ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Spain’s Popular Party threatens repression as Catalan authorities declare independence

கட்டலான் அதிகாரிகள் சுதந்திர பிரகடனம் செய்கையில், ஸ்பெயினின் மக்கள் கட்சி ஒடுக்குமுறையைக் கொண்டு அச்சுறுத்துகிறது

By Alejandro López
10 October 2017

இன்று கட்டலான் நாடாளுமன்றம் அனேகமாக தன்னிச்சையாக சுதந்திர பிரகடனம் அறிவிக்கலாம் என்பதால் அதற்கு முன்னதாக, மக்கள் கட்சி (PP) அரசாங்கம் கட்டலானில் மூர்க்கமான ஒடுக்குமுறையை நடத்துவதற்கான அதன் அச்சுறுத்தல்களை அதிகரித்துள்ளது.

நேற்று மக்கள் கட்சியின் செய்திதொடர்பு செயலாளர் பப்லோ கசாடோ, 1934 இல் சுதந்திர பிரகடனம் செய்த பிராந்திய அரசு தலைவர் Lluís Companys உடன் கட்டலான் முதல்வர் கார்லெஸ் புய்க்டெமொன்ட் இன் எதிர்கால தலைவிதியை ஒப்பிட்டார். போருக்குப் பின்னர் நாட்டை விட்டு தப்பியோடிய Lluís Companys, பாரீசில் கெஸ்டாபோவினால் பிடிக்கப்பட்டு, பிரான்சிஸ்கோ பிராங்கோவின் பாசிசவாத ஆட்சியிடம் ஒப்படைக்கப்பட்டார், பிராங்கோ 1940 இல் துப்பாக்கிப் படைப்பிரிவைக் கொண்டு அவரை சுட்டுக் கொன்றார்.

“நாங்கள் சுதந்திரத்தைத் தடுப்போம், அதற்கான என்ன நடவடிக்கைகள் அவசியப்பட்டாலும் அதை மேற்கொள்வோம், அரசியலமைப்பின் அல்லது தண்டனை தொகுப்பு சட்டத்தின் எந்தவொரு வழிவகையையும் கைவிடாமல் அனைத்தும் மேற்கொள்ளப்படும்,” என்று கசாடோ தெரிவித்தார். ஸ்பானிய அரசாங்கம் "பிரிவினைவாதத்திற்கு எதிராக ஒரு இரும்புப்பிடியை" சூளுரைத்து வருகிறது. "நாங்கள் அதே சம்பவத்தை மீண்டும் நடக்க விடமாட்டோம் ஏனென்றால் [புய்க்டெமொன்ட்] இன் கதையும் கொம்பானிஸ் (Companys) போலவே முடிந்து போகும்!” என்றார்.

உடனடியாக எதிர்வினையாற்றிய El País இன் பத்திரிகையாளர் அனபெல் டியேஸ் (Anabel Díez) , ஸ்பானிய கூட்டாட்சி குடியரசிற்குள் கட்டலான் அரசை பிரகடனப்படுத்தியதற்காக கம்பானிஸ் சிறையில் அடைக்கப்பட்ட 1934 ஐ குறிப்பிடுகிறாரா அல்லது 1940 இல் கம்பானிஸ் கொல்லப்பட்டதைக் குறிப்பிடுகிறாரா என்பதை உறுதிப்படுத்துமாறு கசாடோவிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கான பதில் மழுப்பலாக இருந்தது: “சுதந்திர பிரகடனம் செய்யப்பட்ட ஒரு வரலாற்று தேதி அவர்களுக்கு [பிரிவினைவாதிகளுக்கு] ஒரு விடையிறுப்பைக் கொண்டு வந்ததை நான் அர்த்தப்படுத்தினேன். நானொரு வரலாற்றாளனும் கிடையாது அல்லது ஒரு தீர்க்கதரிசியும் கிடையாது.”

பத்திரிகையாளர் கூட்டத்திற்குப் பின்னர், மக்கள் கட்சி அதற்கான பதிலை குறிப்பிட்டுக் கூறவும், கம்பானிஸ் சிறையில் அடைக்கப்பட்டதையே கசாடோ குறிப்பிட்டார் என்பதை உறுதிப்படுத்தவும் கடமைப்பட்டிருந்தது.

