ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Burma’s anti-Rohingya pogrom fuels regional tensions

பர்மாவின் ரோஹிங்கியா எதிர்ப்பு திட்டம் பிராந்திய பதட்டங்களுக்கு எரியூட்டுகிறது

By John Roberts
6 October 2017

ஐ.நா.வின் சமீபத்திய புள்ளிவிபரப்படி, பர்மாவின் (மியான்மர்) வடமேற்கு மாநிலம் ராக்கினியில் அந்நாட்டு இராணும் தனது மிருகத்தனமான “அகற்றும் நடவடிக்கையை” தொடங்கியதிலிருந்து இதுவரை 507,000 முஸ்லீம் ரோஹிங்கியாக்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். ஆகஸ்ட் 25 அன்று, அராக்கன் ரோஹிங்கியா மீட்புப் படையினரால் (Arakan Rohingyq Salvation Army-ARSA) பொலிஸ் சாவடிகள் தாக்கப்பட்டமைக்கான எதிர்வினையாக இந்த இராணுவ தாக்குதல் இருக்கலாம் எனக் கூறுப்பட்டது.

பங்களாதேஷில் அகதிகள் முகாம்களின் நிலைமைகள் மோசமடைந்து வருகின்றன. அகதிகளின் சமீபத்திய தீடீர் உள்நுழைவின் காரணமாக தங்குமிடம், உணவு மற்றும் அடிப்படை வசதிகள் தேவைப்படும் மக்களின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளது. பின்சென்று பார்த்தால் 2012 இலிருந்து மேற்கொள்ளப்பட்ட   இராணுவ நடவடிக்கைகளின் விளைவாக ரோஹிங்கியாக்கள் பர்மாவை விட்டு தப்பியோடிக் கொண்டிருக்கின்றனர்.

செப்டம்பர் 28 ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, அந்நாட்டின் இராணுவமும், பர்மிய தேசியவாத கும்பல்களும் ரோஹிங்கியாக்களின் இருப்பிடமாக அடையாளம் கண்ட 400 க்கும் மேற்ப்பட்ட கிராமங்களில் பாதியை தீயிட்டு கொளுத்தியுள்ளன என மனித உரிமைகள் குழுக்கள் கணக்கிட்டுள்ளன. ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 14 வரையிலும் இலக்கு வைக்கப்பட்ட 62 கிராமங்களை அடையாளம் காண மனித உரிமைகள் கண்காணிப்பு குழு (Human Rights Watch) செயற்கைகோள் படங்களை பயன்படுத்தின.

ராக்கினி மாநிலத்திற்கு உள்ளே, நூறாயிரக்கணக்கான மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கே வழியின்றி இருக்கின்றனர். இந்நிலையில், ஆங் சான் சூ கியின் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் (National League for Democracy-NLD) தலைமையிலான அரசாங்கமும், இராணுவமும் “பாதுகாப்பு” அடிப்படையில் சர்வதேச உதவி அமைப்புக்கள், ஐ.நா. அமைப்புக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் இப்பகுதிக்கு வருவதை தடை செய்துள்ளன.

செப்டம்பர் 27 அன்று, Care International, Save the Children and Oxfam உள்ளிட்ட சர்வதேச உதவி அமைப்புக்கள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், “மனிதாபிமான உதவி பெறுவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள்”, விதித்திருப்பது மோதல் மண்டலத்துக்குள் சிக்கி இருப்பவர்கள் தங்களுக்கு தேவையான மருத்துவ சேவைகள், உணவு மற்றும் தங்குமிடம் ஆகியவற்றை பெற்றுக் கொள்ள முடியாமல் தடுக்கிறது என்பதை சுட்டிக்காட்டின. மியான்மர் செஞ்சிலுவைச் சங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் அனைத்து உதவி நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டது.

மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்ட மக்கள் தங்களது கிராமங்களில் ரோஹிங்கியாக்கள் பெரும்பாலும் தேசியவாத கும்பல்களினால் முற்றுகையிடப் பட்டுள்ளனர் என்று கூறியதாக Washington Post அறிக்கை திங்களன்று மேற்கோளிட்டுள்ளது. அவற்றுள் ஒரு கிராமம் பட்டினியால் அவதியுற்றது. மேலும், அட்டூழியங்கள் நிறைந்த பல கதைகள் வெளியுலகத்தை சென்றடைவதை நிறுத்தும் பொருட்டு, ரோஹிங்கியாக்கள் பங்களாதேஷுக்கு தப்பிச் செல்லாதபடி தடுக்கப்பட்டு வருவதாக இந்த கட்டுரை குறிப்பிடுகிறது.

