ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Anti-Russia “fake news” campaign rolled out across Europe

ஐரோப்பா எங்கிலும் ரஷ்ய-விரோத "பொய் செய்தி" பிரச்சாரம் பரப்பப்படுகிறது

By Julie Hyland
5 January 2017

நவம்பர் 8 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர், ஜனநாயகக் கட்சியின் பிரிவுகள், உளவுத்துறை சேவைகள் மற்றும் ஊடகங்களும், ஹிலாரி கிளிண்டன் பிரச்சாரத்திற்கு குழிபறிப்பதற்காக ரஷ்ய அரசாங்கம் ஜனநாயக கட்சியினது மின்னஞ்சல் சர்வர்களை ஊடுருவியதாக கூறும் ஆதாரமற்ற தேர்தலுக்கு-முந்தைய வாதங்களை தீவிரப்படுத்தி உள்ளன.

கசியவிடப்பட்ட மின்னஞ்சல்களின் உள்ளடக்கத்திலிருந்து கவனத்தை திசைதிருப்புவதே அதன் உடனடி நோக்கமாக இருந்தது, அவை ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு போட்டியில் அவருக்கு சவாலாக இருந்தவரை, பேர்ணி சாண்டர்ஸை, பலவீனப்படுத்த கிளிண்டன் பிரச்சாரக் குழு மற்றும் ஜனநாயகக் கட்சியினது தேசிய குழுவின் ஒரு சூழ்ச்சியை அம்பலப்படுத்தி இருந்தன.

அது, ட்ரம்ப் வென்றதும், அமெரிக்கா அதன் இராஜாங்க, பொருளாதார மற்றும் இராணுவ தாக்குதலை —ரஷ்யாவிற்கு எதிராகவா அல்லது சீனாவிற்கு எதிராகவா— எந்த வரிசைமுறையை முதலில் ஆக்ரோஷமாக தீவிரப்படுத்த வேண்டும் என்ற பிரச்சினை மீது வெளியுறவு கொள்கை விவகாரத்தில் ஆளும் உயரடுக்குகளுக்குள் மையமிட்டிருந்த ஒரு மூர்க்கமான சண்டையின் குவிமையமாக மாறியுள்ளது. மிகவும் அடிப்படையான அதன் நோக்கம், வெளியுறவுக் கொள்கை மீது கேள்வி எழுப்பும் எவரொருவரையும் வெளிநாட்டு சக்திகளிடம் "ஏமாந்து போகும் ஒருவராக" முத்திரை குத்துவதாகும் மற்றும் அனைத்திற்கும் மேலாக சமூக ஊடகங்களுக்கு எதிராக இன்னும் கடுமையான தணிக்கை முறையை நியாயப்படுத்துவதாகும்.

இதே இது, ஐரோப்பாவில் உற்பத்தி செய்யப்படும் பொய் செய்தி மோசடிக்கும் பொருந்துகிறது. அக்கண்டம் முழுவதிலுமான தேசிய ஆளும் உயரடுக்குகளுக்கு உள்ளேயும் மற்றும் இடையிலும், வெளியுறவு கொள்கை மீது அமெரிக்காவிற்குள் நிலவும் பிளவுகள் எதிரொலிக்கின்றன. எவ்வாறிருப்பினும், எந்த தரப்பு தவிர்க்கவியலாமல் வென்றாலும், இராணுவவாதம் மற்றும் போருக்கான திட்டநிரலுக்கு பொலிஸ்-அரசு முறைகள் அவசியப்படுகின்றன என்பதில் அனைவரும் உடன்பட்டுள்ளனர்.

இதுதான், "மூன்றாவது தரப்புகளால் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான பிரச்சாரத்திற்கு எதிர்நடவடிக்கை எடுக்க அதன் மூலோபாய தகவல் பரிவர்த்தனை" என்று நவம்பர் 23 இல் ஐரோப்பிய நாடாளுமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தின் உள்ளடக்கம். இந்த பரந்த தீர்மானத்தின் அறிவிக்கப்பட்ட நோக்கம், “[ஐரோப்பிய] மதிப்புகளை ஒரேமாதிரியாக பகிர்ந்து கொள்ளாத" ஐரோப்பிய ஒன்றியத்தை "மதிப்பிழக்க செய்ய நோக்கம் கொண்ட மூன்றாம் தரப்பு நடவடிக்கையாளர்களை" எதிர்கொள்வதாகும்.

