ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

As strikes spread, mass protests demand withdrawal of French labor law

வேலைநிறுத்தங்கள் பரவுகின்ற நிலையில், பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள் பிரெஞ்சு தொழிலாளர் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோருகின்றன

By Alex Lantier and Johannes Stern
27 May 2016

பிரான்சிலும் பெல்ஜியத்திலும் வேலைநிறுத்தங்கள் பரவுகின்ற நிலையில், இந்த மாதத்தின் ஆரம்பத்தில் அமல்படுத்தப்பட்ட “எல் கொம்ரி” தொழிலாளர் சீர்திருத்தங்களுக்கு எதிராக வியாழனன்று நடைபெற்ற தேசிய அளவிலான எட்டாவது ஆர்ப்பாட்டத்தில் நூறாயிரக்கணக்கிலான மக்கள் பங்குபற்றினர். இரண்டு நாட்கள் முன்பாக புரூசேல்ஸில் இதேபோன்றதொரு தொழிலாளர் விரோத சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் சுமார் 60,000 பேர் பேரணி ஒன்றினை நடத்தியிருந்த நிலையில், இந்த ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. பாரிய வேலையிழப்புகள், சிக்கன நடவடிக்கை மற்றும் போர் ஆகியவற்றுக்கு எதிராய் தொழிலாள வர்க்கத்தின் ஒரு பெருகிச் செல்லும் சர்வதேசியப் போராட்டத்தின் பகுதியாக இந்த ஆர்ப்பாட்டங்கள் அமைந்திருக்கின்றன.

பத்தாண்டு காலத்திற்கும் முன்பாய் ஜேர்மனியில் சமூக ஜனநாயக-பசுமைக் கட்சி கூட்டணியால் முன்னெடுக்கப்பட்ட ஹார்ட்ஸ் IV சட்டங்களின் பிரெஞ்சுப் பதிப்பாகவே எல் கொம்ரி சட்டம் அமைந்திருக்கிறது. இது ஊதியங்களின் மீதும் தொழிலாளர் உரிமைகளின் மீதும் ஒரு பாரிய தாக்குதலைக் குறித்து நிற்பதோடு ஐரோப்பிய மற்றும் சர்வதேசிய போட்டியாளர்களுக்கு எதிரான பிரான்சின் போட்டித்திறனை மேம்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டிருக்கிறது. இந்த புதிய சட்டத்தின் படி, வாரத்திற்கு 46 மணி நேரம் வரை வேலை ஆகியன உள்ளிட்ட விடயங்களில் நிறுவனங்கள் உள்ளூர் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்பதோடு, ஊதியங்களை வெட்டுவதற்கும் நிறுவனங்களுக்கு கூடுதல் சுதந்திரம் அளிக்கப்படுகிறது. தொழிலாளர்களை வேலையில் இருந்து நீக்குவதையும் இந்தச் சட்டம் எளிதாக்குகிறது.

பெரும் வெறுப்பை சம்பாதித்துள்ள சோசலிஸ்ட் கட்சி ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் அரசாங்கம், சென்ற நவம்பரில் பாரிஸில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து அறிமுகம் செய்த அவசரகாலநிலை அதிகாரங்களைப் பயன்படுத்தி, எதிர்ப்பை ஒடுக்க முனைகின்ற நிலையில், வெகுஜன எதிர்ப்பானது வெடித்தெழுந்து கொண்டிருக்கிறது. மக்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்த சட்டம் திரும்பப் பெறப்பட வேண்டும் என விரும்புவதாக கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன. ஆர்ப்பாட்டங்களில் 153,000 பேர் பங்கேற்றதாய் போலிசும் 300,000 பேர் பங்கேற்றதாய் ஸ்ராலினிச CGTயும் கூறுகின்ற நிலையில், ஆர்ப்பாட்டங்களிலான பங்கேற்பு முந்தைய வாரத்தை விடவும் அதிகரித்துள்ளது.

