ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

200,000 protest jailing of Catalonian nationalist leaders in Barcelona

கட்டலோனிய தேசியவாதத் தலைவர்கள் சிறையிலடைக்கப்பட்டதற்கு எதிராக பார்சிலோனாவில் 200,000 பேர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

By Paul Mitchell
19 October 2017

இந்த வாரத்தில் கட்டலோனியாவில் மிகப்பெரும் பிரிவினைவாத அமைப்புகளின் தலைவர்கள் -கட்டலான் தேசிய சட்டமன்றத்தின் (ANC) ஜோர்டி சான்சேஸ் மற்றும்  Òmnium Cultural அமைப்பின் ஜோர்டி குவிக்ஸார்ட்- சிறையிலடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்டலோனியா முழுமையாக ஆர்ப்பாட்டங்கள் நடந்தன, இதன் உச்சமாக செவ்வாய்கிழமை இரவு பார்சிலோனாவில் 200,000 பேர் கலந்து கொண்ட வலிமையானதொரு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த இரண்டு பேர் சிறையிலடைக்கப்பட்டமையானது ஜெனரல் பிரான்சிஸ்கோ ஃபிராங்கோவின் பாசிச சர்வாதிகாரம் முடிவுக்கு வந்ததன் பின்னர் அரசியல் கைதிகள் முதன்முறையாக சிறையிலடைக்கப்படுவதைக் குறிப்பதாக இருந்தது.

அவர்களை விடுதலை செய்யக் கோரி சனிக்கிழமை மாலை ஒரு பாரிய அணிதிரட்டலுக்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. ANC, Òmnium Cultural, UGT மற்றும் CCOO தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிகளது குடை அமைப்புகளான CECOT மற்றும் PIMEC ஆகியவை உள்ளிட 60 அமைப்புகளைக் கொண்ட “ஜனநாயகத்திற்கான பலகை” (Board for Democracy) இன்னுமொரு “தேசிய வேலைநிறுத்த”த்தை நடத்தக் கூடும் என்பதான பேச்சுகளும் இருக்கின்றன.

அதிகப்பட்சம் 15 ஆண்டுகாலம் வரை சிறையில் தள்ளக்கூடிய இட்டுக்கட்டப்பட்ட தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளில் விசாரணை நிலுவையில் இருக்கும் நிலையில், சான்சேஸும் குவிக்ஸார்ட்டும் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். அக்டோபர் 1 அன்று நடைபெற்ற கட்டலான் சுதந்திரத்திற்கான கருத்துவாக்கெடுப்பை ஊக்குவித்த அமைப்புகளின் இடங்களில் போலிஸ் சோதனைகள் நடத்துவதைத் தடுக்கும் முயற்சியாக செப்டம்பர் 20 மற்றும் 21 அன்று ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடு செய்ததாக அவர்கள் குற்றம்சாட்டப்படுகின்றனர்.

பிரதமர் மரியானோ ரஹோயின் மக்கள் கட்சி அரசாங்கத்தின் பல வார கால தொடர்ச்சியான ஒடுக்குமுறைக்குப் பின்னர் இந்தக் கைதுகள் வந்திருந்தன. கட்டலான் அரசாங்க அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர், ஏராளமான இணைய தளங்கள் மூடப்பட்டன, மில்லியன் கணக்கான சுவரொட்டிகளும் துண்டறிக்கைகளும் பறிமுதல் செய்யப்பட்டன, அச்சகங்களும் செய்தித்தாள் அலுவலகங்களும் சோதனையிடப்பட்டன, கூட்டங்கள் தடைசெய்யப்பட்டன, அத்துடன் கருத்துவாக்கெடுப்பை ஆதரித்தற்காக நூற்றுக்கணக்கான மேயர்கள் வழக்குகளைக் கொண்டு மிரட்டப்பட்டனர்.

அக்டோபர் 1 அன்று, கருத்துவாக்கெடுப்பை தடுத்துநிறுத்தும் ஒரு தோல்வியடைந்த முயற்சியில் PP அரசாங்கம் பத்தாயிரக்கணக்கான போலிசை அனுப்பியது. சிவில் கார்டுகள் வாக்களிப்பு இடங்களை உடைத்துக் கொண்டு நுழைவது, வாக்குப் பெட்டிகளைக் கைப்பற்றுவது மற்றும் அமைதியான, நிராயுதபாணியான வாக்காளர்களை அடிப்பது -இதில் நூற்றுக்கணக்கானோர் காயமுற்றனர்- ஆகியவற்றைக் காட்டிய புகைப்படங்கள் சமூக வலைத் தளங்களில் நிரம்பி வழிந்தன. ஒரு தேசியவாத, சட்டம் ஒழுங்கு வெறிக்கூச்சல் கிளறி விடப்பட்டிருக்கிறது, அதி-வலது ஆர்ப்பாட்டங்கள் ஊக்குவிக்கப்பட்டிருக்கின்றன.

