ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lankan president asks Trump to end war crime investigations

இலங்கை ஜனாதிபதி யுத்த குற்ற விசாரணைகளை நிறுத்துமாறு ட்ரம்ப்புக்கு வேண்டுகோள் விடுக்கின்றார்

By K. Ratnayake 
10 December 2016

இலங்கையின் சிறிசேன-விக்கிரமசிங்கவின் அரசாங்கம், கொழும்பின் யுத்தக் குற்றங்களை மூடி மறைக்கவும் அதன் ஆட்சிக்கு தொடர்ந்து முண்டு கொடுக்கவும் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்பிடம் ஆதரவு பெற ஏக்கத்துடன் முயல்கிறது.

கடந்த மாத இறுதியில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுக்களை கைவிடுவதற்கு அழுத்தம் கொடுக்க உதவி கேட்டு ட்ரம்ப்புக்கு கடிதம் எழுதியதை வெளிப்படுத்தினார். டிசம்பர் 2, டிரம்ப் எதிர்கால துணைத் தலைவரான மைக் பென்ஸ் சிறிசேனவை தொலை பேசியில் அழைத்தார். இதன் போது அவர்கள் இரு நாடுகளுக்கும் இடையேயான "உறவுகளை வலுப்படுத்துவது" பற்றி கலந்துரையாடினர்.

நவம்பர் 28 ஒரு கட்சி கூட்டத்தில் உரையாற்றிய சிறிசேன இதனை அறிவித்தார்: "நான் எங்களுக்கு மனித உரிமைகள் பேரவையில் பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டு அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்புக்கு ஒரு விசேட செய்தியை அனுப்பியுள்ளேன்... நான் எமது நாட்டை [போர் குற்றத்தில் இருந்து] முழுமையாக விடுவித்து தருமாறும் சுதந்திரமாக வாழ அனுமதிக்குமாறும் அவரை கேட்டுக்கொண்டுள்ளேன்."

சிறிசேன, தான் புதிய அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்து தனது கோரிக்கையை வலியுறுத்த ஒரு சிறப்புத் தூதரை அனுப்பவிருப்பதாகவும் கூறினார். ஜனவரி மாதம் பதவியை ஏற்கவுள்ள, ஐ.நா. பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அன்டோனியோ குட்டேரேஸ் இடமும் "இதேபோன்ற ஒரு வேண்டுகோளை" விடுத்துள்ளதாகவும் இலங்கை ஜனாதிபதி ஒப்புக்கொண்டுள்ளார்.

ஐ.நா நிபுணர் குழு மற்றும் தனியார் அமைப்புகளும், 2009ல் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொடூரமான இராணுவத் தாக்குதல்களின் இறுதி வாரங்களில் பத்தாயிரக்கணக்கான தமிழ் பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக மதிப்பிட்டுள்ளன. சுமார் 30 ஆண்டு காலமாக அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த இலங்கை அரசாங்கங்களால் முன்னெடுக்கப்பட்ட இனவாத போரினால் கிட்டத்தட்ட 200,000 பொது மக்கள் உயிரிழந்தனர். மோதல் முடிவுக்கு வந்து ஏழு ஆண்டுகளுக்கு பின்னரும், நூற்றுக்கணக்கான படைகள் இன்னமும் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள முன்னாள் யுத்த வலயத்தை ஆக்கிரமித்துக்கொண்டுள்ளதுடன், உள்ளூர் தமிழ் மக்கள் மீது கொழும்பின் கட்டளைகளை ஈவிரக்கமின்றி திணித்து வருகின்றன.

வாஷிங்டன் இராணுவத் தளபாட உதவிகள் உட்பட, இரத்தம் தோய்ந்த மோதல் முழுவதும் கொழும்புக்கு ஆதரவு கொடுத்தது. போரின் இறுதி வாரங்களில் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம் சீனாவுடன் நெருங்கிய உறவுகளை ஏற்படுத்திக்கொண்ட பின்னரே அதை விமர்சிக்கத் தொடங்கியது. அப்போது சீனா கொழும்புக்கு நிதி உதவி மற்றும் ஆயுத தளபாடங்களின் பிரதான வழங்குநராக ஆகியிருந்தது.

