ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Brexit deepens existential crisis of UK and European Union

பிரிட்டன் வெளியேறுவது இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயிர்பிழைப்புக்கான நெருக்கடியை ஆழப்படுத்துகிறது

By Chris Marsden
10 January 2017

பிரதம மந்திரி தெரேசா மே புத்தாண்டில் ஸ்கை நியூஸ் உடனான அவரது முதல் நேர்காணலை, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் எவ்வாறு வெளியேறும் என்பது குறித்தோ அல்லது வெளியேறியதற்குப் பிந்தைய பிரிட்டன் குறித்தோ அவர் அரசாங்கத்திடம் எந்த திட்டமும் இல்லை என்ற விமர்சனங்களை ஒதுக்கித் தள்ளுவதற்குப் பயன்படுத்தினார்.

ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் தொழிலாளர்களின் சுதந்திர நகர்வை நிறுத்துவதானது ஒரே சந்தை அணுகலைப் பாதுகாப்பதுடன் முரண்படுகிறது என்றாலும் கூட, அதை வலியுறுத்துவதே அவரது முக்கிய அக்கறையாக இருக்குமென அவர் தெரிவித்தார். ஆனால் பின்னர் அவர் கூறுகையில் "நமது எல்லைகள் மீதான கட்டுப்பாடு, நமது சட்டங்கள் மீதான கட்டுப்பாட்டுக்கான" அவர் கோரிக்கைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும், அதேவேளையில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் சாத்தியமான சிறந்த வர்த்தக உடன்படிக்கையும் பாதுகாக்கப்பட வேண்டும். அங்கே "அதுவா இதுவா என்ற விருப்பத் தெரிவு" கிடையாது என்றார்.

ஒரு "கடுமையான பிரிட்டன் வெளியேற்றம்" குறித்து அஞ்சும் ஊக வணிகர்களை அவர் கருத்துக்கள் சமாதானப்படுத்தவில்லை, இரண்டு மாதங்களில் இல்லாதளவிற்கு பவுண்டு மதிப்பு சரிவதற்கு இது இட்டுச் சென்றது. நண்பகல் வாக்கில், பவுண்டு மதிப்பு டாலருக்கு எதிராக 1.1 சதவீதமும், யூரோவிற்கு எதிராக 1.23 சதவீதமும் சரிந்தது.

ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவத்தை ஆதரிப்பவரும் மற்றும் மே க்கு முன்பிருந்த டேவிட் கேமரூனின் நெருங்கிய ஆதரவாளருமான சர் இவான் ரோஜர்ஸ் (Sir Ivan Rogers), ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இங்கிலாந்து தூதர் பதவியிலிருந்து ஜனவரி 3 இல் இராஜினாமா செய்ததை அடுத்து மே இன் அறிக்கை வந்திருந்தது.

ரோஜர்ஸ், “தவறான வாதங்கள் மற்றும் முட்டாள்தனமான சிந்தனைக்கு" சவால் விடுக்குமாறும் மற்றும் "அதிகாரத்திடம் உண்மை பேசுமாறும்" ஏனைய உயர்மட்ட படைத்துறைசாரா ஊழியர்களை வலியுறுத்தி ஒரு கடிதம் அனுப்பிய பின்னர், பதவியை இராஜினாமா செய்திருந்தார். பிரிட்டன் வெளியேறுவதைத் தொடங்கி வைக்கும் லிஸ்பன் உடன்படிக்கையின் 50 வது ஷரத்தை எதிர்பார்த்தவாறு மே முன்னெடுப்பதற்கு முன்னதாக மற்றும் அவ்வாறு செய்வதற்காக நாடாளுமன்றத்தில் வாக்குகள் பெறுவதை அவசியப்படுத்துவதைத் தடுக்கும் அரசாங்கத்தின் மேல்முறையீட்டில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்த்தும் அவர் அவ்வாறு செய்திருந்தார்.

