ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

As protests mount against Madrid, Catalan parliament declares independence

மாட்ரிட்டுக்கு எதிராக போராட்டங்கள் அதிகரிக்கையில், கட்டலான் நாடாளுமன்றம் சுதந்திர பிரகடனம் செய்கிறது

By Alejandro López
28 October 2017

ஆயிரக் கணக்கான பிரிவினை-ஆதரவு போராட்டக்காரர்கள் வெள்ளியன்று கட்டலோனியாவின் பிராந்திய நாடாளுமன்றத்திற்கு வெளியே கூடிநின்றிருந்த போது, அங்கே ஸ்பெயினிலிருந்து சுதந்திரம் அறிவிப்பதற்கும் மற்றும் கட்டலான் குடியரசுக்கென ஒரு புதிய அரசியலமைப்பை வரைவதற்கு "அரசியலமைப்பு நிர்ணய வழிமுறை" ஒன்றை தொடங்குவதற்குமான ஒரு தீர்மானத்திற்கு வாக்களித்தது.

ஸ்பானிய அரசின் குறுக்கீடுகளைத் தவிர்ப்பதற்காக அந்த வாக்கெடுப்பு இரகசியமாக நடத்தப்பட்டது. “ஒரு கட்டலான் குடியரசை சுதந்திரமான, இறையாண்மை கொண்ட, ஜனநாயக மற்றும் சமூக அரசாக" அறிவிக்கும், சுதந்திரத்திற்கான தீர்மானம், 70 ஆதரவு வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது. பிரிவினைவாத முகாமில் இருந்த இரண்டு கட்சிகள் வாக்கெடுப்பபைப் புறக்கணித்திருந்த நிலையில், கட்டலான் ஐரோப்பிய ஜனநாயகக் கட்சி (PdeCAT), கட்டலோனிய இடது குடியரசு (ERC), போலி-இடது கட்சியான மக்களின் வேட்பாளர்கள் கூட்டணி (CUP) ஆகிய பிரிவினைவாத கட்சிகளிடமிருந்து இந்த வாக்குகள் வந்திருந்தன. பொடெமோஸ் ஆதரவு கொண்ட கட்டலோனியா ஆம் நம்மால் முடியும் (CSQP) 10 வாக்குகளை இதற்குள எதிராக இட்டது. குடிமக்கள் கட்சி, கட்டலான் சோசலிஸ்ட் கட்சி மற்றும் வெகுஜன மக்கள் கட்சி ஆகியவற்றின் ஐம்பத்தி மூன்று சட்ட வகுப்பாளர்கள், அத்தீர்மானத்தை சட்டவிரோதமானதென அறிவித்து, வளாகத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

நாடாளுமன்றத்திற்கு வெளியே, பத்தாயிரக் கணக்கான பிரிவினைவாத-ஆதரவு போராட்டக்காரர்கள் estelada சுதந்திர கொடிகளை அசைத்ததுடன், கட்டலான் தேசிய நாடாளுமன்றத்தின் Jordi Sanchez மற்றும் Omnium Cultural அமைப்பின் Jordi Cuixart ஆகிய இரண்டு பிரிவினைவாத தலைவர்களை விடுவிக்க கோரிய பதாகைகளையும் ஏந்தியிருந்தனர். “சுதந்திரம்,” “வீதிகள் இனி எப்போதும் நமதே,” “ஒரு படியும் பின்னோக்கி செல்லாது,” என்றும் கோஷமிட்டவாறு, வாக்கு அறிவிப்பை அவர்கள் உற்சாகமாக வரவேற்றனர். நாடாளுமன்றத்திற்கு பக்கவாட்டில் இருந்த ஓர் அறையில், பிரிவினையை ஆதரிக்கும் 200 நகர முதல்வர்கள் அந்த அறிவிப்பை கொண்டாடினர்.

ஒருசில மணிதியாலங்களுக்குப் பின்னர், பிரதம மந்திரி மரீனோ ரஹோயின் ஸ்பானிய அரசாங்கம் அதே நாளில் செனட்டில் ஷரத்து 155 முறைமைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு விட்டதாக அறிவித்தார். மாட்ரிட்டின் ஒரு பிராந்திய அரசாங்கத்தை நிலைநிறுத்துவது, கட்டலான் ஜனாதிபதி கார்லெஸ் புய்க்டெமொன்ட்டை மற்றும் அவர் அரசாங்கத்தின் பிராந்திய அமைச்சர்கள் அனைவரையும் நீக்குவது, கட்டலான் நாடாளுமன்றத்ததைக் கலைப்பது, மற்றும் அப்பிராந்தியத்தில் ஓர் இடைத்தேர்தலுக்கு அழைப்புவிடுப்பது ஆகியவற்றை ஷரத்து 155 இன் முறைமைகள் உள்ளடக்கி உள்ளன.