பிரான்ஸ் எங்கிலுமான 14 எண்ணெய் கிடங்கு நிலையங்களில் முற்றுகைகளை அகற்றி உற்பத்தியை மீண்டும் சீர்செய்ய போலிஸ் தலையிட்ட போதிலும், அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்களிடம் இருக்கின்ற மூலோபாய எண்ணெய் கையிருப்பு வெளியிடப்படுகின்ற நிலையிலும் கூட, எரிபொருள் பற்றாக்குறைகள் பரவிக் கொண்டிருக்கின்றன. வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, பிரான்சில் இருக்கும் 12,000 பெட்ரோல் நிலையங்களில் 5,000 நிலையங்களில் குறைந்தபட்சம் ஒருவகை எரிபொருளேனும் இல்லாமல் இருந்தது. Fos-sur-Mer இல் இருக்கும் எண்ணெய் நிலையத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒரு CGT உறுப்பினர் மீது வாகனம் ஒன்று ஏறிவிட்ட நிலையில் அவர் ஹெலிகாப்டர் மூலம் அங்கிருந்து கொண்டுசெல்லப்பட்டார். Vitrolles அருகேயுள்ள ஒரு தொழிற்பேட்டையில் முற்றுகைப் போராட்டத்தின் உள்ளே நுழைந்து செல்ல ஒரு டிரக் முயன்றபோது இரண்டு போராட்டக்காரர்களுக்கு காயம் ஏற்பட்டது.

பாஸ்டிய் சதுக்கத்தில் இருந்து எதிர்ப்பு ஊர்வலம் முன்னேறுகிறது

துறைமுகத் தொழிலாளர்கள், எண்ணெய் துறைத் தொழிலாளர்கள் மற்றும் டிரக் ஓட்டுநர்கள் பிரான்சில் தொடர்ந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், நாட்டின் 19 அணு ஆலைகளும் வேலைநிறுத்தத்தில் இறங்கின, அத்துடன் Cherbourg இல் இருக்கும் DCNS அணுசக்தி நீர்மூழ்கி வேலைகள் தொழிலாளர் சட்டத்தை எதிர்த்துப் போராடுகின்ற தொழிலாளர்களால் முற்றுகைக்குள்ளாயின. மின் உற்பத்தி மொத்தம் 5,000 மெகாவாட்டுகள் வரை சரிவு கண்ட நிலையில், வடக்கு மற்றும் மேற்கு பிரான்ஸ் எங்கிலும் மின்வெட்டுகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

பெல்ஜியத்தில், சிக்கன நடவடிக்கை-ஆதரவு தொழிலாளர் சீர்திருத்த்திற்கு எதிரான இரயில்வே துறை வேலைநிறுத்தத்தால் புரூசெல்ஸிலும் தெற்கிலிருக்கும் பிரெஞ்சு பேசும் பகுதிகளிலும் பொதுப் போக்குவரத்து ஏறக்குறைய முற்றிலுமாய் முடங்கியது, Flemish பகுதிகளில் ஒரேயொரு இரயில் மட்டுமே ஓடிக் கொண்டிருந்தது.

எதிர்ப்பு ஊர்வலங்கள் பிரான்ஸ் எங்கிலுமான நகரங்களில் நடைபெற்ற நிலையில், WSWS செய்தியாளர்கள் பாரிஸ் மற்றும் மார்சைய் நகர ஆர்ப்பாட்டங்களில் தலையிட்டு ஊர்வலத்தில் பங்கேற்றவர்களுடன் நேர்காணல் செய்தனர். “பிரெஞ்சு வேலைநிறுத்தக்காரர்களை பாதுகாக்க ஐரோப்பிய தொழிலாளர்களை அணிதிரட்டுவோம்!” என்ற அறிக்கையையும் ஆயிரக்கணக்கில் விநியோகம் செய்தனர்.

சாமுவேல்

பாரிஸில் இருக்கும் பாஸ்டிய் சதுக்கத்தில் சாமுவேல் என்ற ஒரு பொதுத் துறை தொழிலாளியிடம் WSWS பேசியது. அவர் எல் கொம்ரி சட்டத்திற்கும் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்திற்கும் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினார். “இந்த எல் கொம்ரி சட்டத்தை நிறைவேற்ற நாம் அனுமதிக்கக் கூடாது; இது தொழிலாளர்களின் உரிமைகளுக்குப் பின்னடைவாகி விடும். பிரான்சுவா ஹாலண்ட் மற்றும் மானுவல் வால்ஸின் PS அரசாங்கம் இதனை இடது-சாரி என்கிறது, ஆனால் அப்படியில்லை” என்று அவர் விளக்கினார்.

