ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

EU hands Spain blank check for stepped-up police repression in Catalonia

கட்டலோனியாவில் போலிஸ் ஒடுக்குமுறையை தீவிரப்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஸ்பெயினுக்கு வெற்றுக் காசோலையை அளிக்கிறது

By Alex Lantier and Alejandro López
3 October 2017

கட்டலான் சுதந்திரத்திற்கான கருத்துவாக்கெடுப்பின் மீது ஸ்பானிய போலிஸ் நடத்தும் மிருகத்தனமான ஒடுக்குமுறை குறித்த புகைப்படங்கள் உலகெங்கிலுமான மக்களை அதிர்ச்சிக்குள்ளாகிய மறுநாளில், நேற்று, ஸ்பெயினின் காங்கிரஸ், கட்டலான் விவகாரம் குறித்து விவாதிக்க பிரதமர் மரியானோ ரஹோயை அழைப்பதற்கு அக்டோபர் 10 வரையில் தன்னிடம் நேரமில்லை என்று அறிவித்தது.

16,000 சிவில் கார்டுகள் இன்னும் கட்டலோனியாவில் தான் இருக்கின்ற வேளையில், இது ரஹோயின் ஒடுக்குமுறையின் மீது நம்பிக்கையைப் பிரகடனம் செய்வதாக இருந்தது. கட்டலான் அதிகாரிகள் கருத்துவாக்கெடுப்பில் வெற்றிகிட்டியிருப்பதாகக் கூறி பிரிவினைக்கான திட்டங்களையும் ஞாயிறன்று இரவு அறிவித்ததன் பின்னர், மாட்ரிட் புதிய மற்றும் கூடுதல் இரத்தக்களரியான தாக்குதல்களுக்கு தயாரிப்பு செய்து கொண்டிருப்பதன் ஒரு எச்சரிக்கையாகவும் இது அமைந்திருந்தது.

மேற்கு ஐரோப்பாவில் ஒரு பெரிய, “ஜனநாயக” முதலாளித்துவ அரசாக சொல்லப்படுகின்ற ஒரு அரசின் ஜனநாயக-விரோத வழிமுறைகள் குறித்து ஞாயிறன்று, உலகம் ஒரு மறக்கமுடியாத பாடத்தை பெற்றது. அது எதிர்த்த கட்டலான் சுதந்திரத்திற்கான கருத்துவாக்கெடுப்புக்கு முகம்கொடுத்த நிலையில், ரஹோயின் சிறுபான்மை மக்கள் கட்சி (PP) அரசாங்கமானது பத்தாயிரக்கணக்கில் போலிசை அனுப்பி, மக்களை பயமுறுத்துவதன் மூலமாக கருத்துவாக்கெடுப்பை தகர்த்தெறிய முயன்று தோல்வியுற்றது. சிவில் கார்டு போலிஸ், பள்ளிகள் மற்றும் விளையாட்டு மையங்கள் உள்ளிட்ட வாக்குச்சாவடிகளை உடைத்து உள்ளேபுகுந்து அடித்துநொருக்கியது, வாக்குப்பெட்டிகளை திருடியது, அமைதியாக, நிராயுதபாணியாக இருந்த வாக்காளர்களை அடித்து உதைத்தது.

ஒரு வயது மூத்த பெண்மணி சிவில் கார்டு போலிசால் இழுத்து வரப்பட்டு தரையில் முகம்பட வீசப்பட்டதில் இரத்தம் சொட்ட பேசுகின்ற காணொளி, கட்டலான் தீயணைப்பு வீரர்களை போலிஸ் அடிக்கும் காணொளி; சிவில் கார்டு போலிஸ் வாக்குச்சாவடிகளில் தரையில் அமைதியாக உட்கார்ந்திருந்த இளம்பெண்களை அவர்களின் தலைமுடியைப் பிடித்து வெளியே இழுத்துவந்து படிக்கட்டுகளுக்கு கீழே வீசும் காணொளி என திகிலூட்டும் காணொளிகள் இணையத்தில் மொய்த்தன. கிரோனாவில் ஒரு போலிஸ் யூனிட், பெரும் எண்ணிக்கையிலான வாக்காளர்கள் சூழ்ந்து நின்ற நிலையில், அந்த வாக்காளர்கள் தங்கள் கரங்களை உயர்த்தி “கொலைகாரர்கள், கொலைகாரர்கள்” என்று முழக்கமிட்டதும் அடிப்பதை சட்டென்று நிறுத்தி விட்டதை ஒரு காணொளி காட்டியது.