மாட்ரிட்டிடம் இருந்து ஒரு பாரிய ஒடுக்குமுறையை எதிர்நோக்கி, புய்க்டெமொன்ட் நாடாளுமன்ற அமர்வுக்குப் பின்னர் ஆதரவாளர்களிடையே கூறுகையில், “வரவிருக்கும் நாட்களில் நாம் நமது மதிப்புகளான அமைதிவாதம் மற்றும் கண்ணியத்தைப் பேண வேண்டும். குடியரசைக் கட்டமைப்பதென்பது நமது கரங்களில், உங்களின் கரங்களில் உள்ளது,” என்றார்.

அதன்பின்னர், Plaça Sant Jaume இல் உள்ள கட்டலான் அரசு கட்டிடத்தின் முன்னால் கொண்டாட்டத்திற்காக ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்றுகூடினர். ஸ்பெயின் புய்க்டெமொன்ட் அரசாங்கத்தை நீக்கியது என்ற செய்தி வெளியானதும், பிரிவினைவாத தலைவர்களைக் கைது செய்வதற்கு மாட்ரிட்டின் எந்த முயற்சிக்கும் அறைகூவல் விடுத்து, "நாங்கள் நகர மாட்டோம்!” என்பதே பிரதான கோஷமாக இருந்தது. கட்டலோனியா எங்கிலுமான நகர மன்றங்கள் ஸ்பானிய கொடியை அகற்றின, அதேவேளையில் கட்டலான் தேசிய நாடாளுமன்றம் மாட்ரிட் திணிக்கும் கட்டளைகளுக்கு ஒத்துழைக்க வேண்டாமென பொதுச்சேவை ஊழியர்களைக் கேட்டுக் கொண்டது.

செனட்டில் உள்ள PdeCat செய்திதொடர்பாளர் Josep Lluís Cleries, ஷரத்து 155 முறைமைகள் குறித்த அறிவிப்புக்கு முன்னதாக, அவர் கட்சி கட்டலான் ஜனாதிபதி மற்றும் அவர் அரசாங்கத்தின் ஏனையவர்களின் இராஜினாமாவை ஏற்காது என்றும், அது கட்டலோனியாவின் தற்போதைய அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருக்கும் என்றும் அறிவித்தார்.

ஸ்பெயின் 1970 களில் பாரிய தொழிலாள வர்க்க போராட்டங்களுக்கு இடையே பிராங்கோ ஆட்சியின் பொறிவுக்குப் பின்னர் படுமோசமான அரசியல் நெருக்கடியை முகங்கொடுத்து வருகிறது. பத்தாண்டு கால ஆழ்ந்த பொருளாதார நெருக்கடி, சமூக செலவின குறைப்பு மற்றும் பாரிய வேலைவாய்ப்பின்மைக்குப் பின்னர், ஸ்பானிய ஆளும் வர்க்கம், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவின் ஆதரவுடன், பிராங்கோவிற்கு பிந்தைய காலக்கட்ட சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான சலுகைகளை மறுத்தளிக்கும் அதன் திட்டங்களை முன்நகர்த்துவதற்கு இந்த சுதந்திர பிரகடனத்தைப் பயன்படுத்தி வருகிறது. மாட்ரிட் ஸ்பானிய இராணுவம் மற்றும் பொலிஸ் ஆதரவுடன் கட்டலோனியாவைக் கைப்பற்ற தயாரிப்பு செய்து வருகிறது.

இரத்தந்தோய்ந்த ஒடுக்குமுறை அபாயமானது புரட்சிகரமான பரிமாணங்களில் ஒரு நெருக்கடியாக அதிகரித்து கொண்டிருக்கிறது. இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக பரந்த எதிர்ப்பு அதிகரித்து வருகிறது என்றாலும், வெவ்வேறு சமூக வர்க்கங்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்ப்பின் இரண்டு வேறுபட்ட வடிவங்களைப் பிரித்து பார்ப்பது மிக முக்கியமாகும்.

