ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

French army chief demands large defence budget increases

பிரெஞ்சு இராணுவத் தலைவர் பெருமளவில் பாதுகாப்பு நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க கோருகிறார்

By Anthony Torres
31 December 2016

2017 க்கான பிரான்சின் பாதுகாப்புத் துறை ஒதுக்கீட்டை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.77 சதவீதம் என்ற இப்போது திட்டமிடப்பட்டிருக்கும் அளவில் இருந்து 2 சதவீதத்திற்கு உயர்த்த வேண்டும் என்று பிரான்சின் இராணுவப் படைகளது தலைவரான ஜெனரல் பியர் டு வில்லியே சென்ற வாரத்தில்  அழைப்பு விடுத்தார். அரசு ஒவ்வொரு ஆண்டும் 8 பில்லியன் யூரோவை கூடுதலாக இராணுவத்தில் செலவிட இது அவசியமாக்கும்.

நிதி தினசரியான Les Echos இல் வெளியான ஒரு பத்தியில் 2013-2019 காலத்திற்கு என சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் ஒதுக்கிய பாதுகாப்பு நிதி ஒதுக்கீட்டு அதிகரிப்புகள் போதுமானதல்ல என்று நிராகரித்த டு வில்லியே அறிவித்தார்: “இப்போது தொடங்கி, இந்த முயற்சியானது அடுத்த [ஜனாதிபதியின்] ஐந்தாண்டு பதவிக்காலம் முடிவதற்கு முன்னதாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதம் என்பதான இலக்கை எட்டுகின்ற வகையில் பாதுகாப்புத் துறை நிதி ஒதுக்கீட்டில் படிப்படியான அதிகரிப்புக்கு இட்டுச் செல்ல வேண்டும்.”

இது “பிரான்சும், அதன் சர்வதேச பங்காளிகளும் செய்திருக்கும் ஒரு சர்வதேச ஏற்பாடு” என்றும் இது “குறைக்கப்படவோ அல்லது தள்ளிப்போடவோ முடியாதது” என்றும் டு வில்லியே சேர்த்துக் கொண்டார்.

பாதுகாப்பு செலவுகளில் பல பில்லியன் யூரோக்கள் அதிகரிக்கப்படுவதை நியாயப்படுத்தும் பொருட்டு, ஜனவரி மற்றும் நவம்பர் 2015 தாக்குதல்களுக்கு பின்னர், பிரான்ஸ், முடிவு கண்ணுக்கு தென்படாத ஒரு நிலையுடன் பயங்கரவாதத்திற்கு எதிரான ஒரு போரில் மூழ்கியிருப்பதாக டு வில்லியே கூறிக் கொண்டார். “2015 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளால் குறிக்கப்பட்ட முறிவானது வரலாற்று சகாப்தங்களின் ஒரு மாற்றமாகும். இது ‘எளிதான காலங்கள் முடிந்து விட்டதாகும்’. அமைதி என்பது இனியும் தானாக ஏற்பட்டு விடுவதாக இருக்கவில்லை; அது வெல்லப்பட்டாக வேண்டும்; மெத்தனத்தையும் அவநம்பிக்கையையும் இரண்டு பிடிகளாகக் கொண்டிருக்கும் ஒரு பொறியில் இருந்து நாம் வெளிவந்தாக வேண்டும்.”

பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தை பாரிய அளவில் மறுஆயுதபாணியாக்குவதற்கான இந்த அழைப்பானது அரசியல் பொய்களின் அடிப்படையிலானதாகும். பிரான்சில் 2015 இலும் பெல்ஜியம் மற்றும் பிரான்சில் இந்த ஆண்டிலும் நடந்த தாக்குதல்கள் நேட்டோ சக்திகள் முதலில் லிபியாவிலும் அதன்பின் சிரியாவிலுமான தங்களது ஏகாதிபத்திய பினாமிப் போர்களுக்காக அணிதிரட்டியிருந்த அதே இஸ்லாமிய பின்னல்களால் இழைக்கப்பட்டவையாக இருந்தன. இந்த போர்களும், 2014 இல் உக்ரேனில் ரஷ்ய ஆதரவு உக்ரேனிய அரசாங்கத்திற்கு எதிராய் அமெரிக்கா மற்றும் ஜேர்மனியின் ஆதரவுடன் வலது-சாரி சக்திகளால் நடத்தப்பட்ட நேட்டோ-ஆதரவு ஆட்சிக்கவிழ்ப்பும் தான் நேட்டோவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் போர் அபாயத்தை அதிரடியான விதத்தில் அதிகரித்திருந்தன.

இஸ்லாமிய பயங்கரவாதிகள் உளவுமுகமைகளால் நெருக்கமாகக் கண்காணிக்கப்பட்டு வந்தனர் என்பதோடு, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவெங்கிலும் தாக்குதல்களை நடத்துவதில் அவற்றின் மவுனமான உடந்தையின் மூலமாக ஆதாயமடைந்தனர். அதன்பின் ஆளும் வர்க்கம் இந்த தாக்குதல்களை சுரண்டிக் கொண்டு, பயங்கரவாத தாக்குதல்களை தடுத்துநிறுத்தும் நோக்கத்துடன் இல்லாமல், ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கும் இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களை ஒடுக்குவதற்குமாய் -குறிப்பாக பிரான்சில் PS இன் பிற்போக்குத்தனமான தொழிலாளர் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில்- நோக்கம் கொண்டிருந்ததான ஒரு அவசரகால நிலையை திணித்தது. இந்த “பயங்கரவாதத்தின் மீதான போர்” முஸ்லீம்கள் மற்றும் புலம்பெயர்ந்த மக்களின் மீதான தாக்குதல்களை நியாயப்படுத்துவதற்கும், அத்துடன் அரசியல் சூழலை மிகவும் வலதுபக்கம் நகர்த்துவதற்குமாய் சேவை செய்திருக்கிறது.

2013-2019 காலத்திற்கு PS இன் இராணுவ திட்டமிடல் சட்டத்தால் திட்டமிடப்பட்டதை விடவும் விரைவாய் பிரான்சின் பாதுகாப்பு துறைக்கான நிதிஒதுக்கீட்டை கணிசமாக அதிகரிக்க கோருவதன் மூலம் ஆ வில்லியே ஏகாதிபத்திய போர் முனைப்பின் ஒரு பெரும் தீவிரப்படலுக்கு தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறார். இது வருங்காலத்தில் சக்திவாய்ந்த மற்றும் பெரும் ஆயுதபாணியான அரசுகளுக்கு இடையிலான நேரடியான மோதல்களும் சம்பந்தப்பட்டதாய் இருக்கும்.

டு வில்லியே ஐ பொறுத்தவரை, “அரசு அதிகாரம் மீள்வதை இனியும் மறுக்க முடியாது. ஐரோப்பாவின் வாயில்களில், ஆசியாவில், அண்மைக்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கில், மேலும் மேலும் அதிகமான அரசுகள் படைவலிமை அச்சுறுத்தலின் மீது, அல்லது எதிரிகளை திட்டவட்டமாக எதிர்கொள்வதன் மீது நம்பிக்கை வைக்கின்ற மூலோபாயங்களை கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொருவரும் மறுஆயுதபாணியாகிக் கொண்டிருக்கிறார்கள்.”

