ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lankan unions betray power workers’ strike

இலங்கை தொழிற்சங்கங்கள் மின்சார சபை தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை காட்டிக்கொடுத்தன

By W.A Sunil 
28 September 2017

இலங்கை மின்சார சபை (இ.மி.ச.) ஊழியர்களை உள்ளடக்கிய இலங்கையின் இணைந்த தொழிற்சங்க கூட்டணி (JTUA), செப்டம்பர் 20 அன்று அரசாங்கத்துடன் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொண்ட பின்னர், சுமார் 22,000 தொழிலாளர்களின் எட்டு நாள் வேலைநிறுத்தத்தை முடித்துக்கொண்டது.

இலங்கை மின்சார ஊழியர் சங்கம் (இ.மி.ஊ.ச.), இலங்கை சுதந்திர ஊழியர் சங்கம் (இ.சு.ஊ.ச) மற்றும் தேசிய ஊழியர் சங்கமம் (ஜே.எஸ்.எஸ்.) ஆகியவற்றை உள்ளடக்கிய 30 தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பே ஜே.டி.யு.ஏ. ஆகும். இ.மி.ஊ.ச. எதிர்க்கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) கட்டுப்பாட்டில் உள்ள அதே வேளை, இ.சு.ஊ.ச. ஆளும் கூட்டணியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்ந்த சங்கமாகும். ஜே.எஸ்.எஸ். ஆளும் கூட்டணியின் ஐக்கிய தேசியக் கட்சி கட்டுப்பாட்டிலானதாகும்.

சம்பள முரண்பாடுகளை சரிசெய்ய வேண்டும் என்பதே ஜே.டி.யு.ஏ.யின் பிரதான கோரிக்கை இருந்தது. அது தொழில்நுட்ப தொழிலாளர்களுக்கு ஆபத்து கொடுப்பனவுகளையும் கோரியதுடன் தொழிற்சங்க எதிர்ப்பு அடக்குமுறைகளையும் தேசிய தொழிற்பயிற்சி பயிற்றுவிப்பாளர்களை சுரண்டுவதையும் நிறுத்துமாறும் அழைப்பு விடுத்தது. இ.மி.ச. ஊழியர்களின் ஊழியர் சேமலாப நிதி சம்பந்தப்பட்ட ஒரு மோசடியைப் பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் ஏற்கனவே பெரும் சம்பள உயர்வு பெற்றுள்ள இ.மி.ச. உயர் அதிகாரிகள் மற்றும் பொறியியலாளர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் நடவடிக்கைகளை அமுல்படுத்த வேண்டும் என்பவை இதற கோரிக்கைகளாகும்.

புதிய ஒப்பந்தத்தின் கீழ், தொழிலாளர்கள் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஏற்கெனவே ஒப்புக் கொள்ளப்பட்ட மேலதிக கொடுப்பனவுகளில் எஞ்சியுள்ள 6 சதவீதத்தையும் 4 சதவீத சம்பள உயர்வையும் மட்டுமே பெறுவர். இந்த ஒப்பந்தத்தில் தற்காலிகத் தொழிலாளர்களுக்கு நிரந்தர தொழில் அல்லது ஏனைய வேலைநிறுத்த கோரிக்கைகள் பற்றிய எதுவும் குறிப்பிடப்படவில்லை. அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு இரண்டு தவணைகளிலேயே வழங்கப்படவுள்ளதோடு, எதிர்கால அதிகரிப்புகளைத் தீர்மானிக்க மூன்று மாத காலத்திற்குள் குழுவொன்றும் நியமிக்கப்படவுள்ளது.

ஜே.டி.யு.ஏ,, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த நாட்களை வருடாந்த விடுப்புக்களில் குறைத்துக்கொள்ள உடன்பட்டதன் மூலம், நிர்வாகம் தொழிலாளர்களை தண்டிக்க அனுமதித்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், அது உடன்படிக்கையை "இறுதியான மற்றும் முடிவான" ஒன்றாக ஏற்றுக்கொண்டுள்ளதுடன் நிலுவையில் உள்ள கோரிக்கைகளுக்காக "தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டோம்" என்றும் வாக்குறுதியளித்துள்ளது.

மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சின் செயலாளர் B.M.S. படகொட, சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு கூறும் போது, எட்டு நாள் வேலை நிறுத்தத்தில் தொழிற்சங்கங்கள் "எதையும் பெறவில்லை" என்றார். இந்த உடன்படிக்கை வேலைநிறுத்தத்திற்கு முன்னரே தொழிற்சங்கங்களுக்கு வழங்கப்பட்ட திட்டங்களை ஒத்தது என பத்தாகொட கூறினார்.

