ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The conspiracy to censor the Internet

இணைய தணிக்கைக்காக சூழ்ச்சி

Andre Damon and Joseph Kishore
18 October 2017

அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் அரசியல் பிரதிநிதிகள் பேச்சு சுதந்திரத்தை ஒடுக்குவதற்கான ஒரு சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறப்படும் “இட்டுக்கட்டப்பட்ட செய்திகள்" (trolls) மற்றும் "போலிச் செய்திகளை" கையாளும் மூடுதிரையின்கீழ், முதல் சட்டத்திருத்தத்தில் பொதிந்துள்ள மிக அடிப்படையான அரசியலமைப்பு உரிமைகள் நேரடி தாக்குதலில் வைக்கப்படுகின்றன.

இப்பிரச்சாரத்திற்கு தலைமை கொடுத்து வரும் அரசியல் சக்தியான ஜனநாயக கட்சியானது, குடியரசுக் கட்சியின் பிரிவுகளுடனும், வெகுஜன ஊடகங்கள் மற்றும் இராணுவ-உளவுத்துறை ஸ்தாபகத்துடனும் ஒருங்கிணைந்து கூடி செயல்பட்டு வருகின்றன.

ட்ரம்ப் நிர்வாகம் வட கொரியாவுக்கு எதிராக அணுஆயுத போரைக் கொண்டு அச்சுறுத்தி வருகிறது, மருத்துவக் காப்பீடு மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது, செல்வந்தர்களுக்கு புதிய வரி வெட்டுக்களைக் கோரி வருவதுடன், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது போர் தொடுத்துள்ளது, பெருநிறுவன மற்றும் சுற்றுச்சூழல் நெறிமுறைகளை நீக்கி வருகிறது. ஆனால் ஜனநாயகக் கட்சியோ இந்த பிற்போக்குத்தனமான திட்டநிரலின் மீது மீது கவனம்செலுத்தவில்லை. அதற்கு பதிலாக அது, ரஷ்யா அமெரிக்காவிற்குள் "பிளவுகளை விதைத்து" வருவதாக, அதிகரித்தளவில் விஷமத்தனமான வாதங்களில் கவனம் செலுத்தி வருகிறது.

ஊடகங்களிலோ, ஒவ்வொரு செய்தியும் ஒன்றையொன்று முந்தையதை விஞ்சும் வகையில் மிகவும் அர்த்தமின்றி உள்ளன. பேஸ்புக் மற்றும் ட்வீட்டர் விளம்பரங்களில் 100,000 டாலரைக் கொண்டு ரஷ்யா அமெரிக்க தேர்தல் முடிவை மாற்றியதாக கூறப்படும் வாதம், பிற தகவல் தொடர்பு வடிவங்களில் புட்டின் அரசாங்கத்தினது சூழ்ச்சி குறித்த மூச்சடைக்கும் செய்திகளைப் பின்தொடர்கின்றன.

ரஷ்யாவுடன் இணைப்பு கொண்டதாக ஆதாரமின்றி குற்றஞ்சாட்டப்படும் "Don’t Shoot Us” அமைப்பானது, இன்ஸ்டாகிராம், ட்வீட்டர், யூடியூப், டும்ப்ளர் மற்றும் செல்போன்களில் விளையாடப்படும் ஒரு யதார்த்த விளையாட்டான போக்கேமான் கோ மூலமாகவும் கூட, "இனவாத பதட்டங்களைச் சாதகமாக்கி கொள்ளவும், வேற்றுமைகளை விதைக்கவும்" முயன்றதாக கடந்த வாரம் CNN இன் ஒரு "பிரத்யேக" செய்தி குறிப்பிட்டது.

திங்களன்று CNN இன் மற்றொரு செய்தி, “2016 தேர்தலில் செல்வாக்கு செலுத்துவதற்காக ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் பிரச்சாரத்தின் பாகமாக" ஹிலாரி கிளிண்டன் மீது விமர்சனபூர்வ கருத்துக்களை வெளியிடுவதில் ரஷ்ய "இட்டுக்கட்டும் செய்தியாலை" சம்பந்தப்பட்டிருந்ததாக வலியுறுத்தியது. செய்தி ஊடகங்களும் பிற பிரசுரங்களும், கிளிண்டனை நோக்கியுள்ள அனைத்து எதிர்மறை கருத்துக்களும் ரஷ்ய முகவர்களது உற்பத்தி என்றோ அல்லது ரஷ்ய உளவாளிகளின் பினாமி ஆட்களினது என்றோ மறைமுகமாகவேனும் குறிப்பிடுகின்றன.