இந்த அச்சுறுத்தலை ஓர் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஸ்பெயின் முழுவதிலும், குறிப்பாக இரண்டு வாரங்களுக்கு தொழிலாளர்கள் இராணுவத்துடன் சண்டையிட்டு வந்த அஸ்டுரியாஸ் பகுதியில், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் ஒரு புரட்சிகர போராட்டத்திற்கு இடையே, அக்டோபர் 6, 1934 இல், ஸ்பானிய கூட்டாட்சி குடியரசுக்குள் கம்பானிஸ் கட்டலான் அரசை பிரகடனம் செய்தார். ஜேர்மனி, இத்தாலி மற்றும் ஆஸ்திரியாவில் பாசிசம் அதிகாரத்திற்கு வந்திருந்த சூழலில், அது ஒரு பழமைவாத அரசாங்கத்திற்குள் பாசிசவாத அமைச்சர்கள் உள்நுழைய வழிவகுத்தது.

அந்த கட்டலான் குடியரசு, வன்முறையாக ஒடுக்கப்படுவதற்கு முன்னர் அது வெறும் 10 மணிநேரமே நீடித்தது. அதன் விளைவு, 46 பேர் கொல்லப்பட்டனர், 3000 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர், கம்பானிஸ் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது, கட்டலானின் சுயாட்சி-அரசு காலவரம்பின்றி இடைநிறுத்தம் செய்யப்பட்டது, அப்பிராந்தியம் இராணுவ ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது. கட்டலான் பிரிவினைவாதிகளையும் அஸ்டுரியாஸ் சபையையும் (கம்யூன்) நசுக்கியதும், அந்த அரசாங்கம் ஸ்பெயின் முழுவதிலும் கடுமையான ஒடுக்குமுறையை திணித்தது, பத்திரிகைகள் மூடப்பட்டன, ஆயிரக் கணக்கான தொழிலாளர்களும் இடதுசாரி அரசியல் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.

புய்க்டெமொன்ட் இன் கட்டலோனிய ஜனநாயகக் கட்சியின் (PddeCat) சில ஆதாரநபர்கள் குறிப்பிடுவதைப் போல, இன்று தன்னிச்சையான ஓர் "அடையாள" சுதந்திர பிரகடனத்தைக் கூட மக்கள் கட்சி ஏற்காது என்பதை, கசாடோ, இத்தகைய அறிக்கைகளைக் கொண்டு, தெளிவுபடுத்துகிறார்.

நேற்று முழுவதுதம், மக்கள் கட்சி அங்கத்தவர்கள் அவர்களின் அச்சுறுத்தல்களைத் தொடர்ந்தனர். கட்டலோனியாவில் உள்ள அரசு பிரதிநிதி என்ரிக் மில்லோ கூறுகையில், கட்டலோனியாவில் நிறுத்தப்பட்டுள்ள தேசிய பொலிஸூம் ஊர்க்காவல் படைப்பிரிவும் ஒரு தன்னிச்சையான சுதந்திர பிரகடனத்தைத் தடுத்து நிறுத்த தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

COPE வானொலி நிலையத்திற்கு துணை பிரதம மந்திரி Soraya Sáenz de Santamaría அளித்த ஒரு பேட்டியில், இன்று தன்னிச்சையான சுதந்திரம் பிரகடனம் அறிவிக்கப்பட்டால், “சட்டம் மற்றும் ஜனநாயகத்தை மீட்டமைக்கும்" நோக்கில், அரசியலமைப்பின் ஷரத்து 155 ஐ ஒதுக்கிவிடாமல், “அவசியமான அனைத்து நடவடிக்கைகளையும்" அரசாங்கம் மேற்கொள்ளுமென எச்சரித்தார். ஷரத்து 155 ஐ பிரயோகிப்பது, கட்டலான் அரசாங்கத்தை இடையிலேயே கலைத்து, மாட்ரிட்டின் நேரடி ஆட்சியைக் கொண்டு வரும். அதுபோன்றவொரு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமானால், கட்டலோனியாவில் உள்ள 12,000 இல் இருந்து 16,000 வரையிலான பொலிஸ் மற்றும் ஊர்க்காவல் படைகளுக்கு ஆதரவாக இராணுவ நிலைநிறுத்தல் போன்றவொன்றை செய்யாமல் நடைமுறைப்படுத்த முடியாது.