ஐ.தே.க-ஸ்ரீ.ல.சு.க. அரசாங்கம், மின்சார தொழிலாளர்களின் வேலைநிறுத்தமானது, வாழ்க்கை மற்றும் சமூக நிலைமைகள், மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது அதிகரித்துவரும் தாக்குதல்களால் கோபமடைந்துள்ள தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவினரின் தொழிசங்க நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் என்று கவலை கொண்டுள்ளது.

விடுமுறைகளை ரத்து செய்தும் தற்காலிக, ஒப்பந்த மற்றும் துணைத் தொழிலாளர்களுக்கு இடைநீக்க கடிதங்களை அனுப்பியும் அரசாங்கம் வேலைநிறுத்தத்திற்கு பதிலிறுத்தது. வேலை நிறுத்தக்காரர்களுக்கு எதிராக நிலை நிறுத்துவதற்கு பாதுகாப்புப் படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததுடன் வேலைத் தளங்களுக்கு பொலிஸ் படைகள் அனுப்பி வைக்கப்பட்டன. ஜூலையில், பெட்ரோலிய தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை நசுக்குவதற்கு அரசாங்கம் இராணுவத்தை அணிதிரட்டியது.

ஜே.டி.யு.ஏ. தலைமைத்துவமானது கோரிக்கைகள் வெல்லப்படும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என்று போலியாக அறிவித்தாலும், அது அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களுக்கு வெளிப்படையாக சரணடைந்தது.

ஜே.டி.யு.ஏ. அழைப்பாளரும் இ.மி.ஊ.ச. பொதுச் செயலாளருமான ரஞ்ஜன் ஜெயலால், இந்த உடன்பாட்டை ஒரு "வெற்றிகரமான சூழ்நிலை" என்று கேலிக்கூத்தாகக் கூறிக் கொண்டார். ஜெயலால் ஜே.வி.பி.யின் தொழிற்சங்க பிரிவின் முக்கிய தலைவர் ஆவார். அரசாங்கத்தின் எதிர்ப்பாளராகக் காட்டிக் கொண்டு ஜே.வி.பி. தனது இழந்து வரும் ஆதரவு தளத்தை தூக்கி நிறுத்த முயற்சிக்கின்றது.

ஜே.டி.யு.ஏ.யின் காட்டிக் கொடுப்பின் அளவை மூடிமறைக்க தொழில்நுட்ப தொழிலாளர்கள் சங்க தலைவர் கோசலா அபேசிங்க WSWS நிருபர்களிடம் கூறியதாவது: "நாங்கள் ஒரு இராத்தல் சதையைக் கேட்கவில்லை" மற்றும் "கோரிக்கைகளை சம்பந்தமாக எங்கள் நிலைப்பாட்டை மென்மையாக்கினோம்" ஏனெனில் வேலைநிறுத்தம் "நுகர்வோர்" மீது ஏற்படுத்தும் பாதிப்பு பற்றி தொழிற்சங்கங்கள் கவலை கொண்டன.

தொழிற்சங்கங்கள் மற்றும் தமது தலைமைத்துவம் பற்றி டஜன் கணக்கான இ.மி.ச. தொழிலாளர்கள் உறவேட்டில் கோபத்துடன் குரல் எழுப்பியிருந்தனர். சிலாபத்தில் இ.மி.ச. நுகர்வோர் பிரிவின் ஒரு தொழிலாளி கூறியதாவது: "வேலைநிறுத்தத்தின் விளைவு நாம் முதலில் நினைத்தபடி வெற்றிகரமாக இல்லை. பல தொழிலாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் மற்றும் எட்டு நாட்களுக்கு வேலைநிறுத்தம் செய்ததன் மூலம் எமது விடுமுறைகளையே இழந்துள்ளோம்.

"தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்கு இனிமேலும் எதையும் செய்ய முடியாது, அவை தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு ஐக்கியப்பட்ட போராட்டத்திற்கும் எதிராக உள்ளன. தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு சுயாதீனமான அரசியல் வேலைத்திட்டம் தேவை என்பது சரியானதுதான்."

மற்றொரு தொழிலாளி, இலங்கை மின்சக்தி பொது ஊழியர் சங்கத்தின் உறவேட்டுப் பக்கத்தில் கருத்துத் தெரிவித்ததாவது: "ஏற்கனவே எங்களுக்கு உள்ள ஊதியத்திற்கே ஒப்புதல் பெறவா இந்தளவு நீண்ட காலத்தை நாம் செலவிட்டோம்? எங்களுக்கு கிடைத்த ஒரே விடயம் 4 சதவிகித அதிகரிப்பு. நாங்கள் வேலை நிறுத்தம் செய்த நாட்கள் வீணாகிவிட்டன. எதிர்காலத்தில் இந்த வகையான போராட்டத்தில் நாம் ஈடுபட கூடாது."