அத்தீர்மானம் பின்னர் ரஷ்யா மற்றும் டயஷ் (அல்லது ISIL) ஐ பிரதான "நடவடிக்கையாளர்களாக" வரையறுப்பதுடன், அத்தீர்மானத்தின் பெரும்பகுதியை ரஷ்யா ஆக்கிரமிக்கிறது.

அது, "முக்கியமாக 'புதிய ஊடகத்தில்', சமூக வலையமைப்புகள் மற்றும் டிஜிட்டல் அரங்கில் மீண்டும் மீண்டும் திட்டமிட்ட ஏமாற்றுத்தனம் மற்றும் பொய் தகவல்களின் ஒரு மூலோபாயத்தில் ஈடுபடுத்தி…" கொண்டுள்ள "பன்னாட்டு பயங்கரவாத மற்றும் குற்றகர அமைப்புகளுடன்…" ரஷ்யாவை சமாந்தரப்படுத்துகிறது.

“தகவல் போர்முறைக்காக" ரஷ்யாவைக் குற்றஞ்சாட்டும் அத்தீர்மானம், அது "ஜனநாயக மதிப்புகளுக்கு சவால்விடுக்க, ஐரோப்பாவை பிளவுபடுத்த, உள்நாட்டு ஆதரவை சேகரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கிழக்கு அண்டைநாடுகளில் தோல்வியடைந்த அரசுகளை குறித்து கருதுகோள்களை உருவாக்க" “பல வகையிலான கருவிகள் மற்றும் முறைகளை பயன்படுத்தி வருவதாக" வலியுறுத்துகிறது.

அத்தீர்மானம் குறிப்பாக Russkiy Mir, RT சானல், Sputnik போன்ற சிந்தனைக் குழாம்கள், அத்துடன் சேர்ந்து "இணைய துணைக்கருவிகள்" மற்றும் "எல்லை தாண்டிய சமூக மற்றும் மதவாத குழுக்களை…" மேற்கோளிடுகிறது.

இத்தகைய வாதங்களை பலப்படுத்த அது எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை. அல்லது அது குற்றஞ்சாட்டும் "பொய் தகவல்களின்" கருத்துக்களும் குறிப்பிடப்படவில்லை. அதற்கு மாறாக அது ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களுக்குக் குழிபறிக்கும் எந்தவொரு செய்திகளையும், அவை சரியோ தவறோ, முன்வைக்கிறது.

 “ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லா விமர்சனங்களும் அல்லது அதன் கொள்கைகளும் அவசியமானரீதியில் பிரச்சாரத்தை அல்லது பொய் தகவல்களை உள்ளடக்கி உள்ளன என்பது கிடையாது" என்று குறிப்பிடுகின்ற அதேவேளையில், "மூன்றாம் நாடுகளுடன் தொடர்புபட்டுள்ள சூழ்ச்சிகள் அல்லது ஒத்துழைப்புக்கான சான்றுகளும் மற்றும் இந்த விமர்சனத்தை எரியூட்டும் அல்லது தீவிரப்படுத்தும் உள்நோக்கமும் இத்தகைய தகவல்களின் நம்பகத்தன்மை மீது கேள்வி எழுப்ப அடித்தளங்களை வழங்குகின்றன…" என்று அது குறிப்பிடுகிறது.

விக்கிலீக்ஸின் ஜூலியன் அசான்ஜ் மற்றும் எட்வார்ட் ஸ்னோவ்டென் தலை மறைவாகி இருக்க மற்றும் வெளிநாடுகளில் மறைந்திருக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளனர், தேசதுரோக குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டு சிறைவாசம் மற்றும் அதை விட மோசமானதைக் கொண்டு அச்சுறுத்தப்பட்டுள்ளனர் என்பது போன்ற பொருத்தமற்ற சமன்பாடுகளின் அடிப்படையில் அது அமைந்துள்ளது.