பெரும் போர்களுக்கான தயாரிப்புகள் மிகவும் முன்னேறிய கட்டத்தில் இருக்கின்றன என்ற தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு எச்சரிக்கையும் டி வில்லியே இன் கூற்றுகளில் இருக்கிறது. ஆழமான பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியின் ஒரு பொருட்சூழலில், பிரான்சின் எல்லைகளுக்கு உள்ளேயும் சரி வெளியேயும் சரி, வருங்கால அரசாங்கங்கள் படைவலிமை மூலமாகவே தமது நலன்களை பாதுகாத்துக் கொள்வதற்கு நோக்கம் கொண்டிருக்கின்றன. பிரெஞ்சு ஏகாதிபத்தியத்திற்கு அதிகப்பட்ச இலாபத்தை பிழிந்தெடுக்கும் நம்பிக்கையில் தான் பிரெஞ்சு இராணுவமும் முதலாளித்துவமும் விரிந்த போர்களுக்கு, அல்லது இன்னும் சொன்னால் உலகப் போர்களுக்கு தயாரிப்பு செய்துகொண்டிருக்கின்றன.

2008 பொருளாதார நெருக்கடியின் விளைவானது ஏகாதிபத்தியங்கள் இடையிலான போட்டிகளை பரந்த அளவில் தீவிரப்படுத்தியுள்ளதுடன், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை அதன் மூலோபாய நலன்களை திட்டவட்டம் செய்வதற்காக சீனா மற்றும் ரஷ்யாவை நோக்கி முன்னினும் மூர்க்கமான நிலைப்பாட்டை எடுப்பதை நோக்கி தள்ளியிருக்கிறது. சீனாவை நோக்கிய ஒரு மிக மூர்க்கமான கொள்கையை சமிக்கையளித்து வருபவரும், அமெரிக்காவிடம் யாரேனும் குறுக்கிட்டால் ஐரோப்பாவில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு அச்சுறுத்தி வந்திருப்பவருமான ட்ரம்ப் தேர்வாகியிருப்பதானது அணுஆயுத மோதலின் மிக உயர்ந்த அபாயத்தை சுட்டிக்காட்டுகிறது.

அடுத்த மாதத்தில் ட்ரம்ப் அதிகாரத்துக்கு வருவதானது சீனாவுடனும் ரஷ்யாவுடனும் மோதல்களை தீவிரப்படுத்தப் போவது மட்டுமல்லாது, சென்ற நூற்றாண்டில் உலகத்தை ஏற்கனவே இரண்டுமுறை உலகப் போருக்குள் மூழ்கடித்திருந்த ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள் இடையேயான போட்டிகளையும் தீவிரப்படுத்த இருக்கிறது. ஐரோப்பிய சக்திகள் அனைத்தும் - எல்லாவற்றுக்கும் மேல், ஐரோப்பாவின் மேலாதிக்க சக்தியான ஜேர்மனி; இது நாஜி ஆட்சியின் அழிவுக்குப் பின்னர் பின்பற்றி வந்திருந்த இராணுவ ஒதுங்கியிருப்புக் கொள்கை முடிவுக்கு வந்ததாக 2014 இல் அறிவித்தது- மறுஆயுதபாணியாக முனைந்து வருகின்றன.

இந்த உள்ளடக்கத்தில் தான், ஏற்கனவே இராணுவவாதக் கொள்கை ஒன்றையே அமல்படுத்தியிருந்த ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட்டை காட்டிலும் அதிகமாய் இராணுவ செலவினத்தை அதிகப்படுத்துவதற்கு பிரெஞ்சு இராணுவம் முனைகிறது.

தனது அரசாங்கம் ஏற்கனவே இராணுவத்திற்கு மிகப்பெரும் அளவிலான ஆதாரவளங்களை ஒதுக்கி வந்திருந்தது என்று வலியுறுத்துவதன் மூலம் ஹாலண்ட் பதிலிறுப்பு செய்தார். அவர் அறிவித்தார்: “எனது பதவிக் காலம் முழுமையாக பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு ஏற்கனவே அதிகரிக்கப்பட்டு வந்திருக்கிறது. இராணுவத் திட்டமிடல் சட்டத்தால் உத்தரவிடப்பட்ட செலவின மட்டங்கள் அதிகரிக்கப்பட்டன. செலவினத்தை அதிகரிக்கும் வகையில் ஐந்தாம் குடியரசில் [அதாவது 1958க்குப் பிந்தைய காலத்தில்] முதல்முறையாக இந்தச் சட்டம் திருத்தப்பட்டது. இப்போது நம்முடைய நடப்பு இலக்குகளுக்கு போதுமான ஆதாரவளங்கள் நம்மிடம் இருக்கின்றன, ஆயினும் வரவிருக்கும் ஆண்டுகளில் நாம் இன்னும் கூடுதல் முயற்சிகள் எடுக்க வேண்டும்.”

