ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Madrid prepares to deploy troops in Catalonia

கட்டலோனியாவில் துருப்புகளை நிலைநிறுத்துவதற்கு மாட்ரிட் தயாரிப்பு செய்கிறது

By Alejandro López
7 October 2017

அடுத்த வாரத்தின் ஆரம்பத்தில் ஒருதரப்பாக சுதந்திரப் பிரகடனம் செய்யப்படுவதற்கு வாய்ப்பிருக்கும் நிலை எதிர்நிற்பதை அடுத்து, துருப்புகள் கட்டலோனியாவுக்கும் அதன் அண்மையில் இருக்கும் பிராந்தியங்களுக்கும் அனுப்பப்பட்டு வருவதாக ஏராளமான ஊர்ஜிதப்படுத்தப்படாத செய்திகள் உள்ளன.

இராணுவச் சட்டத்தை திணிப்பதற்கான அடிப்படையை அமைக்கின்ற விதமாக ஸ்பானிய அரசியல்சட்டத்தின் 116வது பிரிவை கொண்டுவருவது குறித்து ஸ்பானிய அரசியல் ஸ்தாபகம் வெளிப்படையாக பேசிக் கொண்டிருக்கிறது.

வலது-சாரி செய்தித்தாளான OkDiario இல் மேற்கோளிடப்பட்ட இராணுவ ஆதாரங்களின் படி, கட்டலோனியாவுக்கு அடுத்திருக்கும் பிராந்தியங்களான அரகோன் மற்றும் வாலன்ஸியாவுக்கு அனுப்புவதற்காக துருப்புகள் அணிதிரட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அப்பிராந்தியத்தின் கட்டுப்பாட்டைக் கையில் கொண்டுவருவதற்கும் “கிளர்ச்சிக்கு எதிராக அரசியல்சட்ட ஒழுங்கினை நிலைநாட்டவும்” சுமார் 30,000 பாதுகாப்பு படையினரை நிலைநிறுத்த அவசியப்படும் என்று ஸ்பானிய அரசாங்கம் மதிப்பிடுவதாய் அது விளக்குகிறது. “கட்டலோனியாவில் இப்போது நிறுத்தப்பட்டிருக்கும் 8,000 போலிஸ் மற்றும் சிவில் கார்டுகளால் இந்த எண்ணிக்கையை இப்போது நிவர்த்தி செய்ய முடியாது” என்று அந்த செய்தித்தாள் தெரிவிக்கிறது.

வான்படை, பாராசூட் படை மற்றும் காலாட் படையின் மொத்தம் 3,000 துருப்புகள் கொண்ட மூன்று படையணிகளைக் கொண்ட  Division Castillejos (முன்னர் துரித நடவடிக்கைப் படையாக இருந்தது) அத்துடன் 300 துருப்புகளும் 44 டாங்கிகளும் கொண்ட Armored Infantry Alcázar of Toledo ஆகியவை அணிதிரட்டப்படும் படைப்பிரிவுகளில் அடங்கும் என்று OkDiario தெரிவிக்கிறது. இதுதவிர, கடற்படை சிறப்பு நடவடிக்கைகள் குழு என்ற நேவி சீல்ஸ்க்கு சமானமான ஸ்பானிய படையையும் மாட்ரிட் அணிதிரட்டிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

மற்ற செய்தி ஆதாரங்கள் 12,000 முதல் 16,000 வரை எண்ணிக்கை கொண்ட துருப்புகளாக மேற்கோளிடுகின்றன.

இரண்டு கண்ணிவெடி தடுப்பு கப்பல்களின் பாதுகாப்புடன் நவர்ரா கப்பல், துருப்புகளைத் தாங்கி பார்சிலோனாவுக்கு கிளம்ப இருப்பதாகவும், கட்டலான் நாடாளுமன்றத்தில் சுதந்திரப் பிரகடனம் செய்யப்பட வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகின்ற தினத்துக்கு ஒருநாள் முன்பாக அக்டோபர் 8 அன்று பார்சிலோனா துறைமுகத்துக்கு சென்றுசேர இருப்பதாகவும் La Tribuna de Cartagena விளக்குகிறது. இந்தக் கப்பல்கள் பார்சிலோனா சர்வதேச படகுகள் கண்காட்சியில் பங்குபெறுவதாக பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.