பெல்ஜியத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களுக்கு தனது சர்வதேசரீதியான ஒற்றுமை உணர்வையும் சாமுவேல் வெளிப்படுத்தினார். “வேலைநிறுத்தம் செய்ய உரிமை உள்ளது, அது அரசியல்சட்டத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது. தாக்கத்தை ஏற்படுத்தி, விஷயங்களை சரியான திசையில் செலுத்த வேண்டுமென்றால், இப்போதும் நாம் பயன்படுத்தக் கூடிய ஒன்றாக அந்த ஒரேயொரு உரிமை மட்டுமே இருக்கிறது என்றும் கூட சொல்லலாம்” என்று அவர் மேலும் சேர்த்துக் கொண்டார்.

PS அரசாங்கம் ஒரு சர்வாதிகாரமிக்க நிதிப் பிரபுத்துவத்திற்கு சேவை செய்து வருவதாய் தான் கருதுவதாகக் கூறிய அவர் பின்வருமாறு அறிவித்தார்: “மக்கள் எழுந்து ஒரு உண்மையான ஜனநாயகத்திற்காய் போராட வேண்டும். இப்போதைக்கு, நம்மிடம் ஜனநாயகம் இல்லை; பெரும் பணக்காரர்களுக்காக வேலை செய்கின்ற சிறிய குழுக்களே நம்மிடையே இருக்கின்றன.”

டொனோவான்

பாரிஸில் ஒரு சேவைத் தொழிலாளியாக இருக்கும் Donovan இடமும் WSWS பேசியது. அவர் எல் கொம்ரி சட்டம் குறித்த தனது கவலையை வெளிப்படுத்தினார். “இந்த சட்டம் பல நிறுவனங்களில் பாதிப்பு ஏற்படுத்தும், தவறாகப் பயன்படுத்தப்படும் என்பது எனக்குத் தெரிகிறது. முதலாளிகளுக்கு இத்தகைய செயல்களை எளிதாக்குவதும், தொழிலாளர்களிடம் இருந்து, ஊழியர்களிடம் இருந்து அல்லது வேறு எந்த சமூக வர்க்கத்திடம் இருந்தும் உரிமைகளைப் பறிப்பதும் மோசமானது என்பதே என் கருத்தாகும்.”

பாரிஸில் நவம்பர் 13 தாக்குதல்களுக்குப் பின்னர் திணிக்கப்பட்ட அவசரகாலநிலையானது உண்மையில் உள்நாட்டு எதிர்ப்பை ஒடுக்குவதற்குத்தான் பெரும் நோக்கம் கொண்டதாய் இருக்கின்றதோ என்ற சந்தேகத்தை அவர் வெளிப்படுத்தினார். “அவசரகாலநிலை என்ற சாக்கில் அவர்கள் பதட்டத்தை கூட்டுகிறார்கள்; அவர்கள் அவசரநிலையை தங்களது சொந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தவும் வெவ்வேறு சூழ்நிலைகளுக்குத் தக்கவாறு அதனை மாற்றியமைத்துக் கொள்ளவும் முடியும்.”

இந்தச் சட்டத்திற்கு எதிராய் வேலைநிறுத்தத்தில் இறங்கியிருக்கும் தொழிலாளர்களுக்கான தனது ஆதரவையும் Donovan வலியுறுத்தினார்: “நாம் குரல் கொடுத்து ஏதேனும் கூறினால் அதிகாரிகள் அதற்கு கொஞ்சமும் காது கொடுக்காத ஒரு சூழலுக்குள் நாம் நிற்கிறோம். வேலைநிறுத்தம் செய்வதென்பது ஏறக்குறைய ஒரு கடமை போல் ஆகி வருகிறது.”

பாஸ்டிய் சதுக்கத்தில் இல் தொடங்கிய பேரணியில் பங்கேற்றவர்கள் எண்ணிக்கை வழியெங்கும் அதிகரித்துச் சென்ற நிலையில், அடையாளம் தெரியாத முகமூடியணிந்த சிலர் காட்சியளித்து ஷாலினி வீதி (Chaligny Street) அருகே பாதுகாப்புப் படைகளுடன் மோதல்களைத் தொடக்கினர். மறுபடியும், இளைஞர் ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்ததோடு, நாசியோன் சதுக்கத்தில் (Nation Square) உள்ளே நுழையும் சமயத்தில் அவர்கள் பிரதான தொழிற்சங்கப் பிரதிநிதிக் குழுக்களிடம் இருந்து துண்டிக்கப்பட்டிருந்தனர், அங்கு அவர்கள் வன்முறையுடன் தாக்கப்பட்டனர். கையெறி குண்டு சிதறியதில் குறைந்தபட்சம் ஒரு இளம் ஆர்ப்பாட்டக்காரர் படுகாயமடைந்தார்.

