ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

In interview with British and German press
Trump places question mark over EU, NATO and free trade

பிரிட்டிஷ் மற்றும் ஜேர்மன் பத்திரிகைகளுடனான பேட்டியில்

ட்ரம்ப் ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ மற்றும் சுதந்திர வர்த்தகம் மீது கேள்விக்குறி இடுகிறார்

By Peter Schwarz
17 January 2017

திங்களன்று, இலண்டனின் டைம்ஸ் மற்றும் ஜேர்மன் சிற்றிதழ் Bild ஆகியவற்றிற்கான ஒரு பிரத்யேக பேட்டியில், அமெரிக்காவின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் போருக்குப் பிந்தைய ஐரோப்பிய ஒழுங்கமைப்பின் மூலாதாரங்கள் மீது ஒரு கேள்விக்குறி இட்டார்.

வெள்ளியன்று ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள ட்ரம்ப், பல எதிர்முரணான அறிக்கைகளை வழங்கினார். ஆனால், ஒட்டுமொத்தமாக, அவர் ஐரோப்பிய ஒன்றிய உடைவை வரவேற்கிறார் என்பதிலும், நேட்டோ இராணுவ கூட்டணியின் எதிர்காலம் மீது ஆட்சேபணைகளை கொண்டுள்ளார் என்பதிலும், மற்றும் ஐரோப்பாவை, அனைத்திற்கும் மேலாக ஜேர்மனியை, அமெரிக்காவின் ஒரு பொருளாதார போட்டியாளராக கருதுகிறார் என்பதிலும் அவர் எந்த சந்தேகத்தையும் விட்டு வைக்கவில்லை.

“திரு. ட்ரம்ப் சித்தாந்தத்திற்கோ அல்லது வரலாற்றுக்கோ கட்டுப்பட்டவராக உணவில்லை,” என்று அந்த பேட்டியைக் குறித்து குறிப்பிடுகையில் டைம்ஸ் எழுதியது. “[ஒ]ரே ஒரு விடயத்தை நிச்சயமாக கூறலாம்: அவரிடம் எதுவுமே பாதுகாப்பாக இல்லை. எந்த அரசியல் விதிமுறைகளும் கிடையாது, எந்த இராஜாங்க மரபுகளும் கிடையாது, மீறமுடியாத உறுதிப்பாடு என்றும் எதுவும் கிடையாது,” என்று Bild குறிப்பிட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான பிரிட்டன் முடிவு "மிகப் பெரும் விடயமாக ஆக உள்ளது" என்பது பேட்டியில் ட்ரம்ப் கருத்துக்களில் ஒன்றாகும். இங்கிலாந்தை அவர் நெருங்கி செல்வதானது, அனைத்திற்கும் மேலாக, ஐரோப்பிய ஒன்றியத்திற்கான அவர் எதிர்ப்பால் உந்தப்படுகிறது என்பதையும் மற்றும் அது ஜேர்மனியில் இருந்து அமெரிக்கா வரையில் எந்தவொரு பொருளாதார அல்லது அரசியல் சவாலையும் எதிர்கொள்வதை நோக்கி திரும்பி உள்ளது என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

“நீங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தை பாருங்கள், அது ஜேர்மனி தான்,” என்றார். “அடிப்படையில் அது ஜேர்மனிக்கான ஒரு வாகனம். அதனால் தான் அதிலிருந்து வெளியேறுவதில் இங்கிலாந்து புத்திசாலித்தனமாக இருப்பதாக நான் நினைக்கிறேன்…"

இங்கிலாந்துடன் ஒரு புதிய வர்த்தக உடன்படிக்கை மேற்கொள்ள அவர் துரிதமாக நகருவாரா என்று வினவியபோது, அவர், “நிச்சயமாக, மிக உடனடியாகவும் கூட. நான் இங்கிலாந்தின் மிகப் பெரிய இரசிகன். நாங்கள் அதை மிக விரைவாக செய்து முடிக்க கடினமாக வேலை செய்வோம், முறையாக செய்தும் முடிப்போம். அது இருவருக்குமே நல்லது,” என்று பதிலளித்தார்.

