள்விரோத சமூக செலவு குறைப்பு கொள்கைகளும் மற்றும் போர் கொள்கைகளும் தான் தொடரும்.