ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

US official stokes border tension between India and China in the Himalayas

அமெரிக்க அதிகாரி இமயமலையில் இந்தியாவுக்கும் சீனாவிற்கும் இடையே எல்லைப்பதட்டத்தை தூண்டுகிறார்

By Kumaran Ira
7 May 2016

கொல்கத்தா அமெரிக்க தூதரக தலைவர் கிரேக் எல். ஹால் (Craig L. Hall) ஏப்ரல் 28 அன்று வடகிழக்கு இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேச முதலமைச்சர் கலிகோ புல் ஐ சந்தித்ததுடன், சீனாவை ஆத்திரமூட்டும் வகையில் அதற்கு எதிரான இந்திய எல்லை உரிமைகோரல்களை ஒத்துக்கொள்வதாக தெரிவித்தார்.

அருணாச்சல பிரதேச பகுதிகளின் மீது சீனா உரிமைகோருவதை சுட்டிக்காட்டி, ஹால் கூறுகையில், அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஓர் உள்ளார்ந்த பாகமாக இருப்பதையே அமெரிக்க அரசாங்கம் விரும்புகிறது என்றார். மேற்கில் பூட்டானையும், கிழக்கில் பர்மாவையும், வடக்கில் சீனாவையும் எல்லைகளாக கொண்ட ஒரு மூலோபாய இடத்தில் அமைந்துள்ள அருணாச்சல பிரதேசம், சீனாவும் உரிமைகோரும் பிரபல தவாங் மடாலயம் அமைந்துள்ள தவாங் போன்ற பல இடங்களை உள்ளடக்கி உள்ளது.

ஹால் இந்த தனித்துள்ள மற்றும் மூலோபாய பிராந்தியத்தில் உள்கட்டமைப்பை அபிவிருத்தி செய்ய அழைப்புவிடுத்தார், அங்கே சாலைகள் மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்பைக் கட்டுமானம் செய்வது இராணுவ பலத்தை நிலைநிறுத்துவதற்கு அத்தியாவசியமாக உள்ளது. அவர், வணிகம் மற்றும் வர்த்தகத்தில் கொல்கத்தா தூதரகத்தினூடாக ஏற்பாடு செய்யக்கூடிய அமெரிக்க-இந்திய கூட்டு நிறுவன பங்காண்மைகளுக்கும் அழைப்புவிடுத்தார். ஹால் கூறுகையில், “அமெரிக்க நிறுவனங்கள், இந்தியாவில் மற்றும் அதன் வட-கிழக்கிலும், குறிப்பாக அருணாச்சல பிரதேசத்தின் மீது சிறப்பாக ஒருமுகப்பட்ட உள்கட்டமைப்பு அபிவிருத்திக்கான ஒப்பந்த வேலைகளில் ஆர்வமாக இருப்பதை இந்த தூதரகம் நன்கறியும்,” என்றார்.

ஹாலின் கருத்துக்கள், இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையே எல்லை பிரச்சினையை தூண்டிவிடுவதற்கான ஒரு கணிப்பிடப்பட்டுள்ள முயற்சியாகும். மேலும் இது இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், எல்லை பிரச்சினையை தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகளுக்காக பெய்ஜிங் விஜயம் செய்து வந்த வெறும் ஒருசில நாட்களிலேயே கூறப்பட்டது.

1962 இல் இந்தியாவும் சீனாவும் இமயமலை எல்லை அடுத்த அவற்றினது பிரச்சினையில் ஒரு மாத-காலம் சண்டையிட்டன, அதில் 4,000 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தார்கள். அப்போர், 1959 இல் சீன ஆட்சிக்கு எதிராக, சிஐஏ-ஆதரவிலான திபெத் மேலெழுச்சிக்கு பின்னர், ஒரு தொடர்ச்சியான எல்லை வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து வெடித்தது. அந்த மேலெழுச்சிகள் தோல்வியடைந்ததை தொடர்ந்து, இந்தியா திபெத்திய புத்த மத தலைவர் தலாய் லாமாவிற்கு தஞ்சம் வழங்கியது. இன்று வரையில், நாடுகடந்த திபெத்திய அரசாங்க தலைமையிடமாக வடமேற்கு இந்தியாவின் தர்மசாலா விளங்குகிறது.