கட்டலோனியாவிலான பாரிய போலிஸ் ஒடுக்குமுறையின் இரத்தம்படிந்த புகைப்படங்கள் தன்னை எந்தவிதத்திலும் தொந்தரவு செய்யவில்லை என்று பிரெஞ்சு பொருளாதார அமைச்சரான புருனோ லு மேர் தெளிவாக்கிய போது, அவர் ஒட்டுமொத்த ஐரோப்பிய ஆளும் வர்க்கத்திற்காகவும் பேசினார்.

“இந்த முடிவுகள் அத்தனையும் ஸ்பானிய இறையாண்மை விவகாரங்கள்” என்று லு மேர் RTL வானொலியிடம் தெரிவித்தார். “பிரான்சில் இருக்கும் சூழ்நிலை குறித்து, நாம் நமது பொது ஒழுங்கு விவகாரங்களை எப்படிக் கையாளுகிறோம் என்பது குறித்து ஸ்பானிய அரசாங்கம் கருத்து வெளியிடத் தொடங்குமாயின் நாம் என்ன சொல்வோம்? இந்த அத்தனை முடிவுகளும் ஸ்பானிய அரசாங்கத்துக்குச் சொந்தமானவை, அதற்கான பிரத்யேகப் பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது.”

ஐரோப்பிய ஆணையமும் லு மேர் கூறியதையே எதிரொலித்ததன் மூலம், கட்டலான் மக்களுக்கு எதிரான புதிய தாக்குதல்களுக்கு ரஹோய்க்கு, ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியமும் கையெழுத்திட்டு ஒரு வெற்றுக் காசோலையை அளித்தது. நேற்று அது ஆன்லைனில் வெளியிட்ட ஒரு அறிக்கையில், மாட்ரிட்டின் ஒடுக்குமுறைக்கு தனது ஒப்புதல் முத்திரையை பதிக்கின்ற விதமாய் அது அறிவித்தது: “ஸ்பானிய அரசியல்சட்டத்திற்கும் அதில் கொடுக்கப்பட்டுள்ள குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகளுக்குமான முழு மரியாதையுடன், இந்த சிக்கலான நிகழ்ச்சிப்போக்கை சமாளிப்பதற்கு பிரதமர் மரியானோ ரஹோயின் தலைமை மீது நாங்கள் நம்பிக்கை வைக்கிறோம்.”

புரூசெல்ஸில் இருக்கும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரத்துவத்தின் கபடவேடத்தில் புதிய உச்சங்களை எட்டுகின்ற விதமாக, ஆணையம் மேலும் சேர்த்துக் கொண்டது: “அரசியலில் வன்முறை ஒருபோதும் ஒரு கருவியாக இருக்க முடியாது.”

