ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Defying police repression, protests continue against French labour law

போலிஸ் ஒடுக்குமுறையை மீறி, பிரெஞ்சு தொழிலாளர் சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன

By Stéphane Hugues
18 May 2016

சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தின் பிற்போக்குத்தனமான தொழிலாளர் சட்டமானது சென்ற வாரத்தில் தேசிய சட்டமன்றத்தில் பிரெஞ்சு அரசியல் சட்டத்தின் அவசரகாலப் பிரிவான 49.3 ஐப் பயன்படுத்தி திணிக்கப்பட்டு விட்டிருந்தாலும், பிரான்ஸ் எங்கிலும் அந்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் இந்த வாரமும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

நேற்றைய வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் போது, டிரக் ஓட்டுநர்கள் பிரான்சின் பெரும்பாலான பகுதிகளில் பெரிய நகரங்களுக்கு அருகிலிருக்கும் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்தை முடக்கினர் அல்லது வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலைக்கு கொண்டுவந்திருந்தனர். நாளை பிரெஞ்சு புகையிரத சேவை தொடர்பான ஒரு வேலைநிறுத்தம் நடைபெற இருக்கிறது. தொழிலாளர் சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களின் ஒரு புதிய சுற்றும் வியாழக்கிழமை நடத்தப்பெற திட்டமிடப்பட்டு வருகின்றன.

தொழிலாளர் சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் மீதான மிருகத்தனமான போலிஸ் ஒடுக்குமுறையையும் அத்துடன் PS இன் பரந்த போலிஸ்-அரசு திட்டநிரலையும் பொருட்படுத்தாமல் ஆர்ப்பாட்டக்காரர்கள் இவற்றில் ஈடுபட்டிருக்கின்றனர். மோசமான நிகழ்வுகளுக்கு கட்டியம் கூறும் விதமான ஒரு அபிவிருத்தியாக, கூடுவதற்கான சுதந்திரம் மற்றும் குற்றமற்றவர்கள் என்று அனுமானிக்கப்படுதல் ஆகியவை உள்ளிட்ட அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகளை மிதித்து நசுக்கி விட்டு, ஆர்ப்பட்டக்காரர்களை போராட்டங்களில் ஈடுபடாமல் தடுப்பதற்காக அவர்களை முன்கூட்டிக் கைது செய்யும் நடவடிக்கைகளை PS தொடக்கியிருக்கிறது. பாரிஸில் நவம்பர் 13 அன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னர் வாக்களிப்பில் கொண்டுவரப்பட்டிருந்த இப்போதைய அவரசகால நிலையை, ஜனநாயக உரிமைகள் மீதான இந்த அப்பட்டமான தாக்குதல்களுக்கான சாக்காக PS பயன்படுத்தியது.

ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்வதில் இருந்து தடை செய்யப்பட்டிருந்த ஆர்வலர்களது மனுக்களை விசாரித்த, அரசு ஸ்தாபனங்கள் மீது தீர்ப்பளிக்கத்தக்க நிர்வாக நீதிமன்றங்களில், PS இன் வாதம் நேற்று நிராகரிக்கப்பட்டது. பத்தில் ஒன்பது வழக்குகளில், இந்தத் தடைகள் இரத்து செய்யப்பட்டன. இருப்பினும், இத்தகைய எதேச்சாதிகார அதிகாரங்களை அரசாங்கம் கையிலெடுப்பது என்பது தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஒரு தீவிரமான எச்சரிக்கையாகும். PSம் மற்றும் ஒட்டுமொத்த ஆளும் வர்க்கமும் அவற்றின் சமூகப் பிற்போக்குத்தன திட்டநிரலைத் திணிக்க முயலும் பாதையில் போலிஸ் அரசு ஆட்சியின் பாதையில் வெகுதூரம் முன்னேறியிருக்கின்றன.

PS மீது இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் கோபம் பெருகிச் செல்வதற்கு இடையே நேற்றைய போராட்டங்களின் சமயத்தில், போலிசும் ஆர்ப்பாட்டக்காரர்களும் மீண்டும் மோதிக் கொண்டனர். தேசிய அளவில் மொத்தம் 87 பேர் கைது செய்யப்பட்டனர். பாரிஸில் மத்தினியோன் அரண்மனையில் இருக்கும் பிரதமர் மானுவல் வால்ஸின் அலுவலகங்களை நோக்கி ஆர்ப்பாட்டம் செல்லவிருந்த நிலையில், அரசாங்கத்தைப் பாதுகாத்து தொழிற்சங்கங்களின் சம்மதத்துடன் இது வேறுபாதையில் மாற்றப்பட்டது.

