ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Modi government blocks Rohingya refugees entering India

ரோஹிங்கியா அகதிகள் இந்தியாவிற்குள் நுழைவதை மோடி அரசாங்கம் தடுத்து நிறுத்துகிறது

By K. Ratnayake
30 September 2017

பிரதம மந்திரி நரேந்திர மோடியின் இந்திய அரசாங்கம், நாட்டிற்குள் ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா அகதிகள் நுழைவதை தடுக்க இந்திய வடகிழக்கு எல்லைப் பகுதிக்கு பாதுகாப்பு படையினரை அனுப்பியுள்ளது. மியான்மரில் (பர்மா) தொடர்ந்து நடக்கும் இராணுவ வன்முறையிலிருந்து ரோஹிங்கியாக்கள் தப்பியோடி வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவில் ஏற்கனவே இருக்கும் சுமார் 40,000 ரோஹிங்கியாக்களை வெளியேற்ற புது தில்லி திட்டமிடுகிறது.

செப்டம்பர் 22 அன்று, அகதிகளை தடுக்க “முரட்டுத்தனமான மற்றும் கொடூரமான முறைகளை” கையாள இந்திய எல்லை பாதுகாப்புப் படைக்கு (India’s Border Security Forces-BSF) அங்கீகாரம் அளிக்கப்பட்டது என்று ராய்ட்டர்ஸ் அறிக்கை வெளியிட்டது. செய்தி நிறுவனத்திடம் அதிகாரி ஒருவர், “இந்திய மண்ணில் ரோஹிங்கியாக்களின் வருகையை பொறுத்துக்கொள்ள மாட்டோம்” என்று கூறினார். 

கிழக்கு இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தில் BSF முன்னணி ரோந்து பணிக்கான துணை பொது ஆய்வாளர் ஆர்.பி.எஸ். ஜஸ்வால், மிளகாய் வெடிகுண்டுகளையும், உணர்விழக்கச் செய்யும் எறிகுண்டுகளையும் பயன்படுத்த தனது துருப்புகளுக்கு உத்தரவிட்டதை ஒப்புக்கொண்டார். தாக்கப்பட்டவர்களுக்கு கடுமையான எரிச்சலை மிளகாய் வெடிகுண்டுகள் ஏற்படுத்துவதோடு, அவர்களை தற்காலிகமாக நகரவிடாமலும் செய்துவிடும்.

புதனன்று, BSF, வடகிழக்கு இந்திய மாநிலமான திரிபுராவிற்குள் நுழைய முயன்ற ரோஹிங்கியாக்களை திரும்பிப் போகவைத்ததாக Hindu பத்திரிகை தெரிவித்தது. ஆகஸ்ட் 19 அன்று, இந்திய உள்துறை அமைச்சகம் அகதிகளை தடுக்க BSF க்கு உத்தரவிட்டதில் இருந்து முதன்முறையாக இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது என்றும் பத்திரிகை தெரிவித்தது.

அசாம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களின் முதல் அமைச்சர்கள், தங்கள் மாநிலங்களுக்குள் தப்பியோடி வரும் ரோஹிங்கியாக்கள் நுழைவதைத் தடுக்க எல்லை பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவிட்டுள்ளனர் என்றும் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அசாம் மற்றும் மணிப்பூர் மாநிலங்கள் மோடியின் இந்து மேலாதிக்க பாரதிய ஜனதா கட்சியின் (BJP) அரசியல் கூட்டணியினரால் ஆட்சி செய்யப்படுகின்றன. திரிபுரா மாநில அரசாங்கம், இந்திய ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் (CPM) தலைமையிலான இடது முன்னணியின் கட்டுப்பாட்டில் உள்ளது.

CPM இன் வலைத் தளமான People’s Democracy இன் சமீபத்திய ஒரு ஆசிரியர் தலையங்கம், ரோஹிங்கியாக்களை நாடுகடத்தும் அரசாங்க முயற்சிகளை விமர்சித்தபோதும், தஞ்சம் கோரும் உரிமையை பாதுகாக்கவோ அல்லது புது தில்லியின் உக்கிரமான எல்லைப்புற நடவடிக்கைகளை எதிர்க்கவோ முனையவில்லை. அதற்கு பதிலாக இந்த செய்தி வெளியீடு எரிச்சலூட்டும் விதமாக, “நிலைமைகள் உகந்தவையாக இருக்கும்போது” ரோஹிங்கியாக்களை திருப்பியனுப்பும் வகையில் அவர்களுக்கு அடையாள ஆவணங்களை வழங்க அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்தது.