ஷரத்து 116 ஐ பிரயோகிப்பது மற்ற பரிசீலினைகளில் உள்ளடங்கி உள்ளன, இது, கருத்துச் சுதந்திரம் மற்றும் எழுத்துச் சுதந்திரம், வேலைநிறுத்த உரிமை, தேர்தல்கள் மற்றும் பத்திரிகை தணிக்கை திணிப்பு உட்பட அடிப்படை ஜனநாயக உரிமைகளை இடைநிறுத்தி இராணுவ நிலைநிறுத்தலை முன்னறிவித்து கட்டலோனியாவில் ஓர் அவசரகால நிலையைத் திணிக்கும்.

சோசலிஸ்ட் கட்சியும் (PSOE) நேற்று தலையீடு செய்தது. பொது செயலாளர் Pedro Sánchez மக்கள் கட்சி எடுக்கும் எந்த நடவடிக்கையையும் அவர் ஆதரிப்பதாக தெளிவுபடுத்தினார். சோசலிஸ்ட் கட்சி (PSOE) “ஸ்பெயின் மக்களின் நல்லிணக்கத்தை அச்சுறுத்துகின்ற ஒருதரப்பான திவால்நிலைமைக்கு அரசாங்கத்தின் விடையிறுப்பை ஆதரிக்கும்" என்று Sánchez குறிப்பிட்டார்.

சாத்தியமான ஒவ்வொரு அவமானங்களையும் கொண்டு கட்டலான் பிரிவினைவாதிகளைச் சிறுமைப்படுத்தும், இத்தகைய அரசியல் சக்திகள் மற்றும் ஊடகங்களால் ஊக்குவிக்கப்படும் பாசிசவாத சூழல், அதிவலதை பலப்படுத்தி உள்ளது.

“சுதந்திரம் மட்டுமே ஒரே வழி" என்ற கோஷத்தின் கீழ் போலி-இடது கட்டலான் பிரிவினைவாத குழுவான மக்கள் ஒற்றுமையின் வேட்பாளர்கள் (CUP) மற்றும் அதன் இளைஞர் பிரிவான Arran ஏற்பாடு செய்திருந்த ஓர் ஆர்ப்பாட்டம் மீது வலென்சியாவில் பாசிசவாதிகளின் குழு ஒன்று தாக்குதல் நடத்தியது. அப்போராட்டம் Yomus குழு தலைமையிலான அங்கீகாரமற்ற எதிர் ஆர்ப்பாட்டம் ஒன்றால் தாக்கப்பட்டது, அந்த ஆர்ப்பாட்டம் முன்செல்ல அனுமதிக்கப்பட்டது. கட்டைகள் மற்றும் இரும்பு தடிகளுடன் ஆயுதமேந்திய பாசிசவாதிகள் தாக்கியதில், ஒரு பெண், ஒரு தம்பதியினர் மற்றும் El País இன் புகைப்பட இதழாளர் ஒருவர் உட்பட பலர் அதில் காயமடைந்தனர்.

சர்வஜன வாக்கெடுப்பு மீதான அவர்களின் ஒடுக்குமுறைக்காக இன்றைய நாட்களில் பத்திரிகைகள் பெருமைபீற்றி வரும், தேசிய பொலிஸ், பாசிசவாதிகளின் தரப்பில் நடத்தப்படும் வெளிப்படையான வன்முறைக்கு வேண்டுமென்றே அலட்சியமாக இருப்பதை இணைய காணொளிகள் எடுத்துக்காட்டுகின்றன. லாசெக்டாவில் அத்தாக்குதல் நேரடியாக பதிவு செய்யப்பட்டது.