இம்மாத இறுதியில் உச்சி நீதிமன்ற தீர்ப்பு வரவிருக்கும் அந்நேரத்தில், "ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே பிரிட்டனுக்கான தொலைநோக்குப் பார்வை" எனும் ஒரு பிரதான உரையை அவர் விவரிக்க இருப்பதை மே சுட்டிக் காட்டியுள்ளார். “பிரிட்டன் ஒரே சந்தையை விட்டு வெளியேற தயாராக இருக்கிறது என்பதை அவர் தெளிவாக்கி விட வேண்டும் அல்லது அவர்கள் [ஐரோப்பிய ஒன்றியம்] நம்மை முறுக்கி பிழிய முயலுவார்கள்,” என்று ஓர் அமைச்சர் கூறியதை டெய்லி டெலிகிராப் மேற்கோளிட்டது.

பிரிட்டன் வெளியேறியதற்குப் பிந்தைய பொருளாதார சேதங்கள் மீதான அனுமானங்கள் ஜூன் 23 சர்வஜன வாக்கெடுப்பின் போது மிகைப்படுத்தப்பட்டிருந்தன என்றும், உற்பத்தி, கட்டுமானம் மற்றும் சேவைகள் உட்பட முக்கிய துறைகளில் பொருளாதாரத்தின் செயல்பாடு நிராகரிக்கப்பட்டிருந்ததாகவும் வலியுறுத்திய அறிக்கைகள், மே தலையிடுவதற்கு முன்னரே இங்கிலாந்து ஊடகங்களில் நிரம்பி இருந்தன.

பேங்க் ஆஃப் இங்கிலாந்து தலைமை பொருளாதார நிபுணர் Andy Haldane, “பொருளாதார செயல்பாடு ஓரளவிற்கு நெருக்கடியில் உள்ளது… சம்பளம் மற்றும் வேலைகள் போன்ற நிஜமான பல விடயங்களைப் பொறுத்த வரையில், கடந்த ஆண்டு பெரிதாக ஒன்றும் நடக்கவில்லை, அது வழக்கம் போல ஆகக் குறைந்த செயல்பாடாக இருந்தது,” என்று அறிவிக்கும் அளவிற்குச் சென்றார்.

யதார்த்தத்தில் முதலாளித்துவ வர்க்கத்தின் போட்டி பிரிவுகளுக்கு இடையிலான இந்த அரை-உத்தியோகப்பூர்வ கருத்து மோதல், ஆளும் வட்டாரங்களில் அரசியல் முன்னோக்கின் நெருக்கடியை எடுத்துக்காட்டுகிறது, அதுவும், தொடர்ச்சியாக மீண்டும் மீண்டும் எடுத்துக்காட்டப்படும் இது, தொழிலாளர்கள் இப்போது எதை முகங்கொடுக்கிறார்களோ இந்நிலையில் அவர்களை நிராயுதபாணியாக்க ஒரு வழிவகையாக சேவையாற்றுகிறது.

யதார்த்தத்தில், கூலி வெட்டுக்களே தொழிலாளர்களுக்கான "வழமையான நடைமுறைகளாக" உள்ளன என்பதையே புத்தாண்டு அறிக்கைகள் எடுத்துக்காட்டுகின்றன. 2017 இல் வருமான அதிகரிப்பு, ஆறு ஆண்டுகால வடிவத்தையே தொடரும் விதத்தில், பணவீக்கத்திற்கு ஏற்ப இருக்காது என்று கணிக்கப்படுகிறது. 2008 மற்றும் 2013 க்கு இடையே சராசரி சம்பளம் 9 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. குடும்ப நுகர்வின் அதிகரிப்பு ஏறத்தாழ மொத்தமும் அதிகரித்த தனிநபர் கடனால் எரியூட்டப்பட்டு இருந்தது, அத்துடன் ஒவ்வொரு குடும்பமும் இப்போது சாதனையளவிற்கு, அடமானங்களைக் கணக்கில் எடுக்காமல், 12,887 பவுண்டு கடனைக் கொண்டுள்ளது.