முதலாவது, கட்டலான் முதலாளித்துவ வர்க்கத்தின் சுதந்திரத்திற்கு ஆதரவான கன்னைகளின் எதிர்ப்பு உள்ளது. PdeCat, ERC, கட்டலான் தேசிய சபை மற்றும் அவற்றின் குட்டி-முதலாளித்துவ கூட்டாளிகள், போலி-இடது மக்களின் வேட்பாளர்கள் கூட்டணி (CUP) ஆகியவை இதில் உள்ளடங்கி உள்ளன. இந்த சக்திகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டமைப்பிற்குள் ஒரு கட்டலான் முதலாளித்து அரசை கட்டமைப்பதற்கான ஒரு முயற்சியுடன் முன்நகர்ந்து கொண்டிருக்கின்றன.

கட்டலோனியாவில் அவர்களது கடுமையான சமூகநல செலவின குறைப்பு கொள்கைகளுக்கு எதிராக தொழிலாளர்களும் இளைஞர்களும் பல ஆண்டுகளாக நடத்திய போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களை ஒடுக்கிய இதே சக்திகள் தான், நேற்றைய சுதந்திரத்திற்கான தீர்மானத்தில் எரிச்சலூட்டும் விதமாக பின்வருமாறு அறிவித்தன: “கட்டலான் குடியரசு, நடப்பு ஜனநாயக மற்றும் சமூக பற்றாக்குறைகளைச் சீர்படுத்திக் கொண்டு, மிகவும் செழிப்பான, மிகவும் நியாயமான, மிகவும் பாதுகாப்பான, மிகவும் நிலையான மற்றும் மிகவும் ஆதரவான ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கு ஒரு சந்தர்ப்பமாகும்.”

ஒரு கட்டலான் முதலாளித்துவ அரசைக் கட்டமைக்கும் வேலைத்திட்டத்திற்கான பிரதான ஆதரவு தளம், மக்களில் நன்கு வசதியான அடுக்குகளில் உள்ளது. கட்டலான் நிதியுதவி பெறும் கருத்துக்கணிப்பு ஆய்வுகளுக்கான மையத்தின் கடைசி ஆய்வு, அப்பிராந்திய சராசரியான மாதம் 1,400 யூரோவை விட கூடுதலாக, மாதம் 1,800 யூரோவுக்கு மேல் சம்பாதிப்பவர்களில் 40 சதவீதத்தினர் பிரிவினைவாதத்தை ஆதரிக்கின்றனர். மாதம் 4,000 க்கு மேல் சம்பாதிப்பவர்களிடையே இது 54 சதவீதத்தை எட்டுகிறது. ஆனால் பிரதி மாதம் 1,800 க்கு குறைவாக சம்பாதிக்கும் மக்கள்தொகையின் பிரிவுகளிடையே ஆதரவு 40 சதவீதத்திற்கும் குறைவாக சரிகிறது.

பொதுத்துறை நிர்வாக துறைகள் மற்றும் பிராந்திய பொலிஸ், Mossos d’Esquadra, ஆகியவை தான் அவர்களது பிரதான அமைப்புரீதியிலான ஆதரவாக உள்ளது. ஆனால் 17,000 பலமான பிராந்திய பொலிஸ் படையின் விசுவாசிகள் பார்சிலோனாவுக்கும் மாட்ரிட்டுக்கும் இடையே பிளவுபட்டுள்ளனர்.

பிரிவினைக்கான அமைதியான ஆர்ப்பாட்டம் முறைகள் மற்றும் “ஒத்துழையாமை” என்பது ஸ்பானிய அரசும் மற்றும் தன் 122,000 இராணுவ படையினர், 77,400 சிவில் பாதுகாப்புபடையினர் மற்றும் 87,900 தேசிய பொலிஸ் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டு வருகின்ற இரத்தந்தோய்ந்த ஒடுக்குமுறைக்கு நிகராக பொருந்தாது. ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவின் பிரதான முதலாளித்துவ அதிகாரங்கள் அனைத்தும் ஒடுக்குமுறைக்கான மாட்ரிட்டின் நகர்வுகளை ஆதரிப்பதால், கட்டலான் தேசியவாத கட்சிகளும் அரசியல்ரீதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

ஸ்பானிய தலைமை அரசு வழக்கறிஞர் José Manuel Maza, புய்க்டெமொன்ட், அவர் அரசாங்கத்தினதும் மற்றும் சுதந்திர வாக்கெடுப்பை அங்கீகரித்த கட்டலான் நாடாளுமன்ற குழுவினதும் அனைத்து அங்கத்தவர்களுக்கும் எதிராக கிளர்ச்சியைத் தூண்டியதற்கான குற்றச்சாட்டுக்களைக் கொண்டு வர திட்டமிட்டு வருகிறார். “இச்சம்பவத்தில் பங்குபற்றிய அனைவருக்கும் எதிராக" சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படுமென தலைமை அரசு வழக்கறிஞர் அலுவலகத்தின் ஆதாரநபர்கள் El Confidencial  தெரிவித்தனர்.