பிரதம மந்திரி நரேந்திர மோடி கடந்த மாதம் மியான்மருக்கு விஜயம் செய்தபோது, ராக்கினி மாநிலத்தில் நிகழ்ந்த இராணுவ வன்முறை, “தீவிரவாத தாக்குதல்களுக்கு” விடையிறுப்பாக இருந்தது என்ற அரசாங்கத்தின் கோரிக்கைக்கு ஒப்புதல் அளித்தார்.

ஆனால், மியான்மரில் நடப்பதோ இதற்கு எதிர்மாறாக உள்ளது. வெளியுறவு அமைச்சர் ஆங் சான் சூ கீ தலைமையிலான புதிய ஆளும் ஆட்சியின்கீழ் ரோஹிங்கியாவிற்கு எதிரான நீண்டகால அடக்குமுறையும், இராணுவ வன்முறையும் தீவிரமடைந்துள்ளது.

பர்மிய இராணுவம், சிறுபான்மை முஸ்லீம் சமூகத்திற்கு எதிரானதொரு கொலைகார இன அழிப்புத் திட்டத்தை கட்டவிழ்த்துவிட ஏதுவாக ராக்கினியில் கிளர்ச்சிக் குழுக்கள் நடத்திய மிகச்சிறிய தாக்குதல்களை பயன்படுத்திக் கொண்டது. பங்களாதேஷிற்குள் 400,000 பேரும் மற்றும் இந்தியாவிற்குள் ஆயிரக்கணக்கானவர்களும் என அரை மில்லியனுக்கும் மேற்ப்பட்ட ரோஹிங்கியாக்கள் ஆகஸ்டில் இருந்து பர்மாவை விட்டு தப்பியோடியுள்ளனர்.

மியான்மர் ஆட்சிக்கான பிஜேபி இன் ஆதரவு, இந்தியாவின் புவிசார்- மூலோபாய அபிலாஷைகளால் உந்தப்படுகிறது. அமெரிக்காவுடன் தனது மூலோபாய கூட்டுழைப்பினால் ஊக்குவிக்கப்பட்டு இந்த பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கை தனிமைப்படுத்த மியான்மர் உடன் நெருங்கிய உறவுகளை ஏற்படுத்திக்கொள்ள புது தில்லி விரும்புகிறது.

இந்திய தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும், அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகள் குறித்து அதிகரித்து வரும் அரசியல் எதிர்ப்பை திசை திருப்பவும் பயன்படுத்தப்பட்டு வரும் முஸ்லீம்-எதிர்ப்பு வகுப்புவாதத்தோடு ரோஹிங்கியா மீதான மோடியின் விரோதம் தொர்புடையது. இந்த பிற்போக்குத்தனமான திட்டநிரல்களின் வரிசையில் பிஜேபி, பாகிஸ்தானுக்கு எதிரான தனது அரசியல் மற்றும் இராணுவ ஆத்திரமூட்டல்களை முடுக்கிவிட்டுள்ளது.

இந்தியாவின் மற்றொரு முக்கிய முதலாளித்துவக் கட்சியான காங்கிரஸ் கட்சி, ரோஹிங்கியா மீதான பிஜேபி இன் பிற்போக்குத்தன தாக்குதல்களை ஊக்குவித்து வருகிறது. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அஜய் மக்கான், அகதிகளின் வருகை என்பது ஒரு “கடுமையான” பிரச்சினை என்று சமீபத்தில் அறிவித்தோடு இந்திய கொள்கையை வடிவமைக்கும் விதமானதொரு அனைத்து கட்சி மாநாட்டிற்கும் அழைப்பு விடுத்தார்.

இந்திய நாடாளுமன்றத்தில், 1955 ஆம் ஆண்டு குடியுரிமை சட்டம் குறித்து ஒரு அரசியலமைப்பு திருத்தத்தை பிஜேபி முன்வைத்தது. இது, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வந்த சிறுபான்மை சமூகத்தினர்களான இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜைனர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஆகியோர் “சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என கருதப்படமாட்டார்கள்” என்று தெரிவிக்கிறது.