இந்த ஆதரவைக் கொண்டு, ஸ்பானிய ஊடகங்கள் தேசியவாத, சட்ட-ஒழுங்கு வெறிக்கூச்சலை விசிறி விடுவதோடு, ஸ்பெயின் எங்கிலும் நூற்றுக்கணக்கானோர் அல்லது சில ஆயிரக்கணக்கானோர் பங்குபெறும் வலது-சாரி ஆர்ப்பாட்டங்களை ஊக்குவிக்கிறது. ஊடகங்கள் பரவலாய் இவற்றை “ஸ்பெயினின் ஒற்றுமைக்கான” ஆர்ப்பாட்டங்கள் என்பதாய் மாற்றுப்பெயரில் விவரிப்பதோடு, ஆர்ப்பாட்டக்காரர்கள் Hymn of the Legion அல்லது Cara al Sol போன்ற 1939-1978 ஜெனரல் பிரான்சிஸ்கோ ஃபிராங்கோவின் ஸ்பானிய பாசிச ஆட்சியின் பாடல்களைப் பாடுவதாகவும் கூச்சமின்றி விவரிக்கின்றன.

பிராந்திய பிரிவினைவாதிகள் மற்றும் கம்யூனிஸ்டுகள் மீதான பிராங்கோவாத ஆட்சியின் வழக்கமான கண்டனங்களது கவனத்துக்குரிய ஒரு எதிரொலிப்பில், வலது-சாரி La Razón ஞாயிறன்றான வன்முறைக்கு கட்டலான் மக்கள் மீது பழிசுமத்தியது. அது அறிவித்தது, “தீவிரப்போக்கினர் நிகழ்த்திய வன்முறைக்கு சிவில் கார்டுகளும் போலிஸ் அதிகாரிகளும் அவர்களுக்குப் பழக்கமான மற்றும் பொருத்தமான தொழில்முறை திறனுடன் செயல்பட்டனர்.”

El País நாளிதழ், ஸ்பானிய சோசலிஸ்ட் கட்சியுடன் (PSOE) நீண்ட தொடர்புபட்டது என்ற நிலையில், அது கிட்டத்தட்ட தேசியவாத வலதுகளில் இருந்து பிரித்தறிய முடியாததான ஒரு நிலைப்பாட்டை எடுத்தது. கட்டலோனியாவிலான போலிஸ் நடவடிக்கைகள் “சட்டத்தின் சுற்றுவரைக்குள்ளாக எடுக்கப்பட்டவை, சட்டத்தின் ஆட்சி நடக்கின்ற ஒரு ஆட்சியில் இது சரியானதே” என்று கூறிப் பாராட்டியது.

கட்டலான் போலிஸ் மக்களை போதுமான அளவுக்கு வன்மையுடன் தாக்கவில்லை என்று கூறி El País அதனைக் கண்டனமும் செய்தது. அவர்கள் ”உத்தரவின்படி, வாக்குச் சாவடிகளை திறக்கவிடாமல் தடுத்துநிறுத்தி வாக்குச்சீட்டுகளைக் கைப்பற்றியிருந்திருப்பார்களேயானால், ஸ்பானிய தேசிய போலிசும் சிவில் கார்டும் அந்த வேலையை பின்னர் செய்யும் அவசியம் வந்திருக்காது; அத்துடன் உலகெங்கும் நேற்று ஒளிபரப்பப்பட்ட துயரமான காட்சிகள் பலவும் நடவாதிருந்திருக்கும்” என்று அது எழுதியது.

கட்டலான் சுதந்திர கருத்துவாக்கெடுப்பானது ஐரோப்பாவெங்கும் நடந்தேறிக் கொண்டிருக்கும் பிரம்மாண்டமான வலது நோக்கிய நகர்வை அம்பலப்படுத்தியிருக்கிறது. சோவியத் ஒன்றியம் ஸ்ராலினிசத்தால் கலைக்கப்பட்டதற்கு பிந்தைய கால் நூற்றாண்டு காலத்தில் ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் அதிகரித்த ஏகாதிபத்தியப் போர்கள் மற்றும் உள்நாட்டில் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கனநடவடிக்கைகள் ஆகியவற்றின் பின்னர், குறிப்பாக 2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்குப் பின்னர், பொருளாதார சமத்துவமின்மையும் சமூகப் பதட்டங்களும் வெடிப்பான மட்டங்களை எட்டிக் கொண்டிருக்கின்றன. 2008 பொறிவுக்குப் பிந்தைய பல ஆண்டுகளுக்கு, ஸ்பெயினில் வேலைவாய்ப்பின்மை கிட்டத்தட்ட 20 சதவீதத்தை ஒட்டிய நிலையிலேயே இருந்து வந்தது.