இந்த தெளிவற்ற விளக்கம், ஆயிரக் கணக்கான பிரிவினைவாதிகள் மற்றும் ஷரத்து 155 ஐ எதிர்க்கும் அனைவருக்கும் எதிராக இல்லையென்றாலும் நூற்றுக் கணக்கானவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்ய அனுமதிக்கும். கிளர்ச்சியைத் தூண்டியதற்கான அதிகபட்ச தண்டனை 30 ஆண்டுகால சிறை தண்டனையாக உள்ளது.

எதிர்ப்பின் மற்றொரு வடிவம் என்னவென்றால், எதேச்சதிகார ஆட்சி முறைகளுக்குத் திரும்புவதற்கு எதிராக ஸ்பெயின் மற்றும் ஐரோப்பா எங்கிலும் தொழிலாள வர்க்கத்தில் அதிகரித்து வரும் சமூக எதிர்ப்பாகும். 1939 மற்றும் 1978 க்கு இடையே தளபதி பிரான்சிஸ்கோ பிராங்கோவின் கீழ் நான்கு தசாப்த கால பாசிசவாத சர்வாதிகாரத்திற்குப் பின்னர், தொழிலாளர் வர்க்கம் அந்த ஆட்சியின் காட்டுமிராண்டித்தனத்தை மறந்துவிடவில்லை.

கட்டலோனியாவில் நூறாயிரக் கணக்கானவர்கள் ஷரத்து 155 க்கு எதிராகவும் மற்றும் பிரிவினைவாத தலைவர்களை கைது செய்ததற்கு எதிராகவும் அணிவகுத்தனர். தீயணைப்பு படையினர், துறைமுக தொழிலாளர்கள், பொதுச்சேவை பணி ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் கட்டலான் பொது ஊடக பணியாளர்கள் போன்ற தொழிலாள வர்க்கத்தின் வெவ்வேறு பிரிவுகளும் பொலிஸ் அரசுக்கும் மற்றும் ஷரத்து 155 ஐ நடைமுறைப்படுத்துவதற்கும் அவர்களின் எதிர்ப்பை ஏற்கனவே காட்டியுள்ளனர்.

மாட்ரிட்டை மையமாக கொண்ட ஊடகங்களோ கடந்த மாதம் ஸ்பானிய தேசியவாதத்தை அம்மக்கள் மீது குண்டுமழையென பொழிந்து, எதேச்சதிகார ஆட்சி வடிவங்களுக்கு மக்களின் எதிர்ப்பை உடைக்கும் ஒரு முயற்சியில் ஒரு பாசிசவாத சூழலை முடுக்கி விட முனைந்தன.

கட்டலோனியாவில் சமூகநல செலவின குறைப்பு மற்றும் சர்வாதிபத்தியத்திற்கு தொழிலாளர்களின் எதிர்ப்பானது, சமூக செலவினக் குறைப்பு மற்றும் இராணுவவாதத்திற்கு எதிராக ஐரோப்பா முழுவதிலும் வேகமாக அதிகரித்து வரும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு பரந்த தீவிரமயப்படுத்தலின் பாகமாக உள்ளது. கட்டலோனியாவில் இராணுவ ஆட்சியை நோக்கிய ரஹோயின் நகர்வுகளிலிருந்து தொடங்கி, ஐரோப்பிய ஒன்றிய சமூக செலவின குறைப்புக்கு எதிராகவும் மற்றும் பொலிஸ் அரசு ஆட்சி வடிவங்களின் உந்துதலுக்கு எதிராகவும் ஓர் ஒருங்கிணைந்த அரசியல் போராட்டத்தின் வடிவத்தில் இந்த எதிர்ப்பை அணித்திரட்டுவதே தொழிலாள வர்க்கம் முன்நகர்வதற்கான வழியாகும்.