மிக அடிப்படையாக, பிரிட்டன் வெளியேறிய பின்னர், இன்னும் அதிக முக்கியத்துவமாக அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பின்னர், ஐரோப்பா முகங்கொடுக்கும் பரந்த அரசியல் மற்றும் பொருளாதார நிலைமை மிகவும் படுஅபாயகரமானதாகும்.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் இங்கிலாந்து என்ன உறவைக் கொண்டிருக்கும் என்பது மீதான பிரச்சினையானது, அதன் உயிர்பிழைப்பேயே அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கும் நிலைமைகளின் கீழ் நடக்கிறது. இது ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறப்பார்ந்த பத்திரிகைகள் மற்றும் அக்கண்டத்தின் ஆளும் உயரடுக்குகளுக்கு உள்ளே நடக்கும் விவாதத்தின் நிரந்தர மையப்புள்ளியாகி உள்ளது.

இது ஊட்டம் பெறுவதற்கான காரணம் பிரிட்டன் வெளியேறுவது அல்ல, மாறாக அதிகரித்த பொருளாதார நெருக்கடி மற்றும் எதிர்விரோத அதிகாரங்களுக்கு இடையிலான கடுமையான போட்டியின் தாக்கத்தின் கீழ் பிரதான ஐரோப்பிய சக்திகளுக்கு இடையிலான தேசிய பகைமை வளர்வதன் வெளிப்பாடாகும். இதே பாணியில், பிரிட்டன் வெளியேற்றம் மற்றும் ட்ரம்பின் "முதலிடத்தில் அமெரிக்கா" கொள்கைகளுக்கு திரும்புதல் ஆகியவை, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் சிக்கன கொள்கைகளுக்கு மக்களின் வெறுப்பை சாதகமாக்கி கொண்ட வலதுசாரி தேசியவாத இயக்கங்களின் —மிக முக்கியமாக பிரான்சில் தீவிர வலது தேசிய முன்னணியின்— வளர்ச்சியையும் அதிகரித்துள்ளன.

இந்த அபிவிருத்திகளோடு, இத்தாலி அதன் வங்கி நெருக்கடியின் விளைவாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற்றப்பட நிர்பந்திக்கப்படலாம் என்பதற்கான அதிகரித்த வாய்ப்பையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஃபோர்ப்ஸ் வணிக இதழ் எச்சரிக்கையில், இது ஐரோப்பிய ஒன்றியத்தின் உடைவில் போய் முடியக்கூடும், அது "ஒரு புவிசார் அரசியல் பேரழிவாக" இருக்கும். “[இரண்டாம் உலக போருக்கு] பின்னர் கோப்பையில் அடைக்கப்பட்டிருந்த எல்லா அசுரத்தனமும் வெளியில் வந்துவிடும்,” என்றது எழுதியது.

இந்த எச்சரிக்கை முன்னாள் ஜேர்மன் சான்சிலர் ஹெல்முட் கோல் இன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் Horst Teltschik ஆல் மீளவலியுறுத்தப்பட்டது. அவர், “ஐரோப்பிய ஒருங்கிணைப்பானது இரண்டு உலக போர் பேரழிவுகளுக்கு ஐரோப்பியர்களின் சமாதான விடையிறுப்பாகும்,” என்றார். “யூரோ நெருக்கடி, பிரிட்டன் வெளியேறுவது மற்றும் பிரான்ஸ், நெதர்லாந்து, ஜேர்மனி, ஆஸ்திரியா அல்லது இத்தாலியில் மற்றும் சர்வாதிபத்திய கிழக்கு அண்டைநாடுகளில், குறிப்பாக போலாந்து, ஹங்கேரி, ரோமானியாவில் வெகுஜன இயக்கங்களின் எழுச்சியுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிதைவை நாம் கண்டுற்று வருகிறோம்,” என்றவர் தெரிவித்தார்.