பாரிஸில், 55,000 பேர் ஆர்ப்பாட்டம் செய்ததாக தொழிற்சங்கங்கள் கூற, போலிசோ 13,000 பேர் மட்டுமே ஆர்ப்பாட்டங்களில் பங்குபெற்றதாக தெரிவித்தது. பேரணியின் முடிவில் போலிசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையிலான மோதல்கள் வெடித்தன. மார்சை இல் இளைஞர் ஆர்ப்பாட்டக்காரர்கள் தொழிற்சங்க ஆர்ப்பாட்டக்காரர்களில் இருந்து தனியான போது அவர்கள் போலிசாரால் தாக்கப்பட்டனர். சென்ற ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை வீசி போலிஸ் தாக்குதல் நடத்துவதற்கு ஸ்ராலினிச CGT உதவியதாக மார்சை ஆர்ப்பாட்டத்தில் பங்குபெற்ற மாணவர்கள் குற்றம்சாட்டினர்.

மற்ற பெரிய நகரங்களிலும் கணிசமான ஆர்ப்பாட்டங்கள் நடந்தன: மார்சை இல் போலிஸ் புள்ளிவிவரப்படி 6,800 பேர் அல்லது தொழிற்சங்க புள்ளிவிவரப் படி 80,000 பேர் கலந்து கொண்டனர்; லியோனில் 1700 பேர் (போலிஸ் புள்ளிவிபரம்) அல்லது 7000 பேர் (தொழிற்சங்க புள்ளிவிபரம்) பேர் கலந்து கொண்டனர்; துலூஸ் இல் 2300 (போலிஸ் புள்ளிவிபரம்) அல்லது 8,000 (தொழிற்சங்க புள்ளிவிபரம்) பேர் கலந்து கொண்டனர்; நான்ந் இல் 3,500 (போலிஸ் புள்ளிவிபரம்) அல்லது 10,000 (தொழிற்சங்க புள்ளிவிபரம்) பேர் கலந்து கொண்டனர்; கிரெனோபிள் இல் 1,600 (போலிஸ் புள்ளிவிபரம்) அல்லது 7,000 (தொழிற்சங்க புள்ளிவிபரம்) பேர் கலந்து கொண்டனர்; ரென் இல் 1,100 (போலிஸ் புள்ளிவிபரம்) அல்லது 2,000 (தொழிற்சங்க புள்ளிவிபரம்) பேர் கலந்து கொண்டனர்.

ரென் இல், ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியினர், நகரைச் சுற்றிய சுற்றுப் பாதை போக்குவரத்தை முடக்கிக் கொண்டிருந்த டிரக் ஓட்டுநர்களுடன் இணைய முயன்றனர், அவர்களை போலிஸ் பின்தொடர்ந்தது. சுமார் 450 பேர் டிரக் ஓட்டுநர்களுடன் இணைந்து விட்டிருந்தனர். “அவசர நிலை, போலிஸ் அரசு, டிரக் ஓட்டுநர்களுடன் இணைவதில் இருந்து யாரும் எங்களைத் தடுக்க முடியாது” என்று அவர்கள் முழக்கமிட்டனர்.

நான்ந் இல், நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தின் முன்முனையைப் பிடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் போலிசுடன் மோதலில் ஈடுபட்டதுடன் Prefect அலுவகத்தின் மீது பொருட்களை வீசியெறிந்தனர். இளைஞர் பேரணியின் தலைமையில் இருந்த பதாகை “எதிர்ப்புகள்” (Resistances) என்று காட்டியது. அவர்கள் முழக்கமிட்டனர்:

“நாங்கள் வன்முறையில் ஈடுபட்டிருக்கவில்லை, நாங்கள் கோபமாக, இளம்வயதாக, ஆபத்தான நிலையிலாக மற்றும் புரட்சிகரமாய்” இருக்கிறோம். “அரசைத் தாக்கவே நாங்கள் விரும்புகிறோம், எங்களுக்கு இனியும் 49.3 தேவையில்லை.” போலிஸ் இருமுறை இளைஞர்களுக்கு எதிராய் கண்ணீர் புகைகளைக் கொண்டு தலையீடு செய்தது.

தொழிலாள வர்க்கம் இருபதாம் நூற்றாண்டில் பல தசாப்த கால சமூகப் போராட்டத்தின் மூலமாக வென்றிருந்த சமூக தேட்டங்களின் மீது PS தொடுக்கும் தாக்குதல்களுக்கு நிலவுகின்ற ஆழமான எதிர்ப்பை இந்த ஆர்ப்பாட்டங்கள் பிரதிபலிக்கின்றன. தொழிலாளர் சட்டத்திற்கான பாரிய எதிர்ப்பும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் இடையே பெருகிச் செல்லும் கோபமும் PS அரசாங்கத்தின் ஆட்சிக்கான ஒரு நெருக்கடியை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.