பனிப்போர் மக்கார்த்தியிச காலக்கட்டத்தைப் போல, அபத்தமான இந்த குற்றச்சாட்டுக்கள் சவால் செய்யப்படுவதில்லை. உண்மையில் இந்த கொடிய "வெளிநாட்டு எதிரியின்" நடவடிக்கைகள் எந்தளவுக்கு நீண்டகால தாக்கம் கொண்டவை என்பதை காட்டுவதற்காக, ஏனைய ஊடக நிறுவனங்களாலும் அரசியல்வாதிகளாலும் அவை ஏற்றுக் கொள்ளப்பட்டு மீண்டும் மீண்டும் வெளியிடப்படுகின்றன.

ரஷ்ய-விரோத வெளியுறவு கொள்கையைத் தொடர்வதும் தீவிரப்படுத்துவதும் ஒரு நோக்கம் என்றாலும், அதைவிட அடிப்படையான நோக்கம் முன்பினும் அதிக தெளிவாக வெளிப்பட்டு வருகிறது: அதாவது, அமெரிக்காவிற்குள் நிலவும் அரசியல் அதிருப்தியைக் குற்றமுள்ளதாக்குவதாகும்.

பேச்சு சுதந்திரத்திற்கு எதிரான இந்த சூழ்ச்சியின் இன்றைய நாள் வரையிலான மிக நேரடி வெளிப்பாடு, திங்கட்கிழமை வாஷிங்டன் போஸ்டில், “ரஷ்யாவினால் 'Black Lives Matter' கணக்குகளை போலியாக உருவாக்க முடிகிறதென்றால், அடுத்து யார்?” என்றவொரு கட்டுரையில் கம்யூனிஸ்ட்-விரோத சித்தாந்தவாதி Anne Applebaum ஆல் வழங்கப்பட்டது.

அடுத்தது அமெரிக்கர்கள் என்பது தான் அவர் பதில். “பல்வேறு குழுக்களை என்னால் கருதிப்பார்க்க முடிகிறது, அவர்களில் பலர் பெருமிதம் கொண்ட அமெரிக்கர்கள், குழப்பத்தையோ அல்லது அச்சத்தையோ அதிகரிப்பதற்காக ஒரு கலகம் அல்லது பேரழிவின் போது பல்வேறு போலி கணக்குகளைக் கொண்டு தில்லுமுல்லு செய்ய நினைக்கலாம்,” என்றவர் எழுதுகிறார். “நீங்கள் இடது என்று பெயரிட்டாலும் சரி, வலது என்றாலும் சரி, இந்த அரசியல் குழுக்கள்" “பொய் தகவல்களை" மற்றும் "கீழ்தரமான செய்திகளைப்" பரப்புவதற்காக சமூக ஊடகங்களை எவ்வாறு பயன்படுத்துவதென "விரைவிலேயே கண்டுபிடித்துக் கொள்ளும்" என்றவர் எச்சரிக்கிறார்.

Applebaum, இணையத்தில் தங்களின் அடையாளத்தை மறைக்க விரும்பும் அனைவருக்கும் எதிராக செல்கிறார். “பெயர் வெளியிடாமை, குறைந்தபட்சம் சமூக ஊடகங்களின் பொது விவாதக்களங்கள் மற்றும் கருத்துரை பகுதிகளில் பெயர் வெளியிடாமைக்கு எதிராக முன்பை விட சிறந்த எடுத்துக்காட்டுக்கள் உள்ளன,” என்று அப்பெண்மணி எழுதுகிறார். அவர் தொடர்ந்து எழுதுகிறார்: “பேச்சு சுதந்திர உரிமை என்பது மனிதர்களுக்கு வழங்கப்பட்ட ஒன்று, கணினி குறியீடுகளுக்கு அல்ல.” ஆனால் அவர் இலக்கில் இருப்பது "போலி கணக்குகளை" செயல்படுத்தும் "கணினி நிரல்கள்" (bots) இல்லை, மாறாக அரசு ஒடுக்குமுறைக்கோ அல்லது அவர்தம் முதலாளி அநீதியாக தண்டிப்பார் என்றோ அஞ்சி, ஒரு அநாமதேயராக இணையத்தில் கருத்தை வெளியிட விரும்பும் எவரொருவரையும் அவர் இலக்கில் வைக்கிறார். இது அரசியல் அதிருப்தியை மௌனமாக்குவதற்கான உந்துதலில் வெறும் ஆரம்ப அடி மட்டுமே.