"அவர் வெள்ளை மாளிகையில் நுழைந்ததும்,” பிரிட்டிஷ் பிரதம மந்திரி தெரேசா மே க்கும் அவருக்கும் இடையே "ஒரு சந்திப்பு இருக்கலாம்" என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

ஒருபுறம், அவர் பகிரங்கமாக வர்த்தக போரைக் கொண்டு ஜேர்மனியை அச்சுறுத்துகிறார். ஜேர்மன் கார் உற்பத்தி நிறுவனம் BMW மெக்சிகோவில் ஒரு புதிய ஆலை கட்டமைக்கும் அதன் திட்டத்தை முன்னெடுத்தால், அதன் மீது 35 சதவீத இறக்குமதி வரிகள் விதிக்கப்படும் என்றார். நியூ யோர்க்கின் ஐந்தாம் அவின்யூ வழியாக நீங்கள் நடக்கையில், உங்களால் நிறைய மெர்சிடஸ்-பென்ஸ் கார்களைப் பார்க்க முடியும். ஆனால் ஜேர்மனியில் உங்களால் வெகுசில செவ்ரோலெட் கார்களையே பார்க்க முடியும் என்று குறிப்பிட்ட ட்ரம்ப், “உண்மை என்னவென்றால், நீங்கள் அமெரிக்காவிற்கு மிகவும் அநீதி இழைக்கிறீர்கள். அங்கே பரஸ்பர பரிவர்த்தனை இல்லை,” என்றவர் அறிவித்தார்.

இதனால், அமெரிக்காவிற்கு வர்த்தகத்தில் அண்மித்து வருடத்திற்கு 800 பில்லியன் டாலர் இழப்பு ஏற்படுவதாக அவர் வாதிட்டார். “அது நியாயமாக இருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன், அங்கே பரஸ்பர பரிவர்த்தனை இருக்க வேண்டும்,” என்ற அவர், “ஆகவே அது நிறுத்தப்படும்,” என்றார்.

ஐரோப்பிய ஒன்றியம் உருகுலைவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக ட்ரம்ப் தெரிவித்தார். பிரிட்டன் வெளியேற்றத்தை அகதிகளின் வருகை மீது சாட்டிய அவர், இது தொடக்கம் மட்டுமே என்றார்: “ஏனையவர்களும் வெளியேறுவார்கள் என்று நான் நம்புகிறேன். நிறைய பேர் நினைப்பதைப் போல அதை ஒருங்கிணைத்து வைப்பது அத்துணை சுலபமில்லை என்றே நான் நினைக்கிறேன்.”

“நான் அவரை சந்திப்பேன். அவரை நான் மதிக்கிறேன், எனக்கு அவரை பிடிக்கும்,” என்று கூறி, ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மெர்க்கேல் மீதான மதிப்பை வெளிப்படுத்திய போதினும், அவர் அந்நாட்டிற்குள் மில்லியன் கணக்கான அகதிகளை அனுமதித்து, அவர் "மிகவும் பேரழிவுகரமான தவறை" செய்து விட்டதாக ட்ரம்ப் அவரை குற்றஞ்சாட்டினார்.

தனது சொந்த புலம்பெயர்வு-விரோத கொள்கைகளை நியாயப்படுத்தி கொள்வதன் பாகமாக, அவர், இங்கிலாந்தின் சுதந்திர கட்சியுடன் நேரடியாகவும் மற்றும் வெளிநாட்டவர் விரோத வலதின் ஏனைய கட்சிகளுடன் மறைமுகமாகவும் தன்னைத்தானே நல்லிணக்கப்படுத்திக் கொண்டார். “ஏனைய மக்கள் உள்வந்து, தங்கள் நாட்டை அழிப்பதை மக்கள் விரும்புவதில்லை,” என்று தெரிவித்த அவர், “நான் உள்நுழையும் அந்நாளில் இருந்து நாங்கள் எல்லைகளை மிகவும் பலமாக்க இருக்கிறோம் என்பது இந்நாட்டில் உங்களுக்கே தெரியும்,” என்றார்.

ரஷ்யா குறித்து கூறுகையில், அணுஆயுத பரவல் தடை மீது "எங்களால் சில நல்ல உடன்பாடுகளை எட்ட முடியுமானால்" தடையாணைகளை தளர்த்த வழி வகுக்கப்படும் என்பதோடு மட்டுமின்றி, ஜேர்மனி சான்சிலர் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் இருவரும் அவரது நம்பிக்கைக்கு உரிய விதத்தில் இல்லை என்றால் உறவுகள் முறியும் என இருவரையும் அச்சுறுத்தி, அமெரிக்காவின் நீண்டகால கூட்டாளியான ஜேர்மனியின் சான்சிலரை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் உடன் சமாந்தரப்படுத்தும் அளவிற்குச் சென்றார். “சரி, நான் அவ்விருவரையும் நம்பத் தொடங்கினாலும், அது எத்தனை காலத்திற்கு நீடிக்கும் என்று பார்ப்போம். அது நீண்டகாலத்திற்கு நீடிக்கவே நீடிக்காது,” என்றவர் அறிவித்தார்.