“ஒரு மைய ஐரோப்பா முன்செல்ல வேண்டாமா? திடீரென்று பார்வைக்கு எட்டிய தூரம் ஒரு பொதுவான வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கையின்றி, ஒரு தற்காப்புக்கான ஒன்றியம் மீண்டும் விவாதிக்கப்பட்டு வருகிறதே…" என்று கேள்வி எழுப்பி அவர் நிறைவு செய்தார்.

“ஒரு "மைய ஐரோப்பா" என்ற ஒருங்கிணைந்த யோசனை மற்றும் தீவிரமாக்கப்பட்டுள்ள இராணுவமயமாக்கம் ஆகியவை இப்போது ஜேர்மனியின் விவாதத்தில் மேலோங்கி உள்ளது. மிக சமீபத்தில், Project Syndicate இல் எழுதுகையில் ஜேர்மன் பசுமைக் கட்சியின் ஜோஸ்கா பிஷ்ஷெசர் வலியுறுத்துகையில், “மேற்கில் வீசி கொண்டிருக்கும் நவ-தேசியவாத அலையின்" கீழ் ஐரோப்பிய ஒன்றியம் சிதையும் அபாயத்தை முகங்கொடுப்பதாக தெரிவித்தார்.

ட்ரம்ப், “புதிய தேசியவாதத்தின் ஒரு விளக்கவுரையாளர், அவருக்கு ஐரோப்பிய ஒருங்கிணைப்பில் நம்பிக்கை கிடையாது,” என்றவர் தொடர்ந்து குறிப்பிட்டார். அவர் "ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவ நாடுகளில் தேசியவாத சக்திகளை மற்றும் இயக்கங்களை ஆதரித்து அதை நிலைகுலைக்க நீண்டகாலமாக முயன்றுள்ளவரும்,” மற்றும் "ஐரோப்பாவிற்கான அமெரிக்காவின் பாதுகாப்பு உத்தரவாதங்களைத் தொடர்ந்து கேள்விக்கு உட்படுத்துபவருமான" “ஜனாதிபதி விளாடிமீர் புட்டினை ரஷ்யாவில் கூட்டாளியாக" கொண்டுள்ளார்.

கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ அதன் "செல்வாக்கை" மீளவலியுறுத்துவதற்கு ரஷ்யாவின் முயற்சிகளுக்கு அது விடையிறுக்குமென இனியும் நம்ப முடியாது என்கின்ற நிலையில், “அதே நோக்கத்திற்காக பிரான்சும் ஜேர்மனியும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே ஐரோப்பா அதன் பாதுகாப்பை நம்பகமான விதத்தில் பலப்படுத்த முடியும்… பழைய ஐரோப்பிய ஒன்றியம் ஒரு பொருளாதார சக்தியாக அபிவிருத்தி அடைந்ததற்கு காரணம், அது அமெரிக்க பாதுகாப்புக் குடையின் கீழ் பாதுகாக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த உத்தரவாதம் இல்லாத நிலையில், அது அதன் அரசியல் மற்றும் இராணுவ பலத்தைக் காட்டுவதற்கு அதன் சொந்த தகைமையை அபிவிருத்தி செய்வதன் மூலமாக மட்டுமே அதன் தற்போதைய புவிசார் அரசியல் யதார்த்தங்களைச் சமாளிக்க முடியும்.”

முன்பைக் காட்டிலும் என்ன தெளிவாகிறதென்றால், இங்கிலாந்திற்குள் ஏதேனும் ஒரு முதலாளித்துவ முகாமிற்கு பின்னால் தொழிலாளர்களை ஊக்குவிப்பதற்கான சகல முயற்சிகளும்—அவை ஐரோப்பிய ஒன்றியத்திற்காக இருந்தாலும் சரி அல்லது அதற்கு எதிராக இருந்தாலும் சரி—அவை வர்த்தக போர் மற்றும் இராணுவ மோதலுக்காக நடந்து வரும் தயாரிப்புகளுக்கு முட்டுக் கொடுப்பதற்காக உள்ளது.