Applebaum, முதலாளித்துவ அரசின் உயர்மட்ட அடுக்குகளுடன் நெருக்கமாக பிணைந்துள்ளார். முக்கிய வெளியுறவு கொள்கை சிந்தனை முகாம்களின் ஓர் அங்கத்தவரான அப்பெண்மணி, சிஐஏ உடன் தொடர்புபட்ட ஜனநாயகத்திற்கான தேசிய உரிமைவழங்கல் இயக்குனர்கள் குழுவிலும் இடம்பெற்றுள்ளார். போலாந்தின் முன்னாள் வெளியுறவு அமைச்சரை மணந்த அவர், ஒரு மூர்க்கமான போர் வெறியர். கிரிமியா ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டதற்குப் பின்னர், வாஷிங்டன் போஸ்டில் ஒரு கட்டுரை எழுதிய அப்பெண்மணி, அணுஆயுத ரஷ்யாவுக்கு எதிராக "முழுமையான போருக்கு" அழைப்புவிடுத்தார். அவர், இராணுவவாதத்திற்கும் மற்றும் அரசியல் ஒடுக்குமுறைக்கும் இடையிலான தொடர்பின் உருவடிவாக உள்ளார்.

“அமெரிக்கா இணைய தொந்தரவுகளை எதிர்கொள்கையில், தனது நடவடிக்கைகள் நீரூபிக்கப்பட்டதாக சீனா உணர்கிறது" என்று தலைப்பிட்டு செவ்வாயன்று நியூ யோர்க் டைம்ஸின் முதல் பக்கத்தில் வெளியான ஒரு அசாதாரண கட்டுரை, Applebaum வாதங்களின் உள்நோக்கங்களைத் தெளிவுபடுத்துகின்றன, இக்கட்டுரை சீனாவின் ஆக்ரோஷமான இணைய தணிக்கை மீது ஆதரவான பார்வை எடுப்பதுடன், அமெரிக்கா அதுபோன்றவொரு ஆட்சிமுறையை நோக்கி நகர்ந்து வருகிறது என்பதை உட்கிடக்கையாக கொண்டுள்ளது.

“பல ஆண்டுகளாக, அமெரிக்காவும் ஏனையவர்களும்", சீனாவின் "இரும்புப்பிடி தணிக்கையை அரசியல் பலவீனத்தின் ஓர் அறிகுறியாகவும், சீனாவின் பொருளாதார அபிவிருத்திக்கு ஒரு தடையாகவும் பார்த்தனர்,” என்று டைம்ஸ் எழுதுகிறது. “ஆனால் மேற்கத்திய நாடுகள் இணைய கட்டுப்பாடுகள் சாத்தியமா என விவாதித்து கொண்டு, போலி செய்திகள், ஊடுருவல் மற்றும் அன்னிய நாட்டு தலையீடு மீது கைகளைப் பிசைந்து நிற்கையில், சீனாவில் சிலர், இணையம் மீதான அந்நாட்டின் கண்ணோட்டங்களை சக்தி வாய்ந்த உறுதிமொழியாக பார்க்கின்றனர்.”

அக்கட்டுரை தொடர்ந்து இவ்வாறு வலியுறுத்த செல்கிறது, “சீனாவின் இணைய கட்டுப்பாடு ஜனநாயக சமூகங்களுக்கு ஒரு முன்மாதிரியாக சேவையாற்றுகின்றன என்று சிலர் வாதிடுகின்றனர்... அதே வேளையில், அமெரிக்காவிலிருந்து ஜேர்மனி வரையில் இந்தோனேஷியா வரையில் அரசாங்கங்கள் இன்று திணறிக் கொண்டிருக்கும் பல பிரச்சினைகளை சீனா முன்கூட்டியே அனுமானித்திருந்தது.”

டைம்ஸ் கட்டுரையிலும் சரி, Applebaum இன் கருத்துரையிலும் மற்றும் சமூக ஊடகங்களை அடக்கி வைக்க வேண்டுமென்ற முடிவில்லா கோரிக்கைகள் அனைத்திலும் சரி, ஜனநாயக உரிமைகள், பேச்சு சுதந்திரம் அல்லது முதல் சட்டதிருத்தம் குறித்த எந்தவொரு கருத்தும் வெளிப்படையாக விடுபட்டுள்ளன.

“பேச்சு சுதந்திரத்தை கைவிட்டு... காங்கிரஸ் எந்த சட்டமும் இயற்ற முடியாது,” என்று வலியுறுத்துகின்ற முதல் சட்டதிருத்தம், அமெரிக்க அரசியலைமைப்பிலேயே மிக பரந்த சட்டத்திருத்தமாகும். Applebaum க்கு முரண்பட்ட விதத்தில், அரசியலமைப்பு பாதுகாப்பிலிருந்து விதிவிலக்காக அநாமதேய கருத்துக்கள் மீது கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது. அமெரிக்க புரட்சியின் தலைவர்களும் அரசியலமைப்பை நிர்ணயித்தவர்களும், பிரிட்டிஷ் அதிகாரிகளின் ஒடுக்குமுறையைத் தவிர்க்க புனைப்பெயர்களில் கட்டுரை எழுதினார்கள் என்பது ஒரு வரலாற்று உண்மையாகும்.