தொழிலாளர்களின் கோபத்தை திசைதிருப்புவதற்கான ஒரு அவநம்பிக்கையான முயற்சியில், தொழிற்சங்கங்கள் வேலைக்குத் திரும்புவதை "தற்காலிகமானதாக” காட்டியதுடன், அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால், போராட்டம் மீண்டும் தொடங்கும் என்றும் கூறிக்கொண்டது. முந்தைய கோரிக்கைகளுக்காக மேலும் தொழிற்சங்க நடவடிக்கை எடுக்காமல் இருக்க தொழிற்சங்கங்கள் ஏற்கனவே உடன்பட்டுள்ள நிலையில், இந்த கூற்று போலியானதாகும்.

ஆரம்பத்தில் இருந்தே, தொழிற்சங்கங்கள் இ.மி.ச. தொழிலாளர்களைத் தடம் புரளச் செய்ய வேலை செய்தன. ஊதியங்கள் மற்றும் நிலைமைகள் மீதான தாக்குதலுக்கு பின்னால் உள்ள அரசியல் பிரச்சினைகளை மூடி மறைத்து, அவர்களை "ஊழல் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கும்" சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் பொறியியலாளர்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கும் கோரிக்கைகளுக்கும் அடிபணியச் செய்தது. நிதி மோசடி மற்றும் ஊழலை அகற்றுவதன் மூலம் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க முடியும் என்ற பொய்யை தொழிற்சங்கங்கள் முன்வைக்கின்றன.

சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையிட்ட படி, அரசு மற்றும் பாதி அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்வது மற்றும் தனியார்மயமாக்கல் உட்பட அரசாங்கத்தின் பரந்த பொருளாதார வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியே இ.மி.ச. தொழிலாளர்கள் மீதான தாக்குதல் ஆகும்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், கடந்த மார்ச்சில் இலங்கைக்கு விஜயம் செய்து, இ.மி.ச., பெட்ரோலிய கூட்டுத்தாபனம், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை, விமானப் போக்குவரத்து, விமான சேவை அதிகாரசபை போன்றவற்றை மறுசீரமைப்பு செய்வது உட்பட சிக்கன நடவடிக்கைகளை அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும் என கோரினர்.

இந்த நிறுவனங்களின் தலைவர்கள், "உற்பத்தித் திறனை மேம்படுத்தவும்", ஊழியர் மற்றும் இயக்க "திறனை" விரிவாக்கவும் "நிறுவன கட்டமைப்பு மாற்றங்களை" அறிமுகப்படுத்தவும் வாக்குறுதியளித்து ஒரு "கூட்டுத்தாபன நோக்க அறிக்கையில்" கையொப்பமிட்டனர். வேறுவிதமாகக் கூறினால், அவர்கள் வேலை சுமையை அதிகரிக்க, தொழில்களைக் குறைக்க, சேவை கட்டணங்களை அதிகரிக்க மற்றும் சம்பளக் கோரிக்கைகளை மட்டுப்படுத்தவும் உடன்பட்டுள்ளனர். வேலைநிறுத்தம் செய்த பெட்ரோலிய தொழிலாளர்களுக்கு எதிராக இராணுவத்தை பயன்படுத்திய அரசாங்கம், தனது சிக்கன செயற்பட்டியலை திணிப்பதற்கு அவசியமானதை செய்யும் என்பதை மீண்டும் இ.மி.ச. வேலைநிறுத்தத்தில் நிரூபித்துள்ளது.

ஒரு சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் தங்கள் நலன்களுக்காக போராடுவதற்கு, முதலாளித்துவ அரசுடன் இணைந்துள்ள தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமான, ஒரு புதிய அமைப்பு தொழிலாளர்கள் அவசியம் என்பதே இ.மி.ச. போராட்டத்தின் அரசியல் படிப்பினையாகும். சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) வேலைத் தளங்கள், பெருந்தோட்டங்கள் மற்றும் தொழிலாள வர்க்க அயல் பிரதேசங்களில் தொழிலாள உறுப்பினர்களைக் கொண்ட நடவடிக்கை குழுக்களை உருவாக்க வேண்டும் என அழைப்பு விடுக்கின்றது.

எல்லாவற்றுக்கும் மேலாக, தொழிலாளர்கள் ஒரு புதிய அரசியல் வேலைத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். சர்வதேச சோசலிசத்துக்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக, சோசலிசக் கொள்கைகளை செயல்படுத்த தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்திற்காக போராடுவதன் மூலம் மட்டுமே, தொழிலாள வர்க்கத்தால் அதன் தொழில்கள், சமூக நிலைமைகள் மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க முடியும். இந்த முன்னோக்குக்காகப் போராடும் ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே ஆகும்.