வஞ்சகமாக இருப்பதைப் போலவே, அந்த ஐரோப்பிய ஒன்றிய தீர்மானம் "தகவல் போர்முறையை" ஓர் அறிவிக்கப்படாத போர் நடவடிக்கையாக தீர்மானம் செய்கிறது. அதுபோன்ற அணுகுமுறைகள் "நவீன ஒருங்கிணைந்த போர்முறையின் (hybrid warfare) உள்ளார்ந்த பாகமாக" அமைகின்றன என்பதுடன், “அது ஒரு இரகசிய மற்றும் வெளிப்படையான இயல்பில் இராணுவ மற்றும் இராணுவமல்லாத நடவடிக்கைகளின் ஒரு கலவையாக இருந்து, ஓர் உத்தியோகபூர்வ போர் அறிவிப்பின்றி, தாக்குதலின் கீழ் இருக்கும் ஒரு நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக சூழலை நிலைகுலைக்க பயன்படுத்தப்படுகிறது,” என்று குறிப்பிடும் அத்தீர்மானம், “ஐரோப்பிய ஒன்றியத்தின் பங்காளிகளை மட்டுமல்ல, மாறாக ஐரோப்பிய ஒன்றியத்தையே, அதன் அமைப்புகள் மற்றும் அதன் அனைத்து அங்கத்துவ நாடுகள் மற்றும் குடிமக்களை அவர்களது தேசியம் மற்றும் மதம் எதையும் கணக்கில் கொள்ளாமல், இலக்கு வைக்கிறது,” என்று குறிப்பிடுகிறது.

ரஷ்யா ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக நடைமுறையளவில் ஒரு போரில் ஈடுபட்டுள்ளது என்ற வாதம் யதார்த்தத்தை தலைகீழாக்குகிறது. மாஸ்கோ ஐரோப்பிய ஒன்றிய கொள்கையின் கூறுபாடுகளுக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் இந்த நடவடிக்கைகள் கடந்த காலங்களில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் நடத்தப்பட்ட முடிவில்லா பிரச்சாரத்தின் ஒரு வெற்று பிரதிபலிப்பாக மட்டுமே உள்ளன.

2003 இல் முன்கூட்டிய போரை நியாயப்படுத்துவதற்காக, ஈராக் "பாரிய பேரழிவுகரமான ஆயுதங்களை" வைத்திருந்ததாக கூறப்பட்ட குற்றகரமான பொய் உரைகள் மூலமாக எடுத்துக் காட்டப்பட்டதைப் போல, குறிப்பாக வாஷிங்டன் தான் உலகிலேயே பொய் செய்திகளை உற்பத்தி செய்யும் மிகப்பெரிய உற்பத்தியாளராக சேவையாற்றுகிறது. ஆனால் பிரதான ஐரோப்பிய சக்திகள் அதற்கு பின்னால் வெகு தொலைவில் இல்லை, ஒரே நோக்கத்திற்காக சிரிய உள்நாட்டு போரைத் தூண்டிவிட உதவிய அவை அது குறித்து அமெரிக்க பொய் தகவல்களை ஆதரித்து வந்துள்ளன.

இந்த "பொய் செய்தி" மோசடியானது, ரஷ்யாவை நிலைகுலைக்க மற்றும் அதை இராணுவரீதியில் சுற்றி வளைக்க அமெரிக்க தலைமையிலான செயலூக்கமான மற்றும் அதிநவீன முயற்சிகளின் பாகமாக உள்ளது. உக்ரேனில் ரஷ்ய சார்பான ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சை பதவியிலிருந்து வெளியேற நிர்பந்திப்பதில் யூரோமைதான் போராட்டங்கள் என்றழைக்கப்பட்டது வெற்றி பெற்ற பின்னர், அங்கே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக வாஷிங்டன் 5 பில்லியன் டாலர் செலவிட்டிருந்ததாக ஐரோப்பிய மற்றும் யுரேஷிய விவகாரங்களுக்கான அமெரிக்க துணை வெளியுறவுத்துறை செயலர் விக்டோரியா நூலாண்ட் அவரே 2014 இல் ஒப்புக் கொண்டார். ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பாக, ஜேர்மனி, போலாந்து மற்றும் பிரான்சின் பிரதிநிதிகள் அவரை [யானுகோவிச்சை] தூக்கியெறியவதன் மீது உத்தியோகபூர்வ ஆசிர்வாதங்களை வழங்கினார்கள்.