பங்களாதேஷில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என ரோஹிங்கியாக்களை பர்மிய அரசாங்கம் வகைப்படுத்துகிறது. பர்மாவில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வந்த முஸ்லீம்களின் சந்ததியினராக பலரும் இருக்கின்ற போதிலும், அவர்களுக்கு குடியுரிமை கூட மறுக்கப்பட்டுள்ளதோடு, பல தசாப்தங்களாக பர்மிய தேசிய பேரினவாதத்தின் இலக்காகவும் அவர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர்.

மனிதாபிமான பேரழிவு, தென் கிழக்கு ஆசியா முழுவதிலும் மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கத்திற்கு மத்தியிலும் (Association of South East Asian Nations-ASEAN) பதட்டங்களை தூண்டி வருகிறது.

நடப்பு ASEAN தலைவராக இருக்கும் பிலிப்பைன்ஸ் வெளியுறவு செயலர் ஆலன் கேயெட்டானோ, செப்டம்பர் 24 அன்று, ராக்கினி மாநில நிலைமை குறித்த ஐ.நா. பொதுச் சபையின் போது, அதன் ஒருபுறத்தில் அறிக்கையொன்றை வெளியிட்ட போதிலும், ரோஹிங்கியாக்களுக்கு எதிரான வன்முறை பற்றி குறிப்பிடத் தவறிவிட்டார்.

மலேசிய வெளியுறவு அமைச்சர் அனிஃபா அமன், ரோஹிங்கியா முஸ்லீம்கள் நடத்தப்படும் விதம் குறித்து உள்நாட்டில் அதிகரித்துவரும் கோபத்திற்கு எதிர்வினையாற்றியமையானது அந்த அறிக்கையில் இருந்து கோலாலம்பூரை வேறுபடுத்தியது. மலேசியாவின் நிலைப்பாட்டை மதிப்பதாக தெரிவித்து பிலிப்பைன்ஸ் வெளியுறவு அமைச்சகம் அதற்கு விடையிறுத்தது, எனினும் அது கேயெட்டானோவின் கருத்துக்களில் இருந்து பின்வாங்கவில்லை.

பிலிப்பைன்ஸ் அறிக்கையானது ஜகார்த்தாவிலும் அதேபோல் விமர்சனத்தை தூண்டியது. இஸ்லாமிய குழுக்களால் தனது நிர்வாகத்திற்கு எதிராக முன்வைக்கப்படும் சவால்களை எதிர்த்து போராடும் இந்தோனேசிய ஜனாதிபதி ஜோக்கோ விடோடோ கூட ரோஹிங்கியாக்களை நடத்தும் விதம் குறித்து விமர்சித்து வருகிறார். அவர் தனது வெளியுறவு அமைச்சரை பர்மாவுக்கு அனுப்பி வைத்தார், மேலும் இந்த நெருக்கடியை தீர்க்க ஐ.நா.வில் எடுக்கப்பட வேண்டிய இராஜதந்திர ரீதியான முயற்சிகளுக்கும் அழுத்தம் கொடுத்துள்ளார்.

இந்த பிராந்தியத்தில் சீன செல்வாக்கை ஓரங்கட்டும் விதமாக ஒபாமாவின் “ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு” கொள்கையை பின்பற்றும் ட்ரம்ப் நிர்வாகத்தின் முயற்சிகளுக்கு ASEAN நாடுகளுக்கு இடையிலான பதட்டங்கள் இடையூறுகளை ஏற்படுத்தும் அச்சுறுத்தலை கொண்டுள்ளன. பெய்ஜிங்கின் சுற்றுப்பாதையில் இருந்து வெளியேற முயன்றபோது, 2011 இல் இருந்து பர்மிய இராணுவத்துடன் நெருக்கமான உறவுகளை ஒபாமா ஏற்படுத்திக் கொண்டார் மற்றும் மேற்கத்திய சார்பு NLD அரசாங்கத்திற்குள் நுழைய அனுமதித்தார். நவம்பர் ASEAN மாநாட்டில் ட்ரம்ப் கலந்துகொள்ள இருக்கிறார்.