ஊடகங்களின் ஆதரவுடன் ஆளும் வர்க்கம் கட்டலோனியாவில் ஒரு பாரிய ஒடுக்குமுறைக்குத் தயாரிப்பு செய்து வருகின்ற நிலைமைகளின் கீழ், போலி-இடது அதன் அரசியல் திவால்நிலைமையை எடுத்துக்காட்டி உள்ளன. சர்வாதிகாரத்தை நோக்கிய ஆளும் வர்க்க முனைவுக்கு எதிராக கட்டலோனியா மற்றும் ஸ்பெயின் இருதரப்பிலும் தொழிலாளர்களை அணித்திரட்டுவதற்கு எந்த போக்கும் முயலவில்லை. பிரதான ஏகாதிபத்திய சக்திகள் சர்வஜன வாக்கெடுப்பு மீதான மக்கள் கட்சியின் ஒடுக்குமுறையை ஆமோதித்துள்ள நிலைமைகளின் கீழ், ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்திற்கு ஒரேயொருவர் கூட ஒரு சர்வதேச முறையீடு செய்யவில்லை.

அதற்கு பதிலாக, போலி-இடது குழுக்கள் அவற்றின் பெரும்பான்மையோடு, வெறும் 42 சதவீத கட்டலான் மக்கள் ஆதரிக்கும் ஒரு தன்னிச்சையான சுதந்திர பிரகடனத்தை ஆதரிக்க அணி சேர்ந்துள்ளன, குறிப்பாக CUP க்கு ஆதரவாக நிற்கின்றன. நேற்று CUP இன் Benet Salellas அறிவிக்கையில், “நாம் சர்வஜன வாக்கெடுப்பில் வென்றுள்ளோம், இந்த செவ்வாயன்று அந்த முடிவுகளைப் பயன்படுத்த வேண்டும்,” என்றார்.

உடனடியான ஒரு சுதந்திர பிரகடனம் மீது தங்களின் ஆட்சேபனைகளை வெளிப்படுத்தி உள்ள PDeCAT இல் உள்ள CUP இன் வலதுசாரி கூட்டாளிகளுக்கு நேரடியான ஒரு பிரத்யேக சேதியில், அவர், “கட்டலான் குடியரசு பிரகடனத்தைத் தள்ளிப் போடுவது சரியாக இருக்காது,” என்பதையும் சேர்த்து கொண்டார்.

ஒரு குடையின் கீழ் கட்டலான் தேசிய நாடாளுமன்றம் பிராந்திய நாடாளுமன்றத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு அழைப்புவிடுத்துள்ளது. “நமது அமைப்புகளுக்காக நிற்போம். ஹலோ குடியரசு,” என்ற தலைப்பின் கீழ் ANC அதனை பின்தொடர்பவர்களுக்கு வெளியிட்ட ஒரு சேதியில், “மக்கள் கருத்து கூறிவிட்டனர், அவர்கள் இப்போது சுதந்திரத்திற்கு ஆம் என்பதை தெரிவித்துவிட்டனர்,” என்று குறிப்பிட்டது.

கண்ணுக்கு எட்டிய தொலைவில் மற்றொரு உள்நாட்டு போர் இருப்பது குறித்து அதிகரித்து வரும் கவலைகளுக்கு இடையே, பொடெமோஸ் தொடர்ந்து தொழிலாள வர்க்க எதிர்ப்பை நிராயுதபாணிக்குவதில் பாத்திரம் வகித்து வருகிறது. அக்கட்சியின் அமைப்பு செயலாளர் Pablo Echenique கூறுகையில், “இன்றைய நாட்களில் PSOE, [மக்கள் கட்சியின்] அணியில் இணைந்து வருகிறது என்பதற்காக வருந்துகிறோம். … வரும் நாட்களில் நடக்கவிருப்பதில் பாதிக்கப்படுபவர்களுக்காக நாம் இரங்க வேண்டியிருந்தால், அப்பாவி மக்களுக்கு எதிராக படைகளைப் பயன்படுத்த தயங்காத அரசாங்கத்தை ஆதரிக்கும் ஒரு [அரசியல்] சக்தியின் தலைவர் பொறுப்பில் இருப்பதற்காக [PSOE] இன் தலைவர் Pedro Sanchez தான் பொறுப்பேற்க வேண்டும்,” என்றார்.

Pontius Pilate இன் கருத்தைப் போன்ற தொனியில், Echenique தொடர்ந்து கூறுகையில், “நாளை தன்னிச்சையான சுதந்திர பிரகடனம் அறிவிக்கப்படாது, மக்கள் கட்சி ஷரத்து 155 அல்லது 116 ஐ பயன்படுத்தாது என்று நம்புவோமாக,” என்றார்.