அதேநேரத்தில் நேட்டோ, “ஏஞ்சல் கார்ட்” என்ற தலைப்பின் கீழ் ஸ்பெயின் மற்றும் ஒன்பது பிற நேட்டோ உறுப்பு நாடுகளது 600 இராணுவ போலிஸ் பங்குபெறுகின்ற ஒரு பயிற்சி ஒத்திகையை ஏற்பாடு செய்திருக்கிறது. நடவடிக்கைகளின் போதும் சோதனைகளின் போதும் ஒரு உத்தரவுச் சாவடியை நிர்வகிப்பது, அதிகாரிகளை பாதுகாப்பது, ஒரு இராணுவ வளாகத்துக்குள்ளாக ஆயுதமேந்திய விரோதமான மனிதர்களை செயலிழக்கச் செய்வது மற்றும் கூட்டக் கட்டுப்பாடு ஆகியவற்றில் இராணுவப் போலிசுக்கு பயிற்சியளிப்பதே இந்தப் பயிற்சிகளின் நோக்கம் என்று ஸ்பானிய இராணுவத்தின் வலைத் தளம் தெரிவிக்கிறது.

பிரிவு 116 இல் இராணுவத்தை நிலைநிறுத்துவதும் இடம்பெறுவதோடு கருத்து சுதந்திரம் மற்றும் வேலைநிறுத்தத்திற்கான உரிமை உள்ளிட எண்ணற்ற ஜனநாயக உரிமைகள் நிறுத்தி வைக்கப்படுவதற்கும் இது அனுமதிக்கிறது. முன்தடுப்பு கைதுகளுக்கும் இது அனுமதிக்கிறது. இந்த உரிமைகளை நிறுத்தி வைப்பதானது, 1939 முதல் 1977 வரையிலும் பிராங்கோவின் ஆட்சி செய்ததைப் போல ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தையும் அச்சுறுத்தி வைப்பதற்கு இராணுவம் பயன்படுத்தத்தக்க வகையிலான பரந்த போலிஸ் அதிகாரங்களைக் கொண்டு அரசை ஆயுதபாணியாக்கும்.

கட்டலான் சுதந்திரத்திற்கான கருத்துக்கணிப்பைக் கண்டனம் செய்தும் பிராந்தியத்தின் கட்டுப்பாட்டை ஸ்பானிய அரசு கைப்பற்றக் கோரியும் மன்னர் நான்காம் பிலிப் ஆற்றிய உரையை பாதுகாக்கின்ற ஒரு அறிக்கையை ஸ்பானிய இராணுவ கூட்டமைப்பு (AME) பதிவிட்டது. “இந்த சிரமமான மற்றும் சிக்கலான நேரங்களில் பின்பற்ற வேண்டிய நிலைப்பாட்டை” பிலிப் “தெளிவாகவும், சுருக்கமாகவும் மற்றும் திட்டவட்டமாகவும்” தெரிவித்தார் என்பதால் இந்த உரை “கொஞ்சமும் குறைசொல்ல இயலாத ஒன்றாக” இருந்தது என்று அந்த அறிக்கை விவரிக்கிறது.

“ஸ்பெயினின் ஐக்கியத்தையும், அதன் பிராந்திய ஒற்றுமையும் மற்றும் அதன் தேசிய இறையாண்மையையும் பாதுகாப்பதற்கு” பிரதமர் மரியானோ ரஹோய் தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று AME கோரியது.

இப்போது தயாரிப்பு செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் இராணுவ ஒடுக்குமுறைக்கு ஐரோப்பிய ஒன்றியம் தனது ஆதரவை அறிவித்திருக்கிறது. ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் புதன்கிழமையன்று நடந்த விவாதத்தின் போது, ஆணையத்தின் முதல் துணைத் தலைவரான பிரான்ஸ் ரிம்மர்மான்ஸ் “எந்த அரசாங்கமாய் இருந்தாலும் சட்டத்தை நிலைநிறுத்துவது அதன் கடமையாக உள்ளது, அதற்கு சிலசமயங்களில் பொருத்தமான அளவில் வலுவைப் பிரயோகிப்பதும் அவசியமாகிறது” என்று அறிவித்தார்.