ரோஹிங்கியா மீதான பர்மிய இராணுவ இன அழிப்பு நடவடிக்கைகள், ARSA தாக்குதல்களின் “அளவை மீறியதாக” இருந்தது என்று விவரிக்கும் விதமாக அமெரிக்காவின் விடையிறுப்பு ஆரம்பத்தில் மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தது. இருப்பினும், ரோஹிங்கியாவின் மீது சுமத்தப்பட்ட பயங்கரங்களின் அளவு இன்னும் பரவலாக அறியப்பட்டு வரும் நிலையிலும், மேலும் மத்திய கிழக்கிலும் ஆசியாவிலும் பெரும்பாலும் முஸ்லீம் கூட்டாளிகளின் சீற்றமும் வளர்ந்து வரும் நிலையிலும், வாஷிங்டன் மிக விமர்சன ரீதியான அணுகுமுறையையே கடைப்பிடித்தது.

செப்டம்பர் 28 இல், ஐ.நா.விற்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி, அனைத்து நாடுகளும் பர்மிய இராணுவத்திற்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்றும், “கொடூரமான, நீடித்த நடவடிக்கைக்கு” இராணுவ தலைவர்களை பொறுப்பாளியாக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். எனினும், ஹேலி, இராணுவத்தை பாதுகாத்து அவர்களது அட்டூழியங்களை மூடிமறைக்க உதவி செய்த NLD தலைவர் சூ கி பற்றியோ அல்லது அவரது அமைச்சர்களைப் பற்றியோ எந்தவித விமர்சனமும் செய்யவில்லை.

சீனா, “பாதுகாப்பு” நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் பர்மிய அரசாங்கத்துடனும், இராணுவத்துடனும் தனது உறவுகளை வலுப்படுத்த முயன்றுள்ளது. பெய்ஜிங், புதிய Kyaukphyu துறைமுகத்திலும், சீனாவின் யுன்னன் மாகாணத்தை இணைக்கும் ஆற்றல் வழித்தடத்திலும் அதன் முதலீட்டை அதிகரிக்க முனைந்தது. பர்மா இராணுவத்துக்கு பயிற்சி அளித்து வருவதை ஒரு முடிவுக்கு கொண்டு வருவதாக பிரிட்டன் அறிவித்த நிலையில், இராணுவ தலைவர் ஜெனரல் மின் ஆங் ஹிலிங் பெய்ஜிங்கிற்கு மீண்டும் அழைக்கப்பட்டாரென கூறப்படுகிறது.

வளர்ந்து வரும் சர்வதேச விமர்சனத்தை மழுங்கச் செய்ய சூ கி முனைந்துள்ளார். திங்களன்று, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, துருக்கி மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளில் இருந்து 66 தூதர்களும், வெளிநாட்டு பிரதிநிதிகளும் ராக்கினிக்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்தப் பகுதியில் வாழ்பவர்களின் நிலைமை இன்னும் “சாதாரணமாக” தான் உள்ளது என்ற சூ கி யின் அபத்தமான கூற்றை நிரூபிப்பதற்கான ஒரு விசமத்தனமான மற்றும் நன்றாக நிர்வகிக்கப்பட்ட நடவடிக்கையாக இது இருந்தது.

கூடுதலாக, தற்போது பங்களாதேஷில் உள்ள ரோஹிங்கியா அகதிகள், 1993 நாடுதிரும்பல் ஒப்பந்தத்தின் கீழ் குடியிருப்பாளர்களென சரிபார்க்கப்பட்டால், அவர்கள் மீண்டும் பர்மாவுக்குள் வரலாமென சூ கி அறிவித்தார். 1992 படுகொலையை அடுத்து பின்தொடரப்பட்ட இந்த ஒப்பந்தம், ரோஹிங்கியாக்களை குடிமக்களாக அங்கீகரிக்கவில்லை. வசிப்பிடம் அல்லது சொத்துரிமைகளை நிலைநாட்டுவதற்கு  எந்தவித ஆவணங்களும் இல்லாததால், பலரின் மறுநுழைவு மறுக்கப்பட்டது.

அரசாங்க நோக்கத்தின் மற்றொரு அச்சுறுத்தும் அறிகுறியாக, சமூக அபிவிருத்தி அமைச்சர் வின் மியட் ஆய் சமீபத்தில் பின்வருமாறு அறிவித்தார்: “எரிந்த நிலம், சட்டப்படி, அரசு நிர்வகிப்புக்கு உட்பட்ட நிலமாகிவிடுகிறது.” ரோஹிங்கியா அகதிகள் பர்மாவிற்கு திரும்பி வந்தாலும் கூட, அவர்கள் தங்களது எரிந்து போன கிராமங்களுக்கு திரும்பிப் போவது தடை செய்யப்படும் என்பதே இதன் உட்பொருள் ஆகும்.