நாடு முழுமையிலும் பாரிய பாதுகாப்புப் படையின் பிரசன்னம் காட்சி தருகிறது. ஆர்ப்பாட்டக்காரர்களை எதிர்கொள்வதற்காக 19,000 அதிகாரிகளை வீதிகளில் நிறுத்தியிருந்ததை பாரிஸ் போலிஸ் ஊர்ஜிதம் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறைந்தபட்சம் 77 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

போலீஸ் எதிர்ப்பாளர்களை நாசியோன் சதுக்கத்துள் நுளையவிடாது தடுக்கிறது
அதேபோல பிரான்ஸ் எங்கிலுமான மற்ற நகரங்களிலும், ஆயிரக்கணக்கான ஆவேசமான ஆர்ப்பாட்டக்காரர்கள் பெரும் ஆயுதமேந்திய கலகத் தடுப்புப் போலிசாரை எதிர்கொண்ட நிலையில், ஆர்ப்பாட்டங்கள் வன்முறை கண்டன. தென்மேற்கு நகரமான போர்தோவில், சுமார் 100 பேர் ஒரு போலிஸ் நிலையத்தை தாக்கி ஒரு போலிஸ் காரையும் சேதப்படுத்தினர். நான்ந் இல் ஆர்ப்பாட்டக்காரர்கள் வங்கி சாளரங்களை நொருக்கினர், பாதுகாப்புப் படைகள் கண்ணீர் புகை கொண்டு பதிலிறுப்பு செய்தன.

துறைமுக நகரமான Le Havre இல் குறைந்தபட்சம் 10,000 துறைமுக தொழிலாளர்களும் மற்ற ஆர்ப்பாட்டக்காரர்களும் ஒன்றுகூடினர். நகர அரங்கின் முன்னால் நிலைமை கொதிநிலையில் இருந்தாக ஊடக செய்திகள் கூறின. ஆர்ப்பாட்டக்காரர்கள் புகை குண்டுகளை வெடித்ததோடு வானவெடிகளையும் கொளுத்திய நிலையில், அந்த சதுக்கமே வெடிப்புகளால் அதிர்ந்தது. களத்தில் காணப்பட்ட ஒரு சுவரொட்டியில் தொழிலாளர் சட்டத்தைக் குறிக்கின்ற வகையில் ஒரு இரத்தச் சிவப்பு கல்லறைக் கல்லும் பின்வரும் வாசகங்களும் இடம்பெற்றிருந்தன: “திருத்தம் செய்ய முடியாதது, பேச்சுவார்த்தைக்கு அப்பாற்பட்டது: எல் கொம்ரி சட்டத்தைத் திரும்பப் பெறு.”

பிரான்சின் பிரதமரான மானுவல் வால்ஸ் BFM தொலைக்காட்சிக்கு வழங்கிய ஒரு நேர்காணலில் இந்த மசோதாவின் “மையப்பகுதி” இருந்தே தீரும் என்று வலியுறுத்தினார். இந்த மசோதாவை திரும்பப் பெறுவது “சாத்தியமற்றது” என்று அவர் அறிவித்தார். “மசோதாவில் மேம்படுத்தங்கள் செய்யலாம், திருத்தங்களும் செய்யலாம்” என்றார் அவர். என்ன மாற்றப்படலாம் என்பதைக் குறித்து எதுவும் குறிப்பிடாத வால்ஸ் இந்த மசோதா “தொழிலாளர்களுக்கு நன்மை பயக்கக் கூடியது” என்று அறிவித்ததோடு CGT “பொறுப்பற்று” நடந்து கொள்வதாகவும் குற்றம்சாட்டினார்.