ரோஹிங்கியாக்கள் “அகதிகள் அல்லர்” என்று இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதோடு, அரசாங்கத்தின் ஒடுக்குமுறையை விமர்சிப்பவர்களையும் கடிந்தார். தேசிய மனித உரிமைகள் ஆணையம் (National Human Rights Commission) ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் கடந்த வாரம் பேசியபோது, ரோஹிங்கியா குறித்து மனித உரிமைகள் “எழுந்துள்ள” போதிலும், அவர்கள் “சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தவர்கள்” என்பதோடு “தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானவர்கள்” என்று சிங் அறிவித்தார்.

ராகினி மாநிலத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்ட இராணுவ ஒடுக்குமுறையை மூடிமறைக்கின்ற விதமாக, “ரோஹிங்கியா அகதிகளை திரும்பப் பெற சாதகமான நடவடிக்கைகளை மியான்மார் எடுக்குமென நான் உறுதியாக நம்புகிறேன்” என்று சிங் தெரிவித்தார். மேலும், 1951 ஐ.நா. அகதிகள் உடன்படிக்கையில் கையெழுத்திடாத காரணத்தினால், இந்தியாவின் நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்தை மீறுவதானவை அல்ல என்றும் அவர் கூறினார்.

இருப்பினும், அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஆணையர் ஃபிலிப் கிராண்டி, உடன்படிக்கையில் கையெழுத்திட்டதா இல்லையா என்றல்லாமல், வழமையான சர்வதேச சட்டத்தின்கீழ் அனைத்து நாடுகளும் இது குறித்து செயல்பட கடமைப்பட்டுள்ளன எனத் தெரிவித்து சமீபத்தில் இந்த கோரிக்கையை நிராகரித்தார். “கடுமையான தீங்குகளை எதிர்கொண்ட அதே இடத்திற்குள் அவர்களை மீண்டும் தள்ளுவது பொறுப்பாகாது” என்றும் தெரிவித்தார்.

கடந்த வார தொடக்கத்தில், முகம்மது சலிமுல்லா மற்றும் முகம்மது ஷகிர் ஆகிய இரண்டு ரோஹிங்கியாக்கள் தாக்கல் செய்திருந்த மனுவை எதிர்த்து வாக்குமூலம் ஒன்றை இந்திய அரசாங்கம் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இந்த இரு அகதிகளும் தாங்கள் நாடுகடத்தப்படுவதை தடுக்க முயற்சிக்கின்றனர் என்பதோடு, அவர்கள் வன்முறை, இரத்தகளரியான சூழ்நிலை மற்றும் பாகுபாடு ஆகியவற்றை எதிர்கொண்டதால் பர்மாவை விட்டு தப்பி வந்துவிட்டதாக விவாதிக்கின்றனர். இந்த வழக்கு குறித்து அடுத்த விசாரணை அக்டோபர் 3 அன்று நடைபெறவுள்ளது.

இந்தியாவில் ரோஹிங்கியாக்கள் தொடர்ந்து வாழ்வது “சட்டவிரோதமானது,” என்று உள்துறை விவகார அமைச்சகத்தின் வாக்குமூலம் தெரிவிப்பதோடு, “கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும்” முன்வைத்தது. மேலும் இந்த அகதிகள், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ISI, இஸ்லாமிய அரசு மற்றும் ஏனைய தீவிரவாத இஸ்லாமிய குழுக்களுடனும் தொடர்பு வைத்திருக்கலாம் என்றும் தெரிவித்தது.

“சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தோர்” மீதான முடிவை எடுக்கும் “நிர்வாக கொள்கையை” அனுமதிக்க நீதிமன்றத்திற்கு இந்த வாக்குமூலம் கோரிக்கை விடுத்தது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், பர்மிய இராணுவத்திடம் இந்த அகதிகளை திரும்ப ஒப்படைக்க அரசாங்கத்திற்கு இது அனுமதியளிக்கும்.

ரோஹிங்கியா அகதிகளுக்கு எதிரான மோடி அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை இந்தியாவிலுள்ள தொழிலாளர்கள் கண்டிப்பாக எதிர்க்க வேண்டும். சூ கி மற்றும் அவரது இராணுவ ஆதரவாளர்களின் மேற்கு-சார்பு அரசாங்கத்தின் பலியாட்களாக இந்த ரோஹிங்கியாக்கள் உள்ளனர். அவர்களுக்கு புகலிடம் கொடுக்கப்பட வேண்டும் என்பதோடு, அவர்கள் தெரிவு செய்யும் இடத்தில் முழு ஜனநாயக உரிமைகளுடன் பாதுகாப்பாக வாழவும் அனுமதிக்கப்பட வேண்டும்.