நேட்டோவை "வழக்கற்று போனதாக" அழைக்குமளவிற்கு ட்ரம்ப் சென்றார், பகுதியாக ஏனென்றால் அது "பயங்கரவாதத்தை கவனத்தில்" எடுப்பதாக இல்லை, மேலும் ஐரோப்பிய சக்திகள் "அவை செலுத்த வேண்டிய தொகையைச் செலுத்துவதில்லை, இது அமெரிக்காவிற்கு செய்யும் அநீதியாக நான் நினைக்கிறேன்,” என்பதற்காகவும் ஆகும். அமெரிக்கா இன்னமும் ஐரோப்பாவைப் பாதுகாக்க பொறுப்பேற்றுள்ளது என்று ஒரு சம்பிரதாயமான வாக்குறுதியுடன் இந்த அறிவிப்பை அவர் மென்மையாக்க முயன்றார்: “இவ்வாறு கூறினாலும், நேட்டோ எனக்கு மிகவும் முக்கியமானதே,” என்றார்.

அதேநேரத்தில், அவர் சிரியாவில் ரஷ்யாவின் இராணுவ தலையீடு ஒரு "கொடூரமான மனிதாபிமான நிலைக்கு" இட்டுச் சென்றிருப்பதற்காக, அதை "மிகவும் மோசமான விடயமாக" வர்ணித்து, ரஷ்ய தலையீட்டை கண்டித்தார்.

முன்னணி ஜேர்மன் அரசியல்வாதிகள் ட்ரம்பின் கருத்துக்களுக்கு ஆத்திரத்துடன் விடையிறுத்துள்ளதுடன், ஜேர்மனியின் சொந்த பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் உரிமைகோரல்களை வலியுறுத்தினர். சமூக ஜனநாயக கட்சி (SPD) தலைவர் சிக்மார் காப்ரியேல் Saarbrücker Zeitung க்கு கூறுகையில், “ஜேர்மனியில் நாம் பயப்பட வேண்டுமென நான் நினைக்கவில்லை. நம்மிடம் வழங்குவதற்கு ஒன்றுமில்லை என்பதால், நாம் ஒரு அடிமைத்தனமான மனோபாவத்தை ஏற்க வேண்டியதில்லை. ட்ரம்பைக் கையாள்வதற்கு, நமக்கு ஜேர்மனிய சுய-நம்பிக்கையும் ஒரு தெளிவான நிலைப்பாடும் அவசியம்,” என்றார்.

ட்ரம்பின் கடுமையான விமர்சனத்தால் ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகள் நிராயுதபாணியாகி விட்டதாக கருத வேண்டாமென மேர்க்கெல் அழைப்புவிடுத்தார். “ஐரோப்பியர்களாகிய நமது தலைவிதி நமது சொந்த கரங்களில் இருப்பதாக நான் நினைக்கிறேன்,” என்றவர் பேர்லினில் தெரிவித்தார்.

ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர் நேட்டோ பொது செயலர் ஜென்ஸ் ஸ்டொல்டென்பேர்க் உடனான ஒரு சந்திப்பிற்குப் பின்னர் கூறுகையில், ட்ரம்பின் கருத்துக்கள் ஐரோப்பா முழுவதிலும் "அதிர்ச்சியையும் எதிர்ப்பையும் உருவாக்கி" இருப்பதாக தெரிவித்தார். வரவிருக்கும் தலைவர்களான அமெரிக்க பாதுகாப்பு செயலர் ஜேம்ஸ் மாட்டீஸ் மற்றும் வெளியுறவுத்துறை செயலர் றெக்ஸ் ரில்லர்சன் இருவருமே அவர்களது உறுதி செய்வதற்கான விசாரணையில் நேட்டோவிற்கு ஆதரவாக பேசியிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். “அமெரிக்க அரசியலில் என்ன வரவருக்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டும்,” என்றார்.

முரண்பட்டரீதியில், பிரிட்டிஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் போரீஸ் ஜோன்சன் பிரிட்டன் வெளியேற்றத்திற்குப் பிந்தைய ஓர் அமெரிக்க-பிரிட்டிஷ் வர்த்தக உடன்படிக்கை குறித்த ட்ரம்பின் கருத்துக்களை வரவேற்றார். “அமெரிக்கா எங்களுடன் ஒரு சிறந்த சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை மேற்கொள்ள, அதுவும் அதை விரைவாக மேற்கொள்ள விரும்புகிறது என்பது மிகவும் நல்ல செய்தியாக நான் கருதுகிறேன்,” என்றார்.