அருணாச்சல பிரதேசத்தின் பெரும்பகுதி மற்றும் அக்சாய் சின் உட்பட பல்வேறு சர்ச்சைக்குரிய பிராந்தியங்களினூடாக கடந்து செல்லும் ஒரு நீண்ட எல்லையை இந்தியாவும் சீனாவும் பகிர்ந்து கொள்கின்றன. பிந்தையது [அக்சாய் சின்] சீன சுயாட்சி பிரதேசங்களான சின்ஜியாங் மற்றும் திபெத்திற்கு இடையே அமைந்துள்ளதுடன், ஜம்மு & காஷ்மீரின் லடாக் பகுதியின் பாகமாக இந்தியாவினால் உரிமைகோரப்படுகிறது.

1962 சீன-இந்திய போரின் போது, சீனப் படைகள் அருணாச்சல பிரதேசத்தை ஆக்கிரமித்து, பின்னர் பின்வாங்கின. ஆனால் அக்சாய் சின் மீதான அவர்களது கட்டுப்பாட்டை விரிவாக்கி இருந்தன.

ஹாலின் கருத்துக்கள் சீன-இந்திய எல்லை மோதல் விவகாரத்தில் எரியும் தீயில் எண்ணெய் வார்ப்பதாக உள்ளது. இத்தகைய கருத்துக்கள் என்ன தெளிவாக்குகின்றன என்றால், சீனாவைத் தனிமைப்படுத்துவதை மற்றும் அதனுடனான போருக்குத் தயாரிப்பு செய்வதை நோக்கமாக கொண்ட வாஷிங்டனின் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பின்" பாகமாக, வாஷிங்டன் இந்தியாவினது எல்லை உரிமைகோரல்களை ஆதரிக்க விரும்புகிறது என்பதாகும், இதை பெய்ஜிங் அதன் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக காண்கிறது.

சீனாவிற்கு எதிரான அமெரிக்க மூலோபாய தாக்குதலுடன் அதிகரித்தளவில் அணிசேர்ந்து வருகின்ற இந்தியா ஒரு வல்லரசு அந்தஸ்தைப் பெறுவதற்காக வாஷிங்டனுடன் அதன் உறவுகளைப் பலப்படுத்த முனைந்துள்ள வேளையில், ஹாலின் இந்த கருத்துக்கள் வருகின்றன. இந்தியா வேகமாக அதன் இராணுவத்தை விரிவாக்கி வருவதுடன், தெற்காசிய நாடுகள் அதை பிராந்திய மேலாதிக்க சக்தியாக அங்கீகரிக்க வேண்டுமென கோரி வருகிறது.

சீனாவிற்கு எதிரான அமெரிக்காவின் "முன்னெடுப்பில்" இந்தியாவை ஒரு முன்னணி நாடாக ஆக்குவதற்கு அமெரிக்கா அழுத்தமளித்து வருகிறது. ஏப்ரல் மாதம் அது பரஸ்பர தளவாட பரிவர்த்தனைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (LEMOA) என்பதற்கு "கோட்பாட்டளவில்" புது டெல்லியின் உடன்பாட்டை பெற்றது, இந்த உடன்படிக்கையானது அமெரிக்க இராணுவம் இந்திய இராணுவ தளங்களில் எரிபொருள் நிரப்புவதற்கும், பழுது பார்ப்பதற்கும் மற்றும் இராணுவ விமானங்கள் மற்றும் கப்பல்களை நிறுத்தி வைப்பதற்கும் அனுமதியளிக்கும்.