2012 இல் ஆட்சிக்கு வந்தது முதலாகவே, ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் PS, மக்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளின் மீது பல தாக்குதல்களைத் தொடுத்து, ஹாலண்டை போருக்குப் பிந்தைய மொத்த காலகட்டத்தில், வெறும் 14 சதவீத ஏற்பு வீதத்துடன் மிக வெறுப்புக்குரிய ஜனாதிபதியாக ஆக்கியிருக்கிறது. எல் கொம்ரி சட்டத்தை மக்களில் 75 சதவீதம் பேர் எதிர்க்கின்றனர். PS அரசாங்கம் அதனை நாடாளுமன்றத்தின் மூலமாகத் திணித்த பின்னும் கூட, அதற்கு எதிரான போராட்டங்கள் தொடர வேண்டும் என்பதை மக்களில் 54 சதவீதம் பேர் ஆதரிக்கின்றனர்; இச்சட்டத்தை அதன் இப்போதைய வடிவில் அரசாங்கம் அமல்படுத்தக் கூடாது என்று 68 சதவீத மக்கள் விரும்புகின்றனர்.

பிரான்சிலும் சரி சர்வதேச அளவிலும் சரி அதிகரித்துச் செல்லும் இந்த அதிருப்தியானது ஒரு சமூக வெடிப்பின் திசையிலும், தொழிலாள வர்க்கத்திற்கும் முதலாளித்துவ அரசுக்கும் இடையிலான ஒரு நேரடி அரசியல் மோதலின் திசையிலும் பயணித்துக் கொண்டிருப்பதன் ஒவ்வொரு அறிகுறியும் தென்படுகின்றன. இந்த நிலைமைகளின் கீழ் இதுவரையான ஆர்ப்பாட்டங்களின் அனுபவத்தில் இருந்து திட்டவட்டமான அரசியல் படிப்பினைகள் பெறப்படுவதென்பது அவசரமானதாகும்.

PS அரசாங்கத்திற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தினை பரந்த அளவில் அணிதிரட்டாமல், சிக்கன நடவடிக்கையை திறம்பட எதிர்ப்பதென்பது சாத்தியமில்லாததாகும். ஆளும் வர்க்கம் இந்தச் சட்டத்தை தொடர்ந்து திணிக்க கூடிய வகையில், ஐரோப்பாவெங்கிலுமான மற்ற நாடுகளில் போலவே, பிரான்சில் PS அரசாங்கமும் மற்றும் அதன் தொழிற்சங்க மற்றும் அரசியல் கூட்டாளிகளும், இயன்ற அளவுக்கு வெகுஜன எதிர்ப்பை பிளவுபடுத்துவதற்கும், நீர்த்துப் போக செய்வதற்கும், சிதறடிப்பதற்கும் முனைவர்.

பிரான்சில் தொழிலாளர் சட்டத்திற்கும், இன்னும் விரிந்த அளவில் ஐரோப்பாவெங்கிலுமான சிக்கன நடவடிக்கைகளுக்கும் எதிரான தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்திற்கு, போரை எதிர்த்தும் ஜனநாயக உரிமைகளை பாதுகாத்துமான ஒரு அரசியல் போராட்டம் அவசியமாக உள்ளது. பதில் கூறும் பொறுப்புகளற்ற ஒரு சில உளவுத் துறை மற்றும் இராணுவ அதிகாரிகளுடன் மட்டுமே விவாதிக்கப்படுகின்றதான ஒரு இரகசிய சர்வதேச கொலைப் பட்டியலை ஹாலண்ட் பராமரிப்பது சென்ற ஆண்டில் வெளியானது. இப்போது, பிரான்சில் ஆர்ப்பாட்டங்களை சட்டவிரோதமாக்கும் வகையில் முன்கூட்டிய கைதுகளையும் மற்ற போலிஸ் ஆத்திரமூட்டல்களையும் நடத்துகின்ற ஒரு இராணுவ-போலிஸ் சர்வாதிகாரத்தின் திட்டவரைவுகள் காட்சி தந்து கொண்டிருக்கின்றன.

இந்தப் போராட்டத்தை தொழிற்சங்க மற்றும் மாணவர் சங்கங்களின் கரங்களில் இருந்து அகற்றுவதும், முழுமையாக திவால்நிலை கொண்டதாயும் தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்கு குரோதமாயும் நிரூபணமாகியிருக்கக் கூடிய PS, தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றின் போலி-இடது ஆதரவாளர்களிடம் இருந்து ஒரு தாட்சண்யமற்ற அரசியல் முறிவை மேற்கொள்வதுமே முன்னிருக்கக் கூடிய ஒரே பாதை ஆகும். இவர்களின் கரங்களில் விடப்படுகின்ற எந்தவொரு இயக்கமும் தேக்கத்திற்கும், சிதறடிப்புக்கும், இறுதியாய் தோல்விக்குமாய் தள்ளப்படும். ஒரு புரட்சிகரப் போராட்ட முன்னோக்கின் அடிப்படையில் தொழிற்சங்கங்கள் மற்றும் நிலவும் கட்சிகளில் இருந்து சுயாதீனமான போராட்ட அமைப்புகள் தொழிலாளர்களுக்கு அவசியமாய் உள்ளன.