கன்சர்வேடிவ் கட்சி, சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் தாராளவாதக் கட்சிகளின் முன்னிலைப் பிரதிநிதிகளது ஆதரவு அவருக்கு இருந்தது.

இத்தகைய அறிக்கைகளின் தாக்கம் என்னவாக இருக்கும் என்பதை ஜேர்மன் ஐரோப்பிய ஒன்றிய ஆணையரான Gunter Oettinger தெளிவாக்கினார், அவர் நேற்று எச்சரித்தார், “ஐரோப்பாவின் மத்தியில் ஒரு உள்நாட்டுப் போரை இப்போது கற்பனை செய்யத்தக்கதாகி இருக்கிறது” அதன்பின் அவர் “மாட்ரிட்டுக்கும் பார்சிலோனாவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறட்டும் என்று நம்பிக்கை மட்டுமே ஒருவர் கொள்ள முடியும்” என்ற தனது பெருந்தன்மையான விருப்பத்தை கூறினார்.

ஸ்பெயின் ஊடகங்கள் கட்டலான் தேசியவாதிகளையும், சில சந்தர்ப்பங்களில், ஒட்டுமொத்த கட்டலான் மக்களையும் மனிதத்தன்மையற்றவர்களாக காட்டுகின்ற நோக்குடனான ஒரு பிரச்சாரத்தின் மூலமாக இராணுவத் தலையீட்டுக்கு பாதையமைப்பதில் தமது பங்கை ஆற்றிக் கொண்டிருக்கின்றன. கட்டலோனியா அபிவிருத்திகளை நசுக்கப்பட வேண்டிய ஒரு “கிளர்ச்சி”யாக, ஒரு “கவிழ்ப்பு நடவடிக்கை”யாக, ஒரு “கலக”மாக அல்லது ஒரு “துரோக”மாக விவரிக்காமல் ஊடகங்கள் ஒருநாளும் கடப்பதில்லை.

குழந்தைகளை மூளைச்சலவை செய்து ஆர்ப்பாட்டக்காரர்களின் முன்வரிசையில் அவர்களை நிறுத்தி போலிஸ் தாக்குதலுக்கு அவர்களை இலக்காக்குவதாக கட்டலான் தேசியவாதிகள் மீது குற்றம்சாட்டப்படுகிறது. தேசிய போலிசும் சிவில் கார்டுகளும் -ஞாயிறன்று அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்தவர்களில் 800 பேரை கொடூரமாக காயப்படுத்தியவர்கள்- பாதுகாப்பற்ற நிலையில் இருப்பவர்களாகவும், அவர்களது விடுதிகள் மற்றும் தற்காலிக தங்குமிடங்களின் முன்னால் ஆர்ப்பாட்டம் செய்கின்ற மக்களின் மூலமாக துன்புறுத்தப்படுபவர்களாகவும் சித்தரிக்கப்படுகின்றனர். பிராந்திய போலிசான Mossos துரோகமிழைப்பவர்களாகவும் விசுவாசமற்றவர்களாகவும் காட்டப்படுகின்றனர். பிரிவினைவாத கட்டலான் குடியரசு இடது கட்சியும், போலி-இடது பிரிவினைவாத மக்கள் ஐக்கிய வேட்புக் கட்சியும் (CUP) “கட்டலோனியாவின் புற்றுநோய்” (ABC) என்று விவரிக்கக் கூடிய அல்லது  இந்தக் கட்சிகள் “தலைசீவப்பட்டு...வரலாற்றின் குப்பைத்தொட்டியில் போடப்பட வேண்டும்” (El Español) என்று அழைக்கின்ற கட்டுரைகளைக் கொண்டு தொடர்ந்து தாக்கப்படுகின்றன.