இரண்டாம் உலக போர் முடிந்து 70 ஆண்டுகளுக்கும் அதிகமான காலத்திற்குப் பின்னர் மற்றும் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டு 25 ஆண்டுகளுக்குப் பின்னர், வன்முறை பதட்டங்களும் மற்றும் மோதல்களும் மீண்டுமொருமுறை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய அதிகாரங்களுக்கு இடையே அபிவிருத்தி அடைந்து வருகின்றன.

ட்ரம்பின் "முதலிடத்தில் அமெரிக்கா" கொள்கை இந்த நிகழ்வுபோக்கை இன்னும் தீவிரப்படுத்திக் கொண்டிருக்கிறது என்றாலும் அதற்கான மூலக்காரணம் அதுவல்ல. இது, உற்பத்தியின் சர்வதேச குணாம்சத்திற்கும் மற்றும் முதலாளித்துவம் வேரூன்றி உள்ள தேசிய-அரசு கட்டமைப்பிற்கும் இடையிலான மோதலைக் கடந்து வர இலாயக்கற்ற, முதலாளித்துவ அமைப்புமுறையின் தீர்க்கவியலாத முரண்பாடுகளில் தங்கியுள்ளது. முதலாம் உலக போர் மற்றும் இரண்டாம் உலக போருக்கு முந்தைய ஆண்டுகளைப் போலவே, மூலப்பொருட்கள், சந்தைகள், மலிவு உழைப்பு மற்றும் மூலோபாய செல்வாக்கிற்கான போட்டி ஏகாதிபத்திய அதிகாரங்களுக்கு இடையே மீண்டுமொருமுறை கடுமையான மோதல்களைக் கட்டவிழ்த்துவிட்டு, வர்த்தக போர் மற்றும் இராணுவ மோதலுக்கு இட்டுச் சென்று கொண்டிருக்கிறது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு (ICFI), உலக போரை நோக்கிய சர்வதேச முதலாளித்துவத்தின் கட்டுப்படுத்தவியலாத நகர்வைக் குறித்து மீண்டும் மீண்டும் எச்சரித்துள்ளது. ஜூலை 2014 இல், “சோசலிசமும் ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டமும்" என்ற அறிக்கையில், ICFI எழுதியது:

தற்போதைக்கு இந்த நோக்கங்கள் அனைத்தையுமே மற்ற பெரிய ஏகாதிபத்திய சக்திகளது ஒத்துழைப்புடன் தான் அமெரிக்கா முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது. ஆயினும், இந்த சக்திகளின் நலன்கள் எப்போதும் ஒன்றுபடும் என்பதில்லை. இருபதாம் நூற்றாண்டில் அமெரிக்காவுடன் இரண்டு போர்களில் இறங்கியிருந்த ஜேர்மன் ஏகாதிபத்தியமானது தனது ஏகாதிபத்திய இலட்சியங்களுக்கு மீண்டும் புத்துயிரூட்டிக் கொண்டிருக்கிறது. மேற்கு ஐரோப்பாவில் தனது மேலாதிக்க நிலையை உறுதிசெய்து கொண்டு விட்டிருக்கும் நிலையில், இப்போது அது ஒரு உலக சக்தியாவதற்கு முனைந்து கொண்டிருக்கிறது. … பிரிட்டன், பிரான்ஸ், கனடா மற்றும் ஆஸ்திரேலியா உட்பட ஏகாதிபத்திய சக்திகள் அனைத்துமே தமக்கான செல்வாக்கு பிராந்தியங்களை உருவாக்குகின்ற இந்த போட்டியில் முழுதாகப் பங்கெடுத்திருக்கின்றன. மத்திய கிழக்கு, ஆபிரிக்கா மற்றும் ஆசியாவில் இருக்கும் முன்னாள் காலனித்துவ நாடுகளும் மற்றும் அரைக் காலனித்துவ நாடுகளும் மட்டுமல்ல, ஆர்க்டிக், அந்தார்க்டிக் இன்னும் விண்வெளிப் பகுதி அத்துடன் இணையவெளி என உலகின் ஒவ்வொரு பகுதியுமே கடுமையான மோதலுக்கான ஒரு மூலகாரணமாக ஆகியிருக்கின்றன.

போருக்கு மூலக்காரணமான முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்துடன் போருக்கு எதிரான போராட்டத்தை இணைத்து, தொழிலாள வர்க்கத்தின் ஓர் ஐக்கியப்பட்ட சர்வதேச இயக்கத்தால் மட்டுமே ஒரு புதிய சர்வதேச மனிதயினப் படுகொலைகளைத் தடுக்க முடியும். இதற்கு, ஐரோப்பிய, அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின், நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் பிரிவுகளை, ஒரு புதிய சோசலிச தலைமையாகக் கட்டமைப்பது அவசியமாகிறது.