சீனாவிற்கு எதிரான அதன் ஆத்திரமூட்டும் "ஆசியாவில் முன்னிலை" கொள்கையை அபிவிருத்தி செய்துகொண்டிருந்த ஒபாமா நிர்வாகம், பெய்ஜிங்கில் இருந்து கொழும்பு தூர விலகுவதை விரும்பியது. இந்த உறவுகளை முறித்துக் கொள்ள இராஜபக்ஷவுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியாக, அமெரிக்கா, இலங்கை போர் குற்றங்கள் பற்றிய ஒரு சர்வதேச விசாரணையை கோரி மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் ஒன்றை முன்வைத்தது.

இராஜபக்ஷ பிரதிபலிக்காத நிலையில், 2014 பிற்பகுதியில், ஒபாமா நிர்வாகம் இராஜபக்ஷவை வெளியேற்றவும் ஜனாதிபதியாக சிறிசேனவை நியமிக்கவும் ஒரு ஆட்சி மாற்றத்துக்கு ஆதரவு கொடுத்தது. இதில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் இப்போதைய பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மற்றும் சிறிசேனவை "நல்ல ஆட்சியின்" காவலனாக சித்தரித்த பல்வேறு தொழிற்சங்கங்கள், சிவில் சமூகக் குழுக்கள் மற்றும் போலி இடது அமைப்புக்களும் சம்பந்தப்பட்டிருந்தன.

சிறிசேன ஜனாதிபதியாகி வாஷிங்டனை நோக்கிய மாற்றங்களை எடுக்கத் தொடங்கிய உடன், யு.என்.எச்.ஆர்.சி.யில் மற்றொரு தீர்மானத்தைக் கொண்டு வந்த அமெரிக்கா, யுத்த குற்றங்கள் பற்றிய சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கைகளை கைவிட்டதோடு, அதற்கு பதிலாக ஒரு உள்நாட்டு விசாரணைக்கு ஆதரவு கொடுத்தது.

கடந்த 25 ஆண்டுகளாக நாட்டுக்கு நாடு யுத்தங்களை தொடுத்து வரும் அமெரிக்கா, தனது மேலாதிக்க நலன்களை முன்னெடுப்பதன் பேரில் “மனித உரிமைகள்” விடயங்களை எவ்வாறு தேர்ந்தெடுத்துக்கொள்கின்றது என்பதற்கு இது மற்றொரு இழிந்த உதாரணம் ஆகும்.

அனைத்து போர் குற்றச்சாட்டுகளையும் கைவிட ஐ.நா.வுக்கு அழுத்தம் கொடுக்க ட்ரம்ப்பை வற்புறுத்தும் சிறிசேனவின் முயற்சிகள், யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட அட்டூழியங்கள் பற்றிய விசாரணையை எதிர்க்கும் இலங்கை இராணுவம் மற்றும் சிங்கள பேரினவாத குழுக்களை சாந்தப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவையாகும்.

சிங்கள இனவாத பிரச்சாரத்தை ஆதரிக்கும் முன்னாள் ஜனாதிபதி இராஜபக்ஷ, பில்லியனர் ட்ரம்ப்பின் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு, யு.என்.எச்.ஆர்.சி.யில் யுத்தக் குற்றத் தீர்மானங்களை கொண்டுவர ஒபாமா நிர்வாகம் அனுசரணையளித்ததைப் பற்றி புகார் செய்தார்.

இராஜபக்ஷ, சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தை போர் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ட்ரம்ப்பை தொடர்புகொள்ளுமாறு பரிந்துரைத்தார். சிங்கள பெளத்த பேரினவாத குழுக்களும் ட்ரம்ப் தேர்வானது பற்றி மகிழ்ச்சி அடைந்துள்ளதுடன், அவரின் தேசியவாத வாய்ச்சவடால்களைப் பாராட்டி, கொழும்பு புதிய அமெரிக்க நிர்வாகத்தின் ஆதரவை நாட வேண்டும் என்று கோரியுள்ளன.

தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின் போது, சிறிசேன இலங்கையில் சிறுபான்மையினருக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் முடிவுக்குக் கொண்டுவருவதாக தெரிவித்ததோடு போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு "நியாயம்" வழங்குவதாகவும் வாக்குறுதி கொடுத்தார். ஜனாதிபதி ஆனதன் பின்னர், சிறிசேன இலங்கையில் போர்க் குற்றங்கள் நடக்கவில்லை என்று வலியுறுத்தினார். பிரதான தமிழ் முதலாளித்துவக் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு, அரசியல் ரீதியில் சிறிசேன நிர்வாகத்தை ஆதரிப்பதுடன் ட்ரம்புக்கு சிறிசேன விடுத்த வேண்டுகோலைப் பற்றி மெளனம் காக்கின்றது.

கடந்த வாரம் சிறிசேன தேர்வு செய்யப்பட்டுள்ள அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் உடன் நடத்திய தொலைபேசி உரையாடல், ட்ரம்ப்புக்கு சிறிசேன விடுத்த வேண்டுகோள்களின் நேரடி பிரதிபலிப்பா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. இலங்கை அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீட்டின் படி, "ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்பை சந்திப்பதற்காக வாஷிங்டனுக்கு ஜனாதிபதி சிறிசேன பயணிப்பதற்கான ஏற்பாடுகளை நோக்கி வேலை செய்வதாக" பென்ஸ் உறுதியளித்துள்ளார்.

"ஜனநாயக அரசாங்கத்தின் பொதுவான மதிப்புகளின் அடிப்படையில் இரு நாடுகளுக்கும் இடையே முன்னேற்றமான உறவுகளை [உறுதிப்படுத்துதல்] மற்றும் ஆசியாவின் மத்தியில் இலங்கையின் மூலோபாய இருப்பிடம்" ஆகிய விடயங்கள் தொலைபேசியில் பேசப்பட்ட வேறு விடயங்களாகும். "கடல் பாதைகள் பாதுகாப்பு, போதை பொருள் கடத்தலை தடுப்பது, அனர்த்த முகாமைத்துவம் போன்றவற்றில் பங்காளிகளாக ஒத்துழைப்பது” பற்றியும் கலந்துரையாடப்பட்டதாக அந்த பத்திரிகை அறிக்கை மேலும் தெரிவித்து.

பென்ஸ் மற்றும் சிறிசேனவும் இலங்கையின் "மூலோபாய இருப்பிடம்" மற்றும் "கடல் பாதைகள் பாதுகாப்பு" பற்றி கலந்துரையாடியமை, உச்சி முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். இலங்கை தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் வறியவர்களும் இந்த அபிவிருத்தியின் ஆபத்தான தாக்கங்களை உணர்தல் வேண்டும். "கடல் பாதுகாப்பு" என்ற பதாகையின் கீழ், வாஷிங்டன் சீனாவிற்கு எதிரான தனது போர் தயாரிப்புக்களின் ஒரு பகுதியாக, ஆசியாவில் தனது கடற்படை தளத்தை விரிவுபடுத்துகின்றது.

மக்களின் முதுகுக்குப் பின்னால், இலங்கை அரசாங்கம், பெய்ஜிங்கிற்கு எதிராக வாஷிங்டனின் இராஜதந்திர மற்றும் இராணுவ ஆக்கிரமிப்பில் தனது ஈடுபாட்டை அதிகரிப்பதானது, கொழும்பின் போர்க் குற்றங்கள் பற்றிய எந்தவொரு யு.என்.எச்.ஆர்.சி. விசாரணைக்கும் முடிவுகட்டுவதற்கு ஆதரவளிக்க ட்ரம்ப்பை ஊக்குவிக்கும் என்று நம்புகிறது.