பனிப்போருக்குப் பின்னர் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் மிகப்பெரிய துருப்பு நிலைநிறுத்தல் அறிவிக்கப்பட்டு வெறும் இரண்டு வாரங்களுக்கு பின்னர் அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் "நடப்பிலிருக்கும் விடையிறுப்பு படை" 40,000 ஆக மும்மடங்கு ஆக்கப்பட்டு வருகிறது மற்றும் நூறாயிரக் கணக்கான துருப்புகள் உயர் எச்சரிக்கை மட்டங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. 1997 ரஷ்யா-நேட்டோ ஸ்தாபக சட்டத்தை மீறும் வகையில், இம்மாதம், கூடுதலாக 4,000 நேட்டோ படைகள் ரஷ்யாவின் எல்லையை ஒட்டி நிறுத்தப்பட்டு வருகின்றன.

அதுபோன்ற நிலைநிறுத்தல்களை கோருவதில் போலாந்து மிகவும் ஆக்ரோஷமாக உள்ளது. ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தீர்மானம் வெளியுறவுத்துறை விவகாரங்களுக்கான முன்னாள் மந்திரியும், நேட்டோவுடன் அணி சேர்ந்த பாதுகாப்பு மற்றும் இராணுவத்திற்கான ஐரோப்பிய நாடாளுமன்ற துணைக்குழுவின் ஓர் அங்கத்தவரும், போலாந்து பாராளுமன்ற அங்கத்தவருமான Anna Fotyga ஆல் தயாரிக்கப்பட்டது என்பது தற்செயலான உடன்நிகழ்வல்ல.

ரஷ்யா ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக நடைமுறையளவிலான போரில் ஈடுபட்டுள்ளது என்று அறிவிப்பதன் மூலமாக, அத்தீர்மானத்தின் ஆதரவாளர்கள் மாஸ்கோவிற்கு எதிராக நேட்டோவின் ஆத்திரமூட்டல்களில் இந்த பாரிய தீவிரப்பாட்டை அரசியல்ரீதியில் சட்டபூர்வமாக்க முயன்று வருகிறார்கள். நேட்டோவினது போர்வெறியூட்டல் மீது ஐரோப்பிய ஆதரவுக்கு எதிரான எந்தவொரு விமர்சனமும் அல்லது பிரச்சாரமும் "ரஷ்ய துணைக்கருவிகள்" அல்லது பயங்கரவாதிகளின் வேலையாக ஆக்கப்படுகிறது.

“ஐயத்தை தூண்டுகின்ற, அங்கத்துவ நாடுகளைப் பிளவுபடுத்துகின்ற, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் வட அமெரிக்க பங்காளிகளுக்கு இடையே ஒரு மூலோபாய பிளவை ஏற்படுத்துகின்ற மற்றும் முடிவெடுக்கும் நிகழ்முறையை முடக்குகின்ற, ஐரோப்பிய ஒன்றிய அமைப்புகள் மற்றும் அட்லாண்டிக் இடையிலான பங்காண்மைகளை அவமதிக்கின்ற…" நடைமுறைகளை கொண்ட எந்தவொன்றையும் அத்தீர்மானம் "எதிர் பிரச்சாரமாக" வரையறுக்கிறது.

அவ்வரிகள், சமூக மற்றும் அரசியல் காரணிகள் புகலிடத்தை சர்வாதிபத்தியத்தை நோக்கி உந்துவதை குறிக்கின்றன. “நிதியியல் நெருக்கடி மற்றும் டிஜிட்டல் ஊடகத்தின் புதிய வடிவங்களது வளர்ச்சி தரமான இதழியலுக்கு தீவிர சவாலை முன்னிறுத்துகிறது, வாசகர்களிடையே விமர்சனபூர்வ சிந்தனையை குறைப்பதற்கு இட்டுச் செல்கிறது, அவ்விதத்தில் அவர்களை பொய் தகவல்கள் மற்றும் மோசடிகளுக்கு இன்னும் அதிக ஆட்பட்டவர்களாக மாற்றுகிறது" என்றது குறை கூறுகிறது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், 2008 நிதியியல் நெருக்கடி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவில்லா சிக்கனக் கொள்கையின் விளைவாக, ஐரோப்பாவில் உழைக்கும் மக்களுக்கும் ஆளும் உயரடுக்கிற்கும் இடையே நிலவும் மிகப்பெரும் சமூக பிளவானது, அதிகளவில் பெரும்பான்மை மக்கள், அரசியல் ஸ்தாபகத்திற்கும் மற்றும் அதன் உத்தியோகப்பூர்வ ஊடகங்களுக்கும் விரோதமாக இருக்கிறார்கள் என்பதுடன், பெரும் பணக்காரர்களின் நலன்களுக்குரிய பிரச்சார நிறுவனங்கள் என்பதைத் தவிர அவை வேறொன்றுமில்லை என்று அவற்றை அவர்கள் மிகச் சரியாகவே கருதுகிறார்கள் என்பதையே அர்த்தப்படுத்துகிறது. இந்த உள்ளார்ந்த பார்வை, அத்தீர்மானம் இதை "விமர்சனபூர்வ சிந்தனையின் குறைவாக" அவதூறு செய்கின்ற நிலையில், இராணுவவாதம் மற்றும் போருக்குப் பின்னால் அவர்களை இழுக்கும் முயற்சிக்கு மக்கள் மிகக் குறைவாகவே இயைந்து கொடுக்க செய்கிறது.