மக்கள் கட்சியாலும் கட்டலான் சிவில் சொசைட்டி என்ற அதி-வலது தொடர்புகள் கொண்ட பிரிவினைவாத-எதிர்ப்பு அமைப்பு ஒன்றினாலும் ஞாயிறன்று ஒரு ஆத்திரமூட்டல் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடப்பட்டிருக்கும் நிலையில், அதற்கு முன்பாய் இத்தகைய பாசிச மொழி முன்னே வருகிறது. குடிமக்கள் மற்றும் சோசலிஸ்ட் கட்சியின் ஆதரவுடனும் மாட்ரிட்டில் இருந்து இயங்கும் ஊடகங்கள் மூலம் பரவலாய் விளம்பரப்படுத்தப்பட்டும் ஸ்பெயின் எங்கிலும் இருந்தான கட்டலான்-எதிர்ப்பு தேசியவாதிகள் பார்சிலோனாவுக்குள் மொய்க்கும்படி செய்யப்படுகிறார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் அதி-வலது தன்மை அதன் ஏற்பாட்டாளர்களாலேயே ஒப்புக்கொள்ளப்படுகிறது.

ஸ்பெயின் மற்றும் கட்டலோனியாவில் இருந்து அமைப்பின் துணைத் தலைவரான ஜாவியர் மெகினோ, El Confidencial க்கு அளித்த ஒரு நேர்காணலில், பார்சிலோனாவில் இரண்டு வாரங்களுக்கு முன்பாக பிரிவினைக்கு எதிராக நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தில் இருந்ததைப் போல இப்போதும் நவ-பாசிஸ்டுகளும் அதி-வலதுகளும் இருப்பார்கள் என்பதை ஒப்புக்கொண்டார். அவர்களால் வன்முறை உண்டாகுமா என்று கேட்டபோது, “நீங்கள் ஏராளமானவர்களை ஒரு இடத்தில் கூட்டும்போது, அவர்கள் அத்தனை பேரையும் கட்டுப்படுத்துவதென்பது சாத்தியமற்றதாகும்” என்று மெகினோ பதிலளித்தார்.

இந்த ஆர்ப்பாட்டமானது, ஊடகங்களில் திட்டவட்டம் செய்யப்படுவதைப் போல பிரிவினைவாதத்தை எதிர்க்கின்ற கட்டலான் மக்களுக்குள் இருக்கின்ற “அமைதியான பெரும்பான்மை”யை பிரதிநிதிப்படுத்துவதை நோக்கம் கொண்டிருக்கவில்லை, மாறாக அரசாங்கம் ஒரு ஒடுக்குமுறையைப் பயன்படுத்துவதற்கு சுரண்டிக் கொள்ளக் கூடிய வகையில் கட்டலான் பிரிவினைவாதிகளுக்கும் பாசிஸ்ச சக்திகளுக்கும் இடையிலான ஒரு வன்முறையான மோதலைக் கொண்டு ஆத்திரமூட்டுவது தான் இதன் நோக்கமாக உள்ளது என்பது தெளிவு.

மாட்ரிட்டில் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக ஸ்பெயினிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கம் அணிதிரட்டப்படவில்லை என்பதே மரணகரமான அரசியல் அபாயமாகும்.

இந்த இக்கட்டான நேரத்தில், கட்டலான் மற்றும் ஸ்பானியத் தொழிலாளர்கள் தங்களைப் பாதுகாப்பதாக சொல்கின்ற அரசியல் சக்திகளை மதிப்பீடு செய்து பார்த்தாக வேண்டும்.