எது “போலி”, எது அவ்வாறில்லை, எது “சூழ்ச்சி தத்துவம்”, எது “அதிகாரபூர்வமானது” என்று அறிவிக்கும் உரிமையை அரசியலமைப்பு, அரசாங்கத்திற்கோ அல்லது சக்தி வாய்ந்த பெருநிறுவனங்களுக்கோ வழங்கி இருக்கவில்லை. சமூக ஊடகங்களை அடக்கி வைக்க இப்போது பயன்படுத்தப்பட்டு வருகின்ற இதே வாதங்கள், அச்சு பத்திரிகை வளர்ச்சியினூடாக வெளி வரத் தொடங்கிய புத்தகங்கள் மற்றும் வெகுஜன வாசகர் பத்திரிகைகளை நசுக்குவதற்கும் பயன்படுத்தப்படலாம்.

அமெரிக்காவில் இணைய தணிக்கையை நோக்கிய உந்துதல் ஏற்கனவே மிகவும் முன்னேறி உள்ளது. இந்தாண்டு ஆரம்பத்தில் கூகுள் அதன் தேடல் முடிவுகளில் "மாற்று கண்ணோட்டங்களை" மறைக்கும் திட்டங்களை அறிவித்ததற்குப் பின்னர், முன்னணி இடதுசாரி தளங்களுக்குத் அதன் தேடுபொறியினூடாக வரும் வருகை 50 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சி கண்டுள்ளது. கூகுள் மூலமாக உலக சோசலிச வலைத் தளத்தை எட்டுபவர்களின் எண்ணிக்கை 75 சதவீத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.

பேஸ்புக், ட்வீட்டர் மற்றும் பிற சமூக ஊடக தளங்களும் இதேபோன்ற முறைமைகளை அறிமுகப்படுத்தி உள்ளன. ரஷ்ய இணைய நடவடிக்கைக்காக என்று காட்டி முடுக்கிவிடப்பட்டு வருகின்ற இந்த பிரச்சாரம், இன்னும் அதிக நெடுங்கால நடவடிக்கைகளை நியாயப்படுத்த பயன்படுத்தப்படலாம்.

பல்கலைக்கழகங்கள் அவற்றின் வளாக நிகழ்வுகளை விசாரணைக்குட்படுத்த பொலிஸிற்கு அதிகாரம் வழங்கும் கொள்கைகளை நடைமுறைப்படுத்துகின்றன என்றளவுக்கு இது நடந்து வருகிறது. “இணைய நடுநிலைமையை" விட்டொழிப்பதற்காக, இணைய பயன்பாட்டை நெறிப்படுத்தும் தகைமையை மிகப்பெரிய பெருநிறுவனங்களிடம் ஒப்படைக்கும் பொருட்டு, தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒட்டுமொத்த மக்களின் தொலைபேசி தொடர்புகளையும் இணைய நடவடிக்கைகளையும் சட்டவிரோதமாக கண்காணித்ததற்காக உளவுத்துறை அமைப்புகள் அம்பலமான பின்னர், அவை குறியீட்டுமுறையை ஒழிக்கும் திறனை கோருகின்றன.

அவசரகால நிலையைத் திணித்துள்ள பிரான்ஸ் முதல், கடந்த மாதம் இடதுசாரி அரசியல் வலைத் தளமான Indymedia இன் துணை நிறுவனத்தை மூடிய ஜேர்மனி வரையில், கட்டலோனியாவில் பிரிவினைக்கான கருத்து வாக்கெடுப்பை வன்முறையாக ஒடுக்கி பிரிவினைவாத தலைவர்களை கைது செய்த ஸ்பெயின் வரையில், ஒரு "ஜனநாயக" நாடு மாற்றி ஒரு நாட்டின் அரசாங்கங்கள் பொலிஸ்-அரசு ஆட்சி வடிவங்களுக்குத் திரும்பி வருகின்றன.

சாதனை மட்டங்களை எட்டியுள்ள சமூக சமத்துவமின்மையுடன் பிணைந்து தொழிலாள வர்க்க அதிருப்தி அதிகரித்து வருவதற்கு, ஜனநாயக உரிமைகளை அழிப்பது தான் பெருநிறுவன மற்றும் நிதியியல் பிரபுத்துவத்தின் அரசியல் விடையிறுப்பாக உள்ளது. இது உலகெங்கிலும் ஏகாதிபத்திய வன்முறையை மிகப்பெரியளவில் தீவிரப்படுத்துவதற்கான தயாரிப்புகளுடன் நெருக்கமாக பிணைந்துள்ளது. தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான இயக்கம் எழுச்சி பெற்றுவிடுமோ என்பது தான் ஆளும் உயரடுக்கின் மிகப்பெரிய கவலை, அதை தடுக்கவே அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.