இந்த அடிப்படையில், அத்தீர்மானம் படைகளை ஒருங்கிணைக்க, குறிப்பாக "போலி செய்திகள்" என்றழைக்கப்படும் நடவடிக்கைகளை "எதிர்க்கும் நோக்கில் எதிர் உளவுபார்ப்பு முயற்சிகளை" அதிகரிக்க, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ முயற்சிகளின் ஒரு தீவிரப்பாட்டிற்கு அழைப்புவிடுக்கிறது. சமூக ஊடகங்களை ஒடுக்குவதை நியாயப்படுத்தும் நிலைப்பாட்டில் இருந்து மற்றும் "வெறுப்பு பேச்சு", இது ஒருபோதும் வரையறுக்கப்படாத நிலையில், இதற்கு எதிரான புதிய நடவடிக்கைகளுக்காகவும் இங்கே டயஷ்/ISIL குறித்தும் கூறப்படுகிறது.

அத்தீர்மானம் 304 ஆதரவு மற்றும் 179 எதிர்ப்பு வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது, 208 வாக்குகள் இடப்படவில்லை. ஆனால் அத்தீர்மானத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்ட ஒரு சிறுபான்மை கருத்து, அரசு தணிக்கைமுறை தீவிரப்பாட்டின் மூலமாக ஜனநாயக உரிமைகள் அச்சுறுத்தப்படுவதை குறித்து எதுவொன்றையும் குறிப்பிடவில்லை. அவற்றின் ஆட்சேபணைகள், ரஷ்யாவை மத்தியக் கிழக்கில் ஒரு கூட்டாளியாக ஐரோப்பிய ஒன்றியம் கருத வேண்டுமென்ற குறைகூறல்கள் மீது மையமிட்டிருந்தன.

அத்தீர்மானம் விவாதிக்கப்பட்டு வந்தபோதே, ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் Bundestag இல் (ஜேர்மன் நாடாளுமன்றம்) கூறுகையில், இணையத்தில் பொதுக் கருத்து "திரிக்கப்பட்டு" வருகிறது என்றும், “அதை நெறிப்படுத்துவது" அவசியம் என்றும் அறிவித்தார். அதனோடு சேர்ந்து ரஷ்யா மற்றும் ISIL க்கு எதிராக திருப்பிவிடப்பட்ட "ஒருங்கிணைந்த போர்முறைக்காக" நேட்டோ/ஐரோப்பிய ஒன்றிய ஆராய்ச்சி மையத்திற்கான "ஒருங்கிணைப்பு மையமாக" ஹெல்சின்கி (Helsinki) ஆக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது, அதேவேளையில் பயங்கரவாதம் மற்றும் ஒருங்கிணைந்த அச்சுறுத்தல்களுக்கு எதிரான மையம் என்றறியப்படும் செக் குடியரசின் புதிய உள்துறை அமைச்சகம் ஜனவரி 1 இல் இருந்து செயல்படத் தொடங்கியது. ஐரோப்பிய விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை செயலர் Tomáš Prouza கூறுகையில், அது "ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவின் மீது எதிர்மறை பிம்பங்களைக்" கட்டமைக்க நோக்கம் கொண்ட "ரஷ்ய பிரச்சாரத்திற்கு" எதிராக திருப்பிவிடப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.