கட்டலான் பிராந்திய முதல்வரான, கார்லஸ் புய்க்டெமோன்ட், தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கிறார், ஆனால் அதை ரஹோய் நிராகரித்து விட்டதோடு அவரை ஒரு கிரிமினல் என்கிறார். கட்டலான் துணை முதல்வரான ஓரியோல் ஜுங்கார்ஸ், Banco Sabadell, CaixaBank, எரிசக்தி பெருநிறுவனமான Gas Natural, Abertis, உயிரிதொழில்நுட்ப நிறுவனமான Oryzon மற்றும் தொலைத்தொடர்பு பெருநிறுவனமான Eurona போன்ற முக்கியமான வங்கிகளும் மற்றும் நிறுவனங்களும், பிரிவினைவாத செலுத்தத்தின் மத்தியில் இந்தப் பிராந்தியத்தின் எதிர்காலம் குறித்த அச்சத்தால் கட்டலோனியாவை விட்டு அவை வெளியேறுவதாக வெளியிடுகின்ற அறிவிப்புகள் மீது தான் முக்கியமாகக் கவலைகொள்பவராக இருக்கிறார்.

CUP நாடாளுமன்றவாதியான Eulàlia Reguant கட்டலான் நாளிதழான Nació Digital இடம் பேசுகையில், 17,000 பிராந்திய போலிசை, அதாவது Mossos ஐ “ஸ்பெயின் நீதியமைப்பின் பகுதியாக இருப்பதில் இருந்து நிறுத்துகின்ற”தாக அமைகிற ஒரு சட்டத்தை ஏற்பதன் மூலமாக, துறைமுகங்கள் மற்றும் விமானநிலையங்கள் உள்ளிட, கட்டலோன் பிராந்தியத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது எவ்வாறு என்பதற்கான ஒரு திட்டத்தில் தனது கட்சி வேலைசெய்து கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

போலி-இடது பொடேமோஸ் (Podemos) பேச்சுவார்த்தைக்கான தனது அழைப்பை தொடர்ந்து கொண்டிருப்பதோடு, PSOE ஞாயிறன்றான அதி-வலது ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கிறது, அத்துடன் ஒரு வன்முறையான தலையீட்டுக்குத் தயார் செய்வதில் ரஹோயுடன் நேரடியாக சேர்ந்து வேலைசெய்கிறது என்ற நிலையிலும், PSOE-பொடேமோஸ் அரசாங்கத்தை PPக்கான ஒரு மாற்றாகக் காட்டுகின்ற பிரமைகளை ஊக்குவிக்கிறது.

ஸ்பெயினின் அரசியல்சட்ட நீதிமன்றம் PSOE இன் கட்டலான் பிரிவான கட்டலோனியா சோசலிஸ்ட் கட்சி (PSC) தாக்கல் செய்த ஒரு புகாரின் அடிப்படையில், பிரிவினைவாதக் கட்சிகள் தங்கள் ஒருதரப்பான சுதந்திரப் பிரகடனத்தை அறிவிக்க எதிர்பார்க்கப்படுகின்ற கட்டலான் பிராந்திய சட்டமன்றத்தின் திங்களன்றான அமர்வை சட்டவிரோதமாக்கி விட்டது.

ஒரு இராணுவ-போலிஸ் அரசு அச்சுறுத்தலுக்கு முகம்கொடுக்கும் நிலையில் இந்த அத்தனை அரசியல் சக்திகளும் தமது அரசியல் திவால்நிலையை விளங்கப்படுத்திக் கொண்டிருக்கின்றன. போலிஸ்-அரசு ஆட்சி வடிவங்களுக்கு திரும்புவதற்கு பரந்த எதிர்ப்பு இருக்கின்ற நிலையிலும், இவை தொழிலாள வர்க்கத்தை நிராயுதபாணியாக்கிக் கொண்டிருக்கின்றன.

கட்டலோனியாவிலும் மற்றும் ஸ்பெயின் முழுமையிலும் ஜனநாயக உரிமைகள் மீதான கொடூரத் தாக்குதல்களுக்கு எதிராக பரவலாக உணரப்படும் எதிர்ப்பானது ஸ்பெயினின் ஆளும் உயரடுக்குகளது அத்தனை கன்னைகளில் இருந்தும் மற்றும் அவற்றின் கட்சிகளில் இருந்தும் சுயாதீனப்பட்ட அரசியல்சுயாதீனமான, புரட்சிகரமான மற்றும் சோசலிஸ்ட் முன்னோக்கின் அடிப்படையில் மட்டுமே வெளிப்பாடு காண முடியும்.