டு வில்லியே இன் தலையீடு, பெருமளவுக்கு ஒரு சில வாரங்களில் பிரச்சாரம் தொடங்கவிருப்பதை காணவிருக்கும் 2017 மே ஜனாதிபதித் தேர்தலால் உந்தப்பட்டதாக இருக்கிறது. நவ-பாசிச தேசிய முன்னணியின் மரின் லு பென் அல்லது வலது-சாரி குடியரசுக் கட்சியின் பிரான்சுவா ஃபிய்யோன் தொடங்கி PS வேட்பாளர்கள் மற்றும் இடது முன்னணியின் தலைவரான ஜோன்-லூக் மெலன்சோன் வரையிலும் இராணுவத்தின் நெருக்கமான தொடர்புகள் உடைய இந்த வேட்பாளர்கள் அனைவருக்கும் தனது திட்டநிரலை முன்வைக்க இராணுவம் விரும்புகிறது.

மூலோபாய ஆய்வு அறக்கட்டளை (Fondation pour la recherche stratégique - FRS), அமைப்பின் ஒரு ஆய்வாளரான ஃபிரெடரிக் கோஸ்ட் எழுதினார்: “இந்த [டு வில்லியே இன் அறிவிப்பு] உத்வேகம் மிகவும் நன்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாய் இருக்கிறது. இராணுவம் தயாரிப்புடன் இருக்க கடமைப்பட்ட காலம் விரைவில் தொடங்கவிருக்கிறது, இராணுவப் படைகளது தலைவரை இது மிகவும் நுட்பமான நிலைக்கு தள்ளும். அத்தனை ஜனாதிபதி வேட்பாளர்களுடனுமான தனது உறவை அவர் எடுத்து வைப்பதுதான் அவர் செய்ய வேண்டியதாகும். உண்மையில், தொடங்கிக் கொண்டிருக்கும் விவாதத்தையும் சர்வதேச அச்சுறுத்தல்களின் ஆழத்தையும் கொண்டு பார்த்தால், வெவ்வேறு வேட்பாளர்களும் அநேகமாக இரட்டை நிர்ப்பந்தங்களை கணக்கில் எடுக்கத் தள்ளப்படுவார்கள்: நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் பாதுகாப்பு பொறுப்புகளை செயல்படுத்துவது, அதேநேரத்தில் பொதுச் செலவினத்தின் மீது ஒரு இறுக்கமான பிடியை பராமரிப்பது.

இராணுவச் செலவின அதிகரிப்புக்காக, தொழிலாள வர்க்கத்தின் மீதான இன்னும் கடுமையான தாக்குதல்கள் மூலமாக நிதியாதாரம் திரட்டுவதற்கு அரசு முயற்சி செய்யும். Les Echos கூறுவதைப் போல, 2018 ஆம் ஆண்டில் “அரசு இன்னும் 2.2 பில்லியன் யூரோக்களை கூடுதலாய் கண்டுபிடிக்க வேண்டியிருக்கும், ஏனென்றால் நவம்பர் 13 [2015] தாக்குதல்களுக்கு பின்னர் பிரான்சுவா ஹாலண்டால் முடிவு செய்யப்பட்ட வேலை வெட்டுக்களின் நிறுத்திவைப்பு, இயல்பாக செலவினம் மிதமிஞ்சிச் செல்வதற்கு இட்டுச் செல்லும்.”