திருத்தம் செய்ய முடியாதது, பேச்சுவார்த்தைக்கு அப்பாற்பட்டது - எல் கொம்ரி சட்டத்தைத் திரும்பப் பெறு
CGT போர்க்குணம் கொண்டிருப்பதைப் போலக் காட்டிக் கொண்டாலும் கூட, 2012 இல் ஜனாதிபதித் தேர்தலில் ஹாலண்டை ஆதரித்த இது, PS இன் ஒரு அரசியல் எதிரியும் அல்ல, தொழிலாளர்களின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்வதும் அல்ல என்பதை தொழிலாளர்கள் பலரும் அறிந்து வைத்துள்ளனர். இந்த வாரத்தின் ஆரம்பத்தில் WSWS பின்வருமாறு விளக்கியது: ”தொழிலாளர்கள் இடையே தன்னியல்பாக எழுகின்ற கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளும்படி தொழிற்சங்கங்களை CGT தலைவரான பிலிப் மார்டினேஸ் நெருக்கி வருகிறார். போட்டித் தொழிற்சங்க அதிகாரத்துவங்களுக்கு எதிராய் CGTயின் நிலையை மேம்படுத்திக் கொள்வது இதற்கு பகுதியான காரணம் என்றால், ஒட்டுமொத்த அரசியல் அமைப்புக்கும் எதிராய் தொழிலாள வர்க்கம் ஒரு கிளர்ச்சியில் இறங்குவதைத் தடுப்பதும் தொழிலாளர்களை ஒரு தேசியப் போராட்டத்தின் தளைக்குள்ளாக கட்டிப்போடுவதுமே எல்லாவற்றுக்கும் முதலான காரணமாகும்.”

மார்சையில் WSWS செய்தியாளர்கள் முகமது மற்றும் அவரது நண்பர் ஆகிய இரண்டு இளைஞர்களிடம் தொழிலாளர் சட்டத்திற்கு எதிரான போராட்டம் குறித்துப் பேசினர். சிக்கன நடவடிக்கைக்கு எதிரான போராட்டத்தில் சர்வதேச ஒற்றுமை மிக முக்கியமானது என்று தெரிவித்த முகமட் கூறினார்: “நடப்பது நன்மைக்கு என்றே நான் கருதுகிறேன், மக்கள் இடையே வித்தியாசங்கள் இருந்தபோதும், நம் அனைவருக்கும் ஒரே சட்டங்கள் இல்லை என்றபோதும், நாம் ஒன்றாய் நிற்கிறோம். அந்த ஒற்றுமையைப் பல வருடங்கள் நாம் தொலைத்திருந்தோம் என்று நான் நினைக்கிறேன், இப்போது நாம் அதை மீண்டும் கண்டெடுக்கிறோம். பொருளாதாரத்தை முடக்க நாம் தியாகம் செய்ய வேண்டியிருக்கிறது என்றாலும், நடந்து கொண்டிருப்பது அழகான விடயமாக இருக்கிறது.”

நவ-பாசிச தேசிய முன்னணிக்கு நெருக்கமான சக்திகள் சென்ற வாரத்தில் நடத்திய போலிஸ்-ஆதரவு ஆர்ப்பாட்டங்களில் CGT பங்குபற்றியது குறித்து முகமட்டின் நண்பர் பின்வருமாறு கூறினார்: “CGT பரந்த மக்களை ஐக்கியப்படுத்தும் என்பதாய் நான் கருதவில்லை. CGT நம்மை காட்டிக் கொடுத்திருக்கிறது, அது நம்பகத்தன்மையை இழந்து கொண்டிருக்கிறது. நாம் இந்த சட்டம் நிறைவேற்றப்படுவதை தடுக்க முடியும் என்றால் அது CGT இன் காரியத்தால் நடப்பதாய் இருக்க முடியாது.”

தொழிற்சாலை மற்றும் வேலையிட உள்ளிருப்புகளை அகற்றுவதற்கு PS அரசாங்கம் பாதுகாப்புப் படைகளைப் பயன்படுத்துவதை அவர் கடுமையாகக் கண்டனம் செய்தார். “இது மக்களை வெறுப்பேற்றி, அவர்களை கிளர்ந்தெழச் செய்யும் என்று நான் நினைக்கிறேன். நாம் இந்தச் சட்டத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று மக்கள் உணர்வார்கள். விடயங்கள் மிகத் துரிதமாக ஒரு உள்நாட்டுப் போராக அபிவிருத்தி காண முடியும் என்பதையும், மக்களுக்கும் அரசியல் ஸ்தாபகத்திற்கும் இடையிலான பிரம்மாண்டமானதொரு மோதலை விடயங்கள் உருவாக்கக் கூடும் என்பதையும் ஒருவர் கண்கூடாய் காண முடியும்.”