சீனா ஹாலின் கருத்துக்களை பலமாக நிராகரித்தது. புதனன்று பெய்ஜிங் கூறுகையில் சீன-இந்திய எல்லை விவகாரத்தில் எந்தவிதமான "பொறுப்பற்ற" மூன்றாம் நபர் தலையீடும் பிரச்சினையை "சிக்கலுக்கு" உள்ளாக்கும் என்றது.

சீன வெளியுறவு அமைச்சக அறிக்கை ஒன்று குறிப்பிடுகையில், “சீனாவுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான எல்லைப் பிரச்சினை, சீனாவின் எல்லை பிராந்திய இறையாண்மையை மற்றும் சீன மக்களின் உணர்வுகளைச் சார்ந்துள்ளது. அனைத்து மூன்றாம் தரப்புகளும் எல்லை பிரச்சினை மீதான வரலாற்றை மற்றும் யதார்த்தத்தை மதிக்க வேண்டும், பேச்சுவார்த்தைகள் மூலமாக எல்லை பிரச்சினைகளைத் தீர்க்க சீனாவும் இந்தியாவும் முயல்வதை மதிக்க வேண்டும், அவை பிரச்சினைகளில் தலையிடுவதோ அல்லது சர்ச்சைக்குரிய எல்லையின் உரிமை சம்பந்தப்பட்ட விவகாரங்களில் ஒருதரப்பினருக்கு ஆதரவாக செயற்படுவதோ கூடாது,” என்றது.

அந்த அமைச்சகம் தொடர்ந்து இதையும் சேர்த்துக் கொண்டது: “எல்லை பிரச்சினை மீதும் அத்துடன் எல்லை பகுதிகளில் சமாதானம் மற்றும் அமைதி குறித்தும் சமீபத்திய ஆண்டுகளில் சீனா மற்றும் இந்தியாவிற்கு இடையிலான பலமான பேச்சுவார்த்தைகள், இருதரப்பு உறவுகளிலும் மற்றும் அவரவர்களது முறையே அபிவிருத்தியிலும் வளர்ச்சிக்கான சாதகமான நிலைமைகளை உருவாக்கி உள்ளது.”

அமெரிக்க ஏகாதிபத்தியம் அப்பிராந்தியத்தில் பதட்டங்களை தூண்டிவிட்டு வருகின்ற நிலையில், சீனாவிற்கு எதிரான அதன் மற்றொரு திட்டமிட்ட ஆத்திரமூட்டலாகவே ஹாலின் இக்கருத்துக்கள் உள்ளன.

சீனாவிற்கு எதிரான அதன் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பின்" பாகமாக, அமெரிக்கா, சீனாவில், குறிப்பாக திபெத் மற்றும் சின்ஜியாங்கில், பிரிவினைவாதங்களை ஊக்குவித்து வருகிறது. சமீபத்தில் இந்தியாவின் தர்மசாலாவில் நடந்த அமெரிக்க நிதியுதவியிலான சீன பிரிவினைவாத அமைப்புகளது ஒரு மாநாட்டில் அமெரிக்க அதிகாரிகள் கலந்து கொண்டனர். சீனாவை இனவாதரீதியில் உடைக்க அச்சுறுத்துவதற்காக வாஷிங்டன், சீனாவில் உள்ள கடுமையான சமூக மற்றும் இனவாத மோதல்களைச் சுரண்ட முயன்று வருகிறது. இத்தகைய மோதல்கள், 1980 களின் போக்கினூடாக சீனாவில் முதலாளித்துவம் மீட்டமைக்கப்பட்ட பின்னரில் இருந்து, ஹன் சீன தேசியவாதத்தை அதிகரித்தளவில் ஊக்கப்படுத்தி வந்துள்ள சீன ஆட்சியின் பிற்போக்குத்தனமான கொள்கைகளில் வேரூன்றியவையாகும்.