ஸ்பெயினில் பாசிச ஆட்சியில் இருந்து பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு 1978 உருமாற்றத்தின் போது ஏற்பாடு செய்யப்பட்ட அரசியல் ஏற்பாடு சிதறிக் கொண்டிருக்கிறது. பிராங்கோவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் ஸ்பானிய முதலாளித்துவத்தின் அரசாங்கத்திற்கான பிரதானக் கட்சியாக இருந்த PSOE பல தசாப்தங்கள் கால சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போரின் கொள்கைகளால் மதிப்பிழந்து விட்டிருக்கிறது, கருத்துக்கணிப்புகளில் வெறும் 20 சதவீத வாக்குகள் மட்டும் பெறும்நிலைக்கு வீழ்ச்சி கண்டிருக்கிறது; அத்துடன் மாட்ரிட்டுக்கும் கட்டலோனியா மற்றும் பாஸ்க் நாடுகளில் உள்ள பிராந்திய ஆளும் உயரடுக்குகளுக்கும் இடையிலான சண்டைநிறுத்தம் இப்போது உருக்குலைந்து விட்டிருக்கிறது.

கட்டலோனியாவிலான கொடூரமான ஒடுக்குமுறை, ஐரோப்பிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்துக்கு ஒரு எச்சரிக்கை ஆகும். பிராங்கோ இறந்து 40 வருடங்களுக்கும் மேல் ஆகி விட்டிருந்தாலும் கூட, அவரது ஆட்சிக்கு உயிர்கொடுத்திருந்த வர்க்க சக்திகள் இன்னும் அப்படியே தான் இருக்கின்றன, இந்தக் காலகட்டத்தில் இருந்த ஜனநாயக ஆட்சி வடிவங்கள் துரிதமாக அரித்துச் சென்று கொண்டிருக்கின்றன. ஆளும் வர்க்கம் எப்போது தீவிரமான எதிர்ப்புக்கு முகம்கொடுத்தாலும், அது சர்வாதிகார வழிமுறைகளில் இறங்கி விடுகிறது, எதிர்ப்பை ஒடுக்குவதில் போலிசை, இராணுவ போலிசை, இன்னும் இராணுவத்தையும் கூட அணிதிரட்டுவதற்கு அது கொஞ்சமும் தயங்கபோவதில்லை.

லு மேர், சற்றும் அலட்டிக் கொள்ளாமல் ரஹோயை வழிமொழிய முடிகிறதென்றால், அதன் காரணம் ஒட்டுமொத்த ஐரோப்பிய ஆளும் உயரடுக்கும் இதே திசையில் தான் நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதாலேயே ஆகும். சொல்லப் போனானால், லு மேரின் கருத்துரைக்கு கொஞ்ச நேரத்துக்கு பின்னர், பிரெஞ்சு ஜனாதிபதியும், ஜேர்மன் சான்சலர் அங்கேலா மேர்கெலின் ஒரு நெருங்கிய கூட்டாளியுமான இமானுவல் மக்ரோன் ரஹோய்க்கு போன் செய்து அவரது கொள்கைகளை வழிமொழிந்ததன் மூலமாக மீண்டும் இதே புள்ளியை வலியுறுத்தியிருந்தார். ஸ்பெயினில் “எனக்கு ஒரேயொரு கூட்டாளி மட்டுமே, அது ரஹோய் மட்டுமே”.