இன்று காலை 10 மணிக்குள்ளாக, கட்டலான் பிராந்திய முதல்வரான கார்லஸ் புய்க்டெமொன்ட் அவர் சுதந்திரத்தை அறிவித்திருக்கிறாரா என்பதைத் “தெளிவுபடுத்தியாக” வேண்டும். சென்ற வாரத்தில் அவர் விடுத்திருந்த அறிக்கையில் கட்டலோனியாவுக்கு சுதந்திரத்திற்கான உரிமை இருப்பதை மறுவலியுறுத்தம் செய்தார், ஆனால் மாட்ரிட் உடனான பேச்சுவார்த்தைகளுக்கு அனுமதிக்கும் பொருட்டு சில வாரங்களுக்கு அது அறிவிக்கப்படவில்லை.

சுதந்திர அறிவிப்பை அவர் மறுக்காது போனால், கட்டலான் சுயாட்சியை நிறுத்தி வைக்கும் ஸ்பானிய அரசியல்சட்டத்தின் 155வது பிரிவின் -இதனை “அணுத் தெரிவு” என்பதாக விவரிப்பது வழக்கமாகியிருக்கிறது- கீழான நடவடிக்கைகளில் ரஹோயின் அமைச்சரவை இறங்கும் என்பதாக பல செய்திகள் கூறுகின்றன. அப்படியான ஒரு நடவடிக்கை இராணுவத் தலையீட்டின் மூலமாக மாட்ரிட்டில் இருந்தான நேரடியான ஆட்சியைத் திணிப்பதற்கான அடிப்படையை அமைக்கும்.

பிராந்திய சட்டமன்றம் (Generalitat) கலைக்கப்பட்டு, ஒரு “இடைமருவல் அரசாங்க அதிகாரம்” உருவாக்கப்படும், அதில் இருக்கும் நியமன அதிகாரிகள் பல்வேறு கட்டலான் அமைச்சரவைகளின் செயல்பாட்டைக் கையிலெடுத்து நடத்துவார்கள் என்பதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

பிராந்திய அரசாங்கத்தின் தலைவராக தொடர்ந்தும் இருக்க புய்க்டெமொன்ட் அனுமதிக்கப்படுவார், என்றாலும் அவரிடம் இருந்து அதிகாரங்கள் பறிக்கப்பட்டு விடும். சட்டமன்றத்தின் பொருளாளராக இருப்பவரும் கட்டலோனியாவில் இருந்து முதலீடுகள் வெளியேற்றப்படுவதற்கும் நிறுவனங்கள் தங்கள் தலைமையகங்களை இடம்மாற்றுவதற்கும் காரணமானவராகக் குறைகூறப்படுபவருமான துணைத் தலைவர் ஓரியல் ஜங்கிராஸ் அகற்றப்படக் கூடும். ஜோர்டி சான்சேஸ் மற்றும் ஜோர்டி குவிக்ஸார்ட்டைப் போல ஜங்கராஸும் மற்ற அதிகாரிகளும் கூட சுற்றி வளைக்கப்பட்டு சிறையிலடைக்கப்படக் கூடும்.

கட்டலோனியாவில் புதிய தேர்தலை நடத்துவது தான் அடுத்த நடவடிக்கையாக இருக்கும் என செய்திகள் தெரிவிக்கின்றன. வழக்கமான நிலைமைகளில் போல பிராந்திய அரசாங்கத்தினால் கூட்டப்படாமல் மாறாக மாட்ரிட்டின் கட்டுப்பாட்டின் கீழ் இது கூட்டப்படுவதாக இருக்கும். சுதந்திரத்திற்கு அழைப்புவிடுக்கின்ற கட்சிகள் தடைசெய்யப்பட வேண்டும் என்ற அழைப்புகள் அதிகரித்துச் செல்கின்ற நிலையில், அக்கட்சிகள் தேர்தலில் நிற்க அனுமதிக்கப்படுமா என்பது மேலும் மேலும் கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கிறது.