பெய்ஜிங்கின் ஒடுக்குமுறை மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள சிறுபான்மை இனத்தவர் உள்ள, சீன பிராந்தியத்திற்கு அருகாமையில் இருக்கும் வடகிழக்கு இந்தியா, அந்நாட்டின் மிகவும் வறுமைப்பட்ட மற்றும் மிகக் குறைந்த முன்னேற்றமடைந்த பிராந்தியமாகும், மேலும் அது இனப் பதட்டங்கள் மற்றும் கிளர்ச்சிகளால் சூழப்பட்டுள்ளது.

“ஆசியாவிலேயே இது தான் மிகவும் சிக்கலான இடம்,” என்று புது டெல்லியின் வடகிழக்கு ஆய்வுகள் மற்றும் கொள்கை ஆராய்ச்சிக்கான மையத்தின் தலைவரும் இயக்குனருமான சன்ஜோய் ஹஜாரிகா கூறுகிறார். “ஒரு முக்கோண வடிவிலான இந்தியாவுடன் ஒரு குறுகிய பாதையால் இணைக்கப்பட்ட வெறும் ஒரு சிறிய பகுதிக்குள் 220 இன குழுக்கள் அடைக்கப்பட்டுள்ளன.”

ஆயுதமேந்திய, அரசாங்க-விரோத, இன-தேசிய பிரிவினைவாத எண்ணற்ற இயக்கங்களை ஒடுக்குவதற்காக, இகழத்தக்க ஆயுத படைகளுக்கான சிறப்பு அதிகாரத்தின் கீழ், புது டெல்லி தசாப்தங்களாக, ஜம்மு & காஷ்மீரை போலவே, அருணாச்சல பிரதேசத்திலும் மற்றும் ஏனைய ஆறு வடகிழக்கு மாநிலங்களிலும் இராணுவத்திற்குப் பலமான மற்றும் கண்டிப்பான அதிகாரங்களை வழங்கியுள்ளது. கடுமையான வறுமை மற்றும் பாதுகாப்பின்மையின் விளைவாக, இந்த வறுமைப்பட்ட பிராந்தியத்தின் நூறாயிரக் கணக்கானவர்கள் வேலைவாய்ப்புக்காக இந்தியாவின் பிரதான நகரங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். அங்கே அவர்கள் பெரும்பாலும் பாரபட்சமாக நடத்தப்படுவதை முகங்கொடுக்கிறார்கள்.

வாஷிங்டன், சீனாவிற்குள் பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதைப் பழிவாங்கும் வகையில், சீனா இந்தியாவில் பிரிவினைவாதத்தை ஊக்குவித்து, இந்தியாவின் வடகிழக்கு கிளர்ச்சிகளை சுரண்டிக்கொள்ளுமோ என அது அஞ்சுகிறது, அதற்காக அது புது டெல்லி மற்றும் பெய்ஜிங்கிற்கு இடையிலான பிரச்சினைகளுக்குள் பொறுப்பற்ற விதத்தில் தன்னைத்தானே நுழைத்துக் கொண்டு விடையிறுத்து வருகிறது.

பெய்ஜிங்கிற்கு எதிரான அதன் மூலோபாய நடவடிக்கைகளுக்குள் இந்தியாவை ஒருங்கிணைக்க வாஷிங்டன் ஆக்ரோஷமாக நகர்ந்து வருகின்ற நிலையில், எல்லை பிரச்சினைகள் உள்ளடங்கலாக இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையிலான தசாப்தகால விரோதம், முன்பினும் அதிக வெடிப்பார்ந்த அமெரிக்க-சீன மூலோபாய போட்டியில் பின்னிப்பிணைந்ததாக மாறி வருகிறது, இது, ஒட்டுமொத்த உலகையும் இல்லையென்றாலும், ஆசியாவை ஒரு மோதலை நோக்கி தள்ளுகிறது.