மக்ரோன் பிரெஞ்சுத் தொழிலாள வர்க்கத்தில் பாரிய எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை அகற்றும் தனது தொழிற் சட்ட உத்தரவாணைகளை திணிக்கிறார், பேர்லின் செப்டம்பர் 24 ஜேர்மன் தேர்தலில் இருந்து வரப் போவது எந்தவித அரசாங்கமாக இருந்தாலும் புதிய சமூகத் தாக்குதல்களுக்கு தயாரிப்பு செய்கிறது, இந்நிலையில் இந்தக் கருத்து ஒரு எச்சரிக்கையாகும். ஒட்டுமொத்த ஐரோப்பிய ஆளும் வர்க்கமும் கட்டலோனியாவில் இப்போது கண்ட வகையான ஒடுக்குமுறையின் வகைக்கு தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறது.

பாசிசத்திற்கு புத்துயிரூட்டுவது மற்றும் போலிஸ்-இராணுவ ஆட்சிக்கு திரும்புவது ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்தில் ஒட்டுமொத்த ஸ்பானிய மற்றும் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியாக அணிதிரட்டுவதே அதிமுக்கியமான பிரச்சினையாகும். குறிப்பாக இராணுவத்தை திரட்டுவதன் மூலமாக கட்டலான் மக்களையும் பிரிவினை கோரும் கட்டலான் தேசியவாதக் கட்சிகளது திட்டங்களையும் நசுக்குவதற்கு மாட்ரிட் செய்கின்ற எந்த முயற்சிக்கும் ஒரு தீர்க்கமான எதிர்ப்பு அங்கே இருக்க வேண்டும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு “கட்டலான் சுதந்திர சர்வஜன வாக்கெடுப்பின் மீதான அரசு ஒடுக்குமுறையை எதிர்ப்போம்!” என்ற அதன் அறிக்கையில் விளக்கியதைப் போல, போர் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிராகவும் சோசலிசத்திற்காகவுமான போராட்டத்தில் ஐரோப்பாவெங்கிலுமான தொழிலாள வர்க்கத்தை புரட்சிகரரீதியாய் அணிதிரட்டுவதன் மூலம் மட்டுமே இது சாதிக்கப்பட முடியும்.

இது, மாட்ரிட்டுக்கு கட்டலான் தேசியவாதிகள் காட்டும் எதிர்ப்பின் அடிப்படையான திவால்நிலையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. கட்டலோனியாவில் வலது-சாரி, சிக்கனநடவடிக்கை-ஆதரவு நிர்வாகங்களுக்குத் தலைமை கொடுத்து வந்திருக்கும் நிலையில், இவர்கள் ரஹோய்க்கு எதிராக ஐரோப்பியத் தொழிலாள வர்க்கத்துக்கு விண்ணப்பம் செய்ய்த திறனற்றவர்களாகவும் அதற்கு குரோதம் காட்டுபவர்களாகவும் இருக்கிறார்கள்.

பிராந்திய முதல்வரான கார்லெஸ் புய்க்டெமொன்ட் மற்றும் பார்சிலோனாவின் பொடெமோஸ் (Podemos) ஆதரவு மேயரான அடா கொலு ஆகியோர், இந்த நெருக்கடியில் மத்தியஸ்தம் செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியத்திற்குச் செய்யும் விண்ணப்பங்கள் கையாலாகாதவை ஆகும். தொழிலாள வர்க்கத்துடனான தமது சொந்த மோதல்களுக்குத் தயாரிப்பு செய்து கொண்டு கட்டலோனியா மீதான ரஹோயின் தாக்குதலை வழிமொழிந்து கொண்டிருக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளால் அவை சிரத்தையாக உதாசீனம் செய்யப்படுகின்றன. அதுபோல, இராணுவ ஆட்சியின் அச்சுறுத்தலுக்கு எதிராய் எதுவொன்றும் செய்யும் திறனற்ற, பாதிப்பற்ற, ஒரு அடையாள நடவடிக்கையாக கட்டலான் தேசியக் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் வணிகக் குழுக்கள் இன்று ஒருநாள் பொதுவேலைநிறுத்தத்தை நடத்த திட்டமிடுகின்றன.