இச்சமயத்தில் இராணுவத் தலையீட்டைக் குறித்து அரசாங்கம் வெளிப்படையாக பேசவில்லை என்றாலும் கட்டலோனியாவில் இருக்கும் தேசிய போலிஸ் மற்றும் சிவில் கார்டு யூனிட்டுகளுக்கு ஆதரவாக தளவாடத் துருப்புகள் அனுப்பப்பட்டிருக்கின்றன, அத்துடன் “Chain Mail” துருப்பு நிலைநிறுத்த திட்டத்தின் விவரங்கள் இராணுவ ஆளுமைகளின் கருத்துகளுடன் வெளியாகியிருக்கின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசாங்கத் தலைவர்களது ஐரோப்பிய கவுன்சில் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரஹோய் வியாழனன்று மாலை புரூசேல்ஸ் செல்கிறார். கட்டலோனியாவின் அடுத்த ஆட்சி என்பது ஸ்பெயின் அதன் அரசியல்சட்டம் வகுத்தளித்திருக்கும் வரம்புகளுக்குள்ளாக தீர்த்துக்கொள்ள வேண்டிய ஒரு “உள்நாட்டு” நெருக்கடி என்று ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து அறிவித்து வந்திருக்கிறது, இதே கருத்தையே அமெரிக்காவில் ட்ரம்ப் நிர்வாகமும் எடுத்திருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியமும் நேட்டோ கூட்டணியும் குட்டிக் குட்டியான போட்டி அரசுகளின் ஒட்டுத்துணியாக உடைந்துவிடக் கூடாது என்று ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் அஞ்சுவதால் PP இன் ஒடுக்குமுறைக்கு அவற்றின் ஆதரவு கிட்டுகிறது.

இதுவிடயத்தில், உச்சிமாநாட்டின் திட்டநிரலிலான ஒரு உத்தியோகபூர்வ விடயமாகக் கூட கட்டலோனியா இடம்பெறவில்லை. “நாங்கள் அதைத் திட்டநிரலில் வைக்க விரும்பவில்லை, ஆனால் ஜனாதிபதி ரஹோய் அதைக் குறித்து விவாதிக்க விரும்பினாரென்றால், அப்போது அதைத் திட்டநிரலில் சேர்த்துக் கொள்வோம்” என்று ஐரோப்பிய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சோசலிஸ்ட் கட்சியின் (PSOE) பொதுச் செயலரான பெட்ரோ சான்சேஸும் புரூசெல்ஸுக்கு விஜயம் செய்கிறார். PPக்கு மறைப்பை வழங்குவதும் ஸ்பானிய அரசினால் நடத்தப்படுகின்ற ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கு மாற்றுச் சித்தரிப்பை வழங்குவதுமே இதன் பிரதான பாத்திரமாகும். புதன்கிழமையன்று, அவர் ஐரோப்பாவின் சமூக-ஜனநாயகக் கட்சிக் கன்னையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு மாநாட்டில் பங்குபெறுவதற்கு முன்பாக ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தலைவரான அன்டோனியா தஜனி, வெளியுறவுக் கொள்கை உயர்நிலைப் பிரதிநிதியான ஃபெடரிகா மொகெரினி, மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் சோசலிஸ்ட் குழுவின் தலைவரான கியானி பிட்டெல்லா ஆகியோரை சந்தித்தார். இன்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரான ஜோன் குளோட்- ஜூங்கரை அவர் சந்திக்கவிருக்கிறார்.

ஐரோப்பாவின் ஐந்தாவது பெரியதும், ஜனநாயக நாடாக சொல்லப்படுகின்றதுமான ஒரு நாட்டை ஆட்சி செய்கின்ற PP அரசாங்கம் கட்டலோனியாவில் போலிஸ் அரசு நடவடிக்கைகளின் இடைவிடாத ஒரு இராட்சத திணிப்பை அமல்படுத்திக் கொண்டிருப்பது இந்தக் கண்டமெங்கிலும் மற்றும் சர்வதேச அளவிலும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கான ஒரு எச்சரிக்கை ஆகும். வலதுசாரி குடிமக்கள் கட்சி மற்றும் PSOE இன் ஆதரவுடன் PP நடத்துகின்ற ஒடுக்குமுறைக்கு ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் பச்சைக்கொடி காட்டுவது, உலகளாவிய ஆளும் உயரடுக்கானது அதன் சமூக எதிர்ப்புரட்சிகரக் கொள்கைகளுக்கான எந்த எதிர்ப்பையும் சகித்துக் கொள்ளப் போவதில்லை என்பதற்கான மேலதிகமான ஊர்ஜிதமாகும்.