இது, ஜூன் மாத சர்வஜன வாக்கெடுப்பில் "இடதிலிருந்து வெளியேறுவதற்கான" அழைப்புகளுக்குப் பின்னால் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் அணி திரட்டிய சோசலிஸ்ட் கட்சி மற்றும் சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சி போன்றவை ஆகட்டும் அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தை சீர்திருத்தி விடலாம் என்ற பிரமைகளைப் பரப்பி, அதிலேயே தங்கியிருப்பதற்கு வாக்களிக்க அழைப்புவிடுத்த இடது ஐக்கியம் மற்றும் சோசலிஸ்ட் எதிர்ப்பு போன்றவை ஆகட்டும், பிரிட்டனின் இந்த இரண்டு தரப்பு போலி-இடது குழுக்களது நடவடிக்கைகளின் இன்றியமையாத அரசியல் விளைவாகும்.

கடந்த அக்டோபரில் அதன் மூன்றாவது தேசிய மாநாட்டில் சோசலிச சமத்துவக் கட்சி (SEP), “இராணுவவாதம், சிக்கனக் கொள்கை மற்றும் போருக்கு எதிரான ஒரு புதிய சோசலிச இயக்கம்" எனும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, அந்த சர்வஜன வாக்கெடுப்பை செயலூக்கத்துடன் புறக்கணிப்பதற்கான நமது அழைப்பின் முக்கியத்துவத்தை வரையறுத்தது.

சோசலிச சமத்துவக் கட்சி "மட்டுமே தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு சுயாதீனமான அரசியல் முன்னோக்கை முன்னெடுக்கிறது" மற்றும் நமது "தொடக்க புள்ளியாக இருப்பது, பிரிட்டன் தொழிலாளர்கள் நலன்களை மட்டுமல்ல, மாறாக ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவிலான தொழிலாளர்களின் நலன்களைத் தாங்கிப்பிடிக்கும் ஒரு கொள்கையை விளங்கப்படுத்துவதாகும்,” என்பதை நாம் விவரித்தோம்.

"20 ஆம் நூற்றாண்டில் இரண்டு முறை அக்கண்டத்தை போருக்குள் மூழ்கடித்த அடிப்படை முரண்பாடுகளை—ஐரோப்பாவின் ஒருங்கிணைந்த தன்மை மற்றும் உலகளாவிய உற்பத்தி மற்றும் எதிர்விரோத தேசிய அரசுகளாக அக்கண்டம் பிளவுற்றிருந்ததற்கு இடையிலான முரண்பாடுகளை—ஆளும் உயரடுக்குகள் எதைக் கொண்டு தீர்க்க முயன்றனவோ, இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய அந்த ஐரோப்பிய ஐக்கிய திட்டத்தின் தோல்வியின் மிக வளர்ச்சியடைந்த வெளிப்பாடே" இந்த சர்வஜன வாக்கெடுப்பு என்று சோசலிச சமத்துவக் கட்சி எச்சரித்தது.

“ஐரோப்பிய ஒன்றியம் உடைந்து வருகிறது, அதற்கு புத்துயிரூட்ட முடியாது. சோசலிச அரசுகளின் சர்வதேச கூட்டமைப்பின் ஓர் உள்ளார்ந்த பாகமாக ஸ்தாபிக்கப்பட்ட ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளை உருவாக்குவதன் மூலமாக மட்டுமே, அக்கண்டத்தின் பரந்த உற்பத்தி சக்திகளை அனைவரது நலன்களுக்காகவும் பயன்படுத்த முடியும்,” என்று நாம் வலியுறுத்தினோம்.

இந்த முன்னோக்கை ஏற்றுக் கொள்வதானது, சமூக அடிமைத்தனம் மற்றும் போருக்குள் முன்பினும் ஆழமாக செல்வதற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் இன்றியமையாத விடையிறுப்பை வழங்குகிறது.

 

கட்டுரையாளரின் ஏனைய பரிந்துரைகள்:

For a new socialist movement against militarism, austerity and war
[14 November 2016]