கட்டலோனியாவில் நடந்து கொண்டிருப்பது தான் ஐரோப்பாவெங்கிலும் ஆட்சிகளுக்கான தகுதி இலக்காக ஆகவிருக்கிறது.

வர்க்கப் போராட்டம், புரட்சி மற்றும் சர்வாதிகாரம் ஆகிய தனது கசப்பான 20 ஆம் நூற்றாண்டு வரலாற்றை “ஜனநாயகத்திற்கு மாறியதன் மூலமாக” -1975 இல் பிராங்கோ மரணமடைந்ததைத் தொடர்ந்து- தீர்த்து விட்டிருந்ததாக PSOEம் கம்யூனிஸ்ட் கட்சியும் வலியுறுத்தி வந்திருந்த ஒரு நாட்டில் இத்தகைய ஒடுக்குமுறை நடவடிக்கைகள் துரிதமாக மறுஎழுச்சி காண்பதென்பது, இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய உலகளாவிய முதலாளித்துவ ஒழுங்கு உடைவு காண்பதன் ஒரு சித்திர வெளிப்பாடாகும்.

இந்த மாற்றத்தின் போது புனையப்பட்ட அரசியல் ஏற்பாடு உருக்குலைந்து கொண்டிருக்கிறது. பிராங்கோவிற்குப் பிந்தைய காலகட்டத்தில் ஸ்பானிய ஆளும் உயரடுக்கின் அரசாங்கத்திற்கான பிரதான கட்சியாக இருந்து வந்திருக்கின்ற PSOE, பல தசாப்த கால சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போர் கொள்கைகளால் மதிப்பிழந்து கிடக்கிறது.

போலிஸ் அரசு ஆட்சிக்குத் திரும்புவதற்கு எதிராகவும் இராணுவத்தை அணிதிரட்டுவதற்கான எந்த முயற்சிக்கும் எதிராகவும் ஒட்டுமொத்த ஸ்பானிய மற்றும் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியாக அணிதிரட்டுவதே இன்றியமையாத பிரச்சினை ஆகும்.

கட்டலோனியாவிலும், ஸ்பெயின் முழுமையிலும் மற்றும் கண்டம் முழுக்கவும் இருக்கின்ற தொழிலாளர்களும் இளைஞர்களும் கட்டலோனியாவில் நடத்தப்படுகின்ற கொடூரமான ஒடுக்குமுறை முடிவு கட்டப்படுவதற்கு கோர வேண்டும். அத்தனை துருப்புகளும் அரசாங்கப் படைகளும் கட்டலோனியாவில் இருந்து திரும்பப் பெறப்பட வேண்டும், அரசியல்கைதிகளாக சிறையிலடைக்கப்பட்டுள்ளவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.

அரசு ஒடுக்குமுறைக்கு எதிரான எதிர்ப்பானது, தொழிலாள வர்க்கத்திற்கு சளைக்காத குரோதமுடையவர்களாய் இருக்கின்ற, மாட்ரிட்டில் இருக்கும் ஆளும் கட்சிகளின் அல்லது கட்டலான் தேசியவாதிகளின் அரவணைப்பில் நிலைநிறுத்தப்பட இயலாது.

முதலாளித்துவத்துக்கு எதிராகவும் சமூகத்தை சோசலிச மறுஒழுங்கு செய்வதற்காகவுமான போராட்டத்தில் ஸ்பெயினிலும் ஐரோப்பாவிலும் இருக்கின்ற தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தப் போராடுவதே போர் மற்றும் சர்வாதிகாரத்தின் அபாயத்திற்கு எதிரான ஒரேயொரு செல்தகைமையான கொள்கையாகும் என்பதை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு வலியுறுத்துகிறது. மாட்ரிட் அல்லது பார்சிலோனாவில் இருக்கிற ஸ்பெயினின் அத்தனை முதலாளித்துவக் கன்னைகளுக்கும் எதிரான புரட்சிகரப் போராட்டத்தில் மட்டுமே இது முன்னெடுக்கப்பட முடியும்.